Monday, 6 November 2017


வீட்டு மேலாண்மை :


1. கன்று பராமரிப்பு
2. கன்றுகளுக்கு தீவனமளித்தல்
3. செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல்
4. கன்றின் வளர்ச்சி

கன்று பராமரிப்பு :

பிறந்தவுடன் கன்று பராமரிப்பு :

* கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.

* கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும். குளிர்காலத்தில் தாய் மாடு கன்றினை நக்கவில்லையெனில் உடனே துணி அல்லது சாக்கினைக் கொண்டு கன்றினை துடைக்கவும். மேலும் செயற்கை சவாசம் அளிக்க, அதன் மார்பில் கையினை வைத்து அமுக்கி அமுக்கி எடுக்கவும்.

* உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்கி வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ இட வேண்டும்.

* தொழுவத்தில் ஈரமான கூளத்தினை அடிக்கடி அப்புறப்படுத்தி, எப்பொழுதும் தொழுவத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறந்தவுடன் கன்றின் எடையை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

* மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.

* கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்

* கன்று பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து மாட்டிடன் சீம்பால் ஊட்ட முயற்சி செய்யும். சில மெலிந்த கன்றுகள் தானாகவே சீம்பால் ஊட்டவில்லை என்றால் அவை சீம்பால் ஊட்ட உதவி செய்யவேண்டும்.

கன்றுகளுக்கு தீவனமளித்தல் :

பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கன்றின் முதல் 3-4 வார வயதில் சீம்பால் மட்டுமன்றி பாலும் மிக அவசியம். மூன்று –நான்கு வார வயதிற்கு பின்பு கன்று தாவரமாவுச்சத்துக்களை ஜீரணிக்கும் திறன் பெற்று விடும். இதன் பின்னரும் பால் கன்றுக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அதற்கு பதிலாக அளிக்கப்படும் தானியவகை தீவனங்களை விட பாலுக்கான செலவு அதிகமாகும். கன்றுக்கு அளிக்கப்படும் அனைத்து திரவ வகை உணவுகளும் அதன் உடல் வெப்பநிலையில் இருக்குமாறு அல்லது அறை வெப்பநிலையிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கன்றுகளுக்கு தீவனம் அளிக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் தீவனமளிக்க பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும்.

நீர் அவசியம் :

கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் கன்று அதிகமான நீரை குடிக்காமல் இருப்பதைத் தடுக்க, தண்ணீரை வெவ்வேறு உபகரணங்களில், வெவ்வேறு இடங்களில் வைக்கவேண்டும்.

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் :

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனங்களைப் பொறுத்தது. கீழ்க்காணும் தீவனமளிக்கும் முறைகளை கன்றுகளை வளர்க்க கடைபிடிக்கப்படுகின்றன.

* பால் மட்டும் அளித்து வளர்ப்பது

* ஆடை நீக்கிய பாலில் வளர்ப்பது

* பால் தவிர்த்த மற்ற திரவங்களான புதிதாக தயாரித்த மோர்,புதிதாக தயாரித்த பாலடையினை பாலிலிருந்து பிரித்தெடுத்தவுடன் பெறப்படும் திரவம், கஞ்சி ஆகியவற்றில் வளர்ப்பது

* பாலுக்கு பதிலாக பால் மாற்றுதிரவங்களில் வளர்ப்பது

* தொடக்க நிலை கன்று தீவனங்களில் வளர்ப்பது

* செவிலி மாடு கொண்டு வளர்ப்பது.

பாலில் மட்டும் வளர்ப்பது :

* 0-3 மாத வயதுடைய சராசரியாக 50 கிலோ உடல் எடையை உடைய கன்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளாவன

உலர் பொருள் - 1.43கிலோ

மொத்த ஜீரணமாகக்கூடிய கனிம பொருள் - 1.60கிலோ

புரதம் - 315கிராம்

* பாலில் அதிகமான கொழுப்பு சத்து இருப்பதால் அதிலுள்ள மொத்த சீரணமாகும் பொருட்களான TDN ன் அளவு அதிலுள்ள உலர்ந்த பொருட்களின் அளவை விட அதிகம் உள்ளது. கன்று பிறந்து பதினைந்தாவது நாளில் புற்களை மேய தொடங்கும். இது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அரை கிலோவாக இருந்து பின்னர் மூன்று மாத வயதில் 5 கிலோவாக உயரும்.

* பசுந்தாள் தீவனத்தை விட, நல்ல தரமான வைக்கோல் (1-2 கிலோ) இந்த வயதில் கன்றிற்கு நல்ல உணவாகும். பதினைந்து நாட்களில் ஒரு நாளைக்கு 0.5 கிலோவில் ஆரம்பித்து பின்னர் மூன்று மாதங்களில் 1.5 கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும்.

* மூன்று வாரங்களுக்கு பிறகு முழு பால் கிடைக்கவில்லை யென்றால், ஆடை நீக்கிய பால் அல்லது மோர் அல்லது வேறு பால் மாற்று பொருளை உணவாக அளிக்கலாம்.

கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை :

* பால் மற்றும் இதர திரவ உணவுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனங்களின் கலவையே அடர்தீவனக்கலவையாகும். இது தானியங்களால் ஆன முக்கியமாக மக்காசோளம் மற்றும் ஓட்ஸ் அதிகம் கொண்ட கலவையாகும்.

* பார்லி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியங்களையும் இந்த அடர்தீவனக்கலவையில் சேர்த்துக்கொள்ளலாம். மொலாசஸ் எனப்படும் கரும்புச்சர்க்கரையை 10 சதவிகிதம் அளவுக்கு இந்த அடர்தீவனக்கலவையில் சேர்க்கலாம்.

* ஒரு தரமான கன்று அடர்தீவனத்தில் 80% TDN (மொத்த சீரணிக்கும் பொருட்கள்)- ம் மற்றும் 22% CP (புரதம்) இருக்கும்.

கன்றுக்கான உலர்தீவனம் :

* இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் கலந்து புல் வைக்கோலும் அளிப்பது சிறந்தது.

* சூரிய ஓளியில் உலர்த்திய பசுமையான வைக்கோலில் வைட்டமின் A, D மற்றும் B-complex அதிகமாக இருக்கும்.

* ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும்.

* ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொஞ்சமாகக் கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.

* பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும்.

* பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.

செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல் :

* குறைந்த கொழுப்புச்சத்துடைய ஆனால் அதிக பால் கறக்கக்கூடிய மாட்டுடன், 2-4 தாயற்ற கன்றினை முதல் வாரத்திலிருந்து பால் குடிக்கச் செய்யலாம்

* உலர்ந்த தீவனத்தினை வைக்கோலுடன் சேர்த்து எவ்வெளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவேண்டும். இவ்வாறு தீவனமளிக்கப்பட்ட கன்றுகளை 2-3 மாதத்தில் மாட்டிடமிருந்து பிரித்துவிடலாம்.

கஞ்சியில் கன்றினை வளர்ப்பது :

கஞ்சி கன்றுக்கு அளிக்கப்படும் திரவ ஆரம்பகால தீவனமாகும். இது பாலுக்கு பதில் அளிக்கப்படுவதால், 4 வாரங்களில் இருந்து சிறிது சிறிதாக பாலை குறைத்து அதற்கு பதில் கஞ்சியினைக் கொடுக்கவேண்டும். இதற்கு 20 தினங்களுக்கு பிறகு முழுவதுமாக பால் அளிப்பதை நிறுத்திவிடவேண்டும்.

கன்றுதீவனத்தில் கன்றினை வளர்ப்பது :

இம்முறையில் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் முழு பாலினை அளித்து பின்னர் உலர் தொடக்க தீவன பொருள் மற்றும் தரமான வைக்கோல் மற்றும் தீவனம் தின்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். பின்பு கன்றின் 7-10வது வார வயதில் பால் மறக்க செய்யப்படும்.

பால் மாற்று பொருளில் கன்றினை வளர்ப்பது :

கன்றுக்கு தேவைப்படும் சத்துகளை கொடுப்பதில் பாலிற்கு சிறந்த மாற்று பொருள் எதுவும் இல்லை. பால் மற்றும் இதர திரவ உணவு தீவனங்கள் தேவையான அளவு கிடைக்கவில்லையென்றால் பால் மாற்று பொருளை உபயோகிக்கலாம். இது பால் கொடுக்கும் அளவு போன்று கொடுக்கப்பட வேண்டும். அதாவது கன்றின் எடையில் 10-12% பால் மாற்றுப்பொருளை உணவாகக் கொடுக்க வேண்டும்

கன்றினை தாயிடமிருந்து பிரித்தல் :

* கன்றினை தாயிடம் இருந்து பிரிப்பது, தீவிர மேலாண்மை பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு மேலாண்மை முறையாகும். இதனால் எல்லா கன்றுகளுக்கும் தேவையான அளவு பால் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் பால் வீணாவதையும், கன்றுகளுக்கு அதிக அளவு பால் கொடுப்பதையும் தடுக்கமுடியும்.

* பண்ணையில் பின்பற்றப்படும் மேலாண்மை முறையினைப் பொருத்து கன்றுகளை தாயிடமிருந்து பிரிப்பதை அவை பிறந்தவுடனேயோ, மூன்று வாரத்திலோ, 8-12 வாரத்திலோ அல்லது 24 வார வயதிலோ செய்யலாம். பொதுவாக பண்ணையாளர்கள் 12 வாரத்தில் கன்றினை தாயிடமிருந்து பிரிப்பார்கள். பண்ணையில் பயன்படுத்த வளர்க்கப்படும் காளைக் கன்றுகள், 6 மாதம் வரை தாயுடன் இருக்கும்.

* நன்கு நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை வளர்க்கும்போது அவை பிறந்தவுடனேயே பால் மறக்கச் செய்வது நல்லது.

* பிறந்தவுடனேயே கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து பால் மாற்றுப் பொருள் மற்றும் தீவனத்தில் கன்றினை வளர்ப்பதால், பால் மனித உபயோகத்திற்கு சேமிக்கப்படும்.

கன்றினை தாயிடமிருந்து பிரித்ததற்குப் பின் :

கன்றினைப் பிரித்ததில் இருந்து மூன்று மாதங்களில், சீராக கன்று தொடக்க தீவனத்தை அளிக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். கன்றின் உடல் அளவில் 3% அளவு, ஈரப்பதம் அதிகம் உடைய பதப்படுத்திய புல் பசுந்தீவனங்களை அளிக்கலாம். ஆனால் பசுந்தீவனங்களை அதிகம் கொடுக்கக்கூடாது ஏனெனில் பசுந்தீவனத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்பொழுது கன்றுகள் எடுத்துக்கொள்ளும் மொத்த ஊட்டச்சத்தின் அளவு குறையும்.

கன்றின் வளர்ச்சி :

அடிக்கடி கன்றின் எடையை பார்த்து அது குறிப்பிட்ட எடையில் வளர்கிறதா என்று பராமரிக்க வேண்டும்.

* முதல் மூன்று மாதங்கள் கன்றுக்கு உணவு அளிப்பது மிக முக்கியமானதாகும்.

* இந்த சமயத்தில் சரியாக உணவு அளிக்கவில்லையென்றால், 25-30% கன்றுகள் இறந்து விடும்.

* சினை மாட்டிற்கு சினைப்பருவத்தின் கடைசி 2-3 மாதங்கள் நல்ல தரமான தீவனம் அளிப்பது அவசியம்.

* பொதுவாக கன்று பிறந்தவுடன் 20-25 கிலோ எடையிருக்கும்.

* தகுந்த தீவனமளித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் தவறாமல் செய்தால் சராசரியாக கன்றின் எடை ஒரு மாதத்திற்கு 10-15 கிலோ எடை கூடும்.

போதுமான வீடமைப்பு முக்கியம் :

தாயிடமிருந்து பிரித்த கன்றுகளை தனித்தனி தொழுவத்தில் கட்ட வேண்டும். இதனால் ஒன்றை ஒன்று நக்குவது தவிர்க்கப்பட்டு நோய் தொற்று வராமல் இருக்கும். தொழுவம் சுத்தமாகவும், உலர்வாகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். கன்றுகளின் மீது சுத்தமாக காற்று எப்பொதும் படுமாறு தொழுவத்தினை அமைக்கவேண்டும். கன்றுகளுக்கு வசதியாக இருக்கவும், அவற்றின் உடல் உலர்வாக இருக்கவும் கன்றினை கட்டும் இடத்தில் கூளம் இட வேண்டும். கூளமாக வைக்கோல் அல்லது உமி உபயோகிக்கப்படும். வெளிப்புற தொழுவம் பாதி மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் அதிகமான சூரிய வெப்பம் கன்றுகளின் மீது படுவது தவிர்க்கப்படுவதுடன் மழை மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்தும் கன்றுகள் பாதுகாக்கப்படும். கிழக்கு பக்கம் திறப்பு இருக்கும் தொழுவம், காலை வெயிலினால் வெப்பமாக்கப்பட்டு உச்சி வெயிலில் நிழலால் மூடப்பட்டிருக்கும். மழை இந்த திசையில் இருந்து விழாது.

கன்றுகளை நலமாக வைத்திருத்தல் :

பிறந்த கன்றுக்கு நோய்வராமல் காப்பது மிக அவசியம். இதனால் கன்றுகளின் இறப்பு தவிர்க்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுக்கு சிகிச்சை அளிப்பதை விட அவற்றினை நலமாக பேணுவதற்கு குறைந்த செலவே ஆகும். முறையாக கன்றுகளை கண்காணித்து சரியான உணவு அளித்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்குவது மிக அவசியம்.

மூலம் : கறவை மாடு மேலாண்மை, மாநில தொழில்நுட்ப பயிற்சி மையம், ஆந்திரா.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 5 November 2017


கால்நடை இனங்கள் :


1. கறவை இனங்கள்
2. இரகத்தின் சிறப்பியல்புகள்
3. கன்றின் விலை
4. கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்
5. பண்ணை வேலைக்கான இனங்கள்
6. அயல்நாட்டு கறவை இனங்கள்
7. எருமை இனங்கள்
8. கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை
9. அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்
10. வணிக ரீதியான பண்ணைக்கான மாடு,
எருமைகளை தேர்வு செய்யும் முறை
11.கலப்பின கால்நடைக்கான இடத்தேவை
12.கேள்வி பதில்

கறவை இனங்கள் :

சாஹிவால் :

* அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழலில்1350 கிலோ
- வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ

* 32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது

* கறவை கால இடைவெளி - 15 மாதம்.

கிர் :

* தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ
வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ

தார்பர்கர் :

* ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ
– வணிக பால் பண்ணை: 2500 கிலோ

கரண் ஃபிரி :

ஹோலஸ்டின் பிரிசின் காளையின் விந்தைக் கொண்டு, செயற்கை முறையில் இராஜஸ்தானின் தர்பார்கர் பசுவுக்கு செயற்கை முறையில் விந்தினை செலுத்தி உருவாக்கிய கலப்பின இரகம் கரண்ஃபிரியாகும். தா்பார்க்கர் பசுக்கள் சுமாரான அளவு பால் கறக்கும் பசுக்களாக இருந்தாலும், அவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காலநிலைனய தாங்கும் சிறந்த தன்மை வாய்ந்தவை.

இரகத்தின் சிறப்பியல்புகள் :

* பசுவின் உடல்பகுதி, நெற்றி மற்றும் வால்பகுதி கறுப்பு மற்றும் வெள்ளை நிற பற்றுகள் நிறைந்திருக்கும். மடியானது கறுத்தும், காம்புகளில் வெள்ளை நிறமும், தடித்த பால் நரம்புகளும் காணப்படும.

* இந்த இரகமானது மிக சாந்தமாக காணப்படும். பெண் கன்று, ஆண் கன்றுகளை விட மிக விரைவாக வளர்ச்சியடையும். 32-34 மாத வயதில் கருவுற தொடங்கும்.

* சினை காலமானது 280 நாட்கள் ஆகும். கன்று ஈன்று 3-4 மாதங்களுக்கள் மீண்டும் கருவுற தயாராகும். ஆனால் ஏனைய வட்டார இரகங்கள் கன்று ஈன்று மீண்டும் கருவுற 5-6 மாதம் ஆகும்.

* பால் அளவு : கரண் ஃபிரி பசுக்கள் ஒரு வருடத்திற்கு 3000-3400 லிட்டர் பால் வரை கறக்க வல்லவை. நிறுவன பண்ணையில் இந்த பசு இரகத்தின் சராசரி பால் கறக்கும் அளவானது 3700 லிட்டர் ஆகும். பாலின் கொழுப்பு சத்து அளவு 4.2 சதவிகிதம் ஆகும். இதனுடைய கறனவ நாட்கள் 320 நாட்கள் ஆகும்.

* இந்த இரகத்தினை நிறைய பசுந்தாள் தீவனம் கொண்டும் மற்றும் சரிவிகித செறிவான உணவு கவவைக் கொண்டும் ஊட்டச்சத்து அளித்து வந்தால், ஒரு நாளுக்கு 15-20 லிட்டர் வரை பாலினை அளிக்கும். பாலின் உற்பத்தியானது நாளுக்கு 25-35 லிட்டர் வரை (முக்கிய கறனவ நேரங்களில், அதாவது கன்று ஈந்த 3-4 மாதங்களில்) செல்லும்.

* அதிக கறவை அளிப்பதனால், இந்த இரகமானது பால் மடி வீக்கம் மற்றும் கனிம பொருள் பற்றாக்குறை போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனை முன்னரே கண்டறிந்தால் எளிதில் குணமாக்கலாம்.

கன்றின் விலை :

மாட்டின் கறவையின் திறம் பொறுத்து, புதிதாக ஈன்ற கன்றானது பொதுவாக 20,000 - 25,000 ரூபாயில் கிடைக்கும்.

மேலும் தகவலுக்கு :

தலைவர்,
கறவை மாடு இணவிருத்தி துறை,
தேசிய பால் ஆராய்ச்சி மையம், கர்ணால், ஹரியானா 132001
போன் 0184-2259092

சிவப்பு சிந்து :

* பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ
– வணிக பால் பண்ணை : 1900 கிலோ

கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள் :

ஓங்கோல் :

* ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - 1500 கிலோ

* வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

ஹரியானா :

* கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்திய பிரதேசம்

* பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ

* வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

கங்ரெஜ் :

* குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ
- வணிக பால் பண்ணை : 3600 கிலோ

* 36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.

* கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்

* காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.

டியோனி :

* ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

* பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள் :

அம்ரித்மஹால் :

* கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.

* உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

ஹல்லிகார் :

கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

காங்கேயம் :

* தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

* உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

அயல்நாட்டு கறவை இனங்கள் :

ஜெர்சி :

* 26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.

* கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்
பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ

* ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.

* ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.

* இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன் :

* இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.

* பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ

* பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.

* டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

எருமை இனங்கள் :

முர்ரா :

* ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - 1560 கிலோ

* சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது

* ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.

* கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்.

சுர்த்தி :

* குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ

ஜப்ராபதி :

* குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது

* பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ

நாக்பூரி :

* நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)

* பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ

கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை :

கறவை மாடுகளின் தேர்வு :

கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

* மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.

* மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.

* கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது.எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.

* தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.

* யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.

* அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.

* ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.

அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள் :

* கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.

* உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.

* கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.

* மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.

* மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.

* மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.

வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள் :

* இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும். இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 : 50 அல்லது 40 : 60 என்ற விகிதத்தில்). எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

* சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய பால் தேவை. எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.

* உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும். ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும். மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.

வணிக ரீதியான பண்ணைக்கான மாடு,எருமைகளை தேர்வு செய்யும் முறை :

பசுமாடுகள் :

* ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது. (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000)

* நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது.
கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக
* பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.

* பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது. இது எருமைப் பாலைவிட சற்று குறைவாக உள்ளது.

எருமைகள் :

* மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.

* பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது. இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.

* எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம். இதனால் செலவு குறைகிறது.

* எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது. மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது. காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.

* எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை.

கலப்பின கால்நடைக்கான இடத்தேவை :

(i) வயது : 4-6 மாதம்

தீவன இடம் (மீட்டர்) : 0.2-0.3 மீட்டர்

நிற்கும் இடம் (சதுர மீட்டர்) : 0.8-1.0 சதுர மீட்டர்

திறத்த இடம் (சதுர மீட்டர்) : 3.0-4.0 சதுர மீட்டர்

(ii) வயது : 6-12 மாதம்

தீவன இடம் (மீட்டர்) : 0.3-0.4 மீட்டர்

நிற்கும் இடம் (சதுர மீட்டர்) : 1.2-1.6 சதுர மீட்டர்

திறத்த இடம் (சதுர மீட்டர்) : 5.0-6.0 சதுர மீட்டர்

(iii) வயது : 1-2 வயது

தீவன இடம் (மீட்டர்) : 0.4-0.5 மீட்டர்

நிற்கும் இடம் (சதுர மீட்டர்) : 1.6-1.8 சதுர மீட்டர்

திறத்த இடம் (சதுர மீட்டர்) : 6.0-8.0 சதுர மீட்டர்

(iv) வயது : பசு

தீவன இடம் (மீட்டர்) : 0.8-1.0 மீட்டர்

நிற்கும் இடம் (சதுர மீட்டர்) : 1.8-2.0 சதுர மீட்டர்

திறத்த இடம் (சதுர மீட்டர்) : 11.0-12.0 சதுர மீட்டர்

(v) வயது : சினை பசு

தீவன இடம் (மீட்டர்) : 1.0-1.2 மீட்டர்

நிற்கும் இடம் (சதுர மீட்டர்) : 8.5-10.0 சதுர மீட்டர்

திறத்த இடம் (சதுர மீட்டர்) : 15.0-20.0 சதுர மீட்டர்

(vi) வயது : எரு

தீவன இடம் (மீட்டர்) : 1.0-1.2 மீட்டர்

நிற்கும் இடம் (சதுர மீட்டர்) : 9.0-11.0 சதுர மீட்டர்

திறத்த இடம் (சதுர மீட்டர்) : 20.0-22.0 சதுர மீட்டர்

* தனியாக வளர்க்க வேண்டும்

கேள்வி பதில் :

1. தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு உகந்த அதிக பால் தரும் கறவைபசுக்கள் எவை?

பொதுவாக ஜெர்சி மற்றும் ஜெர்சி கலப்பினங்கள் தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு உகந்த கறவை பசுக்களாகும். மேலும், ஹால்ஸ்டைன் - ப்ரிஸியன் மற்றும் ப்ரிஸியன் வகை கலப்பினங்கள் மலை பகுதிகள் மற்றும் அதிக மழை பகுதிகளுக்கு ஏற்ற இனங்களாகும்.

2. உழவு மற்றும் வேலை திறனுக்கு ஏற்ற மாட்டினங்கள் எவை?

அலிகார், காங்கேயம், அமிர்த்மகால் போன்ற மாட்டினங்கள் உழவு மற்றும் வேலை திறனுக்கு ஏற்ற இனங்களாகும்.

3. நம் நாட்டு கறவை மாட்டினங்களின் பாலில் உள்ள கொழுப்புசத்து எவ்வளவு?

4-5%

4. இந்திய எருமை பசுக்களின் பாலில் உள்ள கொழுப்பின் அளவு எவ்வளவு?

5-6%

5. பால் உற்பத்தி மற்றும் வேலைதிறனுக்கு ஏற்ற இந்திய மாட்டினங்கள் எவை?

தார்பார்க்கர், காங்ரேஜ், ஒங்கோல் மற்றும் கிருஷ்ணாபள்ளத்தாக்கு போன்ற இனங்கள்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday, 4 November 2017

ஒரு ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம்! – அள்ளிக் கொடுக்கும் அகத்தி…

சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய வைத்திய முறைகளைக் கையாளும் மருத்துவர்களாக இருந்தாலும்சரி, நவீன அலோபதி முறை மருத்துவர்களாக இருந்தாலும்சரி ‘உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாத மருத்துவர்களே இருக்கமாட்டார்கள். ‘உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுச் சத்துகளுக்காகத் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’ எனப் பரிந்துரைக்கப்படுவதால் கீரைகளுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. அந்தவகையில் உடற்சூடு, பித்தம், குடல் புண்கள் ஆகியவற்றைக் குணமாக்கும் அகத்திக்கீரைக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது.

கால்நடைத் தீவனமாகவும் வரப்புப் பயிராகவும் வெற்றிலைக் கொடிக்காலில் கொடி படர்வதற்கான மரமாகவும்தான் அகத்தியை பெரும்பாலும் நடவு செய்வார்கள். ஆனால், அகத்திக்கீரையின் சந்தை வாய்ப்பு குறித்துத் தெரிந்தவர்கள், இதைத் தனிப்பயிராகப் பயிரிட்டு நல்ல லாபம் எடுத்துவருகிறார்கள்.

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடுச் சந்தையைக் குறிவைத்து வந்தவாசி, உத்திரமேரூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது அகத்தி.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூருக்கு அருகிலுள்ள நெல்வாய் கூட்டுரோடு பகுதியிலிருந்து கோயம்பேட்டுச் சந்தைக்கு அகத்திக்கீரைப் பெருமளவு அனுப்பப்படுகிறது. இப்பகுதியிலுள்ள புழுதிவாக்கம் கிராமத்தில் அகத்திச் சாகுபடியில் ஈடுபட்டுவரும் ராமலிங்கம் என்பவரை ‘பசுமை விகடன்’ இதழுக்காகச் சந்தித்தோம். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“நான் விவரம் தெரிஞ்சதிலிருந்து விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன். எங்களுக்கு 3 ஏக்கர் நிலமிருக்கு. 5 மாடுகள் இருக்கு. முன்ன நெல், வெண்டை, கத்திரி, கரும்பு, அவரை, கடலை, மல்லிகைப்பூனு சாகுபடி செஞ்சுட்டு இருந்தேன். வேலையாள் பற்றாக்குறையால நெல், கடலை, அகத்திக்கீரைனு இப்போ சாகுபடி செஞ்சுட்டிருக்கேன்.

ஒரு ஏக்கர் நிலத்துல அகத்தி இருக்கு. பக்கத்துல இருக்குற மதுராந்தகம் ஏரிதான் முக்கியத் தண்ணீர் ஆதாரம். ஏரியில தண்ணீர் அதிகமிருந்தா நெல் விவசாயம் செய்வோம். இல்லாட்டி அகத்திதான் போடுவோம்” என்ற ராமலிங்கம், அகத்தி வயலுக்குள் அழைத்துச்சென்றார்.

“இந்தப் பகுதியில மத்த கீரை விவசாயம் அவ்வளவா கிடையாது. ஆனா, அகத்தியை மட்டும் நிறைய பேர் சாகுபடி செய்றாங்க. இது தொல்லையில்லாத பயிர். ஒரு தடவை விதைச்சா ரெண்டு வருஷம் மகசூல் எடுக்கலாம். பெருசா ஊட்டமும் கொடுக்க வேண்டியதில்லை. வியாபாரிகளுக்குப் பேசி விட்டுட்டா, ரெண்டு வருஷத்துக்கு அவங்களே அறுவடை செஞ்சு எடுத்துக்குவாங்க. அதில்லாம முன்னாடியே ஒரு கட்டு இவ்வளவுனு விலை பேசிட்டுதான் விதைப்போம்.

அதனால, முன்கூட்டியே ரெண்டு வருஷத்துக்கான வருமானத்தைத் திட்டமிட்டுவிட முடியும். அகத்தியில மகசூல் முடிஞ்சப்புறம், அந்த வயல் நல்ல வளமாகிடும். ஏன்னா, அகத்தி இலைகள் மண்ணுக்கு நல்ல சத்தாக மாறிடுது. அடுத்து அந்த நிலத்துல என்ன பயிர் வெச்சாலும் நல்லா விளைஞ்சு வரும்” என்று அகத்தி குறித்துச் சொன்ன ராமலிங்கம், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்…

“அகத்தியை விதைச்சு 70 நாள்ல முதல் அறுவடை செய்யலாம். அதுக்கப்புறம் 40 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ரெண்டு வருஷத்துல 17 முறை அறுவடை செய்யலாம். அதுக்கப்புறமும் கீரை வரும். ஆனா, மகசூல் குறைவாத்தான் இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல ஓர் அறுவடைக்கு 650 சுமைக்குமேல (பெரிய அளவிலான கட்டு) கீரை கிடைக்கும். இப்போ ஒரு சுமை 30 ரூபாய்னு பேசி விட்டிருக்கேன்.

650 சுமைனு வெச்சுக்கிட்டாலும் ஒரு சுமை 30 ரூபாய் விலையில் 19,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தம் 17 அறுவடைக்கும் சேர்த்து 3,31,500 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதுல உழவு, விதை, விதைப்பு, உரம் எல்லாம் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய்ச் செலவாகும். அதுபோக, 3,11,500 ரூபாய் லாபமா நிக்கும்.

அகத்தி நட்டோம்னா வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். அகத்திபோட்ட வயல்ல நெல் போட்டோம்னா அதுக்கு உரம் போட வேண்டிய அவசியமில்லை. காத்துல இருக்கிற தழைச்சத்தை இழுத்து, மண்ணை வளப்படுத்தும் இந்த அகத்தி. அதனால, உரச்செலவு குறைஞ்சுடுது” என்று சொல்லியபடியே அடுத்த வேலையைப் பார்க்க வயலுக்குள் சென்றார் ராமலிங்கம்.

தொடர்புக்கு, ராமலிங்கம், செல்போன்: 97862 66536

யூரியா வேண்டாம்!

ஒரு ஏக்கர் பரப்பில் அகத்திக்கீரைச் சாகுபடி செய்வது குறித்து ராமலிங்கம் சொன்ன தகவல்கள் இங்கே…

“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 3 டிப்பர் அளவு மாட்டு எருவைக் கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு 2 சால் உழவு ஓட்டி மூன்று நாள்கள் காய விட வேண்டும். மீண்டும் நிலத்தை நன்கு உழுது மட்டப்படுத்தி, வாய்க்கால் எடுத்துப் பார் பிடித்து, அகத்தி விதையை நடவு செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

விதைத்த 10-ம் நாளுக்குமேல் விதைகள் முளைத்துவரும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 20-ஆம் நாளுக்குமேல் களையெடுத்துத் தழை, மணி, சாம்பல் சத்துகள் அடங்கிய கலப்பு உரத்தைப் (காம்ப்ளக்ஸ்) பரிந்துரைக்கப்படும் அளவில் இட வேண்டும். அகத்திக்குக் கண்டிப்பாக யூரியா இடக்கூடாது. வேறு உரங்களும் இடத் தேவையில்லை. செடிகளில் சத்துப் பற்றாக்குறையால் ஊட்டம் குறைந்தால் பரிந்துரைக்கப்பட்ட உரத்தை இட்டால் போதுமானது. அவ்வப்போது களைகளை மட்டும் அகற்றி வர வேண்டும். விதைத்த 70-ஆம் நாளுக்குமேல் அறுவடை செய்யலாம்.”

கலப்பு உரத்துக்குப் பதில் ஜீவாமிர்தம்!

அகத்திக்கீரையை இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்து பேசிய முன்னோடி இயற்கை விவசாயி தாந்தோணி, “அகத்திக்கீரையை ஒருமுறை விதைச்சா 10 வருடங்கள் வரை பலன் கொடுக்கும். இந்தப் பகுதியில இயற்கை விவசாயத்தில அகத்திக்கீரைச் சாகுபடி செய்றவங்களும் இருக்கிறாங்க. அகத்திக்கீரைக்கு மாட்டு எருவை அதிகமா கொடுக்கலாம்.

யூரியா, பொட்டாஷ் மாதிரியான ரசாயன உரங்களுக்குப் பதிலா ஜீவாமிர்தம் கொடுத்து வந்தாலே அகத்திக்கீரையில நல்ல மகசூல் எடுக்கலாம். இதுதவிர, ஜீவாமிர்தத்த தெளிச்சோ, பாசன தண்ணில கலந்துவிட்டோ பயிர்களுக்குக் கொடுக்கலாம்.

கலப்பு ரசாயன உரம் பயன்படுத்தினா பூச்சித்தாக்குதல் இருக்கும். அதனால, கலப்பு உரத்தைத் தவிர்க்கிறது நல்லது. இயற்கை உரங்கள உபயோகப்படுத்தினா சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கும்” என்றார்.

தொடர்புக்கு, தாந்தோணி, செல்போன்: 93814 57817

அகத்தியில் நிச்சய வருமானம்!

ராமலிங்கத்தின் வயலில் அகத்தி அறுவடை செய்துகொண்டிருந்த கீரை வியாபாரி ரமேஷிடம் பேசினோம். “வந்தவாசி, மதுராந்தகம், உத்திரமேரூர் பகுதிகள்ல அகத்திச் சாகுபடி அதிகமாக நடக்குது. சிலர் எங்களமாதிரி வியாபாரிகள்கிட்ட கேட்டுட்டுத்தான் நடவே செய்வாங்க. முதல் அறுவடை முடிஞ்சதும் 40 நாளுக்கு ஒருதடவை, சரியான நேரத்துக்குப் போய் அறுவடை செஞ்சுடுவோம்.

அறுவடைச் செலவெல்லாம் எங்களைச் சேர்ந்தது. அகத்தி போட்டா கண்டிப்பா நல்ல வருமானம் எடுக்க முடியும். அகத்திச் சாகுபடி செய்றதுக்கு அதிகச் செலவும் ஆகாது. அதனாலதான் இந்தப் பகுதில அகத்தியை விரும்பிச் சாகுபடிசெய்றாங்க” என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday, 30 October 2017


வெள்ளாடுகளுக்கான நோய் பராமரிப்பு :


தடுப்பூசி அட்டவணை :

ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.

1. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி

2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி

3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி

4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.

5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.

குடற்புழு நீக்க அட்டவணை :

ஆடுகளின் வயது - பரிந்துரைகள் :

2வது மாதம் - நாடாப்புழுக்களுக்கான மருந்து

3வது மாதம் - நாடாப்புழுக்களுக்கான மருந்து

4வது மாதம் - நாடாப்புழுக்களுக்கான மருந்து

5வது மாதம் - உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

6வது மாதம் - உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

9வது மாதம் - உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

12வது மாதம் - தட்டைப் புழுக்களுக்கான மருந்து

ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.

மாதம் - பரிந்துரைகள் :

ஜனவரி - மார்ச் - தட்டைப்புழுவிற்கான மருந்து

ஏப்ரல் - ஜீன் - உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஜீலை - செப்டம்பர் - தட்டைப் புழுவிற்கான மருந்து

அக்டோபர் - டிசம்பர் - உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை :

1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.

2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

4.மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.

6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.

7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை :

1. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)

முதல் தடுப்பூசி :

3-4 மாதம்

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

2. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

2 மாத வயதில்

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

3. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)

முதல் தடுப்பூசி :

6 வார வயதில்

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

4. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)

சிறப்புக் கவனம் :

கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.

5. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

அடைப்பான் நோய் தடுப்பூசி
(அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்

தொடர் தடுப்பூசிகள் :

நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.

சிறப்புக் கவனம் :

நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.

6. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

டெட்டனஸ் ஜன்னி
தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.

7. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.

கேள்வி பதில் :

1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?

கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.

2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?

தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.

3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?

பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 29 October 2017

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வருமானம்!

கடவுளுக்குப் படையல் படைக்கும்போதும் சரி, மங்களகரமான நிகழ்ச்சிகளிலும் சரி... அதில் வெற்றிலை கட்டாயம் இடம் பெற்றிருக்கும். திருமண நிச்சயதார்த்தத்தின் போது வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வது ஒரு சம்பிரதாயமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பொங்கல் திருநாளன்றும் படையலில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு.

‘கும்பகோணம் வெற்றிலை’, ‘சோழவந்தான் வெற்றிலை’ என ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேக சுவையுடன் விளைகிறது, வெற்றிலை. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கும் தனி கிராக்கி உண்டு. அதற்கு அந்தப் பகுதியின் நீர் வளமே காரணம்.

ஆத்தூர் பகுதியிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தினமும் 2 ஆயிரம் கிலோ அளவில் வெற்றிலை அனுப்பப்படுகிறது. சீசன் சமயங்களில் 5 ஆயிரம் கிலோ அளவு கூட வெற்றிலை அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இயற்கை முறையில் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறார், வெள்ளாளன்விளை கிராமத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்.

திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பரமன்குறிச்சி. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, வெள்ளாளன்விளை. வெற்றிலைக் கொடிகளுக்குத், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“பரம்பரையாவே விவசாயம்தான் தொழில். தாத்தா காலத்துல இருந்தே வெற்றிலை விவசாயம் செய்றோம். நான் பி.ஏ படிச்சிட்டு அப்பாவுடன் சேர்ந்து வெற்றிலை விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல ரசாயன உரம் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, காயாமொழியில் இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்ற சக்திகுமார்ங்கிற விவசாயியைச் சந்திச்சேன். அவர்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லி ‘பசுமை விகட’னையும் அறிமுகப்படுத்தினார். உடனே தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். முழுமையா இயற்கை விவசாயத்துக்கும் மாறிட்டேன். முன்னெல்லாம் இந்தப் பகுதியில நிறைய பேர் வெற்றிலை போட்டிருந்தாங்க. ஆனா, தண்ணீர்த் தட்டுப்பாட்டால பலர் விவசாயத்தையே விட்டுட்டாங்க. ஆனாலும், நான் தாக்குப்பிடிச்சு நிக்கிறதுக்குக் காரணம், பசுமைவிகடன் சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாயப் பாடம்தான்” என்று முன்னுரை சொன்ன ஆம்ஸ்ட்ராங், தொடர்ந்தார்.

“பொதுவாகவே வெற்றிலைக்கு கரிசல் மண் ரொம்ப ஏற்றது. எனது நிலமும் கரிசல் நிலம்தான். அதனால மகசூலுக்கு பஞ்சம் இல்லை. இறவைப் பாசனத்துலதான் வெற்றிலை சாகுபடி செய்துக்கிட்டிருக்கேன். 2 ஏக்கர்ல வெற்றிலை போட்டிருந்தேன். போன மாசம் பெய்த மழையால வயல்ல தண்ணி தேங்கினதுல... ஒரு ஏக்கர் அளவுக்கு பயிர் வீணாயிடுச்சு. இப்போ ஒரு ஏக்கர்ல மட்டும்தான் வெற்றிலை இருக்கு. இன்னொரு ஏக்கர்ல வெற்றிலை நடவுக்கான வேலைகளைச் செய்துக்கிட்டிருக்கேன்.

முழுக்க முழுக்க தொழுவுரம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பங்கொட்டைக் கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தித்தான் சாகுபடி செய்றேன். இயற்கை முறைங்கிறதால அதிகமா தண்ணீர் தேவைப்படுறதில்லை. அதில்லாம ரசாயன உரம் பயன்படுத்தினா மூணு வருஷம்தான் வெற்றிலை மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கை முறையில அதை விட அதிக வருஷங்கள் மகசூல் இருக்கும்” என்ற ஆம்ஸ்ட்ராங், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

‘’நடவு செய்த 90-ம் நாளுக்கு மேல தொடர்ந்து வெற்றிலை பறிக்கலாம். பொதுவா, 20 நாளுக்கு ஒரு முறைதான் பறிப்பாங்க. நான் தினசரி வருமானத்துக்காக சுழற்சி முறையில பறிக்கிறேன். ஒரு ஏக்கர்லயும் மொத்தமா ஒரே நாள்ல பறிச்சுக்கிட்டுப் போறப்போ... சில சமயம் குறைவாதான் விலை கிடைக்கும். அதே நேரத்துல தினமும் கொஞ்சம் கொஞ்சம் பாத்திகளா பிரிச்சுக்கிட்டு சுழற்சி முறையில பறிக்கிறப்போ... எப்பவாவது விலை குறைஞ்சாலும் பிரச்னை இருக்காது. ஆத்தூர், உடன்குடி ரெண்டு ஊர்லயுமே வெற்றிலைச் சந்தை இருக்கு. இங்கதான் வெற்றிலையை விற்பனை செய்றேன். வெற்றிலை படர்வதற்காக நட்டிருக்கிற அகத்தியிலும் தினமும் கீரை பறிக்கிறேன். இதை உள்ளூர்லயே விற்பனை செய்துடுவேன்.

பறித்த வெற்றிலையைக் கட்டாகக் கட்டி தண்ணீர் தெளித்து ஈரத்துணியால மூடிடணும். சராசரியா ஒரு கட்டுக்கு 300 வெற்றிலை இருக்கும். காற்று, வெயில் பட்டு வெற்றிலை காய்ந்தால் எடை குறைஞ்சிடும். தோட்டத்தில் எடைபோடும்போது 1,100 கிராம் இருந்தா, சந்தைக்குக் கொண்டுபோகும்போது ஒரு கிலோதான் இருக்கும்.

நான் தினமும் பத்து பாத்திகள்ல அறுவடை செய்றேன். தினமும் சராசரியா 20 கிலோ வெற்றிலையும், 15 கட்டு அகத்தியும் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு 600 கிலோ வெற்றிலையும், 450 கட்டு அகத்தியும் கிடைக்குது. முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள், மழை நாட்கள்ல வெற்றிலை விலை கூடும். மற்ற நாட்கள்ல விலை குறைவா இருக்கும். ஒரு கிலோ வெற்றிலை 60 ரூபாய்ல இருந்து 120 ரூபாய் வரை விற்பனையாகும். கணக்குப் பாக்கிறப்போ சராசரியா கிலோவுக்கு 70 ரூபாய் கிடைச்சிடும். அந்த வகையில ஒரு ஏக்கர் வெற்றிலை மூலமா மாசத்துக்கு 42 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஒரு கட்டு அகத்தி 10 ரூபாய்னு விற்பனையாகுது. அந்த வகையில மாசத்துக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுடும். வருஷத்துக்குனு பார்த்தா ஒரு ஏக்கர்ல இருக்கிற வெற்றிலை, அகத்தி ரெண்டுலயும் சேர்த்து... 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுல எல்லா செலவும் போக, 3 லட்ச ரூபாய் வரை லாபமா நிக்கும்” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு,
ஆம்ஸ்ட்ராங்,
செல்போன்: 94429-48672

வெற்றிலை சாகுபடி செய்யும் முறை:

வெற்றிலை சாகுபடி குறித்து, ஆம்ஸ்ட்ராங்

சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 300 பாத்திகள்!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஆடி மாதத் தொடக்கத்தில் ஒரு சால் உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து 12, 18, 24, 30-ம் நாட்களில் உழவு செய்ய வேண்டும். இறுதி உழவின்போது ஏக்கருக்கு 5 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி உழ வேண்டும். பிறகு, 12 அடி நீளம் 10 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் 2 அடி அகலத்தில் வாய்க்கால்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆறு பாத்திகளுக்கும் இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த வகையில் ஏக்கருக்கு சுமார் 300 பாத்திகள் வரை எடுக்கலாம்.

கொடி படர அகத்தி, ஆமணக்கு, முள்முருங்கை!

கடைசியாக உழவு செய்து 10 நாட்கள் கழிந்த பிறகு, பாத்திகளில்... வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளி, செடிக்குச் செடி 1 அடி இடைவெளி என்ற கணக்கில்... ஆமணக்கு, அகத்தி, முள் முருங்கை ஆகிய பயிர்களின் விதைகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பயிர்கள் வளர்ந்த பிறகு இவற்றில்தான் வெற்றிலைக் கொடிகளைப் படர விட வேண்டும். வழக்கமாக அகத்தியை மட்டும்தான் நடவு செய்வார்கள். ஆனால், ஆமணக்கு, முள்முருங்கை போன்றவற்றை கலந்து பயிரிடும்போது பூச்சிகளின் தாக்குதல் குறையும். இந்தப் பயிர்கள், 40 நாட்களுக்குள் இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதுதான் வெற்றிலை நடவுக்கு சரியான தருணம். இதற்குள் களைகள் முளைத்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும்.

ஏக்கருக்கு 18 ஆயிரம் கொடிகள்!

8 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்த வெற்றிலைக் கொடிகளில் உச்சியில் 3 அடி அளவுக்கு வெட்டி எடுத்து, அதை ஒரு அடி நீளமுள்ள மூன்று துண்டுகளாக்க வேண்டும். ஒரு துண்டில் மூன்று கணுக்கள் இருக்க வேண்டும். இவைதான் விதைக் கொடி. இவற்றை ஒரு கட்டுக்கு 50 விதைக் கொடிகள் எனக் கட்டி வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 380 கட்டுகள் (19,000 கொடிகள்) வரை தேவைப்படும். ஒரு பாத்தியில் 60 கொடிகள் நடவு செய்யலாம். அந்த வகையில் 18 ஆயிரம் கொடிகளே போதுமானவை. ஆனாலும், சில கொடிகள் நடவுக்குள் அழுகி விட வாய்ப்புண்டு. அதனால் 19 ஆயிரம் கொடிகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

தண்ணீர்... கவனம்!

ஒன்றரை அடி ஆழம், ஐந்தடி சதுரத்தில் ஒரு குழி பறித்து அதில் விதைக் கொடிக் கட்டுகளைப் போட்டு இரண்டு கணுக்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 3-ம் நாள் அவற்றை எடுத்து அகத்தி, ஆமணக்கு, முள் முருங்கைச் செடிகளின் அருகில்... ஒவ்வொரு செடியின் அருகிலும் கைகளால் குழி பறித்து தலா ஒரு வெற்றிலைக் கொடியை இரண்டு கணுக்கள் குழிக்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சி, மீண்டும் மாலையில் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் நிலத்தில் தேங்கக் கூடாது. அதிக தண்ணீர் பாய்ச்சினால் கொடிகள் அழுகி விட வாய்ப்புண்டு.

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்!

வெற்றிலைக் கொடிகளை நடவு செய்த 5-ம் நாள், செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 22-ம் நாளுக்கு மேல் கொடிகள் ஓரளவுக்கு வளர்ந்து விடும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி ஜீவாமிர்தக் கரைசல் எனக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, 20 நாட்களுக்கு ஒரு முறை கொடியின் தூரிலிருந்து மேற்பகுதி வரை நனையுமாறு இதேபோல ஜீவாமிர்தத்தைத் தெளித்து வர வேண்டும். 40-ம் நாள் வெற்றிலைக் கொடிகளை... அகத்தி, ஆமணக்கு, முள் முருங்கை செடிகளில் தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு கட்டி விட வேண்டும்.

நடவு செய்ததில் இருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை... 100 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்த கலவையில், ஒரு கைப்பிடி அளவை ஒவ்வொரு கொடியின் தூரிலும் வைக்க வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு கொடியின் தூரிலும் இரண்டு கைப்பிடி அளவு தொழுவுரம் வைக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடுதலாக இருக்கும்.

சில சமயங்களில் தூர் அழுகல் நோய் வரும். இந்நோய் தென்பட்டால், அந்தக் கொடியில் உள்ள வெற்றிலைகளைப் பறித்து விட்டு, அக்கொடியின் கீழ்ப் பகுதியை மண்ணுக்குள் பதியமிட்டு படர விட வேண்டும். அதிக வெயில் நேரங்களில் இலை வெளிறினால், கூடுதலாக தண்ணீர் பாய்ச்சினால் சரியாகி விடும்.

இலைச்சுருட்டுப் புழுக்கள் தாக்கினால்... வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 5 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து 12 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் 2 நாட்கள் ஊற வைத்தால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார். இந்தக் கரைசலில் 300 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதைத் தெளித்த மறுநாள் இதே அளவில் பஞ்சகவ்யா தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உயரமாக வளர்ந்த கொடிகளின் தண்டையும் நுனியையும், இறுக்கமாகக் கட்ட வேண்டும். இதைதண்டயம் கட்டுதல்’(கொடிக்கட்டுதல்) என்பார்கள். அகத்தி, ஆமணக்கு, முள்முருங்கைச் செடிகளுக்கு குறுக்காக சவுக்குக் கம்பு கட்டி அவற்றிலும் கொடிகளைப் படர விடலாம்”.

வெற்றிலையில் ஆரோக்கியம்

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் உள்ளன. கால்சியம், கரோட்டின், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் வெற்றிலையில் உள்ளன. வெற்றிலைக்கு ‘நாக இலை’ என்ற பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தையே முறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதால் சித்தர்கள் வெற்றிலையை நாக இலை என்று குறிப்பிட்டுள்ளனர். வெற்றிலையுடன் மிளகை தட்டிக் கொடுத்தால் பூச்சிக்கடிபட்டவர்களுக்கு விஷம் இறங்கும். இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் 9 மிளகை மடக்கி வாயில் போட்டு மென்று விழுங்கினால் தேள்கடி விஷம் இறங்கும்.

வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கி பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. வெற்றிலைச்சாறுடன் நீர் கலந்த பாலைக் குடித்தால் சிறுநீர் பிரியும், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும். வெற்றிலையை கடுகு எண்ணையில் இளஞ்சூட்டில் வதக்கி மார்பில் கட்டினால் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தடவி ஆசன வாயினுள் செலுத்தினால் மலம் வெளியேறும்.

தேங்காய் எண்ணையில் வெற்றிலையை சேர்த்து சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் இறக்கி அந்த எண்ணையைத் தடவினால் தோல், சொறி , சிரங்கு நோய்கள் குணமாகும். வெற்றிலை வேரை சிறிதளவு எடுத்து மென்று வந்தால், குரல்வளம் பெருகும்.

வெற்றிலை விழா :

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள வெள்ளூர் கிராமத்தில் ஊர் ஒற்றுமைக்காவும், விவசாயம் செழிக்கவும்... ஒவ்வொரு ஆண்டும் வெற்றிலைப் பிரி விழா கொண்டாடி வருகிறார்கள். வெள்ளூர் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வெள்ளூரைச் சுற்றியுள்ள 58 கிராமங்கள் ஒன்றிணைந்து, ‘வெள்ளூர் நாடு’ என்றழைக்கப்படுகிறது. இந்த 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மூண்டவாசி, சலிப்புளி, நண்டன்... என 11 பிரிவுகளாக உள்ளனர்.

ஒரு பிரிவை நிர்வகிக்க இரண்டு அம்பலக்காரர், இரண்டு இளங்கச்சிகள் என 44 நபர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளன்று இந்த 44 பேரும் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு வெள்ளூரிலுள்ள கருங்கல் மந்தையில் ‘ப’ வடிவில் அமர்ந்து... 58 கிராமங்களுக்கும் வெற்றிலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டினரும் அந்த வெற்றிலையைப் பெற்றுக் கொண்டு மாடுகளை நிலத்துக்கு ஓட்டிச் சென்று அந்த வெற்றிலையை வைத்து பூஜை செய்து பிறகு உழுகிறார்கள். இப்படி கோடை உழவு செய்தால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது இவர்களது நம்பிக்கை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠