Sunday, 4 February 2018


வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு பாகம் - 3


தீவன மேலாண்மை :

* வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.

* கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.

* தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.

* ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.

* அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

குட்டி தீவனம் :

மக்காசோளம் - 37 கிலோ

பருப்பு வகைகள் - 15 கிலோ

புண்ணாக்கு - 25 கிலோ

கோதுமை தவிடு - 20 கிலோ

தாது உப்பு - 2.5 கிலோ

உப்பு - 0.5 கிலோ

மொத்தம் - 100 கிலோ

வளரும் ஆட்டு தீவனம் :

மக்காசோளம் - 15 கிலோ

பருப்பு வகைகள் - 37 கிலோ

புண்ணாக்கு - 10 கிலோ

கோதுமை தவிடு - 35 கிலோ

தாது உப்பு - 2 கிலோ

உப்பு - 1 கிலோ

மொத்தம் - 100 கிலோ

பால் கொடுக்கும் ஆட்டு தீவனம் :

மக்காசோளம் - 52 கிலோ

புண்ணாக்கு - 8 கிலோ

கோதுமை தவிடு - 37 கிலோ

தாது உப்பு - 2 கிலோ

உப்பு - 1 கிலோ

மொத்தம் - 100 கிலோ

சினை ஆட்டு தீவனம் :

மக்காசோளம் - 35 கிலோ

புண்ணாக்கு - 20 கிலோ

கோதுமை தவிடு - 42 கிலோ

தாது உப்பு - 2 கிலோ

உப்பு - 1 கிலோ

மொத்தம் - 100 கிலோ

* குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்

* வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்

* சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்

* தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.

* அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

கேள்வி பதில்கள் :

1. செம்மறி/வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம் கொடுப்பது அவசியமா

ஆடுகளுக்கு கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் அடர் தீவனம் அளிப்பது அவசியம்

போதிய அளவிற்கு தரமான தீவனப் பயிர்கள் கிடைக்காத நிலைமை கருவுற்றிருக்கும் காலத்தின் கடைசி பகுதி மற்றும் பால் கொடுக்கும் காலத்தின் முற்பகுதி ஆகிய சமயங்களில் அதிகமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அளிக்க அடர் தீவனம் அளித்தல் அவசியம்.

2. மேய்ச்சலுடன் எந்த வகை தீவனங்களை செம்மறி/வெள்ளாடுகளுக்கு கூடுதலாகத் தர வேண்டும்?

மேய்ச்சலுடன் ஆடுகளுக்கு கூடுதலாக அளிக்கக் கூடிய தீவனங்கள் :

i) கடலைக்கொடி

ii) மர இலைகள்

iii) பயறுவகைத் தீவனப் பயிர்கள்

iv) அடர் தீவனங்கள்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Saturday, 3 February 2018

அரை ஏக்கர்... 18 மாதங்கள்... 2 லட்சம் :

பூரிக்கவைக்கும் பூனைத்தலைக் கத்திரி!

நம்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக ரகங்கள் இருக்கும் ஒரு பயிர் என்றால்... அது கத்திரியாகத்தான் இருக்கும். புளியம்பூ கத்திரி, பவானிக் கத்திரி, கோவை வரிக்கத்திரி, வெள்ளை வரிக்கத்திரி, பச்சை வரிக்கத்திரி... என இப்போதும் கூட பல வகையான நாட்டுக் கத்திரி ரகங்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. மணமும் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட நாட்டுக் கத்திரிகள் ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண்ணுக்கேற்றப் பயிராக விளைந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் வீரிய ரகங்களின் அதிரடி வருகையால், காலகாலமாக அருமையான விளைச்சலையும், அடுத்த போகத்துக்கான விதைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நாட்டு ரகங்களில் பெரும்பாலானவை, படிப்படியாக அழிந்துவிட்டன. இன்று, விதைகளுக்காக கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கிறார்கள், விவசாயிகள்.

இத்தகைய கொடுஞ்சூழலிலும்... நாட்டு ரகங்களை விடாமல் காப்பாற்றி சாகுபடி செய்துவரும் சில விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, 'பூனைத்தலைக் கத்திரி’ என்று அழைக்கப்படுகிற 'வெள்ளைவரி உருண்டைக் கத்திரி’ என்கிற நாட்டு ரகத்தைப் பயிர் செய்வதுடன், பிற விவசாயிகளுக்கு விதைகளையும் கொடுத்து வருகிறார், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த இளம்விவசாயி வி.எம். ராமநாதன்.

உடுமலைப்பேட்டை-ஆனைமலை சாலையில் பயணித்தால், பன்னிரண்டாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் இருக்கிறது, சின்ன பாப்பனூத்துப் பிரிவு. தென்மேற்குப் பருவமழை, காற்றுடன் கலந்து பன்னீர் தெளித்து, சிலுசிலுத்த மழைப்பொழுதில் கத்திரி வயலில் ராமநாதனைச் சந்தித்தோம்.

நாடி வந்த நாட்டு ரகம்!

''எனக்கு இதுதான் சொந்த ஊர். டிப்ளோமா படிச்சுட்டு, வேலை தேடி அலையாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். 30 ஏக்கர்ல வெவசாயம் பண்றோம். அதுல 15 ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி 15 ஏக்கர்ல சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, மிளகாய், கத்திரினு காய்கறிகளை மாத்தி மாத்தி சாகுபடி செய்றோம். போட்ட விதை பொல்லாப்பில்லாம விளையுற வளமான செம்மண் பூமி. ஆரம்பத்துல நாட்டு ரக காய்கறிகளைத்தான் விளைய வெச்சோம்.

காலப்போக்குல எல்லோரையும் போல வீரிய விதைக்கு நாங்களும் மாறிட்டோம். கத்திரியிலும் கோ-1, கோ-2 ரகங்களைத்தான் நடவு செஞ்சோம். ஆனா, நாட்டு ரக கத்திரி என்னைத் தேடி வந்தது.

'லட்சுமி பாட்டி’னு ஒருத்தங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். அதுல எங்களுக்கு பரிமாறுன எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அபாரமான சுவையா இருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சு பாட்டியம்மாகிட்ட 'அந்தக் கத்திரிக்காயை எங்க வாங்கினீங்க?’னு கேட்டோம். 'இங்கதான் வாங்கினேன்’னு சிரிச்சுக்கிட்டே அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துக்குக் கூட்டிப் போயி, அங்க இருந்த செடிகளைக் காட்டினாங்க. பூனைத்தலை வடிவத்துல கிரிக்கெட் பந்து அளவுக்கு ஊதா நிறத்துல வெள்ளைவரிகள் ஓடின காய்கள் தொங்கிட்டு இருந்துச்சு. செடிகளைப் பார்த்து அசந்துட்டேன். 'இது பாரம்பரிய ரகம். ரொம்ப வருஷமா எங்க வீட்டுத் தோட்டத்துல இருக்கு. நாலு பழம் தாரேன். விதை எடுத்து வீட்டுல நட்டு நீங்களும் சாப்பிடுங்க’னு சொல்லி கத்திரிப் பழங்களைக் கொடுத்தாங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மழை வலுக்க, நனையாத இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற ராமநாதன் தொடர்ந்தார்.

நேரடிப் பராமரிப்பு அவசியம்!

''அந்தப் பழங்கள்ல எடுத்த விதைகள்ல நாத்து எடுத்ததுல அஞ்சு பாத்திக்குத் தேவையான அளவுக்கு நாத்து கிடைச்சுது. அதுல இருந்து, விதை எடுத்து இப்போ அரை ஏக்கர்ல பூனைத்தலைக் கத்திரியைச் சாகுபடி செஞ்சிருக்கோம். 18 மாசத்துல 20 டன் மகசூல் கிடைச்சிருக்கு. சராசரியா கிலோவுக்கு 10 ரூபாய்ங்கிற விலையில 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அதுல 70 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம். பருவ நிலை, தண்ணீர், விற்பனை வாய்ப்பு மூணும் நல்லா இருந்ததால எதிர்பார்த்ததைவிட அதிகமாவே லாபம் கிடைச்சிருக்கு. எவ்வளவு வேலையாட்கள் இருந்தாலும், கண்கொத்திப் பாம்பா நாமளும் வயலைப் பாத்துக்கிட்டே இருந்தாத்தான் விவசாயத்துல ஜெயிக்க முடியும்'' என்ற ராமநாதன்,

''விளைஞ்ச காய்கள்ல ஊக்கமான காய் களாகப் பார்த்து செடிகள்ல பழுக்க விட்டிருக்கோம். இதுல இருந்தே விதை எடுத்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம். இப்போ நான், 'இயற்கைப் பாதி...செயற்கைப் பாதி’னு விவசாயம் செய்றேன். இதை முழுசா இயற்கை முறையிலயும் சாகுபடி செய்யலாம். அடுத்த போகத்துல இருந்து, இந்த நாட்டு ரகத்தை மட்டுமாவது முழு இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்னு நினைச்சிருக்கேன். காணாம போன இந்த ரகம் திரும்பவும் பரவணுங்கிறதுதான் எங்க கனவு'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

பூனைத்தலைக் கத்திரி சாகுபடி பற்றி ராமநாதன் சொன்ன விஷயங்கள் இங்கே...

ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். மொத்த சாகுபடி காலம் 18 மாதங்கள். இதில் 16 மாதங்கள் மகசூல் இருக்கும். பொதுவாக கத்திரிக்கு நாற்று நடவுதான் சிறந்தது. அரை ஏக்கரில் சாகுபடி செய்ய, 10 அடி நீளம், 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால் அமைத்துக் கொள்ளவேண்டும். மண்கட்டிகள், பொடிக்கற்களை அப்புறப்படுத்தி, 10 கிலோ சலித்த தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, அதன் மீது 15 கிலோ செம்மண்ணைக் கொட்டி இரண்டையும் கலக்கி சமன்படுத்த வேண்டும். பிறகு, பாத்திக்குள் விதைகளைத் தூவி, மண்மூடும் அளவுக்குக் கீறிவிட்டு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். 15-ம் நாளில் களைகளை அகற்றி, ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கரைசலை பாசனநீரில் கலந்துவிட வேண்டும். இது, வேர்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும். பூச்சிகள் தாக்கினால், பரிந்துரைக்கப்படும் பூச்சிகொல்லியைத் தெளிக்கலாம். 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் நாற்றுகள் தயாராகிவிடும்.

புழுதியாக உழவு செய்த அரை ஏக்கர் நிலத்தில் 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்யவேண்டும். இரண்டடி அகலம் முக்கால் அடி உயரத்தில் வரிசையாக மேட்டுப்பாத்திகள் அமைத்து, சொட்டு நீர்ப்பாசன வசதி செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்கவேண்டும். பாத்திகளை ஈரமாக்கி, தயாராக உள்ள நாற்றுகளை, பாத்திகளின் இரண்டு ஓரங்களிலும் செடிக்குச் செடி 3 அடி இடைவெளி இருப்பது போல் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால், போதுமானது.

25-ம் நாள் களை எடுத்து, பரிந்துரைக்கப்படும் ரசாயன உரத்தை இடவேண்டும். தொடர்ந்து, 25 நாட்களுக்கு ஒரு முறை பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கலப்பு உரங்கள், நுண்ணூட்ட உரங்களை மாற்றி மாற்றி, கொடுத்து வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தழைச்சத்து மிகுந்த உரங்களை அதிகம் கொடுக்கக் கூடாது. அதனால், ஏற்படும் செடிகளின் தேவையற்ற வளர்ச்சி, காய்ப்புழுக்களைக் கைதட்டி அழைக்கும். இதில் அதிகம் பூச்சிகள், நோய்கள் தாக்கும். தேவைப்படும் சமயத்தில் பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், மருந்துகளைத் தெளித்து பூச்சிகள், நோய்களைக் கட்டுப்படுத்தலாம். 60-ம் நாள் முதல் மகசூல் எடுக்கலாம். ஒரு செடியில் இருந்து, மொத்தமாக 6 கிலோ காய் கிடைக்கும். அரை ஏக்கரில் 20 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

நாற்றங்கால் மானியம் 4 ஆயிரம் ரூபாய்!

இந்த ரக கத்தரி குறித்துப் பேசிய உடுமலைப்பேட்டை வேளாண்மைத் தோட்டக்கலை உதவி இயக்குநர் இளங்கோவன், ''விதைகள் எளிதில் கிடைக்காத இந்த ரக கத்திரி, வீரிய ரகங்களுக்கு இணையாக மகசூல் தரக்கூடியது. இதுபோன்ற நாட்டுரகங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் முன்னோடி விவசாயிகளை அழைத்து செயல் விளக்கப் பண்ணை, பயிற்சிகள் அளித்து வருகிறோம். நாட்டு ரக விதைகளைச் சேகரித்து விவசாயிகளுக்குக் கொடுத்தும் வருகிறோம்.

நாற்றங்கால் அமைத்து மற்றவர்களுக்கு நாற்று கொடுக்க விரும்பும் விவசாயிகளுக்கு, 4 ஆயிரம் ரூபாய் நாற்றங்கால் மானியமும் வழங்கி வருகிறோம். முன்னோடி விவசாயி ராமநாதன், ஆத்மா திட்டத்தின் கீழ் மானியம் பெற்று நாற்றங்கால் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

தொடர்புக்கு :
வி.எம். ராமநாதன்,
செல்போன்: 94431-67078.

இளங்கோவன்,
செல்போன்: 98420-07125. Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠
ஆண்டு முழுவதும் வருமானம்... அதிக பாடு இல்லாத அரளி...!

எந்த விசேஷமாக இருந்தாலும் மலர்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக விற்பனை வாய்ப்பு உள்ள பயிர்களில், மலர்களும் முக்கிய இடத்திலிருக்கின்றன. இதனால், மலர் விவசாயிகளுக்கும் குறிப்பிடத்தகுந்த வருமானம் கிடைத்து வருவதால், சமீபகாலமாக மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது!

பொதுவாக, மலர் சாகுபடிக்கு நல்ல தண்ணீர் வளம் இருக்க வேண்டும். என்றாலும், குறைவான தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கும் ஏற்ற மலர்கள் உள்ளன. அவற்றில், முதலிடத்தில் இருப்பது, அரளி. தண்ணீர், பராமரிப்பு... என அனைத்துமே அதிகளவில் தேவையில்லாததால், பலரும் அரளியை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, இயற்கை முறையில் அரளி சாகுபடி செய்து வருகிறார், தருமபுரி மாவட்டம், கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன்.

பொம்மிடி-அரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது, கதிரிபுரம். ஊருக்குப் போகும் சாலையில் பருத்தி, கரும்புத் தோட்டங்கள் அணிவகுக்கின்றன. அருகே உள்ள வயல்களில் கனகாம்பரம், ரோஜா என மலர்ந்து கிடந்த காட்சி, மாயவனின் அரளித் தோட்டத்துக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.

சொல்லிக்கொடுத்த சொந்தம்!

''குடும்பத்துல பாகம் பிரிச்சப்போ... எனக்கும், அண்ணனுக்கும் முக்கால் முக்கால் ஏக்கர் நிலம் கிடைச்சுது. ஒரே கிணத்துலதான் ரெண்டு பேருக்கும் பாசனம். எனக்குச் சொந்தமான முக்கால் ஏக்கர்ல, 10 சென்ட்ல சிவப்பு அரளி, 15 சென்ட்ல வெள்ளை அரளி போட்டுருக்கேன். மீதி நிலத்துல தென்னை மரங்களும், மாட்டுக்கு சோளமும், கொஞ்சம் மல்பெரியும் போட்டுருக்கேன். இது, பூ சாகுபடிக்குப் பேர் போன பகுதி. நிறைய பேர் பூ மூலமாவே பெரிய அளவுக்கு வளர்ந்திருக்காங்க. ஊரைச்சுத்தி கல்வராயன், ஏற்காடு மலைகள் இருக்கறதால எப்போதும் குளிர் காத்து வீசிட்டே இருக்கும். அப்பப்போ மழையும் பெஞ்சுடும்.

வழக்கமா சம்பங்கி, கனகாம்பரம், காக்னா (காட்டுமல்லி அல்லது காக்கரட்டான்), மல்லி, சாமந்தினு போடுவாங்க. நானும் காக்னா, கனகாம்பரம் போட்டிருந்தேன். ஆனா, அதையெல்லாம் பறிக்கறதுக்கு அதிக ஆளுங்க தேவைப்படுவாங்க. அவங்களை வெச்சு பறிச்சு முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். பராமரிப்பும் அதிகம். தண்ணி இல்லேனா செடிகள் தாங்காது. நாலு வருஷத்துக்கு முன்ன நத்தம்மேடுங்குற ஊர்ல இருக்கற சொந்தக்காரங்க, 'அரளிப் பூவை பயிர் செய்யற வேலையும் குறைவு, விலையும் நல்லா இருக்கு’னு சொன்னாங்க. அவங்ககிட்டயே நாத்துகள வாங்கிட்டு வந்து நட்டேன். அதையே ஒட்டுப்போட்டு (பதியம்) செடிகள வளர்த்துட்டுருக்கேன். நூறு சதவிகித அரசு மானியத்துல சொட்டுநீர் போட்டிருக்கேன்.

செலவைக் குறைத்த அமுதக்கரைசல்!

ஒட்டுப்போட்ட செடி மூணு மாசத்துல வளர்ந்துடும். அதுக்குப்பிறகு, செடியிலிருந்து பூ பறிக்க ஆரம்பிச்சுடுவேன். நிறைய பூ பறிச்சதும் தாய் செடியை வெட்டிவிடுவேன். செடி நல்லா வளந்துடுச்சுனா, ஒரு மாசம் வரைக்கும் தண்ணி இல்லேனாகூட தாங்கிடும். எந்த வேலைக்கும் ஆளுங்கள வெக்காம, எங்க குடும்பமே வேலை செஞ்சுடுவோம்'' என்ற மாயவன், அடுத்து சொன்ன விஷயம் அனைவரும் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பாடம். அது-

''ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணிட்டுருந்தேன். பொம்மிடி பக்கத்தில இருக்கிற அருண், இயற்கை விவசாயம், இடுபொருள் தயாரிக்குறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுத்தார். இப்போ, நானே அமுதக்கரைசல தயார் செஞ்சு உபயோகப்படுத்திட்டிருக்கேன். மகசூல் நல்லா இருக்குது. 'இத்தனை நாளா தேவையில்லாம உரத்துக்கு செலவு பண்ணிட்டோமே’னு வருத்தமா இருக்கு.''

இதைத் தொடர்ந்து, அரளி சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார் மாயவன். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

திண்டுப்பாத்தி!

'சாகுபடி நிலத்தில் செழுமையாக தொழுவுரத்தைக் கொட்டி உழுது... திண்டுப்பாத்தி முறையில் பார்களை அமைத்து, வாய்க்கால் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிக்குச் செடி 3 அடி, வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி இருக்குமாறு, லேசாக மண்ணைப் பறித்து செடிகளை நடவு செய்ய வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, வாரம் ஒரு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசலை (10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 கிலோ மாட்டுச் சாணம் (பச்சையானது), ஒரு கிலோ நிலத்து மண்,10 பனம்பழம் அல்லது அரை கிலோ வெல்லம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கலக்கிவிட வேண்டும். 15 நாட்கள் தினமும் கலக்கி வந்தால், அமுதக்கரைசல் தயார்) பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். களைகள் மண்டினால், அவற்றை அகற்ற வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் களைகள் வளராது.

மூன்று மாதங்களில் அறுவடை!

நடவு செய்த மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். செடியின் அடிப்பகுதியில் இருக்கிற வளர்ந்த கிளைகளை ஒடித்து, நிலத்தில் பதியம் போட்டு புதிய செடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாய் செடியில் பறிப்பு முடியும்போது, பதியம் போட்ட செடிகள் வளர்ந்து விடும். தாய் செடியை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக வளர்ந்த செடியிலிருந்து பூக்களை பறிக்கலாம். மற்ற பூக்களைப் போலவே மொட்டாக இருக்கும்போதே பறித்துவிட வேண்டும். செடி நம்மை விட உயரமாக இருப்பதால், நின்று கொண்டே பறிக்கலாம். பனிக் காலம் (டிசம்பர் மாதத்தில்) தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் பூ பறிக்கலாம்.'

மாதம் 6 ஆயிரம் ரூபாய்!

சாகுபடிப் பாடம் முடித்த மாயவன், ''அரளி போட்டு மூணு வருஷம் ஆச்சு. சொந்தக்காரங்ககிட்ட இருந்து சும்மாவே நாத்து வாங்கிட்டு வந்துட்டேன். அதனால, அதுக்கு செலவு ஏதும் இல்ல. இதுக்கு பெருசா பராமரிப்புச் செலவும் கிடையாது. மத்த வேலைகள வீட்டுல உள்ள நாங்களே பார்த்துக்கிறோம். அதனால, செலவுனு தனியா ஏதும் கிடையாது. 25 சென்ட்ல தினமும் 3 கிலோவுல இருந்து 4 கிலோ வரைக்கும் பூ கிடைக்குது. ஒரு மாசத்துக்கு சராசரியா 100 கிலோ பூ கிடைச்சுடும். தினமும், சேலம் பூ மார்க்கெட்டுக்கு இங்கயிருந்து வண்டி போகுது. அதுல போட்டு அனுப்பிடுவேன். சீஸனைப் பொருத்து, ஒரு கிலோ அரளி... 40 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விலை போகும். வெள்ளை அரளியவிட, சிவப்பு அரளிக்கு கிலோவுக்கு 10 ரூபா அதிகமா கிடைக்கும். சராசரியா கிலோ 60 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, 100 கிலோ பூவுக்கு மாசம் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. 25 சென்ட் நிலத்துல இது நல்ல வருமானம் தானே!'' என்றபடியே, அடுத்த வேலைகளில் மூழ்கினார்.

சீஸன் சமயத்தில் கிலோ 150 ரூபாய்!

அரளிக்கு இருக்கும் வரவேற்பு குறித்து பேசிய சேலம், வ.உ.சி மலர் சந்தையில் வியாபாரம் செய்துவரும் நாகராஜ், ''சந்தைல மல்லிக்கு அடுத்த இடம் அரளிக்குதான். இங்க 200 கடைகளுக்கு மேல இருக்கு. எந்த கடையில வேணும்னாலும் விவசாயிகள் கொண்டு வந்து போடலாம். அன்னிக்கு விலையில 10% கமிஷன் எடுத்துட்டு, ரொக்கமா கொடுத்திடுவோம். இப்போ ஒரு நாளைக்கு 10 டன் அரளி வருது. குறிப்பா, பனைமரத்துப்பட்டியிலிருந்து அதிகமாக வருது. அதுக்கடுத்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பக்கமிருந்து வரும். இங்கருந்து சென்னை, பெங்களூருக்கு அதிகமா போகுது. வருஷம் முழுக்க வரத்து இருக்கும். சீஸன்ல கிலோ 150 ரூபாய் வரைக்கும்கூட விலை போகும். விடியற்காலை 3 மணிக்குத் தொடங்கி, சாயங்காலம் 5 மணி வரைக்கும் சந்தை இருக்கும்'' என்றார்.

கூட்டணி அமைத்தால், கூடுதல் லாபம்!

சென்னை, கோயம்பேடு மொத்த பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கயச் செயலாளர் மூக்கையா என்கிற ரொண்டியன், ''திண்டுக்கல், சேலம் பகுதி யிலிருந்து கோயம்பேட்டுக்கு அரளி வருது. ரெகுலரா வாங்க றதுக்கு ஆட்கள் இருக்காங்க. ஆனா, விவசாயிங்க யாரும் நேரடியா கொண்டு வந்து விக்க மாட்டேங்கறாங்க. ஏஜென்ட் மூலமாத்தான் வருது. கோயம்பேடுல என்ன விலை இருந்தாலும், விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலையைத்தான் ஏஜென்டுங்க கொடுப்பாங்க. விவசாயிகள் பலரும் ஒண்ணா சேர்ந்து, பூக்கள சேகரிச்சு, ஒருத்தர் மூலமா கொண்டு வந்து வித்தா... கூடுதல் லாபம் பார்க்க முடியும்'' என்று கூட்டணி ஆலோசனை சொன்னார்.

தொடர்புக்கு :
மாயவன், செல்போன்: 94425-23361
ரொண்டியன்: 93810-14397


Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠
வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு பாகம் - 2

வீட்டு மேலாண்மை :

1. (i) ஆழ்கூள முறை
(ii) உயர் மட்ட தரை முறை
2.கேள்வி பதில்கள்

ஆழ்கூள முறை :

* தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.

* இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.

* இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்.

* ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்.

உயர் மட்ட தரை முறை :

* தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்.

* ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

கேள்வி பதில்கள் :

1. செம்மறி/வெள்ளாடுகளை கொட்டில் முறையில் வளர்க்க இயலுமா?

வளர்க்க இயலும். ஆனால் அதற்கு பசுந்தீவன சாகுபடிக்கு போதிய அளவு இட வசதியும், குறைந்த விலை வேளாண் உப பொருட்களும் நல்ல விற்பனை வாய்ப்பும் இருத்தல் அவசியம்.

2. தாயில்லாத அல்லது தாயினால் ஒதுக்கப்பட்ட செம்மறியாட்டுக் குட்டிகளை வளர்ப்பது எப்படி?

இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்ற செம்மறியாடுகள் போதுமான பால் அளிக்க இயலாததால் குட்டிகளை புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட அல்லது நோயுற்ற குட்டிகளை கண்டறிந்து பராமரிப்பது மிகவும் அவசியம். ஓரே நேரத்தில் நிறைய குட்டிகள் பிறந்திருக்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட குட்டிகளை கண்டறிவது மிகவும் கடினம். இத்தகைய குட்டிகள் மந்தையிலிருந்து விலகிக் காணப்படும், வளர்ச்சிகுன்றி சோர்வுடன் இருக்கும். இத்தகைய குட்டிகளை வெள்ளாட்டுப்பால் அல்லது பசும்பாலை கையினால் ஊட்டி பராமரிக்கலாம்.

பிறந்தவுடன் குட்டிகளுக்கு சீம்பால் அளிக்க இயலாவிட்டால் சுடவைத்த பாலில் விளக்கெண்ணை அல்லது பாராஃபின் கலந்து கொடுக்கலாம். குறைந்த பால் உற்பத்தி அல்லது தாயினால் சரிவர கவனிக்கப்படாத குட்டிகளுக்கு கீழ்கண்டபடி கூடுதல் பாலினை அளிக்கலாம்.

மீன் எண்ணெய் கலக்கப்பட்ட சுடவைத்த பாலை உடல் எடையில் பத்தில் ஒரு பங்கை அளிக்கலாம்.

முதல் 15 நாட்கள் : ஒரு நாளைக்கு 6 முறை

15 முதல் 30 நாட்கள் : ஒரு நாளைக்கு 4 முறை

1 முதல் 3 மாதம் வரை : ஒரு நாளைக்கு 2 முறை

3. தீவிர முறை (கொட்டில் முறை) வெள்ளாடு வளர்ப்பிற்கு ஏற்ற வெள்ளாட்டினங்கள் யாவை?

தலைச்சேரி, ஜமுனாபாரி, கன்னி ஆடு, கொடி ஆடு, போயர் கலப்பினம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Thursday, 1 February 2018

பள்ளத்தில் மீன் வளர்ப்பு… மேட்டில் காய்கறிச் சாகுபடி!

கோப்பையில் ஆறிப்போன தேநீரில் ஆங்காங்கே ஆடை படர்ந்து கிடப்பதுபோல, வங்காள விரிகுடா கடலில் பசுமைத் திட்டுகளாகப் படர்ந்து கிடக்கின்றன அந்தமான் தீவுப்பகுதிகள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகான அந்தத் தீவுக்கூட்டங்களுக்குள், பல ஆபத்துகளும் மறைந்திருக்கின்றன. கடலுக்கு நடுவே பசுமைக் கூடாரத்தை அமைத்துள்ள இயற்கை அன்னை, அந்தக் கூடாரத்துக்குள் கோடிக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்து வருகிறாள். சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில்… அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொன்மையை, அவற்றின் அமைதியை அழிக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனைக்கும் இடையில், அத்தீவுகளில் இயற்கை விவசாயம் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகிறது.

அந்தமானில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்கை வள மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் வேல்முருகனுடன், தீவில் வசித்துவரும் இயற்கை விவசாயிகளைச் சந்திக்கப் பயணமானோம்.

“தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகளுக்குச் சிக்கல். அந்தமானில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் சிக்கல். அந்தமான் விவசாயிகளில் பெரும்பான்மையோர், இன்னும் முழுமையான இயற்கை விவசாயத்துக்கு மாறவில்லை. சுனாமியின் பாதிப்பிலிருந்து தங்கள் நிலங்களை மீட்டு, தற்போதுதான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறார்கள். இப்போது இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்திவருகிறோம். அதன் விளைவாக, ரசாயனங்களைக் குறைத்துக்கொண்டு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் விவசாயிகள். விரைவில் அந்தமானில் முழுமையான இயற்கை விவசாயம் சாத்தியமாகும் சூழல் உருவாகிவிடும்” என்று வேல்முருகன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சுகிர்தத்தா என்பவரின் தோட்டத்தை அடைந்துவிட்டோம்.

சுனாமியின் பாதிப்பு இன்னும் முழுமையாக அகலாத நிலையில்… கீரை, காய்கறி என விளைவித்துவருகிறார் சுகிர்தத்தா. நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசியவர்…

“எனக்கு, இங்கு ஐந்து பிகா (ஒன்றரை ஏக்கர்) நிலம் இருக்கிறது. என் அப்பாவின் சொத்தான பத்து பிகா நிலத்தை, நானும் என் சகோதரனும் இரண்டாகப் பிரித்துக்கொண்டோம். முன்பு அகலமாக இருந்த நிலம், பாகப்பிரிவினைக்குப் பிறகு, நீளமாக மாறிவிட்டது. இதனால், ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முன்வைத்த தொழில்நுட்பங்களை உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை. நிலமானது கடலோரத்தில் இருப்பதால், கடல் நீர் அடிக்கடி நிலத்துக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலத்தில் வெண்டைக்காய்ச் சாகுபடி செய்வேன். ஏனென்றால், அந்த நேரத்தில் வெண்டையைத் தவிர வேறு காய்கறிகளை உற்பத்திசெய்ய முடியாது.

அதேசமயம், அந்த சீசனில் சந்தைக்கு வரும் காய்களுக்கு, நல்ல விலையும் கிடைக்கும். மற்ற காலங்களில் பீன்ஸ், லோபியா (தட்டைப்பயறு), கத்திரி, தக்காளி ஆகியவற்றைச் சாகுபடி செய்வேன். இதோடு ‘நாலி பாஜி’ எனப்படும் ஒரு வகையான கீரையையும் (இது சர்க்கரைவள்ளிக் கிழங்குக் கொடிபோல இருக்கிறது) சாகுபடி செய்கிறேன். இந்தக் கீரை அதிகத் தண்ணீரிலும் நன்கு வளரும். ஒரு கட்டுக் கீரை பத்து ரூபாய் வரை விற்பனையாகிறது.

வீட்டின் முன்பாகச் சிறிய கொட்டகை அமைத்து, பிராய்லர் கோழிகளை வளர்க்கிறேன். இந்தக் கோழிகளின் எச்சத்தைக் காய்கறிகளுக்கு உரமாகப் பயன்படுத்துகிறேன். சுனாமிக்குப் பிறகு நான் விவசாயத்தைத் தொடங்கியபோது, ஆண்டு வருமானம் இருபதாயிரம் ரூபாயாகத்தான் இருந்தது. நிலத்தைச் சீர் செய்யும் பணிக்கே நேரமும் பணமும் செலவாயின. நிலத்தில் நீர் தேங்கி நின்றதால் காய்கறிகளைச் சாகுபடி செய்யவே முடியவில்லை.

அந்த நேரத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வந்த வேல்முருகன் சார் மற்றும் அவரது சகாக்கள் கொடுத்த ஆலோசனைக்குப் பிறகுதான் முழுமையாகச் சாகுபடிசெய்ய முடிந்தது. என் நிலத்தில் பிரச்னையாக இருந்தது தேங்கிநின்ற தண்ணீர்தான். ஆனால், அதை வைத்தே ஒரு வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நிலத்தில் அகலமான பள்ளம் எடுத்து, அந்த மண்ணை அருகில் கொட்டினோம். இப்போது, என்னுடைய நிலம் மேடு, பள்ளம் எனக் காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பள்ளத்தில் இருக்கும். மேட்டில் தண்ணீர் நிற்காது. எனவே, மேட்டுப்பகுதியில் காய்கறி விவசாயத்தை, எந்த இடையூறும் இல்லாமல் செய்ய முடிகிறது. பள்ளத்தில் மீன்கள் வளர்க்க முடிகிறது.

கட்லா, ரோகு, மிர்கால் போன்ற மீன்களை வளர்க்கிறேன். பள்ளத்தின் கரைகளில் தென்னை, பாக்கு மரங்களைச் சாகுபடி செய்கிறேன். நான் இன்னமும் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறவில்லை. வேல்முருகன் சார், இயற்கைக்கு மாறும்படிச் சொல்லி, ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது அடியுரமாகக் கோழி எருவைப் பயன்படுத்துகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான முயற்சியில் இருக்கிறேன்” என்ற சுகிர்தத்தா, “வேலைக்கு ஆள்களை வைத்துக் கொள்வதில்லை. நானும் என் குடும்பத்தினருமே விவசாய வேலைகளைச் செய்துகொள்கிறோம். தற்போது இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்திலிருந்து, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கிறது. எங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைத் தோட்டத்திலிருந்தே எடுத்துக்கொள்வதால், குடும்பத்துக்கு இந்தத்தொகை போதுமானதாக இருக்கிறது. வாரந்தோறும் விவசாயத்திலிருந்து வருமானம் கிடைப்பதால், கையில் எப்போதும் பணம் இருக்கிறது” என்றார்.
சுகிர்தத்தாவின் வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் நிற்கின்றன. அவற்றில் காய்த்திருக்கும் தேங்காய்கள், பொள்ளாச்சிக் காய்களைவிட அளவில் பெரிதாக இருக்கின்றன. தென்னைக்கு இடையில் ஊடோடிக் கிடக்கின்றன பாக்கு மரங்கள். அந்தமான் விவசாயத்தின் அடிப்படையாக இருப்பவை தென்னையும் பாக்கும்தான். ‘ஒரு ஏக்கர் நிலத்தில் தென்னையும் பாக்கும் இருந்தால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருமானம் கிடைத்துவிடும்’ என்கிறார் வேல்முருகன்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠