Saturday, 7 April 2018

மழைக்காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு :

1. கால்நடை வளர்ப்பு
2. யூரியா சத்தூட்ட வைக்கோல்
3. நன்மைகள்
4. அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்

கால்நடை வளர்ப்பு :

கால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது.

பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில் வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் முளைத்த புற்களை உண்பதால் வயிற்றில் உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும்.

எனவே மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்ப்பது நல்லது. முற்பகலில் மேய்த்து பின் பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலை தவிர்ப்பதும் நல்லது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் கால்நடைகளை தீவனநிலங்களில் மேய்ச்சலுக்கு விடவேண்டும். இதற்கு முன்னதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

பண்ணை முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வளர்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை யூரியா சத்தூட்டப்பட்டதாக மாற்றி வைத்து குளிர்காலம் முடியும் வரையும், கோடைக்காலத்திலும் கூட தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச்செலவு குறையும். பசுக்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

யூரியா சத்தூட்ட வைக்கோல் :

* அதிகமாக கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோளத் தீவனத்தட்டையை யூரியா சத்தூட்ட வைக்கோலாக மாற்றினால் அதன் சத்துக்கள் அதிகரித்து தீவன செலவு குறையும்.
* இதற்கு 100 கிலோ வைக்கோலை பாலித்தீன் சாக்குகளில் பரப்பி பின் 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். பின் காற்று புகாமல் அடைத்து 21 நாட்கள் கழித்து எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.

நன்மைகள் :

* யூரியா சத்தூட்ட வைக்கோல் சாதாரண வைக்கோலை விட 3 மடங்கு சத்து அதிகம் உள்ளது.

* மழைக்காலங்களில் மழையில் நனைந்து வீணாகும் வைக்கோலை சேமிக்க இது ஒரு நல்ல வழி.

* மழையில் நனைந்த வைக்கோல் பூஞ்சைகாளான் பரவுவதை தடுக்கலாம்.

* குறைவான இடத்தில் மிகுந்த செலவில்லாமல் அதிக புரதம் நிறைந்த வைக்கோலை இந்த முறையில் தயாரிக்க முடியும்.

* இத்துடன் பண்ணை முறை கால்நடைகளுக்கு தரப்படும் அடர்தீவனங்கள் நன்கு உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு இந்த தீவனங்களை தகுந்த முறையில் சேமித்து வரவேண்டும்.

* அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்
பால் தரும் பசுக்களுக்கு அடர்தீவனங்களான மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை ஈரம்படாமல் சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் நிலவும் காலங்களில் அளிக்க வேண்டும்.

* தீவனங்களின் மீது ஈரம் படாமல் பாதுகாக்க தீவன மூடைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும்.

* அடர்தீவன தயாரிப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மழைக்காலங்களில் செய்வது நல்லது.

* மழைக்காலத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கும், எள்ளுபுண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து அரைத்து சேமித்து வைக்க வேண்டும்.

ஆதாரம் : கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday, 4 April 2018

மழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் :

1. நாட்டு கோழி வளர்ப்பு
2. புருடிங் முறை பாதுகாப்பு
3. பல்புக்கு பதில் கரி அடுப்பு
4. இதர பராமரிப்பு உத்திகள்
5. நோய்களும் தடுக்கும் முறைகளும்

மழைக்காலம் தொடங்கும் போது நாட்டு கோழி குஞ்சுகளில் சில நோய்களையும், வெப்பகுறைபாட்டால் உருவாகும் பிரச்சினைகளையும் தடுக்க போதிய பராமரிப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

நாட்டு கோழி வளர்ப்பு :

கொல்லைப்புற வளர்ப்பில் வீட்டிற்கு வருமானம் தரும் தொழில்களில் முதன்மையானது கோழி வளர்ப்பாகும். நாட்டு கோழி குஞ்சுகளை நல்ல முறையில் பராமரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக, நாட்டு கோழி குஞ்சுகளை மழைக்காலங்களில் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். நாட்டு கோழி வளர்ப்பில் தொடர்ந்து அதிக வருமானம் பெற கீழ்க்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வது சிறப்பானது.

புருடிங் முறை பாதுகாப்பு :

பிறந்த முதல் நாள் குஞ்சுகளுக்கு இளஞ்சூடான வெப்பம் அளிப்பது அவசியம். முக்கியமாக, மழை மற்றும் குளிர்காலங்களில் தொடர்ச்சியாக அவற்றுக்கு வெப்பம் அளித்தால் மட்டுமே குஞ்சுகளை காப்பாற்ற இயலும். இவ்வாறு வெப்பம் அளிப்பதற்கு 25 அடி நீளம், ஒன்றரை அடி உயரம் உள்ள ஜி.ஐ தகட்டை வட்ட வடிவில் அமைத்து அதன் மேல் கூட்டல் குறியீடு வடிவில் மரக்கட்டைகளை குறுக்காக வைத்து பின்னர் 100 வாட்ஸ் பல்புகளை கட்டி தொங்க விடலாம். 1 குஞ்சுக்கு 1 வாட்ஸ் என்ற ரீதியில் வெப்பம் அளிக்கலாம். குஞ்சுகளை முதல் 2 வார வயது வரை இவ்வாறு பராமரிக்கலாம். மரத்தூள் அல்லது தென்னை மஞ்சிகளை தரையில் பரப்பி பின் காகிதங்களை அதன் மேல் போட வேண்டும். பின் 1 அடி உயரத்தில் பல்புகளை தொங்க விட வேண்டும்.

பல்புக்கு பதில் கரி அடுப்பு :

சில சமயத்தில் மின்சாரம் தடைபட்டால் கோழி குஞ்சுகளுக்கு வெப்பம் அளிப்பது தடைபடும். இதனால், குஞ்சுகள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, பண்ணை உள்ள பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் என அஞ்சினால் அதற்கு பதிலாக கரி அடுப்புகளை செங்கல் கற்கள் மேல் வைத்து 100 குஞ்சுகளுக்கு 2 முதல் 3 அடுப்புகள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கலாம். இவை தவிர வணிகரீதியாக வளர்க்கப்படும் குஞ்சுகளுக்கு கோப் புருடர் எனப்படும் எல்.ஜி எரிவாயு சூடேற்றி அமைப்பை பயன்படுத்தி இளஞ்சூடு அளிக்கலாம்.

இதர பராமரிப்பு உத்திகள் :

குஞ்சுகளுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை 40 குஞ்சுகளுக்கு ஒரு தண்ணீர் தொட்டி என்ற ரீதியில் அரை இஞ்ச் உயரத்தில் அமைக்க வேண்டும்.

முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை சிறிது குளுக்கோஸ் கலந்து அளிக்கலாம். முதல் 3 நாட்களுக்கு ஆண்டிபயாடிக் பவுடர் மருந்தினை 1 லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும். புருடிங் அமைப்பில் தரைப்பகுதியில் விரிக்கப்பட்ட காகிதங்களை காலை மற்றும் மாலை வேளையில் மாற்ற வேண்டும். 5 நாட்களுக்கு பின் ஜன்னல்களின் திரைச்சீலை மற்றும் சாக்குகளை அகற்றி காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும்படி அமைக்க வேண்டும். இரு வாரங்களுக்கு பின் வட்டவடிவ புருடிங் அமைப்பை அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு மேலும் இடவசதியை அதிகரிக்க வேண்டும்.

நோய்களும் தடுக்கும் முறைகளும் :

நாட்டு கோழியில் இளம்குஞ்சுகளை தண்ணீர் மூலம் பரவும் இகோலி என்னும் கிருமி அதிகமாக தாக்கி கோலிபேசில்லஸ் என்னும் நோயை குஞ்சுகளுக்கு பரப்புகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் குஞ்சுகள் இறந்து விடும். இதே போல் மற்றொரு முக்கியமான நோயான வெள்ளை கழிச்சல் எனப்படும் ராணிகெட் நோய்க்கு எதிராக 6 முதல் 7 வது நாள் வயதிலான குஞ்சுகளுக்கு லசோட்டா சொட்டு மருந்து அளிக்கப்பட வேண்டும். இந்த வெள்ளை கழிச்சல் தாக்கினால் அனைத்து குஞ்சுகளும் இறந்து விடும். எனவே, நாட்டு கோழிகளை நோய்கள் தாக்காமல் இருக்க அவற்றுக்கு சரியான காலகட்டத்தில் நோய் தடுப்பூசிகளை அளிக்க வேண்டும். அதாவது, கோழி குஞ்சுககள் பிறந்த 6, 7 வது நாளில் ராணிகெட் என்ற வெள்ளை கழிச்சல் நோய்க்கு தடுப்பு மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக அளிக்கலாம். குஞ்சுகள் பிறந்த 10, 12 வது நாள் வயதில் ஐபிடி அல்லது கம்போரா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக தரலாம். குஞ்சுகள் பிறந்த 28 வது நாளில் ராணிகெட் நோய்க்கு எதிரான மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக தர வேண்டும். மேலும், 40 வது நாளில் ராணிகெட் நோய்க்கு எதிரான குருணை மருந்தை தீவனங்களில் கலந்து அளிக்கலாம். 50 வது மற்றும் 60 வது நாளில் அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனைப்படி இறக்கைக்கு அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும்.

எதிர்வரும் மழைக்காலத்தில் நாட்டு கோழி குஞ்சுகளை இந்த முறைகளில் பராமரிப்பதன் மூலம் கொல்லைப்புற கோழி வளர்ப்பில் கோழி குஞ்சுகளின் இறப்பை தடுத்து பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
விபரீத வேலை... பிரத்யேக உடை... விவசாயிக்குத் தோள் கொடுக்கும் கழுதை!

தன்னுடைய உதவிக்கு எவையெல்லாம் பயனுள்ளதாக இருக்குமோ அவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் மனிதன் படுகில்லாடி. குதிரையில் ஆரம்பித்து யானை, மாடு, ஒட்டகம், கழுதை எனப் பல விலங்குகளை தன்னுடைய பயன்பாட்டுக்கு லாகவமாக பயன்படுத்திக்கொண்டான். இன்னும் அந்த விலங்குகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என யோசித்தவனின் 21-ம் நூற்றாண்டின் வினோத கண்டுபிடிப்பு “BEEKEEPING DONKEY”

மானுவல் ஜூராசி வியரா என்பவர் பிரேசில் நாட்டில் உள்ள இடதிரா என்கிற ஊரில் வசித்துவருகிறார். அங்கிருக்கிற மக்களின் முக்கியத் தொழிலாக தேனீ வளர்ப்பு இருந்துவருகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் வருகிற தேனை தள்ளுவண்டி போன்ற ஒரு வண்டியில் தேனை சேகரித்து விற்பனை செய்துவருகிறார். இருபது பேர் அவருடைய தேனீ பண்ணையில் பணிபுரிந்துவருகின்றனர்.

ஜூராசி வியரா தன்னுடைய வீட்டில் “போனிகோ” எனப் பெயரிட்ட ஒரு கழுதையை வளர்த்துவருகிறார். அவருடைய பண்ணையில் பணிபுரிகிற ஒரு சிலர் “இந்தக் கழுதையை தேன் சார்ந்த ஏதாவது ஒரு வேளையில் பயன்படுத்தலாமே என யோசனை சொல்கிறார்கள். இரண்டொரு நாள் கழித்து கழுதைக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக சொல்கிறார். அதாவது தேனீ வளர்க்கும் இடத்தில் இருந்து தேனை சேகரிக்கக் கழுதையை பயன்படுத்தப்போவதாகச் சொல்கிறார். ஆனால் அவரோடு பணி புரிகிறவர்கள், "கழுதையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தேனீ இருக்கிற இடத்துக்கு கழுதை வரநேர்ந்தால் தேனீக்கள் கொட்டுமே!” எனச் சந்தேகப்படுகிறார்கள்.

பத்து நாள்கள் இடைவெளியில் தேனீ இருக்கிற பண்ணைப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வினோதமான விலங்கு வருவதைத் தோட்டத்தில் இருக்கிறவர்கள் பார்க்கிறார்கள். உடன் ஜூராசி வியரா வருவதையும் பார்க்கிறார்கள். சற்று கூர்ந்து கவனித்ததில் ஜூராசி வியராவுடன் வருவது அவருடைய கழுதை போனிகோ என்பதை உணர்கிறார்கள். “கழுதையைப் பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாதா என்கிற ஒரு கேள்வி எழலாம்” அவர்கள் குழம்பிப் போவதற்கும் ஒரு காரணம் இருந்தது.

ஏனெனில், தேனீக்கள் இருக்கிற பகுதிக்கு எந்த விலங்குகளும் செல்வதற்குப் பயப்படும். காரணம் கூட்டமாக சேர்ந்து தேனீக்கள் கொட்ட ஆரம்பித்துவிடும். தேனீக்களின் சத்தமே பல விலங்குகளை அச்சமடையச் செய்யும். ஆப்ரிக்கா நாடுகளில் யானைகளிடமிருந்து பயிர்களை காக்கத் தேனீ வேலி என்கிற முறை இப்போதும் வழக்கத்தில் இருந்துவருகிறது. அப்படியான ஒரு பகுதிக்கு போனிகோவை ஜூராசி வியரா அழைத்து வந்திருந்தார். அதுவும் சேகரிக்கிற மொத்த தேனையும் வீட்டுக்குச் சுமந்து செல்ல கழுதையைப் பயன்படுத்துவதற்காக அழைத்துவந்திருந்திருந்தார்.

கழுதையின் உடல் முழுமைக்கும் பிரத்யேக உடை தயாரித்து அதைக் கழுதைக்கு அணிவித்திருந்தார். தலையிலிருந்து வால் பகுதி வரைக்கும் கழுதையின் உடல் மறைக்கப்பட்டிருந்தது. கழுதையின் முகப்பகுதிக்கு வலை போன்ற ஒரு துணியைப் பயன்படுத்தியிருந்தார். கழுதையின் எந்த உடல் பாகத்தையும் தேனீக்கள் தீண்டாத வண்ணம் அந்த உடை தயாரிக்கப்பட்டிருந்தது.

உடையைத் தயாரிக்க 15 நாள்கள் ஆனது எனக் கூறும் ஜூராசி வியரா, 2014-ம் ஆண்டிலிருந்து தேன் சேகரிக்கக் கழுதையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார். முதல்முறை அந்த உடையை போனிகோவுக்கு அணிவிக்கும்பொழுது அந்த உடை அதற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது; அந்த உடை அணிவித்ததற்காக எந்தத் தடையும் தெரிவிக்கவில்லை என்கிறார். மூன்று வருடங்களாகத் தேனீ சேகரிப்பில் இருக்கிற போனிகோ உலகின் முதல் தேன் சேகரிக்கும் விலங்கினம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

தேனீ பண்ணையில், போனிகோ சீருடை அணிந்து ஜூராசி வியராவுடன் ஒய்யாராமாய் நடந்துவருவதைப் பார்க்கும்போது, நிலவில் விண்வெளி வீரர்கள் நடப்பதைப் போலவே இருக்கிறது; அந்த அழகிலும், மிடுக்கிலும்!

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
தமிழ்நிலத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள்... இந்த நூற்றாண்டின் பரிதாப நிலை!


விவரம் தெரிந்த வயதில் பொங்கலுக்கு முந்தைய நாள் முழுக்குடும்பமாக வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடித்தபோதுதான் மேற்கூரையில் பதியப்பட்டிருந்த பனங்கட்டைகள் என் கண்ணில் பட்டன. அதற்கு முன்பு நுங்கு, பனங்கிழங்கு எனப் பனை சார்ந்த பலவற்றை தின்றிருந்தாலும் பனங்கட்டைகள்தான் பனையின் பிரம்மாண்டத்தையும் அதன்மீதான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த வீடு 60களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட காரை வீடு. இன்றும் அதே கம்பீரம் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றது அந்த பனங்கட்டைகளும் வீடும். உலகத்தின் தொல்குடி, மூதாதையர் இனம் என தமிழ்குடியைச் சொல்லும்போதே அந்தப் பெருமைகளனைத்தும் பனைமரத்துக்கும் உரித்ததாகிறது. தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புள்ள தமிழ் இலக்கியம் வரை அனைத்தும் பனை தந்த ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்புடைய மரமாகப் பனைமரம் இருந்துவருகிறது. அதனால்தான் பனை மரம் நம்முடைய மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மாநில மரத்தின் மீதான நமது பார்வைகளும் செயல்பாடுகளும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. தமிழகத்தில் பனைமரங்களின் இருப்பு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. 1970-களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் 6 கோடி பனைமரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பு 5 கோடியாகக் குறைந்துள்ளதாக கூறுகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவிற்கு உறுதியானது என்று தெரியவில்லை என கூறுகிறார் பனைமர செயற்பாட்டாளர் ரா.பஞ்சவர்ணம். பனைமரம் எனும் நூலை எழுதியுள்ள இவர், "ஹெக்டேர் அளவில் கணக்கெடுப்பு நிகழ்த்தப்படுவதால் உண்மையில் எவ்வளவு பனைமரங்கள் இருக்கிறது என துல்லியமாகத் தெரிவதில்லை. உண்மையில் வெளியில் கூறும் எண்ணிக்கையைவிடப் பனைமரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்" என்கிறார் ரா.பஞ்சவர்ணம். 

குழந்தைகள் நடந்து பழகும் வயதில் நடைக்கருவியாகவும், சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப்பொருளாகவும் இருந்தது நுங்குவண்டி. இப்போது நுங்கினையே அவ்வளவு எளிதில் பார்க்கமுடிவதில்லை. நுங்கு, பதநீர் என வெயிற்காலத்திற்கு ஏற்றக் குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் பனை நமக்குத் தருகிறது. " இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற சொலவடை பனைமரத்துக்கு மட்டுமே பொருந்தும். பனம்பழமாக விழுந்து விதையாக முளைத்து மரமாக வளர்ந்து கீழே விழும்வரை அதன் ஒவ்வொரு பகுதியும் பலவித பயன்களை மனிதர்களுக்குத் தருகிறது. அதுமட்டுமில்லாமல் சூழலியல் சார்ந்த தேவைகளையும் பனைமரம் நிறைவு செய்கிறது. 

பனைமரம் உறுதியான சல்லிவேர்த் தொகுப்பை கொண்டிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கால்வாய்களை ஒட்டிய பகுதிகளிலும் நம் முன்னோர் வளர்த்தனர். அதுமட்டுமல்லாமல் வயல்வரப்புகள், தோட்டங்கள் போன்றவற்றில் வேலியாகவும் பனைமரங்களைப் பார்க்கலாம். குறைந்தது 60 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய பனைமரம் பல்வேறு உயினங்களுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாக திகழ்கிறது. தூக்கணாங்குருவிகள், கள்குருவிகள், தேன்சிட்டுகள், தேரைகள், இன்னும் பல ஊர்வன, பறப்பன என 100-க்கும் மேற்ப்பட்ட உயிரிகள் பனைமரத்தைச் சார்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பனை வகைகள் காணப்படுகின்றன என தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் காணப்படுகின்றன. திருவள்ளூர், சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி, 10 கிலோ விறகு, 20 கிலோ பனைநார், 6 பனைஓலை பாய்கள், 2 கூடைகள் ஆகியவற்றை நாம் பெறலாம். இன்னும் மதிப்புக்கூட்டினால் அதிக பொருட்களைப் பெறலாம். நுங்கு, பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, கள்ளு, பனை நார், பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கின்றன. இவை அனைத்தும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தன. அதன்மூலம் நமது ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது இவற்றில் ஏதாவது ஒன்று கிடைப்பது கூட அரிதாகத்தான் இருக்கிறது. 

பனை மரங்கள் அழிந்து வருவதால் இயற்கைக்கு மட்டுமல்லாமல் அதைச் சார்ந்தே தொழில் செய்யக்கூடிய பலரும் பாதிக்கப்படுகின்றனர். பனைமரத்தில் ஏறி தொழில் செய்யும் பனையேறிகள் பனைமரங்களின் அழிவின் காரணமாக வேறு தொழில் செய்யத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் கூட பனையேறிகளுக்குக் கிடைப்பதில்லை. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் 2014-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி பனையேறிகளின் எண்ணிக்கை முன்பைவிட பாதியளவு குறைந்துள்ளது. பனையேறிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. பனையேறிகளைத் தவிர நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பனைத்தொழிலினைச் சார்ந்துள்ளனர். 

இந்தியா முழுக்க 8 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 5 கோடி பனைமரங்கள் தமிழகத்தில்தான் காணப்படுகிறது. பனை சார்ந்த ஏற்றுமதியிலும் தமிழகமே முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பனைமரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால் சூழலியல், பொருளாதார பலன்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. பனைமரம் குறித்தன விழிப்பு உணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் பனைமரத்தினைப் பற்றி ஆவணப்படம் எடுத்து வரும் காட்சன் சாமூவேல். மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை பனைமரங்களின் பாதையில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இவர். 

"பனைமரம் பற்றிய கீழான பார்வையையும் பனையேறித் தொழிலையும் மதிக்காததே பனைமரத்தின் மீதான அலட்சியத்திற்குக் காரணம். ஒரு பனைமரம் கூடப் பனையேறிகளுக்கு சொந்தமாக இருப்பதில்லை. மேலும் இது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழிலாகப் பிம்பத்தை ஏற்படுத்தியதும் முக்கிய காரணம்" என்கிறார் காட்சன். 

தமிழர்களின் வாழ்வியலோடும் பனை நெருங்கிய ஒன்று. வீட்டில் பொருட்களை வைப்பதற்குப் பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், முறங்கள், பெட்டிகள் போன்றவையே பயன்படுத்தப்பட்டன. பனை ஓலையில் வைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்ற அறிவியல் உண்மையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது." தமிழ்நிலத்தின் எல்லா மதத்தினரோடும் பிணைந்த ஒன்றாகப் பனைமரம் இருக்கிறது" என்றும் காட்சன் குறிப்பிடுகிறார். 

"பனைமரம் குறித்தான தாவரவியல் ஆய்வுகளும் பெருமளவில் செய்யப்படவில்லை. உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகச்சிலரே இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர். ஆதலால் இதுகுறித்து தாவரவியல்ரீதியாக படிப்பதே சவாலாக இருக்கிறது. ஒவ்வொரு தாவரத்தைப் பற்றியும் பதிவு செய்வது பின்னாளில் நமது சந்ததிகளுக்கு முக்கியமானது" என்கிறார் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறை தலைவரும் பேராசிரியருமான ரவிச்சந்திரன். பனைமரம் குறித்து இனப்பெருக்க, தாவர பரவல், உணவுசத்துகள் என ஐந்து தலைப்புகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார். 

பனைமர பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரசு நிறுவனமான தமிழ்நாடு பனை உற்பத்தி மேம்பாட்டு மையம் எவ்வித செயல்திட்டங்களும் இன்றி முடங்கிக்கிடக்கிறது. அங்குள்ள ஒரு அதிகாரியிடம் பேசுகையில், "அரசிடமிருந்து எவ்வித நலத்திட்டங்களோ, நிதி உதவியோ வருவதில்லை. இருக்கிற பனை தொழிலாளர்களை வைத்து அதற்கான விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்" என அலட்சிய பதிலே கிடைத்தது. கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நுங்கை வைத்தே ஐஸ் கீரிம் செய்கின்றனர். மேலும் பல பனை சார்ந்த பொருட்களையும் பெருமளவில் சந்தைப்படுத்துகின்றனர். 

பல்வேறு இயற்கை சீற்றங்களையும் வறட்சிகளையும் தாங்கி வளரக்கூடிய பனைமரங்கள் எவ்வித பராமரிப்பையும் கோருவதில்லை. அரசின் கவனமின்மையும் மக்களிடையே போதிய விழிப்புணர்வின்மையுமே பனைமரங்களின் அழிவிற்குக் காரணமாக உள்ளது. தமிழகத்தின் குளங்களும் ஆறுகளும் தொடர்ந்து சூறையாடப்படுவதன் விளைவாகவும் பனைமரங்கள் அழிந்து வருகின்றன. பனை அதிகளவில் இருக்கும் தென்மாவட்டங்களிலேயே செங்கற்சூளைகளுக்கு மிகவும் சொற்ப விலைக்கு வெட்டப்படுகின்றன. கடந்த ஆண்டில் இராமநாதபுரத்தில் மட்டும் 50 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. "இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளுக்கு இலாபம் தரும் மதுவினை விற்கத்தான் இந்த ஏற்பாடு. கள் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை மாறாக ஆரோக்கியத்தோடே வாழ்ந்திருக்கிறார்கள்" என்று கள் அரசியலையும் சொல்கிறார் ரா.பஞ்சவர்ணம். 

சூழலுக்கும் மனிதனுக்கும் தேவையான பனைமரத்தை அழிப்பதை இனிமேலும் வேடிக்கை பார்க்காமல் அரசு தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தனிமனிதனாய் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம். பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு தடை செய்ததைப் போல பனை ஓலையால் செய்யப்படும் கூடைகள் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிப்பதன் மூலம் பனைமரத்தின் அழிவைத் தடுக்கலாம். மேலும் மீதமிருக்கிற பனைமரங்களையாவது வெட்டாமல் அதன் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பனைமரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். தமிழனின் ஆதிமரம், மாநில மரம் என பல்வேறு பெருமைகளையும் நமது கலாசாரத்தோடும் இயற்கையோடும் இயைந்து வாழும் பனை மரத்தின் தேவை, என்றென்றைக்குமானது. 

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm


``ஞாயித்துக்கிழமை ஆனா சினிமாக்காரங்க கூடி மரம் நடுவோம்..!” - மிமிக்ரி செந்திலின் பசுமை முயற்சி


இந்தச் சிங்காரச் சென்னை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான படிப்பினையைக் கொடுக்கும். அந்தப் படிப்பினை அவர்களை ஏதாவதொரு வகையில் செயல்பட வைக்கும். அப்படி சினிமா எடுக்கும் லட்சியத்தோடு வந்த ஒருவரைச் சுற்றுச்சூழலில் அக்கறை கொள்பவராக மாற்றியிருக்கிறது. சினிமா உதவி இயக்குநர், நடிகர், ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் என்று பல முகங்களைக் கொண்டவர் `மிமிக்ரி' செந்தில். கடந்த ஒரு வருடமாக சென்னையின் வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம்விளக்கு, கே.கே. நகர் பகுதிகளில் மரம் நட்டு வளர்த்து வருகிறார். சென்னையைப் பசுமையாக்கும் முயற்சியில் பங்களித்து வரும் செந்திலிடம் பேசினோம். 

``எனக்குச் சொந்த ஊரு காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர். எங்களுடையது விவசாயக் குடும்பம். அண்ணன், தம்பிகள் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சின்ன வயசிலேயே சினிமா ஆசை. அதனால, பிளஸ் டூ முடிச்சதுக்கப்புறம் சென்னைக்கு இடம் பெயர்ந்துட்டேன். லயோலா கல்லூரியில் படிப்பு. என்னோட காலேஜ்மெட் இயக்குநர் வெற்றிமாறன். எத்தன், குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள்ல உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கேன். பொல்லாதவன், கஜினி, ஆறு என சில படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆயிரக்கணக்கான மேடைகள்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்டா தோன்றியிருக்கேன். சின்ன வயதிலிருந்தே விவசாயம்னா ரொம்ப ஆசை. சிட்டில எங்க போய் விவசாயம் செய்ய? 

சென்னையில எல்லோருக்கும் ஏதாவது ஒண்ணு பிடிச்சுப் போகும். எனக்கு அப்படி பிடிச்சு போனது மரங்கள். சென்னைக்கு அழகே இன்னும் மிஞ்சியிருக்கிற இந்த மரங்கள்தான். அப்படிப்பட்ட மரங்களை வர்தா புயல் வந்து சாய்ச்சு போட்டுருச்சு. மழைக்கு வீட்டுக்குள் ஒடுங்கியிருந்த நான், வெளியே வந்து பார்த்தபோது புயல் காத்துக்கு அத்தனை மரங்களும் சாய்ஞ்சு கிடந்துச்சு. நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சென்னையில நடந்து போறவங்களுக்கு இளைப்பாறலே இந்த மரங்கள்தான். அப்படிப்பட்ட இந்த மரங்கள் உருவாவதற்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். 

அப்போதுதான் திரைத்துறை நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டு, பலரை ஒன்றுதிரட்டி, `இனி ஒரு விதி செய்வோம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதுமூலமா மரக்கன்றுகள் நட ஆரம்பிச்சோம். இதைத் தொடங்கினபோது கையில் பணமும் இல்லை. நண்பர்கள், பொதுமக்கள்னு அவங்ககிட்ட இருந்து மரக்கன்றுகள், மண்வெட்டி, கடப்பாரைனு பொருள்களை வாங்கி, மரக்கன்றுகளை நட்டோம். இதை இப்படியே தொடரணும். விட்டுட கூடாதுனு வாரத்துல ஒருநாள் ஞாயித்துக்கிழமை எங்கள் திரைத்துறை நண்பர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகள நட்டுட்டு வர்றோம். மரங்கள் பத்தி எல்லோருக்கும் விழிப்புஉணர்வு வரணுங்கறதுக்காக, நடிகர், நடிகைகளை மரம் நடுற அன்னிக்கு வரவெச்சு, அவங்க மூலமா நட்டு வைப்போம். நட்ட மரங்களைப் பராமரிக்க அந்தந்த பகுதிக்கு ஒவ்வொரு ஆள நியமிச்சிருக்கோம். அவருதான் அந்த மரம் வளர்றதுக்குப் பொறுப்பு. அந்தந்த மரங்களுக்கு ஒவ்வொரு பேரு வெச்சிருக்கோம். பேரைச் சொல்லி, அவங்க எப்படி இருக்கிறாங்கனு விசாரிச்சிப்போம்.

நான் கே.கே நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புல ஒரு சிறிய வீட்டுலதான் வாடகைக்கு இருக்கேன். வாய்ப்பு தேடிக்கிட்டும், என் வயித்துப் பாட்டுக்குச் சம்பாதிக்கிறதோடு, இந்த மரங்கள வளர்க்கிறதுக்கும் ஓடிட்டு இருக்கேன். இந்த மரங்கள் வளர்க்கிறதுக்கு என்னோட முதலீடு ஒன்னும் இல்ல. சிலர் மரக்கன்றுகள் வாங்கிக் கொடுப்பாங்க. சிலர் கூண்டு, மண்வெட்டினு உதவி செய்றாங்க. வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு உணவு போன்ற விஷயங்களுக்கு உதவி செய்றாரு. ஆர்வமுள்ள நண்பர்கள்தான் இதுல பங்கெடுத்துக்கிறாங்க. அவங்களுக்கு எந்தக் கூலியும் கிடையாது. ஞாயித்துக்கிழமை ஆனா, டான்னு எல்லோரும் கூடிடுவோம். நான் யார்க்கிட்டேயும் பணம் வாங்கிறதில்ல. பொருள்களாத்தான் வாங்கிக்கிறேன்.

கோயம்பேடு, வடபழனி, ஆயிரம் விளக்குனு இதுவரைக்கும் ஆயிரம் கன்னுகள் நட்டிருப்போம். இந்த எண்ணிக்கையைவிட, இந்த மாநகரத்துக்கு ஏதோ நம்மலாள முடிஞ்சத செய்றோம் ஒரு திருப்திதான் தொடர்ந்து செய்ய வைக்குது. என்ன மாதிரி 10 பேரு மரம் வளர்ப்புல இறங்குனா, அதுவே எனக்குச் சந்தோஷம்தான். இருங்க... ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனில ஸ்கிரிப்ட் கேட்டிருக்காங்க. கொடுத்திட்டு வந்திடுறேன்னு " சொல்லிட்டு நம்பிக்கையோடு கிளம்பிப் போனார் செந்தில்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday, 3 April 2018

ஜீவாமிர்தம் :

1. தேவையான பொருட்கள்
2. தயாரிப்பு முறை
3. பயன்படுத்தும் முறை

தேவையான பொருட்கள் :

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை :

மேற் கூறியவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும். தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.

இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

பயன்படுத்தும் முறை :

ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர், முளைகட்டிய தானியக் கலவை, தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும். இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான அளவுகள் :

4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் ) :

* 15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

* 30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

* 60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் ) :

* 30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

* 60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

* 90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

ஓர் ஆண்டு பயிர்களுக்கு :

* 30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

* 60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

* 90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

* 270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .

பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன?

* ஜிவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

* ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .

* ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.

* ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா?

ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.

ஆதாரம் : அருள் குமார்

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm