Monday, 15 October 2018

ரசாயனம் வேண்டாமே... மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு!

தினமும் வருமானம் தரும் பயிர்களில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு. மலர் சாகுபடியில் அதிக விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இருப்பது மல்லிகை. பண்டிகை நேரங்களில் கிலோ 1000 ரூபாயைத் தாண்டி விற்கும் மல்லிகை, குறைந்தபட்சமாகக் கிலோவுக்கு 50 ரூபாய்க்குக் குறையாமல் விற்பனையாகிறது. இதனால், மல்லிகையை விரும்பி நடவு செய்கிறார்கள். மல்லிகை நல்ல வருமானம் கொடுக்கும் அதே நேரத்தில், மல்லிகைச் சாகுபடியில் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கிறார்கள். குறிப்பாக, செடிகள் நீண்டநாள்களாக பூவெடுக்காமல் இருப்பது, செடியின் வளர்ச்சி குன்றியுள்ளது, அளவில் சிறியதான பூக்கள் தோன்றுதல், வேரழுகல், பூக்கள் சிவப்பு நிறத்துக்கு மாறிவிடுவது எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைச் சரிசெய்வதற்கு, ரசாயன மருந்து, உரம் என விவசாயிகள் அதிகச் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மேலே சொன்ன பிரச்னைகளுக்கு குறைந்த செலவில் எளிமையான தீர்வைச் சொல்கிறார் வேளாண் ஆலோசகர் பிரிட்டோராஜ், ‘‘மல்லிகைச் செடியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணம். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை செடிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மல்லிகைப் பூ சிவப்பு நிறத்தில் மாறிவிடுவதற்குக் காரணமாக இருப்பது ஒரு வகையான புழு. இந்தப் புழுக்களின் நடமாட்டம் மாலை வேளைகளில் செடிகளில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் மருந்தைத் தெளித்தால்தான் புழுக்களை அழிக்க முடியும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இதற்கு இயற்கை முறையில் எளிமையான தீர்வு இருக்கிறது.

அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கக்கூடிய வேப்பங்கொட்டையும், தண்ணீரும் இருந்தால் இதைச் சரிசெய்து விடலாம். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 டேங்க் தெளிப்பதாக இருந்தால், ஒரு கிலோ வேப்பங்கொட்டையை எடுத்து நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதில், சுண்டு விரல் அளவுக்குக் காதி சோப்பு துண்டை போட்டு குச்சியால் நன்றாகக் கலக்க வேண்டும். இப்படிச் செய்தால் பால் போன்ற திரவம் நுரையுடன் கிடைக்கும். நுரையை எடுத்துவிட்டு, கரைசலை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசலுக்கு வேப்பங்கொட்டை கரைசல் என்று பெயர்.

10 லிட்டர் டேங்க்கில் அரை லிட்டர் வேப்பங்கொட்டை கரைசலை ஊற்றி, அதில் தண்ணீரை நிரப்பித் தெளிக்கலாம். விவசாயிகள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, இந்தக் கரைசலை மாலை 5 மணிக்கு மேல்தான் தெளிக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் புழுக்களின் நடமாட்டம் இருக்கும். நாம் தெளிக்கும் கரைசல் நேரடியாகப் புழுக்களின் மீது பட்டு பலன் கிடைக்கும். மற்ற வேலைகளில் தெளிப்பதால், எந்தப் பலனும் ஏற்படாது. இதை 3 நாள்கள் இடைவெளியில் மூன்றுமுறை தெளித்தால் புழுக்கள் செத்துப்போகும்; அத்துடன் செடிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

இந்த இடத்தில் விவசாயிகளுக்கு ஒரு கேள்வி எழலாம். இந்தக் கரைசலை தெளிப்பதால் செடிகள் வாடிப்போகுமே எனத் தோன்றும். வேப்பெண்ணெய் கரைசலைப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பயன்படுத்தும்போது, செடிகள் வாடிப்போகும்தான். ஆனால், நாம் வேப்பங்கொட்டையை இடித்து, குறைவான அளவில் பயன்படுத்துவதால் செடிகள் வாடிப்போகாது. ஒருவேளை அளவு சற்றுக் கூடுதலாகப் போனால் கூட ஓரிரு நாளில் வாடிய செடிகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். பிரச்னையில்லை.

கரைசலைத் தெளித்த பிறகு செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் எனப் பார்த்தோம். அந்தக் காலகட்டத்தில் செடிகளில் இலைகள் வறண்டுபோய் காய்ந்த நிலையில் காணப்படும். ஓரிரு நாள்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் மீன் அமிலம் மற்றும் இ.எம் இரண்டையும் பாசன நீருடன் கலந்துகொடுக்க வேண்டும். பல விவசாயிகள் மீன் அமிலத்தைத் தெளிக்கிறார்கள். ஆனால், மல்லிகையைப் பொறுத்தவரை, தெளிப்பதை விட, பாசன நீரில் கலந்துகொடுப்பதுதான் சிறந்தது. கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகள், 300 மில்லி இ.எம் கரைசலை பாசன நீரில் கலந்து விடலாம். அல்லது செடிகளுக்குக் கொடுப்பதற்கு முதல்நாள் மாலை, 200 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி இ.எம் ஊற்றி, கலந்து வைத்து விடவேண்டும். இதை அடுத்த நாள் காலையில் எடுத்து, ஒவ்வொரு செடிக்கும் அரை லிட்டர் அளவுக்குத் தூர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும்.

செடி இயல்பு நிலைக்கு வந்து அரும்பு எடுக்கும். இந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதனால் அதிக அரும்புகள் தோன்றும். அரும்பு தோன்றியவுடன், மீன் அமிலத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் செய்யும் போது, 750 மில்லி மீன் அமிலத்தைத் பாசன நீரில் கலந்து விடலாம். இ.எம் மற்றும் மீன் அமிலம் இரண்டையும் சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். இப்படிச் செய்வதால், பூக்களின் சைஸ் பெரியதாக இருக்கும். மல்லிகையில் பல இடங்களில் போரான் சத்து குறைபாடு தோன்றும். பற்றாக்குறையைச் சரிசெய்ய, எருக்குச் செடிகளை துண்டு துண்டாக வெட்டி, ஒவ்வொரு செடிக்கும் தூரிலிருந்து அரையடி தூரத்தில் பள்ளம் எடுத்து, ஒரு கைப்பிடி எருக்கம் இலைகளைப் போட்டுப் பள்ளத்தை மூடிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் பற்றாக்குறை சரியாவதோடு, பூக்களின் வாசனையும் அதிகரிக்கும். எருக்கினால் மட்டும் வாசனை கிடைப்பதில்லை, வேப்பங்கொட்டை கரைசல், தேமோர் கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகிய அனைத்தையும் முறையாகப் பயன்படுத்துவதால்தான் வாசனை அதிகரிக்கிறது.

களிமண் பூமியில் உள்ள மல்லிகையில் வேரழுகல் பெரிய பிரச்னையாக இருக்கும். வேரழுகல் பாதிப்பை சரிசெய்ய, அரை டீ ஸ்பூன் சூடோமோனஸ், அல்லது கால் டீ ஸ்பூன் டிரைக்கோடெர்மா விரிடி எடுத்து மண்ணில் கலந்து தூரிலிருந்து அரையடி தள்ளி சிறிய குழியெடுத்து அதில் வைத்து மூடி, பாசனம் செய்யலாம்" என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை!



நஞ்சில்லா உணவு, குறைவான இடுபொருள் செலவு போன்ற காரணங்களை முன்வைத்துதான் பலரும் இயற்கை விவசாயத்தில் கால்பதிக்கிறார்கள் விவசாயிகள். இவையில்லாமல் இன்னும் ஏராளமான பலன்கள் இயற்கை முறை விவசாயத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை முறை விவசாயத்தில் நோய்கள் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகள் ஆகியவற்றைத் தாங்கி வளரும் சக்தி பயிர்களுக்குக் கிடைக்கிறது. இதைக் கண்கூடாக உணர்ந்து சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் இயற்கை முறையில் வாழைச் சாகுபடி மேற்கொண்டு வரும் ரமேஷ்.
இவர் ஏற்கெனவே ‘பசுமை விகடன்’ இதழின் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். 10.2.2018-ம் தேதியிட்ட இதழில் ‘கலகல காந்திகடலை... மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்’ என்ற தலைப்பில் இவரது சாகுபடி அனுபவம் வெளிவந்துள்ளது. ஒரு மதியவேளையில், ரமேஷின் வாழைத்தோப்புக்குள் நுழைந்தோம். நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினார், ரமேஷ்.
“போன ரெண்டு மூணு வருஷங்களைவிட இந்த வருஷம் ஆடிக்காற்று ரொம்பப் பலமா இருந்துச்சு. எங்க பகுதியில உள்ள பெரும்பாலான தோப்புகள்ல இருந்த வாழை மரங்கள்ல, கால்வாசி மரங்களுக்கு மேல சாய்ஞ்சுடுச்சு. அதனால, விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு. ஆனா, என்னோட தோப்புல மரங்கள் ரொம்ப உயரமா வளர்ந்திருந்தும் பெரிய அளவுல சேதாரம் இல்லை. இது மூணாம் போகம். தார்கள் நல்ல கணமா இருந்தும் மரங்கள் சாயலை. பல விவசாயிகள், மரம் சாயாமல் இருக்குறதுக்காக நிறைய செலவு பண்ணிக் கட்டைகளைக் கட்டி முட்டுக் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு அந்தச்செலவே இல்லை. இயற்கை விவசாயம் செய்றதால மண் நல்லா வளமா இருக்கு. மரங்களும் திடகாத்திரமா இருக்கு. மண்ணுக்குள்ள வேர் நல்லா இறங்கியிருக்குறதால மரங்கள் சாயலை” என்று இயற்கை விவசாயத்துக்குக் கட்டியம் கூறிய ரமேஷ், நம்மை வாழைத்தோப்புக்குள் அழைத்துச் சென்று வாழை மரங்களைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
“இங்கிருக்கிற வாழை மரங்கள்ல காய்ஞ்சுப் போன சருகுகளை நான் நீக்குறதேயில்லை. அதனால, மரத்துல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். நிலத்துக்கு நிழல் கிடைக்கிறதால, மண்புழுக்கள் நிறைய உருவாகியிருக்கு. நான் பசுமை விகடன் ஏற்படுத்தின தாக்கத்தினாலதான் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். இது களியும் வண்டலும் கலந்த மண். மொத்தம் மூணே கால் ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டே கால் ஏக்கர் நிலத்துல நெல், கடலை, உளுந்துனு மாத்தி மாத்திச் சாகுபடி செய்றோம். 34 சென்ட் நிலத்துல நடவு போட்டு 2 மாசமான வாழை இருக்கு. 66 சென்ட் நிலத்துல பூவன், பச்சைநாடன் இரண்டும் கலந்து 700 வாழை மரங்கள் இருக்கு. காற்றைத் தடுக்கிறதுக்காக வேலி ஓரத்துல உள்ள வாழை மரங்களை மூன்றரையடி இடைவெளியில நடவு செஞ்சுருக்கோம். நிலத்தோட உள்பகுதியில ஏழு அடி இடைவெளி விட்டுருக்கோம். எங்க பகுதியில இப்படி வேலியோரத்துல நடவு செய்ற கன்றுகளைத் ‘தொப்புள் கன்றுகள்’னு சொல்வாங்க.
வாழை நடவு செஞ்ச சமயத்துல பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், இ.எம் கரைசல், மீன் அமினோ அமிலம், எரு, பிண்ணாக்குனு நல்லாவே இடுபொருளைக் கொடுத்தோம். அதனால, பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாமல் நல்லா செழிப்பா விளைஞ்சது. வேலியோரத்துல இருக்குற நூறு மரங்கள்ல தார் சுமாராத்தான் கிடைக்கும். மத்த மரங்கள்ல நல்ல தரத்துல தார்கள் கிடைச்சது. மொத்தம் 600 தார்கள் கிடைச்சது. ஒவ்வொரு தார்லயும் 10-12 சீப்புகள் இருந்துச்சு. அதனால, நல்ல விலை கிடைச்சது. 600 தார்களை விற்பனை செஞ்சதுல மொத்தம் 1,47,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லாச் செலவும் போக, ஒண்ணேகால் லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சது. இரண்டாம் போகத்துலயும் அதே அளவு வருமானம் கிடைச்சது. இப்போ மூன்றாம் போகம். இரண்டாம், மூணாம் போகத்துல உழவுல இருந்து நிறைய வேலைகள் கிடையாது. அதனால, செலவும் குறைவுதான்” என்ற ரமேஷ் நிறைவாக,
“மூணாம் போகத்துல வேலி ஓரத்துல உள்ள மரங்கள்ல வழக்கம்போலத் தார்கள் சுமாராத்தான் கிடைச்சது. உள்ள இருந்த மரங்கள்ல 48 மரங்கள் காத்துல சாய்ஞ்சுடுச்சு. மீதி 552 வாழை மரங்கள்லதான் தார்கள் தரமா இருக்கு. இதுவரைக்கும் 300 தார்களை வெட்டி விற்பனை செஞ்சுருக்கோம். ஒரு தாருக்கு 200 ரூபாய் விலை கிடைச்சது.
ஆவணிக்கு அடுத்த வர்ற மாசங்கள்ல முகூர்த்தம், பண்டிகைகள் இருக்குறதால விலை ஏறுறதுக்கான வாய்ப்பிருக்கு. தார்கள் நல்ல திடகாத்திரமா இருக்குறதால, ஒரு தாருக்கு எப்படியும் 300 ரூபாய்க்கு மேல விலை கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். 552 தார்கள் மூலமா எப்படியும் 1,65,600 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும்னு எதிர் பார்க்குறேன். அதுல அறுவடைக்கும் இடுபொருள்களுக்கும் சேர்த்து 7,500 ரூபாய் செலவு போக மீதி முழுசும் லாபம்தான்” என்றார் சந்தோஷமாக.
தொடர்புக்கு :
ரமேஷ், செல்போன்: 90431 23234.
ஏழு அடி இடைவெளி!
இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்து ரமேஷ் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...
தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஏழு அடி இடைவெளியில், முக்கால் அடி ஆழத்துக்குக் குழிகள் எடுக்க வேண்டும். 30 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து அக்கலவையில் வாழைக் கட்டைகளை (விதைக்கிழங்கு) நனைத்து எடுத்துக் குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் குழிகளைச் சுற்றி மிதித்து விட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை பாசன நீரில் ஏக்கருக்கு
200 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் கலந்து விட வேண்டும்.
75-ம் நாள் ஒவ்வொரு வாழையின் தூரிலும் 10 கிலோ அளவு எரு போட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கடலைப்பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். நடவுசெய்த 85-ம் நாளன்று ஒவ்வொரு வாழையின் தூரிலும் அரைக்கிலோ அளவு பிண்ணாக்குக் கலவையை இட வேண்டும். 90-ம் நாள், மண்ணைக் கொத்திக் களைகளை அகற்ற வேண்டும்.
105-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யா, 2 லிட்டர் இ.எம் கரைசல், 500 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து, இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 120-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 500 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 130-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 130 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் இ.எம் கரைசல், 1 லிட்டர் மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளித்து வர வேண்டும். எட்டு மாதங்கள் வரை தெளித்தால் போதுமானது.
9-ம் மாதம் தார்விடத் தொடங்கியதும் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில், தார்கள்மீது மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். தொடர்ந்து பக்கக்கன்றுகளில் தரமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிட வேண்டும். 11-ம் மாதத்துக்குப் பிறகு முற்றிய தார்களை அறுவடை செய்யலாம்.

Sunday, 14 October 2018

ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம்! - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை :

நாட்டு ரக விதைகளைப் பசுமைப்புரட்சி அழித்ததுபோல... நாட்டு மாடுகளை அழித்துக் கலப்பினங்களைப் பெருக்கியது, வெண்மைப்புரட்சி. கடந்த சில பல ஆண்டுகளாக ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார், ‘ஜீரோபட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட பல இயற்கை ஆர்வலர்கள் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு காரணமாக... பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். அப்படி இயற்கைக்கு மாறும் விவசாயிகள் அனைவருமே, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புக்காக நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில், பாரம்பர்ய உணவு குறித்து விழிப்பு உணர்வு பெருகி வருவதால், சத்தான நாட்டு மாட்டுப்பாலுக்கான சந்தை வாய்ப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால், இயற்கை இடுபொருள்களின் தேவைக்காக வளர்ப்பதோடு, பாலுக்காகவும் நாட்டு மாடுகளைப் பலர் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெரும்பாலான நாட்டு மாடுகள் குறைந்தளவில் பால் கறக்கக்கூடியவை என்பதால், தமிழக விவசாயிகள் பலரும் வட மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகப்பால் கறக்கக்கூடிய நாட்டு மாடுகளை, பால் உற்பத்திக்காக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், வெளி மாநிலப்பசுக்களை வளர்த்து வருகிறார்கள் ராஜேஷ் கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகிய நண்பர்கள்.

ஆஸ்திரேலியா நாட்டில் கட்டடப் பொறியாளராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தவர், ராஜேஷ் கார்த்திக். தற்போது வேலையை உதறிவிட்டு, நாட்டுமாடுகள் வளர்ப்பில் இறங்கியுள்ளார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஆவின் நிறுவனத்தில் செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி எடுத்துக்கொண்டு... கிராம நிலைப் பணியாளராக 16 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், பிரகாஷ். இவர்கள் இருவரும் இணைந்து, கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் கிராமத்தில் 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நாட்டுப்பசுக்களை வளர்த்து வருகிறார்கள். ஒருநாள் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர்களைச் சந்தித்தோம்.

முதலில் பேசியவர், ராஜேஷ் கார்த்திக். “எனக்குச் சொந்த ஊரு செஞ்சேரி மலை. அங்க 6 ஏக்கர் தோப்பு இருக்கு. சின்ன வயசில இருந்தே ஆடு, மாடு, கோழிகள்னா ரொம்ப இஷ்டம். பள்ளிக்கூடம் முடிஞ்சு சாயங்காலம் வீடு வந்ததும், நேரா தோட்டத்துக்குத்தான் போவேன். அங்க ஆடு, மாடுகளுக்குத் தீனியை அள்ளிப் போட்டுட்டுதான் வீட்டுக்கு வருவேன். அதுக்குப்பிறகு வீட்டுப்பாடத்தை எழுதுவேன். அதேமாதிரி ஸ்கூல் லீவு விட்டால் போதும், பண்ணையாளுங்ககூடச் சேர்ந்து மாடுமேய்க்கப் போயிடுவேன். அப்பவே எனக்குப் பெரிய பால்பண்ணை வைக்கணும்னு ஆசை. இஞ்சினியரிங் முடிச்ச பிறகு, ஆஸ்திரேலியாவுல வேலை கிடைச்சது. அங்க 6 வருஷம் வேலை பார்த்தேன். அப்பவும் எனக்குப் பால் பண்ணை மேலதான் ஆசை இருந்துச்சு. நேரம் கிடைக்கிறப் போவெல்லாம்... விவசாயம், கால்நடை சம்பந்தமான செய்திகளைத்தான் இன்டர்நெட்ல தேடித் தேடிப் படிப்பேன்.

அதோட, ‘பசுமை விகடன்’ உள்பட விவசாயம் சம்பந்தமான புத்தகங்களையும் தொடர்ந்து படிச்சுட்டு இருந்தேன். இடையில திருமணமும் முடிஞ்சுடுச்சு. ஒரு கட்டத்துல தாய்நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை வந்தது. ஊர் திரும்புனதும் பால்பண்ணை ஆரம்பிக்கிறதுக்கான முயற்சிகள்ல இறங்கினேன். ஆரம்பத்திலேயே நாட்டுமாடுகளைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதிகப்பால் கொடுக்கக்கூடிய கிர், சாஹிவால், தார்பார்க்கர், காங்கிரேஜ் ரகங்களைப் பத்தியும் இன்டர்நெட்ல விஷயங்களைச் சேகரிச்சு வெச்சுருந்தேன். அந்தச் சமயத்துலதான் எனக்குக் கறவை மாடுகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் செய்றதுக்காக எங்க ஊருக்கு அடிக்கடி வந்துக்கிட்டுருந்த பிரகாஷ் எனக்கு அறிமுகமானார். அவர் சூலூருக்குப் பக்கத்துல இருக்குற ராசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் கறவை மாடு வளர்ப்பில் நல்ல அனுபவம் இருந்ததால, அவரையும் தொழில்ல இணைச்சுக்கலாம்னு முடிவு பண்ணுனேன். அவருக்கும் என்கூடச் சேர்றதுல விருப்பம் இருந்துச்சு.

எங்க பூர்வீக நிலத்துல தண்ணீர் வசதி குறைவு. அதனால, அதிகளவு பசுந்தீவனம் உற்பத்தி செய்றதுக்காகத் தண்ணீர் வளம் இருக்குற நிலத்தைத் தேட ஆரம்பிச்சோம். அப்போதான் இந்த 6 ஏக்கர் நிலம் வருஷக் குத்தகைக்குக் கிடைச்சது. இங்க தண்ணீருக்குப் பிரச்னையில்லை. முதல் வேலையா தீவனப்பயிர்களை நடவு செஞ்சோம். அடுத்து கொட்டகைகளை அமைச்சோம். அதுக்கப்புறம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் போய், அங்குள்ள விவசாயிங்ககிட்ட நேரடியா விலை பேசி... 11 கிர் மாடுகள், 6 சாஹிவால் மாடுகள், 8 காங்கிரேஜ் மாடுகள்னு மொத்தம் 25 கறவை மாடுகளை வாங்கிட்டு வந்தோம். அந்த மாநிலங்கள்ல இருந்தே குடும்பமா 10 தொழிலாளிங்களையும் கூட்டிட்டு வந்துட்டோம்” பால் பண்ணை அமைத்த கதை சொன்ன ராஜேஷ் கார்த்திக், பண்ணைக்குள் நம்மை அழைத்துச் சென்று மாடுகளைக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்தார்...

“மாடுகளை வாங்கிட்டு வந்தபிறகு, பாலை மார்க்கெட் பண்றது தொடர்பா, சில பால் வியாபாரிகள்கிட்ட பேசினோம். அவங்க எல்லோருமே நாட்டு மாட்டுப்பாலுக்கு நல்ல தேவை இருக்குனு சொன்னாங்க. எங்க பண்ணையில பால் கொள்முதல் செய்யறதுக்கும் சம்மதிச்சாங்க. ‘எங்களுக்கு லிட்டர் நூறு ரூபாய்னு கொடுங்க. நாங்க டவுன்ல லிட்டர் 120 ரூபாய்னு விற்பனை செய்வோம்’னு கேட்டாங்க. நாங்க கணக்குப் போட்டுப் பார்த்ததுல, அந்த விலை கட்டுபடியாத்தான் இருந்துச்சு. ஆரம்பத்துல 25 கறவை மாடுகள்ல இருந்து தினமும் 150 லிட்டர் வரை பால் கிடைச்சது. பெரும்பாலும் பாலாவே விற்பனை செஞ்சுட்டோம்.

எப்போவாவது பால் மீதமாச்சுனா, அதைத் தயிராக்கி... பாரம்பர்ய முறைப்படி கடைஞ்சு, வெண்ணெய், நெய்னு தயாரிச்சு விற்பனை செஞ்சுடுவோம். 17-20 லிட்டர் பால்ல இருந்து 1 கிலோ அளவு நெய் கிடைக்கும். ஒரு கிலோ நெய் 1,600 ரூபாய்னு விற்பனையாச்சு. இங்கயே மசாலா மோர் தயாரிச்சு அதைத்தான் பண்ணைக்கு வர்றவங்களுக்குக் குடிக்கக் கொடுப்போம்” என்றார்.

ராஜேஷ் கார்த்திக்கைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ், “பண்ணையில எப்பவும் தொடர்ச்சியா பால் கிடைச்சுட்டே இருக்கணும்னா 25 மாடுகள் பத்தாதுனு யோசிச்சு, மாடுகளோட எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு பண்ணினோம். அதுக்காகப் பேங்க் லோன் கேட்டுப் போனோம். பல பேங்க்குகள்ல நாட்டு மாடுகளுக்கு லோன் இல்லைனு சொல்லிட்டாங்க.

இருந்தாலும் தளராம அலைஞ்சோம். அதுக்குப் பலன் கிடைச்சது. செஞ்சேரிமலையில இருக்குற ‘பேங்க் ஆஃப் பரோடா’ மேனேஜர் லோன் கொடுக்கச் சம்மதிச்சார். பண்ணையை நேர்ல பார்த்த பிறகு அவங்களுக்குத் திருப்தியா இருந்ததால... உரிய ஆவணங்களை வாங்கிட்டு 40 லட்சம் ரூபாய் லோன் சேங்க்‌ஷன் பண்ணினாங்க. உடனடியா, கிளம்பிப்போய் மாடுகளை வாங்கிட்டு வந்தோம். இப்போ எங்க பண்ணையில 25 கறவை மாடுகள், 25 கன்னுக்குட்டிகள், 25 சினை மாடுகள்னு மொத்தம் 75 உருப்படிகள் இருக்கு.

இப்போ ஒரு வருஷத்துக்கு 50,000 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 100 ரூபாய்ங்கிற கணக்குல வருஷத்துக்கு 50,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். எரு விற்பனை மூலமா வருஷத்துக்கு 2,50,000 ரூபாய் கிடைக்குது. நெய் விற்பனை மூலமா வருஷத்துக்கு 50,000 ரூபாய் கிடைக்குது. ஆக, ஒரு வருஷத்துக்கு மொத்தமா 53,00,000 ரூபாய் கிடைக்குது. ஒரு மாட்டுக்குத் தினமும் ஒன்றரை கிலோ பருத்திப் பிண்ணாக்கு,

1 கிலோ கோதுமைத் தவிடு, 1 கிலோ கருக்காய் தவிடு, அரைக்கிலோ உளுந்து குருணை, அரைக்கிலோ மக்காச்சோள மாவு, 30 கிலோ பசுந்தீவனம், 30 கிலோ வைக்கோல்னு தீவனமாக் கொடுக்குறோம். ஒரு கறவை மாட்டுக்கு ஒரு நாளைக்குத் தீவனத்துக்கு 140 ரூபாய்ச் செலவாகும். சினை மாட்டுக்கு 100 ரூபாய்ச் செலவாகும். தீவனம், பணியாளர்களுக்குச் சம்பளம், பணியாளர்கள் வீடுகளுக்கு வாடகை, போக்குவரத்து, குத்தகை, மருந்துகள், மின் கட்டணம், எல்லாம் சேர்த்து 35,00,000 லட்சம் ரூபாய் வரை செலவாகிடுது. இப்போதைக்கு வருஷத்துக்கு 15 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய ராஜேஷ் கார்த்திக், பிரகாஷ் ஆகியோர், “அடுத்து பக்கத்து மாவட்டங்கள்லயும் பண்ணையை விரிவுபடுத்தலாம்னு இருக்கோம். ஐ.டி கம்பெனிகள்ல வேலை பார்க்குற சில இளைஞர்களோட சேர்ந்து, சென்னையடுத்த பழைய மகாபலிபுரம் சாலையில் ஓர் இடத்துலயும், மீஞ்சூருக்குப் பக்கத்துல இருக்குற தத்தமஞ்சிங்கிற இடத்துலயும் நாட்டு மாட்டுப்பண்ணைகளை ஆரம்பிச்சுருக்கோம். அதேமாதிரி, காரைக்குடியிலயும் ஒரு பண்ணை ஆரம்பிச்சிருக்கோம். இப்போ பாக்கெட்கள்ல அடைச்சு நாங்களே நேரடியா மார்க்கெட் பண்ற முயற்சியிலயும் இறங்கியிருக்கோம். உத்தரப் பிரதேச மாநிலம், ‘ராய்பர்லி’ங்கிற இடத்துல ஒரு நண்பர்கூடச் சேர்ந்து ஒரு எருமைப் பண்ணையை ஆரம்பிச்சுருக்கோம். 1,000 மாடுகள் வெச்சுப் பண்ணை ஆரம்பிச்சு அந்தப்பண்ணையில தயிர், வெண்ணெய், நெய், அர்க், சாம்பிராணி, சோப்பு, அமிர்த சஞ்சீவினு எல்லாப் பொருள்களையும் தயாரிச்சு நாடு முழுக்கச் சந்தைப் படுத்தணுங்கற ஆசையில இருக்கோம்” என்றார்.

தொடர்புக்கு :

ராஜேஷ் கார்த்திக் : 80729 77532
பிரகாஷ் : 99437 70000.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கழிவுநீரிலிருந்து சுத்தமான குடிநீர்... எப்படிச் சாத்தியம்?


நம்முடைய நீர்மேலாண்மை இப்போது போலவே எப்போதும் இருப்பின் இதுபோன்ற மாற்றுவழிகளை நோக்கி பயணிக்கவேண்டிய அவசியம் நிச்சயம் வரும்.

தண்ணீர்... இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் அதி அவசியமான ஒன்று. மூச்சுக்காற்றுக்குப் பிறகு உயிர்வாழ மிக முக்கியமானது தண்ணீர். அதை ஒரு நாளுக்கு எவ்வளவு வீணடிக்கிறோம். காலை பல் துலக்கும் போது தொடங்கி இரவில் பல் துலக்கிப் படுக்கும் வரை எத்தனை முறை தண்ணீர் குழாயை அப்படியே திறந்து விட்டுப் போகிறோம். சரியாக மூடாமல் போகும் குழாய்களிலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளியையும் சேர்த்தாலே ஒரு நாளுக்கு 2 வாளி சேரும். இப்படி நாம் அன்றாடம் வீணாக்கும் ஒவ்வொரு துளி நீரின் அருமையும் வறட்சிக் காலங்களில்தான் நமக்குத் தெரியவரும். முதலில் குளம் குட்டைகளிலிருந்து இலவசமாகக் கிடைத்துவந்த குடிநீர் பின்னர் குடம் 1 ரூபாய் என விற்பனைக்கு வந்தது; தற்போது அதுவே 20 ரூபாய் வரை விலையேறிவிட்டது. நகரங்களின் சாலைகளில் நாள்கணக்கில் ஊர்ந்துசெல்லும் தண்ணீர் லாரிகளையும், தண்ணீர் கேன் வாகனங்களையும் பார்த்தாலே இந்த உண்மை எளிதில் புரியும்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால் நேரடியாக நீர்நிலைகளிலிருந்து நீர் எடுக்கும் நிலை மாறி, கடல்நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வரலாம். இப்போதே சென்னையின் குடிநீர்த் தேவையில் கடல்நீர் சுத்திகரிக்கும் மையங்கள்தாம் முக்கியப் பங்காற்றுகின்றன. இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் அடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் டியாகோ நகரங்களில் செய்ததுபோல கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைக்கவேண்டிய அவசியமும் வரலாம். 2014-ல் அமெரிக்காவில் வறட்சி வந்தபோது மேற்கண்ட நகரங்களில் அதிநவீனக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. அதன்மூலம் கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கேட்க சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; ஆனால், இதுதான் அங்கே யதார்த்தம். இதைச் சாத்தியப்படுத்தியது அறிவியல் தொழில்நுட்பம். எப்படிக் கழிவுநீர் குடிநீராகிறது?

நம்முடைய கழிவறைகளிலிருந்து நாள்தோறும் அதிகளவில் நன்னீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒருநாளைக்குக் கழிவறைகளிலிருந்து, மனிதக் கழிவுகளை அலசுவதற்காக மட்டுமே சராசரியாக 6 லிட்டர் முதல் 26 லிட்டர்வரை பயன்படுத்தப்படுகிறது. நம் சிறுநீரில் 90 சதவிகிதம் தண்ணீர்தான். மனிதக் கழிவில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான். இவற்றை நாம் அப்புறப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதும் தண்ணீர்தான். இவற்றையெல்லாம் முறையாகச் சுத்திகரித்தாலே, நம்மால் ஓரளவு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமாம். இதைத்தான் அமெரிக்காவிலும் செய்திருக்கிறார்கள். அது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முதலில் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் ஒரு தொட்டியில் சேகரமாகும். இதற்காகக் கழிவறையிலிருந்து நேரடியாகத் தொட்டியில் ஒரு குழாய் இணைக்கப்படும். இதில் தண்ணீர், மலம், பிற கழிவுகள் அனைத்தும் வந்துவிழும். அந்தத் தொட்டியானது பகுதி பகுதியாக வடிகட்டிச் சல்லடைகள் வைத்து 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதலில் நேரடியாக முழுக் கழிவுகளோடு வரும் கழிவுநீரானது இந்தச் சல்லடையின் வழியே பாய்ந்து செல்லும்போது, அதில் கலந்திருக்கும் கல், குச்சி, மனிதக் கழிவுகள், திடக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் போன்றவை அனைத்தும் முதல் நிலையிலேயே நின்றுவிடும். பின்னர் திரவக் கழிவுகள் மட்டுமே அடுத்த சல்லடையை நோக்கிச் செல்லும். இதில் சின்னச் சின்ன துகள்கள் அனைத்தும் கழிவுநீரின் அடியிலேயே தங்கிவிடும் என்பதால், கழிவின் அடர்த்தி இன்னும் குறைந்திருக்கும். பின்னர் இப்படிச் சேகரமான கழிவுப்பொருள்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்த வடிகட்டி தொட்டியைத் தாண்டி இரண்டாவதாக, உயிரி நுண்ணுயிர் கழிவுகளைக் கொண்ட ஒரு தொட்டிக்குச் செல்லும்.

அந்தத் தொட்டியில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் கொண்ட சேறு கலந்திருக்கும். அதில், இந்தக் கழிவு நீர் கலக்கும்போது கழிவுகளில் இருக்கும் நுண்துகள்கள், கரிம அசுத்தங்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டுவிடும். கழிவுநீரில் கலந்திருந்த அனைத்துக் கழிவுகளும் இந்த நிலையில் வெளியேறிவிடும். இந்தச் சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிற்சாலைகள் பயன்பாடுகள், தோட்டப் பயன்பாடுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

இன்னும் குடிக்கும் அளவுக்குத் தூய்மையாக வேண்டுமென்றால், மீண்டும் நார் போன்ற மெல்லிய இழைகள் நிறைந்த தொட்டிக்குள் இது அனுப்பப்படும். இதன் வழியே நீர் செல்லும்போது மீதமிருக்கும் நுண்துகள்களும் தங்கிவிடும். தற்போது இந்த நீரை குடிக்கப் பயன்படுத்தலாம். ஆனால், கழிவறை நீரிலிருந்து வந்த நீர் என்பதால் பலருக்கும் குடிக்கத் தயங்குவார்கள். எனவே, இயற்கையான நீர்நிலைகளில் இவற்றைக் கலந்துவிடலாம். அவை தூய்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த நீர்வரத்தால் அதிலிருக்கும் உயிரிகள் இன்னும் செழிப்பானதாக மாறும். பின்னர் அங்கிருந்து மீண்டும் குடிநீர்த் தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் சில சுத்திகரிப்பு பணிகள் நடந்துமுடிந்தபின் நம்வீட்டுக் குழாய்க்கு வந்துசேரும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
சிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா?

‘‘சிறுதானியங்களில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்துச் சொல்லுங்கள்? இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள்?’’

மதுரையில் உள்ள மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பதில் சொல்கிறார்.

‘‘பெயருக்கு ஏற்றபடி, சிறிய தானியங்களாக இருந்தாலும், இதன் பலன்கள் ஏராளம். சிறுதானிய வகைகளில் சத்துகள் தவிரப் பல மருத்துவக் குணம்கொண்ட பைத்தோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் உள்ளது. இம்மருத்துவக் குணங்கள் இன்று வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. வளர்ந்து வரும் நாகரீக வாழ்வில் எளிதில் சமைக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இன்று பலரையும் பயமுறுத்தி வரும் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல நோய்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இச்சிறு குறுந்தானியங்களில் பல உயிர்ச் சத்துகளும் மருத்துவக் குணங்களும் விரவி காணப்படுகின்றன. சிறுதானியங்களில் உள்ள லிகனின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. குறிப்பாகக் குடல் சுத்தப்படுவதற்கு மிகவும் உதவுகிறது. தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்வதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னை, இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கலாம். குழந்தைகளுக்குச் சிறுதானிய உணவு கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோய் உள்ளவர்களுக்குச் சிறந்தது. சிறுதானியத்தில் உள்ள பாஸ்பரஸ் உடலின் செல்களை உறுதிப்படுத்தி, எலும்புகளுக்கு உறுதியை அளிக்க வல்லது. ஒரு கப் சிறுதானிய உணவு ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான 24 சதவிகித பாஸ்பரஸ் தேவையைப் பூர்த்திச் செய்கிறது. சிறுதானிய உணவில் உள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாக இருக்கும். சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் என்ற தாது உப்பு, எலும்பு சம்பந்தமான நோய்களும் இதய நோய்களும் வராமல் பாதுகாக்க வல்லது.

இந்த அவசர உலகில், நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட யாருக்கும் நேரமில்லை. அதுவும் நகரங்களில் பணியாற்றுபவர்கள் நின்றுகொண்டே சாப்பிட்டு ஓடும் நிலையில் இருக்கிறார்கள். இப்படி அவசரமாகச் சாப்பிடும் உணவு சத்தாகவும் ருசியாகவும் இருக்க வேண்டும். சிறுதானியங்களை உடனடி உணவுகளாகவோ அல்லது சிறுதானிய உணவுகளாகவோ பதப்படுத்தி வியாபாரமாகச் செய்யலாம். இதனால், கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் மக்களுக்குக் குறிப்பாக நகர்ப்புற மக்களுக்குச் சத்தான உணவு கிடைக்கும். இதனைக் கருத்தில்கொண்டு சிறுதானியங்களைப் பதப்படுத்தி இன்றைய காலத்திற்கு ஏற்ப எளிதில் தயாரிக்கக்கூடிய உடனடி உணவுகளை எல்லா வயதினருக்கும், எல்லா வியாதியினருக்கும் ஏற்ற வகையில் ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடு, கவனம் போன்றவை உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் பெரிய அளவில் விரிவு பெற வாய்ப்பு உள்ளது. சிறுதானிய உணவுப் பொருள்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உருவாகி வருகிறது.

நல் வாய்ப்பை பயன்படுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானியங்களில் ருசியான, சத்துக்குறையாத உணவுகளைத் தயாரிக்க முடியும். சிறுதானியக் கொழுக்கட்டை, கம்பு இனிப்பு ஆப்பம்... எனப் பல வகையான மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தயாரிக்க முடியும். இதற்கான கட்டணப் பயிற்சி வகுப்புகள் எங்கள் கல்லூரியில் நடத்தப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து பங்கு பெறலாம்.’’

தொடர்புக்கு,
தொலைபேசி: 0452 2424684.

சிறுதானிய உணவு வகைகள் :

1. சிறுதானியக் கொழுக்கட்டை. (கம்பு அல்லது சோளம்).

2. கம்பு இனிப்பு ஆப்பம் (சோளம்).

3. சமோசா (வரகு அரிசி அல்லது சோளம்).

4. பனியார மிக்ஸ் (கம்பு அல்லது சோளம்).

5. காரா சேவு (சோளம் அல்லது வரகு).

6. போளி (வரகு அல்லது தினை அல்லது சாமை).

7. புட்டு மிக்ஸ் (சோளம் அல்லது கம்பு அல்லது மக்காச்சோளம்).

8. ஹெல்த் மிக்ஸ் (சாக்லேட் பவுடர் சேர்த்தால் ருசியாக இருக்கும்).

9. பொங்கல் வகைகள், கலவை சாத வகைகள், பிரியாணி போன்ற உணவுகள் (வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி).

10. பலதானிய ஆப்பம்.

11. சிறுதானிய நூடுல்ஸ்.

12. சிறுதானிய அடைமிக்ஸ்.

13. சிறுதானிய அடுமனை பொருள்கள் (பிரட், ரஸ்க், சூப் ஸ்டிக், சாமை பிஸ்கட், வரகு கேக் மற்றும் சோள பிஸ்கட்).

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
திருச்சி வாழைக்கு அமேஸானில் கிராக்கி... ஆன்லைன் பிசினஸில் அசத்தும் 'ஸ்மார்ட்' விவசாயிகள்!
முதலில் இவர்களின் வாழை பொருள்களை விற்பனை செய்ய அமேஸான் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னபிறகுதான் விற்பனை செய்ய அனுமதித்தது. அதன்பின் நடந்ததெல்லாம் விவசாயிகளே எதிர்பாராதது.

வறட்டி முதல் காய்கறிகள் வரை இப்போது ஆன்லைனில் கிடைக்குமளவுக்கு நமது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. தங்களுடைய பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்று கவலைப்படும் விவசாயிகள் மத்தியில், வித்தியாசமான கோணத்தில் தங்களது சிந்தனைகளை செலுத்தி சில விவசாயிகள் தொழில்முனைவோராக மாறி லாபம் பார்த்து வருகிறார்கள். இதனைக் கண்ட விவசாயிகள் அமேசான் போன்ற இணையதளத்தில் பொருள்களை விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்க துவங்கியுள்ளனர். அவர்களில் சிலர் தாங்களே நேரடியாக இணையதளம் துவங்கியும் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை சந்தித்துப் பேசினோம். அதில் இந்தப் புதிய சந்தை வாய்ப்பு குறித்து ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும், காபி விவசாயியுமான செந்தில்குமார்.

“பத்து ஆண்டுகளுக்குமுன் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலம் வாங்கினேன். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இதுவரையில் நிலத்தில் ‘சில்வர் ஓக்’ என்னும் மரங்கள் 10,000 வரைக்கும் வைத்திருக்கிறேன். மேலும் காபி, எலுமிச்சை நாற்றுகளையும் நானே உருவாக்கி நடவு செய்கிறேன்.

எலுமிச்சை சாறு மதிப்பு கூட்டல்!

வெறும் விவசாயம் செய்வதோடு என்னுடைய ஆசை நின்றுவிடவில்லை. எலுமிச்சைக்குப் பல நேரம் விலையே கிடைக்காது. ஒரு கிலோ பத்து ரூபாய் அளவுக்கு விலை சரிந்துவிடும். அந்த நேரத்தில் காய் எடுக்கும் கூலிகூட கட்டாது. அந்தச் சமயத்தில்தான், மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் என்ன என்கிற யோசனை உருவானது. இதுகுறித்து பலரிடம் ஆலோசனை கேட்டேன். பல கட்ட சோதனைகளுக்குப்பின், எலுமிச்சைச் சாற்றை எடுத்து கன்டெய்னரில் அடைக்கும் வழியைத் தெரிந்துகொண்டு, விற்பனை செய்து வருகிறேன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் கொடுத்து இந்தச் சாற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, எத்தனை நாளைக்குக் கெடாமல் இருக்கும் என்னும் அறிக்கைகளையும் வாங்கிவிட்டேன். பசுமை விகடனில் சொல்லியிருந்தபடி, தஞ்சாவூரில் இருக்கும் பயிர் பதனீட்டுக் கழகத்திற்குச் சென்று சில தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். பிறகு என் நிலத்தில் விளைந்த விவசாயப் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டும் நோக்கத்தில் இறங்கினேன்.

இணையம் கொடுத்த சந்தை வாய்ப்பு!

ஆரம்பத்தில் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள சற்றுக் கடினமாகவே இருந்தது. இதற்குக் காரணம், நம் ஊரில் எலுமிச்சை அதிக அளவில் கிடைப்பதுதான். எளிதில் கிடைக்கும் ஒன்றை நாம் மதிப்பு கூட்டுவது தவறு என்று அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்.

அடுத்தடுத்து எனக்குத் தோல்விகள் வந்தாலும், நான் மனம் வெறுத்து ஒதுங்கிவிடவில்லை. இங்கே விலை கிடைக்காமல், ஒதுக்கப்படும் என்னுடைய பொருள்களை இணையதளம் மூலமாக விற்பனை செய்தபோது, வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர, வெளிநாடுகளுக்கும் என் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறேன். உள்ளூரில் விலைபோகாத ஒரு பொருள், இணையத்தின் உதவியால் கண்டம் விட்டு கண்டம் தாவி விற்பனையாகிறது.

எலுமிச்சையை அடுத்து, என்னுடைய நிலத்தில் விளையும் காபியை மதிப்புக் கூட்டல் செய்ய நினைத்தேன். எல்லோரும் காபியை மதிப்புக் கூட்டித்தான் விற்பனை செய்கிறார்கள். நாம் எந்த வகையில் விற்பனை செய்யலாம் என்று மாற்றி யோசித்தேன். அதன் விளைவாகக் கிடைத்த பொருள்தான் கிரீன் காபி என்னும் மதிப்புக் கூட்டல். கிரீன் காபியை பெங்களூரில் உள்ள காபி போர்டு தலைமையகத்தின் உதவியோடும், இணையதளத்தின் உதவியுடனும் நாடு முழுவதும் சந்தைப்படுத்துகிறோம். அதைத் தொடர்ந்து காய்கனி, பழங்கள் ஆகியவற்றைக் கழுவும் கிரீன்வாஷ் (GREEN WASH) என்னும் முற்றிலும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட லிக்யூட் ஒன்றையும் தயாரித்துச் சந்தைப்படுத்தினோம். இணையத்தில் ஒரு பொருளை விற்கப்போய் இன்று பல பொருள்களை விற்பனை செய்து வருகிறேன்.

இத்தகைய இணையதள விற்பனை மூலம், வருங்காலத்தில் என் தோட்டத்தில் விளையும் பொருள்கள் மட்டுமல்லாது, எனது நிலத்துக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பொருள்களுக்கும் தகுந்த வருமானத்தை ஏற்படுத்தித் தரமுடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கி, என்னை இன்னும் உத்வேக உழைக்க வைத்திருக்கிறது. மதிப்புக் கூட்டல் தொழிலில் முதலில் உள்ளூர், மாவட்டம், மாநிலம், நாடு எனப் படிப்படியாகக் கவனித்து, சந்தையில் அதற்கான தேவையும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு, முறையாகப் பயிற்சி பெற்றுக்கொண்ட பின்னர் இறங்கினால் வெற்றி நிச்சயம்” என பாசிட்டிவாக முடித்தார், செந்தில்குமார்.

அமேசானில் திருச்சி வாழை!

முக்கனிகளில் ஒன்றான வாழை அதிகம் விளையும் மாவட்டங்களில் முக்கிய இடம் திருச்சிக்கு உண்டு. வாழைக்குத் தனியாக ஆராய்ச்சி நிறுவனமும் இங்குதான் உள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டியத்தில், 13 விவசாயிகள் சேர்ந்து வாழைப்பழங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கூட்டு முயற்சியில் இருக்கும் விவசாயிகளில் ஒருவரான சுப்ரமணியத்திடம் பேசினோம்.

“வாழைப்பழம் அதிகபட்சம் மூன்று நாள்களுக்குமேல் தாங்காது. எனவே, ஆறு மாதங்கள், ஒரு வருடம் என வைத்திருந்து சாப்பிடும் அளவுக்கு வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி பல பொருள்களைத் தயார் செய்து வருகிறோம். இதற்கு முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. வாழைக்கு நிலையான விலை கிடையாது. அப்படியே விலை இருந்தாலும் விவசாயிக்கு லாபம் கிடைக்காது. இதற்காக விவசாயிகள் சந்தையில் நேரடியாக விற்பனை செய்தாலும், விற்ற பழங்கள் போக மீதமுள்ளப் பழங்கள் வீண்தான். இவற்றையெல்லாம் தவிர்க்கத்தான் வாழையில் மதிப்பு கூட்டல் தொழிலைத் துவங்கினோம்.

கடந்த 2014-ம் ஆண்டு மதிப்பு கூட்டல் தொழிலைத் தொடங்கினோம். வாழை விவசாயம் அதிகமான தொல்லை தரக்கூடியது. சரியான பருவத்திலும் பக்குவத்திலும் காய்களை வெட்டி, சந்தைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாததால், பல விவசாயிகள் வாழையால் அதிகமாகக் கடன்பட்டிருந்தனர். காற்று பலமாக அடித்தால்கூட வாழை மரங்கள் அதிகமாகச் சேதமாகிவிடும். இதனால் பல நேரங்களில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நாங்கள் 13 பேர் ஒன்றிணைந்து ‘மதூர் ஃப்ரூட்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். இதனை ஆரம்பிக்க, விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவி பெரிதும் தேவைப்பட்டது. இங்கு இருக்கும் இயந்திரங்கள் தாய்லாந்து நாட்டில் பயன்படுத்தக்கூடியவை.

சூரிய ஒளியில் பொருள்களை உலர்த்துதல்!

வாழைப்பழம் மதிப்பு கூட்டலில் முக்கியமான முதல் வேலை, வாழைப்பழங்களைச் சூரிய ஒளி டிரையரில் உலர்த்துவது. உலர்த்தும் வாழைப்பழம் அப்படியே பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வாழைப்பழப் பொடி, பிஸ்கட், சாக்லேட், வாழைக்காய் மிட்டாய் ஆகிய பொருள்களைத் தயார் செய்து வருகிறோம்.

இந்தத் தொழிலை ஆரம்பித்தபின், சந்தை வாய்ப்பை அமைத்துக்கொள்வதில் சறுக்கலைச் சந்தித்தோம். பழங்கள் கொள்முதல் செய்த விலையையும், விற்பனை செய்த விலையையும் ஒப்பிட்டால் நஷ்டம் வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆனால், அதைக் கண்டு நாங்கள் துவண்டு போய்விடவில்லை. நாங்கள் தயாரிக்கும் பொருள்களைப் பெரும்பாலான கண்காட்சிகளில் ஸ்டால் போட்டு, பலருக்கும் அறிமுகம் செய்தோம். நாங்கள் தயார் செய்த பொருள்களை இலவசமாகத் தந்த காலமும் உண்டு. இப்படித்தான் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

அமேசானில் திருச்சி வாழை!

நாங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு மவுசு உருவாவதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பின் படிப்படியாகப் பெரிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என எங்களின் சந்தையை விரிவுபடுத்தினோம். அந்த விற்பனை விரிவாக்கம் இப்போது இணையத்தில் விற்கிற வரை போய் நிற்கிறது. எங்கள் நிறுவனத் தயாரிப்புகளை விற்றுத்தர அமேசான் நிறுவனம் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையாக எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னபின்புதான் எங்கள் பொருள்களை அமேசானில் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டனர். அதனால் இப்போது அமேசான் மூலமாக எங்கள் பொருட்கள் அமெரிக்கா வரை படுஜோராக விற்பனையாகிறது" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார், சுப்ரமணியம்.

இவர்கள் மட்டுமல்ல... இவர்களோடு இது நிற்கப்போவதும் இல்லை. இவர்களைப் போல பல விவசாயிகள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்து தொழில்முனைவோராக மாறி இருக்கிறார்கள். மாற்றி யோசித்தால் மகத்தான லாபம் நிச்சயம் என்பதற்கு இவர்கள்தான் உதாரணம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm