Saturday, 28 October 2017

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் :

1. மடி வீக்க நோய் (Mastitis)
2. வயிறு உப்புசம் (Bloat)
3. கழிச்சல்
4. கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease)
5. கோமார் கால் புண் (Foot lesions)
6. விட(ஷ)க்கடி

மடி வீக்க நோய் (Mastitis) :

* கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்),
மஞ்சள் பொடி-50 கிராம்,
சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம் (Bloat) :

கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் :

வெற்றிலை-10 எண்ணிக்கை,
பிரண்டை-10 கொழுந்து,
வெங்காயம் -15 பல்,
இஞ்சி -100 கிராம்,
பூண்டு -15 பல்,
மிளகு-10 எண்ணிக்கை,
சின்ன சீரகம்-25 கிராம்,
மஞ்சள்-10 கிராம்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல் :

நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும்.

இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு :

சின்ன சீரகம் 10 கிராம்,
கசகசா 10 கிராம்,
வெந்தயம் 10 கிராம்,
மிளகு 5 எண்ணிக்கை,
மஞ்சள் 5 கிராம்,
பெருங்காயம் 5 கிராம்

ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease) :

கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது),
சீரகம் -50 கிராம்,
வெந்தயம் -30 கிராம்,
மஞ்சள் பொடி -10 கிராம்,
கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)

சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions) :

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

குப்பைமேனி -100 கிராம்,
பூண்டு-10 பல்,
மஞ்சள்-100 கிராம்,
இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

விட(ஷ)க்கடி :

விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

உப்பு -15 கிராம்,
தும்பை இலை -15 எண்ணிக்கை,
சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை,
மிளகு-10 எண்ணிக்கை,
சீரகம் -15 கிராம்,
வெங்காயம்-10 பல்,
வெற்றிலை -5 எண்ணிக்கை,
வாழைப்பட்டை சாறு-50 மி.லி.

சிகிச்சை முறை :

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Sunday, 22 October 2017


மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி?


கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இதனாலே என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? உண்ணி இருந்தால் நாங்கள் கையில் பிடித்து நெருப்பில் போட்டுவிடுவோம் என்று சொல்கிறீர்கள். இங்க பாருங்க! 

இந்த உண்ணிங்க ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும். மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும். பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும். எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும். நீங்கள் சொன்ன மாதிரி உண்ணிகளை கையில் பிடித்து நெருப்பில் போடுவது, மாடு மேல் மண்ணெண்ணெய் தடவுவது போன்று செய்யாமல் பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும். குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.

மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும். ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும். ஒரு உண்ணி சுமார் 18,000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18,000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும். எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும்.

கால்நடைகளில் உண்ணி தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் காணொளியாக :https://youtu.be/TUMENtq2vxU

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday, 16 October 2017

குறைந்த பராமரிப்பில் அதிக வருமானம்... ஒப்பில்லாத ஓங்கோல் மாடுகள்!


பசுக்களானாலும் சரி, காளை களானாலும் சரி... நாட்டு மாடுகள் என்றாலே கம்பீரம்தான். அந்த வரிசையில் மிகவும் கம்பீரமானவை, ஆந்திராவைச் சேர்ந்த ஓங்கோல் ரக மாடுகள். தென் மாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் நந்தி சிலைகள், ஓங்கோல் காளைகளின் வடிவத்தில்தான் செதுக்கப்பட்டிருக்கும். கவர்ச்சி, மிடுக்கான தோற்றம்... என அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், உழைப்பதற்கும் சளைத்தவை இல்லை இந்த ரக மாடுகள். மற்ற நாட்டு மாடுகளை விட சற்று அதிகமாகவே பால் கொடுக்கும் திறனும் கொண்டவை இவை. இவற்றின் பால், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்திருப்பதால், இந்த ரக மாடுகளுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஓங்கோல் இன மாடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார், சித்தூர் மாவட்டம், திருப்பதி பகுதியைச் சேர்ந்த சுனில் கிருஷ்ணா. பொங்கல் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்தோம்.

திருப்பதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடலூர் என்னும் கிராமத்தில் இருக்கிறது, சுனில் கிருஷ்ணாவின் பண்ணை. சுற்றுச்சுவர்களில் மின்னும் கால்நடைகளின் ஓவியங்களே அவருக்கு கால்நடைகள் மேல் உள்ள பற்றை பறைசாற்றுகிறது. நாம் பண்ணைக்குள் நுழையும்போது, மேய்ச்சலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தன, மாடுகள். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார், சுனில் கிருஷ்ணா.

“என்னுடைய அம்மா குடும்பம் பரம்பரை விவசாயக் குடும்பம். அதனால்தான் எனக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது. அப்பா கட்டட கான்ட்ராக்டர். என்னுடைய வற்புறுத்தலால், 10 ஆண்டுகளுக்கு முன்னர், 20 ஏக்கர் நிலத்தை வாங்கினார், அப்பா. நான், பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு கோழிப்பண்ணை தொடர்பான டிப்ளமோ படிப்பு படித்தேன். ஆனால், கோழிப்பண்ணை வைக்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, மாட்டுப்பண்ணை வைக்க அனுமதி கொடுத்தார்கள்.

கைவிட்ட கலப்பினம்! கைகொடுத்த ஓங்கோல்!

2009-ம் ஆண்டு, முன் அனுபவம் எதுவும் இல்லாமலேயே ஹெச்.எஃப், ஜெர்சி போன்ற கலப்பினங்களில் 10 மாடுகளை வாங்கி பண்ணையைத் தொடங்கினேன். 10 மாடுகளில் தொடங்கிய பண்ணை, படிப்படியாக 70 மாடுகளாக ஆயிற்று. தனியார் பண்ணைகளுக்குத்தான் பாலை விற்பனை செய்து வந்தேன். மாடுகளுக்கு அடிக்கடி வாய்ப்புண், மடிவீக்க நோய், சினை பிடிக்காமை... என்று பல பிரச்னைகள் வந்தன. ஒரு கால்நடை மருத்துவரை ஆலோசகராக அமர்த்தி, மருத்துவம் பார்த்தும் பலனில்லை. தினந்தோறும் தீவனத்துக்கு பெருந்தொகை செலவாகிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ‘பண்ணையை மூடி விடலாம்’ என்ற முடிவில், மாடுகளை விற்க ஆரம்பித்தேன்.

அப்போதுதான், என்னிடம் மாடுகள் வாங்க வந்த ஒருவர், இரண்டு கலப்பின மாடுகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக கலப்பில்லாத தூய ஓங்கோல் ரக மாடு ஒன்றைக் கொடுத்தார். அதை பண்ணையில் சில மாதங்கள் வளர்த்தேன். அதற்கு பெரிய பராமரிப்பு தேவைப்படவில்லை. குறிப்பாக, நோய்த் தாக்குதல் எதுவும் இல்லாமல் இருந்தது. மேய்ச்சலுடன் தவிடு கலந்த பிண்ணாக்கு தண்ணி கொடுத்ததிலேயே மாட்டின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு வயதே நிரம்பிய ஓங்கோல் ரக கிடேரி கன்றுகளே 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதனால், படிப்படியாக ஓங்கோல் ரக மாடுகளை மட்டும் வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன்” என்ற சுனில் கிருஷ்ணா தொடர்ந்தார்.

மாடுகள் மூலம் இயற்கை விவசாயம்!

“அந்த சமயத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டு நாட்டு மாடுகளைப் பராமரித்து வரும் மதனப்பள்ளியைச் சேர்ந்த எம்.சி.வி. பிரசாத் எனக்கு அறிமுகமாக... அவர் மூலமாக இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்து கொண்டேன். அடுத்து சுபாஷ் பாலேக்கர் நடத்திய ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையில் நெல், மா, வாழை, நிலக்கடலை, தீவனப் புல் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறேன்.

டிராக்டரை ஓரம் கட்டிய ஓங்கோல்!

ஆந்திர கடலோரப் பகுதியில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் ‘ஓங்கோல்’ என்ற ஊர் உள்ளது. இப்பகுதியில் ஓங்கோல் மாடுகளைத்தான் உழவுக்குப் பயன்படுத்துவார்கள். இம்மாடுகள் நீண்ட நேரம் உழைக்கக்கூடியவை. ஒரு கலப்பையிலேயே 4 கொழுக்களைப் பொருத்தி இம்மாடுகளால் இழுக்க முடியும். அவ்வளவு பலம் வாய்ந்தவை இவை. அதனால்தான் ஓங்கோல் மாடுகளை உழவுக்குப் பழக்கப்படுத்தி வருகிறேன். இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு, டிராக்டரை விற்பனை செய்து விட்டேன். தற்போது நாட்டு மாடுகள் மூலமாகத்தான் உழவு செய்து வருகிறேன். மாடுகளின் சாணம், சிறுநீரை சேமித்து ஜீவாமிர்தம், நீம் அஸ்திரா ஆகியவற்றை தயார் செய்து பயன்படுத்தி வருகிறேன். அதனால் பண்ணையில் ரசாயன உரங்களுக்கான செலவு மிச்சமாகி விட்டது.

மேய்ச்சல்தான் பிரதானம்!

தற்போது 12 ஓங்கோல் மாடுகள் உள்ளன. அவற்றோடு, கேரள மாநில இனமான வெச்சூர் ரகத்தில் 20 மாடுகளையும், 2 கிர் மாடுகளையும், 2 நாட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறேன். மொத்தம் 36 நாட்டு மாடுகள் உள்ளன. அனைத்துக்கும் மேய்ச்சல்தான் பிரதானம். அது போக, சோளத்தட்டை, நேப்பியர் புல் வகைகளையும்; தவிடு, பிண்ணாக்கு கலந்த தண்ணீரையும் தீவனமாகக் கொடுத்து வருகிறேன்” என்ற சுனில் கிருஷ்ணா நாட்டு மாடுகள் தரும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“பராமரிப்பைப் பொறுத்து... ஒரு ஓங்கோல் மாடு ஒரு வேளைக்கு இரண்டு லிட்டர் முதல் மூன்றரை லிட்டர் வரை பால் கொடுக்கும். நாட்டு மாட்டுப் பாலுக்கு தனியாக சந்தை வாய்ப்பு எதுவும் கிடையாது. அதனால், 17 பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கே மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நன்றாக வளர்ந்த சதை திரட்சியான கலப்பில்லாத ஓங்கோல் மாடு 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. ஆனால், எல்லா மாடுகளும் அந்த உடற்கட்டோடு வளர்வதில்லை. பத்து மாடுகளில் இரண்டு மாடுகள் இப்படி வளரும். கொஞ்சம் வளர்ச்சி குன்றிய மாடுகள் விலை குறைவாக விற்பனையாகும். ஆனால், ஒரு மாட்டுக்கு எப்படியும் 30 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைத்து விடும். கடந்த மூன்றாண்டுகளில் 20 ஓங்கோல் மாடுகளை விற்பனை செய்திருக்கிறேன்.
வெச்சூர் ரக மாடுகள், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. இதுவரை 15 வெச்சூர் மாடுகளை விற்பனை செய்திருக்கிறேன். மூன்று ஆண்டுகளில் மாடுகள் விற்பனை மூலம் கிட்டத்தட்ட 17 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளேன். இதில் பராமரிப்பு, தீவனம், சம்பளம் என 6 லட்ச ரூபாய் வரை செலவாகியிருக்கும்” என்ற சுனில் கிருஷ்ணா நிறைவாக,

“கலப்பின மாடுகளை வளர்த்து கையைச் சுட்டுக் கொண்டு... இனிமேல் மாட்டுப்பண்ணையே வேண்டாம் என்று முடிவுக்கு வந்த என்னை நாட்டு மாடுகள்தான் காப்பாற்றியுள்ளன. குறிப்பாக ஓங்கோல் மாடுகளுக்குத்தான் அந்தப் பெருமை சேரும்” என்றவாறு மாடுகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார், சுனில் கிருஷ்ணா.

தொடர்புக்கு,
சுனில் கிருஷ்ணா,
செல்போன்: 99599-59977

அரசுதான் அக்கறை காட்ட வேண்டும்...

ஓங்கோல் மாடுகள் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், திருப்பதியில் கோசாலை நடத்தி வரும் விஜயலட்சுமி.

“பிரேசிலில் ஓங்கோல் இனத்தில் கலப்பினம் செய்யப்பட்ட மாடுகள் 25 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன. கிர் இன கலப்பின மாடுகள் 30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன. நம்மிடம் இருந்து, கொண்டு சென்ற மாடுகளை, மற்ற நாடுகள் பயன்படுத்தி நன்றாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால், நம்முடைய அரசுகள் நாட்டு மாடுகள் விஷயத்தில், அக்கறை இல்லாமல் இருந்து வருகின்றன. அரசு சார்பாக அனைத்து மாநிலங்களிலும் கால்நடை ஆராய்ச்சிப் பண்ணைகளில் நாட்டு மாடுகளின் செயற்கைக் கருவூட்டல் ஊசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த செயற்கைக் கருவூட்டல் ஊசிகளை வைத்துக்கொண்டு நாட்டு மாடுகளைப் பரவலாக்காமல்... கலப்பின மாடுகளை பரவலாக்குவதில்தான் கால்நடைப் பராமரிப்புத்துறை ஆர்வம் காட்டி வருகிறது. இப்படியிருந்தால், நாட்டு மாடுகள் பரவலாகவே முடியாது. ஒருகட்டத்தில் விந்தணு சேகரிக்கக்கூட மாடுகள் இருக்காது.

உத்தரப்பிரதேசத்தில் ‘சாஹிவால் மாடுகள் மானியத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மானிய விலையில் விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வழங்கப்படுகின்றன. தற்போது குஜராத் மாநிலத்திலும் காங்கிரஜ், கிர் மாடுகளுக்கு மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆந்திரா, தமிழ்நாடு மாநில அரசுகளும் நாட்டு மாடுகள், விவசாயிகளுக்குச் சேரும்படியான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், நாட்டு மாடுகள்தான் விவசாயத்துக்கான அடிப்படை. அவை விவசாயிகளை எந்தவிதத்திலும் நஷ்டப்படுத்தி விடாது” என்றார்.

வாட்ஸ்அப் மூலம் விற்பனை!

“வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்கள்தான் எனக்கு முக்கிய விற்பனைத்தளம். குழுவின் மூலமாக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடித்து விற்பனை செய்து வருகிறேன்.

ஓங்கோல் மாடுகள் வளர்ப்பை கௌரவமாக நினைப்பவர்களும், மாடுகளின் மேல் பிரியம் உள்ளவர்களும் அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, நாட்டு மாட்டுப் பால் தேவையுள்ளவர்களும் வாங்குகிறார்கள். ஆனால், திருப்பதி போன்ற சிறு நகரங்களில் நாட்டு மாடுகளின் பால் தேவையை அறிந்தவர்கள் குறைவுதான். அதனால் பெரிய அளவில் விற்பனை வாய்ப்பில்லை” என்கிறார், சுனில்கிருஷ்ணா.

காளைகளுக்கு கல் இழுக்கும் போட்டி!

தமிழ்நாட்டில் பொங்கல் நேரத்தில் காளைகளை வைத்து ‘ஜல்லிக்கட்டு’, ‘மஞ்சுவிரட்டு’, ‘எருது விடும் திருவிழா’ நடத்தப்படுகிறது. அதுபோல் ஆந்திராவின் பிரகாசம், குண்டூர், கர்னூல், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓங்கோல் காளைகளை வைத்து கல் இழுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. சுமார் 2 டன் வரை எடையுள்ள கல்லை ஊர் மக்கள் முன்னிலையில் காளைகள் பூட்டி இழுக்க வைக்கிறார்கள். காளைகள் இழுத்துச் செல்லும் தூரத்தைப்பொறுத்து பரிசுகள் வழங்கப்படுகிறது. இவ்விழா, ஆந்திராவில் சங்கராந்தி (பொங்கல்) நாளில் நடத்தப்படுகிறது.

4 ஆயிரம் ஆண்டு பழமையான ஓங்கோல் மாடுகள்!

பெங்களூருவிலுள்ள தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானியாகப் பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ஓபி ரெட்டி, ஓங்கோல் மாடுகள் பற்றிச் சொன்ன விஷயங்கள் இங்கே...

“ஆந்திராவின் பெருமை இந்த ஓங்கோல் மாடுகள். சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளாக இந்த மாடுகள், தமிழக எல்லை மற்றும் ஆந்திர மண்ணில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 1875-ம் ஆண்டில் பிரேசில் நாடு, இந்த மாடுகளின் சிறப்புகள் தெரிந்து, கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து கொண்டு சென்றது. அதன் பிறகு அமெரிக்காவும் இந்த மாடுகளை இறக்குமதி செய்தது. 1961-62ம் ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓங்கோல் காளைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, தென் அமெரிக்க நாடுகளில் பெருமளவில் இனவிருத்தி செய்யப்பட்டன. அங்கு உழவு வேலைகளுக்கும், பால் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோன்று கிர் என்ற இந்திய மாட்டினமும் பால் தேவைக்காக பிரேசிலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை தென் அமெரிக்க நாடுகள் எந்தவித அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாகத்தான் நம் காளைகளைக் கொண்டு சென்று இனவிருத்தி செய்திருக்கின்றன.

ஓங்கோல் மாடுகளை செயற்கைக் கருவூட்டல் செய்வதற்கான உறைவிந்தணுக் குச்சிகள் குண்டூர் கால்நடைப் பண்ணையில் (லேண்ட் ஃபார்ம்) கிடைக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள கால்நடைப் பராமரிப்பு மையங்களிலும் இவை கிடைக்கும்.

பலமனேர் கால்நடைப் பண்ணையில் புங்கனூர் ரக மாடுகளின் செயற்கைக் கருவூட்டல் ஊசிகள் கிடைக்கும்” என்றார், ஓபி ரெட்டி.

ஒரிஜினல் ஓங்கோல் மாடுகளைக் கண்டறியும் விதம்!

விஜயவாடாவை அடுத்த மங்களகிரியைச் சேர்ந்த சாய்பாபு, “ஓங்கோல் மாடுகள் வெள்ளை, செம்பழுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். ஓங்கோல் மாட்டின் காதுகளின் பின்புறமும், கால், ஆசனவாய்ப்பகுதிகள் கறுப்பாக இருக்கும். திரட்சியான திமில், தாடையில் தொங்கும் தோல், மேல்நோக்கி இருக்கும் சிறிய கொம்பு ஆகியவை ஓங்கோல் மாடுகளின் அடையாளங்கள். பொதுவாக, இம் மாடுகளில் பாய்ச்சல் தன்மை குறைவாகத்தான் இருக்கும். சில காளைகள் மட்டுமே பாய்ச்சல் தன்மை கொண்டுள்ளன. பண்ணையிலோ, வீடுகளிலோ வளர்ப்பதற்கு ஏற்றவை, இந்த ஓங்கோல் மாடுகள்” என்கிறார்.

200 ஏக்கரில் கோசாலை!

திருப்பதி நகரின் தும்மலகன்டா பகுதியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோசாலை உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த கோசாலையில் பால் தேவைக்காக... ஓங்கோல், கிர், சாஹிவால் போன்ற நாட்டு மாடுகளோடு, கலப்பின மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஓங்கோல், புங்கனூர், உம்பளாச்சேரி, காங்கிரேஜ், ஹலிக்கர், தியோனி, சாஹிவால், ரகங்களில் காளைகளும் கோசாலையில் உள்ளன. இந்தக் கோசாலையை அனைவரும் பார்வையிட அனுமதிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் ஓங்கோல் மாடுகள்!

பிரேசில், இந்தியாவில் இருந்து இந்த ரக மாடுகளை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டில் வளர்த்து வருகிறது. பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் மட்டும் பல லட்சம் ஓங்கோல் மாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்திய அளவில் இந்த மாடுகள் தற்போது ஒரு லட்சம் எண்ணிக்கை அளவில்தான் உள்ளன. தற்போது தேசிய பல்லுயிரிச் சட்டம் அமலில் இருப்பதால், இந்தியாவில் இருந்து ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது 5 ஆயிரம் யூனிட் விந்தணுக்களுக்கான அனுமதி கோரி, சென்னை தேசிய பல்லுயிரி ஆணையத்திடம் பிரேசில் நாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். நமது பெருமையை வெளிநாட்டினர் உணர்ந்த அளவுக்குக் கூட நாம் உணரவில்லை என்பதுதான் வேதனை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠