Wednesday, 6 June 2018


கிளிக் காய்ச்சல் (அ) பூசன நோய் :


1. பரவும் முறை
2. பறவைகளில் நோய் அறிகுறிகள்
3. விலங்குகளில் நோய் அறிகுறிகள்
4. மனிதர்களில் நோய் அறிகுறிகள்
5. நோய்த் தடுப்பு முறைகள்
6. சிகிச்சை

கிளிக் காய்ச்சல் ஆங்கிலத்தில் கிளாமெய்டியோஸிஸ், இந்தநோய் பறவை இனங்களில் காணப்படும் மிக அறிய வகை நோய். இந்நோய் கிளாமெய்டோடியா சிட்டசி என்னும் நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இது கிளிகள், இனப்பறவைகளான கிளி, இந்தியப் பஞ்சவர்ணக் கிளி, நேசப்பறவைகள், ஆஸ்திரேலியா நாட்டுக் கிளி போன்றவற்றையும் வான்கோழி, புறா, வாத்து முதலிய பறவைகளையும் பாதிக்கிறது.

பரவும் முறை:

இந்நோயின் அரும்பு காலம் 5 முதல் 19 நாள்கள், ஒரு பறவையில் இருந்து மற்றொரு பறவைக்கு மாசடைந்த மலக்கழிவு மற்றும் இறகுகளில் உள்ள தூசியுடன் சுவாச உறுப்பு மூலமாகப் பரவுகிறது. பறவைகளுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பே நோய்த் தொற்று ஏற்பட முக்கியக் காரணம். இதன் அடிப்படையில் தான் கூட்ட நெரிசல், இனப்பெருக்கச் செயல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள பறவைகளில் இந்நோயின் காரணி அதிக அளவில் வெளியாகிறது. எவ்வித நோய் அறிகுறி இல்லாத பறவைகளும் கூட நோய்க் காரணியை வெளியேற்றி நோயினைப் பரப்புகிறது. வாத்துகளில் செங்குத்துப் பரவல் முறை மூலமாக முட்டைகளுக்கும் இந்நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

பறவைகளில் நோய் அறிகுறிகள் :

இந்நோய் சுவாச மற்றும் இரைப்பை அமைப்புகளில் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எலுமிச்சைப் பச்சை நிறத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு இந்நோயின் காரணி, கல்லீரலில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் உண்டாகும் நோய் வெளிப்பாடு அகும். வேறு சில பறவைகளில் பசியின்மை, உடல் இளைப்பு, மன அழுத்தம், வயிற்றுப்போக்கு, வெண்படக் கண்கள் அல்லது அலகில் இருந்து நீர் வெளியேற்றம், இறப்பு போன்றவை நேரிடும். ஆனால் வேறு நோய்களிலும் இதே அறிகுறிகள் தென்படும். நோய் எதிர்ப்புச் சத்தி குறைபாடு உள்ள பறவைகளில் தான் இந்நோய் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது.

பெரிய பறவைகளை விடக் குஞ்சுகளே இந்நோயின் தாக்கத்தினால் பாதிப்பு அடைகின்றன. இக்குஞ்சுகளே நோய் கடத்தியாகவும் திகழ்கின்றன.

கிளிக்காய்ச்சல் மனிதர்கள் மற்றும் வேறு சில விலங்குகளுக்கும் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிக முக்கியமான நோயாகக் கருதப்படுகிறது.

விலங்குகளில் நோய் அறிகுறிகள் :

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் இந்நோய்க் கிருமிகள் கருவீச்சு ஏற்படுத்தும் காரணியாக விளங்குகின்றன.

மனிதர்களில் நோய் அறிகுறிகள் :

காய்ச்சல் குளிர், தலைவலி, பசியின்மை, மூச்சுவிடச் சிரமம், இருமல், தலை வலி, கண் சவ்வு அழற்சி போன்றவை காணப்படும். மேலும் நுரையீரல் அழற்சி, இதய-நாள மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.

நோய் எதிர்ப்புச் சத்தி குறைந்து காணப்படும். மனிதர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நோய்த் தடுப்பு முறைகள் :

• புதிதாக வாங்கும் பறவைகள் நோய்ப் பாதிப்பு ஆய்வுக்கு உள்ளாக்கப் பட்டிருக்க வேண்டும்.

• மலக்கழிவுகளைச் சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்திச் சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைக்க வேண்டும்.

• பறவைகளுக்குச் சுகாதாரமான காற்றோட்டம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

• குழந்தைகள், வயதானவர்கள், கருவுற்ற பெண்கள் பறவைகளிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.

• பறவைகள் அயர்ச்சியில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

• மேலும் தீவிரவாதிகள் இக்கிருமியைக் கொண்டு உயிர் தீவிரவாதத்திற்கு உட்படுத்தி மனிதர்களைக் கொல்லுகின்றனர்.

சிகிச்சை :

• பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்துகளை உட்கொள்ளலாம்.

• மேலும் பறவைகளைக் கையாளும் தருணத்தில் கையுறை மற்றும் மூக்குக் கவசம் அணிய வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday, 5 June 2018

செழுமையான வாழ்விற்குச் செல்லப்பறவை வளர்ப்பு :

1. செல்லப்பறவை வளர்ப்பதன் நன்மைகள்
2. செல்லப்பறவைகளின் வகைகள்
(i) நேசப்பறவைகள்
(ii) பஞ்சவர்ணக் கிளி
(iii) காக்கடீல் கிளிகள்
(iv) பெருங்கொண்டைக் கிளி
(v) ஆப்பிரிக்கச் சாம்பல் வண்ணக் கிளி
(vi) ஃபின்ஞ்சல் பறவை
(vii) சன் காணூர்
(viii) புறாக்கள்
(ix) சண்டைச் சேவல்
3. எங்கு வாங்கலாம்?

நம்மில் பலர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, நேசப் பறவைகள் எனப் பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறோம். ஆனால் மேலைநாடுகளில் சிங்கம், புலி, ஆமை மற்றும் மலைப் பாம்புகளையும் செல்லமாக வளர்க்கின்றனர்.

தற்பொழுது தமிழகத்தில் நாய் மற்றும் பூனைக்கு இணையாகச் செல்லப்பறவைகள் வீட்டில் வளர்ப்பது பிரபலமடைந்து வருகின்றது. செல்லப் பறவைகள் வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ள தனிமையைத் தங்களது விளையாட்டுகளால் போக்கடித்துத் தங்களின் மேல் செலுத்தப்படும் அன்பை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்து வளர்ப்போர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறுகின்றன.

செல்லப்பறவை வளர்ப்பதன் நன்மைகள் :

செல்லப்பறவைகள் வளர்ப்பதால் மனதிற்கு மகிழ்ச்சி மட்டுமின்றி மனஅழுத்தம் குறிப்பிடத்தக்க அளிவல் குறைகிறது. செல்லப்பறவைகளுடன் நேரத்தைச் செலவிடும் போது நம் உடலில் அயர்ச்சியை உண்டாக்கும். ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து ஆரோக்கியம் மேம்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. செல்லப்ப பறவைகள் பற்றி மேற்கொண்ட ஓர் ஆய்வில், செல்லப்பறவைகள் வளர்க்காத வீட்டுக் குழந்தைகளை விட வளர்ப்புப் பறவைகள் இருக்கும் வீட்டுக் குழந்தைகள், குறைவாக விடுமுறை எடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர். காரணம், அவர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, உடல்நலப் பிரச்சனைகள் ஏதும் தாக்குவது இல்லை.

செல்லப்பறவைகளின் வகைகள் :

செல்லப்பறவைகளின் பலவகை உண்டு. தமிழகத்தில் வளர்க்கப்படும் அனைத்தும் வெளிநாட்டுச் செல்லப்பறவைகள்தான். உள்நாட்டுப் பச்சைக்கிளியோ, மைனாவோ வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதால் பெரும்பாலானோர் வெளிநாட்டுச் செல்லப்பறவைகளையே அதிகம் வளர்க்கின்றனர். லவ்பேர்ட்ஸ் எனப்படும் நேசப் பறவைகள், பஞ்சவர்ணக் கிளி, காக்கடீல் கிளி, பெருங்கொண்டைக் கிளி, ஆப்பிரிக்கச் சாம்பல் வண்ணக் கிளி, ஃபீன்சஸ் பறவை, சன் காணூர் கிளி ஆகியவை பொதுவாக நம் நாட்டில் வளர்க்கப்படும் வெளி நாட்டுச் செல்லப் பறவைகள் ஆகும். இது மட்டுமின்றி உள்நாட்டுச் செல்லப்பறவைகளாகச் சண்டைக்சேவல், மயில்புறா, சிராஸ் புறா, கிங் புறா ஆகியவை செல்லப்பறவைகளாக வளர்க்கப்படுகின்றன.

நேசப்பறவைகள் :

எப்பொழுதும் சுறுசுறுப்பாகக் காணப்படும். இப்பறவைகள் இரண்டு வகைகளாக உள்ளன. அவை ஆஸ்திரேலிய நேசப் பறவைகள் மற்றும் ஆப்பிரிக்க நேசப் பறவைகள். இவை அழகான நிறத்திற்காகவும், இவை இணைந்தே இருக்கும் பான்மைக்காகவும் செல்லப்பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. பத்து முதல் பதினாறு செ. மீட்டர் வரை வளரும், குட்டையான வாலைக் கொண்டவை. சிவப்பு வண்ண அலகினையும் கண்களைச் சுற்றி எடுப்பான வெள்ளை வளையத்தினையும் கொண்டுள்ளன. இவற்றின் ஆயள் காலம் 8 முதல் 10 வருடங்கள் வரை ஆகும்.

பஞ்சவர்ணக் கிளி :

பஞ்சவர்ணக் கிளிகளின் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்ககாவில் உள்ள மழைக்காடுகள் ஆகும். மெக்சிகோ முதல் தென் அமெரிக்காவரை உள்ள பகுதிகள்தான் இவற்றின் இயற்கையான வாழ்விடமாகக் கருதப்படுகின்றன. பஞ்சவர்ணக் கிளிகளில் நீலம் மற்றும் தங்க நிறப் பஞ்சவர்ணக் கிளி, இளஞ்சிவப்பு பஞ்சவர்ணக் கிளி, பச்சை இறக்கைப் பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகையான கிளிகள் காணப்படுகின்றன. முடிகள் இல்லாத பெரிய கறுப்புநிற அலகுகள், வெளிர் நிறம், வலது மற்றும் இடப்புறங்களில், வேறுபட்ட முகவண்ணங்கள் இவற்றின் அடிப்படையில் இவ்வகைக் கிளிகளை வேறுப்படுத்திக் காணலாம். கால்கள் ஒவ்வொன்றிலும் முன்பக்கம் பார்ப்பதாக இரண்டும், பின்பக்கம் பார்ப்பதாக இரண்டுமாக மொத்தம் நான்கு விரல்கள் அமையப் பெற்றிருக்கும். இவற்றின் ஆயட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள் ஆகும்.

காக்கடீல் கிளிகள் :

இவ்வகைக் கிளிகள் ஆஸ்ரேலிய நாட்டில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்குக் தலையில் சிறிய கொண்டை இருப்பதால், இவை சிறு கொண்டைக் கிளிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 16 முதல் 25 வருடங்கள் ஆகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பெருங்கொண்டைக் கிளி :

வெள்ளை நிறமுள்ள இவ்வகைப் பறவைகள் கருமை நிற வளைந்த அலகுகள் கொண்டவையாகும். இவை அழகு, அதிபுத்திசாலித்தனம் மற்றும் கணீர் சத்தம் கொண்டவையாகும். இவை 350 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கொண்டவை. பெருங்கொண்டைக் கிளிகளில் 44 வகைகள் உள்ளன. பொதுவாக வளர்க்கப்படும் வகைகள் கோபீன்ஸ், கந்தகநிறக் கொண்டைக் கிளி, மொளுக்கன் ஆகியவை ஆகும். இவற்றின் ஆயுட்காலம் 16 முதல் 25 வருடங்கள் ஆகும்.

ஆப்பிரிக்கச் சாம்பல் வண்ணக் கிளி :

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாம்பல் வண்ணக் கிளிகள் மனிதர்கள் பேசும்போது, ஒலியைத் துல்லியமாகக் கவனித்து மீண்டும் உச்சரிக்கக் கூடியவை. இவ்வகைக் கிளிகள் 120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் எடை 400 கிராம் ஆகும். இவை 30 – 35 செ. மீட்டர் நீளம் உள்ளவை. இவற்றின் ஆயள் காலம் 40 முதல் 50 வருடங்கள் வரை ஆகும்.

ஃபின்ஞ்சஸ் பறவை :

ஆஸ்திரேலிய ஃபின்ஞ்சஸ் பறவைகள் அளவில் சிட்டுக் குருவிகளை விடச் சிறியவை. உடல் முழுவதும் பால் போன்ற வெள்ளை நிறம் கொண்டவை. உடலில் கொஞ்சம் கருப்பு கலந்து கண்களுக்கு அருகில் பழுப்பு நிறம் இருக்குமானால் அது “பைடு”. கண்களுககுக் கீழ் கண்ணீர் சொட்டுப் போல் கருப்பு நிறத்தில் சிறிய கோடு இருந்தால் இது ‘கிரைடு’ கொஞ்சம் அழுக்கான வெள்ளைப் போல் காட்சியளித்தால் அது ஃபான்டு, காது அருகில் வரிகுதிரைப் போல் இருந்தால் அது “ஜிப்ரா” என உட்பிரிவுகள் உள்ளன. ஆண் பறவைகளின் மூக்கு கருஞ் சிவப்பு நிறத்திலும், பெண் பறவைகளில் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். இவற்றின் ஆயுட்காலம் 15 முதல் 20 வருடங்கள் ஆகும்.

சன் காணூர் :

தென் அமெரிக்கா நாட்டைச் சார்ந்த இவ்வகைப் பறவைகள் தங்க மற்றும் மஞ்சள் நிறக் கலவையில் காட்சியளிக்கும். இவற்றின் காதைச் சுற்றிச் சிவப்பு நிறம் காணப்படும். கருப்பு நிற அலகுகளைக் கொண்டவை. இவை 30 முதல் 40 வருடங்கள் வாழும்.

புறாக்கள் :

புறாக்களில் கிட்டத்தட்ட 300 வகையான இனங்கள் உள்ளன. உலகெங்கும் புறாக்கள் காணப்பட்டாலும் இவை அதிகமாக இந்தியா, மலேசியா, இந்தோனீசியா முதலிய தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை தானியவகைகளை மட்டும் உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். பறவைகளிலேயே புறா மட்டும் தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது. இவை 10 முதல் 15 வருடங்கள் வரை வாழக்கூடியவை.

சண்டைச் சேவல் :

கோழிவகைகளில் சண்டைச் சேவல் செல்லப்பறவையாக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்த சேவல்கள் 2 அடி உயரம் வரை வளரும். அதிகபட்சமாக இரண்டரை அடி உயரம் கூட வளரும் இயல்புடையன. கிளி மூக்குப் போன்ற அலகு உடையன. அதிக எடை கொண்டன. கிளி மூக்குச் சேவல், பெருஞ்சேவல், ஜாதி சேவல் குஞ்சு ஒன்று 600 ரூபாய்க்கும், ஒரு கிலோ எடை கொண்ட சண்டைச் சேவல் 6,000 ரூபாய்க்கும், 2 கிலோ முதல் 3 கிலோ எடை கொண்ட சண்டைச் சேவல் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

எங்கு வாங்கலாம்?

சென்னை மண்ணடிப் பகுதியில் உள்ள “மாஸ்கான் சாவடியில்” ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சென்னை பல்லாவரத்தில் உள்ள “வெள்ளிக்கிழமை வாரச் சந்தையிலும் எல்லா வகைச் செல்லப் பறவைகளையும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்குப் பறவைகளுக்குத் தேவையான கூண்டு, தீவனவகைகளும் மலிவாகக் கிடைப்பதால் பறவை வளர்ப்போர் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.

வளர்க்கப்படும் செல்லப்பறவைகள் நாம் காட்டும் அன்பைவிட, பலமடங்கு நன்றியுணர்வை நம்மீது வைத்திருக்கின்றன. உயிரினங்களுக்குள் ஏற்படும் இந்த ஒற்றுமையினால் அன்பு செலுத்தும் பன்பு அனைவரிடத்திலும் விரிவடைகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே நமக்குப் பிடித்த செல்லப் பறவைகளை வளர்த்து நமக்குத் தினமும் ஏற்படும் அயர்ச்சியிலிருந்து மிக எளிதாக விடுபடலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 3 June 2018

பூனைக்குட்டிகளில் காணப்படும் குணரீதியிலான பிரச்சனைகள் :

1. இரவு நேர குணாதிசயங்கள்
2. பிராண்டுதலும் மெல்லும் குணாதியங்களும்
3. விளையாடுதல் சம்மந்தமான குணாதிசயங்கள்
4. கழிவு நீக்கும் பெட்டியும் பூனைக்குட்டிகளின் குணாதிசயங்களும்

பூனைக்குட்டிகளில் பொதுவாகக் காணப்படும் குணரீதியிலான பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி இங்கு காண்போம்.

இரவு நேர குணாதிசயங்கள் :

இரவு நேரங்களில் பூனைக்குட்டிகள் வீட்டில் உள்ளவர்களின் தூக்கத்திற்கு இடையூறு செய்வது பொதுவாகக் காணப்படும் பிரச்சனையாகும். இதைத் தவிர்க்க பகல் நேரங்களில் நீங்கள் வீட்டில் இருக்கும்போது பூனைக்குட்டிகளுடன் விளையாடி அவை தூங்காமல் இருக்கச் செய்யவேண்டும். இதன் ஒரு பகுதியாகப் படுக்கையறைக் கதவுகளை அடைத்து அவைகளைத் தூங்கவிடாமல் தடுக்கலாம்.

இரவு நேரங்களில் பூனைக்குட்டிகள் வளர்பபோரின் தூக்கத்திற்குத் தொந்தரவு செய்தால் இடையில் எழுந்து அவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம். உணவு கொடுத்தால் அதே பழக்கமாக மாறி அந்த உணவிற்காகத் திரும்பத் திரும்பத் பூனைக்குட்டிகள் அவ்வாறு இடையூறு செய்ய நேரிடும்.

பிராண்டுதலும் மெல்லும் குணாதியங்களும் :

பூனைக்குட்டிகள் ஐந்து பவுண்டுகளுக்குக் குறைவாக எடை இருந்தாலும் அவற்றின் வலுவான முன்னங்கால்களில் உள்ள நகங்களாலும், மெல்லும் செயல்களினாலும் வீட்டுப் பொருள்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தும்.

பொருள்களைப் பிராண்டும் செயல்களினால் பூனைகளின் சதைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் வாசனையையும், கண்ணுக்குத் தெரியும் ஓர் அடையாளத்தையும் விட்டுச் செல்கிறது. மேலும் இச்செயல் நகங்களையும் வலுப்படுத்துகிறது. பூனைக்குட்டிகளின் விருப்பத்திற்கேற்றவாறு பிராண்டி விளையாடுவதற்கு வசதியாக உயரமான அல்லது படுக்கைவசமான, ஏதாவதொரு உறுதியான பொருளைக் கொண்டு செயற்கையான பிராண்டும் அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பூனைக்குட்டிகளின் நகங்களை வெட்டுவதாலும், மழுங்கடிக்கச் செய்வதாலும் (மாதத்திற்கு ஒரு முறை) அல்லது நகங்களை வெட்டி எடுப்பதாலும் பூனைகளின் நகக்கீறல்களால் மனிதர்களுக்கும் மற்றும் இதர விலங்குகளுக்கும் ஏற்படும் காயங்களைக் குறைக்கலாம். அடிக்கடி மெல்லும் பிரச்சனையைக் குறைக்கச் செயற்கையான மெல்லும் பொருள்களைப் பூனைக்குட்டிகளுக்கு விளையாடக் கொடுக்கலாம். தாவரங்களை மற்றும் மின்சாதனப் பொருள்களைப் பூனைக்குட்டிகள் நெருங்க விடாமல் தள்ளிவைக்க வேண்டும். பூனைக்குட்டிகளுக்கு விளையாடக் கொடுக்கும் மெல்லும் பொருள்களில் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் இருக்க கூடாது. எலும்பு மற்றும் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட மெல்லும் பொருள்களைப பயன்படுத்தலாம். மீன் குளத்தில் விளையாடுவது போன்ற பொம்மைகளைப் பூனைக்குட்டிகளுக்கு விளையாடக் கொடுக்கலாம்.

விளையாடுதல் சம்மந்தமான குணாதிசயங்கள் :

பூனைகள் மற்றும் பூனைக்குட்டிகள் விளையாடுவதற்காகத் திறந்தவெளியை விரும்புகின்றன. இந்தத் திறந்தவெளி கிடைக்கவில்லையென்றால், வளர்ப்போரிடம் விளையாடக்கூடும். பூனைக்குட்டிகள் அதிகமாக விளையாட நினைத்தால் அவை ஒரு கட்டத்தில் வளர்ப்பேரைக் காயப்படுத்தவும் செய்யும். மேலும் தன்னுடன் இருக்கும் மற்ற விலங்குகளையும் தாக்கலாம்.

பூனைக்குட்டிகளைப் பொம்மைகளுடன் விளையாடப் பழக்கலாம். வளர்ப்போர் மொம்மைகளுடன் அவைகளை விளையாட வைத்துத் திசைதிருப்ப வேண்டும். பூனைக்குட்டிகள் தேவையற்ற ஒலியை எழுப்பும் போதும் ஓடும் போதும், அதிவேகத்துடன் விளையாடும் போதும் அதற்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து அந்தச் செயல்களை ஊக்குவிக்கக்கூடாது. எப்போதும் பூனைகளை அவை செய்யும் தவறுகளுக்குத் தண்டனையாக நேரடியாகத் தாக்கக்கூடாது. ஏனெனில் இதுபோன்ற செயல்களின்போது பூனைகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நம்மைத் தாக்கலாம். இதற்குத் தீர்வாக நாம் வளர்க்கும் பூனைக்குட்டிக்கு இணையாக வயதுடைய மற்றும் செயலுடைய மற்றொரு பூனையை அதனுடன் விளையாட விடலாம்.

கழிவு நீக்கும் பெட்டியும் பூனைக்குட்டிகளின் குணாதிசயங்களும் :

நாய்களை விடப் பூனைகளை எளிதில் நமது விருப்பங்களுக்கேற்ப பழக்கப்படுத்தலாம். நிறையப் பூனைகள் தமது மலம் மற்றும் சிறுநீரை வெளியேற்றக் கழிவு நீக்கும் பெட்டியை நாடுகின்றன. ஆனால் இவை சுத்தமில்லாமல் மற்றும் எளிதில் அடையமுடியாததாக இருக்கும் போது பூனைகள் மாற்று இடங்களை நாடுகின்றன.

நிறையப் பூனைகள் நறுமணமற்ற மற்றும் மிருதுவான துகள்களாலான பரப்பின் மீதுள்ள கழிவுநீக்க அமைப்புகளை நாடுகின்றன. தினமும் கண்டிப்பாகக் கழிவு நீக்கப் பெட்டியைச் சோப்பு மற்றும் சுத்தமான நீரினால் கழுவித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேற்பகுதி மூடாத கழிவு நீக்கும் பெட்டி, மேற்கூரை மூடப்பட்ட கழிவு நீக்கும் பெட்டியைவிடச் சிறந்தது. ஏனெனில் மேற்பகுதி மூடாத அமைப்பு எந்தத் துர்நாற்றத்தையும் பெட்டியினுள் தங்கவைப்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பூனைகள் இருக்கும் வீடுகளில் பூனைகளின் எண்ணிக்கையைவிட ஒன்று அல்லது இரண்டு கழிவு நீக்கப்பெட்டி அதிகமாக இருக்கவேண்டும்.

குடும்ப உறுப்பினர்களோடு பூனைகளுக்கு இருக்கும் நெருக்கம் பூனைகள் கழிவு நிக்கப்பெட்டியை அடைவதைத் தடுக்கலாம். மேலும் கழிவுநீக்கப் பெட்டிகளைப் பூனைகள் அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். மேலும் அப்பெட்டி பூனையின் அளவுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். ஒரு சிறிய அளவு பூனைக்கு, உயரமான பக்கங்களைக் கொண்ட பெட்டியை வைக்கக்கூடாது. மேலும் பூனைக்குட்டிகள் வளரும் போது அப்பெட்டியைப் பூனைகளின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அவ்வப்போது மாற்றி வர வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday, 2 June 2018

செல்லப் பிராணிகளில் ஏற்படும் வலிப்பு நோய்ப் பற்றி ஓர் அலசல் :

1. மூளைக்குள் ஏற்படும் பாதிப்புகள்
2. வலிப்பு நோயின் அறிகுறிகள்
3. தொடர் வலிப்பு
4. நோய்க் காரணிகளைக் கண்டறிதல்
5. சிகிச்சை முறைகள்
6. வலிப்பு நோயின் பாதிப்புகள்
7. உரிமையாளர்கள் செய்ய வேண்டியவை
8. உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டியவை

வலிப்பு எனும் காக்கா வலிப்பானது மனிதனைப் போலவே செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளிலும் காணப்படுகிறது. வலிப்பு நோயானது நரம்பு மண்டலப் பாதிப்பினால் குறிப்பாகப் பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படுகிறது. நன்கு பராமரிக்கப்படும் ஒரு நாய் அல்லது பூனையில் சுமார் 24 மணிநேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேல் வலிப்பு ஏற்படும் பொழுது இதனைவலிப்பு நோய் எனக் கூறுவர். பொதுவாக நாய்களில் வலிப்பு நோயின் தாக்கம் மேலை நாடுகளை விட இந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வலிப்பு நோயானது நாய்களின் எந்த வயதினிலும் ஏற்படலாம். வலிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். மூளையில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு வகையாகவும், மூளைக்கு வெளியே ஏற்படும் பாதிப்புகள் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்படுகின்றன.

மூளைக்குள் ஏற்படும் பாதிப்புகள் :

நாய் போலியோ எனும் டிஸ்டம்பர் நோயானது நாய்களைத் தாக்கும் மிக மோசமான நோயாகும். இது நமது நாட்டில் பரவலாக நாய்களை பாதிக்கிறது. மூளையில் வைரஸ் தாக்கத்தின் வீரியத்தைப் பொறுத்து வலிப்பின் தாக்கம் இருக்கும். மேலும் பூனைகள் வயிறு வீக்கக்காய்ச்சல், இரத்தப் புற்று நோய் போன்ற வைரஸ்களால் பாதிக்கப்படும் பொழுது வலிப்பு நோய் உண்டாகிறது. இது தவிர நாய் மற்றும் பூனைகளில் இரத்தத்தில் உருண்டைப் புழுக்கள் தாக்கத்தினாலும் கிரிப்டோஸ்பேரிடியா, பிலாஸ்டோமைக்கோசிஸ், ஹிஸ்டோ பிலாஸ்மா போன்ற பூஞ்சைத் தாக்கத்தினாலும் வலிப்பு நோய் உண்டாகிறது. நாய் மற்றும் பூனைகளில் வைட்டமின் பி1 குறைபாட்டினாலும் வலிப்பு நோய் உண்டாகிறது. கன உலோகமான லெட் அதிகளவு உடம்பில் சேரும்பொழுது வலிப்பு நோய் உண்டாகிறது. இது தவிர மூளையில் உண்டாகும் நீர்க் கட்டிகள், கொழுப்பு அதிகளவில் படிவதாலும் மற்றும் புற்றுநோயினாலும் வலிப்பு வருகிறது.

மூளைக்கு வெளியே ஏற்படும் கீழ்க்கண்ட காரணகள் :

• சர்க்கரை நோய்

• இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவு

• சிறுநீரகப் பாதிப்பு

• கல்லீரல் பாதிப்பு

• இரத்தத்தில் உடலுக்குத் தேவையான உப்புகள் குறைதல்

• இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு

வலிப்பு நோயின் அறிகுறிகள் :

நாய்களில் வலிப்பு ஏற்படுவதற்கு முன் எத்தகைய மனமாற்றங்கள் உண்டாகின்றன என விஞ்ஞானிகளால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. வலிப்பு ஏற்படுவதற்கு முன் மனிதனில் ஏற்படுவது போன்ற அனைத்து மாற்றங்களும் நாய்களுக்கு உண்டாவதில்லை. எனினும் சில நாய்கள் பதற்றத்துடனும் சில நாய்கள் சோர்வுடனும் காணப்படலாம். வலிப்பு ஏற்படும்பொழுது நாய்களின் வாயிலிருந்து நுரை தள்ளும். சில நாய்கள் தங்களுடைய நாக்கைக் கடித்துக்கொள்ளும். தரையில் படுத்துக் கால்களைப் பரபரவென இழுக்கும். மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும். உடம்பு முழுவதும் விட்டு விட்டு இழுக்கும். இதன் பின்னர் சிறிது நேரம் நாய்கள் அமைதியாகப் படுத்து உறங்கும். பொதுவாக வலிப்பானது இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்காது. வலிப்பு ஏற்படும் பொழுது நாய்களில் கால் முறிவு, புண்கள் உண்டாதல் போன்றவை இருக்கும்.

வலிப்பு முடிந்தவுடன் நாய்கள் மிகுந்த சோர்வுடன் காணப்படும். சில நாய்களளில் பசியுடன் நீர் அருந்துதல், உணவு உண்ணுதல் போன்றவையும் காணப்படும். சில நாய்கள் சமயங்களில் எஜமானரைக் கூடக் கடிக்கலாம். சில நாய்களில் மனமாற்றம் உண்டாகும். அதாவது இவ்வகை நாய்கள் எக்காரணமுமின்றிக் குரைத்துக் கொண்டே இருக்கும். அணுகினால் இந்நாய்கள் அதிகக் கோபப்படும்.

தொடர் வலிப்பு :

பெரும்பாலும் நாய்களில் வலிப்பு முடிந்து சிறிது நேரம் அல்லது சிறிது காலம் கழித்தே அடுத்த வலிப்பு உண்டாகும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து வலிப்பு ஏற்படுவது நாய்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. சில நேரங்களில் வலிப்பானது 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்துச் சில சமயங்களில் 30 நிமிடங்கள் வரையிலும் காணப்படும். இவற்றைத் தொடர் வலிப்பு என்று கூறுவர். பெரும்பாலும் இந்நாய்கள் மரணத்தின் வாயிலைத் தொட்டுவிடுகின்றன. தொடர் வலிப்பினால் பாதிக்கப்படும் நாய்கள் பெரும்பாலும் சிறிது காலமே உயிர் வாழ்கின்றன.

நோய்க் காரணிகளைக் கண்டறிதல் :

முதலில் வலிப்பு நோய் உள்ள நாய்களுக்கு இரத்தத்தின் சர்க்கரை, உப்புகள், கொழுப்பு மற்றும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கால்நடை மருத்துவரின் பரிந்துரைப்படி பரிசோதனை செய்ய வேண்டும். மேலை நாடுகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் முறை மூலம் மூளையில் பிறவி ஊனம், மூளைக்கட்டிகள் ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது. இவ்வசதி நமது நாட்டில் கால்நடைத் துறையில் இன்னும் வளர்ச்சியடையவில்லை. எனினும் இரத்தப் பரிசோதனை செய்வது நோய்க் காரணிகளைக் கண்டறிவதில் உதவியாக இருக்கும்.

சிகிச்சை முறைகள் :

பொதுவாக மாதத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேல் வலிப்பு வரும் பட்சத்திலும், வலிப்பானது கொத்தாக வரும்பொழுதும் வலிப்பானது தொடர்ந்து 2 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலும் வரும்பொழுது கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சையளிக்க வேண்டும். வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகள் பட்டியலிடப்பட்ட வகையில் உள்ளதால் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பெற வேண்டும். வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை நாய்களின் ஆயுள் முழுவதும் கொடுக்க வேண்டும் என்பதை எஜமானர்களுக்குப்புரிய வைக்க வேண்டும். தொடர் வலிப்புள்ள நாய்க்கு அவசர காலச் சிகிச்சையளிக்க வேண்டும். அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மனிதனில் வலிப்பு நோயைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. நாய்களுக்கு இதன் பயன்பாடு குறித்த தெளிவான ஆராய்ச்சிகள் இல்லை. நாய்களுக்கு இளம் குட்டியிலிருந்தே நாய் போலியோ எனும் டிஸ்டம்பர் நோய்க்கான தடுப்பூசி போடுவது சிறந்தது.

வலிப்பு நோயின் பாதிப்புகள் :

வலிப்பு நோயானது நாய்களின் வாழ்நாளைச் சுமார் 3 ஆண்டுகள் வரை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வலிப்பு நோயானது நாய்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பது மட்டுமல்லாது அதனுடைய எஜமானர்களும் மனதளவில் பாதிப்படைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உரிமையாளர்கள் செய்ய வேண்டியவை :

* வலிப்பு 5 நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அனுகவும்.

* வலிப்பு ஏற்படும் கால அவகாசத்தைக் குறித்துக் கொள்ளுதல் அவசியம்.

* வலிப்பு ஏற்படுவதைப் படம் பிடித்துக் கால்நடை மருத்துவரிடம் காண்பிப்பதன் மூலம் சிகிச்சைக்கான வழிமுறையை மேம்படுத்தலாம்.

* வலிப்பு ஏற்படும் நேரங்களில் நாய்கள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளாதவாறு பாதுகாத்தல் அவசியம்.

* வெளிப்புறத் தூண்டல்களைத் தவிர்த்தல் அவசியம். எடுத்துக்காட்டாக: தொலைக்காட்சி மற்றும் விளக்குகளை (டுiபாவ) அணைத்தல் போன்றவை.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதிக்கப்பட்ட நாய்களை உடல் பரிசோதனைக்குக் கொண்டு வருதல் அவசியம்.

உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டியவை :

* நாய்களுக்குத் தினவரி தவறாமல் வலிப்பிற்காகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்தினைக் கொடுத்தல் அவசியம்.

* கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தின் அளவை அதிகரிக்கவோ குறைக்கவோ புது மருந்துகளைக் கொடுக்கவோ அல்லது மருந்துகளை நிறுத்தவோ கூடாது.

* குறிப்பிட்ட இடைவெளியில் வலிப்பு ஏற்படும்போது நாயினை அலைகழித்தலைத் தவிர்க்கலாம். அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.

* வலிப்பு ஏற்படும்போது நம் கையினை நாயின் வாய்க்கருகில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நாய் கடிப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm