Tuesday 26 September 2017


அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!



தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் காய்கறிகளுக்கு முக்கிய இடமுண்டு. அவற்றிலும் அன்றாடம் சமையலில் பயன்படுத்தக்கூடிய தக்காளி, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி இயற்கை முறையில் தக்காளிச் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கோயம்புத்தூர் அருகிலுள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சம்பத்குமார். இவர் சுழற்சி முறையில் தக்காளிச் சாகுபடியை மேற்கொண்டு வருவதால், தக்காளியில் தொடர்ந்து வருமானம் எடுத்து வருகிறார்.

படித்தது உளவியல்... செய்வது உழவியல் :

வயலில் தக்காளி பறிப்பில் ஈடுபட்டிருந்த சம்பத்குமாரைச் சந்தித்தோம். “எனக்குப் பூர்வீகமே இந்த ஊர்தான். சைக்காலஜி படிச்சுட்டு விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ மொத்தம் ஆறு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்றேன். அப்பா காலம் வரைக்கும் கொஞ்சம் தள்ளியிருக்குற ரெண்டு ஏக்கர் நிலத்துல மட்டும்தான் விவசாயம் செஞ்சோம். நான்தான் இயற்கை விவசாயத்துக்காக இங்க சும்மா இருந்த நாலு ஏக்கர் மானாவாரி பூமியைச் சீராக்கித் தயார் செஞ்சேன். அதுல போர்வெல் போட்டு வாழை, தக்காளினு இயற்கை முறையில் பயிர் பண்றேன். இந்த நிலத்துல முன்னாடி மானாவாரி விவசாயம்தான் செய்வோம். அதனால, கைப்பிடி ரசாயன உரத்தைக்கூட பயன்படுத்துனதில்லை. அதனாலதான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் இயற்கை விவசாயத்துக்கு வந்ததுக்குக் காரணம், பக்கத்துத் தோட்டத்துக் காரங்களான ராமசாமியும் அவர் மனைவி பூங்கோதையும்தான். அதுவும் ஒரு சவால் மூலமா என்னை இதுக்குள்ளாற கொண்டு வந்தாங்க” என்ற சம்பத்குமார், தக்காளிப் பழங்களைக் கூடையில் அடுக்கியபடியே இயற்கைக்கு மாறிய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

இயற்கைக்கு மாற்றிய சவால் :

“ஆரம்பத்துல ரெண்டு ஏக்கர் நிலத்துல பருத்தி, வெங்காயம், கத்திரி, வாழைனு ரசாயன முறையில்தான் விவசாயம் செஞ்சோம். நான் விவசாயத்துக்கு வந்த பிறகும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லினுதான் பயன்படுத்திட்டு இருந்தேன். ராமசாமி, பூங்கோதை ரெண்டு பேருமே தீவிர இயற்கை விவசாயிகள். எந்த விவசாயியைப் பார்த்தாலும் அவங்ககிட்ட ‘பசுமை விகடன்’ புத்தகத்தைக் கொடுத்து இயற்கை விவசாயத்தோட மகிமையை எடுத்துச் சொல்லி, இயற்கைக்கு மாறச் சொல்வாங்க. என்கிட்டயும் பல தடவை, ‘இயற்கை விவசாயத்துக்கு வந்துடு’னு சொல்லிருக்காங்க.

ஆனா, நான் அவங்க பேச்சைக் காதுல வாங்கிக்கவே இல்லை. கடைக்குப் போய் உரத்தை வாங்கினோமா, வயல்ல போட்டோமானு விவசாயத்தைச் செய்யாம... சாணியையும் மூத்திரத்தையும் கலந்து இடுபொருள் தயாரிக்கிறதெல்லாம் வெட்டி வேலைனு எனக்குத் தோணுச்சு. அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுனு விட்டுட்டேன். ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் என்னை மாத்துறதுக்குக் கடுமையா முயற்சி செஞ்சாங்க.

எங்க பகுதியில பொதுவா வைகாசிப் பட்டத்துல எல்லோரும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வோம். சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு வைகாசிப்பட்டத்துல சின்ன வெங்காயம் விதைக்கலாம்னு முடிவு பண்ணினேன். ராமசாமியும் அதே முடிவுல இருந்தார். நிலத்தைத் தயார் செஞ்சுட்டு இருந்தப்போ, வழக்கம்போல ராமசாமி எங்கிட்ட இயற்கை பத்திப் பேச ஆரம்பிச்சார். நான் ரசாயன உரம்தான் அதிக விளைச்சலைக் கொடுக்கும்னு வாதம் பண்ணிட்டு இருந்தேன். அப்படியே வாக்குவாதம் முத்திடுச்சு. ஒரு கட்டத்துல நான், ‘ரெண்டு பேரும் ஒரு ஏக்கர் நிலத்துல சின்ன வெங்காயம் நடவு செய்வோம். நான் ரசாயன முறைப்படி சாகுபடி பண்றேன். நீங்க இயற்கையில சாகுபடி செய்யுங்க. யாருக்கு அதிக விளைச்சல் கிடைக்குதுனு பார்ப்போம். உங்களுக்குக் கூடுதல் மகசூல் கிடைச்சா, நான் இயற்கைக்கு மாறிடுறேன். எனக்குக் கூடுதல் மகசூல் கிடைச்சா, நீங்க இனிமே ரசாயனம்தான் பயன்படுத்தனும்’னு அவர்கிட்ட சவால்விட்டேன். அவர் ஒரு விநாடிகூட யோசிக்காம சவாலை ஏத்துக்கிட்டார்.

பேசுனபடி ரெண்டு பேரும் சின்ன வெங்காயத்தை நடவு செஞ்சோம். நான் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்துனேன். ராமசாமி ஆளுங்களைவிட்டுக் களையெடுத்தார். இயற்கை இடுபொருள்கள், பூச்சிவிரட்டினு பயன்படுத்துனார். அவர் களை எடுக்குறதுக்கும் அறுவடைக்கும் மட்டும்தான் செலவு செஞ்சார். இடுபொருள்களைத் தோட்டத்துல கிடைச்ச பொருள்களை வெச்சே தயார் செஞ்சுக்கிட்டார். ஆனா, நான் எல்லாத்துக்கும் செலவு செஞ்சேன்.
அறுபது நாள்ல அறுவடை நடந்துச்சு. ரெண்டுபேர் தோட்டத்து வெங்காயத்தையும் பக்கம் பக்கமா கொட்டி வெச்சோம். ராமசாமியோட வெங்காயம் தளதளனு ஒரே அளவுல சிவப்பா, நல்ல ஊட்டமா இருந்துச்சு. ஆனா, என்னோட வெங்காயம் கொஞ்சம் கலர் கம்மியா இருந்துச்சு. சீரான அளவுல இல்லை. அதில்லாம எனக்கு 4 டன் மகசூல்தான் கிடைச்சது. ராமசாமி 7 டன் மகசூல் எடுத்தார். அன்னைக்கு மார்க்கெட் விலைக்குத்தான் என் வெங்காயம் விலை போச்சு. ஆனா, அவர் வெங்காயம் மார்க்கெட் விலையைவிட கிலோவுக்கு 7 ரூபாய் கூடுதலா வெச்சு வியாபாரம் செஞ்சார்” என்ற சம்பத்குமார் தொடர்ந்தார்.

பயிற்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம் :

“அப்புறம்தான் எனக்கு இயற்கை விவசாயத்தோட அருமை புரிஞ்சது. உற்பத்தி செலவைக் குறைச்சு அதிக மகசூல், அதிக வருமானம் எடுக்கணும்னா இயற்கை விவசாயம்தான் செய்யணும் முடிவு செஞ்சு ராமசாமிகிட்ட என் தோல்வியை ஒத்துக்கிட்டு, ‘இயற்கை விவசாயத்துக்கு மாறிடுறேன்’னு சொன்னேன். அவர் இயற்கை விவசாயம் பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். அதோட இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களையும் கொடுத்தார். அதுல பசுமை விகடனும் இருந்துச்சு. அவர்கிட்ட இருந்து பழைய பசுமை விகடன் புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படிச்சேன். அடுத்ததா பக்கத்துல நடக்குற இயற்கை விவசாயப் பயிற்சிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள் தயாரிக்கிறது பத்தித் தெரிஞ்சுக்கிட்டதும், மொத வேலையா ஒரு நாட்டுப் பசுவை வாங்கிட்டு வந்தேன். இயற்கை இடுபொருள்கள், மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கக் கத்துக்கிட்டேன்.

மண்ணை வளப்படுத்திய பாக்கு மட்டைத்தூள்

இந்த நாலு ஏக்கர் நிலத்துக்குப் பக்கத்துலேயே குடியிருப்புகள் வந்துட்டதால, மனை பிரிச்சுப் போடுறதுக்கு நல்ல விலைக்குக் கேட்டு வந்தாங்க. விற்க மனசில்ல முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். ரசாயனம் படாத நிலங்கிறதால, இதுலேயே இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். வீட்டுக்கும் களத்துக்கும்னு அரை ஏக்கரை ஒதுக்கிட்டு மீதி நிலத்தை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். நல்லா உழுதுட்டு, பக்கத்துல இருக்கிற பாக்கு மட்டைத் தொழிற்சாலையில் கிடைச்ச பாக்குமட்டைத்தூளை அள்ளிக் கொண்டுவந்து நிலம் முழுக்கக் கொட்டிப் பரப்பினேன். அடுத்து வண்டல் மண்ணைக் கொண்டுவந்து பரப்பி மூணு மாசம் காயவிட்டேன். கொஞ்ச நாள்லயே இதெல்லாம் நல்லா மட்கி, நிலம் முழுக்கக் கறையான்கள் பெருகி மண் விபூதி மாதிரி ஆகிடுச்சு. அதுல ரெண்டு ஏக்கர் நிலத்துல வாழையும் ஒன்றரை ஏக்கர் நிலத்துல தக்காளியும் போடலாம்னு முடிவு பண்ணி முழுக்கச் சொட்டு நீர் அமைச்சேன்.

சுழற்சி முறையில் தக்காளிச் சாகுபடி :

தக்காளி குறுகியகாலப் பயிர்ங்கிறதால அரை அரை ஏக்கராப் பிரிச்சுச் சுழற்சி முறையில சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். இயற்கை முறையில் தக்காளி நல்லா விளையுது. இப்போ நாலாவது ‘பறிப்பு ‘ அறுவடையாகிட்டு இருக்கு. எப்பவுமே தக்காளி விதைச்சதும் ஊடுபயிரா சின்ன வெங்காயம் விதைச்சு விட்டுடுவேன். தக்காளிக்குக் கொடுக்குற ஊட்டத்தை வெச்சே வெங்காயமும் நல்ல விளைஞ்சு வந்துடும். அதுல ஒரு வருமானம் கிடைச்சுடும்.

பூச்சித்தாக்குதல் இல்லை :

ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா ரெண்டையுமே பதினஞ்சு நாளுக்கு ஒருமுறை சொட்டு நீர் மூலமா தக்காளிக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இயற்கை விவசாயத்துல தக்காளி ரொம்ப அருமையா வருது. என் வீட்டைச் சுத்தி குடியிருப்புகள் இருக்குறதால குப்பைகள் நிலத்துக்கு வந்துடும். அதனால, நிலத்தைச் சுத்தி வேலி அடைச்சு ‘கிரீன் நெட்’ போட்டு வெச்சிருக்கேன். ஒரு தூசு தும்புகூட உள்ள வராது. பக்கத்துல விவசாயம் இல்லங்கிறதால, இதுவரை மூணு பறிப்பு தக்காளிக்கும் பூச்சிகள் வரலை. இருந்தாலும், இப்போ அறுவடையில் இருக்குற தக்காளிக்கு அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் ரெண்டையும் தயாரிச்சுத் தெளிச்சிருக்கேன். இயற்கைக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு. நேந்திரன் வாழையையும் இயற்கை முறையிலதான் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்ற சம்பத்குமார் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கோடையில் மகசூல் குறைவு :

“போன முறை சித்திரை மாசம் தக்காளி விதைச்சேன். நல்ல வெயில் காலங்கிறதால மகசூல் கொஞ்சம் குறைவுதான். வழக்கமா அரை ஏக்கர் நிலத்துல 10 டன் அளவுக்குமேல தக்காளி கிடைக்கும். ஆனா, போன முறை ஆறு டன்னுக்குக் கொஞ்சம் கூடுதலாத்தான் மகசூல் கிடைச்சது. நடவு செஞ்ச அம்பதாவது நாளுக்குமேல அறுவடையாகும். அதுல இருந்து மூணு மாசம் வரை தக்காளி பறிக்கலாம். ஆனா, இந்த முறை அதிக வெயில்ங்கிறதால அறுபத்தஞ்சாம் நாளுக்குமேலதான் பறிப்புக்கே வந்துச்சு. அதேமாதிரி ரெண்டு மாசத்துலயே காய்ப்பும் முடிஞ்சுடுச்சு.

மொத்தம் 6 டன் தக்காளியை வியாபாரிகளுக்கு விற்பனை செஞ்சேன். மீதியை அக்கம்பக்கத்துல இருக்குறவங்களுக்குத் தினமும் சில்லறையா விற்பனை செய்தேன். அதனால, 6 டன் தக்காளிக்குத்தான் கணக்கு இருக்கு. பறிப்பு ஆரம்பிச்சதுல இருந்து ஒரு கூடை (10 கிலோ) தக்காளிக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரைதான் விலை கிடைச்சது. அந்த விலையில் 5 டன் தக்காளியை விற்பனை செஞ்சேன். கடைசியாப் பறிச்ச 1 டன் தக்காளிக்கு நல்ல விலை கிடைச்சது. ஒரு கூடை 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமா கணக்குப் பார்த்தா 6 டன் தக்காளி விற்பனை மூலமா சுமார் 2,85,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. சில்லரையா விற்பனை செஞ்சதையும் சேர்த்தா இன்னமும் கூடுதலாத்தான் வரும். ஆனா, அதுக்கு எங்கிட்ட கணக்கில்லை.

ஊடுபயிரிலும் வருமானம் :

ஊடுபயிராப் போட்ட வெங்காயத்துல 350 கிலோ கிடைச்சது. அது கிலோ 70 ரூபாய்னு விற்பனையாச்சு. அந்த வகையில 24,500 ரூபாய் கிடைச்சது. ஆக, அரை ஏக்கர்ல மொத்தம் 3,09,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. பாக்கு மட்டைத்தூள், வண்டல் மண் கொட்டுனதுல இருந்து, சொட்டுநீர், உழவு, நாத்து, நடவு, பறிப்புனு மொத்தம் அரை ஏக்கருக்கு 49,600 ரூபாய் செலவாச்சு.

அது போக 2,59,900 ரூபாய் லாபமாக் கிடைச்சது. வெங்காயத்துக்குனு எந்தச் செலவும் இல்லை. விதை வெங்காயம் கூட வீட்டுல இருந்ததுதான்” என்ற சம்பத்குமார் நிறைவாக,

கவனித்துப் பார்த்தால் வெற்றி நிச்சயம் :

“அதிக அளவுக்கு மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ரகத் தக்காளியைத் தேர்வு செஞ்சது, இயற்கை முறையில செழிம்பா ஊட்டம் கொடுத்தது, கண்ணும் கருத்துமா பிள்ளையைப் பாத்துக்குறதுபோல பாத்ததுனாலதான், பயிரும் பூமியும் ஏமாத்தாம விளைச்சலைக் கொடுத்திருக்கு. அதில்லாம சுழற்சி முறையில பிரிச்சுச் சாகுபடி பண்றதால, வருஷம் முழுக்க அறுவடை நடந்துட்டு இருக்கு. தொடர் வருமானமும் கிடைச்சுடுது. ஒரு நேரம் விலையில்லாமப் போனாலும், இன்னொரு நேரத்துல நல்ல விலை கிடைச்சுடுது. இப்போ அடுத்த பறிப்புத் தக்காளி அறுவடையாகிட்டு இருக்கு. சராசரியா ஒரு கூடை முந்நூறு ரூபாய்னு விலை போய்ட்டு இருக்கு. எனக்கு நல்ல செம்மண் பூமி, தண்ணிக்கும் பிரச்னை இல்லை. மயில் தொல்லை இருக்கிறதால ராத்திரியும், பகல்லயும் தோட்டத்துலதான் கிடையாக் கிடப்பேன். அப்படிப் பாத்துக்கிட்டதால தான் இந்த மகசூல் கிடைச்சுருக்கு. இல்லாட்டி, விவசாயம் பண்ணா நஷ்டம்தானுங்கனு பேசிக்கிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்” என்று நிதர்சனத்தைச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
சம்பத்குமார்
செல்போன்: 99439 94308.

இப்படித்தான் சாகுபடி செய்யணும் :

அரை ஏக்கர் நிலத்தில் தக்காளிச் சாகுபடி செய்யும்விதம் குறித்துச் சம்பத்குமார் சொன்ன விஷயங்கள் இங்கே...

தக்காளி செம்மண் பூமியில் நன்கு வளரும். வீரிய ரகத் தக்காளிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் விதைக்கலாம். அந்தந்தப்பகுதி சீதோஷ்ண நிலைக்குத் தகுந்த ரகங்களைத் தேர்ந்தெடுத்துச் சாகுபடி செய்ய வேண்டும்.
தேர்வு செய்த அரை ஏக்கர் நிலத்தில் பதமாகத் தண்ணீர் கட்டி, மண் விபூதிபோல பொலபொலவென ஆகுமாறு நன்கு உழ வேண்டும். பிறகு, பாக்கு மட்டைத்தூள்போன்ற தாவரக்கழிவுகளை நிலத்தின்மீது இரண்டு அங்குல உயரத்துக்குக் கொட்டிப் பரப்ப வேண்டும். தாவரக்கழிவுகள் கிடைக்காதவர்கள், பசுந்தாள் உரப் பயிர்களை விதைத்து, பூ எடுக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிடலாம். அவை நன்கு மட்கிய பிறகு 7 லோடு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி நிலத்தைச் சமன் செய்ய வேண்டும்.

பிறகு சொட்டு நீர்ப் பாசனக் குழாய்களை அமைத்து நிலத்தை ஈரப்படுத்தி... வரிசைக்கு வரிசை 3 அடி, செடிக்குச் செடி ஒன்றரை அடி இருக்குமாறு தக்காளி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் முன் 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் தயார் செய்யப்பட்ட கரைசலில், நாற்றுகளின் வேர்ப்பகுதியை முக்கி நடவு செய்ய வேண்டும். மண் மிகவும் இளகி இருந்தால்தான் விரலால் லேசாக மண்ணைப் பறித்து நாற்றை அழுத்த முடியும். மண் இறுகி இருந்தால் அழுத்தும்போது நாற்றின் வேர்ப்பகுதி முறிந்துவிடும். இதனால், முளைப்புத் தாமதமாகும். அல்லது முளைக்காமலே போய்விடும். மாலை நான்கு மணிக்கு மேல்தான் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது இரவில் கிடைக்கும் குளிர்ச்சியால் செடிகள் வாடாமல் இருக்கும்.

நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், தக்காளி நாற்றுகளை நடவு செய்த மறுநாள் விதைக்கலாம். முதல் மூன்று நாள்களுக்குத் தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. புல் களைகள் முளைத்தால் தக்காளிச் செடிகளுக்கு ஊட்டம் கிடைக்காமல் போய்விடும். அதனால், நிலத்தில் எப்போதும் களைகளே இல்லாத அளவுக்கு அகற்றி வர வேண்டும்.

நடவு செய்த 15, 30 மற்றும் 45-ம் நாள்களில் வடிகட்டிய 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். நாமே பஞ்சகவ்யா தயாரித்தால், அதையும் வடிகட்டி சொட்டு நீரில் கரைத்து விடலாம். இயற்கை இடுபொருள்களை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். செடிகளின் வளர்ச்சியைப் பொறுத்து இடுபொருள்களின் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பத்து லிட்டர் மாட்டுச் சிறுநீரில் அரைக் கூடை சாணியைக் கரைத்து நான்கு நாள்கள் கழித்து அக்கரைசலில் மேலாக இருக்கும் தெளிவை மட்டும் வடிகட்டி... 10 நாள்களுக்கு ஒருமுறை சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாட்டுச் சிறுநீரை நேரடியாகப் பயிருக்குக் கொடுக்கக் கூடாது. செடிகள் கருகிவிடும். அதனால், தண்ணீரில் கலந்துதான் கொடுக்க வேண்டும். அதேபோலத் தொழுவுரம் இடும்போது மாட்டுச் சாணத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். கோழி எரு தக்காளிக்கு உகந்ததல்ல.

நடவு செய்த 30-ம் நாளுக்குமேல் பூ எடுத்து 45-ம் நாளுக்குமேல் காய்க்கத் தொடங்கும். ஆரம்பத்தில் நான்கு அல்லது ஐந்து கிலோ அளவில்தான் தக்காளி கிடைக்கும். 50-ம் நாளுக்குமேல் முழு மகசூல் கிடைக்க ஆரம்பித்துவிடும். சந்தைத் தேவையைப் பொறுத்துத் தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிக்கலாம். செடிகளில் காய்ப்பு குறைந்தால், சொட்டு நீருடன் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்த சில நாள்களிலேயே புதுத் தழைவு எடுத்துப் பூக்கள் எடுக்கத் தொடங்கும். நன்கு பராமரித்தால், வீரிய ரகத் தக்காளியில் அரை ஏக்கர் நிலத்தில் 9 டன் முதல் 10 டன் வரை மகசூல் எடுக்க முடியும்.

பூச்சிகளை அழிக்க விளக்குப் பொறி :

பூச்சித் தாக்குதலிலிருந்து பயிரைக் காப்பற்ற வயலில் இரவு நேரத்தில் விளக்குப் பொறிகள் வைக்கலாம். மஞ்சள் வண்ணக் காகிதத்தில் விளக்கெண்ணெயைத் தடவி ஆங்காங்கு தொங்க விட்டாலும் பூச்சிகள் பறந்து வந்து அவற்றில் ஒட்டிக்கொள்ளும். அதையும் மீறி, பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப் பூச்சி விரட்டிகளைத் தெளிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday 24 September 2017

பயிர்களை சேதமாக்கும் மயில்கள்... விரட்ட ஓர் எளிய வழி!


விவசாயிகளின் பயிர்களுக்கு பூமிக்கு கீழே எலிகளால் அழிவு என்றால், தற்போது பூமிக்கு மேலே மயில்களாலும் அழிவு. நிலத்தடி நீரைக்கொண்டு விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பயிர்களை மயில்கள் கூட்டமாக புகுந்து சேதப்படுத்திவிடுகின்றன. விளைந்த கதிர்களை உடைத்து உண்ணுகின்றன. இதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் மயில்களை மலைப்பகுதிகளில் அல்லது வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்தில்தான் காணமுடியும். எங்காவது கோயில்களில் அரிதாகக் காணலாம். ஆனால், தற்போது கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள்போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன. கடும் வறட்சி நிலவும் இந்நேரத்தில் குடிநீர் மற்றும் உணவுத் தேவைக்காக யானைகள், மான்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதைப் போல மயில்களும் வரத்தொடங்கிவிட்டன.

விவசாயிகள் சிலர் மயில்களை கட்டுப்படுத்த முடியாமல் அவைகளை விஷம் வைத்து கொல்லும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன

சரி, மயில் தேசிய பறவைதான், முருகக்கடவுளின் வாகனம்தான், பயிருக்கு அழிவைத்தரும் மயில் பிரச்சனைத் தீர்க்க என்ன வழி?

தீர்வு சொல்கிறார் பெயர் குறிப்பிடவிரும்பாத வனக்காப்பாளர் ஒருவர், “மயில்களை காப்பது நமது கடமை. மீறி மயில்களை அழித்தால் வனத்துறையின் கடும் நடவடிக்கைக்கு ஆளாகவேண்டிவரும். விளைநிலங்களுக்கு மயில் வருவதைத் தடுக்க விளைநிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நமக்கு தேவையற்ற பயிர்களை விதைக்கலாம். அதன்மீது சாணத்தை கரைத்துத் தெளிக்கலாம் அல்லது மீன் கழிவுகள், வேப்பஎண்ணை, புகையிலை கரைசல் போன்றவற்றை விலை நிலத்தை சுற்றி தெளித்தால் அந்த வாடைக்கு மயில்கள் அருகில் வராது. இப்படியான எளிய வழிகளில் மயில்களை விரட்ட விவசாயிகள் முன்வரவேண்டும்” என்றார்.

முன்பெல்லாம் பாம்பு, நரி, உடும்பு, கீரி போன்றவை கிராமங்களில் உள்ள ஆறு, குளம், ஓடை, புதர்காடு போன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வசித்து வந்தன. இவையாவுமே மயில்களுக்கு எதிரிகளாகும். மயில்கள் இடும் முட்டைகளையும், குஞ்சுகளையும் இந்த விலங்குகள் உணவாக உட்கொண்டுவிடும். இதன் விளைவாக மயில் பெருக்கம் குறைந்திருந்தது. ஆனால், நாளடைவில் மனிதன் மருந்துவகை உணவுக்காக, உடும்பு, கீரியையும், பல், வாலுக்காக நரிகளையும், பரமஎதிரியான பாம்புகளையும் அழித்துவிட்டான். இதன் காரணமாக மயில்கள் பெருகிவிட்டன.

வறட்சி காரணமாகவும் விலங்குகளும், பறவைகளும் காட்டை விட்டு வெளியேறத் தொடங்கியிருக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் வறட்சி காரணமாக இந்தியாவில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். இன்னும் அடுத்த சில மாதங்கள் வறட்சியின் அளவு அதிகரிக்கும் என்பதால் கூடுதலான எண்ணிக்கையில் விலங்குகள் பாதிக்கப்படும். அவை நேரிடையாக மனித இனத்தையும் பாதிக்கும்.

இயற்கை சுழற்சியில் எங்கு கைவைத்தாலும் அது கடைசியில் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் உண்மை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday 23 September 2017

புகையிலை விளைந்த நிலத்தில் இயற்கை விவசாயம்... சாதித்த தமிழக விவசாயி!


கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் புகையிலை சாகுபடி செய்து வருகின்றனர். புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற நச்சுப்பொருள் தாக்கி புற்றுநோய்க்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இதனால் புகையிலை சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. புகையிலை சாகுபடியை கைவிட்ட நிலத்தில் வேறு எதையும் சாகுபடி செய்யமுடியாமல் தரிசாகப் போட்டுள்ள நிலையில், இளைஞர் ஒருவர் முதல் முதலாய் இயற்கை விவசாய முறையில் மிளகாய் மற்றும் பலவகை காய்கனிகள் பயிரிட்டு நிகர இலாபம் அடைவதோடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் மாறி இருக்கிறார்.

ஆயக்காரன்புலம்-2 என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜசேகர். ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர். இவரும், இவர் மனைவி கனிமொழியும் தங்களுடைய 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் கலப்பிண சாகுபடி செய்கிறார்கள். எவ்வித ரசாயன மருந்தும், பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்தாமல் மிளகாய், கத்தரி, வெண்டை, பாகல், பரங்கி, புடலை, சோளம், கம்பு என வகை வகையாய் பயிர்செய்து வருகிறார்கள்.

அவர்களை சந்தித்தோம்.

“அப்பா ஆசிரியராக இருந்தபோதும் எல்லோரையும்போல புகையிலை சாகுபடி செய்துவந்தாங்க, அவங்க மறைவுக்கு பின்தான் நான் விவசாயத்தை நேரடியாக கவனித்தேன். புகையிலைக்கு முக்கியத் தேவையே தடைசெய்யப்பட்ட ‘என்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்தும், அதிக விஷத்தன்மையுள்ள களைக்கொல்லி மருந்தும்தான். இது மண்ணில் உள்ள நன்மைசெய்யும் பாக்டீரியாவையும் அழித்துவிடும். மண்ணுக்கும் கேடு, அதில் பணியாற்றும் மனிதருக்கும் கேடு. எனவே, விஷச்செடியான புகையிலையை உற்பத்தி செய்ய பிடிக்கல. அதே நேரத்தில நிலத்தையும் தரிசா போடக்கூடாதன்னு நினைச்சேன். ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்ய முடிவெடுத்தேன்.

முதலில் புகையிலையால் விஷமேறிக் கிடந்த மண்ணை மாற்றினேன். ஒன்றரை அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டி அப்புறப் படுத்தினேன். மாட்டு சாணத்துடன், மண்புழு உரம் மற்றும் நுண்ணுயிரி கலந்து நிலம் முழுவதும் தூவினேன். காலம் காலமாய் கத்தரி சாகுபடி செய்வதால் கத்தலிப்புலம் என்ற பெயர்பெற்ற ஊரில் போய் கொத்துகத்தரி விதைவாங்கி சாகுபடி செய்தேன். இதற்கு பயன்படுத்தும் மாட்டு சாணம்கூட ரசாயன கலப்பின்றி இருக்கவேண்டும் என்பதற்காக மாட்டுத்தீவனம் கொடுத்து வளர்க்கப்படும் ஜெர்சி மாட்டு சாணம் வாங்காமல் மேலமருதூர் சென்று நாட்டுமாட்டு சாணம் ஒரு லாரி ரூ.6500 கொடுத்து வாங்கி பயன்படுத்தினேன். இயற்கை முறையில் நானே பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்தேன். ஏக்கருக்கு, அரைக்கிலோ இஞ்சி, அரைக்கிலோ பூண்டு, கால்கிலோ மிளகாய் இவற்றைச் சேர்த்து அரைத்து 5 லிட்டர் நீரில் கரைத்து அதைக்கொண்டு ஏக்கருக்கு 5 டேங்க் ஸ்பிரே செய்தேன்.

மறுமுறை மாட்டுக் கோமியத்துடன் தயிர் கலந்தும் ஸ்பிரே செய்தேன். மேலும், பழைய பெயிண்ட் டப்பாக்களை வாங்கி, அதில் மஞ்சள் பெயிண்ட் அடித்து விளக்கெண்ணையைத் தடவி வயலில் ஆங்காங்கே நட்டு வைத்தேன். இனக்கவர்ச்சிபொறி எனப்படும் இதில் இலைகளை சுருட்டும் தாய் அந்துப்பூச்சிகள் வந்து ஒட்டிக்கொண்டு இறந்துவிடும். வெயிலால் பயிர் கருகாமல் இருக்க, 3 லிட்டர் தயிருடன் 5 கிலோ சாணம் சேர்த்து கலந்து 5 நாள் ஊறவைத்து அதன்பின் 12 லிட்டர் தண்ணீருடன் கலந்து 10 டேங்க் ஸ்பிரே செய்தேன். கத்தரி விளைச்சல் அமோகமாக இருந்தது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தினால்தான் அதிக விளைச்சல் வரும் என்பது தவறு. புகையிலை சாகுபடிசெய்து வரும் லாபத்தைவிட இதில் இருமடங்கு லாபம் கிடைத்தது. தற்போது, நாட்டுமிளகாய் சாகுபடி செய்துள்ளேன். இதில் காரத்தன்மை அதிகம். இதனை பிரிட்ஜில் வைக்காமல் இருந்தாலும் ஒரு வாரத்துக்கு வீணாகாமல் இருக்கும். மிளகாயுடன் மற்ற காய்கறிகளையும் பயிர் செய்கிறேன். மண்ணு நல்லாயிருக்கு, அதில் விளையிற காய்களும் நல்லாயிருக்கு. அதை மக்களுக்கு கொடுக்கும்போது நல்ல தொழில் செய்யுறோம் என்ற மனநிறைவு இருக்கு” என்றார் இராஜசேகர்.

தொடர்ந்தார் இராஜசேகர் மனைவி கனிமொழி, “நானும் விவசாயக் குடும்பத்திலேந்து வந்தவள்தான். என்கணவர் இயற்கை விவசாயத்தைப்பற்றி சொல்லச் சொல்ல இத்தனை நாள் நானும் விஷம் கலந்த காய்கறியை சாப்பிட்டு வந்திருக்கோம்ன்னு தெரிஞ்சது. நம்ம நிலத்துல ரசாயன கலப்பில்லாத நல்ல காய்கறியை பயிர்செஞ்சி கொடுப்போம்முன்னு முடிவு செஞ்சோம். வீட்டுவேலை நேரம்போக நாள் முழுதும் தோட்டவேலைதான். காய் பறிக்கக்கூட பிளாஸ்டிக் பயன்படுத்தாம, பனைஓலைக்கூடைதான் பயன்படுத்துறோம். வீட்டுக்கு வாங்கும் பால்கூட ஜெர்சி மாட்டுப்பால வாங்காம நாட்டுமாட்டுப் பால்தான் வாங்குறேன். அந்தளவுக்கு இயற்கைக்கு மாறிட்டோம். எங்களைப்போல மற்றவர்களும் மாறினால் நாட்டுக்கே நல்ல காய்கறிகளைக் கொடுக்கலாம். அதேநேரத்துல உழைப்புக்கு ஏத்த லாபமும் இருக்கு. ஹோட்டல்கள், இயற்கை விவசாயம் பற்றி தெரிஞ்சவங்க, அதிலுள்ள நன்மையை அறிஞ்சவங்க எல்லாம் வீடுதேடி வந்து காய்கறிகளை வாங்கிட்டுப்போறாங்க. இடைத்தரகர் கமிஷன் இல்லாததால கடைவிலையைவிட கிலோவுக்கு 5 ரூபாய், 10 ரூபாய் விலை குறைத்தே தர்றோம். சந்தோஷமா வாங்கிட்டுப்போறாங்க” என்றார்.

இறுதியாய் இருவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் சொல்வது இதுதான், “புகையிலை சாகுபடி செய்யுறவங்களுக்கும், சாகுபடியை கைவிட்டு நிலத்தை தரிசாபோட்டு வச்சிருக்கவங்களுக்கும் அரசு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தனும். இதுபோல இயற்கை விவசாயம் செய்ய முன்வருவோருக்கு எங்களுத்தெரிந்த எல்லா ஆலோசனைகளையும் சொல்லத் தயாரா இருக்கோம். இந்த சாகுபடிக்கு அரசு மானியத்துடன் வங்கிக் கடனும், விவசாயத்துறையின் வழிகாட்டுதலும் கிடைத்தால் மேலும் சிறப்பாக செய்ய முடியும். மண்ணையும், மக்களையும் காக்க அரசு முன்வரவேண்டும்” என்றார்கள்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday 20 September 2017


நம்மாழ்வாரின் பாரம்பர்யம் விதைக்கும் விவசாய தமிழன்!


நாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கிடையே, “இயற்கை விவசாயம்தான் மகிழ்ச்சியளிக்கிறது” என மனம் திறக்கிறார், இயற்கை விவசாயி நடராஜன். தோட்டத்தில் பப்பாளி இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

“விழுப்புரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் காணை பக்கத்தில் இருக்கிறது, அகரம் சித்தாமூர். என்னுடைய அப்பா, தாத்தா, முப்பாட்டன்னு பரம்பரையா எல்லாரும் விவசாயம் செஞ்சிட்டு வந்தவங்கதான். சின்ன வயசுல இருந்து வயல்ல வேலை செய்துகிட்டே இருப்பேன். அப்போ விவசாயம் செய்யுறப்போ ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்வேன். ஒரு கட்டத்தில் யார் கண்ணு பட்டுச்சோன்னு தெரியலை. புகையான் விழுந்து மூணுல ஒரு பங்குதான் மகசூல்தான் கிடைச்சது. அதனால குடும்பத்துல ரொம்ப வறுமையா இருந்துச்சு. அதனால நான் பெங்களூருக்கு வேலைக்குப் போயிட்டேன். என்னதான் வறுமை இருந்தாலும், என் வீட்டில் தொடர்ந்து விவசாயம் செஞ்சிட்டுதான் இருந்தாங்க. கொஞ்ச வருஷத்துக்கு அப்புறமா பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தப்போ தமிழ்ப் புத்தகங்கள் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். விவசாயத்து மேலஆர்வம் இருந்ததால பசுமை விகடன் புத்தகத்தையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல வர்ற இயற்கை விவசாய தகவல்கள் எல்லாம் என்னை ஈர்க்க ஆரம்பிச்சிடுச்சு.

அப்போதிருந்தே பசுமை விகடனுக்குத் தீவிர வாசகனா மாறிட்டேன். அதுக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்து மேலயும் ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் சார்புல பாண்டிச்சேரியில் விவசாயிகளுக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் நானும் கலந்துகிட்டேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையில பெரிய திருப்பு முனை. யாருன்னுகூட தெரியாம நம்மாழ்வார்கூட பேசிட்டு இருந்தேன். அவர் மேடைக்கு போனதுக்கப்புறம்தான் அவரைப் பத்தி தெரிஞ்சது. அவர் சொன்ன உதாரணத்தைக் கண்டிப்பா இங்க சொல்லனும். 'படிப்புனா என்ன? கல்வினா என்ன?' என்னனு அவர் கேட்டதும் குழப்பமா இருந்துச்சு. அதுக்கான பதிலை, 'படிப்புங்கிறது படிச்சு தெரிஞ்சுக்குறது... கல்விங்கிறது கத்துக்கிட்டு செய்றது'னு சர்வசாதாரணமா சொன்னாரு சொன்னாரு நம்மாழ்வார். 'விவசாயம்கிறதும் கல்வி மாதிரிதான் கத்துக்கிட்டு பண்ணனும்'னு சொன்னாரு. அவர் எழுதின புத்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நம்மாழ்வாரின் மீதுள்ள பற்றுதல் காரணமா என்னோட பேரை 'நம்மாழ்வார் நடராஜன்'னு மாத்திக்கிட்டேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் 2013- ல் விவசாயம் பண்ணலாம்னு சொந்த ஊருக்குத் திரும்பி வந்தேன். என்ன பயிர் வைக்கறதுன்னு எதுவும் பிடிபடலை. அந்தநேரம் பசுமை விகடன்தான் வழிகாட்டலா இருந்துச்சு. கோயம்புத்தூர் பக்கத்துல இருக்குற ஒருத்தரை சந்திக்கிறதுக்கான வாய்ப்பையும் பசுமை விகடன் ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு என் தோட்டத்துல பப்பாளி நடவு செஞ்சேன்" என்று நெகிழ்ச்சியோடு சொன்ன நடராஜன், இயற்கை விவசாய முறையில் தான் பயிர் செய்யும் விதம் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்தார். அவை பாடமாக...

குழி எடுத்து செடியை நடவு செய்யும்போது, மேல் மண்ணுடன் எரு, இயற்கை உரம் கலந்து குழியை மூட வேண்டும். அதன் பிறகு, செடியை நடவு செய்து நீர் பாய்ச்சவேண்டும். பிறகு 15 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலை செடிகளின் மீது தெளிக்க வேண்டும். மாதம் இரண்டு முறை பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்கினால் வேப்ப எண்ணெய், புங்க மற்றும் இலுப்பை எண்ணெயைச் சேர்த்து செடியின் மீது தெளிக்க வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை இதனைச் செய்ய வேண்டும். இதுதவிர இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசலையும் செடிகளின் மீது தெளிக்கலாம். களத்துமேட்டுல இருக்குற தாவரக்கழிவுகளை பப்பாளி தோட்டத்துல போடணும். ஜீவாமிர்தத்தை வாரம் ஒரு முறை தண்ணீரோட பாய்ச்சலாம். என்னோட ரெண்டு ஏக்கர் தோட்டத்துல 1,000 பப்பாளிக் கன்னுங்களை நடவு செய்திருக்கேன். இதுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். ஒரு வருஷத்துக்கு பிறகு மகசூல் ஆரம்பிச்சுடுச்சு. ஒண்ணரை வருஷம் வரைக்கும் தொடர்ந்து அறுவடை செய்யலாம். வாரம் ஒரு தடவை பழங்களைப் பறிச்சி ஊர் சந்தையிலயும், விழுப்புரம், சென்னையிலயும் விற்பனை செய்றேன். ஒரு கிலோ 25 ரூபாய் விலைக்கு விற்பனையாகுது. இயற்கை முறையில விளைவிக்கிறதால மக்களும் விரும்பி வாங்குறாங்க" என்று சொன்னார் நடராஜன்.

மேலும், இவருடைய தோட்டத்தில் தக்காளி, கத்திரிக்காய், பாசிப்பயறு, தட்டைப்பயறு, கீரை வகைகள் என அனைத்தும் பயிரிடுகிறார். நாட்டுமாடு, ஆடு, கோழி என வளர்த்து இயற்கை விவசாயத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் வளர்க்கும் முயற்சிகளில் தற்போது இறங்கியிருக்கிறார்.

"இந்த இயற்கை விவசாயத்துல எங்க குடும்பத்துல உள்ளவங்களோட மனசும், உடம்பும் ஆரோக்கியமா இருக்கு. கடந்த 4 வருஷமா நோய், நொடினு ஆஸ்பத்திரிக்கு போறது இல்ல. இயற்கை விவசாய சங்கம் ஆரம்பிச்சி, அதில் அதிகப்படியான விவசாயிகளை இணைச்சி இயற்கை விவசாயத்தோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிட்டு வர்றோம். இதுவரைக்கும் நான் படிச்சி சேகரிச்சி வெச்சிருக்கிற பசுமை விகடன் புத்தகங்கள், நம்மாழ்வாரோட புத்தகங்கள் எல்லாத்தையும் வெச்சி நூலகம் அமைக்கவும் திட்டமிருக்கு. இது, எதிர்கால சந்ததிக்கு விவசாய வழிகாட்டுதலா இருக்கும்னு நம்புகிறேன்" என்று சொன்னார்.

முயற்சி என்பது விதை போன்றது. அதை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்... முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம் என்று நம்மாழ்வார் சொல்வார். அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் அவருடைய பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கும் நடராஜன்!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday 16 September 2017

50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000!


தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் முக்கியமானவை மலர்கள். காய்கறி மற்றும் கீரைகள் போன்ற பயிர்களும் தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்கள்தான் என்றாலும், அவற்றைவிட எளிதாக மலர்ச் சாகுபடி மேற்கொள்ள முடியும். மலர்ச் சாகுபடியில் ஒரு முறை நடவுசெய்துவிட்டுப் பல ஆண்டுகள் தொடர் மகசூல் எடுக்க முடியும். மேலும் சில சமயங்களில் மலர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக்கூட விலை கிடைக்கும். இப்படிப் பல காரணங்கள் இருப்பதால்தான், அனேக விவசாயிகள் மலர்ச் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சிவப்பு அரளியையும் நாட்டு ரோஜாவையும் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியன்.

சங்கரன்கோவிலிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியூர் கிராமத்தில்தான் சுப்பிரமணியனின் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.

நெசவிலிருந்து உழவுக்கு :

“நெசவு, விவசாயம் ரெண்டும்தான் பூர்விகத்தொழில். முழுக்க நெல் சாகுபடிதான் செஞ்சோம். ஆரம்பத்துல குப்பை மட்டும்தான் போட்டுச் சாகுபடி செஞ்சோம். பசுமைப் புரட்சி வந்த பிறகு, நானும் ரசாயன உரம்போட ஆரம்பிச்சேன். அதுல வருஷா வருஷம் உரத்தோட அளவையும் பூச்சிக்கொல்லியையும் அதிகப்படுத்திட்டே போக வேண்டியிருந்துச்சு. அதோட தண்ணீரும் அதிகமாத் தேவைப்பட்டுச்சு. நிலமே இறுகிப்போச்சு. ஒரு கட்டத்துல செலவு கட்டுப்படியாகாம விவசாயத்தையே விட்டுட்டேன். 1998-ம் வருஷத்துல இருந்து 2008-ம் வருஷம் வரைக்கும் விவசாயமே செய்யலை. அண்ணன்கூடச் சேர்ந்து நெசவுத்தொழிலைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு கட்டத்துல நெசவுத்தொழிலும் நசிய ஆரம்பிச்சது. அப்போதான் என்னோட அண்ணன் மகாலிங்கம் ‘பசுமை விகடன்’ புத்தகத்தைக் கொடுத்து இயற்கை விவசாயத்தை ஆரம்பினு யோசனை சொன்னார்” என்ற சுப்பிரமணியன் தொடர்ந்தார்.

நம்பிக்கை கொடுத்த பசுமை விகடன் :

“பசுமை விகடன்ல வெளிவந்த இயற்கை விவசாயக் கட்டுரைகளையும் இயற்கை விவசாயிகளின் அனுபவங்களையும் படிச்சப்போ ஒரு நம்பிக்கை வந்தது. வழி தெரியாம நடுக்காட்டுல நின்னவனுக்கு வழி காட்டினது மாதிரி இருந்துச்சு. உடனே ஒரு ஏக்கர் நிலத்துல குப்பை அடிச்சு இயற்கை முறையில சம்பங்கி சாகுபடி செஞ்சேன். தண்ணி பற்றாக்குறையால மகசூல் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அடுத்து பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிட்டுச் சிவப்பு அரளிப்பூவைச் சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல வருமானம் கிடைச்சது. அதோட இப்போ நாட்டு ரோஜாவையும் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.

இது மொத்தம் 4 ஏக்கர். கரிசல் மண் நிலம். இதுல இரண்டரை ஏக்கர் நிலத்துல 180 தென்னை மரங்கள் இருக்கு. ஐம்பது சென்ட் நிலத்துல சிவப்பு அரளியும் ஐம்பது சென்ட் நிலத்துல ரோஜாவும் சாகுபடி செய்திருக்கேன். ஐம்பது சென்ட் நிலத்தைச் செண்டுமல்லி நடவுக்காகத் தயார்படுத்திட்டு இருக்கேன். போன ரெண்டு வருஷமா செவ்வரளியும் ரோஜாவும் வருமானம் கொடுத்துட்டு இருக்கு.

அரளியை மொட்டாகப் பறிக்க வேண்டும்...

ரெண்டு பூக்கள்லயுமே பங்குனி மாசத்துல இருந்து புரட்டாசி மாசம் வரைக்கும் அதிக மகசூல் கிடைக்கும். ஐப்பசி மாசத்துல இருந்து மார்கழி மாசம் வரைக்கும் உள்ள காலங்கள்ல மகசூல் குறைஞ்சுடும். இடைப்பட்ட மாசங்கள்ல நடுத்தரமா மகசூல் கிடைக்கும். சிவப்பு அரளியைச் சாயங்கால நேரத்துல மொட்டா பறிக்கணும். பூ விரிஞ்சுட்டா விலை குறைஞ்சுடும். சாயங்காலம் பறிச்சு மறுநாள் காலையில மார்கெட்டுக்குக் கொண்டுபோவேன். ரோஜாவைக் காலை நேரத்துல பறிக்கணும். ரோஜாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நாள் பறிக்காம விட்டுட்டா அடுத்த நால் கூடப் பறிக்கலாம். ஆனா, அரளியை அன்னன்னிக்குப் பறிச்சுடணும்.

சிவப்பு அரளியில் குறைந்த பட்சமா 3 கிலோவும் அதிகபட்சமா 16 கிலோவும் தினசரி மகசூல் எடுத்துருக்கேன். ரோஜாவில் குறைந்தபட்சமா 2 கிலோவும் அதிகபட்சமா 10 கிலோவும் தினசரி மகசூல் எடுத்துருக்கேன். சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுலதான் பூக்களை விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற சுப்பிரமணியன் நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

15 ஆண்டுகள் தொடர் மகசூல் :

“சிவப்பு அரளி, ரோஜா ரெண்டுமே பல்லாண்டுப்பயிர். ஒரு முறை நிலத்தைப் பண்படுத்தி நடவு செஞ்சுட்டா போதும். பதினஞ்சு வருஷத்துக்குமேல வருமானம் எடுக்கலாம். நான் ரெண்டு வருஷத்துக்குமேல வருமானம் எடுத்துட்டு இருக்கேன். கடைசி நாலு மாசத்துக்கான கணக்கைச் சொல்றேன். சிவப்பு அரளி எப்பவும் கிலோ 30 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகும். ரோஜா எப்பவும் கிலோ 70 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகும். முகூர்த்த நேரங்கள், திருவிழா நேரங்கள்ல நல்ல விலை கிடைக்கும். நான் ஒரு கிலோ அரளியை 300 ரூபாய் வரை விற்பனை செஞ்சுருக்கேன். அதேமாதிரி ரோஜாவுக்கு அதிகபட்ச விலையா கிலோவுக்கு 100 ரூபாய் கிடைச்சுருக்கு.

மே மாசம் ஒண்ணாம் தேதியில இருந்து இன்னிக்கு வரை (02.09.17), 897 கிலோ சிவப்பு அரளி கிடைச்சுருக்கு. அதை விற்பனை செஞ்சதுல சுமார் 74,580 ரூபாய் கிடைச்சுருக்கு. அதே மாதிரி இந்த நாலு மாசத்துல (01.05.17 - 02.09-17) 538 கிலோ ரோஜா மகசூல் கிடைச்சுருக்கு. அதை விற்பனை செஞ்சதுல சுமார் 45,090 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ரெண்டுலயும் சேர்த்து சுமார் 1,19,670 ரூபாய் வருமானமாக் கிடைச்சுருக்கு.

தினமும் பூ பறிக்க 100 ரூபாய் கூலி கொடுக்கணும். அதுபோக இடுபொருள் செலவுதான். இந்த நாலு மாசத்துல பறிப்புக்கும் இடுபொருள் தெளிப்புக்கும் 16,700 ரூபாய் ஆகியிருக்கு. அதைகழிச்சா 1,02,970 ரூபாய் லாபமா நின்னுருக்கு. எப்படியும் மாசத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இப்போ தண்ணீர்ப் பற்றாக்குறை. அதனால மகசூல் குறைவுதான். அதுலேயே நிறைவான லாபம் கிடைச்சுடுது. மழை, தண்ணி நல்லா கிடைச்சதுன்னா நல்ல லாபம் எடுக்கலாம்” என்று சொல்லி நமக்கு விடைகொடுத்து விட்டு பூ மார்கெட்டுக்குக் கிளம்பத் தயாரானார், சுப்பிரமணியன்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்..!

50 சென்ட் பரப்பில் சிவப்பு அரளி மற்றும் 50 சென்ட் பரப்பில் ரோஜா சாகுபடி செய்வது குறித்துச் சுப்பிரமணியன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

மலர்ச் சாகுபடியைப் பொறுத்த வரையில் பட்டம் கிடையாது. அதனால், பருவ மழைக்கு முந்தைய காலங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்த 50 சென்ட் நிலத்தை ஒவ்வொரு உழவுக்கும் ஐந்து நாள்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, 2 அடி ஆழம், 2 அடி விட்டத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பிறகு சொட்டு நீர்ப் பாசனக் குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். குழி எடுத்த மறு நாள், ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ செம்மண், 10 கிலோ மட்கிய சாணம், அரைக் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு 3 நாள்கள் ஆறவிட வேண்டும். பிறகு குழிக்கு ஒரு கன்று என மூன்று மாத வயதுடைய செவ்வரளிக் கன்றுகளை நடவுசெய்து குழியை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

கன்று நடவு செய்த 10-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பசுமாட்டுக் கோமியம் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். இது பூச்சிகளைத் தடுக்கும். கன்று நடவுசெய்த 20-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். நடவுசெய்த 35-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை செடியைச் சுற்றிக் களைகளை அகற்றி 5 கிலோ மட்கிய எருவைத் தூவிவிட வேண்டும்.

நடவுசெய்த 3-ம் மாதத்தில் அரளிச் செடிகளில் லேசாக மொட்டு தென்படும். 4-ம் மாதத்தில் பூ பூக்கத் தொடங்கும். 7-ம் மாதத்துக்குப் பிறகு மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். தொடர்ந்து இதே முறையில் பராமரித்து வந்தால், 15 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.

ரோஜா :

அரளிக்குப் போலவே நிலத்தை உழுது தயார் செய்து, 2 அடி ஆழம், 2 அடி விட்டத்தில் குழிகள் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். நடவு, பராமரிப்பு, அனைத்தையும் அரளிக்குச் சொன்னது போலவே செய்துவர வேண்டும். ரோஜா நடவுசெய்த 3-ம் மாதத்தில் மொட்டுகள் தென்படும். 4-ம் மாதத்தில் பூக்களைப் பறிக்கத்துவங்கலாம். 9-ம் மாதத்துக்குமேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை ரோஜாவில் மகசூல் எடுக்கலாம்.
கவாத்து அவசியம் !

நடவுசெய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பருவ மழைக்கு முன்பாக அரளிச் செடியில் உயரமாக வளர்ந்த பக்கக் கிளைகளையும் மேல் கிளைகளையும் மட்டும் ஓர் அடி உயரத்துக்குக் கவாத்து செய்ய வேண்டும். பருவ மழைக்கு முன்பாக ரோஜா செடிகளை ஓர் அடி உயரம் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்வதால் பக்கக் கிளைகள் அதிகம் வளர்ந்து பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

தொடர்புக்கு:
சுப்பிரமணியன்
செல்போன்: 97897-67808.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday 14 September 2017

விதைநெல் முதல் சாதம் வரை... நம் தட்டுக்கு உணவு இப்படித்தான் வருகிறது!


கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் அதைத் தட்டில் எடுத்துப்போட்டு மீண்டும் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால், நவீன உலகத்தில் நாம் எத்தனை பேர் சோற்றுப் பருக்கைகள் சிந்தினால் அதைத் தட்டில் மீண்டும் எடுத்துப் போடுகிறோம்? குக்கரில் இறுக்கமாக மூடி, விசில் வந்தவுடன் எடுத்துச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பி போகும் நமக்கு, அதை உற்பத்தி செய்வதை மட்டுமே வேலையாக வைத்துக் கொண்டு இருக்கும் விவசாயிகள் பற்றியும் அவர்கள் உழைப்பைப் பற்றியும் எவ்வளவு தூரம் தெரியும்? அரிசி அரிசியாகவே விளைவது இல்லை.

இந்த வருடம் வெளியான 'பாம்புச்சட்டை' திரைப்படத்தில் அரிசியின் அவசியத்தைச் சொல்லுமாறு ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அக்காட்சியில் நடிகர் சார்லி, "நாம சிந்தும் ஒரு பருக்கை ஏதோவோர் ஊர்ல, யாரோ ஒரு விவசாயி நிலத்துல நெல்லா இருந்துருக்கும். அதை அறுவடை பண்ணும்போது நெல்லா வயல்ல விழுந்துருக்கலாம்ல... களத்துல அடிக்கும்போது சிதறி இருக்கலாம்ல... அதுல இருந்து தப்பிச்சு மூட்டையில ஏறி ரைஸ் மில்லுக்கு போயிருக்கும். அங்க அவிச்சு, அரைச்சு, உடைச்சு இதுலையும் தப்பிச்சு அரிசியா வருது. அந்த அரிசியை உங்க அம்மா கழுவும்போது நழுவாம, வடிக்கும்போது தெறிக்காம... பதமா உனக்கு சோறு ஆக்கி போட்ருக்காங்க. இத்தனையும் தாண்டி உன்னைத் தேடி வந்த பருக்கை உன்னோட அலட்சியப் போக்கால வீணா போகணுமா" என தன் மகளிடம் கேட்பார். எளிமையாகக் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் நாம் அலட்சியம் செய்து கொண்டேதான் இருக்கிறோம். மனித சமுதாயத்தின் மத்தியில் அலட்சியமாக நினைக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது, அரிசி.

ஒவ்வொரு பருவம், பட்டம் பார்த்து ஒவ்வொரு ரக விதை நெல்லை விதைக்கும் வழக்கம் விவசாயிகளிடையே இருந்து வருகிறது. நாற்றங்காலில் விதையைத் தூவுவதில் இருந்து தக்கபடி விதை நேர்த்தி செய்து ஈரமான கோணிப்பையில் விதையை ஊற வைக்க வேண்டும். விதைப்பதற்குத் தகுந்ததுபோல நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும். விதை தூவப்பட்டதற்குப் பிறகு சேதமில்லாமல் எல்லா விதையும் முளைத்து வர வேண்டும். நாற்று அழுகாமலும், பூச்சி நாசப்படுத்தாமலும் பாதுகாக்க வேண்டும். நாற்று நல்லா வளர்ந்தற்குப் பிறகு நாற்றங்காலில் இருந்து பிடுங்கி வயலில் நடவு செய்வதற்காக மட்டும் ஒரு இருபது இருபத்தைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும். நடவு செய்வதற்கு முன்னால் நிலத்தை நன்றாக உழுது, தண்ணீரைப் பாய்ச்சி சேறாக்கி, உரம் போட்டு நன்றாகப் பதப்படுத்தி வைக்க வேண்டும். பதப்படுத்தி வைத்த நிலத்தில் நாற்றுகளையெல்லாம் சீரான இடைவெளியில் நட்டு, தகுந்த அளவு தண்ணீர்விட்டு பராமரிக்க வேண்டும்.

பயிர் வளர வளரக் களையும், நோயும் வளரும் அதனால் ஆகும் செலவும் வளரும். இது நெல்லா களையா என உற்றுப் பார்த்தால் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருவ ஒற்றுமையோடு வளர்ந்து கொண்டே இருக்கும். இருக்கும் களைகளை எல்லாம் பார்த்து பார்த்து எடுக்க வேண்டும். காலை முதல் மாலை வரை களைபிடுங்கும் ஆட்களுக்கெல்லாம் கூலி தர வேண்டும். களைக்கொல்லி மருந்திற்குத் தனியாக கப்பம் வேறு கட்ட வேண்டும்.

களைகளோடு சேர்ந்து நெல்லைத் தாக்கும் பூச்சிகளிடமிருந்து பயிரைப் பாதுகாக்க வேண்டும். யானைக்கொம்பன், தண்டு துளைப்பான் என இன்னும் எத்தனையோ பூச்சிகளெல்லாம் பயிரைக் கடித்து நாசப்படுத்தும். பயிர் சரியாக வரவில்லை என்றால், மண்ணில் போதிய சத்து இல்லை என்றால் உரங்களைக் கொட்ட வேண்டும். கதிர்பிடித்த பயிர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு நோய் வந்துவிட்டால் போதும் அவ்வளவு நாள் பட்ட கஷ்டமெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும்.

கதிர் முற்றி அறுவடை செய்ய காத்திருக்கும்போது நாளும் தவறக் கூடாது, ஆளும் தவறக் கூடாது. சரியான நேரத்தில் நெல் அறுத்து, சரியான நேரத்தில் போர் அடித்து, சரியாக வேக வைத்து, நேர்த்தி செய்து சந்தைக்குக் கொண்டு வரும்போது அதற்குச் சரியானதொரு விலை கிடைத்தால் மட்டுமே விவசாயி கனவு நிஜமாகும். இதுவரை எந்தவொரு விவசாயியுமே அதிகமாக வெளியில் சொன்னதில்லை. இந்த முழுநீள முயற்சியிலும் ஏதாவது ஓர் இடத்தில் தடைப்பட்டாலோ, எங்காவது ஓரிடத்தில் இயற்கை சதி செய்தாலோ மகசூலில் நிச்சயமாய் மனநிறைவே இருக்காது.

அரிசி பிளாஸ்டிக்கா பிளாட்டினமா என்ற ஆராய்ச்சியை அப்புறம் வைத்துக்கொள்ளலாம். நெல் செடியா மரமா என்று வருங்காலத் தலைமுறை கேள்வி கேட்டுவிடும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். நம் பிள்ளைகள் ஒவ்வொரு முறை உண்ணும் போதும் உழவனுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கற்றுக் கொடுப்போம். வீணாகும் ஒவ்வொரு பருக்கையின் பின் உள்ள உழைப்பிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்போம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday 9 September 2017

மாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்!

தர்மபுரி மாவட்டம், வறட்சியான மாவட்டங்களுள் இதுவும் ஒன்று. ஆனால் அந்த மாவட்டத்திலும் தற்போது பரவலாக விவசாயம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தபோது இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாதுளை கிடைக்கும் என விளம்பரப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. பண்ணைக்கு உள்ளே சென்று இயற்கை விவசாயி நீலகண்டனை சந்தித்தோம். மாதுளை பறித்துக் கொண்டிருந்தவர் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் முகமலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

“எனக்கு சொந்த ஊர் இந்த சோமனவள்ளி கிராமம்தான். விவசாயம் செய்து பொருட்களை மக்களுக்கு குறைவான விலையில்தான் விற்பனை செய்கிறோம். மக்களுடைய ஆரோக்கியத்திற்கு பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். பகுவா ரக ஒரு மாத வளர்ப்பு செடிகளை, ஒரு செடி 35 ரூபாய்க்கு விலைக்கு வாங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில், மொத்தமாக 750 செடிகளை நடவு செய்தேன். எனது உறவினர் ஒருவர் திருச்செங்கோட்டில் இயற்கை முறையில் மாதுளை தோட்டத்தை அமைத்து நல்ல முறையில் லாபம் ஈட்டி வருகிறார். அவரை பார்த்து தான் எனக்கு அதே போல மாதுளை தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது என்றவர், நடவு முறைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.

“செடிகளை நடுவதற்கு முன்பு இரண்டுக்கு இரண்டு அடி என்ற அளவில் குழி எடுக்கவேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளியில் செடி நடவு செய்து அதன் பிறகு மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்குடன் செடிகளை நட்டேன். 25 ஆயிரம் ரூபாய் தண்ணீர்க்குழாய்களை வாங்க செலவு செய்தேன். குழாய்களின் மூலம் செடிகளுக்கு இணைப்பு கொடுத்து சொட்டு நீர் பாசனம் அமைத்தேன். அதன்படி ஒரு நாளைக்கு 1/2 மணி நேர வீதம் ஒரு செடிக்கு 8 லிட்டர் தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் செடி காய்ப்பிற்கு வரும் வரை 1/2 மணி நேரமும் அதன் பிறகு செடி நன்கு வளர்ந்த பிறகு 1/4 மணி நேரமும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பஞ்ச காவ்யத்தை வாங்கி செடிகளுக்கு தெளித்தேன். பஞ்சகவ்யாவை நாமே தயாரித்தால் செலவினம் குறைவாக இருக்கும்.

ஒரு நாளைக்கு 1/4 மணி நேரம் மட்டும் நீர் பாய்ச்சினால் காய்ப்பு சரியாக வரவில்லை என்றால் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணிநேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு அதிகமாக இருந்தால், குறைவான தண்ணீரே போதுமானது. தண்ணீர் அதிகமாக பாய்ச்சினால் மரங்களில் அதிகமாக இலை பிடிக்கும், அதனால் அதிகமாக வரும் இலைகளையும், பக்க கிளைகளையும் கவாத்து செய்து விடுவேன்.

மாதுளையை பொறுத்த வரையிலும் பட்டம், காலநேரம் பார்க்கத் தேவையில்லை. இதனால் காய்ப்புக்கு வருவதில் சிக்கல் இருக்காது, எப்போதும் மகசூலை கொடுக்கக் கூடியது. 2015-ல் மாதுளை செடி வைத்தேன். மாதுளையில் ரெட் ரூபி, காபூல் என்று ரகம் பிரபலம். பகுவா ரக மாதுளையை காய்ப்புக்கு வரும் 15 வது மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் செடிகளை பராமரிக்க, களை எடுப்பது மற்றும் கவாத்து கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். மாதுளைக்கு சொட்டு நீர் பாசனம்தான் சிறந்தது. மழை பெய்யும் காலங்களில் பத்து நாளைக்கு தண்ணீர் விட வேண்டிய தேவை இல்லை” என்றவர், வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“தோட்டம் முழுமையாக அமைக்க குறைந்தபட்சம் ஐந்துலட்சம் வரை செலவாகும். கால்நடைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து இருக்கிறேன். கிளிகள், அணில், முயல் போன்றவை மட்டும் தோட்டத்திற்குள் வந்து விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் உரமாக அமைவதால் அதற்கு நாங்கள் எந்த தொந்தரவும் தருவதில்லை. தோட்டத்திற்கு நடுவே ஒரு சிறிய கண்காணிப்பு கோபுரம் அமைத்து இருக்கிறேன். அதில் ஏறி பார்த்தால் தோட்டத்தை எளிதாக கண்காணிக்கலாம். இரவு நேரங்களில் அந்த கோபுரத்திலே படுத்து கொள்வேன். எனது மனைவி கார்த்திகாவும் விவசாயத்தில் எனக்கு துணையாக இருக்கிறார். டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 15 வரை இரண்டு மாதங்களில் ஒரு நாளைக்கு நூறு கிலோ வரைகூட அறுவடை செய்யலாம். ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். நான் யாருக்கும் வெளியே கொண்டு போய் விற்பதில்லை. பழங்கள் தேவைப்படும் பொதுமக்களும் வியாபாரிகளும் தோட்டத்திற்கு நேரடியாக வந்து வாங்கி கொள்கிறார்கள். தினசரி வருமானமாக 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் கிலோ 100 ரூபாய் என வைத்துக்கொண்டால், தினமும் எனக்கு 2,500 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. மாதுளைச்செடி பத்து முதல் 12 வருடங்களுக்கு மகசூல் தரும். நாம் செடிகளை பராமரிப்பதை பொறுத்துதான் விளைச்சலும் இருக்கும், அதனால் மாதுளையில் வருமானத்தை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை” என்றபடி விடைகொடுத்தார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm