Saturday 29 April 2017

கால்நடைகளின் இலவச சேவை!


வயல்களில் களைகளை அகற்றுவதற்காக நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிகளைப் பலரும் பயன்படுத்துகின்றனர், வேறு சிலரோ ஏகப்பட்ட செலவு செய்து ஆட்களைக்கொண்டு களையெடுப்பதையே ஒரு தனி வேலையாகச் செய்கின்றனர். புல் வெட்டும் எந்திரங்களைக் கொண்டு புல்லை வெட்டி தள்ளுகின்றனர்.

இதனால் பொருள் இழப்பும், மண்வள இழப்பும் ஏற்படுகிறது. ஆனால் கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் உணவாகும் ஒரு மூலப்பொருள் களைகள். ஏற்கெனவே அவை அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

கவாத்து பணி :

செம்மறி ஆடுகள் மேயும் தன்மை கொண்டவை, முயல்களும் அதேபோல மேயும் தன்மை கொண்டவையே. இவற்றைக்கொண்டு புல்வெட்டும் வேலையை (mowing) செய்ய முடியும். செம்மறிகள் மேய்ந்து தின்பவை என்றால், வெள்ளாடுகள் ஆய்ந்து (browsing) தின்பவை. எனவே வெள்ளாடுகளைக்கொண்டு தழை வெட்டும் வேலையை, அதாவது கவாத்து (pruning) செய்ய முடியும்.

நம் முன்னோர் வரகு தானியத்தை விதைத்துவிட்டு அவை சற்று வளர்ந்த பின்னர் ஒரே சீராக விளைச்சல் தருவதற்காக வெள்ளாடுகளை விட்டு மேய்த்த தகவல்களை மூத்த உழவர் பெருமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நுட்பம் சில வகை நெற்பயிர்களுக்கும் பின்பற்றப்பட்டது உண்டு. ஏன் கொய்யாத் தோப்புகளில்கூட ஆடுகளை வைத்துக் கவாத்து செய்துகொள்ள முடியும்.

மண்ணைக் கொத்தலாம் :

தோண்டும் வேலையில் மிகத் தேர்ச்சி கொண்டவை கோழிகள். இவை மண்ணைக் கிளறித் தமக்கு வேண்டிய புழுக்களை, பூச்சிகளை உணவாக்கும். நமது உழவரும் கொளுத்தும் வெயிலில் மண்ணைக் கிளறிக் காய்கறி தோட்டம் போட அரும்பாடுபடுகிறார். கோழிகளைக் கொண்டு மண் கொத்தும் வேலையை (digging) செய்துகொள்ள முடியும். செச்லாட்டன் போன்றவர்கள் இந்த நுட்பத்தைக் கடைப்பிடிக்கின்றனர். எங்களுடைய அடிசில் சோலை பண்ணையில்கோழி வண்டிகள் மூலம் மண் கிளறும் வேலை நடக்கிறது. இப்படியாக, கோழிகளும் நமக்கு வேலை செய்கின்றன.

அவற்றிடமிருந்து நாம் வேலை வாங்குவது ஒரு புறம் இருக்க, அவற்றுக்குச் செய்ய வேண்டிய சில உதவிகளையும் நாம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக, கோழிகள் பறவை இனத்தைச் சேர்ந்தவை. கிளைகளிலும் கொப்புகளிலும் வாழும் இயல்பு கொண்டவை. உயரமான இடத்தில் வாழ முனைபவை. அவற்றுக்குக் கீரிகள், எலிகள் போன்ற விலங்குகளால் ஆபத்து நேரலாம் என்பதே காரணம். எனவே, அவற்றிடமிருந்து தப்ப மரங்களில் வாழும் தன்மையை அவை வளர்த்துக்கொண்டுள்ளன.

குஞ்சுகள் தாயைவிட்டுப் பிரிந்த பின்னர் அவை தங்குவதற்கு மரக்கிளைகளைப் போன்று உயரமான அமைப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால், அச்சமின்றி அவை தங்கும். கோழிக்கூட்டுக்கு அருகில் ஒரு போலி மரக்கிளை அமைப்பை வைத்துப் பாருங்கள், கோழிகள் அவற்றில் ஏறித் தங்குவதைக் காணலாம்.

மாடுகள் சுற்ற வேண்டும் :

மாடுகளும் ஆடுகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிய விரும்புபவை. அவற்றை நாம் கட்டிப்போட்டுப் பழக்கப்படுத்தியுள்ளோம். இதனால் அவற்றின் மகிழ்ச்சி குறைவதோடு, உற்பத்தித் திறனும் சேர்ந்தே குறையும். ஆகவே மாட்டுக் கொட்டகை அமைக்கும்போது அவை தடையின்றிச் சுற்றிவரும் வகையில் சற்றுப் பெரிய வளாகமாக வேலி அமைத்து, அவற்றுக்கு வேண்டியபோது நீர் அருந்தும்படியான ஏற்பாட்டைச் செய்தால் மாடுகள் மகிழ்ச்சியாக இருப்பதோடு உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை :


* கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.

* வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.

* மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.

* பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.

சீம்பால் :

* பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

* கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.

* பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.

* கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம்.

* அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.

தகவல் : வெ.மீனலோசனி, இரா.அன்னல்வில்லி, இரா.ஜோதிப்ரியா, கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி - 635 001.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday 25 April 2017

‘கோ 5’ ‘மசால் வேலி’: ஆடு, மாடுகளின் ‘அல்வா’!


தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘கறப்பது கால் படி; உதைப்பது பல்லுப்போக…’ எனக்கூறுவதற்கு ஏற்ப கறவை மாடுகளுக்கு வைக்கோல், பருத்திக்கொட்டை வாங்கும் செலவு மும்மடங்காகி விட்டது. போதுமான சத்தான தீவனம் கிடைக்காததால் பசு மாடுகளின் பால் கறவை குறைந்து விட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் பலர் விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கால்நடைகளுக்கான தீவன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் நரியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.பூமிநாதன்.

இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடை தீவன ரகத்தை சேர்ந்த ‘கோ 5’ மற்றும் ‘மசால் வேலி’ ஆகிய பசுந்தீவனம் வளர்க்கிறார்.

தினமும் தேவைக்கு ஏற்ப பசுந்தீவனத்தை வயலில் இருந்து அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால், அவற்றை விரும்பி உண்ணும் பசுக்கள் பால் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. கோடையில் தீவன பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.பூமிநாதன் கூறியதாவது:

* மதுரையில் முதல் முறையாக ஒரு ஏக்கரில் ‘கோ 5’ பசுந்தீவனம் விளைவிக்கிறேன்.

* கரும்பு போல் தோற்றம் கொண்ட ‘கோ 5’ தீவனம் கால்நடைகளின் ‘அல்வா’ என அழைக்கப்படுகிறது.

* இனிப்பு சுவை அதிகம் இருப்பால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.

* அனைத்து சத்துக்களும் பொதிந்து கிடப்பதால் கறவை மாடுகளுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறது.

* பத்து பசுக்கள், ஐந்து கன்றுகளுக்கு தீவனம் வாங்கினால் கட்டுபடியாகாது.

* ‘கோ 5’ தீவனம் ஆண்டு முழுவதும் பயனளிக்கிறது.
விதை கரனை ஒன்று ஒரு ரூபாய். விரும்பி கேட்போருக்கு தருகிறேன்.

* ஆடுகள் விரும்பி உண்ணும் ‘மசால் வேலி’ எனும் பசுந் தீவனம் ஒரு ஏக்கரில் வளர்க்கிறேன்.

* மசால் வேலி செடிகள் நாட்டு கருவேல செடிகள் போல் தோற்றம் கொண்டிருக்கும்.

* விதைகள் கடினமாக இருக்கும். எனவே விதைகளை கொதிக்கும் வெண்ணீரில் சிறிது நேரம் ஊற விட வேண்டும். பின் உலர்த்தி நிலத்தில் பாவி விளைவிக்கலாம்.

* 40வது நாளில் இருந்து பல ஆண்டுகள் வரை பலன் தரும். புரதச்சத்து மிகுந்திருப்பதால் ஆடுகள் உடல் பருமனில் பெருத்தும் ஆரோக்கியமாகவும் வளரும் என்றார். செலவு குறைவு; வரவு அதிகம். கொட்டில் முறை ஆடு வளர்ப்போருக்கு மசால் வேலி ஒரு வரப்பிரசாதம் என்றார்.

தொடர்புக்கு 09842179980 .

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 24 April 2017

35 ஏக்கரில் ஆண்டுக்கு 17 லட்சம் ! ஒப்பில் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்...


ஒரே ஒரு பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல், பலவிதமான பயிர்களைக் கலந்து சாகுபடி செய்பவர்களும்... விவசாயத்தோடு கால்நடைகளையும் வளர்த்து வளர்பவர்களும், பெரும்பாலும் நஷ்டத்தை சந்திப்பதில்லை. இதைத்தான் விவசாய வல்லுநர்கள் பலரும் நெடுங்காலமாக சொல்லி வருகிறார்கள். இதைச் சரியாகக் கடைபிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர் உண்டு என்பதற்கு உதாரணமாக நிற்கிறார்... திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இனியவன்!

படித்தது பார்மசி... பார்ப்பது பண்ணையம் !

தென்னை, வாழை, கரும்பு... என பசுமையாக, கலந்து கட்டி இருக்கும் தன்னுடைய தோட்டத்தில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இனியவன், நம்மைக் கண்டதும், சற்றே இளைப்பாற வந்தமர்ந்தார்.

''வேலையாட்கள் கிடைக்காம, முப்பது வருஷத்துக்கு முன்னயே, 21 ஏக்கர்ல தென்னையை நட்டு விட்டுட்டார் எங்கப்பா. டி-பார்ம் முடிச்சுட்டு, அப்பா வெச்சுருந்த ரைஸ் மில் வேலையில நான் தீவிரமாயிட்டேன். கூடவே விவசாயமும். ஆரம்பத்துல... ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு தான் பயன்படுத்தினேன். செலவுதான் அதிகமா இருந்ததே தவிர, பெருசா வருமானம் இல்லை. இதுக்குத் தீர்வைத் தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போதான், நாலு வருஷத்துக்கு முன்னாடி 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுக்கப்பறம்தான் ஒரு நம்பிக்கை கிடைச்சுது. இயற்கை வழி விவசாயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த இனியவன், தொடர்ந்தார்.

வண்டிக்கு காங்கேயம்... உரத்துக்கு உம்பளாச்சேரி !

''ஆரம்பத்துல இருந்தே கறவை மாடுகள வெச்சுருந்தோம். பசுமை விகடன் மூலமா, 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, நம்ம நாட்டு இனமான காங்கேயம் மாடுகளையும், உம்பளாச்சேரி கிடேரிக் கன்றுகளையும் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன். காங்கேயம் மாடுகளை வண்டியில பூட்டி... தேங்காய் ஏத்துறது, நெல்லை ஏத்துறது மாதிரியான வேலைகளுக்குப் பயன்படுத்திட்டுருக்கேன். மாடுகள் மூலமா கிடைக்கிற கழிவுகளை, வயலுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். இதெல்லாம் போக, மாமா எழில்மாறனோட சேர்ந்து, சண்டைக்கோழி வளர்ப்பும் தனியா நடக்குது. ஆடு வளர்ப்புலயும் இறங்கியிருக்கேன்.

ஏற்கெனவே இருக்கற 21 ஏக்கர் தென்னையில, 10 ஏக்கர்ல மட்டும் ஊடுபயிரா வாழை இருக்கு. இதைத் தவிர, தனியா 3 ஏக்கர்ல வாழை, 2 ஏக்கர்ல கரும்பு, 5 ஏக்கர்ல மரவள்ளி, 2 ஏக்கர்ல தீவனப்புல் இருக்கு. ரெண்டு ஏக்கர்ல மாட்டுக் கொட்டகை, ஆட்டுப் பண்ணை, ரைஸ் மில் இருக்கு. மொத்தம் 35 ஏக்கர். இதுல 10 ஏக்கர் குத்தகை நிலம். குத்தகை நிலம்கிறதால சிலகாரணத்துக்காக கரும்புக்கும், மரவள்ளிக்கும் ரசாயனம் போட்டுத்தான் விவசாயம் செய்றேன். மத்தபடி என்னோட தோட்டத்துல முழு இயற்கை முறைதான்.

மரத்துக்கு 80 முதல் 100 காய்கள் !

இது கரிசல் மண் பூமி. 30 அடியிலேயே தண்ணியும் இருக்கு. அதனால, எல்லா சாகுபடியும் சாத்தியமாகுது. 21 ஏக்கர்ல மொத்தம் 2 ஆயிரத்து 200 தென்னை மரம் இருக்குது. எல்லாமே, 25 வயசுல இருந்து 35 வயசுள்ள மரங்கள். அதுகளைப் பராமரிக்கறது மட்டும்தான் வேலை. ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்துல மழைக்கு முன்ன... ஒவ்வொரு மரத்தில இருந்தும் இரண்டு அடி இடைவெளியில ஒண்ணரை அடி ஆரத்துல, கால் வட்டம் எடுத்து, 25 கிலோ எரு வெச்சுத் தண்ணி கட்டுவோம். வேற பராமரிப்பே கிடையாது.

ஒவ்வொரு மரத்துலயும் வருஷத்துக்கு எண்பதுல இருந்து நூறு காய்கள் வரை கிடைக்குது. ஒரு மரத்தை 125 ரூபாய்னு குத்தைகைக்கு விட்டிருக்கிறேன். அது மூலமா, 2 ஆயிரத்து 200 மரத்துக்கும் சேத்து வருஷத்துக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. அதில் பராமரிப்புச் செலவு 75 ஆயிரம் ரூபாய் போக, 2 லட்சம் ரூபாய் லாபம்'’ என்ற இனியவன் வாழை சாகுபடி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

வாழை இலையிலும் வருமானம் !

''தென்னைக்கு இடையில கற்பூரவல்லி வாழைய நடவு செஞ்சுருக்கேன். 13 ஏக்கர்ல மொத்தம் வருஷத்துக்கு 8 ஆயிரம் தார் கிடைக்குது. ஒரு தார், 100 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா, 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே... 8 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில் 3 லட்சம் செலவு போக, 5 லட்ச ரூபாய் லாபம். வருஷம் முழுக்க இலையையும் விக்கலாம். அது மூலமா, வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்குது.

பாலில் மாதம் 26 ஆயிரம் !

இப்போ, 24 கறவை மாடுக இருக்கு. இதுல எப்பவும் 10 மாடுகள் கறவையில இருந்துக்கிட்டே இருக்கும். தினமும் சராசரியா 40 லிட்டர் பால் கிடைக்குது. லிட்டர் 22 ரூபாய்னு பால் மூலமா தினமும் 880 ரூபாய் கிடைக்குது. மாசம் 26 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்குது. செலவு போக, 16 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்றவரைத் தொடர்ந்து, ஆட்டுப் பண்ணை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், மாமா எழில்மாறன்.

ஆண்டுக்கு 2,40,000 ரூபாய் !

''போன வருஷம்தான் ஜமுனாபாரி, போயர் கலப்பு, நாட்டு ரக ஆடுகள்னு மொத்தம் 30 ஆடுகளோட பண்ணை ஆரம்பிச்சோம். கொட்டகை, தீவனப் புல் உற்பத்தி, ஆடுகள்னு இதுவரைக்கும் 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கோம். ஒரு வருஷத்துக்குள்ளாற 65 ஆடுகளாப் பெருகியிருக்கு. இதுவரைக்கும் ஆடுகளை விற்பனை செய்யல. இனிதான் ஆரம்பிக்கணும்.

30 தாய் ஆடுகள் மூலமா, வருஷத்துக்கு 90 குட்டிகளுக்கு குறையாம கிடைக்கும். குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து வித்தா, ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். சராசரியா வருஷத்துக்கு 80 குட்டிகளை விக்கிறதா வெச்சுக்கிட்டாலும்... வருஷத்துக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், மருந்து, பராமரிப்புனு 80 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறோம்'' என்றார், எழில்மாறன்.

நிறைவாகப் பேசிய இனியவன், ''சண்டைக்கோழியில் 40 பெட்டையும், 3 சேவலும் இருக்கு. இதுக மூலமா, வருஷத்துக்கு 1,600 முட்டைகள் கிடைக்கும். இந்த முட்டைக்கு மவுசு ஜாஸ்திங்கறதால... ஒரு முட்டை 20 ரூபாய்னு விலைபோகும். இப்படி 1,000 முட்டைகளை வித்துடுவேன். மீதியை இன்குபேட்டர்ல வெச்சு பொரிக்க வைக்கறதுல, எப்படியும் 500 குஞ்சுகள் கிடைச்சுடும். இதை ஒரு ஜோடி 1,000 ரூபாய்னு விக்கிறோம். முட்டை, குஞ்சு விற்பனை மூலமா மொத்தம் வருஷத்துக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. பராமரிப்பு, தீவனச் செலவு போக... எப்படியும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.

2 ஏக்கர்ல ஒரு வருஷத்துக்கு கிடைக்கிற 100 டன் கரும்பு மூலமா 2 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல 80 ஆயிரம் ரூபாய் செலவு போக... 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபம். 5 ஏக்கர்ல வருஷத்துக்கு 50 டன் அளவுக்கு மரவள்ளி கிடைக்குது. டன் 3 ஆயிரம் ரூபாய்னு விக்கிறதுல, மரவள்ளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். செலவு போக 1 லட்ச ரூபாய் லாபம். எல்லாம் சேத்து 35 ஏக்கர்ல, பத்து ஏக்கருக்கான குத்தகைத் தொகை, செலவுகள் போக, வருஷத்துக்கு 17 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது'' என்றார், சந்தோஷமாக.

உற்சாக ஊடுபயிர்... வாழை!
தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்ய இனியவன் பயன்படுத்தும் முறைகள் இவைதான்-

''தென்னைக்கு ஊடுபயிராக சாகுபடி செய்ய கற்பூரவல்லி ரக வாழைதான் ஏற்றது. நிலத்தை நன்றாக கொக்கிக் கலப்பை மூலம் குறுக்கு-நெடுக்காக 4 சால் உழவு செய்து, ஏக்கருக்கு நான்கு டிராக்டர் எருவைக் கொட்டி கலைத்துவிட வேண்டும். பிறகு, இரண்டு சால் ரோட்டாவேட்டர் உழவு செய்து, 9 அடிக்கு 9 அடி இடைவெளி கொடுத்து... ஒரு அடி நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அவற்றை நான்கு நாட்கள் ஆறப் போட்டு... தரமான இரண்டு மாத வயதுள்ள வாழைக் கன்றுகளை அரை அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 600 முதல் 650 வாழைக் கன்றுகளை நடவு செய்யலாம். விருப்பம் இருந்தால் வாழைக்கும், தென்னைக்கும் இடையில் தீவனச்சோளத்தை நடவு செய்து கொள்ளலாம். வாழை நடவு செய்த அன்று உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, மண் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

மாதம் ஒரு முறை வீதம், 6 மாதங்கள் வரை களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் நிழல்கட்டிக் கொள்ளும். மூன்றாவது மாதம் களை எடுத்தவுடன் மரத்துக்கு ஒரு கூடை (25 கிலோ) வீதம் எரு வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாழை மரத்தில் இருந்து ஒரு அடி இடைவெளி கொடுத்து, ஒரு அடி நீளம், அகலம், ஆழம் இருக்குமாறு குழி எடுத்து... அதில், மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் ஜீவாமிர்தக் கரைசலை ஊற்ற வேண்டும்.
தார் தள்ளிய பிறகு முட்டு மரம் கட்ட வேண்டும். முதல் ஆண்டு 15 மாதங்கள் கழித்து, வாழை அறுவடை செய்யலாம். இரண்டாம் ஆண்டில் 12 முதல் 13 மாதங்களில் அறுவடை செய்யலாம். மூன்றாம் ஆண்டிலிருந்து 10 மாதங்களில் அறுவடை செய்யலாம்.'

தொடர்புக்கு :
இனியவன்,
செல்போன்: 94872-63606.
எழில்மாறன்,
செல்போன்: 89034-42489.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday 23 April 2017

ஆடு, கோழி, மாடு, நெல், எலுமிச்சை...குடும்பத் தலைவியின் இயக்கத்தில் ஓர் ஒருங்கிணைந்த பண்ணை!


திருமணத்துக்குப் பிறகு சிறகுகளை முடக்கிக் கொண்டு குடும்பக்கூட்டுக்குள் முடங்கும் பெண்கள்தான் ஏராளம். ஒரு சிலரே அந்தக்கூட்டுக்குள் இருந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டுவர். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த தீபலட்சுமி. ‘விவசாயம் செய்ய வேண்டும்’ என்ற பெருங்கனவில், கணவரின் துணையோடு நிலம் வாங்கி, ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ அமைத்து வருமானம் பார்த்து வருகிறார், இவர்.

வேலூர்-சித்தூர் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கொள்ளமடுகு கிராமம் (ஆந்திர மாநிலம்). இங்குதான் அமைந்துள்ளது, தீபலட்சுமியின் ஒருங்கிணைந்த பண்ணை. தோட்டத்தில் நுழைந்ததும், குரைப்பின் மூலமாக நமது வரவை அறிவித்தன, தீபலட்சுமியின் வளர்ப்பு நாய்கள். முற்றத்தில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகள், பசுந்தீவனத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த காசர்கோடு குட்டை மாடுகள், கொட்டிலுக்குள் உலவிக்கொண்டிருந்த ஆடுகள்... என இனிமையான சூழலில் இருந்தது, அந்தப்பண்ணை. நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர், சுதாகரன் - தீபலட்சுமி தம்பதியர்.

விவசாய ஆசை கொடுத்த பசுமை விகடன்!

முதலில் பேசிய தீபலட்சுமி, “வேலூர்தான் எனக்குச் சொந்த ஊர். எம்.சி.ஏ முடிச்சிட்டு வேலூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வேலை பார்த்தேன். படிப்பு, வேலை எல்லாமே நகரத்துல இருந்தாலும், எனக்கு விவசாயம், ஆடு, கோழி வளர்ப்புல ஆசை அதிகம். அதுக்குக் காரணம் கிராமத்துல இருந்த எங்க பாட்டிதான். அவங்க வீட்டுக்கு நான் அடிக்கடி போய் வந்ததால எனக்கு விவசாயம், கால்நடை வளர்ப்புனு ஆசை வந்துடுச்சு. ஆனா, எங்க வீட்டுல செடி வளர்க்க இடமில்லை. வேலைக்குப் போயிட்டு இருந்ததால நேரமும் இல்லை.

அப்புறம் கல்யாணம், குழந்தைனு ஆனதும் வேலையை விட்டுட்டேன். கணவர் வீட்டுல செடிகள் வளர்க்க இடம் இருந்ததால காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். கணவர் அசிஸ்டண்ட் புரொபசரா இருக்கார். அவர் பயோ-டெக்னாலஜி படிச்சிருக்கறதால இயற்கை பத்தி அடிக்கடி பேசுவார். அவர்தான் எனக்கு ‘பசுமை விகட’னை அறிமுகப்படுத்தினார். அதைப்படிக்க ஆரம்பிச்சதும், நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை அதிகமாச்சு” என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், அவருடைய கணவர் சுதாகரன்.

“எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தாலும், விவசாயம் செய்ய நேரம் இல்லை. மனைவி ஆசைப்பட்டதும் அதை நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணுனேன். நிலத்தைத் தேடி அலைஞ்சப்போ எனக்கும் விவசாய ஆசை அதிகமாகிடுச்சு. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்தா நிலம் பார்க்கக் கிளம்பிடுவேன். பல தேடல்களுக்குப் பிறகு இந்த மூணு ஏக்கர் நிலம் கிடைச்சது. இதை வாங்கி ஒண்ணரை வருஷமாச்சு. பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை அடிப்படையா வெச்சு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்னு முடிவு செய்தோம்.

மகிழ்ச்சி கொடுத்த நிலக்கடலை!

நிலத்தைச் சுத்தம் செய்து, 80 சென்ட் நிலத்துல முழு இயற்கை முறையில மானாவாரியா நிலக்கடலை விவசாயம் செய்தோம். அதுல 10 மூட்டை நிலக்கடலை கிடைச்சது. அதைப் பார்த்தப்ப சந்தோஷம் தாங்க முடியலை. அடுத்து போர்வெல் போட்டுட்டு நிலக்கடலை அறுவடை செய்த நிலத்துல பலதானிய விதைப்பு செய்து, மடக்கி உழுது வெச்சிருந்தோம்.

பாடம் கற்றுக் கொடுத்த நெல்!

அப்போ, ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில இருந்து பயிற்சிக்காக வந்திருந்த அஞ்சு மாணவர்கள், அந்த நிலத்துல ஒற்றை நாற்று முறையில நெல் நடவு செஞ்சாங்க. அதுல பயிர் நல்லா வளர்ந்துச்சு. ஆனா, எங்களுக்கு அனுபவம் இல்லாததால சரியா பராமரிக்கல. அதனால, 80 சென்ட்ல 6 மூட்டை (80 கிலோ மூட்டை) நெல்தான் கிடைச்சது. அதை அரைச்சதுல 300 கிலோ அரிசி கிடைச்சது. 150 கிலோ அரிசியை 72 ரூபாய்னு இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்துட்டோம். மீதி அரிசியை, சொந்தக்காரங்களுக்குக் கொடுத்தோம்.

லாபம் கொடுத்த கீரை!

அடுத்து, கீரை சாகுபடி செய்யலாம்னு முடிவு செய்து, 10 சென்ட் நிலத்துல அரைக்கீரையையும், சிறுகீரையையும் வெதைச்சிருந்தோம். வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரம் பயன்படுத்தினதுல பூச்சித் தாக்குதல் அதிகம் இல்லாம செழிப்பான கீரை கிடைச்சது. ஒரு கட்டு 7 ரூபாய்னு, தினம் 20 கட்டுகள் வீதம் இயற்கை அங்காடியில விற்பனை செய்தோம். மொத்தம் ஆயிரம் கட்டுக்கீரை கிடைச்சது. அதுல செலவு போக 5 ஆயிரம் லாபம் கிடைச்சது” என்று சுதாகரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு அலைபேசி அழைப்பு வர, மேற்கொண்டு நமக்கு பண்ணையைச் சுற்றிக் காட்டி விளக்க ஆரம்பித்தார் தீபலட்சுமி.

நம்மாழ்வார் வழியில் பண்ணை வடிவமைப்பு!

“மொத்தம் மூணு ஏக்கர் நிலம். அதுல 80 சென்ட்ல எலுமிச்சை இருக்கு. 40 சென்ட்ல வேலிமசால், முயல்மசால், கோ-4, அகத்திக்கீரை, சூபாபுல்னு பலவகையான பசுந்தீவனங்கள் இருக்கு. 23 சென்ட்ல மீன்குளம், 5 சென்ட்ல கிணறு, 20 சென்ட்ல வண்டிப்பாதை, 80 சென்ட்ல நெல், 30 சென்ட்ல சேம்பு இருக்கு. 22 சென்ட்ல வீடு, ஆட்டுப்பட்டி, மாட்டுக்கான கொட்டகை எல்லாம் இருக்கு.

நம்மாழ்வார் அய்யா சொல்லிச் சென்ற வழிமுறைகளின்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். நீண்ட நாள் வருமானம் கொடுக்கிற பயிர்ங்கிறதால எலுமிச்சை நட்டோம். 18 அடிக்கு 18 அடி இடைவெளியில 80 சென்ட் நிலத்துல மொத்தம் 100 செடிகள் இருக்கு. நடவு செய்து ஆறு மாசம் ஆகுது. இன்னும் மூணு வருஷத்துல வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். 100 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் வருமானம் எடுக்கணுங்கிறது எங்க குறிக்கோள்.

இந்தப் பகுதியில நிறைய பேர் சேம்பு சாகுபடி செய்றதால நாங்களும் கொஞ்சம் சேம்பு நட்டிருக்கோம். இப்போ 3 மாசப்பயிரா இருக்கு. இன்னும் 3 மாசத்துல வெட்டுக்கு வந்துடும். வெட்டும்போது, 20 மூட்டை (100 கிலோ) அளவுக்குச் சேம்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது மூலமா 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்.

80 சென்ட் நிலத்துல இந்த முறை அறுபதாம் குறுவையையும், சீரகச் சம்பாவையும் நடவு செய்யலாம்னு இருக்கோம்.

கேரளாவில் கிடைத்த குட்டை மாடு!

பசுமை விகடன்ல ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைப் படிச்ச பிறகு நாட்டு மாடுதான் வாங்கணும்னு முடிவு செய்துட்டேன். பலகட்ட தேடலுக்குப் பிறகு, உலக அளவுல குட்டை இன பசுவான ‘காசர்கோடு குட்டை’ ரக மாடுகளை வாங்கினோம். நாலு பெரிய மாடுகள், ஒரு கன்றுக்குட்டினு மொத்தம் அஞ்சு மாடுகள் இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. ஒண்ணரை வயசுல ரெண்டு கிடேரிகள் நிக்கிது. ஒரு மாடு மட்டும் கறவையில இருக்கு. அதுல இருந்து தினம் கன்றுக்குட்டிக்கு ஒரு லிட்டர் அளவுக்குக் குடிக்க விட்டது போக, ஒண்ணரை லிட்டர் பால் கிடைக்கிது. மாடு குட்டையா இருக்கிறதால பராமரிக்கிறது சுலபமா இருக்கு. தினம் 5 கிலோ தீவனமே போதுமானதா இருக்கு. இந்த இனத்தைக் கலப்பில்லாம பெருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்.

ஓஹோ... ஓஸ்மானாபாடி!

இங்க நிக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ஓஸ்மானாபாடி ஆடுகள். நம்ம நாட்டு ரக ஆடுகளைப் போலவே கருப்பு நிறத்துல இருக்கும். ஆனா, இந்த ரகத்துல பால் அதிகமா கிட்டைக்கும். ரெண்டு கிடா, 13 பெட்டை, 3 குட்டிகள்னு மொத்தம் 18 ஆடுகள் இருக்கு. உலவுறதுக்கு இடம் விட்டு கொட்டகை அமைச்சிருக்கோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் காலையிலயும் சாயங்காலமும் ஒண்ணரை கிலோ அளவுக்கு பசுந்தீவனமும், கால் கிலோ அடர்தீவனமும் கொடுக்கிறோம். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு குட்டிகள் பெருகினதுக்கப்பறம்தான் இதுல வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 40 குட்டிகள் எடுக்கணும்னு வெச்சிருக்கோம். எங்க கணக்குப்படி சரியா கிடைச்சா ஆடு மூலமா வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் எடுக்க முடியும்.

செலவில்லா வருமானம் கொடுக்கும் கோழிகள்!

‘பெருவிடை’ நாட்டுக்கோழி ரகத்துல 8 பெட்டை, 2 சேவல்னு மொத்தம் 10 கோழி வெச்சிருக்கோம். இப்போ, வாரம் 25 முட்டையில இருந்து 30 முட்டைகள் வரை கிடைக்கிது. ஒரு முட்டை 8 ரூபாய்னு விற்பனை செய்றோம். கோழிகளுக்குத் தீவனத்துக்காக எந்தச் செலவும் இல்லை. மேய்ச்சல் மட்டும்தான்.

இதோட, ஒரு ஜோடி கோம்பை நாய்களை தடுப்பூசி எல்லாம் போட்டு ஊட்டமா வளர்த்துக்கிட்டிருக்கோம். அதுல இருந்து குட்டிகளை எடுத்து விற்பனை செய்யலாம்னு இருக்கோம். மீன் வளர்ப்புக்காக 10 ஆயிரம் சதுர அடியில குளம் எடுத்து வெச்சிருக்கோம். இன்னும் மீன் வளர்க்க ஆரம்பிக்கலை. அதே மாதிரி நிலத்துல அமைச்சிருக்கிற பாதையில தென்னை, கொய்யா, சப்போட்டா, நாவல், மாதுளை, மா, பலா, வாழைனு பழச்செடிகளை நடவு செய்திருக்கோம். வாழை சீக்கிரம் தார் போட்டுடும். மத்த பழங்கள் கிடைக்க மூணு வருஷம் ஆகும். எப்பவும் ஏதாவது ஒரு பழம் தோட்டத்துல காய்ச்சிட்டு இருக்குற மாதிரிதான் தேர்வு பண்ணியிருக்கோம்” என்று நிறுத்தினார் தீபலட்சுமி.

நிறைவாகப் பேசிய சுதாகரன், ‘‘தற்சமயம் பண்ணை வளர்ச்சி நிலையிலதான் இருக்கு. இப்போதைக்கு முட்டை விற்பனை, நெல், கீரை விற்பனை மூலமாகக் கிடைக்கிற வருமானம் பராமரிப்புக்கே சரியாகிடுது. இன்னும் ரெண்டு வருஷத்துல நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும். அதுக்குப் பிறகு வருஷத்துக்கு 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது இல்லாம இப்போ எங்க பிள்ளைங்களுக்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.

நகர வாழ்க்கையில இருக்கிற வெறுமையை, இந்தப் பண்ணை மூலமா போக்கிக்கிட்டோம். கூடவே வருமானத்துக்கான வழியையும் உருவாக்கிட்டோம். இதைவிட நகர வாழ்க்கையில கூடுதல் வருமானம் கிடைக்கலாம்... ஆனா, இந்த சந்தோஷம் கிடைக்குமா” என்று கேட்டு புன்னகையுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு :
தீபலட்சுமி,
செல்போன்: 96773-07272

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday 22 April 2017

வெப்பத்தையும், காற்றில் இருக்கும் மாசுவையும் குறைக்கும் புங்கன் மரம் பற்றி தெரியுமா?


142 வருடங்கள் காணாத வறட்சி தமிழகத்தை வாட்டுகிறது. 'அந்த மாவட்டத்தில் 110 டிகிரி வெயில்,இந்த மாவட்டத்தில் 108 டிகிரி வெயில்' என்று தினம் ஒரு 'அனல்' செய்தி நம்மை வாட்டுகிறது. பிரேக்கிங் நியூஸ்களில் கட்டாயம் வெயிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு வெப்பம் நம்மை நொங்கெடுக்கிறது. இதனால்,பூமிக்கு கீழே தண்ணீர் லெவல் அதலபாதாளத்திற்கு போக, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மாவட்டந்தோறும் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். முந்தாநாள் வானிலை ஆராய்ச்சி மையம், 'பதினெட்டு மாவட்டங்களில் அனல் காற்று வீசும். அதனால்,தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம்' என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் வெயிலில் வந்த ஒரு முதியவர் வெயிலின் கொடுமையில் மயங்கி விழுந்து உயிரை விட்டிருக்கிறார். வீட்டிற்குள்ளும் இருக்க முடியவில்லை. வெப்பம் போட்டு தாளிக்கிறது. ஃபேனை சுழலவிட்டால், அதுவும் தன் பங்குக்கு வெப்ப காற்றை நம் உடம்பின் மீது படரவிட்டு இம்சிக்கிறது. இதனால்,'வெயிலில் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்வது?' என்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள் மக்கள். 'வெயிலின் உக்கிரத்தை தடுக்க இத பண்ணுங்க, அத பண்ணுங்க' என்று மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு டிப்ஸ்களை அள்ளி தெளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால்,வெயிலின் வெக்கையில் இருந்து அதெல்லாம் தற்காலிகமாகதான் பாதுகாக்கும். மனிதர்களுக்கு நிரந்தர குளிர்ச்சியை தரும் மரம் புங்கன் என்பது உங்களுக்கு தெரியுமா?.

இன்று மாநகரங்கள், நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களில்கூட கான்கிரீட் வீடுகள் அதிகரித்துவிட்டதால், சமூக காடுகள் குறைந்து நகரம், கிராமங்கள் யாவும் 'கான்கிரீட்' காடுகளாகிவிட்டன. சமூக காடுகள் குறைந்ததால், வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசு அடைந்ததோடு, அதீத வெப்பமும் அடைந்திருக்கிறது. இயற்கை மீது நாம் இஷ்டத்திற்கு 'கை' வைத்ததால், இப்போது கடும் வறட்சி, பருவம் தவறிய மழை, அதிக பனிக்காற்று, அதிகமான வெயில் என்று பல பாதிப்புகளால் இயற்கை நம்மை பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. எனவே, இனியும் இயற்கையை சீண்டாமல், நம்மால் முடிந்த அளவிற்கு வீடு, தெருக்களில் 'புங்கன்' வளர்த்து 'வெப்பம்' குறைக்கலாம். அல்லது புண்ணியம் தேடலாம்.

கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும் காற்று வெப்பமடைந்து வருகிறது. போதாக்குறைக்கு வாகனங்களின் புகையால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. அதிகப்படியான மின் விளக்குகளாலும் வெக்கை அதிகரிக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும்,மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து, இம்மரத்தின் கிளைகள் அதிகமான குளிர்ச்சி நிறைந்த காற்றை நமக்கு கொடுக்கும். இம்மரம் காற்றில் உள்ள மாசுக்களை (கார்பன்டை ஆக்ஸைடு) வடிக்கட்டி நல்ல காற்றினை (ஆக்சிஜன்) நமக்கு தரவல்லது.

அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது. அதனால்,இயற்கையை அழித்து நாம் செய்த பெரும்பாவத்திற்கு மாற்றாக இந்த மரத்தை நட்டு புண்ணியம் தேடலாம். பள்ளி,அரசு வளாகங்களில் 5 முதல் பத்து மரமும், 30, 40 வீடுகள் உள்ள மாநகர, நகர தெருக்களில் பத்து புங்கனும், பெரிய வளாகங்களில் 15 மரங்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். அதேபோல், கிராமங்களில் வீட்டிற்கு ஒரு புங்கன் மரக்கன்றை வீட்டின் முன்பு நட்டு வளர்க்கலாம். வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்று குளிர்காற்றாக மாறும். அதன்மூலம், நம்மை தாக்கும் வெயிலின் உக்கிரம் குறையும். இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை,வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ, அல்லது சுவர்களையோ பாதிக்காது. அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளக்கலாம்.

அப்புறம் என்ன, வெயிலுக்கு பயந்து வெள்ளரிக்காய் சாப்பிடுவதோடு, வெள்ளனா புங்கன் மரத்தை நடும் சோலியையும் சட்டுபுட்டுன்னு பாருங்க மக்களே!.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday 19 April 2017

“செலவு குறைந்த பாரம்பர்ய முறைகள் இருக்க, கடனில் தள்ளும் ரசாயனங்கள் எதற்கு?”


சாம்பல் இருக்க பயமேன்!

கோவில்பட்டி மண்வள ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அலுவலர் நீ.செல்வம் பேசியபோது... 

“செடிகள்ல பூச்சிகளைப் பார்த்தவுடனேயே கடைக்குப்போய் ரசாயனப் பூச்க்கொல்லியை வாங்கி தெளிக்கிறதுதான் விவசாயிகள் செய்ற பெரிய தவறு. தொடுநஞ்சு, குடல்நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகைநஞ்சு, நரம்புநஞ்சு என மொத்தம் அஞ்சு வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்கு. இந்த அஞ்சு வகைகளையும் நாம உபயோகப்படுத்திட்டோம். இந்தியாவில இப்போ அதிகமா விற்பனையாகிறது, ஐந்தாம் தலைமுறைப் பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சுதான். விதையிலேயே பூச்சிக்கொல்லியைத் தெளித்து விற்பனை செய்றாங்க. ஆனாலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியலைங்கிறதுதான் உண்மை. என்ன காரணம்னா... பூச்சிக்கொல்லியை திரும்பத் திரும்ப பூச்சிகள் மேல தெளிக்கிறப்போ, பூச்சிகளோட உடம்புல எதிர்ப்புத்தன்மை உருவாகிடுது. அதனால, பூச்சிக்கொல்லிகள் விஷமா இல்லாம, பூச்சிகளுக்கு டானிக்காக மாறிடுது. நாம அடிக்குற பூச்சிக்கொல்லிகள் மண்ணுலயும் விழறதால மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் செத்துப் போகுது.
நெற்கதிர்கள்ல பால் பிடிக்கிற சமயத்துல கதிர் நாவாய்ப்பூச்சி தாக்கும். அப்படிப்பட்ட சமயத்துல அடுப்புச்சாம்பலை வயல்ல தூவி விடுறதைத்தான் வழக்கமா வெச்சிருந்தோம். பூச்சிகள் கட்டுப்பட்டுடும். ஆனா, இப்போ அதை மறந்துட்டு வீரியமான பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறோம். அது நெற்கதிர் முழுக்க பட்டுடும். அறுவடை செய்த பிறகு வைக்கோலை மாட்டுக்குக் கொடுக்கிறோம். வைக்கோல் மூலமா மாட்டு உடம்புக்குள்ள நஞ்சு போகுது. அப்போ அது கொடுக்கிற பாலும் நஞ்சாகிடுது. பூச்சிகளை அழிக்க தெளிக்கிற விஷம் இப்படித்தான் மறைமுகமா மனிதனையும் பாதிக்குது.

களைக்குப் பயந்தால் விதைக்க முடியாது, பூச்சிகளுக்குப் பயந்தா விவசாயமே செய்ய முடியாது. பூச்சிகள் எல்லாமே கெட்டது செய்றதில்ல. நல்லது செய்ற பூச்சிகளும் இருக்கு. பயிரைத் தாக்குற கெட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தணும்னா நல்லது செய்யுற பூச்சிகள் வயல்ல இருக்கணும். ஆனா, பூச்சிக்கொல்லி தெளிக்கிறப்போ அவ்வளவு பூச்சிகளும் அழிஞ்சிடும்.

வயலைச் சுத்தியும், ஊடுபயிரா தட்டைப்பயறை விதைச்சு விட்டா அசுவினிப் பூச்சிகள் தட்டையில் வந்து உட்காரும். அதைச் சாப்பிட இன்னொரு பூச்சி வரும். அதனால இயற்கை முறையில பூச்சிக் கட்டுப்பாடு நடந்துடும். வரப்பு ஓரங்கள்ல ‘கொட்டமுத்து’னு சொல்ற ஆமணக்கை 8 அடி இடைவெளியில நட்டு... செடி வளர்ந்ததும் வாரம் ஒரு தடவை அதன் இலைகளைக் கசக்கி விடணும். அப்படி செய்துட்டா பூச்சிகள் பக்கத்துல வராது. சூரியகாந்தியும், செண்டுமல்லியும் கூட நட்டு வைக்கலாம். இதுக்கும் மேல, பூச்சிகள் வந்தா... வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், இனக்கவர்ச்சிப்பொறிகள், விளக்குப்பொறிகள்னு பயன்படுத்தலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகள் தேவையேயில்லை. முதல்ல நமக்கு பூச்சிகளைப் பத்தின புரிதலை உண்டாக்கிட்டா போதும். பயப்படாம விவசாயம் செய்யலாம்” என்று அழகாக எடுத்துச்சொன்னார்.

பாறையாகி வரும் மண்!

தொடர்ந்து பேச மேடையேறினார், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ‘முன்னோடி இளம் விவசாயி’ பரத். மேஜையில் 4 கண்ணாடிக் குடுவைகளையும் ஒரு செங்கலையும் வைத்து விட்டு, ‘பயம் இல்லாத விவசாயி யாராவது ஒருத்தர் மேடைக்கு வாங்க’ என்று பரத் சொல்ல, ஒரு விவசாயி மேடை ஏறினார். ஒரு கண்ணாடிக் குடுவையிலுள்ள மண்புழுவை எடுத்து உப்பு நிரப்பப்பட்ட இன்னொரு கண்ணாடிக் குடுவைக்குள் போடுமாறு அந்த விவசாயியிடம் சொன்னார் பரத். மண்புழு உப்பில் விழுந்ததும் நெளிந்து சுருண்டு விட்டது. உடனே அதை எடுத்து வெளியில் விட்ட பரத், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டோம்னா இந்த மண் புழு செத்துடும். இப்படித்தான் மண்புழுக்கள் அதிகம் இருந்த வளமான மண்ணை நாம், ரசாயன உரம்கிற உப்பைத் தூவித் தூவி மலடாக்கிட்டோம்” என்றதும் கைத் தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

தொடர்ந்து பேசியவர், “இந்த மேஜையில் 4 கண்ணாடிக் குடுவைகளும் ஒரு செங்கலும் இருக்கு. முதல் குடுவையில் முழுமையாக மட்கிய உரம் கலந்த மண், இரண்டாவது குடுவையில் உப்பு, மூன்றாவது குடுவையில் மண்புழுக்கள், நான்காவது குடுவையில் வளம் இழந்து வரும் தற்போதைய நிலையில் உள்ள மண் இருக்கு. ரசாயன உரங்கள் அதிகப்படியாக பயன்படுத்துவதால் நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் செத்துப் போயிடும். தொடர்ச்சியாக ரசாயன உரம் போட்டுக்கிட்டே இருந்தால் மண், பாறை போல மாறிடும். அதை உணர்த்தத்தான் ஐந்தாவதாக செங்கல் வைத்திருக்கேன். மண் வளமாக இருந்தால்தான் பயிர் வளரும். பயிர் வளர்ந்தால்தான் பூச்சிகள் வரும். பூச்சிகள் வந்தால்தான் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தறதுக்கான வழியை யோசிக்க முடியும். அதனால, முதல்ல மலடாகி வருகிற மண்ணை வளமாக்கணும்.

காய்கறி, கீரைகளில் பூச்சி மேலாண்மை!

நான் கீரை, காய்கறிகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். கீரைகள்ல மாவுப்பூச்சியும், இலையைத் தின்னும் பூச்சிகளும்தான் அதிகமா வரும். குறிப்பா, சிறுகீரையில்தான் அதிகமான பூச்சித்தாக்குதல் இருக்கும். ஒரே வகையான கீரைகளை நடாமல் பொன்னாங்கன்னி, அரைக்கீரை, பசலை, சிறுகீரைனு கலந்து நட்டால் பூச்சித்தாக்குதல் பரவலைத் தடுக்கலாம். கீரை நடவு செய்த 7-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யாவும், 12-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம்னு கலந்து தெளிச்சாலே போதும் பூச்சிகள் வராது.

காய்கறிகள்ல கத்திரியில மட்டும் 21 வகையான பூச்சிகள் வரும். இதுல 4 பூச்சிகள் மட்டும்தான் நன்மை செய்ற பூச்சிகள். மற்றவை எல்லாமே விளைச்சலைப் பாதிக்கிற பூச்சிகள். கத்திரி நடவு செய்த 40-ம் நாளுக்கு மேல தண்டுத் துளைப்பான் தாக்கும். அதனால செடிகளோட வளர்ச்சி பாதிக்கப்படும். பொறிவண்டு, இலைகள்ல முட்டை வெச்சுடும். அதுல வெளி வர்ற வண்டுகள் இலையில இருக்கிற பச்சையத்தைச் சாப்பிட்டுடும். அதனால, இலை சல்லடை போல மாறி செடியோட வளர்ச்சி குறையும்.செடியை நட்ட 15-ம் நாள்ல இருந்து, 15 நாளுக்கு ஒரு தடவை, சாண வறட்டி சாம்பலை சலிச்சு காலை நேரத்துல (6 முதல் 7 மணிக்குள்) தூவணும். இலை மேல சாம்பல் ஒட்டிக்கிறதால இலையை பூச்சி சாப்பிடாது. அப்படியே சாப்பிட்டாலும் சாம்பல் வயித்துக்குள்ள போய் பூச்சி இறந்துடும். இது, பாரம்பர்யமா நாம செஞ்சதுதான். ஆனா, நாமதான் மறந்துட்டோம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ சாம்பல் போதுமானது.

வெண்டை நட்ட 15-ம் நாள்ல 10 லிட்டர் தண்ணீர்ல 150 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி; 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீர்ல 200 மில்லி பஞ்சகவ்யானு தெளிக்கணும். 15 நாளுக்கு ஒரு முறை இப்படி மாறி மாறி தெளிச்சா, பூச்சிகள் கிட்டயே வராது. பூக்கிற நேரத்தில் ஒரு லிட்டர் இளநீருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிச்சா பூக்கள் அதிகமா பூக்கும். இளநீரை ரோஜா, சம்பங்கி, மல்லினு பூக்களுக்கும் தெளிக்கலாம். நான் சொன்ன எல்லாமே என்னோட அனுபவத்துல செய்து பார்த்துட்டுதான் சொல்றேன்” என்றார்.

விவசாயி வைத்தியனாகணும்!

தொடர்ந்து தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்.புண்ணியமூர்த்தி பேசினார். “பல வருஷங்களா நானும் எல்லா கால்நடை மருத்துவர்களையும் போலதான் ஆங்கில மருத்துவ முறையில வைத்தியம் செய்துக்கிட்டு இருந்தேன். 2000-ம் வருஷம்தான் பாரம்பர்ய மூலிகை வைத்தியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். 2001-ம் வருஷம், பெங்களூருல பாரம்பர்ய மருத்துவப் பேரவை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டேன். அங்கதான், கால்நடைகளுக்கான பாரம்பர்ய மூலிகை வைத்தியம் குறித்த எல்லா தகவல்களையும் சேகரித்தேன்.

‘நமது சித்தர்களும், முன்னோர்களும் சொல்லிச் சென்ற சாதாரண மூலிகைகள்தானே இதெல்லாம். இது தெரியாம இவ்வளவு நாள் கால்நடைகளுக்கு ஊசி, மருந்து, மாத்திரைனு கொடுத்து வைத்தியம் பாத்திருக்கோமே’னு வருத்தமாகிடுச்சு. 2002-ம் வருஷம் ஜனவரியில் இருந்து கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம் மட்டும்தான் பார்க்கணும்னு ஆசைப்பட்டு மூலிகை வைத்தியரா மாறினேன்.

ஆடு, மாடுகளுக்கு சின்னப் பிரச்னைனா கூட உடனே கால்நடை மருத்துவர்கிட்ட ஓடக்கூடாது. ‘விவசாயி எப்படி வியாபாரியாக மாறணுமோ... அதே போல கால்நடைகளை வைத்திருக்கிற விவசாயி வைத்தியனா மாறணும். அதாவது, நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பாரம்பர்ய மூலிகை வைத்தியத்தைக் கத்துக்கணும். அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய வியாதிகளைத் தவிர, எல்லா நோய்களுக்குமே பாரம்பர்ய மருத்துவத்தில் தீர்வு இருக்கு.

தஞ்சாவூர்ல 13 வருஷமாக செயல்பட்டு வர்ற கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மூலிகை மருத்துவம்தான் செய்றோம். தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தில் முதல் முயற்சியா ஆரம்பிக்கப்பட்ட கால்நடைகளுக்கான மூலிகை வைத்திய பட்டயப் படிப்புல முதல் பேட்சுல சேர்ந்த 36 மாணவர்கள், இப்போ படிப்பை முடிக்கப் போறாங்க” என்ற புண்ணியமூர்த்தி, சில முக்கிய நோய்களுக்கான வைத்திய முறைகளையும் சொன்னார்.

மற்ற கருத்துரையாளர்கள் ஆற்றிய உரைகள் அடுத்த இதழில்...

நூற்புழுவுக்கு சுலபமான தீர்வு!

கண்காட்சியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களுக்குத் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்குகளில் முன்னோடி விவசாயிகள், சம்பந்தப்பட்ட பயிர்கள் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வாழை அரங்கில் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த முன்னோடி விவசாயி நல்லசிவம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு சாதாரண விவசாயினு அறியப்பட்ட என்னை, வல்லுநரா உட்கார வெச்சு... வாத்தியாரா மாத்திடுச்சு, ‘பசுமை விகடன்’. கண்காட்சிக்கு வந்த ஊர்க்காரங்க எல்லாம், நம்ம நல்லசிவம் இவ்வளவு நல்லா பேசுறாரேனு ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. எல்லா புகழும் பசுமை விகடனுக்குதான்னு பெருமையா சொன்னேன்.’’

கரூர், குளித்தலை, ஈரோடு, மேட்டுப்பாளையம்னு வாழை வெள்ளாமை அதிகம் இருக்கிற பகுதிவிவசாயிங்க பலரும் கேட்ட மொதக் கேள்வி, ‘இயற்கை முறையில வாழை சாகுபடி பண்றது எப்படி?’னுதான்.‘ரசாயன உரத்தைப் போட்டு கட்டுபடியாகல. நோய்களைக் கட்டுப்படுத்த வழி தெரியலை’னுதான் நிறைய பேர் புலம்புனாங்க. ‘இயற்கை விவசாயத்துக்கு மாறுங்க... எல்லா கவலையும் போயிடும்’னு சொல்லி அதற்கான வழி முறைகளையும் சொல்லிக் கொடுத்தேன். நூற்புழு குறித்து நிறைய பேர் கேட்டாங்க. ‘வாழையில் ஊடுபயிரா 5 அடிக்கு ஒண்ணுனு செண்டுமல்லிச் செடிகளை நட்டு வைக்கணும். வாழை 6 மாத வளர்ச்சியில் இருக்கிறப்போ செண்டுமல்லியில பூவெடுக்குற மாதிரி நடவு பண்ணனும். இந்தப் பூச்செடிகளே நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடும்’னு சுபாஷ் பாலேக்கர் சொல்லிக்கொடுத்த அற்புதமான தீர்வை அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதுக்கு சிலர் ஆதாரம் கேட்டாங்க. அவங்ககிட்ட ‘பசுமை விகடன்’ல வந்த கட்டுரைகளைத்தான் எடுத்துக்காட்டினேன். அவ்வளவு பேரும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க” என்றார், பெருமிதத்துடன்.

மடிநோய்க்கு மருந்து!

“மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’. மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க.

கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையணும். இதை ஒரு நாளுக்கு பத்து தடவை வீதம், ஒரு மாசத்துக்கு மடிக்காம்புகள்ல தேய்ச்சா... மடி நோய் சரியாகிடும்” என்றார், புண்ணியமூர்த்தி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஒருவர் தன் வீட்டில் 400 நாட்டு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை (60). கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

இவர் தந்தை காலத்தில் அந்த ஊர் கிராம கணக்குப்பிள்ளையாக இருந்த ஒருவர், நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டி ஒன்றை தன்னால் பராமரிக்க முடியாமல் இவர்கள் வீட்டுக்கு தானமாக கொடுத்துள்ளார். இவர்கள் அந்த கன்றுக் குட்டிக்கு முறையாக சிகிச்சை அளித்து பராமரித்துள்ளனர்.

அதன் மூலம் மாடு வளர்க்க ஆரம்பித்த இவர்களிடம் கடந்த 50 ஆண்டுகளில் மாடுகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. இதன் மூலம் நடைபெற்ற வியாபாரத்தில் புதிய மாடுகளையும் வாங்கினார். இதனால் இவர்களிடம் தற்போது 400 நாட்டு மாடுகள் உள்ளன.

இந்த நாட்டு மாடுகள் அனைத்தும் பண்ணையில் வளர்ப்பதுபோல் அடைத்து வைத்து தீவனம் மட்டும் அளித்து வளர்க்கப்படும் மாடுகள் இல்லை. இவை சாதாரணமாக கிராம நாட்டு மாடுகளைப் போல் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.

இந்த மாடுகள் காலையில் மேய்ச்சலுக்கு பட்டியில் இருந்து திறந்து விடப்படும். அவை முறையாக மேய்ச்சலை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பிவிடும். தீர்த்தமலை மற்றும் அவரது மகள் வனிதா, இந்த மாடுகள் பயிர் செய்யப்பட்டுள்ள விளைநிலங்களின் பக்கம் சென்றுவிடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புக்கு உடன் செல்வர். மாடுகளைப் பராமரிக்கும் பணிகளையும் இவர்கள் இருவரும் செய்து வருகின்றனர்.

ஒரே வீட்டில் 400 நாட்டு மாடுகள் பராமரிப்பது குறைத்து கேள்விப்பட்ட ‘ஏர் முனை’ என்ற அமைப்பு, மாட்டுப் பொங்கலன்று அந்த மாடுகளுக்கு அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விழா எடுக்க முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து தீர்த்தமலையுடன் சென்ற இந்த அமைப்பு மாடுகளுக்கு விழா எடுத்தது. இதுகுறித்து ஏர் முனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பவுல் செல்வராஜிடம் கேட்டபோது, இவர்கள் பசுக்களை வளர்த்து பால் கறக்கின்றனர். ஆனால் இவர்களிடம் பிரதானமாக வண்டி போன்றவற்றை இழுக்கும் இரட்டை எருது மாடுகள்தான் அதிகம் உள்ளன. ஒரு மாடு கன்றுக்குட்டியாக இருக்கும்போதே அதற்கு ஒரு ஜோடியாக மற்றொரு கன்றுக்குட்டியை வாங்கி வந்து அவற்றை ஜோடிமாடாக வளர்த்து பழக்கப்படுத்துகின்றனர்.

ஓரிரு மாடுகளையே பராமரிக்க சிரமப்படும் இக்காலத்தில் 400 மாடுகளை ஒரே குடும்பத்தினர் பராமரிக்கின்றனர். மாட்டுப் பண்ணைகளில் கூட இவ்வளவு மாடுகளைப் பராமரிப்பது சிரமம். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக விழா எடுத்துள்ளோம் என்றார்.

இது குறித்து தீர்த்தமலையிடம் கேட்டபோது, தற்போது வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களில் பசுமைப் புற்கள் இல்லை. இதனால் மாடுகளுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது. மாடுகளுக்கு தேவையான தீவனத்தை அதிக அளவு விலை கொடுத்து வாங்கவேண்டி உள்ளது. இந்த தீவனங்களை மாடு வளர்ப்பவர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கினால் மாடுகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உதவியாக இருக்கும். அரசு கால்நடை மருத்துவர்களின் சேவையும் தேவையாக இருக்கிறது என்றார்.

கிராம மக்களால் ஒட்டுமொத்தமாக எடுக்கப்படும் விழாக்களில் பல்வேறு இடங்களில் 50 முதல் 100 மாடுகளைக் கொண்டு வருவதே சிரமமாக உள்ளது. ஆனால் ஒரே குடும்பத்தினர் மூலம் 400 மாடுகளை ஒருங்கிணைத்து விழா எடுத்த சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm