Monday 18 June 2018

மழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு :

1. முன்னுரை
2. பசுக்களின் இருப்பிடப் பராமரிப்பு
3. மழைக்காலத்தில் தீவன மேலாண்மை
4. மழைக்காலத்தில் கன்றுப் பராமரிப்பு
5. மழைக்காலத்தில் நோய்த் தடுப்பு முறைகள்

முன்னுரை :

நமது நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளச்சேரி போன்றவை நமது வானநிலைக்கேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், நாம் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கில் குளிர்பிரதேசங்களைச் சேர்ந்த அயல்நாட்டு மாட்டினங்களான ஜெர்சி, பிரிசியன் போன்ற இனங்களை இறக்குமதி செய்து இன்று பெரும் எண்ணிக்கையில் இக்கலப்பினப் பசுக்களை வைத்துள்ளோம். நம் நாட்டுப் பசுக்களைக் காட்டிலும் இக்கலப்பினப் பசுக்கள் வானிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்குப் பெரிதும் உள்ளாகின்றன. எனவே கலப்பினப் பசுக்களை வைத்துப் பராமரிப்பவர்கள் பருவநிலைக்கேற்ற மேலாண்மை முறைகளைக் கையாண்டால் பசுக்களின் உற்பத்தித் திறன் குறையாமல் பார்த்துக் கொள்ள இயலும். மழைக்காலத்திற்கேற்ற கறவை மாடு பராமரிப்பு முறைகளை இனிக்காண்போம்.

பசுக்களின் இருப்பிடப் பராமரிப்பு :

மழைக்காலத்தில் கொட்டகையினுள் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தரைப்பகுதி ஈரமாக இருந்தால் பசுக்கள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.

* தரையில் நீர் தேங்கினால் பசுக்களுக்குக் குளம்பு அழுகல் நோய் வர நேரிடும்.

* தரையில் பள்ளங்கள் இருந்தால் அவற்றினை மூடி சரிசெய்ய வேண்டும். தரையின் ஈரத்தை உறிஞ்சச் சுட்ட சுண்ணாம்புத் தூளைத் தரையின் மீது தெளித்து விடவும்.

* மழைச்சாரல் மற்றும் கூரைமீது விழும் மழைநீர் கொட்டகையினுள் வராமல் இருக்கக் கூரையின் விளிம்புகள் 75-90 செ.மீ வெளியே நீண்டு இருக்குமாறு அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் பிளாஸ்டிக் திரைச் சீலைகளைப் பக்க வாட்டில் கட்டி விடலாம். மழைநீர் கொட்டகையினுள் வராமல் பாதுகாக்கலாம்.

* கூரையில் ஒட்டைகள் இருப்பின் மழைக்காலத்தின் முன்பே அதனை 'தார் சீட் போன்றவற்றைக் கொண்டு அடைத்து விட வேண்டும்.

* கொட்டகையினைச் சுற்றி மழைநீர் தேங்காமல் வடிந்து விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கினால் கொசு மற்றும் ஒட்டுண்ணிகள் பெருகும் இடங்களாகிப் பசுக்களைப் பாதிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மழைக்காலத்தில் தீவன மேலாண்மை :

தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்கள்மேயாது. மழைக்கு ஒதுங்க இடம் தேடும். போதிய அளவு மேயவில்லை என்றால் பால் உற்பத்தி குறையும். எனவே மழை நாள்களில் கறவைப்பசு மற்றும் எருமைகளை மேய வெளியே விடாமல் அடர்தீவனத்தைச் சற்று கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இத்துடன் பசுக்களின் இருப்பிடத்திலேயே புல், தழை, வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர் தீவனமும் உபரியாகக் கொடுத்துக் கறவைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நிறைவு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் இருப்பில் உள்ள தீவனப் பொருள்கள் நனைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். தீவனம் நனைந்தால் பூஞ்சைக் காளான் படர்ந்து நச்சு நோய் ஏற்படுத்தும். அடர்தீவனத்தைத் தரையிலிருந்து சற்று உயரமாக ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். வைக்கோல் மற்றும் சோளப் படப்புகளின் மீது பாலிதீன் விரிப்புகளைப் போட்டு போர்த்தி விடலாம்.

புதுமழையின் போது புற்கள் துளிர்க்க ஆரம்பிக்கும். இளம்புற்களை மேயும் பசுக்கள் இளகிய சாணம் போடும். இதைக் கழிச்சல் என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேய்ச்சலுடன் உபரியாக உலர்தீவனமான வைக்கோல், தட்டை கொடுத்து வந்தால் சாணம் இயல்பான நிலைக்கு மீண்டும் வரும்.

மழைக்காலத்தில் கன்றுப் பராமரிப்பு :

மழைக்காலத்தில் பிறக்கும் கன்றுகள் ஈரப்பதம் மற்றும் குளிரினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே மழைக்காலத்தில் கன்றுகளை நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் கன்றுகள் கதகதப்பான சூழலில் இருக்குமாறு செய்ய வேண்டும். தரையில் வைக்கோல் பரப்புதல், பக்கவாட்டில் குளிர் தாக்கம் ஏற்படாமல் இருக்கக் கோணிப்பைகளைக் கட்டுதல், இரவு நேரத்தில் கன்றுகளின் மேலே மின்பல்புகளைத் தொங்க விடுதல், கன்றுகளுக்குச் சாம்பிராணி புகைமூட்டம் போடுதல் போன்ற பராமரிப்புச் செயல்கள் கன்றுகளுக்கு நன்மை பயக்கும். கன்றுகளுக்குச் சத்தான தீவனம் அளித்து வருவது நன்று. இரத்தக் கழிசல் (காக்சிடியோசிஸ்) தடுப்பு மருந்துகளைக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கவும்.

மழைக்காலத்தில் நோய்த் தடுப்பு முறைகள் :

கால்நடைகளைத் தாக்கும் பெரும்பாலான நோய்களின் கிளர்ச்சி மழைக்காலத்தில் தான் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் வரும் நோய்களைத் தடுக்கப் பருவமழை தொடங்கும் முன்னரே உரிய தடுப்பூசிகளைக் கறவை மாடுகளுக்குப் போட வேண்டும். கோமாரி, சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் நோய்க்கு மழைக்காலம் தொடங்கும் முன்னர் கால்நடை மருத்துவரை அணுகித் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஏரி, குளம், குட்டைகளில் தண்ணி குடிக்கும் மாடுகளுக்கும் இவற்றைச் சுற்றி மேயும் மாடுகளுக்கும் தட்டைப் புழுவிற்கான குடற்புழு நீக்க மருந்தினைப் பருவ மழை தொடங்கும் முன்பு கொடுக்க வேண்டும்.

பசுக்களைப் பாதுகாத்தல் :

மழைக்காலத்தில் இடி மற்றும் மின்னல் ஏற்படுவது உண்டு. இடிதாக்கி மனித மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு நேரிடுகிறது. இடி மின்னலின் போது கால்நடைகளைத் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இடியுடன் கூடிய மழையின் பொழுது பசுக்களை மரத்திற்குக் கீழே ஓட்டிச் செல்லக் கூடாது. மேய்க்க வரும் மரத்தின் அடியில் அடைக்கலம் தேடக் கூடாது. பனைமரம் மற்றும் தென்னைமரங்களுக்கு அடியில் செல்வது ஆபத்தைக் கூட்டும். இடி மின்னலின் போது செல்போன் கோபுரங்கள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், உயர் அழுத்த மின்சார உயர் வழித்தடங்கள் ஆகியவற்றின் கீழ் மாடுகள் சென்று மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மின்னலின் போது பொதுவாக மரங்களுக்கு 10 அடிக்கு அப்பால் கால்நடைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இடி மின்னல் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் கொட்டகையைச் சுற்றி 10 அடி தூரத்தினுள் மரங்களை நடக்கூடாது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 11 June 2018

கோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு :

1. கொட்டகை பராமரிப்பு
2. கோடை வெயிலினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க யோசனைகள்

கொட்டகை பராமரிப்பு :

கால்நடைகள் பொதுவாகவே, உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தன்மை பெற்றுள்ளன. உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ளப் பண்ணையில் உட்புற மற்றும் வெளிப்புற வெப்பநிலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதிக உடல் வெப்பமானது உடலில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களினால் (வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பச்சலனம்) வெளியேற்றப்படுகிறது.

கால்நடைகளில் பொதுவாகவே அதிக உடல் வெப்பம், வியர்வை மூலமாகவும், சுவாசம் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது.

வெப்பம் அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ உடல்நிலை பாதிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. மேலும் நாம் வளர்க்கும் கால்நடைகள் (கலப்பினப் பசுக்கள், வெண்பன்றிகள்) குளிர்பிரதேசமான நாடுகளைத் தாயகமாகக் கொண்டவை என்பதால் கோடைக்காலப் பராமரிப்பு மிக முக்கியமானதாகும்.

கோடை வெயிலினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க யோசனைகள் :

கொட்டகை :

கொட்டகையின் கூரை, வெப்பம் ஊடுருவாத வண்ணம் அமைக்க வேண்டும். கூரையின் மேல் தென்னை ஒலைகளைப் பரப்பி அவற்றின் மேல் தண்ணீர் தெளிப்பதன் மூலம் கொட்டகையினுள் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் தான் பரந்த மரக்கிளைகளுக்கு கீழே கொட்டகை அமைத்தல் சாலச்சிறந்தது எனக் கூறப்படுகிறது.

* கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான இட வசதியைக் கொடுக்க வேண்டும்.

* கூரை ஆஸ்பெஸ்டாஸினால் கட்டப்பட்டிருந்தால் கூரையின் மேற்புறத்தில் வெள்ளையடிக்க வேண்டும். உட்புறச் சுவர் கருப்பு வர்ணம் பூசவேண்டும். இவ்வாறு செய்தால், வெப்பக் கதிர்கள் கூரையின் உள்ளே உடுருவாது.

* அதிக வெப்பத்துடன் கூடிய அதிக ஈரப்பதம் உள்ள சுற்றுப்புற சூழலில் கால்நடைகள் மிகுந்த அயர்ச்சிக்குள்ளாகும். எனவே கொட்டகையை நன்கு காற்றோட்டம் உள்ளவாறு அமைக்க வேண்டும்.

* கொட்டகையைச் சுற்றிச் சுபாபுல், வேலிமசால் போன்ற தீவனப் புல் மரங்களை வளர்க்கலாம். இதனால் கொட்டகையின் உட்புறத்தில் அதிக வெப்பமில்லாமல் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

* கால்நடைகளுக்கு உடலின் மீது தண்ணீர் தெளிப்பதன் மூலமும் அவற்றின் உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

* வெப்பக் காற்று அதிகமாக வீசும்போது தொழுவத்தின் பக்கவாட்டில் நூல் சாக்குகளை நீரில் நனைத்து தொங்கவிடலாம்.

* கொட்டகையின் உயரம் 9 அடிக்குக் குறையாமல் இருந்தால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

* கொட்டகையில் மின் விசிறிகள் பொருத்தப்படுவதன் மூலம் வெப்பத் தாக்கத்தைக் குறைக்கலாம்.

* குளியல் தொட்டிகளில் வெயில் நேரத்தில் கால்நடைகளை விடுவதன் மூலம் அவற்றின் உடல்வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

* ஆடுகளைப் பொறுத்தவரை குட்டிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைத்தவிர்க்கக் குட்டிகளை ஆடுகளோடு மேய்க்கவிடாமல் தனியாகப் பராமரிக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தண்ணீரின் அவசியம் :

* தண்ணீர் உடல் வெப்பத்தைச் சமநிலைப் படுத்துவதற்கும், உடல் உள்ளுறுப்புகள் வளர்ச்சி அடைவதற்கும் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் அடிப்படையாக உள்ளது. தண்ணீரின் தேவை கோடைக் காலத்தில் மிக அவசியம். வழக்கத்தை விடக் கூடுதலாக, இக்காலகட்டத்தில் கொடுக்கவேண்டும்.

* கால்நடைகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்குமாறு தண்ணீர்த் தொட்டியை அமைத்திருக்க வேண்டும்.

* பால் உற்பத்தி செய்யும் மாடுகளுக்குக் கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

* தண்ணீர் வழங்கும் தொட்டி வெள்ளை நிறத்தில் இருந்தால் கால்நடைகளுக்குக் குடிக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கும்

* கலப்புத் தீவனம் உட்கொண்டபிறகு நீர்வைத்தால் அதிகமாகக் குடிக்கும் இதன் மூலம் தண்ணீர் உட்கொள்வதை அதிகரிக்கலாம்.

* தண்ணீருடன் சிறிதளவு உப்பு அல்லது கலப்புத் தீவனம் கலந்து அளித்தாலும் மாடு நீர் அதிகமாக அருந்தும்

* கால்நடைகள் நீரோடைகளின் சத்தம் கேட்டுக் குடித்துப் பழக்கப்பட்டதால், தானியங்கி தண்ணீர் குழாய்கள் மூலம் அளிக்கும் போது அந்தச் சப்தம் கால்நடைகளை அதிகநீர் அருந்த தூண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு வழிமுறைகளில் அவரவர்களின் தேவைக்கு ஏற்பக் கையாளுவதன் மூலம் கோடைக்காலங்களில் கால்நடைகள் வளர்ப்பில் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday 7 June 2018

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை :

1. ஊறுகாய்ப்புல் என்றால் என்ன? எவ்வாறு தயார் செய்வது?
2. மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகள்
3. உலர்தீவனம் உட்கொள்ளும் அளவினை அதிகரிகக செய்யும் முறைகள்
4. கோடைக்காலத்தில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை வளர்போர் செய்ய வேண்டியவை
5. கேள்வி பதில்கள்

கோடைக்காலத்தில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பசுந்தீவனம் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அதனை ஊறுகாய்ப் புல்லாக மாற்றி சேமித்து வைப்பதன் மூலம் கோடைக்காலங்களில் பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாம். மர இலைகளைத் தீவனமாகக் கொடுக்கலாம்.

ஊறுகாய்ப்புல் என்றால் என்ன? எவ்வாறு தயார் செய்வது?

பசும்புல்லினைப் பசுமை மாறாமல் காற்றுப்புகாத சூழலில் நொதித்தல் முறையில் சேமித்து வைக்கும் முறையே ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறையாகும். இம்முறையில் ஒரு பாலித்தீன் பையினுள் பசும்புல்லானது சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு வெல்லப்பாகுக் கரைசல், உப்புக்கரைசல் மற்றும் யூரியாக் கரைசல் தெளிக்கப்பட்டுக் காற்று இல்லாத அளவிற்குப் புல்லினை நன்கு அழுத்தி பாலித்தீன் பையினை இறுகக் கட்டிவிட வேண்டும். கட்டப்பட்ட பையினை 21-28 நாள்கள் திறக்காமல் வைத்துவிடவேண்டும். இந்த 28 நாள்களில் பசும்புல்லானது ஊறுகாய்ப்புல்லாக மாறிவிடும். பாலித்தீன் பையினை 28 நாள்களுக்கு பிறகு திறக்கும்பொழுது பசும்புல் பொன் நிறமாக மாறி இருக்கும். மேலும், பழவாசனை புல்லிலிருந்து வரும், ஊறுக்காய்ப்புல் தயாரிப்பது குறித்த விரிவான செயல்முறையினை அருகிலுள்ள கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின விரிவாக்க மையங்களை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

கறவைமாடுகளுக்குக கோடைக்காலம் மற்றும் குளிர்க்காலம் ஆகியவற்றில் ஓரே மாதிரியான தீவனங்களை கொடுக்கலாமா?

கறவைமாடுகளுக்குக் கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் ஓரே மாதிரியான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது. கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே, உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் :

மாடுகளுக்கு மரஇலைகளைத் தீவனமாகக் கொடுக்காலம். மரஇலைகள் கோடைக்காலத்தில் பசுந்தீவனத்திற்கு மாற்றாக இருக்கும். ஆனால் பசுந்தீவனத்தின் மொத்த அளவினை மர இலைகளைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 5 கிலோ மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மரஇலைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கும். மரஇலைகளில் சில எதிர் ஊட்டச்சத்துக் காரணிகளாகிய டேனின், சுப்போனின் மற்றும் நிம்பின் இருப்பதால் மரஇலைகளை மாடுகளுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. ஆதிகமாக மர இலைகளை மாடுகளுக்குக் கொடுக்கும் பொழுது மாடுகளில் வயிறு உப்பசம் மற்றும் அஜிரணக் கோளாறுகள் ஏற்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோடைக்காலங்களில் மாடுகள் தீவனம் உண்பதில் ஏற்படும் அளவுக் குறைவினை சரி செய்யும் முறை :

கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர் தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்துகளின் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும்.

கறவைமாடுகளுக்கு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களை எவ்வளவு கொடுக்க வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்?

உதாரணமாக பால் கொடுக்கும் மாட்டிற்கு ஒவ்வொரு 1 லிட்டர் பாலுக்கும் 400 கிராம் அடர்தீவனமும், 2 கிலோ பசும்புல்லும் மற்றும் 1 கிலோ வைக்கோலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். மேற்கூறிய அளவு அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். பசும்புல் மற்றும் வைக்கோலை எந்த நேரத்திலும் கொடுக்கலாம்.

கோடைக்காலத்தில் கறவைமாடுகளுக்கு எவ்வாறு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

எல்லா நேரத்திலும் குளிர்ச்சியான தண்ணீரை மாடுகளுக்கு கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம். தண்ணீரானது உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இன்றியமையாத ஓர் ஊடடச்சத்தாகும். போதிய தண்ணீரை மாடுகளுக்குக் கொடுக்கவிலையென்றால் மாடுகளின் உடல் வளர்ச்சி மற்றும் பல் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே தண்ணீரைச் சரியான முறையில் கொடுப்பது இன்றியமையாததாகும்.

மாடுகளின் தீவனத்தில் உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டுமா? எவ்வளவு சேர்க்க வேண்டும்?

மாடுகளின் தீவனத்தில் உப்பினைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாது உப்புகள் இருக்கின்றன. உடலில் உள்ள செல்களில் இவ்விரு தாது உப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், இத்தாது உப்புகள் உடலில் சவ்வூடுவரவல் சரியாக நடைபெற உதவுகின்றன. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 30 கிராம் உப்பினைத் தீவனத்துடன் கொடுக்க வேண்டும்.

தாதுப்புக் கலவை என்றால் என்ன? தாதுப்புக் கலவையினை மாடுகளுக்கு எப்பொழுது கொடுக்க வேண்டும்?

கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு தாதுப்புக்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ள கலவை தாதுப்புக் கலவை எனப்படும். தாதுப்புக் கலவையினை அன்றாடம் கால்நடைகளுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். பால் கொடுக்காத மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராமும், கன்றுகளுக்கு நாளொன்றிற்கு 10-15 கிராமும் கொடுக்க வேண்டும்.

உலர்தீவனம் உட்கொள்ளும் அளவினை அதிகரிகக செய்யும் முறைகள் :

* உலர்தீவனங்களைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.
* உலர்தீவனத்துடன் வெல்லப்பாகு மற்றும் உப்பு கரைசலினைத் தெளிக்கலாம்.
* 1 கிலோ வெல்லத்தினையும் 1 கிலோ உப்பினையும் 4 லிட்டர் தண்ணீரில் கரைத்து உலர்தீவனத்தின் மீது தெளித்துப் பயன்படுத்தலாம்.
* கறவை மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராம் இட்டு சோடா அல்லது ஆப்ப சோடாவைக் கொடுப்பதன் மூலம் தீவனச் செரிமானத்தினை அதிகரிக்கலாம்.
* கன்றுகளின் தொழுவத்தில் உப்பு கட்டி மற்றும் தாது உப்புக் கட்டிகளைக் கட்டாயம் தொங்கவிட வேண்டும்.

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்குக் கோடைக்காலத்தில் கூடுதல் அடர்தீவனம் தேவையா?

கோடைக்காலத்தில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்துகள் மேய்ச்சல் மூலம் கிடைக்காது. எனவே செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு மாலை நேரங்களில் ஊறவைத்த மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும். 25 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 100 – 150 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 35 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 200 – 250 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதால் ஆடுகளில் எடை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். நல்ல உடல் எடையை அடையலாம். தாய் ஆடுகளின் பால் உற்பத்தி குறையாமல் தடுக்கலாம். இது தவிர மாலை நேரங்களில் புரதச்சத்து அதிகமுள்ள கடலைக்கொடி உளுத்தம் பொட்டு மற்றும் துவரைத் தொளும்புகளை ஆடுகளுக்கு கொடுக்கலாம். மேய்ச்சலுக்குச் செல்லாத குட்டிகளுக்கு மரஇலைகளைத் (வேப்பிலை, அகத்தி, சவுண்டல் மற்றும் கிளைரிசிடியா) தீவனமாகக் கொடுக்கலாம். கருவேலங்காயினை ஊறவைத்து அல்லது அரைத்து கொடுக்கலாம்.

கோடைக்காலத்தில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை வளர்போர் செய்ய வேண்டியவை :

* கொட்டகையில் உப்புக்கட்டி மற்றும் தாது உப்புக் கட்டிகளைக் கட்டாயம் தொங்கவிட வேண்டும்.

* நண்பகல் நேரத்தில் (மதியம் 1-4 மணி வரை) ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

* ஆடு மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் தண்ணீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

* ஆடுகளைக் குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குடிக்கக் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

* குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குடிப்பதால் ஆடுகளுக்கு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.

கோடைக்காலத்தில் பன்றிகளை வளர்ப்போர் செய்ய வேண்டியவை:

* தீவனத்துடன் தண்ணீரைக் கலந்து கூழ் போல் கொடுக்க வேண்டும்.

* பசும்புல் அகத்தி மற்றும் வேலிமசால் போன்றவற்றைச் சிறு துண்டகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கேள்வி பதில்கள் :

கேள்வி : மாடு 8 மாத சினையாக உள்ளது. எந்த மாதிரியான தீவனம் கொடுப்பது? எப்படி பராமரிப்பது?

பதில் : முதலாவது 7 மாதம் முடிந்த உடனே பால் கறப்பதை நிறுத்துவது நல்லது. மேலும் சத்துள்ள சரிவிகித கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். பசுந்தீவன புல் குறைந்தபட்சம் 10 கிலோ கொடுக்க வேண்டும். சுத்தமான தண்ணிர் அதற்கு கிடைக்கும்படி வைக்க வேண்டும்.

கேள்வி : 4 மாதசினை மாடு பால் கறக்குது ஆனால் தீனி எடுக்கவில்லை?

பதில் : மாட்டிற்கு காய்ச்சல் உள்ளதா என்று உண்டின மானியை (Thermometer)கொண்டு கண்டு கொள்ளவும். காய்ச்சல் இருப்பின் கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறவும். தீனி எடுக்கவில்லையென்றால் ஹமாலயன் பெத்திசா(Himalayan Bathisa) என்ற மருந்தினை வாங்கி 50 கிராம் எடுத்து சிறிது வெல்லத்துடன் கலந்து உருண்டையாக்கி உள்ளுக்குள் தினமும் காலையும் மாலையும் 3 அல்லது 4 நாட்களுக்கு கொடுக்கவும்.

கேள்வி : மாடு பசும்புல் சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?

பதில் : ஏற்கனவே குடல் புழு நீக்கம் செய்திருந்தால் சாணத்தை எடுத்து மருத்துவரிடம் காண்பியுங்கள். இல்லை என்றால் குடல்புழு நீக்கத்துக்கான மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm