Tuesday 28 February 2017

விவசாயத்தில் வறட்சி பாதிப்பைச் சமாளிக்க 8 வழிகள்!


இப்போதே வெயில் தனது உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. கடந்த ஆண்டு போதிய பருவமழைப்பொழிவு இல்லாததே இதற்கு காரணம். இதன் காரணமாக தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டு தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படும் என நீரியலாளர்களும் எச்சரித்து வருகிறார்கள். அதற்கு ஏற்றார்போல தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் தண்ணீர் மட்டங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த சூழ்நிலையை சமாளிக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதற்கிடையே வீட்டில் மட்டுமல்லாமல் விவசாயத்துக்கும் தண்ணீர் சேமிப்பு என்பதும் அவசியம். அடுத்த பருவமழை ஆரம்பிக்கும் வரை விவசாயிகள் தங்களுடைய திறந்தவெளிக் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாயத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த எளிய வழிமுறைகளை பகிர்ந்துகொள்கிறார், திண்டுக்கல் மாவட்ட வேளாண்பொறியாளர் பிரிட்டோராஜ்.

"விவசாயத்தில் நீரினுடைய பயன்பாடு மிக முக்கியம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரினை பயிருக்கு கொடுப்பதற்கு உதவுவது, பாசன முறைகள்தான். இன்று அறிவியலின் அதீத வளர்ச்சி காரணமாக நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி எடுக்கிறோம். அந்த தண்ணீரை முழுமையாக பயிருக்கு கொடுத்தால்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும் எளிதானதாகவும் மாற்ற முடியும். வறட்சிக்கு இன்றளவில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் என பாசன முறைகளும் நமக்கு கைகொடுக்கலாம். மண்ணின் தன்மை, சீதோஷ்ண நிலை உணர்ந்து காலையிலோ, மாலையிலோ பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுதல் நலம்" என்றவர் பின்வரும் தகவல்களை சொல்கிறார்.

1. மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து வாய்க்கால் வழியாக வயலுக்கு நீர் கொண்டுபோக விரும்பினால் அந்த நீர்த்தடத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து வயலின் ஒரு மூலையில் கேட்வால்வு அமைத்து தண்ணீர் பாசனம் செய்யலாம். இந்த பாசனம் மேற்கொள்ளும் போது தண்ணீர் வீணாவது 40% குறையும்.

2. வறட்சியில் சொட்டுநீர் பாசனமே சரியான தீர்வு. குறைவான அளவு நீரை அனைத்துப் பயிர்களுக்கும் சமமாகவும், தேவையான அளவும் கொடுக்க முடியும். இதுதவிர இயற்கை இடுபொருட்களையும் கலந்து கொடுக்கவும் இதுதான் சரியான முறையாகும். தற்போது சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்களுக்கு தோட்டக்கலைத் துறை முலம் மானியம் கொடுக்கப்படுகிறது.

3. ஏற்கெனவே சொட்டுநீர் பாசனம் அமைத்திருப்பவர்கள் குழாய் வகையிலான சொட்டுவான்(tap) அமைத்திருந்தால், அதில் 40% நீரானது வெளியேறும் வகையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

4. அனைத்து சொட்டுவான்களிலும் நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் பயிர்களுக்கான தினசரி நீரையும், அளவையும் உறுதி செய்யலாம்.

5. அனைத்துப் பயிர்களிலும் சொட்டுவானிலிருந்து நீர் சொட்டும் இடங்களில் மூடாக்கு அமைப்பதால் 60% நீர் ஆவியாவது தடுக்கப்படும். இதனால் நீர் இழப்பு தவிர்க்கப்பட்டு நீரானது நிலத்தடியில் சென்று வேர்ப்பகுதியில் அகன்று பரவும்.

6. தரைக்கு உட்பகுதியில் பதித்த சொட்டுநீர் பாசனம் அமைத்தவர்கள் ஆங்காங்கே தோண்டி மண்ணுக்குள் நீர் சரியான அளவு விழுவதை உறுதி செய்வது மிகவும் அவசியம்.

7. உப்பு மற்றும் வேர் அடைப்பினால் நீர் வெளியேறுவது தடைபட்டிருந்தால் உடனடியாகத் தடுப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

8. நிறைந்த நீர் இருந்தால் மட்டுமே தெளிப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். உதாரணமாக, 2.5 அங்குலமுள்ள தண்ணீர் வெளியேறும் குழாயில் ஒரு மணி நேரம் தொடர்ந்து தண்ணீர் வந்தால் மட்டுமே தெளிப்பு பாசனம் செய்ய வேண்டும்.

எதிர்வரும் கோடையின் உக்கிரம் அதிகம் என்பதால் நீரீனை சேமித்து வைத்தால் நீண்ட நாட்களுக்குப் பயன் பெறலாம்!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு :


ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.

வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.

தலைசேரி ஆடுகள் :

எங்களது பண்ணையில் எந்த கலப்பினமும் இல்லாத தலைச்சேரி ஆடுகளை மட்டுமே வளர்க்கின்றோம்.

அதனுடைய சிறப்பு அம்சங்கள் வேறு மிகச்சிறந்த சாதிஆடுகள் 2 வருடங்களுக்கு 3 முறை குட்டி போடும் ஆனால் தலைச்சேரி ஆடுகள் 4 முறை குட்டிபோடுகிறது.

பாலுக்கு சிறந்த ஆடுகள், ஒரு ஈத்துக்கு சராசரியாக 2 குட்டிகள் ஈனும், 3 குட்டிகளும் ஈனுகின்றது. தலை ஈத்து 1 குட்டியும் 2 குட்டிகளும் ஈனுகன்றது.

நன்றாக பால் கொடுத்து வளர்த்து விடுகின்றது. அதற்கு எவ்வளவு தீவனம் தருகிறோமோ அவ்வளவு எடை கூடுகின்றது. வேறு ஆடு இனங்களுக்கு இந்த சிறப்பம்சம் இல்லை.

நீண்ட முகப்பு கொண்ட முறை :

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.

வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.

கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

கிடா ஆடுகளின் கொட்டில் :

கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.

தனி அறைக் கொட்டில் :

0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.

சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை :

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.

மேய்ச்சல் / திறந்த வெளி :

12 மீ x 18 மீ அளவுள்ள திறந்த வெளி அமைப்பானது 100-125 ஆடுகளுக்குப் போதுமானது. இந்தத்திறந்த வெளியானது நன்கு கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளைக் கொண்டிருக்கவேண்டும். நிழல் தரும் மரங்கள் ஆங்காங்கு வளர்க்கப்பட்டிருக்கவேண்டும். நிறைய கம்பிகள் கொண்டு வேலி நன்கு பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் ஆடுகள் வேலிகளில் உராயும் தன்மை கொண்டவை. கூர்மையான கம்பிகள், நீட்டிக்கொண்டு இருந்தால் அவை ஆடுகள் உரசும் போது காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 1 x 1 மீ அளவுள்ள இரும்பாலான 60 செ.மீ உயரமுள்ள உருளை போன்ற அமைப்புகள், திறந்தவெளி மைதானத்திற்கு ஏற்றவை.

பிரித்து வைக்கும் கொட்டில் :

மந்தை பெருகப் பெருக இடப்பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கென ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது பிரித்து வைப்பதற்கென 3.6 மீ x 5 மீ அகலமுள்ள ஒரு தனிக்கொட்டில் அவசியம். இதை இரண்டு அல்லது மூன்று அறைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் நீர் மற்றும் தீவனத் தொட்டில்கள் அமைக்கவேண்டும்.

தீவனத் தொட்டி :

வெள்ளாடுகள் கீழே விழுந்த தீவனங்களையோ, புற்களையோ சாப்பிடாது. எனவே 5 செ.மீ தடிமனுள்ள மரப்பலகையாலான ஒரு பெட்டியை தீவனம் கட்டும் கயிற்றின் கீழே வைக்கவேண்டும். ஆடுகள் தீவனம் சாப்பிடும் போது கீழே விழும் துண்டுகளை இப்பெட்டியில் சேகரித்தால், மண்படாத அவற்றை மீண்டும் ஆடுகள் உண்டுவிடுவதால், தீவனம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.

மேய்ச்சல் முறைகள் :

கயிற்றில் கட்டி மேய்த்தல் :

குறிப்பிட்ட இடத்தில் சில ஆடுகளை மேய விடுவதற்கு, இம்மேய்ச்சல் முறையே சிறந்தது. கொட்டிலின் வெளியில் வைத்து குறைந்த எண்ணிக்கையுள்ள அடுகளை மரத்திலோ அல்லது வேறு சில கட்டைகளிலோ கயிறு கொண்டு கட்டி மேய்க்கும் முறையில் அந்த இடங்களின் புற்கள் நன்கு மேயப்படுகின்றன.

இம்முறையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மேய்த்தல் சிறந்தது. கயிற்றின் நீளம் 35-50 செ.மீ நீளம் இருக்கவேண்டும். மற்ற மதிய நேரங்களில் கொட்டிலில் அடைத்து வைக்கலாம். இம்முறையில் நோய்களைப் பரப்பும் ஒட்டுண்ணிகள் போன்றவை பரவுவது குறைவு.

மேய்ச்சல் முறை :

8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்பி இரவு நேரங்களில் மட்டும் பட்டிகளில் அடைப்பது.

கொட்டில் முறை :

நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இம்முறையில் ஆழ்கூளங்களை போட்டு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுத்து விட்டு புதிய ஆழ்கூளத்தை நிரப்பினால் சிறுநீர் மற்றும் சாணத்தின் அமோனியா வாயு ஆடுகளை அதிகம் பாதிக்காது.

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை :

4-5 மணி நேரம் வரை மேய்ச்சலுக்கு அனுப்பிப் பிறகு கொட்டகையில் வைத்துத் தேவையான பசுந்தீவனங்களையும், அடர் தீவனங்களையும் அளிக்கவேண்டும்.

பயிர் வயலில் விட்டு மேய்த்தல் :

மலைத்தோட்டப் பயிர்கள் அல்லது அறுவடை முடிந்த வயல்களில் ஆடுகள் மேயச்சலுக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டின் கழிவுகள் வயல்களில் விழுவதால் மண்ணிற்கு நல்ல சத்துக் கிடைக்கிறது.

தீவன மேலாண்மை :

பிற கால்நடைகளைப் போல், ஆடுகளும் நல்ல தீவனமும் பராமரிப்பும் இருந்தால் அதிக பால் உற்பத்தி கொடுக்கும். ஆனால் கிராமங்களில் மேய்ச்சலுடன் நிறுத்தி விடுகின்றனர். சரியான அளவு அடர் தீவனங்களும், பயறு வகைகள் அளித்தால் ஆடுகளிடமிருந்து நல்ல இறைச்சியும், பாலும் கிடைக்கும்.

தீவன ஊட்டம் :

ஆடுகள் தனிப்பட்ட தீவன ஊடடத்தையே விரும்புபவை. ஆடுகளுக்குக் கோடுக்கும் தீவனங்கள் அடிக்கடி மாற்றப்பட்ட, சுத்தமான, புதியவையாக இருத்தல் வேண்டும். ஏதேனும் கெட்ட துர்நாற்றத்துடனோ, அழுக்கு மண் கலந்தோ இருந்தால் அல்லது மரக்கிளை, சுவர், நட்டு வைத்த குச்சி போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டித் தொங்கவிடலாம். இவ்வாறு வைப்பதன் மூலம், புற்கள் அல்லது தழைகள் கீழே விழுந்து வீணாகாமல் இருக்கும். மேலும் அவ்வப்போது சிறிது சிறிதாக ஆடுகளுக்குத் தீவனமளிக்கலாம். அதிக அளவில் ஒரே நேரத்தில் கொடுக்கும் போது பாதித் தீவனம் ஆடுகளின் காலில் மிதிபட்டு வீணாகிறது.

ஆடுகளும் அசை போட்டு உண்ணக்கூடியவை. இவை பயறு வகைத் தாவரங்களை அதிகம் விரும்பி உண்கின்றன. இவை சோளம், கம்புச் சோளம், பதப்படுத்தப்பட்ட தீவனங்கள், வைக்கோல் போன்றவற்றை விரும்பவதில்லை. இவை காட்டுப்புற்களை அதிகம் உண்பதில்லை. ஆனால் குதிரை மசால், துவரை, நேப்பியர் புல், தர்ப்பைப்புல், சோயாபீன், முட்டைக்கோஸ், காளிஃபிளவர் போன்றவற்றின் இலை தழைகளையும் செஞ்சி மற்றும் சில பூண்டுகளையும் நன்கு உண்கின்றன. இவைத் தவிர புளியமரம், வேம்பு, இலந்தை போன்றவற்றின் தழைகளையும் முங்பீன் போன்ற பயிறுகளையும் உண்ணும் இயல்புடையவை.

தேவையான ஊட்டச்சத்துக்கள் :

ஆடுகளுக்கு 3 முக்கியக் காரணங்களுக்காக ஊட்டசத்துத் தேவைப்படுகிறது. அவை பராமரிப்பு உற்பத்தி (பால், இறைச்சி, உரோமங்கள்) மற்றும் சினைத் தருணத்தில் தேவைப்படுகிறது.

பராமரிப்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் :

ஆடுகளின் பரிணாம வளர்ச்சிக்கு கால்நடைகளை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே ஆடுகளுக்கு 25-30 சதவிகிதம் பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. பராமரிப்புத் தேவை 0.09 சதவிகிதம் செரிக்கக்கூடிய பண்படாத புரதம் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கலவையாக இருக்கலாம். மற்ற மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மட்டுமே மிக அதிகமாக அதன் உடல் எடையில் 6.5 - 11 சதவிகிதம் அளவ உணவு எடுக்கக்கூடியது. மற்ற கால்நடைகள் அவற்றின் உடல் எடையில் 2.5-3 சதவிகிதம் வரை மட்டுமே தீவனம் உட்கொள்ளும். எனவே சரியான அளவு தீவனம் கொடுத்தால் மட்டுமே வெள்ளாடுகள் அதன் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.

உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் :

3 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லிட்டர் பாலை உற்பத்தி செய்ய 43 கிராம் செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 200 கி ஸ்டார்ச்சும் தேவை. அதே போல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லி பாலை உற்பத்தி செய்ய 60 கி செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 285 கிராம் ஸ்டார்ச் சத்துக்களும் தேவைப்படுகிறது.

50 கிலோ எடையுள்ள 2 லி பால் (40 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன்) உற்பத்தி செய்யக்கூடிய ஆட்டிற்கு 400 கிராம் அடர் தீவனமும், 5 கிலோ குதிரை மசால் போன்ற தீவனங்கள் அளிக்கவேண்டும். 12-15 சதவிகிதம் புரதச் சத்துள்ள தீவனங்கள், உலர் புற்கள் அளிக்கப்படவேண்டும்.

தாதுக்கலவை :

தாதுக்கள் உடற்செயல் இயக்கம், எலும்புக்கூடு, பால் உற்பத்தி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் சரியான அளவு தாதுக்கள் அளிக்கவேண்டியது, அவசியம். இதில் மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். 50 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு கால்சியம் 6.5 கி, பாஸ்பரஸ் 3.5 கி தேவைப்படுகிறது. அடர் தீவனத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தாதுக்களைக் கலந்தும் அளிக்கலாம்.

சாதாரண உப்பு :

சாதாரண உப்பு பாலில் சோடியம், குளோரைடு மற்றும் இரும்புச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஆடுகளுக்கு சாதாரண உப்பு தருவது மிகவும் முக்கியம். ஒரு கட்டி உப்பை ஆடுகள் நாக்கில் நக்குமாறு தருவது மிகுந்த நன்மை பயக்கும் அல்லது தீவனத்துடன் 2 சதவிகிதம் உப்பை கலந்துக் கொடுக்கலாம்.

விட்டமின் மற்றும் தடுப்பு மருந்துகள் :

விட்டமின், ஏ, ஈ மற்றும் டி போன்றவை ஆடுகளுக்கு அத்தியாவசியமானவை. வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் தேவையான விட்டமின்களைத் தயாரித்துக் கொள்ளும். அது போக பசும்புற்களில் விட்டமின் ஏ நிறைந்திருக்கும் மக்காச் சோளம், சதையுள்ள பசுந்தீவனம் பிற விட்டமின்களைத் தரும். வளரும் கன்றுகளுக்கு விட்டமின்கள் மிகவும் அவசியம்.

ஏரோமைசின், டெராமைசின் வளரும் குட்டிகளுக்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நோய்த் தாக்குதலைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்கிவிக்கும்.

பராமரிப்பு முறைகள் :

வயதைக் கண்டறிதல் :

பொதுவாகப் பல் வரிசையைக் கொண்டு ஆடுகளின் வயதை நிர்ணயம் செய்யலாம். பற்களில் தற்காலிகப்பற்கள், நிரந்தரப் பற்கள், பால் பற்கள் எனப் பலவகை உண்டு. ஆடுகளில் மேல் தாடையில் பற்கள் காணப்படுவதில்லை. எனவே கீழ்த்தாடைக் பற்களின் எண்ணிக்கையை வைத்து வயதைக் கணிக்கலாம். கீழ்க்கண்ட அட்டவணை ஆடுகளின் வயதை பற்களின் எண்ணிக்கையை வைத்து அறிய உதவும் தொழில்.

வயது பற்களின் அமைப்பும், எண்ணிக்கையும் :

பிறந்தவுடன் 0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம் கீழ்த்தாடையின் முன்புறம் 8 முன்பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
ஒன்றரை வயது நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்.
இரண்டரை வயது நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
மூன்றரை வயது ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
4 வயது எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
6-7 வயது பற்கள் விழுந்துவிடும்

அடையாளம் இடுதல் :

ஆடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதற்கு அடையாளம் இடுவது அவசியம் ஆகும். இவற்றை 3 முறைகளில் செய்யலாம்.

1. காதுகளில் பச்சைக் குத்தி எழுத்துக்களைப் பொறித்தல்

2. வாலில் பச்சை தொழில் குத்துதல்

3.காதுகளில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்குளால் ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல்
போன்ற முறைகளைக் கையாளலாம். இவை ஒவ்வொரு ஆடு பற்றி விபரப் பதிவேடுகளை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

கொம்பு நீக்கம் செய்தல் :

கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும். கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும்.

கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும். நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும். காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது. மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது. குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

காயடித்தல் :

இனப்பெருக்கத்திற்குத் தேவையில்லாத கிடாக்களை காயடித்து விடலாம். கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும். பர்டிஸோ கருவி என்ற கருவி மூலம் காயடித்தால் நோய்த் தொற்று அபாயங்கள் குறையும்.

பயன்கள் :

1. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும்.

2. உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

3. ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புக் கொண்டதாக இருக்கும்.

4. அமைதியாக இருக்கும்.

பயிற்சி :

ஆடுகள் ஆரோக்கியமாக வளர அவைகளுக்குப் பயிற்சி அவசியம். கொட்டிலில் அடைத்து அல்லது கட்டி வளர்க்கப்படும் ஆடுகள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரமாவது திறந்த வெளியில் திரிய அனுமதிக்கவேண்டும். திறந்த வெளி எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு பயிற்சிக்கு ஏற்றது. பனித்துளி இருக்கும் போதும், சூரியன் மறைந்து இரண்டு மணி நேரத்திற்குப் பின்பும் மேய விடுதல் கூடாது. ஈரமான புற்களில் மேயும் போது குடல் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு.

நகங்களை வெட்டுதல் :

ஆடுகளின் சிறந்த பராமரிப்பிற்கு நகங்களை நன்கு வெட்டுதல் வேண்டும். இல்லையெனில் நகம் பெரிதாக வளர்ந்து, காலை பலகீனப்படுத்தும். 30 நாட்கள் இடைவெளியில் கூரிய கத்தி, அல்லது கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடுதல் வேண்டும்.

பெட்டை ஆடுகளை தெரிவு செய்தல் :

நல்ல இலாபம் தரக்கூடிய மந்தையில் இனப்பெருக்கத்திற்கு பெட்டையத் தேர்வு செய்தல் அவசியம். பெட்டை ஆடுகளின் நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு அவை நல்ல உடல் அமைப்பு பெற்றிருக்கவேண்டும். உடல் நல்ல வளர்ச்சியுடன் தோற்றத்திற்கு ஆரோக்கியமானதாகவும் நான்கு கால்களையும் நன்கு ஊனி நிற்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பக்கவாட்டில் உடல் நீள முக்கோண வடிவமாகவும் கால்கள் வளையாமல் நேராகவும் தோள் கூர்மையாகவும் இருத்தல் வேண்டும். இடுப்புக்குழி எந்தளவு குழிந்துள்ளதோ அந்தளவுக்கு தீவனம் அதிகமாக உட்கொள்ளும். உடல் எடைக்குத் தகுந்தவாறு, மடி அதிகம் தொங்காமல் அடிவயிற்றின் பின்பகுதியில் நன்கு உலகம் இணைந்திருக்கவேண்டும்.

ஆட்டின் தோல் நன்கு தளர்ச்சியாக, வழவழப்பாக, மிருதுவாக இருக்கவேண்டும். சில இனங்களில் நல்ல பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் சதைப்பற்று குறைவாக இருக்கும். கழுத்து மெலிந்து தலையுடன் நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். கண்கள் தெளிவாக பளிச்சென்று இருக்கவேண்டும். பெட்டை ஆடுகள் சாதுவாகவும் பெண்மைத் தோற்றத்துடனும், இருக்க வேண்டும். மடி சதைப்பற்றின்றி மென்மையாக நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருத்தல் வேண்டும். காம்புகள் முன்னோக்கி சற்று கூர்மையானதாகவும் இருக்கும்.

கிடா ஆடுகள் தேர்வு செய்தல் :

கிடாக்கள் நல்ல உடல் தொழில் அமைப்பும் வலுவும் பெற்றிருக்கும். நாம் தெரிவு செய்யும் கிடா நல்ல இனப்பெருக்கத் திறனுடையதாக இருக்கவேண்டும். விலா எலும்புகள் நல்ல ஆழத்துடனும் கால்கள் நேராக உடலை நன்கு தாங்கக்கூடியதாக இருத்தல்வேண்டும். பொதுவாக கிடா ஆடுகள் கொம்பு நீக்கப்பட்டவையாக இருத்தல் நலம். மேலும் நல்ல ஆரோக்கியத்துடனும் எந்த ஒட்டுண்ணிகள் பாதிப்புமின்றி இருத்தல்வேண்டும். கிடாவனாது நல்ல பால்தரக்கூடிய இனத்திலிருந்து தேர்வு செய்தல் அவசியம். கிடாக்கள் அதிக சதைப்பற்றுடன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் இனப்பெருக்கத் திறன் அதிகமாக இருத்தல் வேண்டும். நன்கு பராமரிக்கப்பட்ட கிடாவை அதன் முதல் இனச்சேர்க்கை காலத்தில் 5-6 பெட்டை ஆடுகளுடன் சேர்க்கலாம் (6 மாத வயதில்) 18-24 மாதக் காலத்தில் 25-30 பெட்டைகள் வரை சினைப்படுத்தும் திறனும், நன்கு முதிர்ந்த, நல்ல இனப்பெருக்க காலத்தில், 50-60 ஆடுகளுடன் இனச்சேர்க்கை செய்யும் திறனும் பெற்றது.

இனச்சேர்க்கை காலம் :

ஆடுகள் பொதுவாக சூட்டிற்கு வரும் போது உலகம் அவைகளிடம் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்படும்.

வாலை அடிக்கடி ஆட்டுதல், பாலுறுப்புகள் சிவந்து காணப்படுதல், சிறிது மியூகஸ் திரவம் வழிதல், ஆடு அமைதியின்றிக் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அலறுதல் . சூட்டில் இருக்கும் காலம் 18-21 வரை நாட்கள் வேறுபடும். பெட்டை ஆடு சூட்டிற்கு வந்த இரண்டாவது நாளில் இனச்சேர்க்கை செய்தல் நலம். ஏனெனில் சூட்டிற்கு வந்தபின் 22-48 மணி நேரம் வரை தான் அணுக்கள் உயிருடன் இருக்கும். நல்ல தீவனம் அளித்து முறையாகப் பராமரித்தால் இறப்பு விகிதம் குறைந்து, சினைப்பிடித்தல் அதிகரிக்கும். இனச்சேர்க்கை அல்லது கருவூட்டல் நேரமானது தட்பவெப்பநிலை, இடம், இனம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

பெட்டை ஆடுகள் கருவூட்டம் :

பெட்டை ஆடுகள் 1 வயதிலிருந்தே கருவூட்டலுக்குத் தயாராகிவிடும். பொதுவாக 10-15 மாதத்தில் கருவூட்டல் செய்தால் 15-20 வது மாதத்தில் முதல் குட்டி ஈனும் சினைக்காலம் 151+3 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை கருவூட்டல் செய்தல் நலம். சில இனங்கள் 2 வருடத்திற்கு 3 முறை அதாவது 18 மாதங்களுக்கொரு முறை குட்டி ஈனும் 5-7 வருடங்களில் அதிகக் குட்டிகள் ஈனும். சில இனங்கள் 12 வயது வரை கூட நிறையக்குட்டிகள் ஈனும் திறன் பெற்றுள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட ஆடானது அடுத்த குட்டி ஈனுவதற்கு முந்தைய மாதம் வரை பால் கறக்கக்கூடியதாக இருக்கும். சினை ஆட்டை சரியான தீவனமளித்து, நன்கு பாதுகாக்கவேண்டும். மழை, வெயிலிருந்தும் ஒட்டுண்ணிகளிடமிருந்தும் முறையாகப் பராமரித்தால் சிறப்பான கன்றுகளைப் பெற முடியும்.

சினைப் பருவம் :

பால் சுரத்தல் தற்காலிகமாக அதிகரிப்பதே ஆடு சினை அடைந்ததன் முதல் அறிகுறியாகும். ஓஸ்டிரஸ் திரவம் வழிவது நின்று விடும். சினைப் பிடித்த முதல் 3 மாதங்களில் குட்டியின் உடல் உருவாகத் தொடங்கும். 6-8 வாரங்களில் குட்டியின் தலைப் பாகம் உருவாகும். கன்று ஈனும் பெட்டை ஆடானது உருவத்தில் மாற்றம் பெற்றுக் காணப்படும். சில சமயங்களில் வயிறு புடைப்பதும் தெரியாது. குட்டி ஈனுவதற்கு முன் 6-8 வாரங்களில் மடி உப்பிக் காணப்படும். ஆனால் இதை மட்டும் வைத்து ஆடு சினைப்பிடித்துள்ளதாக எண்ணிவிட முடியாது. சில சமயங்களில் சினைப் பிடிக்காத போதும் மடியிலிருந்து பால் சுரக்கும்.

ஒரு சாதாரண ஆடு 2 குட்டிகள் ஈனும், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடு 5 குட்டிகள் வரை ஒரே நேரத்தில் ஈனும். ஆனால் குட்டிகள் எந்தளவு குறைவாக ஈனுகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமான குட்டிகளாக இருக்கும். குட்டிகளின் எண்ணிக்கை ஆட்டு இனம். தட்பவெப்பநிலை, சினைப் பிடிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. ஹிசார் பண்ணையில் பீட்டல் இனமானது 35 சதவிகிதம் ஒரு குட்டியும் 54 சதவிகிதம் இரு குட்டிகளும், 6.3 சதவிகிதம் 3 குட்டிகளும் 0.4 சதவிகிதம் 4 குட்டிகளும் போடும் திறன் பெற்றது. ஜமுனாபுரியியல் இரட்டைக் குட்டி ஈனும் சதவீதம் 19-50 சதவிகிதம் 19-50 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது. இதுவே பார்பரியில் 47-70 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது.

வெள்ளாடுகள் கவனிப்பும் பராமரிப்பும் :

சினை ஆடுகள் பராமரிப்பு :

1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.

2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.

3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.

4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.

5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.

6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.

பிறந்த குட்டிகளின் பராமரிப்பு :

குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.

பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும்.

குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.

தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும். தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.

தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.

முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.

புதிதாகப் தொழில் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.

தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.

முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.

முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.

கிடா குட்டிகள் இனச்சேர்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ள வற்றை காயடித்து விடவேண்டும்.

சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.

8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.

குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம் அதோடு பண்ணைப் பதிவேடுகளில் அடையாளமிட்டுக் குட்டிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பராமரிக்கவேண்டும்.

பால் கறக்கும் போது கவனிக்க வேண்டியவை :

பால் கறக்கும் பெட்டை ஆடுகளைக் கிடாக்களின் அருகே விடாமல் தனியே பராமரிக்கவேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கறக்கலாம். காம்புகள் காயம் படுமாறு அழுத்தாமல் கவனமாகக் கறக்கவேண்டும். கறப்பதற்கு முன், மடி மற்றும் காம்புகளை நன்கு கழுவி உலர வைக்கவேண்டும். காம்பின் எல்லா இடங்களிலும் அழுத்தம் சீராகப் பரவுமாறு, கறக்கும் போது கைவிரல்களை நன்கு மடித்துக் கறக்கவேண்டும். பால் வருவது சிறிதளவாகக் குறையும் வரை கறக்கலாம்.

இளம் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு :

நல்ல தரமுள்ள பசும்புல் மற்றும் அடர் தீவனங்களை உலகம் சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.கலப்புச் செய்ய வேண்டிய ஆடுகளை வாரா வாரம் சரிபார்த்துப் பதிவேட்டில், குறித்துக் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு 18-24 நாட்களுக்கு ஒரு முறை பெட்டை ஆடு சூட்டிற்கு வரும். இந்தச்சூடானது 2-3 நாட்கள் வரை இருக்கும். சராசரி சினைக்காலம் 151+3 நாட்கள் ஆகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
வேலி மசால் :


பருவம் :

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.

உழவு :

இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

பார்கள் அமைத்தல் :

50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

உரமிடுதல் :

மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.

விதையளவு :

எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் 600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

நீர் மேலாண்மை :

விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.

களை நிர்வாகம் :

தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.

எக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.

கலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.

குறிப்பு :

விதைகள் நன்றாக விதை நேர்த்தி செய்யவேண்டும். கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் கீழே வைத்து, பின் அதில் வேலிமசால் விதைகளைப் போடவேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்

வேலிமசால் விதைகளை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யலாம்.

தகவல் : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 27 February 2017

பாரம்பரிய நெல் :


‘தமிழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பசுமை விகடனுக்கு முன், பசுமை விகடனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். பசுமை விகடன் வெளிவந்த பிறகுதான் ஏராளமானோர் இயற்கை விவசாயத்துக்கு வந்துள்ளனர்’ என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், அடிக்கடி சொல்வார். அப்படி, பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்தால், விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை ஆய்வாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் கோவிந்தராஜன். பசுமை விகடன் மூலமாக இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்கள் மீது காதல் கொண்ட இவர், நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். சொந்தமாக மாடுகள் இல்லாதபோதும், தன் வீட்டு பால்காரரிடம் சாணம், சிறுநீர் வாங்கி அவற்றின் மூலம் வீட்டிலேயே இடுபொருட்களைத் தயார் செய்து, வீட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அன்னப்பன்பேட்டை எனும் கிராமத்தில் உள்ள தனது வயலுக்குக் கொண்டுசென்று இயற்கை விவசாயம் செய்துவருகிறார், கோவிந்தராஜன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வரும் இவர், இந்த ஆண்டு குறுவைப் பட்டத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார்.

ஆசை ஏற்படுத்திய பசுமை விகடன் :

ஒரு பகல்பொழுதில் கோவிந்தராஜனைச் சந்தித்தோம். “எங்க குடும்பம் விவசாயக் குடும்பம்தான். ஆனாலும், எனக்கு அதுல சுத்தமா நாட்டமில்லை. படிப்பு முடிச்சதுமே அரசு வேலை கிடைச்சுட்டதால, விவசாயம் செய்யணுங்கிற எண்ணம் வந்ததேயில்லை. அப்பா இருந்த வரைக்கும் விவசாயம் பார்த்தார். அதுக்கப்புறம், பூர்வீக நிலத்தைக் குத்தகைக்கு விட்டுட்டேன். மூன்றரை வருஷத்துக்கு முன்னாடிதான் பசுமை விகடன் எனக்கு அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் ரகங்கள் மேல ஆசை வந்து, விவசாயம் செய்யணும்னு தோணுச்சு. எங்களோட பூர்வீக நிலத்திலேயே விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ, ரெண்டு வருஷமா தீவிரமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன்” என்று சுய அறிமுகம் செய்துகொண்ட கோவிந்தராஜன், தொடர்ந்தார்.

இரவல் தண்ணீரில் விவசாயம்

“மொத்தம் 7 ஏக்கர் நிலம் இருக்கு. களிமண் பூமி. பாசன வசதி கிடையாது. இப்போ பக்கத்துத் தோட்டத்துக்காரர்கிட்ட தண்ணீர் வாங்கிதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். அஞ்சு வருஷமா விவசாயம் செய்யாம தரிசாகக் கிடந்த 2 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். போன வருஷம், சம்பா பட்டத்துல கதிராமங்கலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஸ்ரீராம்கிட்ட இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, தூயமல்லி, மைசூர் மல்லி, சிவப்பு கவுனினு பாரம்பர்ய ரகங்களை வாங்கிட்டு வந்து 2 ஏக்கர் நிலத்துல சாகுபடி செஞ்சேன். ஸ்ரீராம்கூட பசுமை விகடன் மூலமா அறிமுகமானவர்தான்.

புகையானைத் தடுத்த இயற்கை விவசாயம்

பசுமை விகடன்ல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களைத்தான் கடைப்பிடிச்சேன். தேவைக்குச் சில இயற்கை விவசாயிகள்கிட்ட ஆலோசனைகளையும் கேட்டுக்கிட்டேன். எல்லா ரகங்களும் சேர்த்து ஏக்கருக்கு 14 மூட்டைங்கிற (60 கிலோ மூட்டை) அளவுல மகசூல் கிடைச்சுது. முதல் சாகுபடியிலேயே அந்தளவு மகசூல் கிடைச்சது மனநிறைவா இருந்துச்சு. இந்த வருஷம் தண்ணீர் தட்டுப்பாடுங்கிறதால குறுவைப் பட்டத்துல, 40 சென்ட் நிலத்துல கருங்குறுவை ரக நெல்லையும், 50 சென்ட் நிலத்துல பூங்கார் ரக நெல்லையும் பயிர் பண்ணினேன்.

பூங்கார் ரகத்துல 15 மூட்டையும் கருங்குறுவையில 10 மூட்டையும் மகசூல் கிடைச்சது. கருங்குறுவை ரகம் போட்டிருந்த வயல்ல ஆடுகள் மேய்ஞ்சதால கொஞ்சம் பாதிப்பு. இல்லேனா இன்னும் ரெண்டு மூட்டை சேர்த்து மகசூல் கிடைச்சிருக்கும். பக்கத்துல சில வயல்கள்ல புகையான் தாக்குதல் இருந்துச்சு. ஆனா, என்னோட பயிர்கள்ல அந்தப் பிரச்னையே இல்லை” என்ற கோவிந்தராஜன், அறுவடை செய்து வைத்திருந்த நெல்மணிகளை எடுத்துக் காட்டினார்.

வியந்து பார்த்த விவசாயிகள்

தொடர்ந்து பேசிய கோவிந்தராஜன், “இந்தப் பகுதியில யாரும் கருங்குறுவை சாகுபடி செய்றதில்லை. என் வயல்ல கருங்குறுவை நெல்மணிகள் சாம்பல் நிறத்துல இருந்ததைப் பார்த்ததும் நிறைய விவசாயிகள் வந்து பார்த்துட்டுப் போனாங்க. இதோட மகத்துவத்தைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு விதைநெல்லையும் சிலர் கேட்டிருக்காங்க. அதனால, விளைஞ்சதுல பாதி அளவுக்கு விதை நெல்லாகவே விற்பனை செய்துடலாம்னு இருக்கேன். மீதியை அரிசியா மாத்தி விற்பனை செய்யப்போறேன்.

ஒரு செடியில் 50 தூர்கள்

கருங்குறுவை ரக அரிசிக்கு தேவை அதிகமா இருக்கு. அறுவடை சமயத்துல கருங்குறுவை பயிர் நாலரையடி உயரத்துக்கு வளர்ந்திருந்துச்சு. ஒவ்வொரு பயிர்லேயும் 35 தூர்ல இருந்து 50 தூர்கள் வரை இருந்துச்சு. கதிர்கள் வாளிப்பா அரை அடி நீளத்துக்கும், ஒவ்வொரு கதிர்லேயும் 120 மணிகள்ல இருந்து 150 நெல்மணிகள் வரையும் இருந்துச்சு. நெல்மணிகள் ஆரம்பத்துல பச்சை நிறத்துல இருந்து, அப்படியே கறுமை நிறத்துக்கு மாறிடுச்சு. முழுமையா முதிர்ச்சி அடையறப்போ சாம்பல் நிறத்துல இருந்துச்சு.

இலைக்கருகலுக்குச் சாணிப்பால் + சூடோமோனஸ் :

பயிர் வளர்ச்சிக்கு கனஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, தேமோர் கரைசல் மூணையும்தான் பயன்படுத்தினேன். அதில்லாம, வாய்மடையில தனியா உரக்குழி அமைச்சு, அதுல சாணத்தையும், இலை தழைகளையும் போட்டு மட்க வெச்சுப் பாசனம் செஞ்சேன். ஒரு வாரம் வரை செடிகள் ஊறி மட்கின தண்ணீரைப் பாசனம் செஞ்சதால செடிகளுக்குத் தேவையான தழைச்சத்து நல்லா கிடைச்சது. நடவுல இருந்து 50 நாட்கள் வரை இப்படி கொடுத்தேன். 60 நாளுக்கு மேல, வெப்பக் காற்று அதிகமா வீசினதால, இலைக்கருகல் நோய் வந்துச்சு. 20 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணீர்ல ஒரு நாள் ஊற வெச்சு வடிகட்டி, அதுல அரை கிலோ சூடோமோனஸ் சேர்த்து, தண்ணில கலந்து தெளிச்சதும், மூணே நாள்ல இலைக்கருகல் சரியாகிடுச்சு. வேற நோய்களோ, பூச்சிகளோ தாக்கவேயில்லை” என்றார்.

கொஞ்சம் விதைநெல்... கொஞ்சம் அரிசி

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய கோவிந்தராஜன், “கருங்குறுவை ரகத்துல 600 கிலோ நெல் கிடைச்சிருக்கு. அதுல 300 கிலோவை விதை நெல்லா கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுமூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 300 கிலோ நெல்லை அரிசியா மாத்தினா, 165 கிலோ அரிசி, 15 கிலோ குருணை, 115 கிலோ தவிடு கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்னு விற்பனை செஞ்சா 13 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும்.

பதினைந்து கிலோ குருணையைக் கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 600 ரூபாய் கிடைக்கும். நூற்றுப் பதினைந்து கிலோ தவிட்டை கிலோ 8 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 920 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் 29 ஆயிரத்து 720 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

விதைப்புல இருந்து அரிசியா மாத்துறது வரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு இருக்கும். எப்படியும் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். நாற்பது சென்ட் நிலத்துல நெல் சாகுபடி செஞ்சு 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சா, அதுவே பெரிய லாபம்தானே. இதுதான் இயற்கை விவசாயத்தோட மகிமை” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு :
கோவிந்தராஜன்
செல்போன்: 88833 32257

5 சென்ட் நாற்றாங்கால்... 5 கிலோ விதைநெல் :

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் ரகத்தைச் சாகுபடி செய்யும் விதம் குறித்துக் கோவிந்தராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே...

கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். நாற்றாங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு, நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த வேண்டும்.

மறுநாள், 5 கிலோ விதைநெல்லை மூன்றாம் கொம்பு விதையாக விதைக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 10-ம் நாள் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். பதின்மூன்றாம் நாள் 100 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பதினெட்டாம் நாளில் முக்கால் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

சாகுபடி வயலில் 2 சால் சேற்றுழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளியும், பயிருக்கு பயிர் 25 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்குமாறு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 3, 15, 30 மற்றும் 45-ம் நாட்களில், 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிட வேண்டும்.

நடவு செய்த 5, 17, 32 மற்றும் 47-ம் நாட்களில், ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும். இலைக்கருகல் நோயைத் தடுக்க, 60-ம் நாளன்று 10 கிலோ சாணம் கலந்த கரைசலில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 92-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

மண்ணும் பட்டமும் :

கருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது. இதன் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் எனச் சொல்லப்படுகிறது. சோறு மற்றும் கஞ்சிக்கு சிறப்பாக இருக்கும். அரிசி, வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

ரத்தசோகை, குஷ்டம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதுதவிரப் போக சக்தியை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 25


கன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் முறைகள் பற்றி ?

1. கன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும்.

2. கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.

3. கன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த சமயத்தில் மடியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

4. சில மாடுகளில் கன்று ஈனும் சமயத்திற்கு முன்பும் கன்று ஈன்ற பின்பும் மாட்டின் பின்புறம் மற்றும் மடியில் நீர்க்கோர்த்து இருக்கும். இது கன்று ஈன்ற பின்பு தானாகவே குறைந்துவிடும்.

5. பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் 2-4 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் 8-12 மணி நேரம் வரை நஞ்சுக்கொடி விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

faizalpetsfarm.blogspot.com

6. கன்று ஈன்ற மாடுகளில் கன்றினை பால் ஊட்ட விடுவது மற்றும் žம்பால் கறப்பது போன்ற செயல்கள் நஞ்சுக்கொடி தானாக விழ வழிவகுக்கும்.

7. கன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டில் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவ ஏதுவாகும்.

8. கன்று ஈன்று மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிட்டைக் கொடுக்கலாம். பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. கலப்பு தீவனத்தைப் பொருத்தவரை சிறிது, சிறிதாக மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.

9. அதிக பால் உற்பத்தி திறன் கொண்ட மாடுகளில் கன்று ஈன்றவுடன் பால்சுரம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

10. சில மாடுகளில் கன்று ஈன்றவுடன் அல்லது ஓரிரு நாட்களில் கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும். கஷ்டப்பட்டு கன்று ஈன்ற மாடுகள், நஞ்சுக் கொடி தங்கிய மாடுகள், வயதான, மெலிந்த மாடுகளில் கருப்பை வெளித்தள்ளுவதற்கு அதிக வாய்ப்பிருந்தால் இம்மாடுகளை கவனத்துடன் பராமரித்து இப்பிரச்சினையிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டும்.

11. கன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல் செய்து 90 நாட்களுக்குள் மாடுகளை மீண்டும் சினையாக்கி விட வேண்டும்.

தகவல்: முனைவர்.பி.என்.ரிச்சர்ட் ஜெகதீசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
எலுமிச்சை சாகுபடி :


தமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.

எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது.

இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது.

எலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம்.பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது.

வடிகால் வசதி :

பலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.களிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்ய முடியாது.மேல் மண் ஆழமில்லாமலும் அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்து விடும்.எலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.எலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது. வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது.பெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்.இலை மொட்டு ஒட்டுதல், பதியன்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன் தரும். பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும். ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும்.

ரகங்கள் :

பி.கே.எம் -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், ப்ரமாலினி போன்றவை எலுமிச்சையில் உள்ள உயர் விளைச்சல் ரகங்களாகும்.இவற்றில் பி.கே.எம்-1, விக்ரம் ஆகிய ரகங்கள் தமிழகத்திற்கு உகந்தவையாகும்.எனவே விவசாயிகள் நல்ல மகசூல் தரக்கூடிய எலுமிச்சை ரகங்களை தேர்ந்தெடுத்து, சாகுபடி செய்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோடைக்கலத்திற்கேற்ற கால்நடைநோய்த் தடுப்புமுறைகள் :


கோடைக்காலங்களில் கால்நடை மற்றும் கோழியினங்களுக்குச் சரியான பசுந்தீவனம் மற்றும் போதுமான குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் கால்நடைகளை, அதிகவெப்பத்தின் காரணமாகக் கொட்டிலில் அடைத்து வளர்க்கும் சூழல் ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாகக் கொட்டிலில் உள்ள சுகாதாரம் மற்றும் காற்றின் தரம் ஆகியவை கால்நடைகளின் நலனில் பெரும் பங்குவகிக்கின்றன. கறவை மாட்டினங்கள் மற்றும் எருமை இனங்களில் கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப உளைச்சல் காரணமாகக் கறவை திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பன்றி மற்றும் கோழியினங்கள் போன்ற உற்பத்திசார் தொழில் முறைகளுக்காக வளர்க்கப்படும்.

கால்நடைகளை வெப்ப உளைச்சல் பெரிதளவில் பாதிக்கிறது. கோடைக்காலப் பிரச்சினைகளான அதிகவெப்பமும் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றைச் சரியான முறையில் கையாண்டு கால்நடைகளின் உற்பத்திதிறனை மேம்படுத்துவதற்கான மேலாண்மை முறைகள் இங்குத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

கோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள் :

கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் :

அடைப்பான் நோய் :

கால்நடைகளில் விரைவில் மரணத்தை விளைவிக்கும் அடைப்பான் நோய் பேசில்லஸ் அந்தராசிஸ் எனும் நுண்ணுரியால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடல் துவாரங்களில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தொடர்ந்து உடனடி மரணம் ஏற்படும். இவ்வாறாக இறந்த கால்நடைகளின் மூலம் இந்நோய் அதிக அளவு பரவ வாய்ப்புள்ளதால், இவற்றை உடனடியாக ஆழ்குழியில் 10 லி சுண்ணாம்பு (அல்லது) சலவை சோடா கரைசலைத் தெளித்துப் புதைத்துவிட வேண்டும். இறந்த கால்நடைகளில் அருகாமையில் இருந்து பிற கால் நடைகளுக்கு முறையான தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

கோமாரிநோய் (கால்வாய் நோய்) :

கோமாரிநோய் மாட்டினங்களை அதிகம் பாதிக்கின்றது. எருமை, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றை இந்நோய் பாதித்தாலும் இவற்றில் நோய்க்கான அறிகுறிகள் குறைந்த அளவிலேயே வெளிப்படுகின்றன. இந்நோயால் அதிக அளவில் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை இந்நோய்க்கான தடுப்பூசியைக் கால்நடைகளுக்கு கட்டாயம் அளிக்கவேண்டும். இந்நோயின் அறிகுறிகளாகக் கால்நடைகளில் வாய், நாக்கு மற்றும் கால் குளம்பு பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும். கொட்டகைகளில் 10 லி சலவைசோடா அல்லது 0.2 லி சிட்ரிக் அமில கரைசல் ஆகியவற்றைத் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலைக் தடுக்கலாம்.

அம்மை நோய் :

அம்மை நோயானது மாடு, எருமை, ஆடு மற்றும் கோழியினங்களை தாக்கும். நோய்த்தாக்கம் ஏற்பட்ட கால்நடைகளில் காய்ச்சலுடன் சிறுகொப்புளங்கள் காம்புப் பகுதிகளிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையில் இருந்து உடனடியாகப் பிரித்துத் தனியாகப் பராமரிக்க வேண்டும். வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் கலந்து புண்களின் மீது தடவுதலின் மூலம் இந்நோய், ஈக்கள் மூலம் பிறமாடுகளுக்குப் பரவுவதையும் இதர நோய்க்கிருமிகள் தாக்கத்தையும் தவிர்க்கலாம்.

ஆட்டுக் கொல்லைநோய் (பி.பி.ஆர்) :

இது செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் தாக்கவல்ல வெக்கை நோயினை ஒத்த ஒரு வகை நச்சுகிருமியால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளின் காய்ச்சல் மற்றும் மூக்குச் சவ்வு மற்றும் தொண்டைப் பகுதிகளில் அழற்சியும் ஏற்படும். பாதிக்கப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் சோர்வடைந்து, மெலிந்து நீர்வற்றி மூச்சுக்குழாய் பாதிப்பு மூலம் இறக்க நேரிடும். இந்நோய்க்கான தடுப்பூசி 3-4 மாதத்தில் குட்டிகளுக்கு அளிப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

தொண்டை அடைப்பான் நோய் :

தொண்டை அடைப்பான் நோய் மாடுகளையும், எருமைகளையும் தாக்கும்.

கருச்சிதைவு நோய் :

கருச்சிதைவு நோயால் (புருசெல்லோசிஸ்) பாதிக்கப்பட்ட கால்நடைகளை மந்தையில் இருந்து அறவே நீக்க வேண்டும். இந்நோய்த் தடுப்பூசி சரியான காலத்தில் அளிக்கப்பட வேண்டும். இந்நோய் மனிதர்களுக்கும் பரவும் தன்மை உடையது.

தொற்றும் வாய்ககொப்புளநோய் (ஒர்ப்) :

ஆடுகளில் பரவலாகக் காணப்படும் இந்நோய் அம்மை வகையினைச் சார்ந்த ஒருவகை நோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இந்நோய்க்கு நம் நாட்டில் தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளை உடனுக்குடன் தனியே பிரிக்க வேண்டும்.

கோடைக்காலத் கால்நடைப் பராமரிப்பு முறைகள் :

1. கொட்டிகள் சரியான காற்றோட்ட வசதியோடு அமைக்க வேண்டும்.

2. சூரிய ஒலி நேரிடையாக படாத வண்ணம் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் கொட்டில்களில் மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.

3. கொட்டிகளின் கூரைகளை வெண்மை நிற வண்ணப்பூச்சி செய்தல் மூலம் வெளிப்புற வெப்பம், உள்ளே வராமல் தடுக்கலாம்.

4. அதிகமான வெப்பம் நிலவும் நேரங்களில் கொட்டிகளின் உள்ளே மின்விசிறி, தண்ணீர்த் தெளிப்பான் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

5. கால்நடைகளுக்கு எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் குளிர்ந்தநீர் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படுமானால் அடர் தீவனங்களின் அளவை உயர்த்திக் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. கனிம மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துணை உணவுகளை அடர் தீவனங்களுடன் சேர்த்து அளித்தல் வேண்டும்.

8. கொட்டிகளின் தரைகள் தரமாகவும் தண்ணீர் வடியக் கூடிய நிலையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

9. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவங்களில் கால்நடைகளை நோய் அறிகுறிகளுக்காக அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

10. நோய் அறிகுறி தென்படும் கால்நடைகளை உடனடியாக பிரித்துக் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றைப் பராமரிக்கலாம்.

11. நோய் அறிகுறி தென்பட்ட கொட்டிலை உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

12. தினந்தோறும் கொட்டிகளைச் சுத்தப்படுத்தியபின் கிருமி நாசினி கரைசலைத் தெளித்தல் மூலம் நோய்த் தொற்றுகள் பரவாமல் தவிர்க்கலாம்.

13. கொட்டிகளில் முறையான சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவர் அறிவுரைப்படி உயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தல் வேண்டும்.

14. கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய நேரத்தில் ஒட்டுண்ணிகளுக்கான பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்கல் செய்ய வேண்டும்.

நம் மாநிலக் கால்நடைகளுக்கான காலத்திற்கேற்ற தடுப்பூசி அட்டவணை :

இது மட்டுமின்றி அரசால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையின் படி, கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளிக்க வேண்டும்.

* ஜனவரி – பிப்ரவரி கோமாரி நோய்

* மார்ச் - ஏப்ரல் ப்ருசெல்லோசிஸ் (அ) கருச்சிதைவுநோய்

* ஜூன் - ஜூலை கோமாரிநோய்

* ஆகஸ்ட் - செப்டம்பர் (மழைக்காலத்திற்கு முன்பாக) சப்பைநோய்

* செப்டம்பர் -அக்டோபர் தொண்டை அடைப்பான்

* பண்ணையில் இறக்கும் மாடுகளைக் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகே, முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

* வெளியாடுகளுக்குப் பண்ணையின் உள்ளே அனுமதி மறுத்தலின் மூலம் புதிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm