Wednesday 9 January 2019

பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை!

வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. முருங்கையையும் வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும்.

‘குழி’ தொழில்நுட்பம் :

வழக்கமான முருங்கை சாகுபடியில் ஒன்றரை அடிக்கு குழி எடுத்து, அதில் செடியை நடவு செய்வார்கள். இப்படி செய்யும் போது அடிக்கடி பாசனம் செய்வது அவசியமாகிறது. காரணம் நாம் கொடுக்கும் பாசன நீர் மட்டும் தான் ஆதாரம். பெய்யும் மழை நீர், அந்த இடத்தை நனைத்து விட்டு வழிந்தோடி விடும். இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களை இணைத்தால் இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும். இதற்கு நாம் செடியை நடவு செய்ய குழி எடுக்கும் போது ஆழமாக எடுத்தால் போதும். அதாவது, 5 அடி ஆழம், 4 அடி நீளம், அகலத்தில் குழி எடுக்க வேண்டும். முருங்கை கன்றுக்கு இத்தனை ஆழமான குழிகளா எனத் தோன்றும். ஆனால், இந்த குழிகள் தான் வறட்சியில் இருந்து முருங்கையை காக்கும் கவசம். இப்படி எடுக்கும்போது ஒரு ஏக்கருக்கு தோராயமாக 80 முதல் 100 குழிகள் வரை எடுக்கலாம்.

ஆழகுழி நடவு :

4 அடி நீள, அகலத்தில் அளந்துக்கொண்டு குழியெடுக்க வேண்டும். முதல் மூன்று அடி ஆழம் வரை எடுக்கும் மண்ணை குழியின் மேல் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு அடி ஆழத்தில் எடுக்கும் மண்ணை குழியின் கீழ் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழியின் ஆழம் 5 அடி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, நாம் ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள மேல்மண்ணை குழியில் கொட்டி நிரப்ப வேண்டும். அதற்கு மேல், தொழுவுரம், சாம்பல் கலந்த கலவையை ஒவ்வொரு குழியிலும் ஒரு அடி உயரத்திற்கு கொட்ட வேண்டும். அதற்கு மேல் கீழ் பக்கமாக எடுத்து வைத்துள்ள மண்ணை ஒரு அடி அளவுக்கு குழிக்குள் தள்ள வேண்டும். இப்போது, குழியில் தண்ணீர் விட வேண்டும். மேலுள்ள மண், அரையடி ஆழத்திற்கு இறங்கும். ஒரு நாள் இடைவெளி விட்டு, நான்கு அடி குழியில், ஒரு முனையில் இருந்து அரையடி தள்ளி, கையால் குழியெடுத்து, முருங்கை செடிகளை நடவு செய்ய வேண்டும். அதே குழியின் மறுமுனையில் இருந்தும் அரை அடி இடைவெளி விட்டு, மற்றொரு செடியை நடவேண்டும். ஆக, ஒரு குழியில் இரண்டு செடிகளை நடவேண்டும். இரண்டு செடிகளுக்கான இடைவெளி மூன்று அடி இருக்க வேண்டும். நடவு வயலைச் சுற்றி, 15 அடி இடைவெளியிலும், வயலுக்குள் 30 அடி இடைவெளியிலும் இதே முறையில் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியின் அருகேயும் உள்ள கீழ்மண்ணை நீளமாக கரையாக அமைத்து விட வேண்டும். இப்படி செய்தால் பெய்யும் மழைநீர் அந்தந்த பகுதியிலேயே தடுக்கப்படும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், இரண்டாவது மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறையும், மூன்றாவது மாதத்தில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ளவர்கள், இரண்டு ஆண்டுகள் கழித்து மாதம் ஒருமுறை பாசனம் செய்தால் கூடப் போதும். வாய்க்கால் பாசனத்தை விட, சொட்டுநீர் பாசனம் அமைத்தால் குறைந்த நீர்வசதி உள்ளவர்கள் கூட முருங்கை பயிரிடலாம்.

ஒவ்வொரு குழியும் ஒரு ஒட்டகம்!

குழித் தொழில்நுட்பம் பற்றி பேசும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முன்னோடி முருங்கை விவசாயி அழகர்சாமி, ‘‘முருங்கை மரம் அதிக பலமில்லாத மரம். வேகமா காத்தடிச்சா கீழே சாய்ஞ்சிடும். அதேப் போல வறட்சியைத் தாங்கி வளர்ற பயிர்னாலும், கடும் வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாம மரம் காஞ்சிப்போயிடும். அதுக்குக் காரணம், நாம அதிக ஆழம் இல்லாம மேலாக குழி எடுத்து நடுறதுதான். அஞ்சு அடி ஆழத்துக்கு குழி எடுத்து நடும்போது, வளமான மேல் மண் கீழே போயிடுது. செடிக்கு தேவையான சத்து சாம்பல், எரு கலவையில கிடைச்சிடுது. அஞ்சு அழி குழியும் மண்ணு பொலபொலப்பா இருக்கும். அதுனால, இந்த குழியில நடுற செடியோட வேர் அஞ்சு அடி ஆழம் வரைக்கும் வேகமாப் போகும். செடியும் செழிப்பா வளரும். அஞ்சி அடிக்கு மேல மண்ணு கடினமா இருக்கும். அதுல போய் வேர் முட்டி, உடைஞ்சு பல கிளைகளாகப் பிரியும். ஒரு குழியில ரெண்டு செடிகளை நடும்போது, ரெண்டு வேரும் இப்படி பல கிளைகளாப் பிரிஞ்சு ஒண்ணோடு ஒண்ணு பின்னிக்கும். அதுனால எவ்வளவு காத்தடிச்சாலும் மரம் சாயாது. பொதுவா முருங்கையை நெருக்கமா வைக்கும்போது, காத்து உள்ள நுழைஞ்சு வெளியப் போக வழியில்லாம கிளைகள்ல மோதி மரம் சாயும். ஆனால், முப்பது அடி இடைவெளியில முருங்கையை நடும்போது, காத்து உள்ள நுழைஞ்சு, சுலபமா வெளியப் போயிடும். அதுனால இந்த முறையில நடுறவங்க காத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அடுத்தது, பாசனம். இந்த அஞ்சு அடி குழி ஒவ்வொன்னும் ஒரு ஒட்டகம் மாதிரி..மழை பெய்யும்போது அந்த இடத்துல விழுகுற அவ்வளவு தண்ணியையும் பிடிச்சு வெச்சுக்கும். அதுனால மரத்தோட வேர் பகுதி எப்பவும் ஈரப்பதமாகவே இருக்கும். அதனால, ரெண்டு மூணு மாசம் பாசனமே இல்லன்னாலும் மரம் செழிப்பா இருக்கும். மூணு மாசத்துக்குள்ள எப்படியும் ஒரு மழை கிடைச்சிடும். அதுனால இடையக்கோட்டை, பள்ளப்பட்டி மாதிரியான ஒரு சில இடங்கள்ல இந்த முறையில முருங்கையை மானாவாரியாகவே சாகுபடி செய்றாங்க. இப்படி செய்யும் போது ரசாயனத்துக்கு வேலையே இல்லை. ஆறு மாசத்துக்கு ஒருதடவை சாம்பலையும், எருவையும் கலந்து கொடுத்தாப் போதும். காய் வர்ற நேரத்துல, பஞ்சகவ்யா தெளிச்சா, காய் நல்லா பெருசா வரும். இதனால மகசூலும் அதிகரிக்கும்.

வருமானம் எப்போது வரும்?

முருங்கையை நடவு செய்த 6-ம் மாதத்தில் இருந்து மகசூலுக்கு வரும். தொடக்கத்தில் 10 கிலோ, 20 கிலோ எனத் தொடங்கும் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 200 கிலோ மகசூலாகக் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 80 குழிகள் இருந்தாலும், குழிக்கு இரண்டு மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கும். சராசரியாக 150 மரங்கள் என வைத்துக்கொண்டாலும் 30 ஆயிரம் கிலோ (50 டன்) காய்கள் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலைக்கிடைக்கும். சராசரியாக கிலோ 20 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், 30 டன் காய்க்கு 6 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்‘‘ என்றார்.

வரும் மழைக்காலத்தை மனதில் வைத்து, வாய்ப்புள்ள இடங்களில் முருங்கையை நடவு செய்தால், வறட்சியை சமாளித்து, நல்ல வருமானமும் பார்க்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
5 முறை லிம்கா... ஒரு கின்னஸ்... அரபு விவசாயியின் அசத்தல் ரெக்கார்டு!

என்னதான் காய்கறிகளை விளைய வைத்தாலும், நெல்லை விளைய வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவரை விடவில்லை. அதனால், 2014-ம் ஆண்டு முதன்முதலாக சுதீஷ், நெல் விளைவிக்க முயற்சி செய்தார்.

``விதைகள் மற்றும் செடிகளை மாணவர்களுக்குக் கொடுத்து அவற்றை வளர்க்கச் சொல்கிறோம். அதில் ஒரு போட்டி வைத்து செடிகளை வளர்க்கும் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் திட்டம். இதன் மூலம் இயற்கை விவசாயம் பற்றிய நினைப்பு தொடர்ந்து மக்கள் மத்தியில் இருக்கும்" - இது அரபு பத்திரிகை ஒன்றிற்கு விவசாயி சுதீஷ் அளித்த பேட்டி.

யார் இந்த சுதீஷ்?

கேரளா மாநிலம், குருவாயூரைப் பூர்வீகமாகக் கொண்டவர், சுதீஷ். 1997-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடான ஷார்ஜாவுக்கு இடம் பெயர்ந்துவிட்டார். பொறியாளராக அங்கு சென்றாலும், சென்றது முதல் விவசாயப் பணிகளில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அவ்வாறு விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கும் இவர், லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். கடந்த 10 வருடங்களாக வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் இவர், கடந்த ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

பாலைவன மண் கொண்ட ஷார்ஜாவில் பச்சைப் பசேல் என நெற்கதிர்களை விளையை வைத்திருக்கிறார் சுதீஷ். இதை நினைத்துப் பார்க்கும்போது சுலபமாகத்தான் தெரியும். ஆனால் செய்து காட்டுவது மிகவும் கடினம். தான் பொறியாளராக வேலைக்குச் சென்றாலும், தன்னுடைய ஆர்வம் காரணமாகத்தான் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளார். அதைத் தொடர் முயற்சிகளால் முழுமையாகச் சாத்தியப்படுத்தியுள்ளார். இயற்கை விவசாயம் செய்து கொண்டே, தன்னுடைய வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார். தனது தோட்டத்தில் வெண்டை, நாட்டுத்தக்காளி, கீரைகள் எனப் பலவற்றையும் உற்பத்தி செய்து வருகிறார் இவர். நண்பர்களுக்கும் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இதனால் ஐக்கிய அரபு நாடுகளில் விவசாயம் தொடர்பான விஷயங்களில் இவரது பெயர் அதிகமாக உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கின்னஸ் சாதனை!

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 4,916 கறிவேப்பிலை நாற்றுகளை சார்ஜா இந்தியப் பள்ளி (Sharjah Indian School) மாணவர்களுக்கு அளித்து சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் 2,083 கன்றுகள் விற்பனை செய்ததே சாதனையாக இருந்தது. அதையும் செய்தது இவர்தான். இவர் கறிவேப்பிலையைக் கொடுக்க முடிவெடுத்ததற்குக் காரணம், ஐக்கிய அரபு நாடுகளில் அதிக பூச்சிக் கொல்லி காரணமாகக் கறிவேப்பிலை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் கறிவேப்பிலையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இயற்கை முறையில் உற்பத்தி செய்ய கன்றுகளைக் கொடுத்திருக்கிறார். 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளைத் தோற்றுவித்த சயீது என்பவரின் நினைவு தினமாகக் கொண்டாடப்பட்டது. அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் சுதீஷ் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

கின்னஸ் சாதனைகளுக்கு முன்னர், ஐந்துமுறை லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சுதீஷ், 2012-ம் ஆண்டு தன் வீட்டுத் தோட்டத்தில் 41.91 செ.மீ நீளமான வெண்டைக்காய் விளைய வைத்து சாதனை செய்திருந்தார். இதுதவிர, சுதீஷ் 3.81 செ.மீ சிறிய அளவிலான வெண்டைக்காயும் விளைவித்திருக்கிறார், இந்த இரண்டு சாதனைகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் குறிப்பிடத்தக்கவை.

என்னதான் காய்கறிகளை விளைய வைத்தாலும், நெல்லை விளைய வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவரை விடவில்லை. அதனால், 2014-ம் ஆண்டு முதன்முதலாக சுதீஷ், நெல் விளைவிக்க முயற்சி செய்தார். அவரின் நெல் பயிர் முயற்சிக்கு ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி முழு மனதோடு ஆதரவு தெரிவித்தார். திட்டமிட்டபடி நெல்லை விளைய வைத்தார். வெற்றியும் கண்டார். அதன் பின்னர் 2016-ம் ஆண்டு ஷார்ஜாவில் உள்ள 3 இந்தியப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நெல் நடவு மற்றும் அறுவடை பற்றி வகுப்பெடுத்தார். அதன் தொடர்ச்சியாக கிரீன் லைப் ஆர்கானிக் ஃபார்மிங் நிறுவனம் மூலம் இயற்கை விவசாயம் செய்தும் பயிற்சிகள் அளித்தும் வருகிறார்.

கேரளாவில் நடக்கும் இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்வுகளிலும், கருத்தரங்குகளிலும் அடிக்கடி இவரைப் பார்க்கமுடியும். இதுபோக வீட்டுத் தோட்டத் தொழில்நுட்பங்கள், விவசாய சாகுபடி தொழில்நுட்பங்கள் எனப் பல தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் எடுத்து சொல்லிக் கொண்டு வருகிறார். இதுதவிர ஹைட்ரோஃபோனிக்ஸ், தொட்டிகளில் காய்கறி உற்பத்தி, சொட்டுநீர்ப் பாசனம், அடுக்கு விவசாயம் எனப் பல தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறார்.

காய்கறிகள் உற்பத்தி தவிர, மீன் வளர்ப்பிலும் அசத்தி வருகிறார். இதற்காக தனது நிலத்தில் சிறிய அளவிலான பண்ணைக்குட்டையையும் அமைத்துள்ளார். இயற்கை விவசாயத்தை மக்களிடம் அதிகமாகப் பரப்புவதுதான் எனது பணி என நம்பிக்கையோடு பணியாற்றி, இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார், சுதீஷ். 2016ல் எடுத்த துபையில் உள்ள அவர் தோட்டத்தின் காணொளியை காண : https://youtu.be/zAtxm6JXEwc

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday 3 January 2019

நெல்லுக்கு இயற்கை உரங்கள் :

இரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின்
நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்கு குறைவாக இருந்தால் மட்டும் மீண்டும் ஒருமுறை அதே உரக் கலவையைத் தெளிக்க வேண்டும்.

நெற்பயிரின் வளர்ச்சிக்கு இயற்கை முறை :

* மாதம் ஒருமுறை 20 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடலாம்.

* பயிரின் வளர்ச்சியைப்பொறுத்து 25 மற்றும் 30ம் நாட்களில் மட்டும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மிலி ‘பஞ்சகவ்ய’ என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

அமுதக்கரைசல் தயாரிக்கும் முறை :

* மாடு ஒருதடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்). ஒரு தடவை பெய்த மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

* 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். இப்போது அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

* தெளிப்பானில் (டேங்க்) ஒருமுறை தெளிப்பதற்கான அளவு ஒரு ஏக்கருக்கு 10 தெளிப்பான் தெளிக்க வேண்டும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் :

அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை. தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற மத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள், சம்பா பட்டத்துக்கு ஏற்றவை. மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா போன்ற நீண்டகால (140 முதல் 200 நாட்கள்)
ரகங்கள்.

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது?

”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நவரைப் பட்டம்! :

* டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்கள் ஏற்றவை.

* திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப் புரம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் இப்பட் டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

சொர்ணவாரிப் பட்டம்! :

* ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையி லான காலம், சொர்ணவாரிப் பட்டம். இதுவும், 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.

* திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சொர்ணவாரிப்
பட்டத்தில் சாகுபடி நடக்கிறது.

கார் பட்டம்! :

* மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், கார் பட்டம். இதிலும் குறுகிய கால நெல் ரகங்கள்தான் சாகுபடி செய்யப்படுகிறது.

* திருநெல்வேலி, கன்னியா குமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இப்பட்டத்தில் சாகுபடி நடக்கிறது.

குறுவைப் பட்டம்! :

* ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலம், குறுவைப் பட்டம். இதுவும் குறுகிய கால நெல் ரகங்களுக்கு ஏற்றது.

* திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடக்கிறது.

முன் சம்பா பட்டம்! :

* ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலம், முன் சம்பா பட்டம். இதில், 130 நாட்கள் முதல் 135 நாட்கள் வயது கொண்ட மத்திய கால மற்றும் நீண்டகால ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.

* திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இப்பட்டத்தில் நெல் சாகுபடி நடக்கிறது.

பின் தாளடி! :

* அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலம், பின்தாளடி பட்டம். 115 முதல் 120 நாட்கள் வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்களை இப்பட்டத்தில் பயிரிடலாம்.

* தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பின் தாளடி சாகுபடி செய்யப்படுகிறது.

சம்பா பட்டம்! :

* ஆகஸ்ட் மாதம், சம்பா பட்டம். மத்திய கால ரகம் மற்றும் நீண்ட கால ரகங்கள் இப்பட்டத்துக்கு ஏற்றவை.

* தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சம்பா சாகுபடி நடக்கிறது.

பின் சம்பா/தாளடி/ பிசாணம் பின் பிசாணம்! :

* செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில காலம் பின் சம்பா பட்டம். இது தாளடி, பிசாணம் எனவும் சொல்லப்படுகிறது.

* மத்திய கால ரகம் மற்றும் அதற்குமேல் நீண்ட கால ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm