Wednesday 31 October 2018

இயற்கை உளுந்துச் சாகுபடி! - 4 ஏக்கர்... 85 நாள்கள்... 15 குவிண்டால்...

காலங்காலமாக ரசாயன உரங்கள் இடப்பட்டு மலடாகிப்போன நிலங்களில் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கும்போது, நல்ல மகசூல் கிடைக்க மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சொல்வார்கள். அதே சமயத்தில் பஞ்சகவ்யா, இ.எம் என இயற்கை இடுபொருள்களைப் போதுமான அளவில் பயன்படுத்தி முதல் சாகுபடியிலேயே நல்ல மகசூல் எடுக்கும் விவசாயிகளும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்.

மன்னார்குடி அருகே உள்ள எடகீழையூரைச் சேர்ந்த பாண்டியன், சித்திரைப் பட்டத்தில் உளுந்து விதைத்து இயற்கை முறையில் நிறைவான விளைச்சல் கண்டுள்ளார். ஒரு பகல் பொழுதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டியனைச் சந்தித்தோம். புன்னகையோடு வரவேற்றுப் பேசினார், பாண்டியன்.

“விவசாயக்குடும்பத்துல பிறந்தவன்தான் நான். எங்களுக்குச் சொந்தமா நாலு ஏக்கர் இருக்கு. மணலும் கரிசலும் கலந்த இருமண் பூமி. அப்பா, ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சார். அதிகமா உரம்போட்டு, அதிகமா பூச்சிக்கொல்லி தெளிச்சாதான் நல்ல விளைச்சல் கிடைக்கும்னு நம்பினவர் அப்பா. நானும் காலேஜ் முடிச்சுட்டு அப்பாகூட விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன்.

அதிகமான உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்துனதால செலவுதான் அதிகமாகிட்டு போனதே ஒழிய மகசூல் அதிகரிக்கலை. எங்க ரெண்டு பேரோட உழைப்புக்கேத்த லாபம் கிடைக்கலை. அதனால, வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணி ‘டாஸ்மாக்’ கடையில மேற்பார்வையாளர் (சூப்பர்வைசர்) வேலையில் சேர்ந்துட்டேன். வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகும் விவசாய வேலைகளைச் செஞ்சுட்டுதான் இருந்தேன். அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். அதைப்படிக்கப் படிக்க இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. அப்பா ரசாயன விவசாயம் செஞ்சதாலதான் லாபம் கிடைக்கலைங்கிறதையும் உணர ஆரம்பிச்சேன். அப்பாகிட்ட பேசி பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைச் சுத்தமா விடச்சொன்னேன். அடுத்து கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரங்களோட அளவையும் குறைச்சேன். போன சித்திரைப்பட்டத்துல முழு இயற்கை விவசாய முறையில நாலரை ஏக்கர்ல உளுந்துச் சாகுபடி செஞ்சேன்” என்ற பாண்டியன், நம்மை உளுந்து வயலுக்குள் அழைத்துச் சென்று செடிகளைக் காட்டிக்கொண்டே பேசினார்.

“முழு இயற்கை விவசாயத்தை வீட்டுல ஒத்துக்கலை. எல்லோருமே எதிர்ப்பு தெரிவிச்சாங்க. நம்ம குடும்பச்சூழலுக்கு விவசாயத்துல சோதனையெல்லாம் செஞ்சுட்டு இருக்க முடியாதுனு சொன்னாங்க. ஆனாலும் நான் நம்பிக்கையா இறங்கினேன். இப்போ செடிகள் நல்லா விளைஞ்சு வந்திருக்கிறதைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்படுறாங்க. உளுந்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துறது ரொம்பக் கஷ்டம். ஆனா, இயற்கை முறையில பூச்சித்தாக்குதலே இல்லாம விளைஞ்சு வந்துருக்கு. ஒரு செடிக்குச் சராசரியா 40 காய்கள் இருக்கு. நல்லா திரட்சியாவும் இருக்கு. காய்களை உடைச்சுப் பார்க்குறப்போ உளுந்து நல்லா வாளிப்பா இருக்கு. ரசாயன உரம் போட்டுச் சாகுபடி செஞ்சா செடிக்கு 30 காய் இருக்குறதே பெரிய விஷயம்” என்ற பாண்டியன் நிறைவாக,

“நான் சாகுபடி செஞ்சிருக்குறது ‘ஆடுதுறை-5’ங்கிற உளுந்து ரகம். இதோட வயசு 75-85 நாள்கள். இப்போ காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகிடுச்சு. இன்னும் ஒரு வாரத்துல அறுவடை செஞ்சுடுவேன். ஏக்கருக்கு 5 குவிண்டால்ல இருந்து 6 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். நாலரை ஏக்கர்லயும் சேர்த்து எப்படியும் 20 குவிண்டால் மகசூல் எடுத்துடுவேன். இயற்கை விளை பொருள்களைக் கொள்முதல் செய்ற ஒரு நண்பர் என்னோட உளுந்தைப் பார்த்துட்டு, அறுவடை முடிஞ்ச பிறகு ஒரு கிலோ 100 ரூபாய்னு எடுத்துக்கிறேன்னு சொல்லிருக்கார். ரசாயன உரம் போட்டு விளைய வெச்சா இந்த விலை கிடைக்காது. இனிமே எந்தப்பயிர் சாகுபடி செஞ்சாலும் முழு இயற்கை விவசாயம்தான்னு முடிவு பண்ணிட்டேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

.

உளுந்து மகசூல்: எதிர்பார்த்தது 20, கிடைத்தது 15 குவிண்டால்!

பாண்டியன் தனது 4 ஏக்கர் உளுந்தையும் முழுமையாக அறுவடை செய்த பிறகு தொடர்புகொண்டார். “செடிகள்ல அதிகமான எண்ணிக்கையில் காய்கள் உருவாகி, நல்லா நெத்து முத்தியிருந்தனாலயும், உள்ளிருந்த பருப்பு திரட்சியாக இருந்ததுனாலயும் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்.

அறுவடைக்கு நாலஞ்சு நாள்களுக்கு முன்னாடி எதிர்பாராதவிதமாக அதிகமா மழை பெய்ஞ்சதுனால. நிறைய சேதாரமாயிடுச்சு. களைகள் அதிகமானதால மண்ல விழுந்த நெத்துகளை எடுக்க முடியலை. நெத்து வெடிச்சு, பருப்புகளும் சிதறிடுச்சு.

ஆனாலும் ஒரு ஏக்கருக்கு 375 கிலோ வீதம் மொத்தம் 4 ஏக்கருக்கு 1,500 கிலோ உளுந்து தரமானதாக விற்பனைக்குத் தேறியிருக்கு. கிலோவுக்கு 100 ரூபாய் வீதம் விலை கொடுத்து வாங்கிக்கிறேனு, இயற்கை விவசாய நண்பர் ஒருத்தர் சொல்லியிருக்கார். ஒரு ஏக்கர் உளுந்து மூலமாக 37,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவு 11,800 ரூபாய் போக, ஏக்கருக்கு 25,700 ரூபாய் நிகர லாபமாக நிக்கும். நாலு ஏக்கருக்கும் சேர்த்து 1,02,800 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்றார்.

இப்படிதான் சாகுபடி செய்யணும்...

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் உளுந்துச் சாகுபடி செய்யும் விதம் குறித்துப் பாண்டியன் சொன்ன விஷயங்கள் இங்கே...

ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி, இரண்டு, மூன்று நாள்கள் ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு ரோட்டோவேட்டர் மூலம் ஒரு சால் உழவு ஓட்டி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 12 கிலோ விதையை விதைக்க வேண்டும். விதைகள் மண்ணுக்குள் மூன்று அங்குல ஆழத்துக்குப் புதையுமாறு செய்து... சிறு பாத்திகள் அமைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். விதைத்த 5-ம் நாளுக்குமேல் விதைகள் முளைப்பு எடுக்கும். 15-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 30-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 300 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.

40 மற்றும் 50-ம் நாள்களில் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 400 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 5 லிட்டர் தயிருடன் 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் வசம்புத்தூள் ஆகியவற்றைக் கலந்து, 5 நாள்கள் புளிக்கவிட வேண்டும். 60-ம் நாள், இக்கரைசலை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுவதோடு, காய்ப்புழுத்தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது.

விதைநேர்த்தி :

ஆறிய சோற்றுக் கஞ்சியில் 250 மில்லி பஞ்சகவ்யா, 500 மில்லி இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து, அதில் 12 கிலோ விதையைக் (ஒரு ஏக்கருக்கு) கலந்து நன்கு குலுக்கிவிட வேண்டும். பிறகு அவற்றை ஒரு சணல் சாக்கின்மீது கொட்டி, ஒரு மணிநேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால், வேரைத்தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைத் தடுக்கலாம்.

தொடர்புக்கு :
பாண்டியன்,
செல்போன்: 97914 89792

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday 30 October 2018

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

“வரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்.

ஐயா! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே?

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிதே சொந்த ஊரு. எங்க ஊர ஒட்டிய கிராமங்கள்ல கோனார் சாதிக்காரவுக அதிகம். அவக தொழிலே ஆடு மாடு மேய்கிறதுதேங். கோடையில ஆறு மாசகாலம் தஞ்சாவூரு மாவட்ட பகுதிய சுத்தி உள்ள நெலத்துல ஆடு மாடு மேய்ப்பாக. மீதி ஆறு மாசம் புதுக்கோட்டக் காட்டுப் பகுதிக்கு போயிடுவாக. ஆடு மாடு இல்லாதவுக, காணி(அளவு) காடு வச்சுருக்கவுக சிலபேரு ஊரோட இருப்பாக. ஊருக்கு தேவையிண்டா மட்டுந்தே போவோம். அதாவது சொந்தமுண்டு சொல்லிக்க ஊரு இருக்கும் ஆனா குடும்பம் நடத்துறது என்னவோ வெளியூருலதேன்.

ஏனுங்கையா ஒரே எடத்துல மேய்க்காமெ ஆறு மாச காலத்துக்கு ஒருக்க எடத்தை மாத்துரிங்க?

எங்க ஊரு பக்கம் வறட்சி அதிகம். ஆடு மாடுக மேய்க்கறதுக்கான காடு கழனி கெடையாது. ஆத்துப் பாசன பகுதில அறுப்பு முடிஞ்சு மறுக்க ஆத்துல தண்ணி வரும்வர கழனிக சும்மாத்தேன் கெடக்கும். மேச்சலுங்கு தோதுவா நெலமும் ஆடு மாடுக குடிக்க குளம் குட்டையும் இருக்கும். அங்கனக்குள்ளையே மேச்சு வெள்ளாமெ நெலத்துக்கு கெடையும் கட்டுவாக. ஆத்துல தண்ணி வந்து வெள்ளாமெ தொடங்கிச்சாங்காட்டி மந்தைய புதுக்கோட்டைக்கி ஓட்டிடுவாக. அங்கெ அரசு பாரஸ்ட் மலைக்காடு இருக்கு. எத்தன மழை பேஞ்சாலும் சேறு சகதி இல்லாம மேச்சல் இருக்கும். பகல் பொழுது மலையில மேச்சுட்டு ராத்திரியானா கீழ ஓட்டியாத்துருவாக. (பருவமழை காலத்தில் மலை பகுதியும் கோடை காலத்தில் சமவெளி பகுதியும் கிடை மந்தை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாகும்.)

ஆடு மேச்சு கிடை கட்டும் உங்க தொழில் முன்னைக்கி இப்ப எப்படி இருக்கு?

என்னோட எளவட்ட காலத்துல ஒத்தாளு 500 ஆடுகளோட ஊடாடுவே. அப்பெல்லாம் அறுப்பு முடிஞ்சு எக்கண்டமும் சும்மாத்தேங் கெடக்கும். என்னப்போல முப்பது கீதாரி குடும்பம் இந்த ஊருல தங்கி ஆடு கெட போடுவாக. அம்புட்டு ஆடுகளுக்கு மேச்சலுக்கு எடமிருக்கும். இருவது வருசமாத்தேன் இங்குட்டு போரு (ஆழ்துளை கிணறு) போட்டுட்டாக. திட்டுத்திட்டா வெவசாயம் செஞ்சுருக்காக. பயிறுக்கு போகாமெ ஆடுகள மடக்கி சோலி பாக்க வாய்க்கல. எங்குட்டு திருப்புனாலும் ஊரச் சுத்தி இதே நெலமதேன்.

ஆடுகளுக்கு முன்னப்போல மேச்ச நெலமுண்டு ஒன்னு இல்லிங்க. தண்ணி இல்லாமெ ஆடுக எறப்பு வாங்குது. குளம் குட்ட எங்குட்டு திரும்புனாலும் வறண்டு கெடக்கு. ஆடு மேஞ்சு முடிச்சு பட்டிக்கி திருப்பியாந்தா விடிய முட்டும் படுத்துக்கும். இப்ப அண்டையில உள்ள பயிருக்கு போயிருதுக. பொழப்புக்கு வந்த எடத்துல கீதாரி பயக வெள்ளாமைய அழிச்சுபுட்டாகன்னு ஒரு சேதி வந்துரப்படாதுல்ல. அதுக்காக ஆடுகள சுத்தி இரும்பு கம்பி அடிச்சி வல(லை) கட்டனும். பாலூட்டு குட்டிகள வெய்யிலு அண்டாமெ பாதுகாக்க கூடாரம், நாங்க படுக்க கட்டிலு இதையெல்லாம் அடுத்த கெடகட்டுற எடத்துக்கு தூக்கிட்டு போக வண்டி செலவுன்னு….. ரொம்பவும் செரமமாத்தே இருக்குங்க.

ஐநூறு ஆடு நின்ன எடத்துல 250 ஆடுகதே இருக்கு. முப்பது குடும்பம் வந்த எடத்துல 4 குடும்பந்தே வந்துருக்காக. 250 ஆட்டுக்கு 7,000 ரூபா கூலி குடுத்து ஒரு மேச்ச ஆளு வச்சுருக்கேன். இது அம்புட்டும் சொந்த ஆடுக அதுனால கூலியாள வச்சு மேய்க்கேன். பத்து இருவது ஆடு வச்சுருக்கவுகளும், மேச்சலுக்கு வர்ர ஊருல சிலபேரும் எங்கக்கிட்ட வாரத்துக்கு ஓட்டி விடுவாக. கூலி கெடையாது ஆடு ரெண்டு குட்டி போட்டுச்சாங்காட்டி ஒன்னு நமக்கு. ஒன்னு அவுகளுக்கு.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஆடு வளர்ப்புல லாபமா? கிடை கட்டுறதுல லாபமா?

“ஆடு ஊடாடாமே காடு விளையாதும்பாக”. ஆட்டுக் கெட உரந்தே ஒசந்ததா இருந்தது ஒரு காலம். இப்ப ரசாயன ஒரத்த சக்கரக் கணக்கா வயக்காட்டுல அள்ளி கொட்டுறாக. ஆட்டுப் புளுக்க மூத்தரத்தோட அருமெயெல்லாம் அத்துப் போச்சு. மணலு, வண்டலு, அதிகம் உள்ள கழனிக்கி ஆடு மாடு ஒரமும், கிளாரு மண்ணுக்கு (சுண்ணாம்பு மண்) வாத்து ஒரமும் இடுவாக. நெலத்துக்கு தக்கன வெதையும் ஒரமும் நம்மகிட்டேயே இருந்துச்சு. இப்ப வெதையோட சேத்து ஒரத்தையும் இறக்குமதி பன்றாக. பூச்சி மருந்து கள(ளை)க் கொல்லின்னு, கண்டதும் போட்டாத்தே அதுவும் வெளையுது.

“ஆடு காப்பணம், புழுக்க முக்காப் பணம்னு” சொன்னதெல்லாம் அந்த காலம். இப்ப ஆரும் பெருசா கெட கட்டுவாக கெடையாது. போன வருசம் 250 ஆடு ஒருநா(ள்) கெட கட்ட 300 ரூபா வாங்குனேன். இந்த வருசம் மழத்தண்ணி இல்லன்னு 250 வாங்குரேன். ஒருநா வருமானம் ஒரு வார வெஞ்சனம்(காய்) வாங்க பத்தமாட்டேங்குது. பொறவு மேச்சகாரனுக்கு டீ, சாப்பாடு, வெத்தலபாக்கு, வாரத்துக்கொருக்க பாட்லு இதுக்கெ கெடகூலி பத்தாது. ஆட்டுல நாலு காசு வந்தாத்தே உண்டு. ஒரு ஆடு அஞ்சு அல்லது ஆறு ஆயிரத்துக்கு போகும். வருசத்துக்கு ரெண்டு குட்டி போடும். அத நல்லா மேச்சு குட்டிக்கு பால்குடுத்தா ஆறு மாசத்துல வளந்துரும். இதுலதே குடும்பம் படிப்பு கல்யாணம் எல்லா செலவும்.

கீதாரிகள் ஆடுங்களோட ஊர் ஊரா போறதா சொல்றீங்க, பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறீங்க?

எங்க தொழிலே ஊரு ஊரா போறதுதேன். எங்குட்டு பிள்ளைகள ஒரு நெலையா படிக்க வைக்கிறது. ஆடு மாடுகள வாரத்துக்கு மேய்க்காமெ சொந்தமா வச்சு பண்ணையம் பாத்தவுக பிள்ளைங்க காசு, படிப்பு, வேலையின்னு இருக்காக. எங்கப்போல சிறுவ ஆடு வச்சுருக்கும் கோனாருக ஆசப்பட்டு பிள்ளைகள படிக்க வச்சாலும் பள்ளிக்கூடத்த தாண்ட முடியல. கீதாரி தொழிலும் சரிஞ்சு போச்சு. மேல படிக்க முடியாமே டிரைவரு, கண்டெக்டருன்னு வேலைக்கி போறாக.

இந்த ஊருல முப்பது வருசமா எனக்கு பழக்கம். அண்ண வீட்டு தோப்புலதே கூடாரம் போட்டு தங்கிக்கிடுதேன். அம்மி, ஒரலுன்னு சமையலுக்கு தேவையானத கொடுப்பாக. காசு பணமெல்லாம் அவக கிட்டதே குடுத்து வச்சுருப்போம். தாயா பிள்ளையா பழகிகிடுதொம். எங்க மாமா செத்தப்ப இந்த அண்ணெந்தே சாவு கோடி போட்டாக. எங்க வீட்டு நல்லது கெட்டது அவுக இல்லாம நடக்காது, அவுக வீட்டு நல்லது கெட்டது நாங்க இல்லாம நடக்காது.

அந்த பழக்கத்துல பெரியவெ(ன்) இங்கதே ஆறு வருசமா படிக்கிறேன். இந்த வருசத்தோட படிப்பு முடியிது. நாங்க இருக்குற ஆறு மாசம் எங்க கூட இருப்பேன். நாங்க புதுக்கோட்ட பக்கம் போனபொறவு இவக வீட்டுல தங்கிக்கிருவேன். அவுக பிள்ளப்போல பாத்துக்கிருவாக. சின்னவென் ஊருல இருக்கேன். எங்க காலத்தோட இந்த தொழிலு முடிஞ்சுரும் பிள்ளைங்க இனி செய்யாதுக.

ஊருல யாரு பையன பாத்துப்பாங்க? ஆடுங்கள தவிர எதுனா சொத்து இருக்குங்களாய்யா?

காக்காணி நெலமிருக்கு. அத நம்பி நாலு பேரு என்னத்த சாப்புட முடியும். ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். இருக்கவுகதேன் ஒத்து உணர்ந்து வேலைய பிரிச்சுக்குறனும். எங்கக்கா ஊருல எம்பையனையும் நெலத்தையும் பாத்துக்குறாக. நா அவுக ஆடுகள பாத்துகிடுதேன். ஆடுக நெறையா நின்னா தனிதனியா கெட போடுவாக. ஆடுக கம்மிங்கறதால சேந்து மேச்சுகிடுதோம்.

ஆட்டு தலையில கலர் கோடு போட்டுருக்கே வேற கிடை ஆட்டோட சேந்துருச்சின்னா கண்டுபிடிக்கற அடையாளமா?

வெய்யிலு காலம் நோயி வருமுண்டு மருந்து குடுத்துருக்கேன். மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கே. மத்த கீதாரி ஆட்டோட கலந்து மேய்க்க மாட்டோம். எல்லாருமே தனிச்சுத்தேன் விடுவோம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

செம்மறியாட்டு கூட்டத்துல நாளு வெள்ளாடும் நிக்குதே எதுக்குங்கையா?

செம்மறியாடு சாஞ்சா சாஞ்சபக்கம் போகும். போன வழி திரும்பி வரத்தெரியாது. வெள்ளாடுதே வழிகாட்டி ஆடுக. அதுக்கு அறிவு சாஸ்த்தி பயிரு பச்சைக்கி போனா சத்தம் போட்டா திரும்பிரும். பாம்பு, விலங்கு எது வந்தாலும் உசாராயி சத்தம் கொடுக்கும். இதுகளுக்கு ஒன்னு தெரியாது. வெள்ளாடு இல்லாமெ செம்மறியாட மேச்சலுக்கு ஓட்ட மாட்டாக.

பாம்பு, விலங்கு வந்தா என்ன செய்வீங்க?

கோனா(ன்) கோலெடுக்கும் போதே வெசமருந்து கூடவே எடுத்துட்டு போவான்ம்பாக. பாம்பு தீண்டிட்டா ஆடு கத்தும் அத பாத்து கால கீரிவிட்டு மருந்து கொடுப்போம். ஆடுகள கூட்டமா பாக்குற காட்டு வெலங்குக தானா ஒதுங்கி போயிடும். வாகனத்துல அடிபட்டா எங்க வீட்டுக்காரம்மா உப்புக்கண்டம் போட்ருவாக.

இரவு நேரத்துல ஆடுகளோட தனியா படுத்துருப்பிங்க திருட்டு பயம் எதுவும் இருக்குங்களா?

ஆடு களவாடுறது உண்டுதேன். மோட்டார் பைக்குல ரெண்டு ஆட்ட பொத்தி போட்டுகிட்டு போயிருவாக. ஆடு புடிக்கிறாகன்னு தெரிஞ்சாலும் எதுவும் செய்ய முடியாது. ஆயிதத்தோட அஞ்சாறு பேரு வந்துருப்பே தனி ஆளா நிண்டமுட்டா போட்டு தள்ளிருவானுக. எங்களுக்கு ஆடு மேய்ப்பர் யாதவ சங்கம் இருக்கு. ஆடுதுறை வரைக்கும் எங்க ஆளுக பட்டி போட்டு ஆடு மேய்க்கிறாக, அப்புடி எங்க ஆளுக மூலியமா கேசு குடுத்து கண்டுபிடிச்சுகிடுவோம்.

ஒரு நாளு வருசத்துக்கு முன்னால இங்குட்டு(தஞ்சை) உள்ள கள்ளர்மாரு(கள்ளர்) சாதிக்காறவுக ஆட்ட களவாண்டுபுட்டாக. புதுக்கோட்ட பக்கந்தே வெள்ளாமெ வெளச்ச இல்லாம களவாடுவாக. இந்த பக்கமும் அப்படி செஞ்சுபுட்டாக. ஆட்டுக்காற சித்தப்பும், மேச்சக்கார பயலும் படுத்துருந்தாக. வண்டி வச்சு ஆடுகள ஏத்துனத பாத்துட்டு கையில இருந்த அருவாள வீசிபுட்டாரு கீதாரி. காலு நரம்புல பட்டு சுருட்டிகிட்டு விழுந்துட்டாங் களவாணிப்பய. பொறவு மந்திரி வைத்திலிங்கத்துக்கு(அ.தி.மு.க) வேண்டப்பட்டவன்னு சொல்லி கேசல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லிபுட்டாக.

இந்த ஊருக்காரவங்க உங்கள மரியாதையா நடத்துவாங்களா? கூலியெல்லாம் சரியா தருவாங்களா?

கோடையில கெட போட்டா, மறுக்க ஆத்துல தண்ணி வந்து வெவசாயம் பாத்து அறுப்பு முடிஞ்சுதே நெல்ல கெடகூலியா குடுப்பாக. கிட்டத்தட்ட ஒரு வருசம் ஓடிடும். ஆனா மொறையா குடுத்துருவாக. இப்பல்லாம் ஒடனே பணமா குடுத்துருவாக. என்ன ஒன்னு பத்து கெட போட்ட எடத்துல ஒரு கெடைக்கி உண்டான கூலிய தள்ளிக்க கீதாரிம்பாக. தாயா பிள்ளையா பழகிட்டு மறுக்க முடியாது. திருவிழா வருது உங்க படியா ஏதாவது கொடுங்கண்டு உரிமையா கேப்பாக. இந்த ஊருல ஆறு மாசம் ஆடு மேச்சுகிடுதோ நமக்கும் பங்குண்டுன்னு கையில கெடச்சத குடுப்பேன்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
சிறப்பாக பராமரித்ததற்காக தமிழக அரசின் விருதுபெற்ற மாடு : ஐந்து தலைமுறை கண்ட 22 வயது பசு மரணம் :

மதுரை அருகே அலங்காநல்லூரில் தமிழக அரசின் விருதுபெற்ற ஐந்து தலைமுறைகள் கண்டு 14 கன்றுக்குட்டிகளை ஈன்ற 22 வயதான பசு மாடு நேற்று உடல்நலக் குறைவால் இறந்தது. அந்த பசு மாட்டின் உடலை அலங்காநல்லூர் ஊரே திரண்டு எடுத்து சென்று அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கால்நடை வளர்ப்பும் பிரதானம். இந்த ஊரை சேர்ந்த விவசாயி பார்த்திபன். இவர் வீட்டிலேயே மாட்டுப் பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்கிறார். தற்போது 16 பசு மாடுகளை வைத்து பராமரிக்கிறார். இவரிடம் உள்ள பெத்தனாட்சி என்னும் பசு மாட்டுக்கு 22 வயது ஆனது. மிகவும் வயதாகி விட்டதாலும், உடல் நலக் குறைவாலும் இந்த பசுமாடு மெலிந்திருந்தது.

14 கன்றுகளை ஈன்ற பெத்தனாட்சி :

பொதுவாக பசு மாடுகளுடைய சராசரி வயது 16 தான். மனிதர்களிலேயே கொள்ளுப் பேரன், பேத்தி, எள்ளு பேரன், பேத்தியை பார்ப்பது மிக மிக அபூர்வம்.

ஆனால், இந்த பெத்தனாட்சி 22 வயதைக் கடந்து மகள்கள், எள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், பேத்திகள் உள்பட 14 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. 5 தலைமுறைகளை கண்டுள்ள இந்த பசு மாட்டுக்காக தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை, பார்த்திபனுக்கு சிறந்த மாடு பராமரிப்பாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், சுதந்திர தினழாவில் பெத்தனாட்சி மாட்டிற்கு சிறந்த பசு விருது வழங்கி கவுரவித்தார். இந்த மாட்டின் பிறந்த நாளை பார்த்திபன், ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று கோலாகலமாக கொண்டாடி வந்தார். அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களையும், ஊர்க்காரர்களையும் அழைத்து அந்த பசுமாட்டிற்கு கேக் வெட்டி அனைவருக்கும் விருந்து வழங்கி மகிழ்வார்.

வயதான பெத்தனாட்சி மீது பார்த்திபன் வைத்துள்ள பாசத்தை பார்த்து, அந்த விழாவில் கலந்து கொள்ள வரும் ஊர் மக்கள், உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திச் செல்வர்.

ஊர் மக்கள் ஆறுதல் :

இந்நிலையில் பார்த்திபனின் 22 வயதான பெத்தனாட்சி பசுமாடு நேற்று உடல்நலக் குறைவால் திடீரென இறந்தது. இதனால் மிகவும் சோகமடைந்த பார்த்திபன் மனிதர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்வார்களோ அதுபோல, தனது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து இறந்த பெத்தனாட்சி மாட்டின் உடலுக்கு மஞ்சள் சேலை கட்டி தீபாராதனை காட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று வயலில் அடக்கம் செய்தார். பசு மாட்டின் மீது பார்த்திபன் வைத்திருந்த அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன ஊர் மக்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

விவசாயியை வாழவைத்த பசு :

பார்த்திபன் கூறியதாவது: பொதுவாக பசு மாடுகள், கன்றுகள் ஈனுவது நின்றுவிட்டாலோ, பால் தருவது குறைந்தாலோ பராமரிக்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு அடிமாடாக விற்று விடுவர். ஆனால், பெத்தனாட்சியை விற்காமல் வீட்டில் வயதான பெற்றோரை வைத்து பாராமரிப்பதுபோல பராமரித்து வந்தேன். 25 ஆண்டுகளுக்கு முன் நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தேன். அப்போது, இந்த பசுவின் தாய் மாட்டை வாங்கினேன். அந்த மாடு ஈன்ற கன்றுக்குட்டிதான் இந்த பெத்தனாட்சி. இந்த பசு பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த மாடு, அதன் வாரிசுகளுடைய கன்றுகளின் பாலை விற்றுதான் என்னுடைய குழந்தைகளை படிக்க வைத்தேன். நிலங்கள் வாங்கினேன். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் வயதானாலும் அதை விற்காமல் எனது தாயைப் போல் பராமரித்து வந்தேன். வயதாகி விட்டதால் பெத்தனாட்சியால் எழுந்து நிற்க முடியாது.

மூனு, நாலு பேர் சேர்ந்து தூக்கித்தான் நிற்க வைப்போம். சிறிது நேரம் நிற்கும். பிறகு கீழே விழுந்து விடும். நல்ல காரியங்களுக்கு வீட்டில் உள்ள பெரியவங்களிடம் உத்தரவு கேட்பதுபோல, எனது வீட்டில் நடந்த அத்தனை நல்ல காரியங்களுக்கும் இந்த பசுவிடம் உத்தரவு கேட்டுத்தான் நடத்தினேன்.

அந்த காரியங்களும், எந்த தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்தன. கடந்த 3 மாதமாகவே உடல்நலக் குறைவால் எனது பெத்தனாட்சி பாதிக்கப்பட்டிருந்து. கால்நடை மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளித்தேன். இருந்தாலும் பெத்தனாட்சியை காப்பாற்ற முடியவில்லை. நேற்று காலை எங்களை தவிக்க விட்டுப் போய்விட்டது என்றார்.

https://www.facebook.com/photo.php?fbid=174492199839579&set=a.113829515905848&type=3&size=700%2C433

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
எள் கொடுத்த வரவு... இரண்டரை ஏக்கரில் ரூ.45 ஆயிரம்...

‘இளச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். உடல் மெலிந்தவர்கள், எள்ளைத்தொடர்ந்து உண்டு வந்தால், உடம்பு பெருக்கும். பருமனானவர்கள் தொடர்ந்து கொள்ளை உண்டு வந்தால், உடல் இளைக்கும் என்பது இதன் அர்த்தம். அதனால்தான், உடலுக்கு வலு சேர்ப்பதற்காக, அன்றாட உணவில், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளனர், நம் முன்னோர். இதற்கு அதிகளவு சந்தையில் தேவை இருப்பதால், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பயிராகவும் இருக்கிறது, எள். அந்த வகையில் இயற்கை முறையில் எள் சாகுபடி செய்து, எண்ணெயாக ஆட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் எடுத்து வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி.

ஒரு காலைப்பொழுதில் எள் அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த வெள்ளைச் சாமியைச் சந்தித்தோம்.

“திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற நாஞ்சான் குளம்தான் என் சொந்த ஊர். என் அப்பா காலம் வரை பரம்பரையா விவசாயம்தான் செஞ்சுக் கிட்டுருந்தோம். நான் சின்ன வயசுல அப்பாகூட விவசாயத்துல உதவியா இருப்பேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு பாரத மிகுமின் நிலையத்துல பொறியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். முதல் போஸ்டிங் திருச்சி. அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுனாங்க. சில வருஷம் வேலை பார்த்துட்டு ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேன். நிறைய தனியார் கம்பெனிகள்ல ஆலோசகரா வேலை பார்த்தேன். அப்போதான் எனக்குப் ‘பசுமை விகடன்’ புத்தகம் அறிமுகமாச்சு. அதைப் படிக்கப் படிக்க எனக்கு விவசாயத்து மேல அதிக ஆசை ஏற்பட்டுச்சு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொந்த ஊர்ல 2 ஏக்கர் நிலத்துல நிலக்கடலை விவசாயம் செஞ்சேன். நல்லா விளைஞ்சு வந்த சமயத்துல காட்டுப்பன்றிகள் வந்து சாப்பிட்டுடுச்சு. அத்தோடு அங்க விவசாயம் செய்றத நிறுத்திட்டேன். அதன்பிறகு என் குடும்பம் சென்னையில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதனால, மானாம்பதி கிராமத்துல தங்கி விவசாயம் பார்த்துக் கிட்டுருக்கேன். இது என் நண்பர்களோட நிலம். நான்தான் இங்க இயற்கை விவசாயம் செய்துட்டுருக்கேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலையில நடந்த சுபாஷ் பாலேக்கரோட ஜீரோபட்ஜெட் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன வெள்ளைச்சாமி தொடர்ந்தார்...

“மொத்தம் 13 ஏக்கர் நிலம். போன வருஷம் செப்டம்பர் மாசம்தான் வாங்கினோம். நிலம் வாங்குனப்போ புதர் மண்டி இருந்துச்சு. வாங்கின பிறகு, முதல் வேலையா வேலி அமைச்சோம். அடுத்து புதர்களை வெட்டி வரப்பு அமைத்தோம். இருந்த 2 கிணறுகளையும் தூர்வாரினதோடு, ஒரு போர்வெல்லும் போட்டோம். அதுக்கப்புறம், நிலத்தைச் செம்மைப்படுத்தி மாப்பிள்ளைச் சம்பா நெல், சிறுதானியங்கள், பச்சைப்பயறு, நிலக்கடலை, கத்திரினு பயிர் செஞ்சோம். முழுக்க இயற்கை விவசாயம்தான். அடுத்து தண்ணிப் பற்றாக்குறையாகிடுச்சு. கிணத்துல இருந்த தண்ணியை வெச்சு 4 ஏக்கர் நிலத்துல நெல்லும், ரெண்டரை ஏக்கர் நிலத்துல எள்ளும், ஒரு ஏக்கர் நிலத்துல வேலிமசாலும் போட்டிருக்கோம். எள் பொதுவா மண்ணுல இருக்குற சத்துகளை உறிஞ்சும்னு சொல்வாங்க. அதனால, அடுத்த பயிரை விதைக்கும்போது இயற்கை உரங்களை அதிகமாகப் போட வேண்டியிருக்கும். நெல், ஆகஸ்ட் மாசம் அறுவடைக்கு வரும். வேலிமசால் நல்லா விளைஞ்சிருக்கு. ஆட்டுப்பண்ணை அமைக்கிறப்போ இதைப் பயன்படுத்திக்கலாம்னு இருக்கோம். இப்போ எள் அறுவடையாகிட்டுருக்கு. அறுவடை முடிந்த பிறகு மகசூல் விவரங்களைச் சொல்றேன்” என்று சொல்லி விடைகொடுத்தார் வெள்ளைச்சாமி.

அறுவடை முடிந்த பிறகு நம்மைத் தொடர்பு கொண்ட வெள்ளைச்சாமி, “ரெண்டரை ஏக்கர் நிலத்துல மொத்தம் 300 கிலோ எள் கிடைச்சுருக்கு. எள்ளை ஆட்டி எண்ணை எடுத்து விற்பனை பண்ணலாம்னு இருக்கேன். 300 கிலோ எள்ளை ஆட்டினா 130 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் 360 ரூபாய்க்கு விற்பனை செஞ்சா, 46,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச்செலவும் போக எப்படியும் 45,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்றார் நம்பிக்கையுடன்.

“100 கிலோ எள்ளுக்கு 46 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்!”

நாமக்கல் மாவட்டம், கீரம்பூரைச் சேர்ந்த மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்யும் வேல்முருகனிடம் பேசினோம். “ஒரு கிலோ எள்ளிலிருந்து 42 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கும். அதாவது 100 கிலோவுக்கு
42 கிலோ எண்ணெய் கிடைக்கும்.

ஒரு லிட்டருக்கு 900 கிராம் எண்ணெய் என்ற கணக்கில் இருக்கும். இதுபோல நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி என்று ஒவ்வொரு எண்ணெய்வித்து பயிருக்கும் எடைக்கு ஏற்றவாறு கிடைக்கும் எண்ணெயின் அளவும் மாறுபடும். 100 கிலோ எள்ளுக்கு 46 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். வெள்ளைச்சாமி மகசூல் எடுத்திருக்கும் 300 கிலோவுக்கு 138 லிட்டர் எண்ணெய் கிடைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் எள்ளின் தன்மை, தரம் ஆகியவற்றைப் பொறுத்து எண்ணெயின் அளவு மாறுபடும்” என்றார், வேல்முருகன்.

ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை

ஒரு ஏக்கர் நிலத்தில் எள் சாகுபடி செய்யும் முறை குறித்து வெள்ளைச்சாமி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

எள் 90 நாள் பயிர். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 3 டன் மாட்டுஎருவைத் தூவி, ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஓர் உழவு செய்து, 20 அடிக்கு 15 அடி அளவில் பாத்திகள் எடுத்து... 2 கிலோ எள் விதையுடன், சலித்த மணலைக் கலந்து தூவி விதைக்க வேண்டும். விதைத்த பத்து நாள்களுக்குத் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. தண்ணீர் பாய்ச்சினால், எள் விதைகள் மிதந்து ஓரிடத்தில் குவியலாகச் சேர்ந்துவிடும்.

மண்ணின் ஈரப்பதத்திலேயே விதைகள் முளைப்பு எடுக்கும். விதைத்த 10-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தேவைப்பட்டால் களைகளை அகற்ற வேண்டும். 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஹியூமிக் அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பூச்சித் தாக்குதல் இருக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டித் தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்து களத்தில் கொட்டிப் பரப்பி 2 நாள்கள் காயவைத்து எள்ளை உதிர்த்துச் சேமிக்க வேண்டும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி :

ஊமத்தன், வேம்பு, ஆடாதொடை, துளசி, எருக்கன், நொச்சி, தும்பை ஆகிய செடிகளின் இலைகளில் மொத்தமாக 5 கிலோ அளவு எடுத்து இடித்து, அக்கலவையை ஒரு லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இட்டு 10 நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தயார். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.

தொடர்புக்கு :
வெள்ளைச்சாமி,
செல்போன்: 98407 10755.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm