Wednesday 31 May 2017

மரங்களும் மற்றும் அதன் பயன்கள் :


மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

கோடை நிழலுக்கு :

வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம்.

பசுந்தழை உரத்திற்கு :

புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.

கால்நடைத் தீவனத்திற்கு :

ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல்.

விறகிற்கு :

சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல்.

கட்டுமான பொருட்கள் :

கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி.

மருந்து பொருட்களுக்கு :

கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய்.

எண்ணெய்க்காக :

வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம்.

காகிதம் தயாரிக்க :

ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல்.

பஞ்சிற்கு :

காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு.

தீப்பெட்டித் தொழிலுக்கு :

பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு.

தோல்பதனிடவும், மை தயாரிக்கவும் :

வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய்.

நார் எடுக்க :

பனை, ஆனைப்புளி.

பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த :

வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி.

கோயில்களில் நட :

வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு.

குளக்கரையில் நட :

மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை.

பள்ளிகளில் வளர்க்க :

நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல்.

மேய்ச்சல் நிலங்களில் நட :

கருவேல், வெள்வேல், ஓடைவேல், தூங்குமூஞ்சி.

சாலை ஓரங்களில் நட :

புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு.

அரக்கு தயாரிக்க :

குசும், புரசு மற்றும் ஆல்.

நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட :

கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday 28 May 2017

சனப்பு தெளிக்கச் சரியான நேரம்: தழைச்சத்துக்கு ஊட்டம் கிடைக்கும் :


தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் நெல், கரும்பு, வாழை, மற்றத் தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளன

பயிர்களுக்குத் தேவையான சத்துகளை மண் வழங்கினாலும்கூட, மண்ணுக்குத் தழைச்சத்து என்பது மிகவும் முக்கியமானது. காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்பெல்லாம் எருக்கஞ்செடி, ஆனைத்தலை, நொச்சி இலை எனப் பல இலைகளைத் தண்ணீர் கட்டிய வயலில் நான்கைந்து நாட்களுக்கு ஊறவைத்துப் பின்னர் அப்படியே மடக்கி ஏர்பூட்டி உழுதால் வயலுக்குத் தேவையான தழைச்சத்து கிடைத்து வந்தது.

தழைச்சத்துக்கு மாற்று :

தற்போது இந்த இலைகளைத் தேடிப்பிடித்துப் பறித்துக் கொண்டுவந்து வயலில் உரமாக்க விவசாயிகளுக்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. தேடினாலும் வயலுக்குப் போதுமான அளவுக்குத் தழைகளும் கிடைப்பதில்லை. இதனால்தான் வேளாண்மைத் துறை தற்போது சனப்புச் செடிகளைத் தழைச்சத்துக்குப் பரிந்துரை செய்கிறது.

இந்தச் சனப்பு செடிகளைத் தெளித்து 45 நாட்களில் பூத்துக் குலுங்கிய பின், அப்படியே தண்ணீர்விட்டு மடக்கி ஏர் பூட்டி உழுவதால் வயலுக்குத் தேவையான தழைச்சத்து கிடைத்துவிடுகிறது.

கிலோ ரூ. 55 :

இது குறித்துக் கும்பகோணம் கோட்ட வேளாண் உதவி இயக்குநர் லெட்சுமிகாந்தன் பகிர்ந்துகொண்டது:

“சனப்பு எனப்படும் தழைச்சத்துத் தாவரம், வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்ற உரமாகும். இதில் நுண்ணூட்ட சத்துகள் அதிகம் அடங்கியுள்ளன. பசுந்தாள் உரமான சனப்புத் தாவர விதையை ஒவ்வொரு வயலிலும் தெளித்துச் சிறிது தண்ணீர் விட்டால்போதும். குறைந்தபட்சம் இரண்டரை அடி முதல் நான்கு அடிவரை வளரும். இந்தச் செடிகளை வளர்த்து 45 நாட்கள் கழித்துத் தண்ணீர் விட்டு மக்கிப் போகும் அளவுக்கு உழவு செய்ய வேண்டும்.

இந்தச் சனப்பு விதை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. சனப்பு விதை ஒரு கிலோ ரூ. 55. தற்போது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

விதையாகவும் விற்கலாம் :

மே மாதத்தில் பம்பு செட் வைத்திருப்பவர்களும், கோடை மழையைப் பயன்படுத்த நினைக்கும் விவசாயிகளும் இதை வயலில் தெளிக்கலாம். மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலர்ந்தவுடன் ஜூன் மாதத்தில் சனப்புச் செடிகளை உழவு செய்ய ஏதுவாக இருக்கும்.

மேலும், இந்தச் சனப்பை விதையாக எடுப்பதற்கு 110 நாள் வயலில் வளர்த்தால், சனப்பு விதை கிடைக்கும். இந்த விதையை வெளியில் ரூ.60-க்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Tuesday 23 May 2017

எலிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை :


கடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும் இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்துவிடும் அபாயமும் உள்ளது.

இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் நடுத்தர விவசாயிகள் மிகக் கடுமையான பொருளாதார இழப்பீடுகளை ஏற்படச் செய்யும் எலிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என தெரிந்துகொள்வது அவசியமாகும்.

இயற்கை முறையிலான எலிக்கட்டுப்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவின் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

நமது நாட்டில் எலிக்கட்டுப்பாட்டில் இந்தியா கழுகு ஆந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் மலை அடிவாரங்களில் காட்டுப்பகுதி மரங்களில் சிறிய குன்றுகளில் வசிக்கும் இவை எலிகளை உணவாக உட்கொள்ளும்.

எனவே தமிழக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் பெரிய மரங்களில் உள்ள ஆந்தை இருப்பிடங்களுக்கு எந்த விதமான சேதத்தை ஏற்படச்செய்யாமல் பாதுகாப்பது அவசியம்.

பின்னர் தங்கள் தோட்டங்களில் பறவை தாங்கிகளை அமைக்கவேண்டும். இரவு நேரங்களில் பறவை தாங்கிகளுக்கு வரும் ஆந்தைகள் எலிகளை உணவாக உட்கொள்ளும்.

காலை நேரங்களில் பிற பறவை வந்து அமர்ந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் எளிதாக விவசாயிகள் எலிகள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் வாயிலாக ஏற்படும் உற்பத்தி இழப்புகளை எளிதாக தடுக்கமுடியும்.

தற்போதைய நடைமுறை சூழ்நிலையில் மிகவும் குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்தி பெருக்கத்தை எளிதாக பெறமுடியும். மேலும் விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த புள்ளி ஆந்தைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றிற்கு செயற்கையாக இருப்பிடப் பெட்டிகள் அமைத்து எலிகளை கட்டுப்படுத்தும் வேளாண் முயற்சிகளை சில மாநிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை எலிக்கட்டுப்பாடு முறையின் பிற பயன்கள்:

சமுதாய எலிகளைக் கட்டுபடுத்தவனப்பகுதிகளை, மரங்களைப்பாதுகாப்பது. வாயிலாக பல இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

வன மற்றும் மரப்பொருள்கள் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் ஆந்தைகள் சில வகையான சிறிய பாம்புகள் தேள்களை உணவாக உட்கொள்ளுவதால் விவசாயிகளின் உயிருக்கும் நல்லப் பாதுகாப்பு அரணாக அமையும்.

எனவே சமுதாய அளவில் கிராம புறங்களில் ஆந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Monday 22 May 2017

தானியங்களை எளிதாக பாதுகாக்கும் ‘மண் பூச்சு’ தொழில்நுட்பம் :


மத்திய, மாநில அரசுகளின் சேமிப்பு கோடவுன்களில் ‘டன்’ கணக்கில் அரிசி, தானியங்கள் மூடைகளாக அடுக்கி வைத்து சேமிக்கின்றனர். உணவு தானியங்களில் இருந்து உற்பத்தியாகும் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் பல்கி பெருகி கோடவுன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு பரவி வருகிறது. கடும் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் இவைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.

உணவு பொருள் சேமிப்பு கோடவுன்கள் முறையாக பாதுகாக்கப்படாததால் ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான டன் எடையளவு உணவு பொருட்கள் வீணாகி வருகிறது.

‘மண் பூச்சு’ தொழில்நுட்பம்சரந்தாங்கி கிராம மக்கள் உணவு தானியங்கள் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகளின் தாக்குதல் இன்றியும், பல ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் மண் பூச்சு தொழில்நுட்ப முறையை பாரம்பரியமாக கையாண்டு வருகின்றனர்.

மண் பூச்சு முறையில் பாதுகாக்கப்படும் தானியங்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தும்போது தானியங்கள் மீது மதிப்புக்கூட்டு அதிகரித்தும், நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருப்பதாகவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

தானியங்கள் மீது ‘மண் பூச்சு’விவசாயி நல்லம்மாள் :

* ஒரு ஏக்கரில் துவரையை ஆடியில் விதைத்து, தையில் அறுவடை செய்தோம்.

* ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது கிடையாது.

* பழமையான இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

* இந்தாண்டு மழை இல்லாததால் விளைச்சல் குறைவு. எனினும் 5பேருக்கு ஓராண்டுக்கு தேவையான துவரை கிடைத்தது.

* துவரம் பருப்பு கெட்டுப்போகாமல் இருக்க செம்மண்ணை பாத்திரத்தில் வைத்து தண்ணீர் கலந்து, அதில் தானியங்களை நன்கு பிரட்டி எடுத்து வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும்.

* நன்றாக காய்ந்த துவரம் பருப்பை பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.

* பல ஆண்டு கெட்டுப்போகாது மசால் கடலை போல் துவரம் பருப்பு முழுவதும் படர்ந்திருக்கும் செம்மண் கலவை எளிதாக உதிராது.பருப்புடன் கெட்டியாக ஒட்டிக்கொள்ளும்.

* இவற்றை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது நான்கு ஆண்டுகள் வரை பருப்பு கெடாது. புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளி அண்டாது.

* தேவைப்படும் போது செம்மண் கலந்த பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பை தண்ணீரில் கழுவி சமைக்க பயன்படுத்தலாம்.

* இயற்கை முறையில் பதப்படுத்தப்படும் துவரம் பருப்பு மதிப்புக்கூடியும், நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருக்கும். மண் பூச்சு முறை அனைத்து தானியங்களுக்கும் பொருந்தும், என்றார்.-கா.சுப்பிரமணியன், மதுரை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Sunday 21 May 2017

செந்தில்குமாரின் இயற்கை வேளாண்மை :


நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களின் வரிசையில் ஒருவர்தான் என்றாலும், செந்தில்குமாரின் வாழ்க்கையும் இயற்கை வேளாண்மையை அவர் முன்னெடுக்கும் முறையும் வித்தியாசமானவை. நமது மரபு விவசாய முறைகள் குறித்த செந்தில்குமாரின் தேடல், வேர்களை நோக்கி அவரைத் திருப்பியது. ஒரு விவசாயியாக இன்று அவர் பரிணமித்திருக்கிறார்.

நம்முடைய மரபு சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதிலும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேலையையும் அவர் செய்துவருகிறார். வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றபோது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட அனுபவமே, நம்முடைய மரபு சாகுபடி முறைகள் மீது அவரை கவனம் செலுத்தத் தூண்டியது.

வெளிநாடு தந்த விழிப்பு :

“நான் வேலை பார்த்த சாஃப்ட்வேர் கம்பெனி சார்பாக அமெரிக்கா சென்றேன். அங்கே தமிழர்கள் குறித்தும் நம் வாழ்க்கைமுறை குறித்தும் அவர்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்னை வியக்கவைத்தது. நம் உழவுக் கலாச்சாரத்தையும் தற்காப்புக் கலைகளையும் அவர்கள் பெரிதாக மதிக்கின்றனர். ஆனால், நம்மிடமோ அது பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை.

நம் மண்ணில் விளைகிற பொருட்களை மட்டமாகவும் தரக்குறைவாகவும் நினைத்து ஒதுக்கிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறோம். வெளிநாட்டில் ஒருவர் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே, அதன் மகத்துவத்தைப் பற்றி சொன்னபோது, அத்தனை நாட்களாக வாழைப்பழத்தை அலட்சியமாக நினைத்த எனக்கு அவமானமாக இருந்தது” என்று சொல்லும் செந்தில்குமார், சென்னை திரும்பியதும் நம் மரபு வேளாண்மை குறித்த தேடலில் இறங்கினார்.

பட்டறிவும் களப்பணியும் :

வேளாண் வல்லுநர் சுபாஷ்பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண்மை’, செந்திலின் தேடலுக்குப் பாதை அமைத்தது. அவர் நடத்திய வேளாண் கருத்தரங்குகளில் பங்கேற்று தன் பார்வையை விரிவுபடுத்திக்கொண்டார். களப்பணி இல்லாத பட்டறிவு, வேளாண்மையைப் புரிந்துகொள்ள உதவாது என்பதால் தும்கூர், மைசூர் ஆகிய இடங்களுக்குச் சென்று விவசாய முறைகளைத் தெரிந்துகொண்டார். தும்கூரில் நடந்த உலக வேளாண் அறிஞர்களின் மாநாடு, செந்திலுக்குக் கூடுதல் விஷயங்களைப் புரியவைத்தது.

ஒவ்வொரு நாட்டிலும் எப்படியெல்லாம் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது என்பதை, அந்தந்த நாட்டு வேளாண் அறிஞர்கள் மூலமாகத் தெரிந்துகொண்டார். பனிபடர்ந்த அண்டார்ட்டிகா கண்டத்திலேயே விவசாயம் நடைபெறும்போது, வேளாண் மற்றும் தரிசு நிலங்களைப் பெருமளவு கொண்ட இந்தியாவில் ஏன் அது சாத்தியமாகாது என்ற கேள்வி, செந்திலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

விவசாயிகளே வல்லுநர்கள்!

அடுத்ததாக இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வார் நடத்திய பயிற்சி முகாம்களில் பங்கேற்றது, வேளாண்மை செய்வதற்கான செந்திலின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவருகிறவர்களைச் சந்தித்து, அவர்களுடைய விவசாய முறைகளைக் கற்றறிந்தார். அப்போது, எழுதப் படிக்கத் தெரியாத நம் விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட வேளாண் கலைகள் தெரிந்திருப்பது செந்திலின் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.

“ஏர் உழ ஏற்ற நாளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, ஒரு பருவத்தின் காலநிலை, மழை பொழியும் அளவு, மண் வளம், மண்ணுக்கேற்ற இயற்கை உரங்கள், நுண்ணுயிர்களின் செயல்பாடு, நிலப் பாகுபாடு, கால்நடை பராமரிப்பு, பயிர்ப் பாதுகாப்பு என்று வேளாண்மையோடு தொடர்புடைய அனைத்தும் விவசாயிகளுக்கு அத்துப்படியாக இருந்தது, அவர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது” என்று சொல்லும் செந்தில்குமார், விவசாயத்துக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் செயல்களில் இறங்கினார்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் விவசாயிகள் பண்படுத்தி வைத்திருந்த நிலத்தை, ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வளமற்றதாகி மாற்றிவருகின்றன. நிலமும் நிலம் சார்ந்த வாழ்க்கையுமாக இருந்த நம் ஐந்திணைக் கோட்பாடு காலப்போக்கில் மடிந்து, எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்று மாறிவிட்டது. மண்ணுக்கேற்ற பயிர்கள், கால்நடைகள் என்று இயற்கையோடு ஒன்றிவாழ்கிற வாழ்வே சிறந்தது” என்று நம் விவசாய முறையின் பெருமையைப் பகிர்ந்துகொள்கிறார் செந்தில்.

தற்சார்பு விவசாயம் :

பெருமைகளைப் பகிர்ந்துகொள்வதுடன் செந்தில்குமார் நின்றுவிடவில்லை. வேலூர் மாவட்டம் அத்தித்தாங்கலை அடுத்த ஒழலை கிராமத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் வெற்றிகரமாக விவசாயம் செய்துவருகிறார். நிலத்தை வாங்கி நான்கே ஆண்டுகளில், ஆச்சரியப்படத் தக்க உற்பத்தியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். முதலில் அந்த நிலத்தில் படிந்திருக்கும் ரசாயனத்தை அகற்றி, பண்பட்ட நிலமாக மாற்றினார். விவசாயத்துக்கு ஊட்டமளிக்க உள்நாட்டு கால்நடைகள்தான் தேவை என்பதால் உம்பளச்சேரி, திருவண்ணாமலை குட்டை ரக மாடுகளை வளர்த்துவருகிறார்.

இங்கே சூரிய அட்டவணைப்படி விவசாயம் நடக்கிறது. நீர்ப்பிடிப்புக்காகப் பண்ணைக் குட்டைகள் அமைத்திருக்கிறார்கள். சுபாஷ் பாலேக்கரின் ஐந்தடுக்கு விவசாயம் இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. மரங்கள், தானியப் பயிர்கள், மூலிகைச் செடிகள் என இங்கே பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பஞ்சக் கவ்யா, பழ உரம், மீன் உரம், திரவ உரம், சாம்பல் உரம் எனப் பல்வேறு வகையான உரங்களும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. பச்சிலை பூச்சி விரட்டி, சாம்பல் – மூலிகை பூச்சி விரட்டி, இஞ்சி – பூண்டுக் கலவை பூச்சி விரட்டி, உலர் மூலிகைப் பூச்சி விரட்டி போன்றவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.

உழைப்பும் முக்கியம் :

“நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவசாய நிலத்தை வாங்கினேன். நிலத்தில் இறங்கிப் பாடுபட்டால், அதற்கு நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு, இந்த நிலமே சாட்சி. ஐ.டி. கம்பெனியில் இருந்துகொண்டு விவசாய வேலை பார்ப்பதை ஆரம்பத்தில் எதிர்மறையாகப் பேசியவர்களும்கூட, பாரம்பரிய விவசாயத்தின் அவசியத்தை இன்றைக்குப் புரிந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் முதல் தலைமுறை விவசாயி என்பதில் பெருமிதமடைகிறேன்” என்று சொல்லும் செந்தில்குமார், அதேநேரம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு வேலையை விடுவது நல்லதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“விவசாயம் செய்ய வேண்டும் என்றால், நிலத்தில் இறங்கிப் பாடுபடத் தயாராக இருக்க வேண்டும். எடுத்ததுமே பலன் கிடைத்துவிடாது. பொறுமையும் கடின உழைப்பும் அவசியம். இன்று மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. ஆனால், இதிலும் கலப்படம் வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்தால், கலப்படத்தைத் தவிர்க்கலாம்” என்கிறார்.

ஒரே நாளில் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஆனால் மாற்றத்துக்கான விதையை ஊன்றுவதற்கு ஒரு நாள் போதும். நீங்கள் விதை ஊன்றத் தயாரா?

கான்கிரீட் காடுகள் சூழ்ந்த பெருநகரங்களில் நகர்ப்புற விவசாயத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தன் நண்பர்களுடன் இணைந்து ‘சென்னை கிரீன் கம்யூன்’என்ற அமைப்பை 2008-ல் செந்தில்குமார் தொடங்கினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், நம் மரபு உணவுப் பொருட்களான சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இயற்கை விவசாயம் மூலம் அமைக்கப்படுகிற தோட்டங்கள் குறித்தும் அவற்றில் விளையும் காய்கறிகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களுடைய செயல்பாடு குறிப்பிடத்தக்கது. வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு இக்குழு வழிகாட்டுகிறது.

தனியார் மற்றும் பொது இடங்களில் இயற்கை வேளாண்மை குறித்த பயிலரங்குகளை இலவசமாக நடத்துகின்றனர். பெரிய அளவிலான கூட்டங்களுக்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களுடைய அமைப்பு சென்னை மட்டுமல்லாமல் மைசூர், ஓசூர், கேரளா என்று பல்வேறு இடங்களிலும் கிளை விரித்திருக்கிறது. சென்னை கிரீன் கம்யூன் மூலம் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இயற்கை வேளாண்மையிலும் மாடித் தோட்டம் அமைக்கும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விதைகளைக் காப்போம் :

அவருடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை. வேளாண்மையின் ஆதாரமே தரமான விதைகள்தான். வீட்டையே விற்கிற வறுமையிலும் விதைநெல்லை விற்காத விவசாயிகளைக் கொண்ட சமூகம் நம்முடையது. நம் பாரம்பரிய வேளாண்மை முறைகளை மீட்டு, அதைப் பரவலாக்கி, பாதுகாக்கும் நோக்கத்துடன் ‘தமிழர் மரபியல் நிறுவனம்’ என்ற அமைப்பையும் செந்தில்குமார் நடத்திவருகிறார். தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படும் இந்த அமைப்பு மூலம், பள்ளி மாணவர்களுக்கு விதை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

“நம் பாரம்பரிய விதைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் எங்கள் நோக்கம், தடங்கல் இல்லாமல் நடந்துவருகிறது. மாநகராட்சிப் பள்ளிகளில் தொடங்கி, சர்வதேசப் பள்ளிகள்வரை அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சந்தித்து, நம் மரபு விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். தங்கள் கையால் பயிரிட்டு, விளைகிற காய்கறிகளை ஆர்வத்துடன் அறுவடை செய்கிற மாணவர்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நம் மனதில் அதிகரிக்கிறார்கள்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் செந்தில்குமார்.

செந்தில்குமார் தொடர்புக்கு: 99400 28160

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠