Wednesday 31 January 2018

தினமும் ₹ 1,700 – நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்!

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகர்வோர் தேடி வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பாக்கெட் பாலைத் தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள்.

இதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர்.

திருவள்ளூர்- ஊத்துக்கோட்டைச் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒதப்பை கிராமம். இங்குதான் இவர்களின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. பண்ணையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த சங்கர் மற்றும் கதிரவன் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் சங்கர். “நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமா நண்பர்கள். ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே ஒண்ணாத்தான் இருப்போம். படிப்பு முடிச்சு நான் அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அது எனக்குச் சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். வந்து நான், கதிரவன், இன்னொரு நண்பர் மூணு பேரும் சேர்ந்து மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். அந்த நண்பர் இப்போ வெளிநாடு போய்ட்டதால, நானும் கதிரவனும்தான் மாடுகளைப் பார்த்துக்கிறோம். ஆரம்பத்துல பாலை எங்களால விற்பனை செய்ய முடியல.

அதில்லாம நிறைய பிரச்னைகளும் வந்துட்டே இருந்துச்சு. ஆனாலும், நாங்க இதுதான் நமக்கான வாழ்வாதாரம்னு முடிவு பண்ணி இறங்கினதால, இழுத்துப் பிடிச்சு சமாளிச்சுட்டிருந்தோம். நாங்க திருவள்ளூர்ல நேரடியா பாலை விற்பனை செய்யக் கொண்டு போனப்போ, ‘திருவள்ளூர் இந்த்செட்டி பயிற்சி நிலையம்’ பத்திக் கேள்விப்பட்டோம். அங்கே மாட்டுப்பண்ணை அமைக்கிறது பத்தி முறையாகப் பயிற்சி எடுத்துக்கிட்டோம். அந்தப்பயிற்சிதான், எங்களுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது” என்ற சங்கரைத் தொடர்ந்து பேசினார் கதிரவன்.

“அந்தப் பயிற்சியிலதான் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது பத்தியும் தெரிஞ்சுகிட்டோம். பயிற்சி மைய அதிகாரிகள், எங்களுக்குப் பேங்க் லோனுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க. இப்போ, பாலை மட்டும் விற்பனை செய்யாம வெண்ணெய், நெய், பால்கோவானு தயாரிச்சு விற்பனை செய்றோம். மாடு வளர்ப்பைத் தொடங்கி நாலு வருஷமாச்சு. இப்போ பண்ணையில கிடைக்குறது, மற்ற விவசாயிகள்கிட்ட வாங்குறதுன்னு தினமும் 150 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை செய்றோம். பாலுக்கான ஆர்டர் அதிகமா இருக்குறதால, மத்த விவசாயிகள்கிட்ட இருந்தும் பால் வாங்குறோம். சென்னை வரைக்கும் இந்த பாலை அனுப்பிட்டிருக்கோம்.

அதிக பணவசதி இல்லாததால இப்போதைக்குச் சின்ன அளவுலதான் செஞ்சுட்டிருக்கோம். சங்கரோட அப்பாவுக்கு மாடு வளர்ப்புல நல்ல அனுபவம் இருக்குறதால, அவர்தான் பண்ணையைக் கவனிச்சிட்டிருக்கார். நாங்க வளர்க்குறது எல்லாமே இந்த மாவட்டத்துல வளர்ற நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகள் குறைவான பால் கொடுத்தாலும் அதுல சத்து அதிகம்.

அதனால, மக்கள் விரும்பி வாங்குறாங்க. சந்தையில் விற்பனையாகுற பால் விலையைவிட, அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாரா இருக்காங்க. அதேமாதிரி, நாட்டு மாட்டு நெய்க்கும், வெண்ணெய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. எருமை மாட்டுப்பாலுக்கும் நல்ல வரவேற்பு இருக்குது. மாடுகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். இதனால், ஆரோக்கியமா வளருது. சத்தான பால் கிடைக்குது. மத்த விவசாயிகள்கிட்ட வாங்குற பாலையும் தரமா இருந்தாத்தான் வாங்குவோம்.

பால்ல இருக்குற கொழுப்போட அளவைப் பொறுத்து விலை கொடுப்போம். எங்ககிட்ட 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள், 12 எருமைகள், 12 எருமைக் கன்றுகள்னு மொத்தம் 44 உருப்படிகள் இருக்கு. இதுபோக 15 வெள்ளாடுகளும் இருக்கு. இப்போதைக்குத் தினமும் 23 லிட்டர் பசும்பாலும் 26 லிட்டர் எருமைப்பாலும் கிடைச்சுட்டிருக்கு” என்றார்.
வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த சங்கர், “பசும்பாலை 42 ரூபாய்னும், எருமைப்பாலை 50 ரூபாய்னும் விற்பனை செய்றோம். இப்போதைக்குத் தினமும் 2,266 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுட்டிருக்கு. வெளியிலிருந்து வாங்குற பாலைத் தனியா விற்பனை செய்றோம். அது மூலமா ஒரு வருமானம் கிடைச்சிட்டிருக்கு. ஆர்டரைப் பொறுத்துத் தயிர், வெண்ணெய், நெய்னும் விற்பனை செய்றோம். தினமும் தீவனம், போக்குவரத்து, மருந்துனு 900 ரூபாய் செலவாகுது. எல்லாம் போகத் தினமும் சராசரியா 1,700 ரூபாய் வரை லாபமாக் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய நண்பர்கள், “கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு ஆர்டர் அதிகரிச்சுட்டே இருக்குறதால, பெரியளவுல பண்ணையை விரிவுபடுத்துற முயற்சிகளை எடுத்துட்டுருக்கோம். சீக்கிரத்துல ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சுடுவோம்னு நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு:
சங்கர்,
செல்போன்: 97915 52601

மேய்ச்சல் முறை சிறந்தது!

மாடுகளைப் பராமரிப்பது குறித்துச் சங்கர் சொன்ன தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன....

ஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறித்த காலத்தில் குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும். மேய்ச்சல் முறையில் வளர்ப்பது சிறந்தது. சினைப்பருவத்துக்கு வரும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

மாடுகளுக்குக் கோமாரி நோய் வந்தால், தினம் ஒரு நாட்டுக்கோழி முட்டை என மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும், எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் உடம்பில் புள்ளிகள் வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிற்றை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணெயில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணிநேரம் ஊற வைத்து, நான்கு நாள்களுக்குக் கொடுத்து வந்தாலும் கோமாரி சரியாகிவிடும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றைப் பால் குடிக்க விடக் கூடாது.

மாடுகள் தீவனம் எடுக்காமல் இருந்தால், கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ஆகியவற்றோடு வெல்லம் கலந்து கொடுக்கலாம். மூங்கில் இலையை உண்ணக்கொடுத்தால் மாடுகளின் வயிறு சுத்தமாகும்.

மாடுகளுக்கு உப்புசம் ஏற்பட்டால் 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராகச் சுண்ட வைத்துக் கஷாயமாகக் கொடுத்தால் சரியாகிவிடும். புண்களுக்கு வேப்பெண்ணெய் தடவினாலே சரியாகிவிடும்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு பாகம் - 1


செம்மறி & வெள்ளாட்டு இனங்கள் :

1. வெள்ளாட்டு இனங்கள்
2. செம்மறி ஆட்டு இனங்கள்

வெள்ளாட்டு இனங்கள் :

சிறந்த இந்திய இனங்கள் :

* பள்ளை ஆடு, கொடி ஆடு - தமிழ்நாடு

* ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி

* பீட்டல் - பஞ்சாப்

* பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்

* தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா

* சுர்தி - குஜராத்

* காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்

* வங்காள ஆடு - மேற்கு வங்காளம்

இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்

அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்

செம்மறி ஆட்டு இனங்கள் :

உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும் :

மற்ற இனங்கள் :

* மெரினோ - கம்பளிக்கு உகந்தது

* ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.

* சோவியோட் - கறிக்கு ஏற்றது

* செளத் டான் - கறிக்கு ஏற்றது

நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠
12 ஏக்கர், ரூ.23 லட்சம்... சம்பங்கி, அரளி, காட்டு மல்லி, செவ்வந்தி... மலர்ச் சாகுபடியில் மணக்கும் லாபம்!


பல நெருக்கடியான சூழ்நிலைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வரும் சூழ்நிலையில்... பரம்பரைவிவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட, விவசாயத்தைத் தொடர முடியாமல், வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். அப்படி விவசாயத்தைவிட்டு வெகுதூரம் சென்ற பலரை, மீண்டும் விவசாயத்துக்குள் அழைத்துவரும் மகத்தான பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது ‘பசுமை விகடன்’. அதோடு மட்டுமில்லாமல், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த இளைஞர்கள் பலரையும் இயற்கை விவசாயம் செய்ய வைத்து, ‘முதல் தலைமுறை விவசாயிகள்’ பலரையும் உருவாக்கி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில் விவசாயத்தை விட்டு ஒதுங்கி மாநகராட்சி ஒப்பந்த வேலைகளைச் செய்து வந்த சத்தியநாதன், பசுமை விகடன் மூலமாக இயற்கை விவசாயத்தில் மீண்டும் கால் பதித்து, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
பசுமை விகடன் 12-ம் ஆண்டுச் சிறப்பிதழுக்காகச் சத்தியநாதனைச் சந்திக்கப் புறப்பட்டோம். உடுமலைப்பேட்டையில் இருந்து திருமூர்த்தி மலை போகும் பாதையில் உள்ள எழில்கொஞ்சும் ஊர் தளி. அங்கிருந்து கண்ணாடிபோல் தண்ணீர் சலசலத்து ஓடும் வாய்க்கால் கரையோரம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தால், சத்தியநாதனின் மலர்த் தோட்டத்தை அடையலாம். அதிகாலை நேரத்தில் களத்து மேட்டில் குவித்து வைக்கப்பட்ட பூக்களை எடைபோடும் பணியைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தார், சத்தியநாதன். அவரிடம் நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டதும், மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். படிப்பு முடிஞ்சதும் உடுமலைப்பேட்டை, தீபாலப்பட்டி கிராமத்துல இருக்குற எங்க பூர்வீக தோட்டத்துல பீட்ரூட் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். போதிய மழை இல்லாம விவசாயம் நலிஞ்சு போச்சு. அதனால, விவசாயத்தை விட்டுட்டு வேற தொழிலுக்கு மாறிட்டேன். நான் ஆரம்பத்துல இருந்தே பசுமை விகடனைப் படிச்சுட்டு வர்றேன். அதைப் படிக்கப்படிக்க கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயம் மேல ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சது.

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த விஜயரங்கன்கிறவர் செய்ற மலர்ச் சாகுபடி பத்தி, 2011-ம் வருஷம் டிசம்பர் மாசம் பசுமை விகடன்ல ஒரு செய்தி வந்தது. அதைப்படிக்கவும் எனக்கும் மலர்ச் சாகுபடியில ஆசை வந்துடுச்சு. எங்க பூர்வீக நிலத்துல தண்ணி பற்றாக்குறை இருந்ததால, வருஷம் மூணு லட்ச ரூபாய்னு குத்தகை பேசி இந்த 12 ஏக்கர் நிலத்தை எடுத்து மலர் விவசாயத்துல இறங்கினேன். இது கரும்பும் நெல்லும் வெளையக்கூடிய நல்ல வளமான வண்டல் மண் பூமி. வாய்க்கால் பாசனம் உண்டு. அதுபோக கிணறும் இருக்கு.

என்னோட விவசாய ஆசையைத் தெரிஞ்சுகிட்டதும், அக்கா பேபி, அக்கா வீட்டுக்காரர் ஆனந்த கிருஷ்ணன், அக்கா பையன் பாலாஜி, சித்தப்பா மௌனகுருசாமி நாலு பேரும் சேர்ந்துகிட்டாங்க. இவங்க நாலுபேரும்தான் முழுசா பண்ணையை நிர்வாகம் செய்றாங்க” என்ற சத்தியநாதன், தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

“இது பல வருஷமா கரும்பு மட்டுமே விளைஞ்சுட்டுருந்த பூமி. கரும்புக் கட்டைகளால் இறுகிக் கிடந்த மண்ணை உழவு செஞ்சு பொலபொலனு மாத்தி, ஆறு ஏக்கர் நிலத்துல சம்பங்கி, மூணு ஏக்கர் நிலத்துல அரளி, ஒரு ஏக்கர் நிலத்துல காட்டு மல்லினு நடவு செஞ்சுருக்கோம். முழுசா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். மீதி நிலத்துல செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டைனு நடவு செஞ்சுருக்கோம். இயற்கைமுறையில பூக்கள் நல்லா விளையுது. விடியற்காலையில் பூக்களை அறுவடை செய்றதுக்காக வேலை செய்றவங்க நெத்தி பேட்டரி போட்டு பூ பறிக்கிறாங்க.

பூ சாகுபடிக்கு ஆள்கள் அதிகம் தேவைங்கிறதால தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவங்களையும், வட மாநில ஆளுங்களையும் வேலைக்கு வெச்சுருக்கோம். அவங்க பண்ணையிலேயே தங்கிக்கிறாங்க. அவங்களுக்காக இங்க ஷெட் அமைச்சுருக்கோம். மாசச் சம்பளத்தோடு மூணுவேளை சாப்பாடு, டீ, மருத்துவச்செலவு எல்லாத்தையும் நாங்களே பார்த்துக்கிறோம். அவங்களை அக்கா பேபியும் சித்தப்பா மௌனகுருசாமியும்தான் பார்த்துக்கிறாங்க” என்ற சத்தியநாதன் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார். “கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப் பேட்டை, ராஜபாளையம்னு நாலு ஊர்கள்ல இருக்குற சந்தைகளுக்குத் தினமும் பூக்களை அனுப்புறோம்.

போன வருஷம் (2017) ஜனவரி மாசத்துல இருந்து டிசம்பர் மாசம் வரைக்குமான ஒரு வருஷத்துல 1,727 கிலோ காட்டுமல்லி பூ மகசூல் கிடைச்சது. அதை விற்பனை செஞ்சது மூலமா 4,33,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 6,147 கிலோ செண்டுமல்லி மூலமா 2,82,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 3,650 கிலோ கோழிக்கொண்டை மூலமா 1,68,000 ரூபாய் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 2,110 கிலோ செவ்வந்தி மூலமா 2,32,000 ரூபாய் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 32,250 கிலோ சம்பங்கி மூலமா 35,16,382 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 23,348 கிலோ அரளி மூலமா 27,50,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு.

ஆக, 12 ஏக்கர் நிலத்துல பலவிதமான பூக்களைச் சாகுபடி செஞ்சது மூலமா போன வருஷம் ஜனவரி மாசத்துல இருந்து டிசம்பர் மாசம் வரை மொத்தம் 73,81,382 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இதுல குத்தகை உள்பட எல்லாச் செலவும் போக 23,75,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சுருக்கு” என்ற சத்தியநாதன் நிறைவாக,

“எங்க பகுதியில பூ சாகுபடியே கிடையாது. இருந்தும் துணிச்சலா இயற்கை முறையில பூ சாகுபடியில இறங்கினோம். பசுமை விகடனைப் படிச்சு சரியான முறையில் பராமரிச்சதால நல்ல லாபம் எடுக்க முடியுது. சரியான பாதையில் போனா கண்டிப்பா விவசாயம் லாபமான தொழில்தான்” என்றார்.

தொடர்புக்கு,
டி.சத்தியநாதன்,
செல்போன்: 86674 65813,
97501 99222

இயற்கை மலர்ச் சாகுபடி பாடம்!

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி மற்றும் அரளி ஆகியவற்றைச் சாகுபடி செய்யும்முறை குறித்துச் சத்தியநாதன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

சம்பங்கி :
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 8 டன் ஆட்டு எருவைக் கொட்டி நன்றாக உழவு செய்ய வேண்டும். பிறகு 3 அடி அகலம், முக்கால் அடி உயரம் என்ற அளவில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்துப் பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேட்டுப்பாத்தியில் ஓர் அடி இடைவெளியில் விதைநேர்த்தி செய்த சம்பங்கி விதைக்கிழங்குகளை விதைக்க வேண்டும். விதைக்கும்போது ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ தொழு உரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்த கலவையைப் போட்டு விதைக்க வேண்டும் (ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 600 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும்).

பிறகு, தண்ணீர் வசதியைப் பொறுத்து பாசன அமைப்புகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும் (இவர் தெளிப்புநீர்ப் பாசனக்குழாய்களை அமைத்துள்ளார்). நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். நடவு செய்ததிலிருந்து மாதம் ஒருமுறை களைகளை அகற்றி வர வேண்டும். கடலைப்பிண்ணாக்கு 15 கிலோ, பருத்தி விதைப் பிண்ணாக்கு 30 கிலோ ஆகியவற்றை 3 நாள்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கலவையுடன் தலா 500 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களைச் சேர்த்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். நடவுசெய்த முதல் மாதம், ஒவ்வொரு செடியின் தூர்பாகத்திலும் இந்தக் கலவையில் சிறிதளவு ஊற்ற வேண்டும்.

நடவுசெய்த இரண்டாம் மாதம் 500 கிலோ மண்புழு உரத்தை அனைத்துச் செடிகளின் தூரிலும் பகிர்ந்து வைக்க வேண்டும். மூன்றாம் மாதம் 150 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானமூலம் தெளிக்க வேண்டும்.

நான்காம் மாதம் 5 டன் ஊட்டமேற்றிய தொழு உரத்தை அனைத்துச் செடிகளின் தூரிலும் பகிர்ந்து வைக்க வேண்டும். ஐந்தாம் மாதம், 100 லிட்டர் தண்ணீருக்கு 10 லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு லிட்டர் அளவு ஊற்ற வேண்டும். நடவு செய்த ஆறாம் மாதம், தழை மணி சாம்பல் சத்துகள் அடங்கிய 250 கிலோ இயற்கை உரத்தை அனைத்துச் செடிகளின் தூரிலும் பகிர்ந்து வைக்க வேண்டும். தொடர்ந்து மாதம் ஒருமுறை இந்த இடுபொருள்களைச் சுழற்சி முறையில் கொடுத்து வர வேண்டும்.

சம்பங்கியில் நுனிக்கருகல் நோய் தாக்கினால்... 100 கிராம் சூடோமோனஸ் திரவ உரத்துடன் 200 மில்லி புளித்தமோர் சேர்த்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கினால்... 1 லிட்டர் புங்கன் எண்ணெய், 4 லிட்டர் வேப்பெண்ணெய் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் ஊற்றி, அதனுடன் 50 கிராம் காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும். சம்பங்கியில் நடவுசெய்த ஆறாம் மாதத்திலிருந்து பூக்கள் கிடைக்கத் தொடங்கும். தொடர்ந்து மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பூக்களை அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கிழங்குகளைத் தோண்டி எடுத்து மறு நடவுசெய்யலாம். அந்தச் சமயத்தில் கிழங்குகள்மூலமாகவும் ஒரு வருமானம் பார்க்க முடியும்.

அரளி :

சம்பங்கிக்குத் தயார் செய்வதுபோலவே அரளி நடவுக்கும் நிலத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 14 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற இடைவெளியில் நாட்டு ரக அரளி நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும் (இவர் சேலம் அரளி என்ற நாட்டு ரகத்தை நடவு செய்துள்ளார்). தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும். செடிகள் வளர்ந்துவரும் சமயத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை பக்கக் கிளைகளை ஒடித்து விட வேண்டும். சம்பங்கிக்குச் செய்வதுபோலவே அரளிக்கும் இடுபொருள்கள் கொடுப்பது மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வர வேண்டும். நடவுசெய்த ஆறாம் மாதத்திலிருந்து பூக்களை அறுவடை செய்யலாம். அரளியை மொட்டுக்களாகவே பறித்து விட வேண்டும்.”

விதைநேர்த்தி!

நாட்டுப்பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், சுத்தமான கல்சுண்ணாம்பு தூள் 50 கிராம், நிலத்தின் வளமான மண்ணில் ஒரு கைப்பிடி ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஊற விட வேண்டும். இதுதான் பீஜாமிர்தக் கரைசல்.

விதைக்கிழங்குகளை இரண்டு மணி நேரம் இக்கரைசலில் ஊற வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். நாற்றுகளின் வேர்ப்பகுதிகளையும் இக்கரைசலில் மூழ்க வைத்து நடவு செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலமாக வேர் சம்பந்தமான நோய்கள் தாக்குதலிலிருந்து பயிர்கள் காப்பாற்றப்படும்.

Monday 29 January 2018

தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு (NDDB) :

1. தத்துவம்
2. கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி
3. பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம்
4. பயிற்சி மற்றும் ஆலோசனை
5. பால்பண்ணை கூட்டுறவுகள்
6. சில பெரிய பால் பண்ணைக் கூட்டுறவு கூட்டமைப்புகள்

தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு ஊக்குவிப்பு, நிதி ஆதரவு, சொந்தமாக உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றிற்காக தொடங்கப்பட்டது. என்டிடிபியின் திட்டங்கள் மற்றும் செயல்கள் விவசாயிகள் கூட்டுறவுகளை வலிமைப்படுத்தவும் தேசிய கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கு வழிவகை செய்கிறது. என்டிடிபியின் முயற்சிகளுக்கு அடிப்படை கூட்டுறவு கொள்கைகள் மற்றும் கூட்டுறவு திட்டங்கள்.

* தத்துவம்
* கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி
* பொருட்கள் மற்றும் செயலக தொழில்நுட்பம்
* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உயிரித் தொழில்நுட்பம்
* பயிற்சி மற்றும் ஆலோசனை
* பால் பண்ணை கூட்டுறவுகள்

தத்துவம் :

* ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகவும் விரும்பப்படுவது. இது மக்களுக்கு வளங்களின் மீது ஒரு கட்டுப்பாட்டை ஜனநாயக சுய ஆட்சி முறை மூலம் வழங்குகிறது.

* மக்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்யும் பொழுது, சுயசார்பு அடைவர். அவர்களின் சுய நிறுவனங்களை நிர்வகித்து வளர்த்து அதை ஏற்றுக் கொள்வர்.

* படிப்படியாக மேலும் சமுதாயத்தில் மேண்மை அடைவது என்பது அதன் வளர்ச்சிக்குத் தேவையான நன்மையை நாடுபவர்களுக்குச் சென்றடையும்.

* குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவடைந்தவர்கள், கூட்டுறவு நிர்வாகம் மற்றும் முடிவு எடுக்கும் வேலைகளில் ஈடுபடுதல்வேண்டும்.

* சந்தை இயக்கங்களை தலைமையிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான நல்ல வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே இருத்தல் நல்ல வழிகளை அடைய வழிவகுக்கும்.

* நமது வழிமுறைகள் மாறுகின்ற சூழலை பிரதிபலிக்கும் பொழுது, நமது தேவை மற்றும் மதிப்பு எப்பொழுதும் நிலையாக இருத்தல்வேண்டும்.

கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி :

பால் வாரியம் கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சித் திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது.

இதன் குறிக்கோள் :

* உறுப்பினர்களுக்கு சுய சார்பு அடைய உதவி செய்தல் மற்றும் தனியாக கூட்டுறவு நிறுவனங்கள் நிர்வாகம், மற்றும் பொருளாதாரம் சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல்,

என்டிடிபி அதன் கிராமப்புற தொகுதிகளை, மகளிர் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அதன் செயல்களில் முக்கியப் பகுதியாக வைத்துள்ளது.

* பால் பண்ணை கூட்டுறவுகளை வலிமைப்படுத்தி அதன் பால் கொள்முதலை அதிகரித்தல்.

* தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் நிறுவன அமைப்பு (ஐபி), கூட்டுறவுகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்தல் (இடபிள்யூஐசி)

* கொள்முதல் முறைகளை வலிமைப்படுத்துதல் (எஸ்பிஎஸ்).

பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம் :

பால்பண்ணை கூட்டுறவுகளின் தொழிலுக்கு மதிப்பு சேர்க்கும் வகையில், பால் பண்ணை வாரியம் பொருட்களை தேர்வு செய்து, பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பொருட்களை உருவாக்குதல் மற்றும் அதன் தயாரிப்பு செயலகங்களுக்கு மண்டல வாரியான முன் தேர்வுகள் மிகவும் முக்கியம். பாரம்பரிய பால் பொருட்கள் தயாரிப்புகளான கண்ட், பண்ணீர், கோவா, லசி, குலாப்ஜாமூன், மிஸ்டி டோய் மற்றும் தயிர் மற்றும் மேற்கத்திய பொருட்களான ஐஸ்கிரீம்கள், பாலாடைகள் ஆகியவற்றை தேர்வு செய்து வணிகப்படுத்துதல் வேண்டும். பால் தரத்தை சரி பார்க்க, சோதனைக் கிட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பால் பொருட்களை பரிசோதிக்க என்டிடிபி சேவைகளை வழங்குகிறது. என்டிடிபி அதன் ஆராய்ச்சி செயல்களை விரிவுப்படுத்தி கால்நடை மரபியல்புகள், கால்நடை ஆரோக்கியம் மற்றும் அதன் ஊட்டச்சத்து ஆகியவை மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் திட்டத்திற்காக பால் பண்ணை கூட்டுறவுகளுக்கு உதவ விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி மற்றும் ஆலோசனை :

தற்போதைய அதிகரிக்கும் போட்டி நிறைந்த சூழலில், பால் பண்ணை கூட்டுறவுகளின் வெற்றி மக்களைப் பொருத்தே அமையும். வாரியங்கள், முதன்மை இயக்குநர்கள், மேலாளர்கள், கள அலுவலர்கள், வேலை செய்வோர் அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் நபர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தல் என்டிடிபியின் முக்கியக்கூறுகளில் நீண்ட நாட்களாக இருப்பவை. என்டிடிபி தேவைக்கு ஏற்ப பல பயிற்சி திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை பல்வேறு பகுதிகளில் வழங்குகிறது. பால் பண்ணை நிர்வாகம், லாபக் கணக்கு மற்றும் அதன் விளைவுகளின் படிப்புகள், பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றை வடிவமைத்து அந்தத் துறையில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. நிறைய பயிற்சி திட்டங்கள் கூட்டுறவு அமைப்புகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. சில ஆலோசனை சேவைகள் மற்றும் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் சில இதர அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

பால்பண்ணை கூட்டுறவுகள் :

நாட்டில் பதப்படுத்தப்பட்ட பால் விற்பனையில் பால் பண்ணைக் கூட்டுறவுகள் அதிக பங்குகளைப் பெற்றுள்ளது. பால் பதப்படுத்தப்பட்டு, 170 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அதை 15 மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு மூலம் விரிவுப்படுத்தப்படுகிறது. என்டிடிபி பால் பண்ணைக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு உதவி செய்து, இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டுறவுகள் ஏற்படுத்திய வர்த்தக குறியீடுகள் தரம் மற்றும் மதிப்புகளில் பெயர் பெற்று விளங்கியது. நந்தினி (கர்நாடகா), மில்மா (கேரளா), கோகுல் (கோலாப்பூர்) ஆகியவை நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தது.

சில பெரிய பால் பண்ணைக் கூட்டுறவு கூட்டமைப்புகள் :

1. ஆந்திரப்பிரதேச பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (APDDCP),

2. பீகார் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (COMPFED),

3. குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMP),

4. ஹரியானா பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (HDDCF),

5. ஹிமாச்சல பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (HPSCMPF),

6. கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (KMF),

7. கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (KCMMF),

8. மத்தியப் பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (MPCDF),

9. மஹாராஷ்டிரா ராஜ்ய சகாகரி மர்யாடிட் டுக்ட் மஹாசங் (மஹாசங்),

10. ஒரிசா மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (OMFED),

11. பிரதேசிக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (UP) (PCDF),

12. பஞ்சாப் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (MILKFED)

13. ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (RCDF),

14. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF),

15. மேற்கு வஙகாளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (WBCMPF).

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠
’பள்ளி வளாகத்திலேயே இயற்கை விவசாயம்’ - அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் :
 



பள்ளியின் ஒரு பகுதியில் வேலி அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து அசத்தி வருகிறார்கள் அரசுப்பள்ளி மாணவர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பள்ளி மாணவர்கள்தான் அரசுப் பள்ளியில் இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவித்து வருகிறார்கள், அரசுப்பள்ளி மாணவர்கள். மாணவர்களுக்கு உதவியாக ஆசியர்களும், தலைமை ஆசிரியரும் உதவி புரிந்து வருகிறார்கள்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் பாலமுருகனிடம் பேசினோம், எங்கள் பள்ளி காவேரிக் கரையை ஒட்டிய பகுதி என்பதால் மண் வளம் மிகுந்தது. ஆகையால், பள்ளியில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டுமென நினைத்துதான் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது அந்நிய குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டுமென பாடம் நடத்தும்போது கற்பித்தோம். அப்போது ஒரு மாணவன் எழுந்து சார் அதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது உண்டா என்று கேட்டான். அப்போதுதான் நாம் இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்லவேண்டுமென அறிவுரை கூறினேன். அதன்பிறகு மாணவர்களே எப்படி இயற்கை விவசாயத்தை செய்வது எனக் கேட்டார்கள். அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயம் செய்வது என முடிவு செய்து பள்ளி மைதானத்தின் ஓரமான பகுதியில் அரை செண்டு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வதாக மாணவர்களின் ஆர்வத்தை தலைமை ஆசிரியரிடமும் எடுத்துச் சொன்னேன்.

தலைமை ஆசிரியரும் அதற்கு எந்தவிதமான மறுப்பு தெரிவிக்காமல் உடனே செய்யுங்கள் என்று ஊக்குவித்தார். பள்ளி வளாகத்தின் ஒரு ஓரத்தில் மாணவர்களே மண்வெட்டி வைத்து கொத்தி அதில் வெண்டைக்காய், கத்திரி ஆகிய விதைகளை நட்டு வைத்தோம். தினம் மாணவர்கள் மதிய இடைவேளையில் போய்ப் பார்த்து தண்ணீர் தேவைப்பட்டால், தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர். பூச்சி மருந்து பயன்படுத்தாமல் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை பூச்சி மருந்தாகத் தெளித்தனர். இப்போது மாணவர்கள் வெண்டை, கத்திரி அறுவடையும் செய்துள்ளார்கள் ’ என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Sunday 28 January 2018

காணாமல் போன கமலைப் பாசனம்... நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?!


நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தொழில் விவசாயம்தான். பண்டைய காலம் தொட்டே நம்முடைய விவசாயிகள் பாரம்பர்ய விவசாயத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அதில், நீர்ப்பாசன முறை, இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அதைப் பின்பற்றவும் செய்துள்ளனர். பாரம்பர்ய இயற்கை விவசாயத்தில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தன்னிறைவு அடைந்த நாடு, இந்தியா. பசுமைப்புரட்சிக் கொள்கைக்குப் பிறகு நம்முடைய பாரம்பர்ய விவசாயம் முற்றிலுமாக கரையத் தொடங்கியது. மாடுகளுக்குப் பதில் டிராக்டர், இயற்கை உரங்களுக்குப் பதில் செயற்கை உரம், கமலைப் பாசனத்திற்கு பதில் மோட்டார் பம்புசெட் என விவசாயிகளும் மாறத் தொடங்கினர். ஆனால், படிப்படியாக மின்சாரப் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, பருவநிலை மாற்றம், பம்புசெட் மூலம் நீர் உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டம் குறைதல், விளைபொருட்களுக்கான விலை குறைவு என விவசாயம் அழிவினைச் சந்தித்து வருகிறது. பசுமைப் புரட்சியால் கரைந்து போன பழைமையான தொழில்நுட்பங்களில் கமலைப் பாசனம் முக்கியமானது.

இன்றைக்கு பட்டனைத் தட்டினால் பைப் மூலம் தண்ணீர் மேலே வந்துவிடும். ஆனால், அன்றைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து 1 ஏக்கருக்குப் பாய்ச்ச குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும். ஆனால், நேரம் பற்றி எல்லாம் அன்றைய விவசாயிகள் கவலைப்படவில்லை. கமலைப் பாசனத்தில் நீர் இறைத்துக் கொண்டிருந்தது வரைக்கும் தண்ணீர் விரயம் என்பது இருந்ததில்லை.

கமலை ஏற்றம் என்பது இரண்டு மாடுகளைப் பூட்டி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைக்கும் சாதனம். இப்போது விவசாயத் தண்ணீர் தேவைக்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கலாம். முன்னர் எல்லாம் வயலின் ஒரு பகுதியில் குறைந்தது 30 முதல் 40 அடிவரை உள்ள கிணற்றை வெட்ட வேண்டும். மழைக்காலத்தில் கிணறு முழுவதும் நீர் நிரம்பி விடும். அதனைக் கமலை மூலம் இறைத்து விவசாயம் நடைபெறும். காலைப்பொழுதில் ஆரம்பித்தால் வேலை செய்யும் சுமை தெரியாது. கமலைப் பாசனம் என்பது சுலபமாகச் செய்துவிடக் கூடிய தொழில்நுட்பம் கிடையாது. கமலை இறைக்கும் இரண்டு மாடுகளும் ஒரே நேர்கோட்டில், ஒரே அளவில் முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோல இரண்டு மாடுகளும் ஒரே சீராகப் பின்னோக்கி வர வேண்டும். சிறிது அச்சுப் பிசகினாலும் சிக்கல்தான்.

அதேபோல தண்ணீரை இறைக்கும்போது மாடுகள் நிச்சயம் களைப்படையும். அவை சோர்ந்து போகாமல் இருப்பதற்காகத்தான் கிணற்றைச் சுற்றி பூவரசு மரங்களை நட்டு வைத்திருப்பர். இம்மரங்கள் அதிகப்படியான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டவை. கமலை இறைக்கும் கிணற்று மேடுகளை நிச்சயம் பூவரசு அலங்கரித்திருக்கும். எந்தச் செலவும் இல்லாமல் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சக்கூடிய தொழில்நுட்பம் என்பதால் விவசாயத்தில் கமலைப் பாசனம் செலவுக் கணக்கில் வராது. கமலை இழுக்கத் தேர்வு செய்யும் மாடுகள் முழுமையான பயிற்சிக்குப் பின்னரே பயன்படுத்தப்படும். இப்போது கமலைப் பாசனம் செய்ய விவசாயிகள் முன்வந்தாலும், கமலைப் பயிற்சி பெற்ற மாடுகள் இன்று சந்தையில் இல்லை. புதிய மாடுகளை வாங்கி பயிற்சிகளை அவ்வளவு எளிதில் கொடுத்து விடவும் முடியாது. கமலை இறைக்கப் பயன்படுத்தப்படும் மாடுகள் வீட்டிலிருந்து அவிழ்த்து விட்டால் கிணற்று மேட்டில் போய் சரியாக நின்று கொள்ளும். பாசனம் முடிந்து அவிழ்த்துவிட்டால் மாடுகள் வீட்டிற்கு வந்துவிடும். இந்த அளவுக்கு மாடுகளுக்குப் பயிற்சியானது இருக்க வேண்டும்.

இன்று கமலைப் பாசனம் என்பது அரிதாகி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களைத் தவிர முற்றிலும் கமலைப் பாசனம் கரைந்து விட்டது. கமலைப் பாசனத்தில் நீடித்த தன்மை உள்ளது. கமலையின் இறைக்கும் அளவும், கிணற்றில் ஊறும் தண்ணீரின் அளவும் சரியாக இருக்கும். கமலையில் ஒரு முறை இறைக்கும் தண்ணீர் நிலத்தில் ஒரு சால் பாயும் அளவிற்கு இருக்கும். காலப்போக்கில், கமலைக் கரைந்து மின்சார மோட்டார் பாசனத்துக்கு வந்த பிறகு விவசாய சங்கிலியில் மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்தன. Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠