Wednesday 28 February 2018


குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக் கொடுங்கள்!


காவிரியில் தண்ணீர்விட கர்நாடகா மறுப்பு. தமிழகம் எங்கும் வரலாறு காணாத வறட்சி. கடன் தொல்லை. வாடும் பயிர்களை கண்டு நிலத்திலேயே விழுந்து மரணம், தற்கொலை என்று விவசாயிகளின் வாழ்வு முன்னெப்போதை காட்டிலும் நம் மாநிலத்தில் படுமோசமாக மாறியிருக்கிறது.“நாம் இயற்கையோடு ஒன்றிவாழ மறந்துவிட்டோம். நம்முடைய நிலத்தில் பலவிதமான கனிமங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. ரசாயனங்கள் போட்டு அவற்றை அழித்துவிட்டோம். மறுபடியும் அதற்கு உயிர் கொடுக்க இயற்கை வேளாண்மை அவசியம். விவசாயத்தின் அத்தியாவசியம் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அதைவிட முக்கியம். அவர்கள் விவசாயம் செய்யப் போகிறார்களோ இல்லையோ, அது குறித்த விழிப்புணர்வோடு இருக்கும் பட்சத்தில்தான் நம் மண்ணை காக்க முடியும்” என்கிறார் நளினி.

பெங்களூரில் வசிக்கும் நளினி, நகர்ப்புறங்களிலும் விவசாயம் செய்ய முடியும் என்கிறார். இதன் மூலமாக நகரங்களை பசுமையாக வைத்துக் கொள்வதோடு இல்லாமல், விவசாயம் என்கிற மனிதகுலத்தின் அடிப்படைத் தொழில் அழியாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிற நோக்கத்தோடு செயல்படுகிறார்.“என்னோட சொந்த ஊர் கன்னியாகுமரி. அங்கேதான் பிறந்து வளர்ந்தேன். பசேல் என்று பசுமையும், எங்கு பார்த்தாலும் சில்லென்று நீரும் நிறைந்திருக்கும் மாவட்டம். அங்கு எப்போதுமே மூணு போகம் நெல் விளையும். வீட்டை விட்டு வெளியே வந்துப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல்னு நெல்வயல். தாத்தா வோடு வயலுக்கு போவேன். களை எடுப்பேன். வரப்பை சீர் செய்வேன். இப்படியாக விவசாய சூழலில்தான் குழந்தையிலிருந்தே வளர்ந்தேன். முன்னாடியெல்லாம்

இப்படி தான் எல்லாரும் வயலும் வாழ்வுமாக வளர்ந்தோம். துரதிருஷ்டவசமா கடந்த சில காலமா அப்படிப்பட்ட வாய்ப்பை நாம குழந்தைகளுக்கு தர முடியறதில்லை.நான் கல்லூரியில் பாடமா எடுத்துப் படிச்சதும் விவசாயம்தான். எங்க தொழில் விவசாயம்தான் என்றாலும் எனக்கு முன்பு யாரும் விவசாயத்தை கல்வியாக பயிலவில்லை. நான் படிக்குறப்போ ரசாயன தொழில் முறை விவசாயத்தைதான் கல்லூரியில் சொல்லிக் கொடுத்தாங்க. அதனாலே எனக்கும் அந்த நவீன தொழில்நுட்பம்தான் நம்ம வேளாண்மையை காக்கும் என்கிற எண்ணம் இருந்துச்சி. 2004-ஆம் ஆண்டை யார் மறக்குறாங்களோ இல்லையோ மீனவர்களும், கடலோர மாவட்டங்களில் விவசாயம் செய்து கொண்டிருந்த வேளாண்குடி மக்களும் மறக்கவே மாட்டாங்க. முற்றிலுமா நம்ம விவசாயத்தை சீர்குலைத்த இயற்கைப் பேரழிவு அது. உப்புநீர் புகுந்து வயலெல்லாம் வீணாகிச்சி. மறுபடியும் நம்முடைய வயல்களை restore செய்யக்கூடிய திட்டத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அப்போதான் இயற்கை முறையில் விவசாயம் செய்யக்கூடியவர்களின் அறிமுகமும் கிடைச்சுது.

எனக்கு இந்த அனுபவங்கள்அடிப்படையில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. டாக்டர்நம்மாழ்வார் அவர்களோட நிலத்தில் வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பும் கிடைச்சுது. அங்கேதான் இயற்கை சார்ந்த வேளாண்மை என்பதைப் பற்றிய பல தொழில்நுட்பங்களை கத்துக்கிட்டேன். ரசாயனம் இல்லாத விவசாயம்தான் என்னோட கனவு. என்னோட எதிர்காலமும் அதுதான்னு முடிவெடுத்தேன்.குடும்பச்சூழல் காரணமா பெங்களூருக்கு குடிபெயர வேண்டிய நிலைமை. இது ரொம்ப ஆடம்பரமான நகரம். இங்கே எப்படி நம்மால் விவசாயம் செய்ய முடியும்னு மலைச்சுப் போய் நின்னேன். இப்படிப்பட்ட குழப்பத்தில் இருந்தப்போதான் விஷ்வநாத் கடூர் என்பவரோட அறிமுகம் கிடைச்சுது. இவர் பெங்களூரில் முதன் முறையாக மொட்டை மாடியில் இயற்கை முறையில் தோட்டங்கள் அமைத்து வளர்த்தவர். தொழில்நுட்பரீதியா அவர் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.

இதற்கிடையே குழந்தை வளர்ப்புங்கிற கடமை இருந்ததால், ஒரு வருஷம் வேறு எதிலும் ஈடுபாடு காட்ட முடியலை. இருந்தாலும் மனசுக்குள்ளே ‘விவசாயி...’ங்கிற எம்.ஜி.ஆர் பாட்டு ஒலிச்சிக்கிட்டேதான் இருந்தது. மொட்டை மாடியில் தோட்டம் போடணும், அதுக்கு என்னென்ன செய்யணும்னுலாம் தெரியும். ஆனா, ஆரம்பிக்க முடியாம ஏதோ ஒரு தடங்கல் அடுத்தடுத்து வந்துக்கிட்டே இருந்தது.என்னோட ராசியோ என்னமோ தெரியலை. இதுமாதிரி நான் தடுமாறுகிற நேரத்தில் எல்லாம் யாராவது அவதாரம் எடுத்து எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. மாடியில் தோட்டம் வைக்கலாம், ஆனா அதை தொழிலா செய்ய முடியுமான்னு எனக்கு டவுட்டு இருந்துச்சி. என்னோட அப்பா அரசு ஊழியர். எங்க வீட்டில் யாருக்கும் சுயதொழில் செஞ்சி பழக்கமில்லை. அப்போதான் ஒருநாள் ராதா ஈஸ்வர் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். என்னோட பயோடேட்டாவை அவர் இன்டர்நெட்டில் பார்த்திருக்கிறார். அவரோட நிறுவனத்தோடு சேர்ந்து இயங்க முடியுமா என்று கேட்டார். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்படிதான் ஆர்டி பிளான்ட்ஸ் என்கிற நிறுவனத்தில் இணைந்தேன்.

இந்த கம்பெனியைப் பத்தி சொல்லணும்னா, இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்கிற சமூகநலன் சார்ந்த நிறுவனம். இதுபற்றி விழிப்புணர்ச்சி முகாம் நடத்தி, நகரத்தில் இருப்பவர்களையும் ஹாபியாவோ அல்லது தொழிலாவோ இயற்கை விவசாயத்தில் ஈடுபடவைக்கிறது இவங்களோட முக்கியமான நோக்கமா இருந்தது.நகரத்தில் நிலம் கிடையாது. மொட்டை மாடிதான் இருக்கு. அங்கே செடி, கொடிகளை எல்லாம் வளர்க்கணும்னா என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது அனுபவப்பூர்வமா எங்களுக்கே தெரிஞ்சிருக்கணும். அதனாலே முதலில் நாங்களே பயிரிட்டு இந்த அனுபவத்தை பெற்றோம். முதலில் இருநூறு தொட்டி வாங்கி அதில் காய் கறிகளை கொடுக்கக்கூடிய பயிர்களை வளர்த்தோம். காய்கறிகள் நிலத்தில் விளைவதை போலவே தொட்டியிலும் வளரணும். தொட்டியில் வளர்த்தாலும் ‘விவசாய ஃபீலிங்’ மாடர்னா இருந்துடக் கூடாதுன்னு மெனக்கெட்டோம். அடுத்து நம்ம வீட்டுக்கு தேவையான காய்கறிகளை கடையில் வாங்காம நம்ம தோட்டத்திலிருந்தே எடுத்து தன்னிறைவு பெறணும் என்கிற ஸ்ட்ராட்டஜி. நம்ம வீடுகளிலேயே இதை செய்கிறோம் என்பதால், இதில் குழந்தைகளையும் ஈடுபடுத்தினால் அடுத்த தலைமுறைக்கு விவசாயம் குறித்த நேசமும்,விழிப்புணர்வும் வரும் என்கிற எதிர்கால பயன்பாடு.

ஏன்னா, இப்போ டிவி, கம்ப்யூட்டர்னு அடிக்ட் ஆகிட்ட குழந்தைகளுக்கு செடி, கொடி, பூ, கனி பற்றியெல்லாம் பெருசா விழிப்புணர்வு இல்லை. அவங்களுக்கு இந்த உணர்வு வந்தாதான் நம்ம மண் குறித்த பாசம் இருக்கும். தக்காளியை தெரியும். அது காய்க்கிற செடி எப்படி இருக்கும்னுகூட நகரத்தில் வளர்கிற குழந்தைக்கு தெரிவதில்லை. அந்த செடி விதையிலிருந்து முளைத்து, வளர்ந்து, பூத்து, காய்த்து நமக்கு பலன் கொடுக்கிறதை அவங்க ‘லைவ்’வா பார்க்கணும். இதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியா அவங்களுக்கு நாம மாத்திட்டோம்னா போதும். இயற்கையோடு ஒன்றி ரசனையான வாழ்க்கையை வாழ்வார்கள். குறிப்பா எட்டு வயசுலே இருந்து பதினாலு வயசுக்குள்ளே இந்த உணர்வை அவங்களுக்கு ஏற்படுத்திட்டோம்னா வாழ்நாள் முழுக்க பார்ட்டைம் விவசாயியா அவங்களே மாறிடுவாங்க.

அப்போதான் யாராவது நிழலும், காற்றும் தருகிற மரத்தை அனாவசியமா ரோட்டுலே வெட்டுனா தடுத்து நிறுத்தணுங்கிற சமூக உணர்வு அவங்களுக்கு வரும்.இந்த உணர்வை நாம ஸ்கூலில் கத்துக் கொடுப்பாங்கன்னு எதிர்ப்பார்க்க முடியாது. வீட்டில் இருந்துதான் பழக்கணும். நாம அமைக்கிற தோட்டத்துக்கு விதை போடுறது, தண்ணீர் ஊத்துறது, களை பிடுங்கிறது மாதிரி சின்னச் சின்ன வேலைகளை அவங்க பொறுப்புலே கொடுத்துட்டோம்னா அவங்க மனநிலையில் நல்ல மாற்றத்தை காண முடியும். தன்னால் வளர்ந்த செடி, தன்னால் பூத்த பூ, தன்னால் காய்த்த காய் என்பதெல்லாம் அவங்களுக்கு கொடுக்கக்கூடிய மகிழ்ச்சி அளவில்லாதது. அவங்க மனநிலையும் ஆரோக்கியமா இருக்கும். செடி வளர்க்கத் தெரிஞ்சவனுக்கு நிறைய சகிப்புத்தன்மை இருக்கும். பொறுமையா சிந்திப்பான். ஆரோக்கியமா இருக்குறதை பத்தி யோசிப்பான். இதெல்லாம் சைக்காலஜிக்கலாவும் அவங்களை நல்ல குடிமகனா மாற்றும்” என்று மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே இருந்தவரை இடைமறித்தோம்.“சரி. மொட்டை மாடியில் தோட்டம் போடுவது பற்றி கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்.”

“ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாதான் இருக்கும். மண் நிறைந்த தொட்டியை தூக்கி வைக்கிறதெல்லாம் கொஞ்சம் உடலுழைப்பை கோருகிற வேலை. தொட்டியில் மண்ணுக்கு பதிலாக coir pith (தேங்காய்நார் மற்றும் மரத்தூள் கொண்டு தயாரிக்கப்பட்ட மண் மாதிரியான கலவை) பயன்படுத்துவது நல்லது.அடிப்படையில் மண் தொட்டிதான் நல்லது. எனினும் வெயில் காலத்தில் தொட்டியோட ஈரப்பதம் சீக்கிரமே வரண்டு போயிடும். இப்போ கான்க்ரீட், ரீயூஸ்டு பிளாஸ்டிக் தொட்டிகள் நர்சரிகளில் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.மொட்டை மாடியில் தோட்டம் போட்டா பில்டிங் வீக் ஆயிடும் என்று பொதுக்கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து. ஒரு மாடி மேலே வீடே கட்டமுடியும், அவ்வளவு வெயிட்டை தாங்கும் எனும்போது செடிகளையும், தொட்டிகளையும் தாங்காதா? மாடியோட தரையில் ரொம்ப ஈரக்கசிவு இல்லாம பார்த்துக்கிட்டா போதும். தேவைப்பட்டா சீலிங்கில் வாட்டர் ப்ரூஃப் பெயின்ட் அடிச்சிக்கலாம். இல்லேன்னா தொட்டியை சின்ன தட்டு மேலே வைக்கலாம். அந்த தட்டிலும் கொஞ்சம் மண் பரப்பிட்டோம்னா அதுலேயும் கீரையோ, கொத்தமல்லியோ வளர்க்கலாம். ஜியோ டெக்ஸ்டைல் மேட் விக்குது. இது தொட்டியில் இருந்து வேளியேறக்கூடிய கூடுதல் தண்ணீரை தரையில் படியாமல் பாதுகாக்கும். கொஞ்சம் காஸ்ட்லியா செலவு செய்ய நினைப்பவர்கள் செல்ஃப் கன்டெயினர் தொட்டிகளையே கூட செடி வளர்க்க பயன்படுத்தலாம். தேவையான தண்ணீரை மட்டும் செடி உறிஞ்சிக்கிற மாதிரி அமைக்கப்படுகிற ஹைடெக் தொட்டி இது.அப்புறம் தண்ணீர் பாய்ச்ச அட்வான்ஸ்ட் டெக்னிக் முறை ஒண்ணு இருக்கு. டிர்ப் மெத்தட். வாட்டர் டேங்கை சின்னச் சின்ன ட்யூப் மூலமா தொட்டிக்கு கனெக்ட் பண்ணுறது. செடிக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை மட்டும் அது எடுக்கும்.வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற காய்கறி கழிவுகளை இந்த தொட்டிகளில் உரமா கொட்டலாம். அதுக்கு மேலே இலை, தழைகளை போட்டோம்னா போதும். அப்படியே மக்கி மண்ணோட ஊட்டச்சத்து அதிகரிக்கும். மண்ணோட வளமும்அதிகரிச்சிக்கிட்டே போகும்.”

“நீங்க டிரைனிங் தருகிறீர்களா?”

“ஆமாம். சொல்லிக் கொடுக்கிறோம். இயற்கை விவசாயம் மட்டுமே நிரந்தரம். ரசாயனங்களோட பலன் தற்காலிகமானது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம். இதைப்பற்றி விவசாயிகளிடம் நிறைய பேசுகிறோம். எங்களோட டெக்னிக்குகளை பயன்படுத்தி விவசாயம் செய்கிறவர்களோட விளை பொருட்களை விற்கவும் உதவுகிறோம். கடந்த ஒரு வருஷத்துலே மட்டுமே நூறு பேரை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியிருக்கிறோம்.நிலத்தில் பயிர் செய்பவர்கள் ஒரே பயிரை திரும்பத் திரும்பச் செய்யக்கூடாது. ஒரு முறை தக்காளி போட்டா, அடுத்த முறை கத்தரி போடலாம். ஏன்னா, தக்காளி செடியை பாதிக்கக்கூடிய பூச்சிகள் அந்த மண்ணுலே செட்டில் ஆகியிருக்கும். அடுத்த முறையும் தக்காளிதான்னா இந்த பூச்சிகளால் மகசூல் குறையும். ஆனா கத்தரியோ, வெண்டையோ போட்டுட்டோம்னா பூச்சிகள் ஏமாந்துடும்.

அடுத்தக்கட்டமா பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் விவசாயம் செய்யணும்னு விழிப்புணர்வு ஏற்படுத்தறதா இருக்கோம். ஒவ்வொரு பள்ளியிலும் பெரிய தோட்டம், காய்கறிகள் விளையுதுன்னு சும்மா கற்பனை பண்ணிப் பார்த்தாலே அவ்வளவு
சந்தோஷமா இருக்கில்லே?இப்போதைக்கு பெங்களூரில்தான் நாங்க செஞ்சிக்கிட்டிருக்கோம். விரைவில் சென்னை மற்றும் மும்பையிலும் செய்கிற திட்டம் இருக்கு. வீட்டுலே சின்னதா இடம் இருந்தா எப்படி தோட்டம் அமைக்கிறதுன்னு பயிற்சி கொடுக்கறோம். எங்களோட பயிற்சி பெற்றவர்கள், உங்க வீட்டுக்கே வந்து டிரைனிங் கொடுப்பாங்க” என்கிறார் நளினி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்று பராமரிப்பு கேள்வி பதில்கள் :


கேள்வி : 

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட்டுவிட வேண்டும்?

பதில் : 

கன்று பிறந்து பதினைந்து நாட்களுக்குள் கொம்பை சுட்டுவிடுவது நல்லது. காரணம், முதல் இரண்டு, மூன்று வாரங்களில் கொம்பை சுட்டுவிடும் போது அதற்கு வேதனை தெரியாமல் இருக்கும். மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட காலங்களில் செய்யும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்கும். பொதுவாக நிறைய மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளுக்கு இடையே சண்டை வந்து, கொம்பை உடைத்துக் கொள்வதை தவிர்க்கவே கொம்பை சுடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள் ஒன்றிண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கொம்பை சுடுவது அவசியமில்லை.

கேள்வி : 

ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?

பதில் : 

பாண்டிகைண்ட் என்ற மருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நன்றாக கொடுங்கள்.

கேள்வி : 

அதிக சீம்பால் குடிப்பதால் பிறந்த கன்றுகளில் ஏற்படும் கழிச்சலை எவ்வாறு தவிர்க்க முடியும்?

பதில் : 

பிறந்த கன்றுகள், வேண்டும் அளவிற்கு சீம்பால் குடிக்க அனுமதித்தல் அவசியமாகும். மேலும், இளங்கன்றுகள் தரையில் உள்ள மண் போன்றவற்றை உண்ண அனுமதித்தல் கூடாது. இது போன்ற காரணங்களால் கன்றுகளுக்கு கழிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆதாரம் : கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday 25 February 2018

கால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை :

1. கால்நடை பராமரிப்பு
2. வழிமுறைகள்

கால்நடை பராமரிப்பு :

விவசாயிகளின் உயிர்த் தோழனாகவும், விவசாயம் பொய்த்துப் போகும்போதும் அவர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் சிறப்பு பெற்றவை கால்நடைகள். ஆடு, மாடு, என விவசாய பணிகளோடு இணைந்துள்ள கால்நடைகளுக்கு தற்போது புதிது புதிதாய் நோய்கள் தாக்குவது விவசாயிகளை அச்சப்படுத்தி வருகிறது.

அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோமாரி போன்ற கால்நடைகளுக்கான நோய்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையே தொடர்கிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

வழிமுறைகள் :

கால்நடைகளுக்கு அன்றாடத் தேவைக்குண்டான அடர்தீவனம், பசுந்தீவனம் போதுமான தண்ணீர் கொடுத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் நமக்கிருக்கிறது. அதேபோல் கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பாரம்பரியமாக நாம் கையாண்டு வந்த வழிமுறைகளைத் தெரிந்து, அவற்றைப் பின்பற்றுவது நலம் பயக்கும். அந்த வகையில், கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மூலிகை மசால் உருண்டை.

ஆடு, மாடு போன்ற கால்நடை களுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களும் தாக்காது. சாப்பிடுகின்ற தீனி எளிதில் ஜீரணமாகும். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

1. அருகம்புல்

2. ஆவாரம் பூ இலை

3. வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கண்ணி

4. சோற்றுக்கற்றாழை

5. ஆடாதோடா

6. வாத நாராயணன் இலை

7. ஓரிதழ் தாமரை

8. செம்பருத்தி

9. தும்பை

10. அழுதாழை

11. பெரியா நங்கை

12. சிறியா நங்கை

13. அமுக்காரா

14. அம்மாள் பச்சரிசி

15. வாழைப்பூ

16. வெற்றிலை

17. பிரண்டை

18. துத்தி

19. மாவிலை

20. வல்லாரை

21. துளசி

22.முடக்கறுத்தான்

23. மணத்தக்காளி

24. புதினா

25. நெருஞ்சி

26. நெல்லிக்காய்

27. நுணா

28. பொன்னாங்கண்ணி

29. நல்வேளை

30. நாய்வேளை

31. பால்பெருக்கி

32. குப்பைமேனி

33. கோவை இலை

34. மொசு மொசுக்கை

35. கருவேப்பிலை

36. கீழாநெல்லி

37. அகத்தி

38. சரக்கொன்றை

39. நிலவேம்பு

40. வேலிப்பருத்தி

41. வெட்டிவேர்

42. மருதாணி

43. வில்வஇலை

44. விஷ்ணுகிரந்தி

45. மாதுளம் பழம் தோல்

46. தவசி முருங்கை

47. அப்பக்கோவை

48. அல்லி

49. தாமரை

50. அரசு இலை

51. வேப்பிலை

52. தூதுவாளை

53. தொட்டாச்சிணுங்கி

54. எலுமிச்சை இலை

55. கொய்யா இலை

56. ஆல் இலை

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

போன்ற மூலிகைகள் மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும்.

மேலும்,

1. சுக்கு

2. மிளகு

3. திப்பிலி

4. பூண்டு

5. அகில்

6. மிளகாய் வற்றல்

7. கிராம்பு

8. ஜாதிக்காய்

9. கடுக்காய்

10. வெந்தயம்

11. அதிமதுரம்

12. சீரகம்

13. கசகசா

14. ஓமம்

15. உப்பு

16. தண்ணீர் விட்டான் கிழங்கு

17. சிறிய வெங்காயம்

18. கொத்தமல்லி விதை

19. பெருங்காயம்

20. தேங்காய்

21. பனைவெல்லம்

22. ஏலக்காய்

23. மஞ்சள்தூள்

ஆகிய சமையலறைப் பொருள்களும் தேவைப்படும். மூலிகைச் செடிகளை தனியாகவும், சமையலறைப் பொருள்களை தனியாகவும் மிக்ஸி, கிரைண்டரில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து ஆரஞ்சுப் பழ அளவிற்கு உருட்டிக் கொண்டு மஞ்சள் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் மூலிகைகளைக் கொண்டே அந்த மூலிகை மசால் உருண்டைகளாய் தயார் செய்து கொள்ளலாம். மூலிகைகள் கிடைக்கும் பொழுது அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்

ஆதாரம் : ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளை

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm