Wednesday 29 November 2017

உடல் இயக்க நிலைமாறும் மாடுகளுக்கான தீவன மேலாண்மை :

1. உடல் இயக்க நிலை மாற்றம்

(i) கன்று ஈனுவதற்கு முன்பு தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும்.
(ii) கன்று ஈன்றவுடன் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்
(iii) ஊட்டச்சத்துத் தேவை அதிகரிக்கும்
(iv) உடல் கொழுப்பு சத்து குறையும்
(v) அமிலத் தன்மை ஏற்படும்
(vi) தாதுச்சத்து பிரச்சனை ஏற்படும்

2. உடல் நலப் பாதிப்பு
3. சினைக்கு வருவதில் தாமதம்

கறவை மாடுகள் உடல் இயக்க நிலை மாறும் சமயம் சிறப்புத் தீவன மேலாண்மை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். மாடுகளில் பால்கரம், மடிவீக்கம், கன்று ஈன்று பின்பு சினைக்கு வருவதில் தாமதம், கீடோசிஸ் நஞ்சுக்கொடி விழாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மாடுகள் உடல் இயக்க நிலைமாறும் தருணம் சரியான தீவன மேலாண்மை செய்யப்படாததும் ஒரு முக்கியக் காரணமாகும். நிலைமாறும் மாடுகளுக்கு சிறப்பு தீவன மேலாண்மை செய்யும் முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

உடல் இயக்க நிலை மாற்றம் :

கறவை மாடுகள் கன்று ஈன்ற 2 – 3 வாரங்கள் முதல் கன்று ஈன்ற பின் 2 – 3 வாரங்கள் வரையிலான சமயத்தில் அவற்றின் உடல் இயக்கத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. நிறை சினைப் பருவம் முடிவடையும் நிலையிலிருந்து கன்று ஈனும் நிலைக்கு அவை மாறுகின்றன. இவ்விதம் பல நிலைகளுக்கு ஏற்ப அவற்றின் உடல் இயக்க நிலை மாறுகின்றது. இந்த உடல் இயக்க நிலை மாறும் காலகட்டத்தில் அவற்றிற்கு சிறப்புத் தீவன மேலாண்மை செய்வது மிக மிக அவசியம். இச்சமயத்தில் கறவை மாடுகள் ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்தும் விதம் வளர்சிதை மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் மாறுதல்கள் கறவை மாடுகளின் உற்பத்தித் திறனையும் பெருமளவு பாதிக்கும். இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. உடல் இயக்க நிலை மாறும் காலங்களில் மாடுகள் உட்கொள்ளும் தீவன அளவில் பெருத்த மாற்றம் ஏற்படும்.

(i) கன்று ஈனுவதற்கு முன்பு தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும்.

கன்று ஈனுவதற்கு முன்பு உடல் இயக்க நிலைமாறும் மாடுகள் உட்கொள்ளும் மொத்தத் தீவனத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும். மாடுகளில் பால் வற்றும் சமயம் அவை உடல் எடையில் ஏறத்தாழ 2.0 – 3.0 விழுக்காடாகவும் உலர் நிலை தீவனம் உட்கொண்டிருந்தால் கன்று ஈன 8 – 10 நாட்கள் முன்பிருந்து (நிலை மாறும் காலகட்டத்தில்) 1.5 விழுக்காடு அளவிற்கு மிக அதிவேகத்தில் இது குறைந்து விடும்.

(ii) கன்று ஈன்றவுடன் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்.

கன்று ஈன்றவுடன் மாடுகள் உட்கொள்ளும் மொத்தத் தீவன அளவு மிக வேகமாக ஒரு வாரத்திற்கு ஏறத்தாழ 2.5 கிலோ அளவு வரை அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு வேகம் முதல் ஈற்றில் கன்று ஈன்ற மாடுகளில் அதிகமாகவும் பல ஈற்றுகளில் கன்று ஈன்ற மாடுகளில் சற்று குறைவாகவும் இருக்கும். நன்கு தீவனப் பராமரிப்பு செய்யப்படும் மாடுகளில் கன்று ஈன்ற 2 வாரத்தில் அதன் தீவனம் உட்கொள்ளும் அளவு 80 – 90 விழுக்காடு வரை அதிகரிக்க வேண்டும்.

(iii) ஊட்டச்சத்துத் தேவை அதிகரிக்கும்

உடல் இயக்க மாற்றம் ஏற்படும் காலங்களில் கன்று ஈனுவதற்கு முன்பும் பின்பும் அவற்றின் ஊட்டசத்துத் தேவையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். கன்று ஈன்று 2 -3 வாரங்களில் கர்ப்பப்பையில் உள்ள கன்றின் வளர்ச்சி மற்றும் அதைச் சுற்றி உள்ள நஞ்சுக்கொடியின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இதனால் அவற்றின் ஊட்டச்சத்துத் தேவையும் அதிகரிக்கும். இதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு சினை மாட்டிற்கு வளர்சிதை மாற்றப் புரதச்சத்து சுமார் 360 கிராமும் 3.5 நிகர எரிசத்தும் தேவைப்படுகின்றன.

(iv) உடல் கொழுப்பு சத்து குறையும்

கன்று ஈனுவதற்கு முன்பு நிலைமாறும் மாடுகளின் கர்ப்பப்பையில் கன்று மற்றும் கன்றைச் சுற்றியுள்ள நஞ்சுக்கொடி போன்றவை வேகமாக வளரவும் பால் மடி பால் சுரப்பை ஆரம்பிக்கவும் பல்வேறு கனநீர் மாற்றங்கள் மாடுகளின் உடலில் ஏற்பட்டு மாடுகளில் பசியின் அளவு குறையும் இதனால் மாடுகளின் உடலில் ஏற்கனவே சேமிப்பாகப் படிந்திருக்கும் கொழுப்பு சத்து கரைந்து இரத்தத்தில் கலந்து மாடுகளின் எரிசத்து தேவைக்கு பயன்படுத்தப்படும்.

(v) அமிலத் தன்மை ஏற்படும்

பொதுவாகவே பால் வற்றிய மாடுகள் மேய்ச்சல் மூலமே பராமரிக்கப்பட்டு நார்ச்சத்து மிக்க வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை உட்கொள்கின்றன. எனவே அவற்றின் வயிற்றில் நார்ச்சத்தைச் செரிக்கும் நுண்ணுயிர்கள் பெருகி நார்ச்சத்தை செரிக்கும். இந்த மாடுகள் சினைப்பட்டு கன்று ஈனும் காலம் நெருங்க நெருங்க விவசாயிகள் கலப்புத் தீவனம் அளிக்க முற்படுகின்றனர். இதனால் நார்ச்சத்தைச் செரிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்த மாடுகளின் முதல் வயிற்று சூழலானது கரையும் மாவுச்சத்தைச் செரிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்ததாக உடனடியாக மாற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மாடுகளின் வயிற்றில் அமிலத் தன்மையை ஏற்படுத்தும் லேக்டிக் அமிலம் உற்பத்தியாகும். முதலில் இந்த அமிலம் மிகச் சிறிய அளவிலும் பின்பு இந்த அமிலத்தை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் லேக்டிக் அமில உற்பத்தி கணிசமான அளவில் உயரும். இதனால் மாடுகளின் வயிற்றில் அமிலத் தன்மை ஏற்பட்டுப் பல பிரச்சனைகளும் உருவாகும்.

(iv) தாதுச்சத்து பிரச்சனை ஏற்படும்

உடல் இயக்க நிலை மாற்றம் ஏற்படும் மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தில் சுண்ணாம்பு சத்து மணிச் சத்து சாம்பல் மற்றும் மெக்னீசியம் சத்துகளின் தேவை மாடுகளின் இயல்பான தேவையில் இருந்து மாறுபடுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உடல் நலப் பாதிப்பு :

1. உடல் இயக்க நிலைமாறும் பருவத்தில் மாடுகளில் கீழ்க்காணும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும்.
எரிசத்துப் பிரச்சனைகளால் இரத்தத்தில் கீட்டோன் செறிவு நிலை மற்றும் கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் ஏற்படும்.

2. தாதுச் சத்து பிரச்சனைகளால் நஞ்சுக்கொடி விழாமை பால்சுரும் மடிவீக்கம் போன்றவை ஏற்படும்.

3. நோய் எதிர்ப்பு சத்து குறைப்பாட்டால் மடி நோய் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

இந்த மூன்று நலக் குறைபாடுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும். உதாரணமாகச் சுண்ணாம்புச் சத்து குறைப்பாட்டால் பால் சுரம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து உடல் திசுக்கள் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் கன்று ஈன்ற மாடுகளின் நான்காவது வயிறான செரிமான இரைப்பை இடம்பெயரும் நிலையும் ஏற்படும். நஞ்சுக்கொடி விழாத பிரச்சனை சுமார் 11 – 18 விழுக்காடு மாடுகளில் காணப்படுகிறது.

முதிர்ந்த வயதுடைய மாடுகள் இளம் மாடுகளை விட நஞ்சுக்கொடி விழாமை பால்சுரம் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் பாதிப்படைகின்றன.

சினைக்கு வருவதில் தாமதம் :

நிலைமாறும் மாடுகளில் எரிசத்துக் பற்றாக்குறை ஏற்பட்டால் கன்று ஈனுவதற்கும் முதல் முட்டை உருவாவதற்கும் உள்ள இடைவெளி அதிகமாகும். இதனால் கன்று ஈன்ற பின்பு முதல் முறையாக மாடுகள் சினைக்கு வருவதில் தாமதம் ஏற்படும்.

நிலைமாறும் மாடுகளில் கன்று ஈனுவதற்கு 2-3 வாரம் முதற்கொண்டு கருவில் வளரும் கன்றுக்கும் கன்று ஈன்ற பின்பு ஏற்படும் பால் சுரப்பிற்கும் அதிக அளவில் குளுக்கோஸ் தேவைப்படுகின்றது. கர்ப்பப்பையில் வளரும் கன்று தன் குளுக்கோஸ் தேவையில் சுமார் 46 விழுக்காட்டை தாயின் இரத்தத்தின் மூலம் பெறுகின்றது. கன்று ஈன்ற பின் தாயின் ஒவ்வொரு 10 லிட்டர் பால் சுரப்பிற்கும் நாள்தோறும் சுமார் 600 – 650 கிராம் குளுக்கோஸ் தேவைப்படுகின்றது. எனவே நிலைமாறும் காலங்களில் குறிப்பாக மாடுகளின் சினைப்பருவம் முடியும் சமயமும் பால் சுரப்பு ஆரம்பிக்கும் சமயமும் மாடுகளின் கல்லீரல் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி உடலின் பிற உள்ளுறுப்புகளின் குளுக்கோஸ் தேவையை சிக்கன நடவடிக்கைக்காக மிகவும் குறைக்க வேண்டும். இவ்விதமாக கன்று ஈன்ற பின் மாடுகள் சினைக்கு வரும் கால அளவு நீண்டு விடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 27 November 2017

கோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முறைகள் :

1. மேய்ச்சல் தரைகளின் பராமரிப்பு
2. மேய்ச்சல் பராமரிப்பு
3. மேய்ச்சலுடன் தீவனம்
4. கோடைக் காலத்தில் கால்நடைப் பண்ணைக் கழிவுகள் மேலாண்மை
5. மட்கு உரம் தயாரித்தல்
6. கோயமுத்தூர் கம்போஸ்ட் தயாரிக்கும் முறை
7. வின்ட்ரோ முறை மட்கு உரம்
8. மண்புழு உர உற்பத்தி முறைகள்
9. மண்புழு உரம் தயாரிப்பதற்கு கழிவுகளைத் தேர்ந்தெடுத்தல்
10. சாண எரிவாயு கலனைப் பராமரிக்கும் முறைகள்
11. அசோலாச் சாகுபடி
12. எளிய முறையில் அசோலாத் தொட்டி அமைக்கும் முறை
13. செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் கழிவு மேலாண்மை
14. கோழி எரு மேலாண்மை

பெரும்பாலான கால்நடைகள் குறிப்பாகச் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் முழுக்க முழுக்க மேய்ச்சலையே நம்பி இருக்கின்றன. கோடைக்காலங்களில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்களின் தரம் மற்றும் அளவு வெகுவாகப் பாதிக்கப்படுவதால் கோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மேய்ச்சல் தரைகளின் பராமரிப்பு :

கோடைக்காலங்களிலும் மேய்ச்சல் தரைகளின் தரத்தை மேம்படுத்த மேய்ச்சல் நிலங்களில் சரியான நீர்ப்படிப்பு மேலாண்மை உத்திகளைக் கையாள வேண்டும். மழைக் காலங்களில் மழை நீர் விரயமாவதைத் தவிர்க்க மேய்ச்சல் நிலங்களில் வரப்புகளை அமைக்கலாம். தண்ணீர் வீணாகாமல் தடுக்கத் தடுப்பணைகள் அமைக்கலாம். மேலும், மண் அரிப்பைத் தவிர்க்க வெட்டிவேர் போன்ற புல்வகைகளை வளர்க்கலாம். மேய்ச்சல் நிலங்களில் மழைக்காலங்களில் கொழுக்கட்டைப்புல் மற்றும் ஸ்டைலோ விதைகளைத் தூவி விட வேண்டும். இவ்வகைப் புற்கள் அதிக இளவு வெப்பத்தைத்தாங்கி வளரும் திறன் கொண்டவை. எனவே, கோடைக் காலங்களிலும் ஓரளவு வளர்ந்து மேய்ச்சலுக்கு பயன்படும்படியாக இருக்கும். மேலும் மேய்ச்சல் நிலங்களில் ஆங்காங்கே உதியன், வேம்பு, புளி போன்ற மரங்களை வளர்த்துப் பராமரிப்பதன் மூலமாகக் கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான நிழலைத் தருவதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்குத் தேவையான பசுந்தீவனங்களையும் பெற்றுக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் நிலவும் கடும் வெப்பத்தினால் நீர் நிலைகள் வறண்டு விடும். ஊரில் தண்ணீர் தேங்கிய சிறிய குட்டையிலேயே எல்லாக் கால்நடைகளும் நீர் அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் அந்நீரின் தரம் குறைந்து காணப்படும். எனவே இந்நீர்நிலைகளில் காற்றூதிகளின் மூலம் காற்றைச் செலுத்தி நீரின் தரத்தை மேம்படுத்தலாம். மேலும் கோடைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் ஆங்காங்கே மர நிழல்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்காலம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மேய்ச்சல் பராமரிப்பு :

கோடைக்காலங்களில் கால்நடைகளைக் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் பகற்பொழுதில் மேய்ச்சலைத் தவிர்க்க வேண்டும். மேய்ச்சல் தரையில் முதலில் வெள்ளாடுகளை மேயவிட்டுப் பின்பு மெம்மறியாடுகளை மேய விடுதல் சிறப்பு. சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றினால் மேய்ச்சல் நிலத்தில் ஓரளவு தரமான புற்கள் வளர்வது உறுதி செய்யப்படுவதோடு புற்கள் சேதமடைவதும் தவிர்க்கப்படுகிறது. மேய்ச்சலின் போது மர நிழல்களில் ஆடுகளுக்கு ஓய்வளித்து மரத்தழைகளைப் பறித்து அளிக்கலாம். மேய்ச்சல் முறை பராமரிப்பின் மூலமாகக் கால்நடைகளிலிருந்து வெளிப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வு முறைகள் தெரிவிக்கின்றன. கால்நடைகளைக் கொட்டிலில் முறையில் பராமரிப்பதால் தீவனச் செலவு பெருமளவு குறைவதோடு பசுமை வீட்டு வாயுக்களும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.

மேய்ச்சலுடன் தீவனம் :

கோடைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்களின் அளவு மற்றும் தரம் குறைந்து விடுவதால் மேய்ச்சலையே நம்பி இருக்கும் செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் வளர்ச்சி விகிதம் மற்றும் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. கோடைக்காலங்களில் ஆடுகளின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தப் பெட்டை மற்றும் பொலிகிடாக்களுக்குத் தரமான உலர் தீவனங்கள் மற்றும் அடர்தீவனங்கள் அளிக்க வேண்டும். அதே போன்று குட்டி ஈன்ற பெட்டை ஆடுகளுக்கும் தரமான அடர்தீவனத்தை நாளுக்கு 200 கிராம் என்ற அளவிலாவது அளிக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் பயிர் அறுவடையின் போது கிடைக்கும் வேளாண் பொருள்களையும், வேளாண் உபபொருள்களையும் ஆடுகளுக்கு அளிப்பதன் மூலம் கோடையில் நிலவும் தீவனப்பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யலாம். மேற்கூறிய கோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக மேய்ச்சலை நம்பி இருக்கும் கால்கடைகளில் கோடைக்காலத்தில் ஏற்படும் உற்பத்திக் குறைவைச் சரிசெய்து சீரான வளர்ச்சி மற்றும் உற்பத்தியை உறுதி செய்யலாம்.

கோடைக் காலத்தில் கால்நடைப் பண்ணைக் கழிவுகள் மேலாண்மை :

கால்நடை மற்றும் கோழிப்பண்ணைக் கழிவுகள் வீணாக்கப்பட்ட காலம்மாறி, தற்போது கழிவுகள் அனைத்தும் பயனுள்ள வகையில் கையாளும் முறைகளைப் பண்ணையாளர்கள் கற்று வருகின்றனர். அவை முறையே, திடக்கழிவு மட்கு உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், அசோலா தீவனம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி செய்தல், மின்சாரம் உற்பத்தி, உலர்சாண எரிபொருள் மற்றும் திரவக்கழிவுகளையும் பல்வேறு முறைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபமாக, அதிக முதலீட்டுடன் நடத்தப்படும் பெரிய கோழிப் பண்ணைகள் மற்றும் பன்றிப் பண்ணைகளுக்கு, இறந்த கோழிகள் மற்றம் பன்றிகளிலிருந்து பயோடீசல் உற்பத்தி செய்யும் முறையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் :

கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிறது. சென்னை, வேலூர், திருச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் மிக அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, 19.04.1998 அன்று நாமக்கல் நகரில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதும், அதைத் தொடர்ந்து மிக அதிகமாகக் கோழிகள்; இறக்க நேரிட்டதும் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வாகும். இந்தச் சூழ்நிலை, பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் முதல் வாரம் வரை உணரப்படுகிறது.

கால்நடைகள் மற்றும் கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிப்பது மட்டுமல்லாமல் அதன் உப தொழில்களிலும் கோடைக் காலத்தில் பாதிப்புகள் உணரப்படுகின்றன. கழிவுகள் மேலாண்மையில், குறிப்பிடத்தகுந்த விளைவுகள் இல்லையென்றாலும், அதைச் சார்ந்த சில செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

“ஆட்டு எரு அவ்வருடம், மாட்டெரு மறுவருடம்” போன்ற பழமொழிகள் மற்றும் ஆடு மாடுகளைப் பட்டியமர்த்தி வயல்களை மேம்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வரும் பழக்கம். பால் உற்பத்தியினை அதிகரிக்க அமல்படுத்தப்பட்ட வெண்மைப் புரட்சி மற்றும் அது சார்ந்த கலப்பினச் சேர்க்கை மூலம் நாட்டு மாடு மற்றும் தரமற்ற கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது மற்றும் இயந்திரமயமாக்கல் மூலம் பண்ணைப் பணியில் ஈடுபட்டு வந்த மாடுகளின் தேவை குறைந்ததும் தொழு உரம் பயன்பாட்டில் தொய்வு ஏற்படக் காரணமானது. மேலும், நமது நாட்டில் குறிப்பிட்ட அளவு கால்நடை திடக் கழிவு உலர்த்தப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் பண்ணைத் திடக்கழிவுகள் மிகச்சீரிய முறையில் வீணாக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டாலும் அவற்றின் முழுப் பயன்பாட்டினை நாம் நுகரவில்லை என்றே கூறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மட்கு உரம் தயாரித்தல் :

மட்கு உரம் சாதாரணமான எருவும் :

சாதாரணமாகச் சேமிக்கும் பொழுது கழிவில் உள்ள முக்கியச் சத்தான தழைச்சத்தானது அமோனியாவாக மாறி ஆக்சிசனேற்றம் அடைந்து வளிமண்டலத்தை அடைந்து வீணாகிறது. அதேசமயம் முறையாகச் சேமிக்கப்பட்ட எருக்குறி அல்லது மட்கு உரம் கலன்களில் இந்தத் தழைச்சத்தானது பாக்டிரியா மற்றும் பூஞ்சைச் காளான்களால் உண்ணப்பட்டுத் தாவரச்சத்தாக மாற்றப்படும்.

தரைக்கு மேலும் தரைக்குக் கீழும் கழிவுகளை மட்கச் செய்தல் :

தரைக்குக் கீழ் மட்கச் செய்யும் முறையில் காற்றோட்டம் இல்லா முறையில் மட்கச் செய்யப்படுகிறது. இம்முறை எளிது, பொருள்செலவு குறைவு. ஆனால் மட்குதல் பணி காலதாமதம் அடையும், நீர் நிலைகள் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு. தரைக்கு மேல் மட்கச் செய்யும் முறை காற்றோட்ட முறையில் மட்கச் செய்ய்படுகிறது. இம்முறையில் கழிவுகள் மிக விரைவாக மட்கிவிடும். ஆனால் இம்முறையில் சற்று பொருள் செலவும் பணியாட்கள் செலவும் அதிகம் தேவைப்படுகிறது.

கோடைக்காலத்தில் மட்கு உரம் தயாரிப்பில், உரம் வெகு விரைவில் உலர்ந்து விடுகிறது. இதனால் மட்கு உரம் முதிர்ச்சி அடைவதில் தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க அதன் மீது மிதமான அளவு தண்ணீர் தெளித்து ஈரப்படுத்தினால், மட்கு நிலையில் வெப்பம் உயர்ந்து நல்ல மட்கு உரம் கிடைக்கும். மட்கும் கலவையின் ஈரப்பதம் எப்பொழுதும் 60 விழுக்காடு இருந்தால், மட்குதல் சீராக நடைபெறும். மட்குதல் முதிர்ச்சி அடையும் பொழுது அதன் உள் வெப்பிநிலை மிகவும் குறைந்து காணப்படும்.

கோயமுத்தூர் கம்போஸ்ட் தயாரிக்கும் முறை :

இம்முறையில் கழிவுப்பொருள்களின் அளவிற்குத் தகுந்த அளவு தரைக்கு கீழ் குழி வெட்டப்படுகிறது. இதில் பண்ணைக் கழிவுப் பொருள்கள், தீவனப் கழிவுகள் இடப்பட்டு 5 முதல் 10 கிலோ சாணம் பரப்பபட்டு அதன் மேல் 5 லிட்டர் தண்ணீர் மற்றும் 1 கிலோ எலும்புத்தூள் தூவப்படுகிறது. அடுத்தடுத்த வரிசைகள் குழி நிரம்பும் வரை இதே போல் இடப்படுகிறது. தரைக்கு மேல் முக்கால் மீட்டர் உயரம் வரை இதே போல் கழிவுகள் அடுக்கப்பட்டக் கடைசியாக மண் மற்றும் சாணக் கரைசல் கொண்டு காற்றுப்புகாவண்ணம் நன்கு மெழுகப்படுகிறது. 7 முதல் 10 வாரங்கள் வரை மட்கச் செய்யப்பட்டுப் பின் கலவை நன்கு கலக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் வரை சேமிக்கப்படுகிறது.

வின்ட்ரோ முறை மட்கு உரம் :

இதில் மட்கு உரத்தை வெய்யிலிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாக்க ஒரு கூரை அமைக்கப்பட வேண்டும். இந்த முறையிலும் ஈரப்பதம் சரியான அளவில் (60 விழுக்காடு) இருக்க வேண்டும்.

மண் புழு உரம் தயாரித்தல் :

மண்புழு உரம் ஓர் இயற்கை உரமாகும். பொதுவாக, மண்புழுக்கள் உண்ணும் உணவு பொருள்களில் 5-10 விழுக்காடு மட்டுமே உடல் வளர்ச்சிக்கும் இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்தும். மீதம் உள்ள பொருள்களை மட்கிய கழிவாக வெளியேற்றும். இதுவே மண் புழு உரம் எனப்படுகிறது.

மண்புழு உர உற்பத்தி முறைகள் :

மண்புழு உரம் உற்பத்திக்காக உட்புறத்தின் மேல் வாழக்கூடிய மண்புழு மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் உட்புறத்தில் வாழக்கூடிய மண்புழுவானது மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல.

மண்புழு உர உற்பத்திக்கான இடம் :

மண் புழு உரம் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய முடியும். அதற்கு நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டங்கள் உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்குத் தென்னைக் கீற்றுக் கூரையைப் பயன்படுத்தலாம்.

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள் :

ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவைப் பொறுத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் சாய்வான படிவம் போன்று கட்டப்படவேண்டும். அதிக அளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்புக் குழி அவசியம். ஹாலோ ப்ளாக், செங்கள் இவற்றைப் பயன்படுத்தியும் மேலே சொன்ன முறையில் கட்டமைப்புகள் உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை :

நெல் உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புச் சோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்திற்குப் பரப்பவேண்டும். ஆற்று மணலை உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்திற்குப் பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்தப் படுக்கையின் மேல் 3 செ.மீ. உயரத்திற்குத் தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்குத் தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

மண்புழு உரம் தயாரிப்பதற்கு கழிவுகளைத் தேர்ந்தெடுத்தல் :

கால்நடைக் கழிவுகள் (பன்றி, கோழி மற்றும் ஆட்டுக் கழிவுகளைத் தவிர) பண்ணைக்கழிவுகள். பயிர்க்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், பழம் மற்றும் பூமார்கெட் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலைக் கழிவுகள் இவை அனைத்தும் மண்புழு உரம் தயாரிக்க மிகச் சிறந்தது. மண்புழு உரம் தயாரிப்பதற்கு முன்னதாகக் கால்நடைக் கழிவுகளை நன்றாகச் சூரிய ஒளியில் உலர்த்திட வேண்டும். மற்ற கழிவுகளைச் சாணத்துடன் சேர்த்து இருபது நாள்களுக்கு வைத்திருந்து மக்கவைக்க வேண்டும். அதன் பின் இதனை மண்புழு உரத் தயாரிப்பு படுக்கையில் போட வேண்டும்.

கழிவுகளைப் படுக்கையில் போடும் முறை :

பாதி மக்கிய கழிவுகளை 30 விழுக்காடு கால்நடைக் கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உரக் கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 விழுக்காடு இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாகப் பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 0.5 மீட்டர் உயரத்திற்கு ஒரு கிலோ மண்புழு (1000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மண்புழு உர அறுவடை செய்முறை :

தொட்டி முறையில், மண்புழு உரப் படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவினை அறுவடை செய்யவேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினைச் சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம்வரை செய்ய வேண்டும்.

கோடைக்காலத்தில், உரத் தொட்டியில் ஈரப்பதம் பாதுகாக்கப்பட வேண்டும்.

* சாண எரிவாயு
* பல்வேறு கலன் மாதிரிகள்
* மிதக்கும் மேற்பகுதி,
* நிலையான மேற்பகுதி
* காதி கிராம் மாதிரி 4, தீனபந்து மாதிரி
* சாண எரிவாயுக் கலன் அமைக்கத் தேவையான பொருள்கள்
* சிமென்ட், மணல், செங்கல், கடின பாலிதீன் சீட்டுகள் அல்லது பிளாஸ்டிக் உருளைகள்

தேவையான பொருளாதார உதவி :

பொதுவாக சிமென்ட் மற்றும் செங்கல் வைத்து அமைப்பதற்கு ஒர கன சதுர மீட்டர் செலவாகும். 30 விழுக்காடு வரை அரசு மானியம் வழங்குகிறது. அருகில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினை அணுகி விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

சாண எரிவாயுக் கலன் அமைப்பதற்கான முறைகளும் அதன் பகுதிகளும் :

* சணத்தைக் கரைத்து ஊற்றும் தொட்டி
* சாணம் நொதிக்கும் கலன்
* மீத்தேன் சேகரிக்கும் பகுதி
* உற்பத்தி செய்யப்பட்ட வாயுவைக் கொண்டு செல்லும் குழாய்கள்
* கழிவு சேகரிக்கும் வெளிப்புறத் தொட்டி

தேவையான கால்நடைகளின் எண்ணிக்கை :

இரண்டு கன சதுர மீட்டர் அளவுள்ள கலனிற்கு 50 கிலோ சாணம் தேவை. இதற்கு 2 மாடுகள் இருந்தால் போதுமானது. இது 4 நபர் உள்ள ஒரு வீட்டிற்குத் தேவையான எரிபொருளைத் தரும். ஒரு கிலோ மாட்டுச் சாணத்தில் இருந்து 3.75 லிட்டர் அல்லது 1.3 கன அடி சாண எரிவாயு உற்பத்தியாகும்.

சாண எரிவாயு கலனைப் பராமரிக்கும் முறைகள் :

இரண்டு கன மீட்டர் அளவுள்ள சாண எரிவாயு குழிக்கு 50 முதல் 60 கிலோ சாணம் தேவைப்படும். இதனுடன் சரியான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, மிதக்கும் குப்பைகளை அகற்றிப் பின் ஊற்றவேண்டும். முதல் முதலில் கரைசல் ஊற்றப்பட்டபின் 45 நாட்களுக்கு பிறகு எரிவாயு உற்பத்தியாகும். தேவைக்கு அதிகமாக எரிவாயு உற்பத்தியாகும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றும்போது எரிவாயு உற்பத்தி அளவு குறையும். அதேசமயம் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றும்போது அசிடிக் அமிலம் உற்பத்தியாகிச் சாணம் கட்டி கட்டியாகிவிடும். சாண எரிவாயுக் கலன் மற்றும் குழாய்களில் எரிவாயுக் கசிவு ஏதும் உள்ளதா என அடிக்கடி சோதித்தறியவேண்டும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கலனுக்குத் துருபிக்காதிருக்க பெயிண்ட் அடிக்க வேண்டும். சாதகமான வெப்பநிலை 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை 15 டிகிரி செ கீழ் உற்பத்தி குறையும். கார்பன் நைட்ரஜன் விகிதம் 30 : 1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். சராசரியான அமிலக் கார அளவு 7.2 ஆக இருக்க வேண்டும். (6.6-8.0)

கோடைக் காலத்தில் சாண எரிவாயு உற்பத்தி சற்று அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் தேவைக்கு ஏற்ப சாணத்துடன் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதிக எரிவாயு உற்பத்தியை உபயோகிக்க ஏற்றவொரு திட்டமிடுதல் வேண்டும்.

அசோலாச் சாகுபடி :

அசோலாவில் 9 வகைகள் உள்ளன. இதில் அசோலா பின்னேட்டா என்னும் வகை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. பொதுவாக அனைத்து சீதோசண நிலையிலும் இதனை வளர்க்கலாம். இதற்கு முக்கியமாகத் தண்ணீர் வசதி தேவைப்படும். நீர் தேங்கும் பகுதியில் இதனை வளர்க்கலாம். சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு இதனை வளர்க்கவேண்டும். நிழலான பகுதியில் இது நன்கு வளரும். தண்ணீரின் ஆழம் குறைந்தபட்சம் 10 செ.மீ இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 30 டிகிரி செல்சியஸ் வரை இவை நன்கு வளரும். அதற்கு மேல் மகசூல் குறைந்துவிடும்.

எளிய முறையில் அசோலாத் தொட்டி அமைக்கும் முறை :

2.8 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அகலம் மற்றும் 1 அடி ஆழம் உள்ள தரைக்கு கீழ் குழிகளில் பாலிதீன் அல்லது சில்பாலின் விரிப்புகள் கொண்டு தொட்டிகளை அமைக்கலாம். 2.3 மீட்டர் நீளம், 1.3 மீட்டர் அகலம் மற்றும் 0.5 மீட்டர் ஆழம் உள்ள தொட்டிகளையும் அமைக்கலாம்.

அசோலாப் பாசி வளர்பதற்கான இடுபொருட்கள் :

சலிக்கப்பட்ட வளமான மண் 30 முதல் 35 கிலோ, மாட்டு சாணம் 4 முதல் 5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30 கிராம், அசோலா விதை 1 கிலோ, தண்ணீர் 15 – 20 லிட்டர் மற்றும் நுண்ணுயிர்ச் சத்து 40 கிராம்.

அசோலா சாகுபடி செய்யும் முறைகள் :

சில்பாலின் தொட்டி தயார் செய்ய வேண்டும். அதன் பின் சலிக்கப்பட்ட வளமான மண்ணைக் குழியில் போட்டுப் பரப்பவேண்டும். அதன் பின்பு மாட்டுச் சாணத்தை 10 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து குழியில் இடவேண்டும். தயார் செய்யப்பட்ட குழியை அப்படியே மூன்று நாள்களுக்கு விட்டுவிட வேண்டும். (புதிய மண் மற்றும் சாணத்தின் சூடு தணியும் வரை). பின் 40 கிராம் நுண்ணுயிர்ச் சத்தினையும், 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டினையும் இடவேண்டும். 1 கிலோ அசோலா விதையினைக் குழி முழுவதும் பரவலாக இருக்குமாறு இடவேண்டும். முதலில் 7 முதல் 10 நாள்களுக்குள் இந்த அசோலா இரண்டுமடங்காகும். அதன் பின் தினசரி 1 கிலோ மகசூல் கிடைக்கும். அசோலாக் குழியில் குறைந்தது 10 செ. மீ. அளவு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 5 முதல் 7 நாள்களுக்கு ஒரு முறை 1 கிலோ மாட்டுச் சாணத்தையும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட் கரைசலையும் இடவேண்டும். மாதம் ஒரு முறை 5 கிலோ பழைய மண்ணை எடுத்துவிட்டுப் புதிய வளமான மண்ணை இட்டுவரவேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய அசோலா விதையினை இடவேண்டும்.

கோடைக் காலத்தில் அசோலா வளர்க்கப்படும் தொட்டி, மர நிழலில் அமைக்கப்படாமல் இருந்தால், நீர் அதிக அளவில் ஆவியாகி அசோலா உற்பத்தி பாதிக்கப்படும். ஆகவே, நீரின் அளவு மற்ற இடுபொருள்களின் அளவு ஆகியவற்றை சரியான முறையில் பராமரித்து வரவேண்டும்.

செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் கழிவு மேலாண்மை :

* செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் கழிவுகளில் நீர் அளவு மிக குறைவு (40 – 60 விழுக்காடு) எனவே, அவற்றினைக் கையாளுவதும் மிக எளிது. அவற்றின் சிறுநீரில் தாவத்திரத்திற்கான சத்துகள் மிகுந்துள்ளன.

* ஆடுகள் அதன் உடல் எடையில் 5 விழுக்காடு அளவிற்குச் சாணத்தினை உற்பத்தி செய்யும். அவற்றின் நீர் அளவு 40 – 60 விழுக்காடு இருக்கும். சுமார் 400 கிலோ உயிர் எடை கொண்ட வெள்ளாடுகள் உள்ள பண்ணைக்கு (15 ஆடுகள்) தினசரி சாணத்தினைச் சேமிக்க 0.8 சதுர அடி அளவிற்கு இடவசதி தேவை. அதாவது தினசரி சுமார் 20 கிலோ அளவிற்குக் கழிவுகள் உற்பத்தியாகும். அதே போல் 400 கிலோ உயிர் எடை உள்ள செம்மறியாடுகள் (15 ஆடுகள்) சுமார் 16 கிலோ எருவினை உற்பத்தி செய்யும். அதனைச் சேகரிக்கச் சுமார் 0.65 கன சதுர அடி பரப்பு தேவை. பொதுவாக ஒரு நாள் இரவில் 4800 ஆடுகள் 1 எக்டேர் நிலப்பரப்பிற்குத் தேவையான உரத்தினை உற்பத்தி செய்யும்.

* ஆட்டு எருவினை நுண்ணுயிரிகள் கொண்டு மட்கச் செய்து பயன்படுத்துவது ஒரு சிறந்த முறையாகும். இம்முறையில் பண்ணைக் கழிவுகள் மற்றும் தென்னை நார்க் கழிவுகளுடன் கலந்து அதன் ஈரப்பதம் 60 விழுக்காடு இருக்கும்படி நீர் தெளித்துத் தரைப்பகுதி குழிகளில் சேமித்து நன்கு மட்கியபின் உரமாகப் பயன்படுத்த வேண்டும்.

கோழி எரு மேலாண்மை :

* கோழி எருவானது உலர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். அதிக ஈரப்பதம், ஈக்கள் பெருக வாய்ப்பளிக்கும். கோழிப்பண்ணையில் உள்ள தண்ணீர்க் குழாய்கள் ஒழுகாமல் இருப்பதனை உறுதி செய்யவேண்டும். அனைத்து எருவினையும் எடுக்காது 25 விழுக்காடு பழைய எருவினை விட்டு எடுப்பது புதிய எருவில் உள்ள ஈரப்பதத்தினை விரைந்து உறுஞ்ச வழிவகை செய்வதுடன், மட்குதலுக்குத் தேவையான பாக்டிரியாக்களினை வழங்குகிறது. கோழி எருவினை அப்புறப்படுத்தி மேடான பகுதியில் தேங்காய் நார்க் கழிவுடன் சேர்த்து நன்கு மூடி வைப்பது தழைச்சத்து இழப்பைத் தவிர்ப்பதுடன் நன்கு மட்கச் செய்யும். மழைக் காலங்களில் தண்ணீர் எருக்குழிக்குள் புகாது பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் எரிசாம்பல் தூவிவருவது ஈக்கள் பெருக்கதினைத் தடுப்பதுடன் எருவின் தரத்தினை மேம்படுத்தும். எரிசாம்பல் என்பது அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்திய பின் கிடைக்கும் சாம்பலாகும். இது விலை மலிவானது.

* கோழி எருவுடன், இறந்த கோழிகளைச் சேர்த்துத் தயாரிக்கும் மட்கு உரம் நல்ல பலனைத் தரும். கோடைக் காலத்தில், இந்த மட்கு உரப்பெட்டியில் வெப்பநிலை உயர்வை கண்டறிந்து ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm