Sunday 28 January 2018

காணாமல் போன கமலைப் பாசனம்... நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?!


நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தொழில் விவசாயம்தான். பண்டைய காலம் தொட்டே நம்முடைய விவசாயிகள் பாரம்பர்ய விவசாயத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அதில், நீர்ப்பாசன முறை, இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அதைப் பின்பற்றவும் செய்துள்ளனர். பாரம்பர்ய இயற்கை விவசாயத்தில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தன்னிறைவு அடைந்த நாடு, இந்தியா. பசுமைப்புரட்சிக் கொள்கைக்குப் பிறகு நம்முடைய பாரம்பர்ய விவசாயம் முற்றிலுமாக கரையத் தொடங்கியது. மாடுகளுக்குப் பதில் டிராக்டர், இயற்கை உரங்களுக்குப் பதில் செயற்கை உரம், கமலைப் பாசனத்திற்கு பதில் மோட்டார் பம்புசெட் என விவசாயிகளும் மாறத் தொடங்கினர். ஆனால், படிப்படியாக மின்சாரப் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, பருவநிலை மாற்றம், பம்புசெட் மூலம் நீர் உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டம் குறைதல், விளைபொருட்களுக்கான விலை குறைவு என விவசாயம் அழிவினைச் சந்தித்து வருகிறது. பசுமைப் புரட்சியால் கரைந்து போன பழைமையான தொழில்நுட்பங்களில் கமலைப் பாசனம் முக்கியமானது.

இன்றைக்கு பட்டனைத் தட்டினால் பைப் மூலம் தண்ணீர் மேலே வந்துவிடும். ஆனால், அன்றைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து 1 ஏக்கருக்குப் பாய்ச்ச குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும். ஆனால், நேரம் பற்றி எல்லாம் அன்றைய விவசாயிகள் கவலைப்படவில்லை. கமலைப் பாசனத்தில் நீர் இறைத்துக் கொண்டிருந்தது வரைக்கும் தண்ணீர் விரயம் என்பது இருந்ததில்லை.

கமலை ஏற்றம் என்பது இரண்டு மாடுகளைப் பூட்டி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைக்கும் சாதனம். இப்போது விவசாயத் தண்ணீர் தேவைக்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கலாம். முன்னர் எல்லாம் வயலின் ஒரு பகுதியில் குறைந்தது 30 முதல் 40 அடிவரை உள்ள கிணற்றை வெட்ட வேண்டும். மழைக்காலத்தில் கிணறு முழுவதும் நீர் நிரம்பி விடும். அதனைக் கமலை மூலம் இறைத்து விவசாயம் நடைபெறும். காலைப்பொழுதில் ஆரம்பித்தால் வேலை செய்யும் சுமை தெரியாது. கமலைப் பாசனம் என்பது சுலபமாகச் செய்துவிடக் கூடிய தொழில்நுட்பம் கிடையாது. கமலை இறைக்கும் இரண்டு மாடுகளும் ஒரே நேர்கோட்டில், ஒரே அளவில் முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோல இரண்டு மாடுகளும் ஒரே சீராகப் பின்னோக்கி வர வேண்டும். சிறிது அச்சுப் பிசகினாலும் சிக்கல்தான்.

அதேபோல தண்ணீரை இறைக்கும்போது மாடுகள் நிச்சயம் களைப்படையும். அவை சோர்ந்து போகாமல் இருப்பதற்காகத்தான் கிணற்றைச் சுற்றி பூவரசு மரங்களை நட்டு வைத்திருப்பர். இம்மரங்கள் அதிகப்படியான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டவை. கமலை இறைக்கும் கிணற்று மேடுகளை நிச்சயம் பூவரசு அலங்கரித்திருக்கும். எந்தச் செலவும் இல்லாமல் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சக்கூடிய தொழில்நுட்பம் என்பதால் விவசாயத்தில் கமலைப் பாசனம் செலவுக் கணக்கில் வராது. கமலை இழுக்கத் தேர்வு செய்யும் மாடுகள் முழுமையான பயிற்சிக்குப் பின்னரே பயன்படுத்தப்படும். இப்போது கமலைப் பாசனம் செய்ய விவசாயிகள் முன்வந்தாலும், கமலைப் பயிற்சி பெற்ற மாடுகள் இன்று சந்தையில் இல்லை. புதிய மாடுகளை வாங்கி பயிற்சிகளை அவ்வளவு எளிதில் கொடுத்து விடவும் முடியாது. கமலை இறைக்கப் பயன்படுத்தப்படும் மாடுகள் வீட்டிலிருந்து அவிழ்த்து விட்டால் கிணற்று மேட்டில் போய் சரியாக நின்று கொள்ளும். பாசனம் முடிந்து அவிழ்த்துவிட்டால் மாடுகள் வீட்டிற்கு வந்துவிடும். இந்த அளவுக்கு மாடுகளுக்குப் பயிற்சியானது இருக்க வேண்டும்.

இன்று கமலைப் பாசனம் என்பது அரிதாகி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களைத் தவிர முற்றிலும் கமலைப் பாசனம் கரைந்து விட்டது. கமலைப் பாசனத்தில் நீடித்த தன்மை உள்ளது. கமலையின் இறைக்கும் அளவும், கிணற்றில் ஊறும் தண்ணீரின் அளவும் சரியாக இருக்கும். கமலையில் ஒரு முறை இறைக்கும் தண்ணீர் நிலத்தில் ஒரு சால் பாயும் அளவிற்கு இருக்கும். காலப்போக்கில், கமலைக் கரைந்து மின்சார மோட்டார் பாசனத்துக்கு வந்த பிறகு விவசாய சங்கிலியில் மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்தன. Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete