Monday 16 October 2017

குறைந்த பராமரிப்பில் அதிக வருமானம்... ஒப்பில்லாத ஓங்கோல் மாடுகள்!


பசுக்களானாலும் சரி, காளை களானாலும் சரி... நாட்டு மாடுகள் என்றாலே கம்பீரம்தான். அந்த வரிசையில் மிகவும் கம்பீரமானவை, ஆந்திராவைச் சேர்ந்த ஓங்கோல் ரக மாடுகள். தென் மாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் நந்தி சிலைகள், ஓங்கோல் காளைகளின் வடிவத்தில்தான் செதுக்கப்பட்டிருக்கும். கவர்ச்சி, மிடுக்கான தோற்றம்... என அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், உழைப்பதற்கும் சளைத்தவை இல்லை இந்த ரக மாடுகள். மற்ற நாட்டு மாடுகளை விட சற்று அதிகமாகவே பால் கொடுக்கும் திறனும் கொண்டவை இவை. இவற்றின் பால், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்திருப்பதால், இந்த ரக மாடுகளுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஓங்கோல் இன மாடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார், சித்தூர் மாவட்டம், திருப்பதி பகுதியைச் சேர்ந்த சுனில் கிருஷ்ணா. பொங்கல் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்தோம்.

திருப்பதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடலூர் என்னும் கிராமத்தில் இருக்கிறது, சுனில் கிருஷ்ணாவின் பண்ணை. சுற்றுச்சுவர்களில் மின்னும் கால்நடைகளின் ஓவியங்களே அவருக்கு கால்நடைகள் மேல் உள்ள பற்றை பறைசாற்றுகிறது. நாம் பண்ணைக்குள் நுழையும்போது, மேய்ச்சலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தன, மாடுகள். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார், சுனில் கிருஷ்ணா.

“என்னுடைய அம்மா குடும்பம் பரம்பரை விவசாயக் குடும்பம். அதனால்தான் எனக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது. அப்பா கட்டட கான்ட்ராக்டர். என்னுடைய வற்புறுத்தலால், 10 ஆண்டுகளுக்கு முன்னர், 20 ஏக்கர் நிலத்தை வாங்கினார், அப்பா. நான், பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு கோழிப்பண்ணை தொடர்பான டிப்ளமோ படிப்பு படித்தேன். ஆனால், கோழிப்பண்ணை வைக்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, மாட்டுப்பண்ணை வைக்க அனுமதி கொடுத்தார்கள்.

கைவிட்ட கலப்பினம்! கைகொடுத்த ஓங்கோல்!

2009-ம் ஆண்டு, முன் அனுபவம் எதுவும் இல்லாமலேயே ஹெச்.எஃப், ஜெர்சி போன்ற கலப்பினங்களில் 10 மாடுகளை வாங்கி பண்ணையைத் தொடங்கினேன். 10 மாடுகளில் தொடங்கிய பண்ணை, படிப்படியாக 70 மாடுகளாக ஆயிற்று. தனியார் பண்ணைகளுக்குத்தான் பாலை விற்பனை செய்து வந்தேன். மாடுகளுக்கு அடிக்கடி வாய்ப்புண், மடிவீக்க நோய், சினை பிடிக்காமை... என்று பல பிரச்னைகள் வந்தன. ஒரு கால்நடை மருத்துவரை ஆலோசகராக அமர்த்தி, மருத்துவம் பார்த்தும் பலனில்லை. தினந்தோறும் தீவனத்துக்கு பெருந்தொகை செலவாகிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ‘பண்ணையை மூடி விடலாம்’ என்ற முடிவில், மாடுகளை விற்க ஆரம்பித்தேன்.

அப்போதுதான், என்னிடம் மாடுகள் வாங்க வந்த ஒருவர், இரண்டு கலப்பின மாடுகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக கலப்பில்லாத தூய ஓங்கோல் ரக மாடு ஒன்றைக் கொடுத்தார். அதை பண்ணையில் சில மாதங்கள் வளர்த்தேன். அதற்கு பெரிய பராமரிப்பு தேவைப்படவில்லை. குறிப்பாக, நோய்த் தாக்குதல் எதுவும் இல்லாமல் இருந்தது. மேய்ச்சலுடன் தவிடு கலந்த பிண்ணாக்கு தண்ணி கொடுத்ததிலேயே மாட்டின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு வயதே நிரம்பிய ஓங்கோல் ரக கிடேரி கன்றுகளே 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதனால், படிப்படியாக ஓங்கோல் ரக மாடுகளை மட்டும் வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன்” என்ற சுனில் கிருஷ்ணா தொடர்ந்தார்.

மாடுகள் மூலம் இயற்கை விவசாயம்!

“அந்த சமயத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டு நாட்டு மாடுகளைப் பராமரித்து வரும் மதனப்பள்ளியைச் சேர்ந்த எம்.சி.வி. பிரசாத் எனக்கு அறிமுகமாக... அவர் மூலமாக இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்து கொண்டேன். அடுத்து சுபாஷ் பாலேக்கர் நடத்திய ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையில் நெல், மா, வாழை, நிலக்கடலை, தீவனப் புல் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறேன்.

டிராக்டரை ஓரம் கட்டிய ஓங்கோல்!

ஆந்திர கடலோரப் பகுதியில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் ‘ஓங்கோல்’ என்ற ஊர் உள்ளது. இப்பகுதியில் ஓங்கோல் மாடுகளைத்தான் உழவுக்குப் பயன்படுத்துவார்கள். இம்மாடுகள் நீண்ட நேரம் உழைக்கக்கூடியவை. ஒரு கலப்பையிலேயே 4 கொழுக்களைப் பொருத்தி இம்மாடுகளால் இழுக்க முடியும். அவ்வளவு பலம் வாய்ந்தவை இவை. அதனால்தான் ஓங்கோல் மாடுகளை உழவுக்குப் பழக்கப்படுத்தி வருகிறேன். இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு, டிராக்டரை விற்பனை செய்து விட்டேன். தற்போது நாட்டு மாடுகள் மூலமாகத்தான் உழவு செய்து வருகிறேன். மாடுகளின் சாணம், சிறுநீரை சேமித்து ஜீவாமிர்தம், நீம் அஸ்திரா ஆகியவற்றை தயார் செய்து பயன்படுத்தி வருகிறேன். அதனால் பண்ணையில் ரசாயன உரங்களுக்கான செலவு மிச்சமாகி விட்டது.

மேய்ச்சல்தான் பிரதானம்!

தற்போது 12 ஓங்கோல் மாடுகள் உள்ளன. அவற்றோடு, கேரள மாநில இனமான வெச்சூர் ரகத்தில் 20 மாடுகளையும், 2 கிர் மாடுகளையும், 2 நாட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறேன். மொத்தம் 36 நாட்டு மாடுகள் உள்ளன. அனைத்துக்கும் மேய்ச்சல்தான் பிரதானம். அது போக, சோளத்தட்டை, நேப்பியர் புல் வகைகளையும்; தவிடு, பிண்ணாக்கு கலந்த தண்ணீரையும் தீவனமாகக் கொடுத்து வருகிறேன்” என்ற சுனில் கிருஷ்ணா நாட்டு மாடுகள் தரும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“பராமரிப்பைப் பொறுத்து... ஒரு ஓங்கோல் மாடு ஒரு வேளைக்கு இரண்டு லிட்டர் முதல் மூன்றரை லிட்டர் வரை பால் கொடுக்கும். நாட்டு மாட்டுப் பாலுக்கு தனியாக சந்தை வாய்ப்பு எதுவும் கிடையாது. அதனால், 17 பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கே மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நன்றாக வளர்ந்த சதை திரட்சியான கலப்பில்லாத ஓங்கோல் மாடு 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. ஆனால், எல்லா மாடுகளும் அந்த உடற்கட்டோடு வளர்வதில்லை. பத்து மாடுகளில் இரண்டு மாடுகள் இப்படி வளரும். கொஞ்சம் வளர்ச்சி குன்றிய மாடுகள் விலை குறைவாக விற்பனையாகும். ஆனால், ஒரு மாட்டுக்கு எப்படியும் 30 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைத்து விடும். கடந்த மூன்றாண்டுகளில் 20 ஓங்கோல் மாடுகளை விற்பனை செய்திருக்கிறேன்.
வெச்சூர் ரக மாடுகள், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. இதுவரை 15 வெச்சூர் மாடுகளை விற்பனை செய்திருக்கிறேன். மூன்று ஆண்டுகளில் மாடுகள் விற்பனை மூலம் கிட்டத்தட்ட 17 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளேன். இதில் பராமரிப்பு, தீவனம், சம்பளம் என 6 லட்ச ரூபாய் வரை செலவாகியிருக்கும்” என்ற சுனில் கிருஷ்ணா நிறைவாக,

“கலப்பின மாடுகளை வளர்த்து கையைச் சுட்டுக் கொண்டு... இனிமேல் மாட்டுப்பண்ணையே வேண்டாம் என்று முடிவுக்கு வந்த என்னை நாட்டு மாடுகள்தான் காப்பாற்றியுள்ளன. குறிப்பாக ஓங்கோல் மாடுகளுக்குத்தான் அந்தப் பெருமை சேரும்” என்றவாறு மாடுகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார், சுனில் கிருஷ்ணா.

தொடர்புக்கு,
சுனில் கிருஷ்ணா,
செல்போன்: 99599-59977

அரசுதான் அக்கறை காட்ட வேண்டும்...

ஓங்கோல் மாடுகள் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், திருப்பதியில் கோசாலை நடத்தி வரும் விஜயலட்சுமி.

“பிரேசிலில் ஓங்கோல் இனத்தில் கலப்பினம் செய்யப்பட்ட மாடுகள் 25 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன. கிர் இன கலப்பின மாடுகள் 30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன. நம்மிடம் இருந்து, கொண்டு சென்ற மாடுகளை, மற்ற நாடுகள் பயன்படுத்தி நன்றாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால், நம்முடைய அரசுகள் நாட்டு மாடுகள் விஷயத்தில், அக்கறை இல்லாமல் இருந்து வருகின்றன. அரசு சார்பாக அனைத்து மாநிலங்களிலும் கால்நடை ஆராய்ச்சிப் பண்ணைகளில் நாட்டு மாடுகளின் செயற்கைக் கருவூட்டல் ஊசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த செயற்கைக் கருவூட்டல் ஊசிகளை வைத்துக்கொண்டு நாட்டு மாடுகளைப் பரவலாக்காமல்... கலப்பின மாடுகளை பரவலாக்குவதில்தான் கால்நடைப் பராமரிப்புத்துறை ஆர்வம் காட்டி வருகிறது. இப்படியிருந்தால், நாட்டு மாடுகள் பரவலாகவே முடியாது. ஒருகட்டத்தில் விந்தணு சேகரிக்கக்கூட மாடுகள் இருக்காது.

உத்தரப்பிரதேசத்தில் ‘சாஹிவால் மாடுகள் மானியத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மானிய விலையில் விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வழங்கப்படுகின்றன. தற்போது குஜராத் மாநிலத்திலும் காங்கிரஜ், கிர் மாடுகளுக்கு மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆந்திரா, தமிழ்நாடு மாநில அரசுகளும் நாட்டு மாடுகள், விவசாயிகளுக்குச் சேரும்படியான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், நாட்டு மாடுகள்தான் விவசாயத்துக்கான அடிப்படை. அவை விவசாயிகளை எந்தவிதத்திலும் நஷ்டப்படுத்தி விடாது” என்றார்.

வாட்ஸ்அப் மூலம் விற்பனை!

“வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்கள்தான் எனக்கு முக்கிய விற்பனைத்தளம். குழுவின் மூலமாக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடித்து விற்பனை செய்து வருகிறேன்.

ஓங்கோல் மாடுகள் வளர்ப்பை கௌரவமாக நினைப்பவர்களும், மாடுகளின் மேல் பிரியம் உள்ளவர்களும் அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, நாட்டு மாட்டுப் பால் தேவையுள்ளவர்களும் வாங்குகிறார்கள். ஆனால், திருப்பதி போன்ற சிறு நகரங்களில் நாட்டு மாடுகளின் பால் தேவையை அறிந்தவர்கள் குறைவுதான். அதனால் பெரிய அளவில் விற்பனை வாய்ப்பில்லை” என்கிறார், சுனில்கிருஷ்ணா.

காளைகளுக்கு கல் இழுக்கும் போட்டி!

தமிழ்நாட்டில் பொங்கல் நேரத்தில் காளைகளை வைத்து ‘ஜல்லிக்கட்டு’, ‘மஞ்சுவிரட்டு’, ‘எருது விடும் திருவிழா’ நடத்தப்படுகிறது. அதுபோல் ஆந்திராவின் பிரகாசம், குண்டூர், கர்னூல், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓங்கோல் காளைகளை வைத்து கல் இழுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. சுமார் 2 டன் வரை எடையுள்ள கல்லை ஊர் மக்கள் முன்னிலையில் காளைகள் பூட்டி இழுக்க வைக்கிறார்கள். காளைகள் இழுத்துச் செல்லும் தூரத்தைப்பொறுத்து பரிசுகள் வழங்கப்படுகிறது. இவ்விழா, ஆந்திராவில் சங்கராந்தி (பொங்கல்) நாளில் நடத்தப்படுகிறது.

4 ஆயிரம் ஆண்டு பழமையான ஓங்கோல் மாடுகள்!

பெங்களூருவிலுள்ள தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானியாகப் பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ஓபி ரெட்டி, ஓங்கோல் மாடுகள் பற்றிச் சொன்ன விஷயங்கள் இங்கே...

“ஆந்திராவின் பெருமை இந்த ஓங்கோல் மாடுகள். சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளாக இந்த மாடுகள், தமிழக எல்லை மற்றும் ஆந்திர மண்ணில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 1875-ம் ஆண்டில் பிரேசில் நாடு, இந்த மாடுகளின் சிறப்புகள் தெரிந்து, கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து கொண்டு சென்றது. அதன் பிறகு அமெரிக்காவும் இந்த மாடுகளை இறக்குமதி செய்தது. 1961-62ம் ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓங்கோல் காளைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, தென் அமெரிக்க நாடுகளில் பெருமளவில் இனவிருத்தி செய்யப்பட்டன. அங்கு உழவு வேலைகளுக்கும், பால் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோன்று கிர் என்ற இந்திய மாட்டினமும் பால் தேவைக்காக பிரேசிலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை தென் அமெரிக்க நாடுகள் எந்தவித அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாகத்தான் நம் காளைகளைக் கொண்டு சென்று இனவிருத்தி செய்திருக்கின்றன.

ஓங்கோல் மாடுகளை செயற்கைக் கருவூட்டல் செய்வதற்கான உறைவிந்தணுக் குச்சிகள் குண்டூர் கால்நடைப் பண்ணையில் (லேண்ட் ஃபார்ம்) கிடைக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள கால்நடைப் பராமரிப்பு மையங்களிலும் இவை கிடைக்கும்.

பலமனேர் கால்நடைப் பண்ணையில் புங்கனூர் ரக மாடுகளின் செயற்கைக் கருவூட்டல் ஊசிகள் கிடைக்கும்” என்றார், ஓபி ரெட்டி.

ஒரிஜினல் ஓங்கோல் மாடுகளைக் கண்டறியும் விதம்!

விஜயவாடாவை அடுத்த மங்களகிரியைச் சேர்ந்த சாய்பாபு, “ஓங்கோல் மாடுகள் வெள்ளை, செம்பழுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். ஓங்கோல் மாட்டின் காதுகளின் பின்புறமும், கால், ஆசனவாய்ப்பகுதிகள் கறுப்பாக இருக்கும். திரட்சியான திமில், தாடையில் தொங்கும் தோல், மேல்நோக்கி இருக்கும் சிறிய கொம்பு ஆகியவை ஓங்கோல் மாடுகளின் அடையாளங்கள். பொதுவாக, இம் மாடுகளில் பாய்ச்சல் தன்மை குறைவாகத்தான் இருக்கும். சில காளைகள் மட்டுமே பாய்ச்சல் தன்மை கொண்டுள்ளன. பண்ணையிலோ, வீடுகளிலோ வளர்ப்பதற்கு ஏற்றவை, இந்த ஓங்கோல் மாடுகள்” என்கிறார்.

200 ஏக்கரில் கோசாலை!

திருப்பதி நகரின் தும்மலகன்டா பகுதியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோசாலை உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த கோசாலையில் பால் தேவைக்காக... ஓங்கோல், கிர், சாஹிவால் போன்ற நாட்டு மாடுகளோடு, கலப்பின மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஓங்கோல், புங்கனூர், உம்பளாச்சேரி, காங்கிரேஜ், ஹலிக்கர், தியோனி, சாஹிவால், ரகங்களில் காளைகளும் கோசாலையில் உள்ளன. இந்தக் கோசாலையை அனைவரும் பார்வையிட அனுமதிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் ஓங்கோல் மாடுகள்!

பிரேசில், இந்தியாவில் இருந்து இந்த ரக மாடுகளை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டில் வளர்த்து வருகிறது. பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் மட்டும் பல லட்சம் ஓங்கோல் மாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்திய அளவில் இந்த மாடுகள் தற்போது ஒரு லட்சம் எண்ணிக்கை அளவில்தான் உள்ளன. தற்போது தேசிய பல்லுயிரிச் சட்டம் அமலில் இருப்பதால், இந்தியாவில் இருந்து ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது 5 ஆயிரம் யூனிட் விந்தணுக்களுக்கான அனுமதி கோரி, சென்னை தேசிய பல்லுயிரி ஆணையத்திடம் பிரேசில் நாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். நமது பெருமையை வெளிநாட்டினர் உணர்ந்த அளவுக்குக் கூட நாம் உணரவில்லை என்பதுதான் வேதனை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete