Wednesday 17 May 2017

திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்: தினசரி 10 டன் உற்பத்தி :


திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பை, இயற்கை உரமாக மதிப்பு கூட்டப்பட்டு, மாநகராட்சிவாசிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது தினசரி 10 டன் நுண்ணுரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் குப்பையின் அளவு குறைவதுடன், வீட்டுத் தோட்டங்களை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உரமும் கிடைப்பது, இரட்டை லாபமாக அமைகிறது.

குப்பை மலை :

திருச்சி மாநகராட்சியில் ஒரு தனிநபர் ஒரு நாளில் வெளியேற்றும் குப்பையின் சராசரி அளவு 421 கிராம். மாநகராட்சியில் உள்ள வீடுகள், வணிகக் கட்டிடங்களில் இருந்து சுமார் 415 டன், சந்தைகள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் இருந்து சுமார் 50 டன் என நாள்தோறும் மொத்தம் 465 டன்னுக்கும் அதிகமாகக் குப்பை சேகரிக்கப்படுகிறது.

அனைத்துப் பகுதி குப்பையும் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்குக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு குப்பை குவிக்கப்பட்டதன் விளைவாக, அங்கு ஏராளமான குப்பை மலைகள் உருவாகிவிட்டன. கடும் மழை, கடும் கோடை காலத்தில் இந்தக் குப்பை மலையில் இருந்து துர்நாற்றம் வீசுவது, கொசு உற்பத்தியாகிச் சுகாதாரக் கேடு ஏற்படுவது, நிலத்தடி நீர் சீர்கெட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டிக் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களுக்கு மட்டுமின்றி, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துக்கும் அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பெரும் தலைவலியாக இருந்ததால், மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் விளைவாக, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுரம் தயாரிக்கும் திட்டம் பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்கும் குப்பை சேகரிப்பு :

“திடக் கழிவு மேலாண்மையில் குப்பையைத் தரம் பிரித்துத் தராமல் இருப்பதே மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சோதனை முயற்சியாக மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுரம் தயாரிக்கும் செயலாக்க மையங்கள், திருச்சியில் உள்ள நான்கு கோட்டங்களிலும் தலா ஒன்று வீதம் அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது மேலும் 16 இடங்களில் சுமார் ரூ.8 கோடியில் நுண்ணுரம் தயாரிப்பு செயலாக்க மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும்போது அரியமங்கலம் குப்பை கிடங்குக்குக் குப்பைகள் கொண்டு செல்வது பெருமளவில் குறைந்துவிடும். இந்தத் திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பை உடனடியாகப் பிரித்துக் கையாளப்படுவதால் குப்பை சேர்வது தவிர்க்கப்பட்டு, சுகாதாரம் பேணப்படுகிறது,” என்கிறார் திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன்.

இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூன் 5-ம் தேதி முதல் புதன்கிழமைதோறும் மக்காத குப்பைகளையும், எஞ்சிய நாட்களில் மக்கும் குப்பைகளையும் துப்புரவுப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று பெற்றுக்கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நுண்ணுரம் தயாரிப்பு முறை :

“வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மாநகராட்சி வாகனங்கள் மூலம் நுண்ணுரம் செயலாக்க மையத்துக்குக் கொண்டு வரப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு தரம் பிரிக்கப்படுகிறது. காய்கறி, உணவுக் கழிவு உள்ளிட்ட மக்கும் குப்பைகள் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டு உரத் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.

தினமும் சாணக் கரைசல், நுண்ணுயிர் ஊட்டம் தெளிக்கப்பட்டுக் கிளறிவிடப்படுகிறது. அதிகபட்சம் 45 நாட்களில் ரசாயனக் கலப்பில்லாத- இயற்கையான உரம் தயாராகிறது. பின்னர், அந்த நுண்ணுரம் நன்கு காய வைக்கப்பட்டு, சாக்குப் பைகளில் சேமிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் நுண்ணுரம் வாங்கிச் செல்கின்றனர்” என்கிறார் மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் (பொறுப்பு) ராஜ் பெரியசாமி.

சுயஉதவிக் குழு பணி :

நுண்ணுரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் நுண்ணுரம் தயாரிப்புப் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஈடுபடுகின்றனர். இதுபோல 120 பெண் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தினமும் சுமார் 10 டன் நுண்ணுரம் தயாரிக்கப்படுகிறது.

குப்பைகளைத் தரம் பிரிக்கும்போது கிடைக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள், பழைய பொருட்கள் வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கப்படுகிறது.

இலவச உரம் எப்படி வாங்குவது?

திருச்சி மாநகராட்சியில் உள்ள அரியமங்கலம் கோட்டம் பூக்கொல்லை, ஸ்ரீரங்கம் கோட்டம் அம்பேத்கர் நகர், பொன்மலைக் கோட்டம் பறவைகள் சாலை, கோ-அபிஷேகபுரம் கோட்டம் கோணக்கரை சுடுகாடு வளாகம் ஆகிய இடங்களில் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் செயல்பட்டுவருகின்றன.

திருச்சி மாநகராட்சி வாசிகள் மாநகராட்சிக்குள் வசிப்பதற்கான அடையாளச் சான்றிதழை இந்த மையங்களில் காண்பித்து, மாதத்துக்குக் குறிப்பிட்ட அளவு இயற்கை உரத்தை வாங்கிக் கொள்ளலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment