Tuesday 9 May 2017


இயற்கை விளைபொருட்கள் அங்காடி நடத்தும் பொறியாளர் தம்பதி :


சென்னையில், ‘மண் வாசனை’ என்ற பெயரில், இயற்கை விளைபொருட்கள் அங்காடியை நடத்தி வரும் மேனகா கூறுகிறார் –

திருமணமான, முதல் ஆண்டிலேயே, ஐ.டி., வேலையில் இருந்த என் கணவர், வேலையை விட்டு, இயற்கை உணவு பொருட்கள் பிசினசுக்கு மாறினார். ஐ.டி., வேலையில் இருந்த நான், ஒரு ஆர்வத்தில் எங்கள் உணவு முறையை, பாரம்பரிய நெல் ரகங்களை நோக்கி திருப்ப, அது நல்ல ஆரோக்கியத்தை கொடுத்தது.

குறிப்பாக, நான் சாப்பிட்டு வந்த, பூங்கார், கொட்டாரம் சம்பா மற்றும் நீலஞ்சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள், சுகப்பிரசவத்துக்கே கை கொடுத்தது. தாய்ப்பால் சுரப்பும் அதிகமானது; சில நாட்கள் தாய்ப்பால் வங்கிக்கு, பால், ‘டொனேட்’ செய்யும் அளவுக்கு கூட கிடைத்தது.

எனக்கு தைராய்டு பிரச்னை இருந்ததால், இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனைப்படி, குள்ளக்கார், காட்டு யாணம், கருங்குறுவை போன்ற பாரம்பரிய அரிசி ரகங்களை சாப்பிட்டேன்; நல்ல பலன் கிடைத்தது.

இதையடுத்து, அசிஸ்டென்ட் மேனேஜர் வேலையை விட்டு, கே.வி.கே., பயிற்சி மையத்தில், இயற்கை விளைபொருட்கள் மதிப்பு கூட்டல் மற்றும் பிசினஸ் பயிற்சிகளை எடுத்தேன்.

கணவருடன் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ‘மண் வாசனை’ என்ற பெயரில், இயற்கை உணவுப் பொருட்கள் பிசினசைஆரம்பித்தேன்.உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்காமல் பின்வாங்கும் விவசாயிகளை சந்தித்து, ‘நீங்க தொடர்ந்து இயற்கை உணவுப் பொருட்களை, உற்பத்தி செய்யுங்க; உங்களுக்கு கட்டுப்படியாகிற விலையை கொடுத்து, நாங்க விளைபொருட்களை வாங்கிக்கிறோம்’ எனக் கூறி உற்சாகப்படுத்தினோம்.

விவசாயிகளிடம் நேரடியாக பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களை வாங்கி, ஊற வைத்து மாவாக அரைத்தும், கூழ் மிக்ஸ், பொடி வகைகள், மசாலாப் பொருட்கள், வடகம், ஊறுகாய் மற்றும் செக்கில் ஆட்டிய எண்ணெய் உள்ளிட்ட பொருட்களாக மதிப்பு கூட்டி தயாரித்தும் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். படிப்படியாக பிசினஸ் முன்னேற்றம் அடைந்தது.

இந்த தலைமுறையினர் அனைவரும், இயற்கை உணவுப் பொருட்களை உட்கொண்டு, நோய் நொடி இல்லாமல் வளர வேண்டும் என, நானும், கணவரும் நினைத்தோம். அதனால், பள்ளி, கல்லுாரிகளுக்கு போய் மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை செய்யஆரம்பித்தோம்.பெற்றோரான நாம், இதுவரை ரசாயன உணவுகளை சாப்பிட்டு, உடல்நலத்தை கெடுத்து கொண்டது போதும். இனி, நம் குழந்தைகளையாவது ஆரோக்கியமானவர்களாக வளர்க்கலாமே!

அதற்கு, இயற்கை உணவு பொருட்களின் பயன்பாடுகளை தெரிந்து, ‘உணவே மருந்து’ என, நம் உணவியல் முறையை, இயற்கையை நோக்கி திருப்பினால் போதும்.நம் ஆரோக்கியம் கூடுவதோடு, இயற்கை உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகமாகி, அவற்றின் விலையும், கணிசமாக குறையும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment