Monday 1 May 2017

மாடுகள் தரும் மின்சாரம்!


முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விளாத்திகுளம் மார்க்கண்டேயனின் இயற்கை வேளாண் பண்ணையில் ஏறத்தாழ 50 பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் நேரடி வேலைவாய்ப்பும் 150 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. வழக்கமான பால் பண்ணையைப் போல் இல்லாமல், முழுமையாக முறைப்படுத்தப்பட்ட பண்ணையாக இது உள்ளது.

திட்டமிட்டபடி தீவன வளர்ப்பு, கிடைக்கும் தீவனங்களை மாடுகளுக்குக் கொடுப்பது முதல், பால் கறப்பது, அதைப் பொதிவு செய்து சந்தைக்கு அனுப்புவது, பால் தவிர்த்த மாடுகளின் துணைப்பொருட்களான சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை மதிப்பு கூட்டுவது, குறிப்பாகப் பஞ்சகவ்யம் போன்ற இயற்கை இடுபொருட்களைத் தயாரிப்பது, சாணத்திலிருந்து சாண எரிவாயு எடுப்பது, அதை மேலும் மதிப்பு கூட்டுதலாக மின்சாரம் எடுப்பது என்று அருமையானதொரு மாதிரிப் பண்ணையை இவர் நடத்திவருகிறார்.

மாடுகளுக்கான தீவனத்தைப் பொறுத்த அளவில் கோ-4 புல், சுபா புல் போன்ற பசுந்தீவனங்களையும், இருங்கு சோளம் எனப்படும் நாற்று சோளத் தட்டையின் காய்ந்த தீவனத்தையும் பயன்படுத்துகிறார். அடர்தீவனத்துக்கு தானியங்களை வாங்கிப் பண்ணையிலேயே ஒரு எந்திரத்தை வைத்து அரைத்து எடுத்துக்கொள்கிறார். மாடுகளுக்கு முறையான அளவில் தீவனங்கள் கொடுக்கப்படுகின்றன.

பஞ்சகவ்ய விற்பனை :

இந்தப் பண்ணையில் பஞ்சகவ்யம் தயாரிக்கவும் மண்புழு உரம் தயாரிக்கவும் தனித்தனிப் பகுதிகள் உள்ளன. பஞ்சகவ்யத்துக்கு சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் போன்றவை பண்ணையிலிருந்து பெறப்படுகின்றன. சாணத்தையும் சிறுநீரையும் எடுத்துச் செல்ல மோட்டார் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு கிடைக்கும் சாணம், சிறுநீர் ஆகியவையும் மாட்டுக் கொட்டகையைக் கழுவும் நீரும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் குறிப்பிட்ட சதவீதத்தில் நிலத்துக்குள் குழாய் வழியாகப் பீய்ச்சிப் பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது.

பஞ்சகவ்யத்தைப் புட்டிகளில் அடைத்து, அதை உழவர்களுக்கு விளக்கிச் சொல்ல விளம்பர/விற்பனைத் தூதர்களையும் மார்க்கண்டேயன் ஏற்பாடு செய்துள்ளார். இவர்கள் உள்ளூர் பொருளாதாரம் பற்றியும், ரசாயனங்களின் தீமை பற்றியும் உழவர்களிடம் விளக்கிக் கூறிப் பஞ்சகவ்யத்தை விற்பனை செய்கின்றனர். ஆனால், இதன் விற்பனை வேகம் குறைவாகத்தான் உள்ளது.

30 சதவீத மின்சாரம்

சாணத்தில் பெரும்பகுதி சாண எரிவாயுக் கிடங்குக்குச் செல்கிறது. அதில் கிடைக்கும் வாயுவைக் கொண்டு மின்னியற்றி (Generator) ஒன்றை இவர் இயக்குகிறார். இந்த மின்சாரம் உருவாக்கும் எந்திரத்தை, இவர் தானே முயற்சி செய்து வடிவமைத்துள்ளார். கார் எந்திரத்தை மாற்றியமைத்து இதைச் சாத்தியப்படுத்தியுள்ளார். பண்ணையின் ஏறத்தாழ 30 சதவீத மின்சாரத் தேவையையும், இனிப்பு, சமையல் கூடத்தின் தேவையையும் இந்தச் சாண எரிவாயுவே நிறைவு செய்துவிடுகிறது.

‘நான் சாண எரிவாயுக் கலனை அமைக்கும்போது 50 மாடுகளுக்குரியதாக அமைத்துவிட்டேன். இப்போது வளர்க்கும் 150 மாடுகளுக்கும் தேவையான அளவில் கலனைப் பெரிதாக அமைத்திருந்தால், பண்ணையின் முழு மின்சாரத் தேவையையும் இதன் மூலமாகவே நிறைவு செய்திருக்கலாம்’ என்கிறார் மார்க்கண்டேயன். அத்துடன் ‘நாங்கள் அவசரத் தேவைக்காக வாங்கி வைத்திருந்த இயற்கை எரிவாயு உருளை (gas cylinder) இன்னும் அப்படியே உள்ளது’ என்று கூறிச் சிரிக்கிறார்.

பணியாளர்களுக்கு மரியாதை

ஒரு தொழிற்சாலைபோல இவருடைய பண்ணை அனைத்து திட்டமிடலுடனும் நடக்கிறது. முறையான கால அட்டவணை பின்பற்றப்படுகிறது. பணியாளர்களுக்குச் சீருடை கொடுக்கப்பட்டுள்ளது, பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அவர்களது குழந்தைகள் படிக்க நடுவண் கல்வி முறை (CBSE) படிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழப் பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் வசதிகளைப் போலப் பணியாளர் களுக்கு இங்கே வசதிகள் கிடைக்கின்றன. நிலக்கிழார் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தொழில் உற்பத்தி முறை உத்திகள் இந்தப் பண்ணையில் பின்பற்றப்படுகின்றன. இத்தனை இருந்தும் வேளாண் வேலைக்கு ஆட்கள் வருவது குறைவாகத்தான் உள்ளது எனத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மார்க்கண்டேயன்.
மார்க்கண்டேயனைத் தொடர்புகொள்ள : 09842905111

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment