Monday 11 June 2018

கோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு :

1. கொட்டகை பராமரிப்பு
2. கோடை வெயிலினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க யோசனைகள்

கொட்டகை பராமரிப்பு :

கால்நடைகள் பொதுவாகவே, உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தன்மை பெற்றுள்ளன. உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ளப் பண்ணையில் உட்புற மற்றும் வெளிப்புற வெப்பநிலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதிக உடல் வெப்பமானது உடலில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களினால் (வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பச்சலனம்) வெளியேற்றப்படுகிறது.

கால்நடைகளில் பொதுவாகவே அதிக உடல் வெப்பம், வியர்வை மூலமாகவும், சுவாசம் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது.

வெப்பம் அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ உடல்நிலை பாதிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. மேலும் நாம் வளர்க்கும் கால்நடைகள் (கலப்பினப் பசுக்கள், வெண்பன்றிகள்) குளிர்பிரதேசமான நாடுகளைத் தாயகமாகக் கொண்டவை என்பதால் கோடைக்காலப் பராமரிப்பு மிக முக்கியமானதாகும்.

கோடை வெயிலினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க யோசனைகள் :

கொட்டகை :

கொட்டகையின் கூரை, வெப்பம் ஊடுருவாத வண்ணம் அமைக்க வேண்டும். கூரையின் மேல் தென்னை ஒலைகளைப் பரப்பி அவற்றின் மேல் தண்ணீர் தெளிப்பதன் மூலம் கொட்டகையினுள் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் தான் பரந்த மரக்கிளைகளுக்கு கீழே கொட்டகை அமைத்தல் சாலச்சிறந்தது எனக் கூறப்படுகிறது.

* கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான இட வசதியைக் கொடுக்க வேண்டும்.

* கூரை ஆஸ்பெஸ்டாஸினால் கட்டப்பட்டிருந்தால் கூரையின் மேற்புறத்தில் வெள்ளையடிக்க வேண்டும். உட்புறச் சுவர் கருப்பு வர்ணம் பூசவேண்டும். இவ்வாறு செய்தால், வெப்பக் கதிர்கள் கூரையின் உள்ளே உடுருவாது.

* அதிக வெப்பத்துடன் கூடிய அதிக ஈரப்பதம் உள்ள சுற்றுப்புற சூழலில் கால்நடைகள் மிகுந்த அயர்ச்சிக்குள்ளாகும். எனவே கொட்டகையை நன்கு காற்றோட்டம் உள்ளவாறு அமைக்க வேண்டும்.

* கொட்டகையைச் சுற்றிச் சுபாபுல், வேலிமசால் போன்ற தீவனப் புல் மரங்களை வளர்க்கலாம். இதனால் கொட்டகையின் உட்புறத்தில் அதிக வெப்பமில்லாமல் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

* கால்நடைகளுக்கு உடலின் மீது தண்ணீர் தெளிப்பதன் மூலமும் அவற்றின் உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

* வெப்பக் காற்று அதிகமாக வீசும்போது தொழுவத்தின் பக்கவாட்டில் நூல் சாக்குகளை நீரில் நனைத்து தொங்கவிடலாம்.

* கொட்டகையின் உயரம் 9 அடிக்குக் குறையாமல் இருந்தால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

* கொட்டகையில் மின் விசிறிகள் பொருத்தப்படுவதன் மூலம் வெப்பத் தாக்கத்தைக் குறைக்கலாம்.

* குளியல் தொட்டிகளில் வெயில் நேரத்தில் கால்நடைகளை விடுவதன் மூலம் அவற்றின் உடல்வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

* ஆடுகளைப் பொறுத்தவரை குட்டிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைத்தவிர்க்கக் குட்டிகளை ஆடுகளோடு மேய்க்கவிடாமல் தனியாகப் பராமரிக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தண்ணீரின் அவசியம் :

* தண்ணீர் உடல் வெப்பத்தைச் சமநிலைப் படுத்துவதற்கும், உடல் உள்ளுறுப்புகள் வளர்ச்சி அடைவதற்கும் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் அடிப்படையாக உள்ளது. தண்ணீரின் தேவை கோடைக் காலத்தில் மிக அவசியம். வழக்கத்தை விடக் கூடுதலாக, இக்காலகட்டத்தில் கொடுக்கவேண்டும்.

* கால்நடைகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்குமாறு தண்ணீர்த் தொட்டியை அமைத்திருக்க வேண்டும்.

* பால் உற்பத்தி செய்யும் மாடுகளுக்குக் கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

* தண்ணீர் வழங்கும் தொட்டி வெள்ளை நிறத்தில் இருந்தால் கால்நடைகளுக்குக் குடிக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கும்

* கலப்புத் தீவனம் உட்கொண்டபிறகு நீர்வைத்தால் அதிகமாகக் குடிக்கும் இதன் மூலம் தண்ணீர் உட்கொள்வதை அதிகரிக்கலாம்.

* தண்ணீருடன் சிறிதளவு உப்பு அல்லது கலப்புத் தீவனம் கலந்து அளித்தாலும் மாடு நீர் அதிகமாக அருந்தும்

* கால்நடைகள் நீரோடைகளின் சத்தம் கேட்டுக் குடித்துப் பழக்கப்பட்டதால், தானியங்கி தண்ணீர் குழாய்கள் மூலம் அளிக்கும் போது அந்தச் சப்தம் கால்நடைகளை அதிகநீர் அருந்த தூண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு வழிமுறைகளில் அவரவர்களின் தேவைக்கு ஏற்பக் கையாளுவதன் மூலம் கோடைக்காலங்களில் கால்நடைகள் வளர்ப்பில் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment