Wednesday 6 June 2018


கிளிக் காய்ச்சல் (அ) பூசன நோய் :


1. பரவும் முறை
2. பறவைகளில் நோய் அறிகுறிகள்
3. விலங்குகளில் நோய் அறிகுறிகள்
4. மனிதர்களில் நோய் அறிகுறிகள்
5. நோய்த் தடுப்பு முறைகள்
6. சிகிச்சை

கிளிக் காய்ச்சல் ஆங்கிலத்தில் கிளாமெய்டியோஸிஸ், இந்தநோய் பறவை இனங்களில் காணப்படும் மிக அறிய வகை நோய். இந்நோய் கிளாமெய்டோடியா சிட்டசி என்னும் நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இது கிளிகள், இனப்பறவைகளான கிளி, இந்தியப் பஞ்சவர்ணக் கிளி, நேசப்பறவைகள், ஆஸ்திரேலியா நாட்டுக் கிளி போன்றவற்றையும் வான்கோழி, புறா, வாத்து முதலிய பறவைகளையும் பாதிக்கிறது.

பரவும் முறை:

இந்நோயின் அரும்பு காலம் 5 முதல் 19 நாள்கள், ஒரு பறவையில் இருந்து மற்றொரு பறவைக்கு மாசடைந்த மலக்கழிவு மற்றும் இறகுகளில் உள்ள தூசியுடன் சுவாச உறுப்பு மூலமாகப் பரவுகிறது. பறவைகளுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பே நோய்த் தொற்று ஏற்பட முக்கியக் காரணம். இதன் அடிப்படையில் தான் கூட்ட நெரிசல், இனப்பெருக்கச் செயல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள பறவைகளில் இந்நோயின் காரணி அதிக அளவில் வெளியாகிறது. எவ்வித நோய் அறிகுறி இல்லாத பறவைகளும் கூட நோய்க் காரணியை வெளியேற்றி நோயினைப் பரப்புகிறது. வாத்துகளில் செங்குத்துப் பரவல் முறை மூலமாக முட்டைகளுக்கும் இந்நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

பறவைகளில் நோய் அறிகுறிகள் :

இந்நோய் சுவாச மற்றும் இரைப்பை அமைப்புகளில் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எலுமிச்சைப் பச்சை நிறத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு இந்நோயின் காரணி, கல்லீரலில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் உண்டாகும் நோய் வெளிப்பாடு அகும். வேறு சில பறவைகளில் பசியின்மை, உடல் இளைப்பு, மன அழுத்தம், வயிற்றுப்போக்கு, வெண்படக் கண்கள் அல்லது அலகில் இருந்து நீர் வெளியேற்றம், இறப்பு போன்றவை நேரிடும். ஆனால் வேறு நோய்களிலும் இதே அறிகுறிகள் தென்படும். நோய் எதிர்ப்புச் சத்தி குறைபாடு உள்ள பறவைகளில் தான் இந்நோய் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது.

பெரிய பறவைகளை விடக் குஞ்சுகளே இந்நோயின் தாக்கத்தினால் பாதிப்பு அடைகின்றன. இக்குஞ்சுகளே நோய் கடத்தியாகவும் திகழ்கின்றன.

கிளிக்காய்ச்சல் மனிதர்கள் மற்றும் வேறு சில விலங்குகளுக்கும் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிக முக்கியமான நோயாகக் கருதப்படுகிறது.

விலங்குகளில் நோய் அறிகுறிகள் :

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் இந்நோய்க் கிருமிகள் கருவீச்சு ஏற்படுத்தும் காரணியாக விளங்குகின்றன.

மனிதர்களில் நோய் அறிகுறிகள் :

காய்ச்சல் குளிர், தலைவலி, பசியின்மை, மூச்சுவிடச் சிரமம், இருமல், தலை வலி, கண் சவ்வு அழற்சி போன்றவை காணப்படும். மேலும் நுரையீரல் அழற்சி, இதய-நாள மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.

நோய் எதிர்ப்புச் சத்தி குறைந்து காணப்படும். மனிதர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நோய்த் தடுப்பு முறைகள் :

• புதிதாக வாங்கும் பறவைகள் நோய்ப் பாதிப்பு ஆய்வுக்கு உள்ளாக்கப் பட்டிருக்க வேண்டும்.

• மலக்கழிவுகளைச் சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்திச் சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைக்க வேண்டும்.

• பறவைகளுக்குச் சுகாதாரமான காற்றோட்டம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

• குழந்தைகள், வயதானவர்கள், கருவுற்ற பெண்கள் பறவைகளிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.

• பறவைகள் அயர்ச்சியில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

• மேலும் தீவிரவாதிகள் இக்கிருமியைக் கொண்டு உயிர் தீவிரவாதத்திற்கு உட்படுத்தி மனிதர்களைக் கொல்லுகின்றனர்.

சிகிச்சை :

• பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்துகளை உட்கொள்ளலாம்.

• மேலும் பறவைகளைக் கையாளும் தருணத்தில் கையுறை மற்றும் மூக்குக் கவசம் அணிய வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment