Saturday 2 June 2018

செல்லப் பிராணிகளில் ஏற்படும் வலிப்பு நோய்ப் பற்றி ஓர் அலசல் :

1. மூளைக்குள் ஏற்படும் பாதிப்புகள்
2. வலிப்பு நோயின் அறிகுறிகள்
3. தொடர் வலிப்பு
4. நோய்க் காரணிகளைக் கண்டறிதல்
5. சிகிச்சை முறைகள்
6. வலிப்பு நோயின் பாதிப்புகள்
7. உரிமையாளர்கள் செய்ய வேண்டியவை
8. உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டியவை

வலிப்பு எனும் காக்கா வலிப்பானது மனிதனைப் போலவே செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளிலும் காணப்படுகிறது. வலிப்பு நோயானது நரம்பு மண்டலப் பாதிப்பினால் குறிப்பாகப் பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படுகிறது. நன்கு பராமரிக்கப்படும் ஒரு நாய் அல்லது பூனையில் சுமார் 24 மணிநேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேல் வலிப்பு ஏற்படும் பொழுது இதனைவலிப்பு நோய் எனக் கூறுவர். பொதுவாக நாய்களில் வலிப்பு நோயின் தாக்கம் மேலை நாடுகளை விட இந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வலிப்பு நோயானது நாய்களின் எந்த வயதினிலும் ஏற்படலாம். வலிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். மூளையில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு வகையாகவும், மூளைக்கு வெளியே ஏற்படும் பாதிப்புகள் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்படுகின்றன.

மூளைக்குள் ஏற்படும் பாதிப்புகள் :

நாய் போலியோ எனும் டிஸ்டம்பர் நோயானது நாய்களைத் தாக்கும் மிக மோசமான நோயாகும். இது நமது நாட்டில் பரவலாக நாய்களை பாதிக்கிறது. மூளையில் வைரஸ் தாக்கத்தின் வீரியத்தைப் பொறுத்து வலிப்பின் தாக்கம் இருக்கும். மேலும் பூனைகள் வயிறு வீக்கக்காய்ச்சல், இரத்தப் புற்று நோய் போன்ற வைரஸ்களால் பாதிக்கப்படும் பொழுது வலிப்பு நோய் உண்டாகிறது. இது தவிர நாய் மற்றும் பூனைகளில் இரத்தத்தில் உருண்டைப் புழுக்கள் தாக்கத்தினாலும் கிரிப்டோஸ்பேரிடியா, பிலாஸ்டோமைக்கோசிஸ், ஹிஸ்டோ பிலாஸ்மா போன்ற பூஞ்சைத் தாக்கத்தினாலும் வலிப்பு நோய் உண்டாகிறது. நாய் மற்றும் பூனைகளில் வைட்டமின் பி1 குறைபாட்டினாலும் வலிப்பு நோய் உண்டாகிறது. கன உலோகமான லெட் அதிகளவு உடம்பில் சேரும்பொழுது வலிப்பு நோய் உண்டாகிறது. இது தவிர மூளையில் உண்டாகும் நீர்க் கட்டிகள், கொழுப்பு அதிகளவில் படிவதாலும் மற்றும் புற்றுநோயினாலும் வலிப்பு வருகிறது.

மூளைக்கு வெளியே ஏற்படும் கீழ்க்கண்ட காரணகள் :

• சர்க்கரை நோய்

• இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவு

• சிறுநீரகப் பாதிப்பு

• கல்லீரல் பாதிப்பு

• இரத்தத்தில் உடலுக்குத் தேவையான உப்புகள் குறைதல்

• இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு

வலிப்பு நோயின் அறிகுறிகள் :

நாய்களில் வலிப்பு ஏற்படுவதற்கு முன் எத்தகைய மனமாற்றங்கள் உண்டாகின்றன என விஞ்ஞானிகளால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. வலிப்பு ஏற்படுவதற்கு முன் மனிதனில் ஏற்படுவது போன்ற அனைத்து மாற்றங்களும் நாய்களுக்கு உண்டாவதில்லை. எனினும் சில நாய்கள் பதற்றத்துடனும் சில நாய்கள் சோர்வுடனும் காணப்படலாம். வலிப்பு ஏற்படும்பொழுது நாய்களின் வாயிலிருந்து நுரை தள்ளும். சில நாய்கள் தங்களுடைய நாக்கைக் கடித்துக்கொள்ளும். தரையில் படுத்துக் கால்களைப் பரபரவென இழுக்கும். மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும். உடம்பு முழுவதும் விட்டு விட்டு இழுக்கும். இதன் பின்னர் சிறிது நேரம் நாய்கள் அமைதியாகப் படுத்து உறங்கும். பொதுவாக வலிப்பானது இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்காது. வலிப்பு ஏற்படும் பொழுது நாய்களில் கால் முறிவு, புண்கள் உண்டாதல் போன்றவை இருக்கும்.

வலிப்பு முடிந்தவுடன் நாய்கள் மிகுந்த சோர்வுடன் காணப்படும். சில நாய்களளில் பசியுடன் நீர் அருந்துதல், உணவு உண்ணுதல் போன்றவையும் காணப்படும். சில நாய்கள் சமயங்களில் எஜமானரைக் கூடக் கடிக்கலாம். சில நாய்களில் மனமாற்றம் உண்டாகும். அதாவது இவ்வகை நாய்கள் எக்காரணமுமின்றிக் குரைத்துக் கொண்டே இருக்கும். அணுகினால் இந்நாய்கள் அதிகக் கோபப்படும்.

தொடர் வலிப்பு :

பெரும்பாலும் நாய்களில் வலிப்பு முடிந்து சிறிது நேரம் அல்லது சிறிது காலம் கழித்தே அடுத்த வலிப்பு உண்டாகும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து வலிப்பு ஏற்படுவது நாய்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. சில நேரங்களில் வலிப்பானது 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்துச் சில சமயங்களில் 30 நிமிடங்கள் வரையிலும் காணப்படும். இவற்றைத் தொடர் வலிப்பு என்று கூறுவர். பெரும்பாலும் இந்நாய்கள் மரணத்தின் வாயிலைத் தொட்டுவிடுகின்றன. தொடர் வலிப்பினால் பாதிக்கப்படும் நாய்கள் பெரும்பாலும் சிறிது காலமே உயிர் வாழ்கின்றன.

நோய்க் காரணிகளைக் கண்டறிதல் :

முதலில் வலிப்பு நோய் உள்ள நாய்களுக்கு இரத்தத்தின் சர்க்கரை, உப்புகள், கொழுப்பு மற்றும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கால்நடை மருத்துவரின் பரிந்துரைப்படி பரிசோதனை செய்ய வேண்டும். மேலை நாடுகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் முறை மூலம் மூளையில் பிறவி ஊனம், மூளைக்கட்டிகள் ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது. இவ்வசதி நமது நாட்டில் கால்நடைத் துறையில் இன்னும் வளர்ச்சியடையவில்லை. எனினும் இரத்தப் பரிசோதனை செய்வது நோய்க் காரணிகளைக் கண்டறிவதில் உதவியாக இருக்கும்.

சிகிச்சை முறைகள் :

பொதுவாக மாதத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேல் வலிப்பு வரும் பட்சத்திலும், வலிப்பானது கொத்தாக வரும்பொழுதும் வலிப்பானது தொடர்ந்து 2 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலும் வரும்பொழுது கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சையளிக்க வேண்டும். வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகள் பட்டியலிடப்பட்ட வகையில் உள்ளதால் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பெற வேண்டும். வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை நாய்களின் ஆயுள் முழுவதும் கொடுக்க வேண்டும் என்பதை எஜமானர்களுக்குப்புரிய வைக்க வேண்டும். தொடர் வலிப்புள்ள நாய்க்கு அவசர காலச் சிகிச்சையளிக்க வேண்டும். அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மனிதனில் வலிப்பு நோயைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. நாய்களுக்கு இதன் பயன்பாடு குறித்த தெளிவான ஆராய்ச்சிகள் இல்லை. நாய்களுக்கு இளம் குட்டியிலிருந்தே நாய் போலியோ எனும் டிஸ்டம்பர் நோய்க்கான தடுப்பூசி போடுவது சிறந்தது.

வலிப்பு நோயின் பாதிப்புகள் :

வலிப்பு நோயானது நாய்களின் வாழ்நாளைச் சுமார் 3 ஆண்டுகள் வரை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வலிப்பு நோயானது நாய்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பது மட்டுமல்லாது அதனுடைய எஜமானர்களும் மனதளவில் பாதிப்படைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உரிமையாளர்கள் செய்ய வேண்டியவை :

* வலிப்பு 5 நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அனுகவும்.

* வலிப்பு ஏற்படும் கால அவகாசத்தைக் குறித்துக் கொள்ளுதல் அவசியம்.

* வலிப்பு ஏற்படுவதைப் படம் பிடித்துக் கால்நடை மருத்துவரிடம் காண்பிப்பதன் மூலம் சிகிச்சைக்கான வழிமுறையை மேம்படுத்தலாம்.

* வலிப்பு ஏற்படும் நேரங்களில் நாய்கள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளாதவாறு பாதுகாத்தல் அவசியம்.

* வெளிப்புறத் தூண்டல்களைத் தவிர்த்தல் அவசியம். எடுத்துக்காட்டாக: தொலைக்காட்சி மற்றும் விளக்குகளை (டுiபாவ) அணைத்தல் போன்றவை.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதிக்கப்பட்ட நாய்களை உடல் பரிசோதனைக்குக் கொண்டு வருதல் அவசியம்.

உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டியவை :

* நாய்களுக்குத் தினவரி தவறாமல் வலிப்பிற்காகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்தினைக் கொடுத்தல் அவசியம்.

* கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தின் அளவை அதிகரிக்கவோ குறைக்கவோ புது மருந்துகளைக் கொடுக்கவோ அல்லது மருந்துகளை நிறுத்தவோ கூடாது.

* குறிப்பிட்ட இடைவெளியில் வலிப்பு ஏற்படும்போது நாயினை அலைகழித்தலைத் தவிர்க்கலாம். அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.

* வலிப்பு ஏற்படும்போது நம் கையினை நாயின் வாய்க்கருகில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நாய் கடிப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment