Monday 18 June 2018

மழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு :

1. முன்னுரை
2. பசுக்களின் இருப்பிடப் பராமரிப்பு
3. மழைக்காலத்தில் தீவன மேலாண்மை
4. மழைக்காலத்தில் கன்றுப் பராமரிப்பு
5. மழைக்காலத்தில் நோய்த் தடுப்பு முறைகள்

முன்னுரை :

நமது நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளச்சேரி போன்றவை நமது வானநிலைக்கேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், நாம் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கில் குளிர்பிரதேசங்களைச் சேர்ந்த அயல்நாட்டு மாட்டினங்களான ஜெர்சி, பிரிசியன் போன்ற இனங்களை இறக்குமதி செய்து இன்று பெரும் எண்ணிக்கையில் இக்கலப்பினப் பசுக்களை வைத்துள்ளோம். நம் நாட்டுப் பசுக்களைக் காட்டிலும் இக்கலப்பினப் பசுக்கள் வானிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்குப் பெரிதும் உள்ளாகின்றன. எனவே கலப்பினப் பசுக்களை வைத்துப் பராமரிப்பவர்கள் பருவநிலைக்கேற்ற மேலாண்மை முறைகளைக் கையாண்டால் பசுக்களின் உற்பத்தித் திறன் குறையாமல் பார்த்துக் கொள்ள இயலும். மழைக்காலத்திற்கேற்ற கறவை மாடு பராமரிப்பு முறைகளை இனிக்காண்போம்.

பசுக்களின் இருப்பிடப் பராமரிப்பு :

மழைக்காலத்தில் கொட்டகையினுள் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தரைப்பகுதி ஈரமாக இருந்தால் பசுக்கள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.

* தரையில் நீர் தேங்கினால் பசுக்களுக்குக் குளம்பு அழுகல் நோய் வர நேரிடும்.

* தரையில் பள்ளங்கள் இருந்தால் அவற்றினை மூடி சரிசெய்ய வேண்டும். தரையின் ஈரத்தை உறிஞ்சச் சுட்ட சுண்ணாம்புத் தூளைத் தரையின் மீது தெளித்து விடவும்.

* மழைச்சாரல் மற்றும் கூரைமீது விழும் மழைநீர் கொட்டகையினுள் வராமல் இருக்கக் கூரையின் விளிம்புகள் 75-90 செ.மீ வெளியே நீண்டு இருக்குமாறு அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் பிளாஸ்டிக் திரைச் சீலைகளைப் பக்க வாட்டில் கட்டி விடலாம். மழைநீர் கொட்டகையினுள் வராமல் பாதுகாக்கலாம்.

* கூரையில் ஒட்டைகள் இருப்பின் மழைக்காலத்தின் முன்பே அதனை 'தார் சீட் போன்றவற்றைக் கொண்டு அடைத்து விட வேண்டும்.

* கொட்டகையினைச் சுற்றி மழைநீர் தேங்காமல் வடிந்து விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கினால் கொசு மற்றும் ஒட்டுண்ணிகள் பெருகும் இடங்களாகிப் பசுக்களைப் பாதிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மழைக்காலத்தில் தீவன மேலாண்மை :

தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்கள்மேயாது. மழைக்கு ஒதுங்க இடம் தேடும். போதிய அளவு மேயவில்லை என்றால் பால் உற்பத்தி குறையும். எனவே மழை நாள்களில் கறவைப்பசு மற்றும் எருமைகளை மேய வெளியே விடாமல் அடர்தீவனத்தைச் சற்று கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இத்துடன் பசுக்களின் இருப்பிடத்திலேயே புல், தழை, வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர் தீவனமும் உபரியாகக் கொடுத்துக் கறவைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நிறைவு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் இருப்பில் உள்ள தீவனப் பொருள்கள் நனைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். தீவனம் நனைந்தால் பூஞ்சைக் காளான் படர்ந்து நச்சு நோய் ஏற்படுத்தும். அடர்தீவனத்தைத் தரையிலிருந்து சற்று உயரமாக ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். வைக்கோல் மற்றும் சோளப் படப்புகளின் மீது பாலிதீன் விரிப்புகளைப் போட்டு போர்த்தி விடலாம்.

புதுமழையின் போது புற்கள் துளிர்க்க ஆரம்பிக்கும். இளம்புற்களை மேயும் பசுக்கள் இளகிய சாணம் போடும். இதைக் கழிச்சல் என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேய்ச்சலுடன் உபரியாக உலர்தீவனமான வைக்கோல், தட்டை கொடுத்து வந்தால் சாணம் இயல்பான நிலைக்கு மீண்டும் வரும்.

மழைக்காலத்தில் கன்றுப் பராமரிப்பு :

மழைக்காலத்தில் பிறக்கும் கன்றுகள் ஈரப்பதம் மற்றும் குளிரினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே மழைக்காலத்தில் கன்றுகளை நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் கன்றுகள் கதகதப்பான சூழலில் இருக்குமாறு செய்ய வேண்டும். தரையில் வைக்கோல் பரப்புதல், பக்கவாட்டில் குளிர் தாக்கம் ஏற்படாமல் இருக்கக் கோணிப்பைகளைக் கட்டுதல், இரவு நேரத்தில் கன்றுகளின் மேலே மின்பல்புகளைத் தொங்க விடுதல், கன்றுகளுக்குச் சாம்பிராணி புகைமூட்டம் போடுதல் போன்ற பராமரிப்புச் செயல்கள் கன்றுகளுக்கு நன்மை பயக்கும். கன்றுகளுக்குச் சத்தான தீவனம் அளித்து வருவது நன்று. இரத்தக் கழிசல் (காக்சிடியோசிஸ்) தடுப்பு மருந்துகளைக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கவும்.

மழைக்காலத்தில் நோய்த் தடுப்பு முறைகள் :

கால்நடைகளைத் தாக்கும் பெரும்பாலான நோய்களின் கிளர்ச்சி மழைக்காலத்தில் தான் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் வரும் நோய்களைத் தடுக்கப் பருவமழை தொடங்கும் முன்னரே உரிய தடுப்பூசிகளைக் கறவை மாடுகளுக்குப் போட வேண்டும். கோமாரி, சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் நோய்க்கு மழைக்காலம் தொடங்கும் முன்னர் கால்நடை மருத்துவரை அணுகித் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஏரி, குளம், குட்டைகளில் தண்ணி குடிக்கும் மாடுகளுக்கும் இவற்றைச் சுற்றி மேயும் மாடுகளுக்கும் தட்டைப் புழுவிற்கான குடற்புழு நீக்க மருந்தினைப் பருவ மழை தொடங்கும் முன்பு கொடுக்க வேண்டும்.

பசுக்களைப் பாதுகாத்தல் :

மழைக்காலத்தில் இடி மற்றும் மின்னல் ஏற்படுவது உண்டு. இடிதாக்கி மனித மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு நேரிடுகிறது. இடி மின்னலின் போது கால்நடைகளைத் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இடியுடன் கூடிய மழையின் பொழுது பசுக்களை மரத்திற்குக் கீழே ஓட்டிச் செல்லக் கூடாது. மேய்க்க வரும் மரத்தின் அடியில் அடைக்கலம் தேடக் கூடாது. பனைமரம் மற்றும் தென்னைமரங்களுக்கு அடியில் செல்வது ஆபத்தைக் கூட்டும். இடி மின்னலின் போது செல்போன் கோபுரங்கள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், உயர் அழுத்த மின்சார உயர் வழித்தடங்கள் ஆகியவற்றின் கீழ் மாடுகள் சென்று மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மின்னலின் போது பொதுவாக மரங்களுக்கு 10 அடிக்கு அப்பால் கால்நடைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இடி மின்னல் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் கொட்டகையைச் சுற்றி 10 அடி தூரத்தினுள் மரங்களை நடக்கூடாது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment