Saturday 22 April 2017

வெப்பத்தையும், காற்றில் இருக்கும் மாசுவையும் குறைக்கும் புங்கன் மரம் பற்றி தெரியுமா?


142 வருடங்கள் காணாத வறட்சி தமிழகத்தை வாட்டுகிறது. 'அந்த மாவட்டத்தில் 110 டிகிரி வெயில்,இந்த மாவட்டத்தில் 108 டிகிரி வெயில்' என்று தினம் ஒரு 'அனல்' செய்தி நம்மை வாட்டுகிறது. பிரேக்கிங் நியூஸ்களில் கட்டாயம் வெயிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு வெப்பம் நம்மை நொங்கெடுக்கிறது. இதனால்,பூமிக்கு கீழே தண்ணீர் லெவல் அதலபாதாளத்திற்கு போக, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மாவட்டந்தோறும் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். முந்தாநாள் வானிலை ஆராய்ச்சி மையம், 'பதினெட்டு மாவட்டங்களில் அனல் காற்று வீசும். அதனால்,தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம்' என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் வெயிலில் வந்த ஒரு முதியவர் வெயிலின் கொடுமையில் மயங்கி விழுந்து உயிரை விட்டிருக்கிறார். வீட்டிற்குள்ளும் இருக்க முடியவில்லை. வெப்பம் போட்டு தாளிக்கிறது. ஃபேனை சுழலவிட்டால், அதுவும் தன் பங்குக்கு வெப்ப காற்றை நம் உடம்பின் மீது படரவிட்டு இம்சிக்கிறது. இதனால்,'வெயிலில் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்வது?' என்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள் மக்கள். 'வெயிலின் உக்கிரத்தை தடுக்க இத பண்ணுங்க, அத பண்ணுங்க' என்று மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு டிப்ஸ்களை அள்ளி தெளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால்,வெயிலின் வெக்கையில் இருந்து அதெல்லாம் தற்காலிகமாகதான் பாதுகாக்கும். மனிதர்களுக்கு நிரந்தர குளிர்ச்சியை தரும் மரம் புங்கன் என்பது உங்களுக்கு தெரியுமா?.

இன்று மாநகரங்கள், நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களில்கூட கான்கிரீட் வீடுகள் அதிகரித்துவிட்டதால், சமூக காடுகள் குறைந்து நகரம், கிராமங்கள் யாவும் 'கான்கிரீட்' காடுகளாகிவிட்டன. சமூக காடுகள் குறைந்ததால், வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசு அடைந்ததோடு, அதீத வெப்பமும் அடைந்திருக்கிறது. இயற்கை மீது நாம் இஷ்டத்திற்கு 'கை' வைத்ததால், இப்போது கடும் வறட்சி, பருவம் தவறிய மழை, அதிக பனிக்காற்று, அதிகமான வெயில் என்று பல பாதிப்புகளால் இயற்கை நம்மை பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. எனவே, இனியும் இயற்கையை சீண்டாமல், நம்மால் முடிந்த அளவிற்கு வீடு, தெருக்களில் 'புங்கன்' வளர்த்து 'வெப்பம்' குறைக்கலாம். அல்லது புண்ணியம் தேடலாம்.

கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும் காற்று வெப்பமடைந்து வருகிறது. போதாக்குறைக்கு வாகனங்களின் புகையால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. அதிகப்படியான மின் விளக்குகளாலும் வெக்கை அதிகரிக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும்,மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து, இம்மரத்தின் கிளைகள் அதிகமான குளிர்ச்சி நிறைந்த காற்றை நமக்கு கொடுக்கும். இம்மரம் காற்றில் உள்ள மாசுக்களை (கார்பன்டை ஆக்ஸைடு) வடிக்கட்டி நல்ல காற்றினை (ஆக்சிஜன்) நமக்கு தரவல்லது.

அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது. அதனால்,இயற்கையை அழித்து நாம் செய்த பெரும்பாவத்திற்கு மாற்றாக இந்த மரத்தை நட்டு புண்ணியம் தேடலாம். பள்ளி,அரசு வளாகங்களில் 5 முதல் பத்து மரமும், 30, 40 வீடுகள் உள்ள மாநகர, நகர தெருக்களில் பத்து புங்கனும், பெரிய வளாகங்களில் 15 மரங்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். அதேபோல், கிராமங்களில் வீட்டிற்கு ஒரு புங்கன் மரக்கன்றை வீட்டின் முன்பு நட்டு வளர்க்கலாம். வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்று குளிர்காற்றாக மாறும். அதன்மூலம், நம்மை தாக்கும் வெயிலின் உக்கிரம் குறையும். இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை,வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ, அல்லது சுவர்களையோ பாதிக்காது. அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளக்கலாம்.

அப்புறம் என்ன, வெயிலுக்கு பயந்து வெள்ளரிக்காய் சாப்பிடுவதோடு, வெள்ளனா புங்கன் மரத்தை நடும் சோலியையும் சட்டுபுட்டுன்னு பாருங்க மக்களே!.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment