Wednesday 19 April 2017

“செலவு குறைந்த பாரம்பர்ய முறைகள் இருக்க, கடனில் தள்ளும் ரசாயனங்கள் எதற்கு?”


சாம்பல் இருக்க பயமேன்!

கோவில்பட்டி மண்வள ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அலுவலர் நீ.செல்வம் பேசியபோது... 

“செடிகள்ல பூச்சிகளைப் பார்த்தவுடனேயே கடைக்குப்போய் ரசாயனப் பூச்க்கொல்லியை வாங்கி தெளிக்கிறதுதான் விவசாயிகள் செய்ற பெரிய தவறு. தொடுநஞ்சு, குடல்நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகைநஞ்சு, நரம்புநஞ்சு என மொத்தம் அஞ்சு வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்கு. இந்த அஞ்சு வகைகளையும் நாம உபயோகப்படுத்திட்டோம். இந்தியாவில இப்போ அதிகமா விற்பனையாகிறது, ஐந்தாம் தலைமுறைப் பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சுதான். விதையிலேயே பூச்சிக்கொல்லியைத் தெளித்து விற்பனை செய்றாங்க. ஆனாலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியலைங்கிறதுதான் உண்மை. என்ன காரணம்னா... பூச்சிக்கொல்லியை திரும்பத் திரும்ப பூச்சிகள் மேல தெளிக்கிறப்போ, பூச்சிகளோட உடம்புல எதிர்ப்புத்தன்மை உருவாகிடுது. அதனால, பூச்சிக்கொல்லிகள் விஷமா இல்லாம, பூச்சிகளுக்கு டானிக்காக மாறிடுது. நாம அடிக்குற பூச்சிக்கொல்லிகள் மண்ணுலயும் விழறதால மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் செத்துப் போகுது.
நெற்கதிர்கள்ல பால் பிடிக்கிற சமயத்துல கதிர் நாவாய்ப்பூச்சி தாக்கும். அப்படிப்பட்ட சமயத்துல அடுப்புச்சாம்பலை வயல்ல தூவி விடுறதைத்தான் வழக்கமா வெச்சிருந்தோம். பூச்சிகள் கட்டுப்பட்டுடும். ஆனா, இப்போ அதை மறந்துட்டு வீரியமான பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறோம். அது நெற்கதிர் முழுக்க பட்டுடும். அறுவடை செய்த பிறகு வைக்கோலை மாட்டுக்குக் கொடுக்கிறோம். வைக்கோல் மூலமா மாட்டு உடம்புக்குள்ள நஞ்சு போகுது. அப்போ அது கொடுக்கிற பாலும் நஞ்சாகிடுது. பூச்சிகளை அழிக்க தெளிக்கிற விஷம் இப்படித்தான் மறைமுகமா மனிதனையும் பாதிக்குது.

களைக்குப் பயந்தால் விதைக்க முடியாது, பூச்சிகளுக்குப் பயந்தா விவசாயமே செய்ய முடியாது. பூச்சிகள் எல்லாமே கெட்டது செய்றதில்ல. நல்லது செய்ற பூச்சிகளும் இருக்கு. பயிரைத் தாக்குற கெட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தணும்னா நல்லது செய்யுற பூச்சிகள் வயல்ல இருக்கணும். ஆனா, பூச்சிக்கொல்லி தெளிக்கிறப்போ அவ்வளவு பூச்சிகளும் அழிஞ்சிடும்.

வயலைச் சுத்தியும், ஊடுபயிரா தட்டைப்பயறை விதைச்சு விட்டா அசுவினிப் பூச்சிகள் தட்டையில் வந்து உட்காரும். அதைச் சாப்பிட இன்னொரு பூச்சி வரும். அதனால இயற்கை முறையில பூச்சிக் கட்டுப்பாடு நடந்துடும். வரப்பு ஓரங்கள்ல ‘கொட்டமுத்து’னு சொல்ற ஆமணக்கை 8 அடி இடைவெளியில நட்டு... செடி வளர்ந்ததும் வாரம் ஒரு தடவை அதன் இலைகளைக் கசக்கி விடணும். அப்படி செய்துட்டா பூச்சிகள் பக்கத்துல வராது. சூரியகாந்தியும், செண்டுமல்லியும் கூட நட்டு வைக்கலாம். இதுக்கும் மேல, பூச்சிகள் வந்தா... வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், இனக்கவர்ச்சிப்பொறிகள், விளக்குப்பொறிகள்னு பயன்படுத்தலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகள் தேவையேயில்லை. முதல்ல நமக்கு பூச்சிகளைப் பத்தின புரிதலை உண்டாக்கிட்டா போதும். பயப்படாம விவசாயம் செய்யலாம்” என்று அழகாக எடுத்துச்சொன்னார்.

பாறையாகி வரும் மண்!

தொடர்ந்து பேச மேடையேறினார், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ‘முன்னோடி இளம் விவசாயி’ பரத். மேஜையில் 4 கண்ணாடிக் குடுவைகளையும் ஒரு செங்கலையும் வைத்து விட்டு, ‘பயம் இல்லாத விவசாயி யாராவது ஒருத்தர் மேடைக்கு வாங்க’ என்று பரத் சொல்ல, ஒரு விவசாயி மேடை ஏறினார். ஒரு கண்ணாடிக் குடுவையிலுள்ள மண்புழுவை எடுத்து உப்பு நிரப்பப்பட்ட இன்னொரு கண்ணாடிக் குடுவைக்குள் போடுமாறு அந்த விவசாயியிடம் சொன்னார் பரத். மண்புழு உப்பில் விழுந்ததும் நெளிந்து சுருண்டு விட்டது. உடனே அதை எடுத்து வெளியில் விட்ட பரத், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டோம்னா இந்த மண் புழு செத்துடும். இப்படித்தான் மண்புழுக்கள் அதிகம் இருந்த வளமான மண்ணை நாம், ரசாயன உரம்கிற உப்பைத் தூவித் தூவி மலடாக்கிட்டோம்” என்றதும் கைத் தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

தொடர்ந்து பேசியவர், “இந்த மேஜையில் 4 கண்ணாடிக் குடுவைகளும் ஒரு செங்கலும் இருக்கு. முதல் குடுவையில் முழுமையாக மட்கிய உரம் கலந்த மண், இரண்டாவது குடுவையில் உப்பு, மூன்றாவது குடுவையில் மண்புழுக்கள், நான்காவது குடுவையில் வளம் இழந்து வரும் தற்போதைய நிலையில் உள்ள மண் இருக்கு. ரசாயன உரங்கள் அதிகப்படியாக பயன்படுத்துவதால் நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் செத்துப் போயிடும். தொடர்ச்சியாக ரசாயன உரம் போட்டுக்கிட்டே இருந்தால் மண், பாறை போல மாறிடும். அதை உணர்த்தத்தான் ஐந்தாவதாக செங்கல் வைத்திருக்கேன். மண் வளமாக இருந்தால்தான் பயிர் வளரும். பயிர் வளர்ந்தால்தான் பூச்சிகள் வரும். பூச்சிகள் வந்தால்தான் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தறதுக்கான வழியை யோசிக்க முடியும். அதனால, முதல்ல மலடாகி வருகிற மண்ணை வளமாக்கணும்.

காய்கறி, கீரைகளில் பூச்சி மேலாண்மை!

நான் கீரை, காய்கறிகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். கீரைகள்ல மாவுப்பூச்சியும், இலையைத் தின்னும் பூச்சிகளும்தான் அதிகமா வரும். குறிப்பா, சிறுகீரையில்தான் அதிகமான பூச்சித்தாக்குதல் இருக்கும். ஒரே வகையான கீரைகளை நடாமல் பொன்னாங்கன்னி, அரைக்கீரை, பசலை, சிறுகீரைனு கலந்து நட்டால் பூச்சித்தாக்குதல் பரவலைத் தடுக்கலாம். கீரை நடவு செய்த 7-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யாவும், 12-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம்னு கலந்து தெளிச்சாலே போதும் பூச்சிகள் வராது.

காய்கறிகள்ல கத்திரியில மட்டும் 21 வகையான பூச்சிகள் வரும். இதுல 4 பூச்சிகள் மட்டும்தான் நன்மை செய்ற பூச்சிகள். மற்றவை எல்லாமே விளைச்சலைப் பாதிக்கிற பூச்சிகள். கத்திரி நடவு செய்த 40-ம் நாளுக்கு மேல தண்டுத் துளைப்பான் தாக்கும். அதனால செடிகளோட வளர்ச்சி பாதிக்கப்படும். பொறிவண்டு, இலைகள்ல முட்டை வெச்சுடும். அதுல வெளி வர்ற வண்டுகள் இலையில இருக்கிற பச்சையத்தைச் சாப்பிட்டுடும். அதனால, இலை சல்லடை போல மாறி செடியோட வளர்ச்சி குறையும்.செடியை நட்ட 15-ம் நாள்ல இருந்து, 15 நாளுக்கு ஒரு தடவை, சாண வறட்டி சாம்பலை சலிச்சு காலை நேரத்துல (6 முதல் 7 மணிக்குள்) தூவணும். இலை மேல சாம்பல் ஒட்டிக்கிறதால இலையை பூச்சி சாப்பிடாது. அப்படியே சாப்பிட்டாலும் சாம்பல் வயித்துக்குள்ள போய் பூச்சி இறந்துடும். இது, பாரம்பர்யமா நாம செஞ்சதுதான். ஆனா, நாமதான் மறந்துட்டோம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ சாம்பல் போதுமானது.

வெண்டை நட்ட 15-ம் நாள்ல 10 லிட்டர் தண்ணீர்ல 150 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி; 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீர்ல 200 மில்லி பஞ்சகவ்யானு தெளிக்கணும். 15 நாளுக்கு ஒரு முறை இப்படி மாறி மாறி தெளிச்சா, பூச்சிகள் கிட்டயே வராது. பூக்கிற நேரத்தில் ஒரு லிட்டர் இளநீருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிச்சா பூக்கள் அதிகமா பூக்கும். இளநீரை ரோஜா, சம்பங்கி, மல்லினு பூக்களுக்கும் தெளிக்கலாம். நான் சொன்ன எல்லாமே என்னோட அனுபவத்துல செய்து பார்த்துட்டுதான் சொல்றேன்” என்றார்.

விவசாயி வைத்தியனாகணும்!

தொடர்ந்து தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்.புண்ணியமூர்த்தி பேசினார். “பல வருஷங்களா நானும் எல்லா கால்நடை மருத்துவர்களையும் போலதான் ஆங்கில மருத்துவ முறையில வைத்தியம் செய்துக்கிட்டு இருந்தேன். 2000-ம் வருஷம்தான் பாரம்பர்ய மூலிகை வைத்தியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். 2001-ம் வருஷம், பெங்களூருல பாரம்பர்ய மருத்துவப் பேரவை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டேன். அங்கதான், கால்நடைகளுக்கான பாரம்பர்ய மூலிகை வைத்தியம் குறித்த எல்லா தகவல்களையும் சேகரித்தேன்.

‘நமது சித்தர்களும், முன்னோர்களும் சொல்லிச் சென்ற சாதாரண மூலிகைகள்தானே இதெல்லாம். இது தெரியாம இவ்வளவு நாள் கால்நடைகளுக்கு ஊசி, மருந்து, மாத்திரைனு கொடுத்து வைத்தியம் பாத்திருக்கோமே’னு வருத்தமாகிடுச்சு. 2002-ம் வருஷம் ஜனவரியில் இருந்து கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம் மட்டும்தான் பார்க்கணும்னு ஆசைப்பட்டு மூலிகை வைத்தியரா மாறினேன்.

ஆடு, மாடுகளுக்கு சின்னப் பிரச்னைனா கூட உடனே கால்நடை மருத்துவர்கிட்ட ஓடக்கூடாது. ‘விவசாயி எப்படி வியாபாரியாக மாறணுமோ... அதே போல கால்நடைகளை வைத்திருக்கிற விவசாயி வைத்தியனா மாறணும். அதாவது, நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பாரம்பர்ய மூலிகை வைத்தியத்தைக் கத்துக்கணும். அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய வியாதிகளைத் தவிர, எல்லா நோய்களுக்குமே பாரம்பர்ய மருத்துவத்தில் தீர்வு இருக்கு.

தஞ்சாவூர்ல 13 வருஷமாக செயல்பட்டு வர்ற கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மூலிகை மருத்துவம்தான் செய்றோம். தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தில் முதல் முயற்சியா ஆரம்பிக்கப்பட்ட கால்நடைகளுக்கான மூலிகை வைத்திய பட்டயப் படிப்புல முதல் பேட்சுல சேர்ந்த 36 மாணவர்கள், இப்போ படிப்பை முடிக்கப் போறாங்க” என்ற புண்ணியமூர்த்தி, சில முக்கிய நோய்களுக்கான வைத்திய முறைகளையும் சொன்னார்.

மற்ற கருத்துரையாளர்கள் ஆற்றிய உரைகள் அடுத்த இதழில்...

நூற்புழுவுக்கு சுலபமான தீர்வு!

கண்காட்சியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களுக்குத் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்குகளில் முன்னோடி விவசாயிகள், சம்பந்தப்பட்ட பயிர்கள் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வாழை அரங்கில் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த முன்னோடி விவசாயி நல்லசிவம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு சாதாரண விவசாயினு அறியப்பட்ட என்னை, வல்லுநரா உட்கார வெச்சு... வாத்தியாரா மாத்திடுச்சு, ‘பசுமை விகடன்’. கண்காட்சிக்கு வந்த ஊர்க்காரங்க எல்லாம், நம்ம நல்லசிவம் இவ்வளவு நல்லா பேசுறாரேனு ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. எல்லா புகழும் பசுமை விகடனுக்குதான்னு பெருமையா சொன்னேன்.’’

கரூர், குளித்தலை, ஈரோடு, மேட்டுப்பாளையம்னு வாழை வெள்ளாமை அதிகம் இருக்கிற பகுதிவிவசாயிங்க பலரும் கேட்ட மொதக் கேள்வி, ‘இயற்கை முறையில வாழை சாகுபடி பண்றது எப்படி?’னுதான்.‘ரசாயன உரத்தைப் போட்டு கட்டுபடியாகல. நோய்களைக் கட்டுப்படுத்த வழி தெரியலை’னுதான் நிறைய பேர் புலம்புனாங்க. ‘இயற்கை விவசாயத்துக்கு மாறுங்க... எல்லா கவலையும் போயிடும்’னு சொல்லி அதற்கான வழி முறைகளையும் சொல்லிக் கொடுத்தேன். நூற்புழு குறித்து நிறைய பேர் கேட்டாங்க. ‘வாழையில் ஊடுபயிரா 5 அடிக்கு ஒண்ணுனு செண்டுமல்லிச் செடிகளை நட்டு வைக்கணும். வாழை 6 மாத வளர்ச்சியில் இருக்கிறப்போ செண்டுமல்லியில பூவெடுக்குற மாதிரி நடவு பண்ணனும். இந்தப் பூச்செடிகளே நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடும்’னு சுபாஷ் பாலேக்கர் சொல்லிக்கொடுத்த அற்புதமான தீர்வை அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதுக்கு சிலர் ஆதாரம் கேட்டாங்க. அவங்ககிட்ட ‘பசுமை விகடன்’ல வந்த கட்டுரைகளைத்தான் எடுத்துக்காட்டினேன். அவ்வளவு பேரும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க” என்றார், பெருமிதத்துடன்.

மடிநோய்க்கு மருந்து!

“மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’. மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க.

கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையணும். இதை ஒரு நாளுக்கு பத்து தடவை வீதம், ஒரு மாசத்துக்கு மடிக்காம்புகள்ல தேய்ச்சா... மடி நோய் சரியாகிடும்” என்றார், புண்ணியமூர்த்தி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment