Saturday 1 April 2017

பண்ணைகுட்டை வவ்வால் மீன் வளர்ப்பு :


திருவாரூர் மாவட்டம் திருமதிக்குன்னம் சேர்ந்த அருண் குமார் அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தன் அப்பாவின் உதவியோடு இரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது. அவர் கூறியவை :

நான் தற்போது சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருகிறேன். எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் ஆகையால் எனது சொந்த இடமான ஏழு ஏக்கரில் ஒன்றை ஏக்கரை பிரித்து இரும்பு வேலி எடுத்து குமிழ், செம்மரம், மஹோகனி, வாகை, கரு மருது, மலை வேம்பு போன்ற 1200 மரங்கள் நட்டுள்ளேன் பின்பு சிறியதாக குளம் வெட்டி மீன் வளர்க்க வேண்டும் என்ற முடிவோடு என் அப்பாவின் உதவியோடு மீன் வளர்க்க ஆரம்பித்தேன். எங்கள் நிலத்தில் தற்போது இரண்டு குளம் வெட்டி அதில் மீன் வளர்க்கிறோம்.ஒரு குளத்தின் அளவு நீளம் 50 அடி, அகலம் 50 அடி, ஆழம் 8 அடி இன்னொரு குளம் 100 அடி நீளம், 50 அடி அகலம், 8 அடி ஆழம், என்ற அளவில் உள்ளது. மீதம் உள்ள 5.5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு தெரிந்தவரிடம் குத்தகைக்கு விட்டுள்ளோம் அதில் அவர் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் 20 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கட்லா, ரோகு, நாட்டு வவ்வால் போன்ற மீன் குஞ்சுகளை 4 ரூபாய் விலைக்கு மன்னார்குடியிலிருந்து வாங்கி வந்து பெரிய குளத்தில் 300 குஞ்சுகளும் சிறிய குளத்தில் 300 குஞ்சுகளும் விட்டோம்.

பின்பு 8 மாதம் கழித்து விற்பனைக்காக மீன்களை பிடித்தோம். இதில் கட்லா மற்றும் ரோகு வகை மீன்கள் வெறும் 300கிராம் எடை மட்டுமே இருந்தது ஆனால் நாட்டு வவ்வால் மீன்களோ 1.300 கிராம் எடை இருந்தது. கட்லா, ரோகு எடை குறைவாக கிடைத்த காரணம் நாட்டு வவ்வால் மட்டுமே அதிக தீவனம் எடுத்து நல்ல வளர்ச்சி அடைந்தது தெரியவந்தது. இதில் எங்களுக்கு லாபமும் எல்லை நஷ்டமும் இல்லை.

ஆகையால் இரண்டாவது முறையாக என் அப்பாவின் அறிவுரையோடு ஏற்கனவே 300 கிராம் எடையோடு பிடித்த கட்லா ரோகு மீன்களை சிறிய குளத்தில் மீண்டும் ஒன்றாக விட்டோம். நாட்டு வவ்வால் மீன் குஞ்சுகளை மட்டும் பெரிய குளத்தில் 500 குஞ்சுகள் வாங்கி மீண்டும் விட்டோம். இந்த தடவை 7 மாதம் கழித்து மீன்களை பிடித்தோம் அதில் ரோகு, கட்லா மீன்கள் 1.250 கிலோ கிராம் எடையை தாண்டவில்லை. ஆனால் நாட்டு வவ்வாலோ 1.250 மற்றும் 1.300 கிலோ கிராம் எடையில் விட்ட 500 மீன்களும் மீண்டும் 7 மாதத்தில் கிடைத்தது. ரோகு கட்லா மீன்களில் வளர்ச்சி மற்றும் லாபம் இல்லாததால் இதை வாங்க வந்த மீன் வியாபாரியின் அறிவுரையின் பேரில் தற்போது பெரிய குளத்தில் 1000 குஞ்சுகளும் சிறிய குளத்தில் 500 நாட்டு வவ்வால் குஞ்சுகள் மட்டும் விட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் இவைகளை பிடிக்க உள்ளோம் என்றார்.

தீவனம் :

தினமும் மாலை 5 மணிக்கு தீவனம் கொடுப்போம். மீன்களுக்கு கடையில் வாங்கி தான் தீவனம் போடுகிறோம் சில நேரம் வீட்டில் உள்ள பப்பாளி களை எடுக்கும் புற்கள் போன்றவைகளை மீன்களுக்கு போடுவோம். முற்றிலுமாக இறைச்சியை தவிர்த்தோம் எங்கள் குளம் எப்போதும் தெளிவாக இருக்க காரணம் முறையான தீவனமே .

விற்பனை மற்றும் லாபம் :

8 மாதத்திற்கு ஒரு முறை மீன்களை பிடித்து விற்பனை செய்கிறோம். மீன் வியாபாரிகளே நேரில் வந்து அவர்களே மீன்களை பிடித்து எடை போட்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ நாட்டு வவ்வால் ரூபாய் 130க்கு வாங்கி செல்கிறார்கள். அவர்கள் 180 முதல் 230 ரூபாய் வரை வெளியில் விற்பனை செய்கிறார்கள்.

வவ்வால் மீன் விற்பனை செய்த கணக்கு :

500 மீன்கள் ஒரு மீனின் எடை 1.300 கிலோ கிராம்

500*1.300 = 650 கிலோ கிராம்

650 * 130 = 84,500 ரூபாய்

இதில் தீவன செலவு ஒரு மீனுக்கு 25ரூபாய் மற்றும் வாங்கி வந்த செலவு 6 ரூபாய் ஆகா மொத்தம் ஒரு மீனுக்கு செலவு 31 ரூபாய்.

169 - 31 = 138ரூபாய் ஒரு மீனிலிருந்து கிடைத்த லாபம்

ஆகா மொத்தம் 500 நாட்டு வவ்வாலிருந்து கிடைத்த மொத்த லாபம் 69,000 ரூபாய் என்றார்.

இது வரை இவர் மீன் வளர்ப்பில் எந்த ஒரு பயிற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கடைசியாக அவர் கூறிய அறிவுரை குளம் வெட்டும் முன்பு முறையான அனுமதி பெற்று வெட்டுவது மிகவும் நல்லது மற்றும் நேரடியாக விற்பனை செய்தல் அதிக லாபம் பெறலாம் என்றார். மற்றும் இவர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சிங்கப்பூர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக ஒருங்கிணைந்த பண்ணை 7 ஏக்கரில் செய்ய போகிறேன் என்றார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment