Monday 17 April 2017

காட்டுயானம்... சேலம் சன்னா... பூங்கார்... கருத்தகார்...


பலே லாபம் கொடுக்கும் பாரம்பர்ய ரகங்கள்!

4 ஏக்கர்... 6 மாதங்கள்... 1,93,000 ரூபாய் லாபம்!

*எல்லா மண் வகைக்கும் ஏற்றவை

*ஆடிப்பட்டம் ஏற்றது

*ஏக்கருக்கு 4 கிலோ விதை

*அரிசியாக விற்றால், கூடுதல் லாபம்

இயற்கை விவசாயத்துக்கு மாறும் பெரும்பாலான விவசாயிகள்... வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, நோய் எதிர்ப்புச் சக்தியுடைய, சத்தான பாரம்பர்ய ரகங்களைத்தான் தேடி நடவுசெய்து வருகிறார்கள். அதனால்தான் பாரம்பர்ய ரகப் பயிர்கள் பலவும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. தவிர, சமீபகாலத்தில் பாரம்பர்ய ரகங்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்... அவற்றின் தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சந்தை வாய்ப்பு பெருகி வருவதால், பாரம்பர்ய ரகங்களின் சாகுபடிப் பரப்பும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சமுத்திரபாண்டி மகேஷ்வரன், பாரம்பர்ய நெல் ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.

திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், பணகுடியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பதிவிரிசூரியன் கிராமத்தில் உள்ளது, சமுத்திரபாண்டி மகேஷ்வரனின் தோட்டம்.

காட்டுயானம், கருத்தகார், பூங்கார், சேலம் சன்னா ஆகிய நான்கு வகை பாரம்பர்ய நெல் ரகங்களை விதைக்க நாற்றங்கால் தயார் செய்துகொண்டிருந்த சமுத்திரபாண்டி மகேஷ்வரனைச் சந்தித்தோம்.

நோய்களைக் குணமாக்கிய மாட்டுச் சிறுநீர்!

“நாங்க பரம்பரையாவே விவசாயக் குடும்பம் தான். தாத்தா காலத்துல நெல் விவசாயம் இருந்துச்சு. ஆனா, அப்பா நெல் வியாபாரத்துல இறங்கிட்டதால விவசாயம் செய்யாம நிலத்தை சும்மா போட்டுட்டார். நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சுட்டு வெல்டிங் இன்ஸ்பெக்டர் வேலைக்காக பாம்பே போயிட்டேன். அங்க அஞ்சு வருஷம் இருந்துட்டு துபாய், ஓமன், கத்தார்னு வெளிநாடுகள்ல இருபது வருஷம் வேலை செஞ்சேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் வந்து கால் மூட்டுகளை மடக்க முடியாம, ரொம்ப கஷ்டப்பட்டேன். அலோபதி வைத்தியத்துல ஏகப்பட்ட மருந்து மாத்திரை எடுத்தும் சரியாகலை. அப்போ, வேற வைத்திய முறைகள் குறித்து, இன்டர்நெட்ல தேடிப் பார்க்கிறப்போ, ஒரு ‘சைட்’ல ‘நாப்பத்தெட்டு நாள் தொடர்ந்து நாட்டுப் பசு மாட்டுச் சிறுநீர் குடிச்சா சரியாகும்’னு போட்டிருந்துச்சு. அதிலிருந்து தினமும் காலையிலயும், சாயங்காலமும் முன்னூறு மில்லி அளவு நாட்டுப் பசு மாட்டுச் சிறுநீரைத் தொடர்ந்து குடிச்சுகிட்டு வந்தேன். நாப்பது நாளுக்குள்ளேயே சுத்தமா சிக்குன்குன்யா நோய் சரியாகி, மூட்டு வலியும் சரியாகிடுச்சு.

அதே மாதிரி இன்னொரு அதிசயமும் நடந்துச்சு. பக்கத்து வீட்டுப் பெரியவர் ஒருத்தருக்கு நீரிழிவு நோய். வலது கால்ல 2 விரல்களை வெட்டி எடுக்கணும்னு டாக்டர்கள் சொல்லிட்டு இருந்தப்போ, அவரையும் மாட்டுச் சிறுநீரைக் குடிக்கச் சொன்னேன். அவர் குடிக்க ஆரம்பிச்சதும் அவர் விரல்ல இருந்த புண் ஆறினதோட நீரிழிவு நோயும் கட்டுக்குள்ள வந்துடுச்சு. நான் இப்பவும் வாரம் ரெண்டு முறை நாட்டுப் பசு மாட்டுச் சிறுநீரைக் குடிச்சுகிட்டு இருக்கேன்.

தேடலில் தெரிந்த இயற்கை விவசாயம்!

இப்படி ரெண்டு விஷயத்தைப் பார்த்ததும்... நாட்டுப்பசு மாட்டுச் சிறுநீர் வேற எதுக்கெல்லாம் பயன்படுதுனு தேட ஆரம்பிச்சேன். அப்போதான், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், இயற்கை விவசாயம் குறித்தெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். அப்பறம், தீட்சித், சுபாஷ் பாலேக்கர், மசானாபு ஃபுகாகோ, நம்மாழ்வார் எல்லாரையும் குறித்து படிக்க ஆரம்பிச்சேன். அவங்களோட கருத்துக்களைத் தேடுறப்போ இன்டர்நெட் மூலமா ‘பசுமை விகடன்’ புத்தகமும் அறிமுகமாச்சு. அதையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுலதான் பாரம்பர்ய ரக நெல், இடுபொருட்கள் தயாரிப்பு குறித்தெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம்தான் ‘இனிமே வேலைக்காக எங்கயும் போக வேண்டாம், இயற்கை விவசாயம் செய்யலாம்’னு முடிவெடுத்தேன்” விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன சமுத்திரபாண்டி மகேஷ்வரன் தொடர்ந்தார்.

3 ஆண்டுகளாக நெல் சாகுபடி!

“2013-ம் வருஷம் ‘திருத்துறைப்பூண்டி’ கரிகாலன்கிட்ட காட்டுயானம் ரக விதைநெல் வாங்கி ஒரு ஏக்கர் நிலத்துல சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல விளைச்சல் கிடைச்சது. அதுல இருந்து தொடர்ந்து மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டிருக்கேன். மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. வண்டல் கலந்த களிமண். ஒரு ஏக்கர் நிலத்துல எண்பது தென்னை மரங்கள் இருக்கு. அதுல ஊடுபயிரா கொய்யா இருக்கு. தென்னை நட்டு அஞ்சு வருஷம் ஆகுது. கொய்யா நட்டு ரெண்டு வருஷம் ஆகுது. நாலு ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செஞ்சுகிட்டிருக்கேன்.

வெவ்வேறு ரகங்கள்... ஒரே நேரத்தில் அறுவடை!

போன போகத்துல ரெண்டரை ஏக்கர் நிலத்துல கருத்தகார் போட்டிருந்தேன். அம்பது சென்ட் நிலத்துல சேலம் சன்னா, அம்பது சென்ட் நிலத்துல காட்டுயானம், அம்பது சென்ட் நிலத்துல பூங்கார்னு போட்டு நாலு ரகத்தையும் அறுவடை செஞ்சுட்டேன். காட்டுயானம் 180 நாள் பயிர். சேலம் சன்னா 140 நாள் பயிர். கருத்தகார் 120 நாள் பயிர். பூங்கார் 90 நாள் பயிர். அதனால காட்டுயான ரகத்தை முதல்ல நடவு செஞ்சுட்டு 40 நாள் கழிச்சு சேலம் சன்னாவை நடவு செய்தேன். அதுல இருந்து 20 நாள் கழிச்சு கருத்தகார் நடவு செஞ்சேன். அதுலருந்து 30 நாள் கழிச்சு பூங்காரை நடவு செஞ்சேன். அதனால ஒரே சமயத்துல நாலு ரகமும் அறுவடைக்கு வந்துச்சு. திரும்பவும் இதே நெல் ரகங்களை நடறதுக்கு நிலத்தை உழவு அடிச்சு வச்சிருக்கேன்” என்ற சமுத்திரபாண்டி மகேஷ்வரன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

அரிசியாக அரைத்து விற்பனை!

50 சென்ட் நிலத்துல 1,008 கிலோ காட்டுயானம் ரக நெல் கிடைச்சது. இதை அரிசியா அரைச்சதில், 700 கிலோ அரிசி கிடைச்சது. 50 சென்ட் நிலத்துல 864 கிலோ சேலம் சன்னா ரக நெல் கிடைச்சது. இதை அரிசியா அரைச்சதில், 600 கிலோ அரிசி கிடைச்சது. 50 சென்ட் நிலத்துல 720 கிலோ பூங்கார் ரக நெல் கிடைச்சது. இதை அரிசியா அரைச்சதில், 500 கிலோ அரிசி கிடைச்சது. ரெண்டரை ஏக்கர் நிலத்துல 3 ஆயிரத்து 250 கிலோ கருத்தகார் ரக நெல் கிடைச்சது. இதை அரிசியா அரைச்சதில், 2 ஆயிரத்து 250 கிலோ அரிசி கிடைச்சது.

காட்டுயானம் ரக அரிசியையும், கருத்தகார் ரக அரிசியையும் ஒரு கிலோ 70 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். பூங்கார் ரக அரிசியையும், சேலம் சன்னா ரக அரிசியையும் ஒரு கிலோ 55 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அந்த வகையில 4 ஏக்கர் நிலத்துல மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல எல்லா செலவும் சேர்த்து, 74 ஆயிரம் ரூபாய் போக ஒரு லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் லாபமா நின்னுச்சு” என்ற சமுத்திரபாண்டி மகேஷ்வரன் நிறைவாக.

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

விற்பனைக்குப் பிரச்னை இல்லை!

“பாரம்பர்ய ரக அரிசிக்கு அதிக தேவை இருக்கு. அதனால அரிசியா அரைச்சு விற்பனை செய்றப்போ நெல்லா விற்பனை செய்றதைவிட கூடுதல் லாபம் கிடைக்குது. இங்க உள்ளூர்ல இருக்கிற கடைகள்லயே ஓரளவு விற்பனை ஆகிடுது. நாகர்கோவிலில் இருக்கிற இயற்கை அங்காடிக்கும் அரிசியைக் கொடுத்துட்டு இருக்கேன். நெல்லை இருப்பு வெச்சுக்கிட்டு ஆர்டரைப் பொறுத்து அரிசியா அரைச்சுக் கொடுத்துட்டு இருக்கேன். இனிமே பாரம்பர்ய ரக நெல்லை மட்டும்தான் பயிர் பண்றதுனு முடிவு செஞ்சிருக்கேன்” என்று உறுதியாகச் சொன்னவர், காட்டுயானம் நெல்மணிகளை கைகளில் அள்ளி சந்தோஷமாகக் காட்டினார்.

தொடர்புக்கு,
சமுத்திரபாண்டி மகேஷ்வரன்,
செல்போன்: 75984-19861.

ஒரு பாத்திரத்தில் அனைத்து இலைகளையும் பொடிப்பொடியாக வெட்டிப் போட வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை உரலில் இடித்து அவற்றுடன் சேர்க்கவேண்டும். அவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை ஊற்றி பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் இறக்கி 20 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். மீண்டும் அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்படி நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கி நிழலில் வைத்து, மூடியால் இறுக மூடி அதன் மேல் துணியை வைத்து காற்றுப் புகாதவாறு இறுக்கமாகக் கட்டி விட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து இக்கரைசலை வடிகட்டி... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஆடிப்பட்டத்தில்... பாரம்பர்ய நெல் சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய ரக நெல்லை சாகுபடி செய்வது குறித்து, சமுத்திரபாண்டி மகேஷ்வரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 8 கிலோ விதை!

பாரம்பர்ய ரகங்கள், அனைத்து வகை மண்ணிலும் விளையும். பொதுவாக, ஆடிப்பட்டம் பாரம்பர்ய ரகங்களுக்கு ஏற்றது. சில ரகங்களை குறுவை, சம்பா பட்டத்துல நடுவார்கள். அந்தந்தப்பகுதி தண்ணீர் வளம், சூழ்நிலைக்கேற்ற மாதிரி பட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். எந்தப் பட்டத்தில் நடுவதாக இருந்தாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே நடவு வயலை தயார் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 8 கிலோ என்ற கணக்கில் தக்கைப்பூண்டு விதையை விதைத்து, ஒரு சால் ஓட்ட வேண்டும். தக்கைப்பூண்டுக்கு தண்ணீர் விட்டு வந்தால், 45-ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் விதைப்புக்கு 4 சென்டில் நாற்றங்கால்!

ஒரு ஏக்கர் வயலில் நடவுசெய்ய 4 சென்ட் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலிலும் தக்கைப்பூண்டை விதைத்து மடக்கி உழுது விடுவதால், தொழுவுரம் தேவையில்லை. 5 கிலோ விதைநெல்லை (ஒரு ஏக்கர் விதைப்புக்கு) சணல் சாக்கில் போட்டு கட்டி தண்ணீர்த் தொட்டிக்குள் 12 மணி நேரம் ஊற வைத்து... தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும். பிறகு, ஓர் அறைக்குள் சணல் சாக்கை விரித்து அதன் மேல் விதைநெல் சாக்கு மூட்டையை வைத்து, சணல் சாக்கைப் போட்டு மூடி மேலே வைக்கோலைப் பரப்பி விட வேண்டும். இப்படி ஒன்றரை நாள் வரை இருட்டில் வைத்தால், விதைகள் முளைவிடும்.

பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி!

பிறகு ஓலைப்பாயில் விதைநெல்லைக் கொட்டி பரப்ப வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து விதைநெல் மீது பரவலாகத் தெளித்து, அரை மணி நேரம் உலர விட வேண்டும். பிறகு நாற்றங்காலில் தூவி விதைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 3-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன நீரில் கொடுக்க வேண்டும், 6-ம் நாள், 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரில் கலந்துவிட வேண்டும். 11-ம் நாளில் இருந்து 13-ம் நாளுக்குள் நாற்று தயாராகி விடும். வயலில் நடுவதற்கு முன் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்த நீரில் வேர்ப்பகுதியை மட்டும் மூழ்க வைத்து எடுத்து, அரை அடி இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து தண்ணீர் விட்டு வர வேண்டும்.

20 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.

சுழற்சி முறையில் ஊட்டம்!

வயலில் நடவு செய்த 20, 50 மற்றும் 70-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும். நடவு செய்த 35, 50 மற்றும் 65-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும். 55 மற்றும் 85-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஒற்றை நாற்று முறையில் நடும் போது... காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி தேவையான அளவு கிடைப்பதால், அதிகமாகத் தூர் வெடிக்கும். நெல்மணிகளும் திரட்சியாக இருக்கும். காட்டுயானம் ரகம் 165 நாட்களுக்குப் பிறகும்; சேலம் சன்னா ரகம் 120 நாட்களுக்குப் பிறகும்; கருத்தகார் ரகம் 105 நாட்களுக்குப் பிறகும்; பூங்கார் ரகம் 70 நாட்களுக்குப் பிறகும் கதிர் முற்றத்துவங்கும். முற்றிய பிறகு, நிலத்தைக் காய விட்டு அறுவடை செய்யலாம்.

மீன் அமினோ அமிலம்!

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன்கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையை இட்டு... காற்றுப் புகாதவாறு இறுக்கமாக மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச் சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும். இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஜீவாமிர்தம்!

10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ பயறு மாவு (கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றில் ஏதாவதொன்றின் மாவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, சாகுபடி செய்துவரும் வயலில் உள்ள மண் கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு... 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி இரண்டு நாட்கள் நிழலில் வைக்க வேண்டும். காலை மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும், கடிகாரச் சுற்றுப்படி கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயார். இதை வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment