Thursday 22 June 2017

ரூ 1 லட்சம் வருமானம்... வாழைக்கு இடையில் காய்கறிகள்... ஊடுபயிர்கள் கொடுக்கும் உன்னத லாபம்!


விவசாயத்தில் ஊடுபயிர், கலப்புப் பயிர் சாகுபடி மிகவும் அவசியம். அதுவும், ஓர் ஆண்டு கழித்துப் பலன் கொடுக்கும் வாழை போன்ற பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம், பிரதான பயிர் மகசூல் கொடுக்கும் முன்னரே, ஊடுபயிர் மூலம் ஒரு வருமானம் பார்த்துவிட முடியும்.

ஜீரோ பட்ஜெட் வேளாண்மை முறையிலும், பிரதான பயிர்களுக்கு ஏற்ற பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்ய வேண்டும் என சுபாஷ் பாலேக்கர் வலியுறுத்தி வருகிறார். அதைக் கடைப்பிடிக்கும் வகையில், நாடன் ரக வாழைக்கு ஊடுபயிராக, காய்கறிகளை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம்.

தூத்துக்குடி மாவட்டம், சோனகன் விளையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேலக்கானம் கிராமத்தில், ராஜமாணிக்கத்தின் வாழைத்தோட்டம் உள்ளது. காய்களை அறுவடை செய்து கொண்டிருந்த ராஜமாணிக்கத்தைச் சந்தித்தோம்.

“பூர்வீக விவசாயக் குடும்பம் எங்களோடது. சுற்றுவட்டாரப் பகுதியில் வாழைதான் முக்கிய விவசாயம். நான், அஞ்சாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போகல. அப்பா, அம்மா கூடச் சேர்ந்து, விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். நான் சின்ன வயசுல இருக்குறப்போ... மட்கிய குப்பையையும் சாம்பலையும்தான் வயல்ல அடியுரமாகப் போடுவாங்க. முப்பது வருஷத்துக்கு முன்னால, ஊர்ல எல்லோருமே ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அப்படியே நாங்களும் ரசாயனத்துக்கு மாறிட்டோம். அதன்பிறகு, நானும் அதையேதான் கடைப்பிடிச்சேன். வாழையில் என்ன பிரச்னை வந்தாலும், உரக்கடையில போய்ச் சொல்வோம். அவங்க கொடுக்குற உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் வாங்கி, பயிர்களுக்குக் கொடுப்போம். ஆனாலும், நோய் சரியாகாது. குறிப்பா வெடிப்பு நோயைச் சரிபண்ணவே முடியல. ஐந்நூறு வாழை நட்டா 100 வாழை அடிவாங்கிடும். உரம் போட்டுப் போட்டு நிலமும் இறுகிப்போச்சு. அதனால தண்ணி அதிகமா பாய்ச்ச வேண்டியிருந்தது.

இப்படியே போயிட்டு இருந்தப்பதான், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காயாமொழியில் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்குற சக்திகுமார் பத்தி கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்கப் போயிருந்தப்போ, அவருடைய தோட்டத்துல நாடன் ரக வாழைகள் செழுமையா இருந்துச்சு. அவர்கிட்ட வாழையில வெடிப்பு நோய் வர்றத பத்தி சொன்னேன். ‘ஜீவாமிர்தம் பயன்படுத்துங்க. எல்லாம் சரியாகிடும்’னு சொல்லி, அதைத் தயாரிக்கிற விதத்தையும் கத்துக் கொடுத்தார்.

உடனடியா ஜீவாமிர்தம் தயாரிச்சு, நோய்த் தாக்கி வெடிப்பு விழுந்திருந்த வாழை மரங்கள்மேல ஊத்திவிட்டேன். பத்து நாள்கள்லயே வெடிப்பெல்லாம் மறைய ஆரம்பிச்சது. உடனே எல்லா மரங்களுக்கும் ஜீவாமிர்தத்தைத் தெளிச்சுவிட்டேன். அதன்பிறகு, எல்லா மரங்களும் பூ எடுத்துச்சு. அப்போதான், இத்தனை வருஷம் ரசாயனத்தைக் கொட்டி, காசையும் நிலத்தையும் பாழாக்கிட்டோமேனு எனக்கு உரைச்சது. அன்னையில இருந்தே முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்” என்று, தான் ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்துக்கு மாறிய கதை சொன்ன ராஜமாணிக்கம் தொடர்ந்தார்.

“இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகுதான் என்னோட நிலத்துல மண்புழுவையே கண்ணால பாத்தேன். எங்க பகுதியில வாழையில் ஊடுபயிரா தட்டை, உளுந்து, மொச்சைனுதான் போடுவாங்க. நான், வாழைக்கு ஊடுபயிரா காய்கறிகளைப் போட்டேன். எனக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. இங்க 2 ஏக்கர் நிலம் இருக்கு. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல 3 ஏக்கர் நிலம் இருக்கு. அந்த 3 ஏக்கர் நிலத்துல நேந்திரன் வாழை இருக்கு.

இங்க இருக்குற 2 ஏக்கர் நிலத்துல, ஒன்றரை ஏக்கர் நிலத்துல 1,300 நாடன் ரக வாழை இருக்கு. ஊடுபயிரா கத்திரி, தக்காளி, வெண்டை, சீனி அவரைனு நட்டிருக்கேன். இதில்லாம, 30 சென்ட் நிலத்துல பாகல், பீர்க்கன் நட்டிருக்கேன். 20 சென்ட் நிலத்துல தனிப்பயிரா கத்திரி நட்டிருக்கேன். இது நட்டு பத்து நாள்தான் ஆகுது. பந்தல் காய்கறிகளும், ஊடுபயிரா இருக்குற எல்லாக் காய்கறிகளுமே இப்போ பறிப்புல இருக்கு.

நாடன் வாழையை நடவு செஞ்சு ஆறு மாசம் ஆகுது. இனிமேதான் குலை போட ஆரம்பிக்கும். அது குலை போட்டு முடியுறதுக்குள்ள, ஊடுபயிரா இருக்குற காய்கறிகள்ல அறுவடை முடிஞ்சிடும். காய்கறிகளை, வாழைக்கு இடையே ஊடுபயிரா போட்டிருக்குறதால உழவு, பராமரிப்புனு எந்தச் செலவும் கிடையாது. தண்ணீர்கூட வாழைக்குக் கொடுக்குறதுதான். அதுலயே ஊடுபயிர்களும் வளர்ந்து பலன் கொடுக்குது.

அதேமாதிரி பாகல், பீர்க்கன் போட்டிருக்கிற பந்தலுக்கும் பெரிய செலவில்லை. வாழைக்கு முட்டுக் கொடுக்க வெச்சிருந்த அகத்தி மரக் கம்புகளைக் கொண்டு, பந்தல் போட்டுட்டேன். இடுபொருள்கள்ல மட்டும் ஜீரோ பட்ஜெட் இல்லை. பராமரிப்புலயும் ஜீரோ பட்ஜெட்தான்” என்ற ராஜமாணிக்கம், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“கத்திரி, சீனிஅவரை, பாகல், பீர்க்கன்னு நாலு காய்களையும் அஞ்சு நாள்களுக்கு ஒரு தடவை அறுவடை பண்றேன். தக்காளியை 3 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை பண்றேன். வெண்டையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை பண்ணிட்டு வர்றேன். போன வருஷம் வரை உள்ளூர் கடைகளுக்குதான் காய்களை விற்பனை செய்துட்டு இருந்தேன். இந்த வருஷம், சக்திகுமார் மூலமா சென்னை, கோயம்பேடுல இருக்குற ஒரு குடியிருப்புச் சங்கத்துக்காரங்களுக்கு அனுப்புறோம். அவங்க என் தோட்டத்தையும் வந்து பார்த்துட்டுப் போனாங்க. நாலு மாசமா அவங்களுக்குக் காய்களை அனுப்பிட்டிருக்கேன். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு சென்னைக்குக் காய்கள அனுப்புறேன். அதுபோக இடையில பறிக்கிற காய்களை உள்ளூர்லயே விற்பனை செய்திடுவேன்.

காய்கறிகள் அறுவடைக்கு வந்ததுல இருந்து, இதுவரை620 கிலோ கத்திரி, 270 கிலோ சீனிஅவரை, 385 கிலோ பாகல், 225 கிலோ பீர்க்கன், 594 கிலோ தக்காளி, 996 கிலோ வெண்டை கிடைச்சிருக்கு. கத்திரி, தக்காளி, வெண்டை, சீனிஅவரை மாதிரியான காய்களுக்கு, ஒரு கிலோ 40 ரூபாய் விலை கிடைக்குது. பீர்க்கனுக்கும் பாகலுக்கும் ஒரு கிலோ 30 ரூபாய் விலை கிடைக்குது. உள்ளூர்லயும் இதே விலைக்குதான் கொடுக்கிறேன்.

அந்த வகையில இதுவரை பறிச்ச அத்தனை காய்கறிகளையும் விற்பனை செஞ்சதுல 1,17,500 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு. இதுல நாற்று, விதை தொடங்கி அறுவடை, போக்குவரத்து வரை 15 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கு. ஆக 1,02,500 ரூபாய் இதுவரை லாபமா எடுத்திருக்கேன். இன்னும் ஒரு மாசத்துக்கு மேல காய் பறிக்கலாம். அதுமூலமா 16 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுல அறுவடை, போக்குவரத்து போக எப்படியும் 14 ஆயிரம் ரூபாய் வரை லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன். வாழை மூலமாகக் கிடைக்கிற லாபம் தனி” என்ற ராஜமாணிக்கம் நிறைவாக, “ஒரே பயிரைச் சாகுபடி செய்துட்டு விளைச்சல் இல்லை, விலை இல்லைனு புலம்புறதைவிட, நிறைய பயிர்களைக் கலந்து சாகுபடி செஞ்சு லாபம் பார்க்கிறதுதான் புத்திசாலித்தனம். அதுவும் இயற்கை காய்கறிகளுக்கு இருக்குற வரவேற்பைப் பயன்படுத்திக்கிட்டு... ஜீவாமிர்தம் மாதிரியான செலவு குறைந்த இடுபொருள்களைப் பயன்படுத்திச் சாகுபடி செஞ்சா கண்டிப்பா லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லிவிட்டு, அறுவடை செய்த காய்கறிகளை மூட்டைப் பிடிக்கும் பணியில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
ராஜமாணிக்கம்,
செல்போன்: 94868 12747.

ஏழு அடியில் வாழை... மூன்றரை அடியில் காய்கறிகள்

வாழைக்கு ஊடுபயிராகக் காய்கறிகளைச் சாகுபடி செய்யும் முறை குறித்து ராஜமாணிக்கம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

நாடன் ரக வாழை நடவுக்குக் கார்த்திகைப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, 7 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும். ஐந்து நாள்கள் குழிகளை ஆறவிட்டு, வாழைக்கிழங்குகளை நடவு செய்து தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்து 15 நாள்கள் கழித்து, கிழங்கு நட்ட இடத்திலிருந்து அரை அடி தூரத்தில் குழியெடுத்து, அதில் 5 கிலோ மட்கிய சாணம் போட்டுக் குழியை மூட வேண்டும். ஒரு மாதம் கழித்து, மார்கழிப் பட்டத்தில் வாழைக் கன்றுகளுக்கு இடையில் காய்கறிகளை நடவு செய்யலாம்.

கத்திரி, தக்காளி ஆகியவற்றை ஒரு குத்துக்கு, இரண்டு நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். வெண்டை, சீனிஅவரை ஆகியவற்றுக்கு ஒரு குழிக்கு இரண்டு விதைகள் என ஊன்றிவிட வேண்டும். கத்திரி, தக்காளி, வெண்டை, சீனிஅவரை என அடுத்தடுத்து மூன்றரை அடி இடைவெளியில் தொடர்ச்சியாக நட வேண்டும். இதனால், நோய்த் தாக்குதல்களைத் தவிர்க்கலாம். வாழைக்கு இட்ட மட்கிய சாணம் காய்கறிகளுக்கும் உரமாகிவிடும். வாழைக்குப் பாயும் தண்ணீரே காய்கறிகளுக்கும் போதுமானது.

நடவு செய்ததிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஜீவாமிர்தம் (10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி ஜீவாமிர்தம்) மற்றும் மீன் அமினோ அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். இருபது நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

35 நாள்களுக்கு மேல் காய்கறிச் செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மோர்க்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 55-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

மார்கழிப் பட்டத்தில் பந்தல் காய்கறி..!

பந்தல் காய்கறிகளையும் மார்கழிப் பட்டத்தில் விதைக்கலாம். உழுது தயார் செய்த நிலத்தில் ஏழு அடி இடைவெளியில் 2 அடி சதுரம், 2 அடி ஆழத்துக்குக் குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் தலா 5 கிலோ மட்கிய சாணத்தைப் போட்டு நிரப்பி, மேல் மண் கொண்டு குழியை மூட வேண்டும். பத்து நாள்கள் கழித்து, ஒவ்வொரு குழியின் மையத்திலும் விரல்களால் பள்ளம் பறித்து, ஒரு குழிக்கு 5 விதைகள் என்ற கணக்கில் பாகல், பீர்க்கன் விதைகளை ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சினால் போதுமானது.

செடிகளுக்குத் தேவையான அளவில் பந்தல் அமைத்துக் கொள்ளலாம். ஐந்து நாள்களுக்குள் விதைகள் முளைத்து 20-ம் நாளில் ஓர் அடி உயரம் வரை வளர்ந்து, 30-ம் நாளுக்கு மேல் கொடி படரும். அந்த நேரத்தில் கயிறு கட்டி கொடியைப் பின்னி, பந்தலில் படர விட வேண்டும். ஊடுபயிராக விதைத்த காய்கறிகளுக்குச் செய்யும் பராமரிப்பு முறைகளையே பந்தல் காய்கறிகளுக்கும் பின்பற்றலாம்.

இலைகள் வெளுப்புக்குப் பெருங்காயக் கரைசல்

காய்கறிச் செடிகளில் இலைகள் வெளிறிக் காணப்பட்டால்... 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் பெருங்காயப்பொடியைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் வைத்திருந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். ஐந்து நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை இதைத் தெளிக்கலாம். இப்படிச் செய்தால், இலைகள் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.

மோர்க் கரைசல்

ஒரு லிட்டர் தயிரைக் கடைந்து, தண்ணீர் சேர்த்து 2 லிட்டர் மோராக மாற்றிக்கொள்ள வேண்டும். இதை ஒரு வாரம் புளிக்க வைத்து, அதில் 10 லிட்டர் தண்ணீர் கலந்தால் மோர்க்கரைசல் தயார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete