Saturday 24 June 2017

விளைச்சலை அள்ளிக் கொடுக்கும் ஜீவாமிர்தம்... பாசன முறையில் புதுமை! நீங்களும் செய்யலாம் ஜீரோ பட்ஜெட் விவசாயம்! ஜீவாமிர்த பாசனமுறை!!


ஜீரோ பட்ஜெட் வேளாண்மையில் முக்கியமான இடுபொருள் ஜீவாமிர்தம். பொதுவாக, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரலில் ஜீவாமிர்தத்தைத் தயார் செய்து பாசன தண்ணீருடன் கலந்து வயலுக்குப் பாய்ச்சுவார்கள். இதை வயலில் ஒவ்வோர் இடத்துக்கும் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். பொதுவாக இடுபொருள் தயாரிப்புக்கு, அதிகாலையில் நாட்டு மாடுகள் கழிக்கும் முதல் சிறுநீர்தான் ஏற்றதாக இருக்கும். இப்படி அதிகாலையில், மாடுகளின் சிறுநீரைச் சேகரிப்பதும் சிரமமான விஷயம்தான். இந்தச் சிரமங்களைக் களையும் வகையில்... சிறுநீர்ச் சேகரிப்பு, ஜீவாமிர்தம் தயாரிப்பு, பாசனம் செய்தல் மூன்றையும் ஒருங்கிணைத்து எளிமையான முறையை வடிவமைத்திருக்கிறார்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.எஸ்.மணி, தரணிவேந்தன் இருவரும்.

இவர்களது வயல், ஆரணி-ஆற்காடு சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் இரும்பேடு கிராமத்தில் உள்ளது. காலைப்பொழுதிலேயே சுள்ளென்று வெயில் அடித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், வயலுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சி கொண்டிருந்தனர், மணியும் தரணிவேந்தனும்.

நம்மை இன்முகத்தோடு வரவேற்றுப் பேசிய மணி, “எனக்குச் சொந்த ஊரு பக்கத்துல இருக்கிற ஆதனூர். அங்கே எனக்கு நிலம் இருக்கு. கரும்பு, நெல்னு விவசாயம் செஞ்சிட்டிருந்தேன். ரசாயன உரம் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சேன். ஒரு கட்டத்துல செலவு கட்டுபடியாகாம ரொம்ப நொடிச்சிப் போய் விவசாயமே வேணாம்னு முடிவு பண்ணி, ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல ஒரு ஹோட்டலை ஆரம்பிச்சேன். அது நல்லபடியா போயிட்டுருக்கு.

எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஆனந்த விகடன் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. அதுமூலமா ‘பசுமை விகடன்’ பத்தித் தெரிஞ்சு படிக்க ஆரம்பிச்சேன். அதுலதான், சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் அய்யா பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். ஈரோடுல, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து நம்மாழ்வார் அய்யா நடத்துன பயிற்சிகள்லயும் கலந்துகிட்டேன். பயிற்சிகள் மூலமா நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு கிட்டாலும் உடனடியா செயல் படுத்தறதுக்கான சூழல் அமையலை.

எனக்குச் சர்க்கரை வியாதி இருக்குறதால, என்னோட டாக்டர், ‘பாரம்பர்ய அரிசி, இயற்கை காய்கறிகளைச் சாப்பிடு. நேரம் கிடைக்கிறப்போ வயல்வெளிப் பக்கம் வாக்கிங் போனா, மனசு அமைதியாகும். அதுலயே பாதி நோய் குணமாயிடும்’னு சொன்னார். அதைப் பின்பற்ற ஆரம்பிச்சதும் எனக்குள்ள மாற்றத்தை நல்லா உணர முடிஞ்சது. அதனாலதான், திரும்பவும் விவசாயம் செய்ய வந்தேன். இயற்கை விவசாயம் செய்யலாம்னு 2014-ம் வருஷம், இந்த இடத்தைக் குத்தகைக்குப் பிடிச்சேன். என்னோட மாப்பிள்ளை, தரணிவேந்தனும் இணைஞ்சுக்கிட்டார்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய, தரணிவேந்தன், “எனக்கு விண்ணமங்கலம்தான் சொந்த ஊரு. தொலைதூர கல்வியில இசை பத்தின படிப்புப் படிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கும் இயற்கை விவசாயத்துல அதிக ஆர்வங்கிறதால, மாமாவோடு சேர்ந்துக்கிட்டேன். மாமா கூட நானும் நிறைய பயிற்சிகளுக்குப் போயிருக்கேன். இது மொத்தம் 10 ஏக்கர். போன போகத்துல 2 ஏக்கர் நிலத்துல கத்திரி, 2 ஏக்கர் நிலத்துல கீரை போட்டிருந்தோம். இந்தப் போகம் நெல் போடலாம்னு முடிவு பண்ணி, 2 ஏக்கர் நிலத்துல மாப்பிள்ளைச் சம்பா நெல், 2 ஏக்கர் நிலத்துல அறுபதாம் குறுவை நெல், 6 ஏக்கர் நிலத்துல டீலக்ஸ் பொன்னி நெல்னு போட்டிருக்கோம். நடவு செஞ்சு 20 நாளுக்கு மேலாகுது” என்றார்.

தங்களது வேளாண்மை முறைகள் குறித்துச் சொல்ல ஆரம்பித்த மணி, “இங்க, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பசுந்தாள் மூடாக்குனு சுபாஷ் பாலேக்கர் சொன்ன விஷயங்களைச் செயல்படுத்திருக்கோம். இடுபொருள்கள் தயாரிப்புக்காக நாலு நாட்டு மாடுகள் வெச்சிருக்கோம். பொதுவா, ஜீவாமிர்தத்தை 15 நாளுக்கு ஒருமுறை கொடுக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நாங்க மண் நல்ல வளமாகட்டும்னு ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு தடவை கொடுத்துட்டு இருக்கோம். அதுக்காக ரெண்டு தொட்டிகள் அமைச்சுருக்கோம்.

கொட்டகையில மாடுகள் கழிக்கிற சிறுநீர் நேரடியா சேகரமாகுற மாதிரி, மண்ணுக்குள்ள 100 லிட்டர் கொள்ளவுள்ள ஒரு தொட்டி அமைச்சிருக்கோம். இதுல சேகரமாகுற சிறுநீரோட அளவுக்கு ஏத்த மாதிரி சாணம், உளுந்து மாவு, வெல்லம், நிலத்து மண்ணைக் கரைச்சு விட்டுடுவோம். அப்படியே ரெண்டு நாள் விட்டுடுவோம். அது அப்படியே பக்கத்துல இருக்குற இன்னொரு தொட்டிக்குப் போற மாதிரி குழாய் அமைச்சுருக்கோம். ரெண்டாவது தொட்டியோட கொள்ளளவு 500 லிட்டர். இந்தத் தொட்டிக்குத் தண்ணீர் வர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கோம். தொட்டியில் சேகரமாகுற ஜீவாமிர்தத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் கலந்துடும். இந்தத் தொட்டியில் கையால் இயக்குற மாதிரி கயிற்றால் ஆன கலக்கியை அமைச்சுருக்கோம். அதை மேலும் கீழும் ஆட்டுறப்போ தண்ணியும் ஜீவாமிர்தமும் நல்லாக் கலந்து வெளியேறி, வாய்க்கால்ல பாசன தண்ணியோட கலந்துடும். இது மணல்சாரியான வெளுப்பான மண். அதிகளவு ஜீவாமிர்தம் கொடுத்துட்டு இருக்குறதால மண் வளமா மாறிட்டு வருது. அதிக ஜீவாமிர்தம் கொடுக்குறதுக்கு இந்த அமைப்பு கைகொடுக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய மணி, “கீரை, காய்கறிகளுக்குக் கனஜீவாமிர்தம் பயன்படுத்துறோம். 5 கிலோ மாட்டுச் சாணத்தோடு 2 லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ உளுந்து மாவு, அரைக் கிலோ வெல்லம் கலந்து நல்லா பிசைஞ்சி... உருண்டைகளாக்கி நிழல்ல காய வெச்சு, எடுத்தா அதுதான் கன ஜீவாமிர்தம். இதை, நிலத்தை உழுது தயார் செய்றப்போ போடுற தொழுவுரம் மாதிரி பயன்படுத்துறோம். கனஜீவாமிர்தம் போடுறதால, மண்ணுக்கு உயிர் உரங்கள் தேவையில்லை. நாங்க ரைசோபியம், அசோஸ்பைரில்லம்னு எந்த உயிர் உரங்களயும் கொடுக்கிறதில்ல.

போன போகத்துலகூட ஜீரோபட்ஜெட் முறையிலதான் கீரை, காய்கறிகள் சாகுபடி செய்தோம். கீரை மூலமா 3 லட்சம் ரூபாயும் கத்திரிக்காய் மூலமா 2 லட்சம் ரூபாயும் சம்பாதிச்சிருக்கோம். இந்த அளவுக்கு வருமானம் கிடைக்குறதுக்கும், நல்ல விளைச்சல் கிடைக்குறதுக்கும் ஜீரோபட்ஜெட்தான் மூலக் காரணம். இந்த முறை 4 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்களும், 6 ஏக்கர்ல டீலக்ஸ் பொன்னியும் இருக்கு. எப்படியும் ஏக்கருக்கு சராசரியா 25 மூட்டை(70 கிலோ) குறையாம கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு :
ஜெ.எஸ்.மணி,
செல்போன்: 96298 98266, 88838 99935

பீஜாமிர்தம் :

தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் வளமான மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். இதன் பிறகு, சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்க வேண்டும். இதன்பிறகே விதையை இந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்க வேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க்கறையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம் :

பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது, இரண்டு நாள்கள் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை வலது புறமாகச் சுற்றும்படி குச்சி வைத்துக் கலக்கிவிட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பாசன நீரிலேயே கலந்துவிடலாம்.

கனஜீவாமிர்தம் :

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரைக் கலந்தால் போதும். பிறகு, உருட்டி நிழலில் காயவைத்து, தேவைப்படும்போது உதிர்த்துப் பயன்படுத்தலாம். இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது.

பிரம்மாஸ்திரம் :

மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்க வேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளைத் தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்க வேண்டும் (ஏதாவது ஐந்து விதவிதமான இலைகள் இருந்தால்கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு 48 மணி நேரம் குளிரவைத்து, வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதங்கள் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்

புகையிலை அரைக்கிலோ, பச்சைமிளகாய் அரைக்கிலோ, பூண்டு அரைக்கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கரைக்க வேண்டும். இதை நான்கு முறை கொதிக்க வைத்து இறக்கிக்கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதங்கள் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரம்

சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசும்பால் அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு, இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சணக் கொல்லியாகும். இதை 21 நாள்கள் சேமித்து வைக்கலாம்.
நீம் அஸ்திரம்

நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூடி போட்டு வைக்கக் கூடாது. இதை இடதுபுறமாக மூன்று தடவை கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
நேரடி விற்பனை!

“இப்போ விவசாயம் செய்ற நிலம் ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் இருக்கு. அதனால நிலத்துக்குப் பக்கத்தில் கூரை ஷெட் போட்டு, இங்க விளைஞ்ச கீரை, கத்திரிக்காய் எல்லாத்தையும் நேரடியாவே விற்பனை செஞ்சோம். அதுபோக, சென்னையில இருக்கிற ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட், ரீஸ்டோர், கிராமியம், கோ-ஆர்கானிக் மாதிரியான இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பினோம். இயற்கை பொருள்களுக்குக் கிடைக்கிற வரவேற்பினால, எங்க சொந்த நிலத்திலயும் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சிட்டேன். போன தடவை 5 ஏக்கர்ல நிலக்கடலைச் சாகுபடி செஞ்சேன். அத எங்களோட மரச்செக்கு மூலமா எண்ணெயாக்கி விற்பனை செஞ்சேன். அதுல நல்ல லாபம் கிடைச்சது. இப்போ, பக்கத்து நிலங்களையும் குத்தகைக்குப் பிடிச்சு விவசாயம் ஆரம்பிச்சிருக்கோம்” என்றார், தரணிவேந்தன்.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete