Thursday 1 June 2017

இயற்கைக் காய்கறி- லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம்!


மதுரை மாவட்டம் சாலிச்சந்தையைச் சேர்ந்த இயற்கை உழவர் சதுரகிரி, காய்கறிச் சாகுபடிக்காக ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளார். குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட காய்களை சாகுபடி செய்கிறார். எந்தக் காய்க்கு எப்போது விலை கிடைக்கும், எப்போது நோய் தாக்கும் என்பது போன்ற தகவல்களை தெளிவாகப் பின்பற்றுகிறார். விதையை விலை கொடுத்து வாங்குவதில்லை. கத்திரி சாகுபடியில் இவர் தேர்ந்த விற்பன்னராக உள்ளார். கத்திரி தவிர, வெண்டை, கீரை, பூசணி, பீர்க்கு, வெள்ளரி என்று பல காய்களையும் சாகுபடி செய்கிறார். இவர் தனது பண்ணைக்கு வரும் உழவர்களுக்கு இந்த விதைகளை அன்பளிப்பாகவும் வழங்குகிறார்.

காய்கறிச் சாகுபடியில் ஏக்கருக்கு 10 டிராக்டர் அளவு குப்பை அடிக்கிறார். முதலாண்டு செய்த பயிரை அடுத்த ஆண்டில் அதே இடத்தில் செய்வதில்லை. பயிர்ச் சுழற்சி முறையைச் சிறப்பாகப் பின்பற்றுகிறார். அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் போன்ற கரைசல்களையும் பூச்சி விரட்டியையும் பயன்படுத்துகிறார். அவற்றின் அளவும் இப்போது மெல்லக் குறைந்துவிட்டது. அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை முதலிலேயே மண்ணுக்குக் கொடுத்துவிடுகிறார். இப்படியாக இவரது காய்கறி விளைச்சல், ரசாயனத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் விளைச்சலுக்கு இணையாகக் கிடைத்துவிடுகிறது. 50 சென்ட் நிலத்தில் சென்ற ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. அதேநேரம், செலவு 30,000 ரூபாய் மட்டுமே என்று சிரித்துக்கொண்டே காய்கறிச் சந்தைச் சிட்டைகளை எடுத்து நீட்டுகிறார்.

வெளிப்படையான வியாபாரம் :

தனக்குத் தெரிந்த நுட்பங்களை மற்றவர்களுக்குச் சளைக்காமல் சொல்லித்தருகிறார் சதுரகிரி. 60 சென்ட் நிலத்தில் மல்லிகைப் பூ சாகுபடி செய்துள்ளார். ராமேசுவரம் அருகில் உள்ள தங்கச்சிமடத்திலிருந்து நல்ல பூச்செடி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளார். ஏறத்தாழ 4,000 கன்றுகளை நட்டுள்ளார். அவை தற்போது பூத்து வருமானம் தரத் தொடங்கிவிட்டன. ஒரு நாளைக்கு 4 முதல் 6 கிலோவரை பூ கிடைக்கிறது. கிலோவுக்கு இருநூறு ரூபாய் முதல் அறுநூறு ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. இவரது பூ இயற்கை முறையில் வளர்க்கப்படுவதால் மணம் சிறப்பாக உள்ளது. எனவே, சந்தையில் இவரது பூ கொண்டு சென்றவுடன் விற்றுவிடும். ஆனால், அதிக விலை கிடைப்பதில்லை என்பதுதான் வருத்தம் என்கிறார். ஒன்பது மாதங்களில் 20,000 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.

கொய்யா, சப்போட்டா, வாழை, மா, எலுமிச்சை என்று பழச் சாகுபடிக்கு 3 ஏக்கர்வரை ஒதுக்கியுள்ளார். கொய்யாவைப் பத்து அடி இடைவெளியில் அடர் நடவாக நட்டுள்ளார். கொய்யாவும் இப்போது காய்ப்புக்கு வந்துவிட்டது. ஏழடிக்கு ஏழடி என்ற இடைவெளியில் அடர் நடவாகக் கொய்யா நடவு செய்து, அதுவும் விளைச்சலுக்கு வந்துவிட்டது. மின்சாரப் பற்றாக்குறை காலங்களில் ஈடுசெய்ய சூரிய ஆற்றல் பாசனம் அமைத்துள்ளார். ஐந்து குதிரை சக்தி கொண்ட இந்த சூரிய மின்தகடுகள் மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுக்கின்றன.

வெற்றிகரமான உழவு :

களை எடுப்பதற்குப் பெரும்பாலும் ஆட்களே பயன்படுகின்றனர். ஆள் பற்றாக்குறை காலங்களில் களை எடுக்கும் எந்திரம் ஒன்றைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் ஐந்து ஆட்களுக்குத் தொடர்ச்சியாக வேலை கொடுக்கிறார். இது தவிர சாகுபடிக் காலத்தில் சராசரியாக ஐந்து ஆட்களுக்கு வேலை தருகிறார். குறைந்த முதலீட்டில் கண்ணும் கருத்துமாக வேலை செய்வதால், இந்த வேலைச் சமநிலையை அவரால் அடைய முடிகிறது, உழவையும் வெற்றிகரமாக நடத்த முடிகிறது.

காய்கறியில் நாளும் வருமானம், பூக்களில் இருந்து வாரம் ஒரு வருமானம், பால் மாட்டில் இருந்து மாதம் ஒரு வருமானம், ஆடுகளிலிருந்து ஆறு மாதத்துக்கு ஒரு வருமானம், பழ மரங்களில் இருந்து ஆண்டுக்கு ஒரு வருமானம். இவை தவிர மரங்களையும் வளர்த்து வருகிறார். தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் நல்ல கட்டையைத் தருபவை. இவை சில ஆண்டுகளில் பயன்தந்துவிடும். இவை வைப்பு நிதி போன்றவை என்கிறார் எளிய வெற்றியாளரான சதுரகிரி.

அவரைத் தொடர்புகொள்ள: 07871600000

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment