Wednesday 28 June 2017

சொட்டு நீரிலும் ஜொலிக்கும் கத்திரி விவசாயம் :


கத்திரி முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணுங்கிறது பழமொழி. ஆனால், நடைமுறையில் முத்தின கத்திரி கடைக்குப் போனா விலை கிடைக்காது. இதுதான் நிஜம்” என்கிறார் உடுமலை விவசாயி கனகராஜ்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னாலம்மன்சோலை.

நகரத்து வாசனை இல்லாத இடம் :

எல்லாவற்றுக்கும் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்தி நகர் அல்லது தளி பேரூராட்சிக்குத்தான் போக வேண்டும். குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மாதம் ஒருமுறை 30 கி.மீ. தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர் அங்குள்ள விவசாயிகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரம்தான் இவர்களுடைய வாழிடம்.

பேருந்து போக்குவரத்து இல்லை. வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். திருமூர்த்தி அணையை ஒட்டிய பாலாறு புதுப் பாலத்திலிருந்து சுமார் 3 கி.மீ.க்குத் தார்ச் சாலை செல்கிறது. அதன் பிறகு ஒற்றையடி மண்பாதைதான் வழித்தடம். பரம்பிக்குளம் தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் காண்டூர் கால்வாய் உள்ளது.

பல்வேறு கத்திரி வகைகள் :

ஆனால், அதில் இருந்து அப்பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மழையை நம்பியும், கிணறு மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்தை மட்டுமே நம்பி இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை, பட்டுப்புழு வளர்ப்பு, அதற்கு அடுத்தபடியாகக் கத்திரிக்காய், வெண்டை அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.

எந்த மண்ணிலும் வளரும் பூனைத்தலை, கண்ணாடிக் கத்திரி, வெள்ளக் கத்திரி, பவானி நீளவரி, புளியம்பூ எனப் பல நாட்டுக் கத்திரி ரகங்கள் உள்ளன. கனகராஜ் பயிரிட்டிருப்பது புளியம்பூ ரகம். 6 மாதங்கள் வரைதான் காய்ப்பு இருக்கும். ஏக்கருக்குச் சுமார் 20 டன் வரை கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.

கத்திரி சாகுபடி :

இது குறித்து விவசாயி கனகராஜ் பகிர்ந்துகொண்டது, “15 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். 3 ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசன வசதியுடன் நாட்டுக் கத்திரி சாகுபடி செய்துள்ளேன். நல்ல ருசி இருக்கும். பொரியல், சாம்பார் வகைக்கு ஏற்றது. எல்லா வகை மண்ணிலும் வளரும்.

காய்களைப் பறிக்காமல் விட்டால் மஞ்சள் நிறத்தில் பழுக்கும், நீளவாக்கில் அறுத்து, வாளி தண்ணீரில் அமுக்கி, கசக்கி எடுத்து அடுப்புச் சாம்பல், மாட்டுச் சாணம் கலந்து, விதைகளை நிலத்தைக் கீறிவிட்டு லேசாக மூடிவிட வேண்டும்.

40 நாட்களில் முளைக்கும் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். 3- வது நாளில் உயிர் தண்ணீர் விட வேண்டும். செடி முளைத்தது முதல் காய்ப்பு முடியும்வரை, வாரம் இரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15-வது நாளில் கை களை எடுக்க வேண்டும். 3 அடி இடைவெளியில் ஒரு குழிக்கு இரண்டு நாற்றுகள் நடவேண்டும். நான்கு அங்குல ஆழத்துக்குப் பதியன் போடவேண்டும்.

50-வது நாளிலிருந்து அறுவடை தொடங்கும். தொடர்ந்து 90 நாட்களுக்கு 100 சதவீத விளைச்சலும், அடுத்த 90 நாட்களுக்கு 50 சதவீத விளைச்சலும் கிடைக்கும். விலை குறைந்தாலும் கிடைக்கும் தொகை லாபகரமானதாக இருக்கிறது.

மூட்டைக்கு ரூ. 200 :

ஓர் ஏக்கருக்கு ஆட்கூலி, இடுபொருட்கள் செலவு என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்வரை செலவாகிறது. வாரம் 60 பைகள் (20 கிலோ எடை) வரை கிடைக்கும். உள்ளூர் சந்தையில் அப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஒரு பை ரூ. 200 முதல் ரூ. 400 வரை கிடைக்கும்.

ரசாயன மருந்துகளைக் குறைத்து, இயற்கை வேளாண் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளேன். நம் மனம் மட்டுமின்றி வயிறும் நலமாக இருந்தால்தான் மக்களோட ஆதரவு கிடைக்கும்".

கனகராஜைத் தொடர்புகொள்ள : 9488248353.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

2 comments:

  1. Hi Fizal,

    I shared content from your blog into my website. I have mentioned sourced from blog post. Give me your contact no. I have to get permission from you to post your content.
    https://www.muppogam.com/

    thanks,
    satheesh.

    ReplyDelete
  2. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete