Tuesday 13 June 2017

வாழைக்கு இடையில் வருமானம்…. 55 நாளில் அள்ளிக் கொடுக்கும் மல்லி!


ஊடுபயிர் ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு ‘அடுத்த வேளை’ என்பது கனவாகவே போயிருக்கும். வறட்சி, ஆள்பற்றாக்குறை, நோய்த் தாக்குதல் விலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான். அந்த வகையில் வாழையில் ஊடுபயிராக மணக்கும் கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்து, வறுத்தெடுக்கும் வெயிலிலும் கூட வளமான வருமானம் பார்த்து வருகிறார் கோயமுத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சம்பரவள்ளிப்புதூர் விவசாயி எம்.விஸ்வநாதன்.

“ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகியகாலத்தில் வருமானம் எடுக்கின்ற ஒரு யுக்தி. அந்த முறையில் தான் நான் ‘கொத்துமல்லித் தழையைப் பயிர் செய்திருக்கிறேன். மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டு போர்வெல், ஒரு கிணறு இருந்தாலும் நீர்ப்பற்றாக்குறை தான். அதனால் ஐந்து ஏக்கரில் மட்டும் தான் விவசாயம் நடக்கிறது. தொடர்ந்து 40 வருடங்களாக கதளி, நேந்திரம் வாழை விவசாயம் தான் பிரதானமாக செய்கிறேன். மற்றவர்கள் காய்கறி, புகையிலை என்று ஏதாவது ஒன்றை ஊடுபயிராக செய்கிறார்கள். நான் கொத்து மல்லித் தழையை சாகுபடி செய்கிறேன். இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது..”

வெயில் காலத்தில் தான் விலை கிடைக்கும்!

“பொதுவாக, கொத்துமல்லியைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வைகாசியிலிருந்து மார்கழி வரைக்கும் ஏற்ற காலம். மல்லி அதிக வெயிலில் தழையாது. நிழற்பாங்கான இடத்தில் தான் வளரும். தை மாதம் தொடங்கி வைகாசி வரைக்கும் வெயில் இருப்பதனால் அதிக வரத்து இருக்காது. பாத்திகள் மேல் தென்னங்கீற்றுகளை போட்டு நிழலை ஏற்படுத்தினாலும், 30% அளவுக்கு தான் தழையும். கோடைக் காலத்தில் கொத்துமல்லித் தழைக்கு தட்டுப்பாடு இருக்கும். அந்த நேரத்தில் சந்தைக்கு வருகிற மல்லிக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த விஷயத்தைக் கணக்கு பண்ணித்தான் ஐந்து மாத வயதுள்ள வாழைக்கு இடையில் கொத்துமல்லியை விதைத்தேன். 55 – ம் நாளிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது” முழுக்க இயற்கை முறையில் தான் விவசாயம் செய்து வருகிறார்.

ஏழரைக்கு ஏழரை இடைவெளி!

‘ஒரு ஏக்கர் நிலத்தில், ஆண்டு தோறும் தவறாமல் இரண்டு தடவை ‘ஆட்டுக்கிடை’ அமைக்க வேண்டும். இதற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்படி கிடை போடுவதால், ஒரு ஏக்கர் நிலம் முழுக்க ‘ஆட்டு எரு’ நிறைந்துவிடும். அதற்கு மேலாக 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்துவிட்டு, ஆழமாக இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, ஏழரை அடி இடைவெளி இருப்பதுபோல பார் பிடித்து, கன்றுக்கு கன்று 5 அடி இடைவெளி விட்டு, முக்கால் அடி ஆழத்தில் குழியெடுத்து வாழையை நடவு செய்ய வேண்டும். இப்படி நடும்போது ஏக்கருக்கு 1,100 வாழைக்கன்றுகள் தேவைப்படும். நேந்திரம் வாழையை நடவு செய்ய கன்று, குழி, நடவுக்கூலி எல்லாம் சேர்த்து ஒரு தடவை உபயோகப்படுத்தும் வகையிலான தற்காலிக கொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க வேண்டும்.

ஊடுபயிருக்கும் சொட்டுநீர் :

சொட்டுநீர்ப்பாசனம் என்பது கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதம். ஒரு ஏக்கராவிற்கான தண்ணீர் தான் கிணற்றில் இருக்கிறது என்றால் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் மூன்று ஏக்கருக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். பிரதானக் குழாயில் இருந்து பிரிந்து வருகிற சொட்டு நீர்க் குழாயில் 5 அடிக்கு ஒரு இடத்தில் தண்ணீர் சொட்டுகிறது போல் வாழைக்கு அமைக்க வேண்டும்.

மல்லியைப் பொறுத்தவரை ஏழரை அடிக்கு இருக்கின்ற பார் இடைவெளியில் 2 அடிக்கு ஒரு நுண்ணீர்க் குழாயை (மைக்ரோ டியூப்), 100 அடி நீளத்திற்கு அமைக்க வேண்டும். ஒரு பாருக்கு இரண்டுதான் வரும். இப்படி கணக்குப் போட்டால் ஏக்கருக்கு 20 குழாய் பிடிக்கும். அந்தக் குழாய்களில் இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத துளைகள் மூலமாக மல்லிக்கு, இரண்டு புறமும் சொட்டு சொட்டாக தண்ணீர் கசிஞ்சு ஒரே சீராக போய்ச் சேரும்.

இந்த அமைப்புக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். வாழையில் இரண்டு போகம், கொத்துமல்லியில் மூன்று போகம் வரைக்கும் இதைப் பயன்படுத்தலாம். பிறகு, புதிதாக வாங்கனும்”.

12 கிலோ விதை!

வாழையை நடவு செய்த ஐந்து மாதம் கழித்துதான், கொத்துமல்லி விதைக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவையான நிழல் கிடைக்கும். ஏக்கருக்கு 12 கிலோ விதைகள் தேவைப்படும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கை முதல் களை எடுக்கும்போதே கொத்துமல்லி, வாழை இரண்டிற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டும்.
பெரும்பாலும் கலப்பட வேப்பம் பிண்ணாக்கு கிடைப்பதால் கிராமங்களில் வேப்பம் கொட்டைகளை நேரடியாக வாங்கி அதனுடன் புங்கன், இலுப்பை விதைகளையும் கலந்து அரைத்து, அதையே உரமாகப் பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கரில் வாழை, மல்லி சாகுபடி செய்ய செலவு – வரவு கணக்கு

விவரம் - செலவு

உழவு - 1,000

தொழுவுரம் 10 டன் இறைப்புக் கூலியுடன் - 10,000

வாழைக் கன்று + நடவு (1,100) - 11,000

சொட்டுநீர்ப்பாசனம் - 35,000

வாழையில் களையெடுக்க - 3,000

மல்லி விதை 12 கிலோ - 2,500

இறைப்புக் கூலி - 2,000

மல்லியில் களையெடுக்க - 4,000

ஆட்டுக்கிடை - 3,000

வேம்பு, புங்கன், இலுப்பை, கலவை உரம் - 12,000

பஞ்சகவ்யா - 2,500

மல்லி பறிப்புக் கூலி - 300

வரவு :

மகசூல் : மல்லித்தழை 6 டன் x கிலோ 8 ரூபாய் - 48,000

வாழை மகசூல் 10 டன் x கிலோ 20 ரூபாய் - 2,00,000

மொத்தம் வரவு - 2,48,000

செலவு - 86,300

நிகர லாபம் - 1,61,700

குறிப்பு: சொட்டுநீருக்கான செலவு 35 ஆயிரம் ரூபாய்,
அடுத்த போகத்தில் அப்படியே மிச்சமாகிவிடும்.

மகசூல் 6 டன்!

“கொத்துமல்லியை விதைக்கும் பொழுது வாழைக்கு வயசு 160 நாள். 55 நாளில் மல்லி அறுவடைக்கு வந்துவிடுகிறது. இன்னும் 100 நாட்களில் வாழை அறுவடையை தொடங்கலாம். மல்லியைப் பொருத்தவரை ஊடுபயிரில் 6 டன் வரை மகசூல் கிடைத்தது. சராசரியாக மல்லித்தழை கிலோவிற்கு 8 ரூபாய் விலை போயிக்கொண்டிருக்கிறது. வியாபாரிங்க தோட்டத்திற்கே வந்து வாங்கிக்கொள்கிறார்கள். அதனால் வேன் வாடகை, கமிஷன் எந்த தொந்தரவும் இல்லை.

வாழை 10 டன்!

மல்லியை எடுத்த பின்னாடி, வாழைக்கு மண் அணைப்புச் செய்ய வேண்டும். அடுத்த 90 நாளைக்கு இரண்டு தடவை ஆர்கானிக் ஊட்டச்சத்து கொடுப்பேன். அதனுடன் அசோஸ்பைரில்லம் 40 கிராம், பாஸ்போ – பேக்டீரியா 40 கிராம், வேப்பம் பிண்ணாக்கு 200 கிராம் கலந்து செடிக்கு 280 கிராம் வீதம் இரண்டு முறை கொடுத்தால் இலை அனைத்தும் பசுமையோடு இருக்கும். தார் போடுவதற்கு முன்பும், பின்பும் பஞ்சகவ்யாவை வாழையோடு வேர் பகுதியில் கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுப்பேன். இதனால் சொத்தையில்லாமல் காயெல்லாம் ஒரே தரமாக இருக்கும். வாழையில் 10 டன் வரைக்கும் மகசூல் எதிர்பார்க்கிறேன். குறைந்தது கிலோ 20 ரூபாய்க்கு விலை போகும். இதிலே இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். முழுக்க முழுக்க இயற்கை முறையில் மகசூல் எடுக்கிறேன். சூழலைக் கொடுக்காத இந்த இயற்கை விவசாயம் செய்வதில் நல்ல மகசூல் கிடைப்பதுடன் மனதும் நிறைந்திருக்கிறது.

தொடர்புக்கு:
திரு. விஸ்வநாதன்,
சம்பரவள்ளிப்புதூர்,
சிறுமுகை அருகில்,
கோயமுத்தூர் மாவட்டம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete