Tuesday 20 June 2017

5 ஏக்கர்... மாதம் ரூ 1 லட்சம் வருமானம்... ஜெயிக்க வைத்த ஜீரோ பட்ஜெட் மல்பெரி :


திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் முக்கியமான விவசாய உபதொழில், பட்டுப்புழு வளர்ப்பு. இதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் தாவரம் மல்பெரி. இத்தாவரத்தின் இலைகள்தான் பட்டுப்புழுக்களுக்கான உணவு. மல்பெரி சாகுபடி செய்ய, பட்டு வளர்ப்புத்துறை பெரும்பாலும் ரசாயன உரங்களையே பரிந்துரைத்தாலும், அதை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்பவர்களும் உண்டு. அந்த வகையில், ஜீரோ பட்ஜெட் வேளாண்மை முறையில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம்-புஷ்பலதா தம்பதி.

உடுமலைப்பேட்டை வட்டம், சுங்காரமடக்கு கிராமத்தில் நித்தியானந்தம், புஷ்பலதா ஆகியோர் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு முற்பகலில் அவர்களின் வயலுக்குள் நுழைந்தோம். சொட்டுநீர்ப் பாசன உரத்தொட்டியில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துகொண்டிருந்த நித்தியானந்தம் நம்மை மகிழ்ச்சியாக வரவேற்றார். அவரின் மனைவி புஷ்பலதா நாட்டுப் பசும்பாலில் தயாரித்த தேநீர் கொடுத்து உபசரித்தார்.

இயற்கைக்கு மாற்றிய பயிற்சி :

தேநீர் அருந்திக்கொண்டே பேச ஆரம்பித்த நித்தியானந்தம், “எனக்கு இந்த ஊர்தான் பூர்வீகம். இங்க மொத்தம் 15 ஏக்கர் நெலம் இருக்கு. அதுல 13 ஏக்கர் நெலத்துல தென்னை போட்டிருக்கோம். இவையெல்லாம் 30 வருஷமா காய்ப்புல இருக்கிற மரங்கள். மீதமுள்ள 2 ஏக்கர்ல வெங்காயம், மக்காச்சோளம், தீவனப்பயிர்னு வெள்ளாமை வைப்போம்.

ஈரோடுல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சியில் கலந்துக்குற வரைக்கும், நானும் அதிகளவுல ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்திட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ல வந்த அந்தப் பயிற்சி பத்தித் தெரிஞ்சு அதுல கலந்துகிட்டேன். அதுக்கப்புறம் என்னோட விவசாயமே தலைகீழா மாறிடுச்சு.

நிலத்தை வளமாக்கிய ஜீவாமிர்தம் :

பயிற்சி முடிச்சு வந்ததுமே மொத வேலையா ஒரு நாட்டு மாட்டை வாங்கிட்டு வந்தேன். அதோட சாணம், சிறுநீர்ல இருந்து ஜீவாமிர்தம் தயாரிச்சு மரங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். மரங்கள்ல நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. 2008-ம் வருஷத்துல இருந்து இப்போ வரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். இந்த ஒன்பது வருஷத்துல, ஒரு கைப்பிடி அளவுகூட ரசாயன உரத்தை நிலத்துல போட்டதில்ல. பதினஞ்சு ஏக்கர்ல எந்த இடத்துல மண்ணைக் கிளறினாலும், அங்க கொத்துக்கொத்தா மண்புழு இருக்கும். அந்தளவுக்கு மண் வளமாயிடுச்சு” என்று ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறிய கதை சொன்ன நித்தியானந்தம், பட்டுப்புழு வளர்ப்புக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

தென்னையில் ஊடுபயிராக மல்பெரி :

“எங்க பகுதியில நெறைய பேர் பட்டுப்புழு வளர்ப்புல ஈடுபட்டிருக்காங்க. அதுல கணிசமான லாபம் கிடைக்குதுனு கேள்விப்பட்டு, நாங்களும் அதுல இறங்கலாம்னு முடிவு பண்ணினோம். ஏற்கெனவே பயிற்சி சமயத்துல பாலேக்கர்கிட்ட ‘தென்னைக்கு இடையில் மல்பெரி நடவு செய்யலாமா?’னு கேட்டிருந்தேன். அவர், ‘தாராளமா நடவு செய்யலாம். மல்பெரி தென்னைக்கு நட்புப்பயிர்தான்’னு சொல்லியிருந்தார். அதனால, தைரியமா தென்னைக்கு இடையில ஊடுபயிரா மல்பெரி பயிரை நடவு செய்ய முடிவெடுத்தேன். அடுத்ததா, பட்டு வளர்ச்சித்துறை கொடுக்குற பயிற்சி வகுப்புலயும் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

வழக்கமா ஒரு ஏக்கர் நிலத்துல 5,600 மல்பெரி நாத்துகளை நடவு செய்யலாம். ஆனா, ஊடுபயிர்ங்கறதால அஞ்சு ஏக்கர்லயே 12 ஆயிரம் நாத்துகளதான் நடவு செய்ய முடிஞ்சது. தென்னை மரங்களுக்கு இடையில, நீளமா கிடங்கு (1 அடி ஆழம், 4 அடி ஆகலம் கொண்ட கால்வாய்) எடுத்து, அதுல பண்ணைக் கழிவுகளைக் கொட்டி, தென்னைக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிக்கிட்டு இருந்தேன். அந்தக் கிடங்குலேயே ரெண்டு அடி இடைவெளியில் மல்பெரி நாத்துகளை நடவு செஞ்சு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுட்டேன்.

இப்போ தென்னைக்குனு தனியா பாசனம் செய்றதில்ல. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை, ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம்ங்கிற கணக்குல பாசன தண்ணியோட சேர்த்துக் கொடுத்துடுவேன். ஜீவாமிர்தம் விடுறதால மல்பெரிச் செடிகள் நல்லா வளருது. மல்பெரியை ஒருமுறை நடவு செஞ்சிட்டா, 25 வருஷம் வரைக்கும் பலன் கொடுக்கும்” என்று நித்தியானந்தம் முடிக்க, அவரின் மனைவி புஷ்பலதா தொடர்ந்தார்... “இது ‘எம்.ஆர்-2’ங்கிற வீரிய ரக மல்பெரி. வறட்சிய தாங்கி வளரும். பட்டு வளர்ப்புக்கு மல்பெரி ரொம்ப முக்கியம். ஜீவாமிர்தம் கொடுக்கிறதோட, வருஷத்துக்கு ஒரு தடவை ஏக்கருக்கு 400 கிலோங்கிற அளவுல புங்கன் பிண்ணாக்கையும் வேப்பம் பிண்ணாக்கையும் கலந்து, செடிகளோட தூர்ல போட்டுடுவோம். அதனால, வேர் சம்பந்தமான நோய்கள் வர்றதில்லை. அப்பப்போ தேவையான உயிர் உரங்களையும் கொடுக்கிறதால, மண் வளமா இருக்கு. பயிரும் செழிப்பா வளருது.

ஊடுபயிரா மல்பெரி போட்டிருந்ததால குறைவான அளவுலதான் மகசூலாச்சு. அதனால, மாசம் 50 ஆயிரம் புழுக்கள்ங்கிற கணக்குலதான் வளர்க்க முடிஞ்சது. அதுமூலமா ஒரு மாசத்துக்கு 90 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செஞ்சோம். இயற்கை விவசாய முறையில விளைஞ்ச இலைகளைச் சாப்பிட்டதால, புழுக்கள் எந்த பாதிப்பும் இல்லாம நல்லா வளந்தது. பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் எங்களைக் கூடுதலா புழுக்களை வளர்க்கச் சொன்னாங்க. அதனால, 2 ஏக்கர் நெலத்துல தனிப்பயிராவே மல்பெரி நடவு செஞ்சுருக்கோம். அதுக்கான நாத்துகளையும் நாங்களே உற்பத்தி செஞ்சு நட்டுட்டோம்” என்றார்.

நிறைவாகப் பேசிய நித்தியானந்தம், “நாங்க நடவு செஞ்சுருக்குற அளவு மல்பெரியை வெச்சு கிட்டத்தட்ட 300 முட்டைத் தொகுதிகளை வாங்கலாம். அதுல ஒன்றரை லட்சம் புழுக்கள் வரை வளர்க்க முடியும். தண்ணீர்ப் பற்றாக் குறையால இப்போதைக்கு 200 முட்டைத் தொகுதிகள் மூலமா, ஒரு லட்சம் புழுக்கள் அளவுக்குத்தான் வளர்த்துட்டு இருக்கோம். கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையிலும் இவ்வளவு மல்பெரி உற்பத்தி செய்ய முடியுதுனா, அதுக்கு ஜீரோ பட்ஜெட் விவசாய முறைதான் காரணம்.

ஒரு லட்சம் புழுக்கள் வளர்ப்பது மூலமா மாசம் சரசாரியா 200 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய முடியும். நாங்க 190 கிலோ அளவுக்கு உற்பத்தி செஞ்சுட்டு இருக்கோம். ஒரு கிலோ பட்டுக்கூடு, 400 ரூபாய்ல இருந்து 600 ரூபாய் வரை விற்பனையாகும். எப்படிப் பார்த்தாலும் மாசம் 1 லட்சம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. அதுல, செலவெல்லாம் போக மாசம் 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும்” என்றார், மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு :
நித்தியானந்தம்,
செல்போன்: 99654 18009

ஒரு ஏக்கரில் ரூ. 40 ஆயிரம் லாபம்!

“நாங்க நல்ல முறையில் பட்டுப்புழு வளர்ப்பைச் செஞ்சுட்டு வர்றதால, பட்டு வளர்ச்சித் துறை நடத்துற கூட்டங்கள்ல பேச வாய்ப்பு கொடுக்கிறாங்க. அதேமாதிரி திருச்சியில், பசுமை விகடன் நடத்தின வேளாண் கண்காட்சியிலயும், என்னை வல்லுநரா அழைச்சு... பட்டுப்புழு வளர்ப்புப் பத்தி கண்காட்சிக்கு வந்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வெச்சாங்க.

இதைப் பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன். அதுக்குக் காரணம் ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான். போன அஞ்சு வருஷமாவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைச்சுட்டு இருக்கு. கிலோ 400 ரூபாய்க்கு குறையுறதில்ல. சில சமயங்கள்ல 650 ரூபாய்க்கெல்லாம் விற்பனையாச்சு. ஒரு ஏக்கர்ல மல்பெரி வளர்த்து பட்டுப்புழு வளர்ப்புல ஈடுபட்டா, மாசம் 40 ஆயிரம் ரூபாய் கண்டிப்பா லாபம் எடுக்கலாம்” என்கிறார், நித்தியானந்தம்.

மல்பெரி சாகுபடி :

மல்பெரியைச் சாகுபடி செய்வது குறித்து நித்தியானந்தம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே...

ஒன்பது மாத வயதுடைய செடிகளிலிருந்து விதைக்குச்சிகள் எடுத்து, நாற்று உற்பத்தி செய்யலாம். தாய்ச்செடிகளில் செதில் பூச்சி, பூஞ்சணம், வேரழுகல் உள்ளிட்ட நோய்கள் தாக்கப்படாதவையாக இருக்க வேண்டும். விதைக்குச்சிகள் 2 சென்டிமீட்டர் பருமனும் 6 அங்குல நீளமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குச்சியிலும் மூன்று கணுக்கள் இருக்க வேண்டும்.

3 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 10 சென்டிமீட்டர் உயரத்துக்கு நாற்றங்கால் படுக்கைகளை அமைக்க வேண்டும். படுக்கைகளில் தொழுவுரத்தைத் தூவிச் சமப்படுத்த வேண்டும். பிறகு, படுக்கைகளில் இட்டு இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்குமாறு விதைக்குச்சிகளை நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 20 சென்டிமீட்டர், செடிக்குச் செடி 10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வாரம், இரண்டு முறை பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். மூன்று மாதங்களில் நாற்றுகள் தயாராகிவிடும்.

செம்மண் நிலங்களில் மல்பெரி நன்றாக வளரும். செம்மண் நிலம் இல்லாதவர்கள் ஏக்கருக்கு 10 டன் செம்மண்ணைக் கொட்டி, அதில் மல்பெரி நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளில் 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன் பீஜாமிர்தக் கரைசலில் நாற்றுகளை விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை களை எடுக்க வேண்டும். மாதத்துக்கு இரண்டு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த நான்கு மாதங்கள் கழித்து மல்பெரி இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 45 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.

விதை நேர்த்தி :

தண்ணீர் 20 லிட்டர், பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், சுத்தமான கல் சுண்ணாம்புத்தூள் 50 கிராம், வளமான நிலத்தின் மண் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, 12 மணி நேரம் வைத்திருந்தால் பீஜாமிர்தம் தயார்.

மல்பெரி விதைக்குச்சிகளை 2 மணி நேரம் பீஜாமிர்தக் கரைசலில் ஊறவிட்டு நடவு செய்ய வேண்டும். அதேபோல, நாற்றுகளின் வேர்ப்பகுதியைப் பீஜாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வேரழுகல், வேர்ப்புழு, வேர் கறையான் ஆகியவை தாக்குவதில்லை.

பயிற்சி இலவசம் :

தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சித்துறையின் குடிமங்கலம் வட்டார இளநிலை ஆய்வாளர் ஷாநவாஸ், பட்டுப்புழு வளர்ப்புக் குறித்துச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். “உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி சிறப்பாக இருக்கிறது. சரியான நுட்பங்களைக் கடைப்பிடித்து 90 சதவிகிதத்துக்கு மேல் மகசூல் எடுக்கும் விவசாயிகள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 5 ஆயிரம் டன் பட்டு நூல் தேவைப்படுகிறது. ஆனால், அந்தளவுக்கு உற்பத்தியில்லை. அதனால், இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

மல்பெரி நடவு, புழு வளர்ப்பு மனை, தளவாடங்கள், உபகரணங்கள், சொட்டுநீர் கருவிகள் ஆகியவற்றை வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும் பெரிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 22,500 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

பட்டு வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுவளர்ச்சித் துறை பயிற்சி மையத்தில் 5 நாள்கள் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. தங்குமிடம், உணவு, பயணப்படி ஆகியவற்றுடன் பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாகக் கிடைக்கிறது” என்றார்.

தொடர்புக்கு, ஷாநவாஸ்,
தொலைபேசி: 04252 226943

புழு மனை :

நல்ல காற்றோட்ட வசதியுள்ள இடத்தில், 50 அடி நீளம் 20 அடி அகலத்தில் புழு வளர்ப்பு மனையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதில், பட்டு வளர்ப்புத்துறையின் பரிந்துரைப்படி 1,500 சதுர அடியில் புழு வளர் படுக்கைகளை அமைக்க வேண்டும். முட்டைகளை வாங்கி வந்து விவசாயிகளே பொரிக்க வைத்து வளர்க்க முடியும். இதில் இழப்பு அதிகமாக இருக்கும் என்பதால், ‘சாக்கி சென்டர்’ எனப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களிலிருந்து 7 நாள்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்தும் வளர்க்கலாம். 100 முட்டைத்தொகுதி மூலம் 50 ஆயிரம் புழுக்களை உற்பத்தி செய்யலாம். 50 ஆயிரம் புழுக்களின் விலை 2,000 ரூபாய்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete