Sunday 12 November 2017

இளம்கன்றுகளில் இறப்பை தவிர்க்க மேலாண்மை நடவடிக்கைகள் :

1. சினை பசுக்கள் பராமரிப்பு
2. கன்று பிறந்தவுடன் பராமரிப்பு
3. கன்றுகளில் நோய் பராமரிப்பு
4. தொப்புள் கொடி மூலம் ஏற்படும் நோய் தொற்று
5. கன்றுகளுக்கான தடுப்பூசிகள்

கறவைமாடு வளர்ப்பில் கன்று வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஏனெனில் எதிர்கால கறவைமாடுகளாக உருவெடுப்பவை இக்கன்றுகளேயாகும். எனவே கறவைமாடு பராமரிப்போர் தங்கள் கன்றுகளை கவனமுடன் பராமரிப்பதன் மூலம் தங்கள் பண்ணையின் எதிர்கால தேவைக்கான தரமான கறவைமாடுகளின் கன்றுகளை தேர்ந்தெடுத்து முறையாக பராமரிப்பதனால் சிறந்த உற்பத்தியை வெளிப்படுத்தும் கன்றுகளை பெறமுடியும்.

இத்தகைய கன்றுகளின் வளர்ச்சி மற்றும் இறப்பினை ஏற்படுத்தும் காரணிகளை கால்நடை வளர்ப்போர் அறிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூலம் பண்ணையின் இலாபத்தினையும் அதிகரிக்கமுடியும்.

சினை பசுக்கள் பராமரிப்பு :

கன்று பராமரிப்பு என்பது பசுவானது சினையாக உள்ள காலத்திலிருந்து துவங்குகிறது. அதாவது சினையாக உள்ள பசுக்களை முறையான பராமரிப்புடன் சரிவிகித தீவனம் கொடுத்து பராமரிப்பதன் மூலம் கர்ப்பபையில் உள்ள கன்றின் வளர்ச்சியும் சீராக இருக்கும். மேலும் கன்று ஈன்ற பசு ஈன்றவுடன் சுரக்கும் சீம்பாலின் தரமானது அதன் சினைகால பராமரிப்பினை பொருத்தே அமையும். குறிப்பாக கடைசி மூன்று மாத சினைக்காலத்தில் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சினையாக உள்ள பசுக்களுக்கு இரண்டு முதல் இரண்டரை மாத பால் வற்றுக்காலம் கொடுப்பது மிகவும் அவசியம். அதாவது பசுக்கள் எட்டு மாத சினைக்காலத்தை எட்டியவுடன் பால் கறவையை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் பசுக்களுக்கு வழங்கப்படும் தீவனத்தில் உள்ள சத்துக்கள் கன்றுகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும்.

கன்று பிறந்தவுடன் பராமரிப்பு :

கன்றானது பிறந்தவுடன் அதன் உடலின் மேற்பரப்பில் காணப்படும் ஈரத்தினை தாய்ப்பசுவானது நக்கி உலரச்செய்துவிடும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் தூய்மையான துணிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சுவாசம் சீராக உள்ளதா என்பதையும் பரிசோதித்துக்கொள்ளவேண்டும். சுவாசிக்க சிரமம் ஏற்பட்டால் கைகளால் அதன் நெஞ்சுப்பகுதியில் அழுத்தி தேய்ப்பதன் மூலம் சுவாசிக்க செய்ய முடியும். அதன் மூக்கில் ஏதேனும் சளி அடைப்பு இருந்தால் அதனை சுத்தம் செய்யவேண்டும். பிறந்த கன்றுகளை உடனடியாக சீம்பால் குடிக்கச் செய்யவேண்டும். கன்றினால் எழுந்து சென்று பால் குடிக்க முடியாத சூழ்நிலையில் சீம்பாலினை கறந்து சுத்தமாக பாட்டிலில் அடைத்து கொடுக்கவேண்டும். பிறந்த கன்றுகளின் நோய் எதிர்ப்பு சக்தியானது சீம்பாலினை பருகுவதன் மூலமே கிடைக்கின்றது. மேலும் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு புரதங்களை உறிஞ்சும் தன்மையானது பிறந்த கன்றுகளில் படிப்படியாக குறைந்து 24 மணிநேரத்தில் முற்றிலுமாக குறைந்துவிடும் நாள் ஒன்றுக்கு கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் சீம்பால் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். அதாவது இருபது கிலோ எடை உள்ள கன்றுக்கு தினசரி இரண்டு லிட்டர் வரை பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பாலின் அளவானது மூன்று நாட்கள் கழித்து கன்றின் எடையில் 15 ல் ஒரு பாகம் என்ற அளவில் குறைத்துக்கொள்ளலாம். கன்றினை சீம்பால் குடிக்க அனுமதிப்பதற்கு முன்னதாக சிறிதளவு பாலினை அனைத்த காம்புகளிலிருந்தும் கறந்துவிட வேண்டும். அதன் மூலம் பால் மூலம் ஏற்படும்நோய்த் தொற்றினை தவிர்க்கமுடியும். கன்று ஈன்ற பசுவிற்கு மடிநோய்க்கான அறிகுறி தென்படும் சமயத்தில் கன்றுகளை சீம்பால் குடிக்க அனுமதிக்ககூடாது. கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பசுக்களிடமும் கன்றுகள் பால் குடிக்க அனுமதிக்ககூடாது. இத்தகைய சீம்பால் கிடைக்காத சமயங்களில் கன்றுகளுக்கு கீழ்க்கண்ட முறையில் உணவளிக்கலாம்.

* சாதாரண பசும்பால் - 600 மிலி
* சுத்தமான தண்ணீர் - 300 மிலி
* விளக்கெண்ணை - அரை தேக்கரண்டி
* கோழிமுட்டை - 1 (நன்றாக அடித்தது)
* குளுக்கோஸ் - 1 மேசைக்கரண்டி

நாள் ஒன்றுக்கு மூன்று முறை இந்த கலவையை கொடுக்க வேண்டும்.

பிறந்த கன்றின் தொப்புள் கொடியினை அதன் உடம்பிலிருந்து இரண்டு அங்குலம் விட்டு சுத்தமான கத்திரி கொண்டு கத்திரித்து அதன் மேல் கிருமிநாசினி (டிங்ஞ்சர் அகோடின்) கலவை தடவவேண்டும். இதன் மூலம் தொப்புள் கொடி மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

கன்றுகளில் நோய் பராமரிப்பு :

கன்றுகளில் நோய் பாதிப்பானது அவற்றிற்கு கிடைக்கும் பாலின் தரம் மற்றும் அளவு, பராமரிக்கும் இடத்தின் தூய்மை மற்றும் சினை கால கறவைமாடு பராமரிப்பு போன்றவற்றை பொறுத்தே அமையும்.

தொப்புள் கொடி மூலம் ஏற்படும் நோய் தொற்று :

பிறந்த கன்றின் தொப்புள் கொடியினை முறையாக துண்டித்து பராமரிக்காத சமயத்தில் அதன் மூலம் கன்றுகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று மூலம் கிருமிகள் கன்றின் இரத்தத்தில் கலந்து அவை கன்றின் கால் முட்டுக்களில் வீக்கத்தினை ஏற்படுத்தி பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கன்றுகளுக்க உடனடியாக உரிய மருத்துவம் செய்யவேண்டும். தொப்புள்கொடி கத்தரிக்கப்பட்ட கன்றுகளை சுத்தமான காற்றோட்டம் மற்றும் உலர்வான அறையில் பராமரிப்பதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கமுடியும்.

கன்றுக்கழிச்சல் :

இளம் கன்றுகளில் கன்றுக்கழிச்சல் கன்றுகளில் அதிகமான இறப்பினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அசுத்தமான பண்ணை பராமரிப்பு, முறையான சீம்பால் கிடைக்காமை ஆகியவை கன்றுகளில் கழிச்சல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கன்றுக்கழிச்சலானது ஊட்டச்சத்து பற்றாக்குறை அல்லது கிருமிகளின் தாக்கத்தின் மூலம் ஏற்படுகிறது. பசுக்களின் தூய்மையற்ற மற்றும் மடிநோய் பாதிக்கப்பட்ட மடியில் பால் குடித்தல் மற்றும் அசுத்தமான பண்ணை பராமரிப்பின் மூலம் கன்றுகளுக்கு நோய்க்தொற்று ஏற்பட்டு கன்றுக்கழிச்சல் ஏற்படுகிறது.

தேவைக்கதிமான அளவில் பால் குடிக்க அனுமதிப்பதும் கன்றுக்கழிச்சல் ஏற்பட வழிவகை செய்யும். எனவே கன்றுகளுக்கு தேவையான பாலினை உரிய கால இடைவெளியில் கொடுக்க வேண்டும். கன்றுகளில் கழிச்சல் அதிகமாக இருக்கும் சமயத்தில் அவற்றின் உடலில் நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கன்றுக்கழிச்சல் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் கன்றுகளுக்கு பால் கொடுப்பதை குறைத்து நீர் இழப்பினை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கன்றுகளில் நீர் இழப்பானது 10 சதவிகிதத்தினை தாண்டும் சமயத்தில் கன்றுகளில் இறப்பு ஏற்படவாய்ப்புள்ளது.

கன்றுகளில் நுரையீரல் அலற்சி :

கன்றுகள் பராமரிக்கும் இடத்தில் நிழவும் தூய்மையற்ற காற்று மற்றும் குறைவான இடத்தில் அதிக எண்ணிக்கையிலாக கன்றுகளை பராமரித்தல் ஆகியவை கன்றுகளில் நுரையீரல் அலற்சியை ஏற்படுத்தும். பண்ணையின் உட்புறம் போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பிற பராமரிப்புகள் மூலம் இப்பாதிப்பினை தவிர்க்கமுடியும்.

கன்றுகளில் குடற்புழு பாதிப்பு :
கன்றுகளுக்கு முறையான பராமரிப்பு மற்றும் தீவனம் கிடைத்தாலும் அவற்றின் வளர்ச்சியானது குடற்புழு தாக்கம் இருக்கும் சமயத்தில் பாதிப்படையும். எனவே கன்றுகளுக்கு பிறந்த 15 நாட்கள் முதல் குடற்புழு நீக்க மருந்தினை கொடுக்க வேண்டும். கன்றுகளில் புற ஒட்டுண்ணிகளின் பாதிப்பு இருந்தால் அதற்கான மருந்தும் கொடுத்தல் மிகவும் அவசியம். குடற்புழுக்கான மருந்துகளை முதல் 3 மாதங்களுக்கு மாதம் ஒருமுறையும் பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கொடுக்கவேண்டும்.

கன்றுகளுக்கான தடுப்பூசிகள் :

* கோமாரி நோய் மூன்று மாத வயதில் பின்னர் 6 மாத வயது மற்றும் 6 மாதத்திற்கு ஒரு முறை.

* சப்பைநோய் மாத வயதில் பின்னர் வருடம் ஒரு முறை

* அடைப்பான் மாத வயதில் பின்னர் வருடம் ஒரு முறை

* தொண்டை அடைப்பான் மாதவயதில் பின்னர் வருடம் ஒரு முறை

மேற்கண்ட அம்சங்களை மனதில் கொண்டு கன்றுகளை பராமரித்தல் மற்றும் கன்றுகளுக்கு உரிய தடுப்பூசிகள் வழங்குதல் மூலம் கன்றுகளில் நோய்பாதிப்பினை தவிர்த்து பண்ணைக்குத் தேவையான எதிர்கால பசுக்களை தங்கள் பண்ணைகளிலே உருவாக்கமுடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete