Tuesday 14 November 2017


கன்று ஈனும் போது மாடுகள் மற்றும் கன்றுகள் பராமரிப்பு பகுதி - 1 :


1. கன்று ஈனும் கொட்டகை 
2. கன்று ஈன்றவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலாண்மை முறைகள்
3. கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல்

* கன்று ஈனுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக மாடுகளை கன்று ஈனும் கொட்டகையில் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

* கன்று ஈனும் உத்தேச காலத்திற்கு 1-2 வாரங்களுக்கு முன்பாக சினை மாடுகளை கன்று ஈனும் கொட்டகைக்கு மாற்றிவிட வேண்டும்.

* பண்ணையில் தேவைப்படும் கன்று ஈனும் கொட்டகைகளின் எண்ணிக்கை, பண்ணையிலுள்ள இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் மாடுகள் மற்றும் கிடேரிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. அதாவது மாடுகள் மற்றும் கிடேரிகளின் எண்ணிக்கையில் 5 % இருக்கவேண்டும்.

* கன்று ஈனும் கால கட்டத்தில் மாடுகளுக்குப் போதுமான அளவு தண்ணீர், மலமிளக்கும்தன்மை கொண்ட தீவனம், போதுமான படுக்கும் வசதிகள் போன்றவை இருக்கவேண்டும்.

* கிருமி நாசினிக் கரைசல்களான டிங்சர் ஐயோடின், போவிடோன் அயோடின் மற்றும் நூல், கத்தரிக்கோல், உராய்வுத் தன்மையுடைய பாரபின் எண்ணெய்,தாவர எண்ணெய்கள், கன்று ஈனும் போது கன்றினை வெளியே இழுக்கப் பயன்படும் கொக்கிகள்,கயிறு, ரம்பம் , அவசரத் தேவைக்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகள், லைட், துண்டு,சோப்பு, வாளிகள், கோட் போன்றவை கன்று ஈனும் கொட்டகையில் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

* கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் கன்று ஈனுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சினை மாடுகளைத் தனிக் கொட்டகையில் பார்வையில் இருக்குமாறு கட்டி வைத்துப் பராமரிக்கவேண்டும்.

* சினை மாடுகள் அவற்றைக் கடிக்கும் விலங்குகளிடமிருந்து தனியாக கட்டி வைத்துப் பராமரிக்கப்படவேண்டும். கன்று ஈனும் கொட்டகையின் தரை சுத்தமாகவும், உலர்வாகவும், சுத்தமான புல் பரப்பியும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* சினை மாடுகள் அவை நன்றாக படுக்கவும், நடப்பதற்கும் ஏற்ற வகையில் அவை கட்டப்படும் கயிற்றினை நீளமாக விட்டுக் கட்டவேண்டும். மேலும் அவை இரவு நேரத்தில் கன்று ஈன்ற பிறகு கன்றுகளைக் கவனிப்பதற்கும் இது வசதியாக இருக்கும்.

* மாடுகளில் கன்று வீச்சு ஏற்பட்டால் கன்றுகளை நன்றாக ஆராய்ந்து, அவற்றின் வயது, அவற்றின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றைக் கவனித்து கன்று வீச்சு ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

* கன்று வீச்சு மாடுகளில் ஏற்பட்டால் கன்று ஈனும் கொட்டகையினை 4 % காஸ்டிக் சோடாக் கரைசல் கொண்டு சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யலாம்.

கன்று ஈனும் கொட்டகை :

* இது கன்று ஈனுவதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட கொட்டகையாகும். இது 3 மீ x 4 மீ (12 சதுர மீட்டர்) அளவில் நல்ல காற்றோட்டம் இருக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இக் கொட்டகையில் போதுமான அளவு வெளிச்சமும் இருக்கவேண்டும்.

* இக்கொட்டகை கன்று மற்றும் தாய் மாட்டிற்கு தனிமையான பாதுகாப்பான சூழ்நிலையினை அளிப்பதுடன் மற்ற மாடுகளால் ஏற்படுத்தப்படும் தொந்தரவுகளிலிருந்தும் கன்றுக்கும் தாய் மாட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

* கன்று ஈனும் கொட்டகைக்கு அருகிலேயே பணியாளர்களின் வீடுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* கன்று ஈனுவது இரவு நேரத்தில் ஏற்பட்டால் மாடுகளைக் கவனிக்க பணியாளர்களின் வீடுகள் கன்று ஈனும் கொட்டகைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கன்று ஈன்றவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலாண்மை முறைகள் :

* மாடுகளின் மடி மற்றும் பின்னங்கால் பகுதிகளை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த வெதுவெதுப்பான நீரைக் கொண்டு சுத்தம் செய்து பிறகு சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்.

* மடியில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க கன்று ஈன்ற மாட்டில் பாலைக் கறந்து விட வேண்டும்.

* கன்று ஈன்ற நாளிலேயே கன்றினை மாடுகளிடமிருந்து பிரிக்காவிடில், கன்றினை மாடுகளுடன் கன்று ஈன்று 7-10 நாட்களுக்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* இல்லையேல் கன்றுகளை உடனடியாக கன்று ஈனும் கொட்டகையிலிருந்து வெளியேற்றி தனியாகப் பராமரிக்கவேண்டும்.

* கன்றின் மீது தாய் மாடு அதிகமாக பாசத்துடன் காணப்பட்டால் மாட்டின் கண்களைக் கட்டி விட்டு கன்றினை பிரித்து வெளியேற்றி விட வேண்டும்.

* கன்று ஈன்ற 12 மணி நேரத்திற்குள் மாட்டின் கர்ப்பப்பையிலிருந்து நஞ்சுகொடி வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் நஞ்சுகொடியினை கையால் தகுந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு எடுத்து விட வேண்டும்.

* நஞ்சு கொடியினை கையால் எடுப்பதற்கு முன்பாக மாடுகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

* காய்ச்சல் இருந்தால் மாடுகளுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்து காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் மாடுகளுக்கு மற்ற இதர நோய்த் தொற்றுகள் ஏற்படலாம்.

* மாடுகள் வளர்சிதை மாற்றக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு ஏதேனும் உற்பத்திக் குறைவு நோய்களான பால் காய்ச்சல், மெக்னீசியக் குறைபாடு, கீட்டோசிஸ், அசிடோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனவாஎன்று பரிசோதித்து அதற்கென தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.

கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல் :

* கன்று ஈன்றவுடன் மாட்டின் மடியிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பாலாகும்.

* சீம்பாலில் காமாகுளோபுலின்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் அதிக அளவு உள்ளன. இவை மாட்டினை ஏற்கெனவே பாதித்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மாட்டின் உடலில் உருவாகி பால் வழியாக கன்றுகளுக்கு சென்று கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றன.

* சீம்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு புரதங்களை சீம்பால் வழியாக கன்றுகள் எடுத்துக்கொள்ளும்போது, கன்றுகள் அவைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுகின்றன.

* சீம்பால் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு முதன் முதலில் கன்றுவின் குடலிலிருந்து சாணத்தினை வெளியேற்றவும் உதவுகிறது.

* கன்று பிறந்து 15-30 நிமிடங்களுக்குள்ளாக கன்றுகளுக்கு முதல் தவணை சீம்பாலை அளித்து விடுவது மிகவும் நல்லது. இரண்டாம் தவணையாக கன்று பிறந்த 10-12 மணி நேரத்திற்குள் சீம்பாலை அளிக்கவேண்டும்.

* கன்று பிறந்து அரை மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் கன்றின் உடல் எடையில் 5-8% சீம்பாலை அளிக்கவேண்டும். பிறகு 2, 3ம் நாள் வயதில் அதன் உடல் எடையில் 10% சீம்பாலைக் கொடுக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

2 comments:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete