Sunday 26 November 2017

உலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல் :

1. உலர்புல் தயாரித்தல்
2. உலர்புல்லின் வகைகள்
3. பயறு வகைசாராத் தீவனங்கள்
4. கலப்பு வகை உலர்புல்
5. தரமான உலர்புல்லின் குணாதிசயங்கள்
6. உலர்புல் தயாரிக்கும் முறைகள்
7. உலர்புல் தயாரித்தல் மற்றும் சேமிக்கும்போது ஏற்படும் இழப்புகள்
8. உலர்புல் தயாரிப்பதற்கான புதிய உத்திகள்
9. ஊறுகாய்ப் புல் தயாரித்தல்
10. ஊறுக்காய்ப் புல் குழியில் சேர்க்க வேண்டிய பொருள்கள்
11. ஊறுகாய்ப்புல் குழியில் ஏற்படும் மாற்றங்கள்
12. புதப்படுத்தும் முறை
13. கரும்புத் தோதை ஊறுகாய்ப்புல்
14. ஊறுகாய்ப் புல் தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

தீவனப்பயிர்கள் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றைச் சேகரித்துப் பதப்படுத்திச் சேமித்து வைப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் கோடை வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குச் சத்துமிக்க தீவனம் வழங்க இயலும். பசும்புல்லில் 60 விழுக்காடு முதல் 90 விழுக்காடு அதிகமாகவும மற்ற தீவனப் பயிர்களில் சற்று குறைவாகவும் (60 – 80) விழுக்காடு இருக்கும். பசுந்தீவனப்பயிர்களில் ஈரப்பதம் அதிகமிருப்பதால் எளிதில் கெட்டுவிடும். ஆகவே பசுந்தீவனப்பயிர்களின் ஈரப்பத்தை 10 – 12 விழுக்காடுக்குக் குறைத்து சேமித்து வைக்கலாம். நம் நாட்டில் “வெயிலில் உலர்த்தும் முறை” பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. பசுந்தீவனங்களை அறுவடை செய்யும் காலங்களில் போதிய சூரிய ஒளி கிடைக்காவிட்டாலும் அல்லது தொடர்ச்சியாக மழை பெய்தாலும் ஈரப்பத்தைக் குறைப்பது கடினம். அச்சமயத்தில் பசுந்தீவனங்களை அப்படியே ஊறுகாய் புல்லாக மாற்றிப் பதப்படுத்தலாம்.

உலர்புல் தயாரித்தல் :

தீவனப் பயிர்களை அறுவடை செய்த பின்னும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. இதனால் தீவனப்பயிர்களில் உள்ள சத்துகளின் அளவு குறைகிறது. மேலும் நுண்கிருமிகள் முக்கியமாகப் பூஞ்சை நச்சுகள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகம். உலர்புல் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை.

1. அறுவடை செய்த பின பசும்புல்லில் உள்ள ஈரப்பதத்தை 10 -15 விழுக்காடு வரும் வரை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் குறைக்க வேண்டும்.

2. உலர்புல் தயாரிக்கும் பொது இலைப்பகுதி விரையம் ஆவதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் இலைப்பகுதியில்தான் தண்டு, வேர்ப்பகுதிகளை விட அதிகச் சத்துகள் உள்ளன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உலர்புல்லின் வகைகள் :

பயறு வகைத் தீவனப்பயிர்களான தட்டைப்பயறு, கொள்ளு, நரிப்பயிறு, சணப்பு, முயல்மசால், குதிரைமசால், சோயா பீன், தக்கைப் பூண்டு மற்றும் நிலக்கடலை போன்றவற்றை வெயிலில் உலரவைத்து உலர்புல் தயாரிக்கலாம். பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களை அதிக வெயிலில் முக்கியமாகக் கோடைக்காலத்தில் பகல்வேளையில் உலர வைக்கும்போது இலை தழை இழப்பு அதிகமாக இருக்கும். ஆகவே காலை மாலை வேளையில் வெயில் குறைவாக உள்ள போது பயறுவகைத் தீவனங்களைக் கையாள்வது நல்லது. பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களில் புரதம், கால்சியம் சத்து அதிகம்.

பயறு வகைசாராத் தீவனங்கள் :

* சோளம்,
* மக்காச்சோளம்,
* கம்பு,
* ராகி,
* ஓட்ஸ்

போன்ற பயறு வகை சாராத் தீவனப்பயிர்கள் உலர்த்தி உலர்புல் தயாரிக்கலாம்.

கலப்பு வகை உலர்புல் :

பயறு வகை மற்றும் பயறு வகை சாராத் தீவனப்பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு இரண்டையும் ஒன்றாக அறுவடை செய்து உலர்புல் தயாரிக்கலாம். பயறுவகை சாராத் தீவனங்களுடன் பயறு வகைத் தீவனங்களைச் சேர்க்கும் போது சரிவிகிதச் சமச்சீர் தீவனம் கிடைக்கிறது. பயறு வகைத் தீவனங்களில் புரதசத்து 15 முதல் 25 விழுக்காடு வரை இருக்கும். ஆனால் பயறு வகை சாராத் தீவனங்களில் புரதச் சத்தின் அளவு 5 முதல் 10 விழுக்காடு வரை இருக்கும்.

தரமான உலர்புல்லின் குணாதிசயங்கள் :

1. பசுமை நில இலைகள் நிறைந்திருக்க வேண்டும்.
2. எளிதில் செரிக்க வேண்டும்.
3. மண், அழுக்கு மற்றும் களைச் செடிகள் இன்றிச் சுத்தமாக இருக்கவேண்டும்
4. பூஞ்சாணப் பாதிப்பு இருக்ககூடாது.

உலர்புல் தயாரிக்கும் முறைகள் :

நிலத்தில் பரப்பி உலர வைத்தல் :

அறுவடை செய்த தீவனப்பயிர்களை நிலத்தில் பரப்பி அவ்வப்போது திருப்பிப்போட வேண்டும். பெரும்பாலும் இம்முறையில் உலர்புல் தயாரிக்கப்படுகிறது.

சிறு கத்தைகளாகக் கட்டி உலரவைத்தல் :

சோளம், கம்பு, ராகி போன்ற தீவனப்பயிர்கள் அறுவடைக்குப்பின் சிறு கத்தைகளாகக் கட்டி கலர வைக்கலாம். எனினும் கத்தைகளை அவ்வப்போது திருப்ப வேண்டும்

முக்கோணக் கூம்பு வடிவ முறை :

சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்களைச் சிறு கத்தைகளாகக் கட்டியபின் கூம்பு வடிவத்தில் நிற்க வைத்து உலர வைக்கலாம். இம்முறையானது மழைக் காலத்தில் பயனள்ளதாக இருக்கும்.

உலர்புல் தயாரித்தல் மற்றும் சேமிக்கும்போது ஏற்படும் இழப்புகள் :

1. பயறு வகைத் தீவனப்பயிர்களை அதிக வெயிலில் உலர்த்தும்போது இலைகள் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் பசும்புல்லில் உள்ள கரோட்டின்கள் இழப்பு அதிகரிக்கலாம்.

2. மழைக் காலம் பனி பெய்யும் காலங்களில் தீவனங்களைப் பாதுகாக்க வேண்டும். உலர வைக்கப்பட்ட தீவனங்கள் மழையில் நனைந்தால் சத்துகள் விரயம் அதிகரிக்கும். மேலும் பூஞ்சை காளான் வளர ஏதுவாகும்.

3. தீவனப்பயிர்களை அப்படியே உலர வைப்பதைவிட சில சமயங்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உலர வைப்பது எளிது.

உலர்புல் தயாரிப்பதற்கான புதிய உத்திகள் :

மழை மற்றும் பனிக் காலங்களில் போதிய வெயில் கிடைக்காத போது சூரிய சக்தி உலர் கலன்களைப் பயன்படுத்தலாம். தற்காலத்தில் சூரிய உலர்கலன்கள் 2 முதல் 4 இலட்சம் செலவில் அமைக்க முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நன்மைகள் :

1. மழை மற்றும் பனியில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
2. விரைவில் உலர வைப்பது எளிது
3. சத்துகள் சேதாரம் குறைவு
4. கால்நடைகள் விரும்பி உண்ணும்
5. பயறு வகைத் தீவனங்களை இம்முறையில் உலரவைத்துச் சேமிப்பது எளிது.

ஹைட்ரோபோனிக் பசுமைக்குடில் :

மக்காச்சோளம், சோளம், கம்பு, திணை, கொள்ளு, காராமணி, சணப்பை போன்ற தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி 4 முதல் 8 நாள்கள் வளர்ந்தபின் பசுந்தீவனமாகக் கால்நடைகளுக்கு வழங்கலாம். இம்முறையில் மண் இன்றித் தட்டுகளில் தானியங்களை முளைகட்டி தேவையான தண்ணீர் தெளித்து வளர்க்கப்படுகிறது. இவ்வகைத் தீவனங்களில் ஈரப்பதம் அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.

புரத சத்தின் அளவு தானியத்தில் உள்ள புரத அளவைப் பொறுத்தது. பசு, எருமைகளுக்குத் தினமும் 15 – 20 கிலோ, ஆடுகளுக்கு 1-2 கிலோ பன்றி, முயல்களுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை அளிக்கலாம். பொதுவாக 1 கிலோ தானியத்தில் 4 கிலோ முதல் 5 கிலோ வரை பசுந்தீவனம் பெறமுடியும். ஹைட்ரோபோனிக் பசுமைக் குடில் அமைத்துக் கோடையிலும் வறட்சிக் காலங்களிலும் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு வழங்கலாம். எனினும் ஹைட்ரோபோனிக் பசுந்தீவன உற்பத்திச் செலவு அதிகம்.

ஊறுகாய்ப் புல் தயாரித்தல் :

பசுந்தீவனப் பயிர்களை அதிக ஈரப்பதத்துடன் காற்றுப்புகாமல் நொதிக்க வைப்பதன் மூலம் ஊறுகாய் புல் கிடைக்கிறது.

பசுந்தீவனங்கள் தேவைக்குப் போக அதிக அளவில் கிடைக்கும் போதும் பசுந்தீவனப் பயிர்களை உலர வைப்பதற்கு போதிய சூரிய ஒளி கடைக்காமல் மோசமான வானிலை நிலவும் சமயங்களிலும் ஊறுகாய் புல் தயார் செய்வதன் மூலம் பசுந்தீவனப் பயிர்களைச் சேமித்து; வைக்கலாம். மேலும் முற்றிப்போன தடிமனான தண்டுகள் உடைய தீவனப்பயிர்களையும் இம்முறையில் பதப்படுத்துவதன் மூலம் அவற்றின் தரத்தை உயர்த்த முடியும்.

ஊறுகாய்ப் புல் தயாரிக்க உகந்த தீவனப் பயிர்கள் :

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி போன்ற தானியப் பயிர்கள் சிறந்தவை. எனினும் பயறு வகைத் தீவனப் பயிர்களையும் மற்ற தீவனப் பயிர்களுடன் கலந்து அல்லது சர்க்கரை பாகு, தானியங்கள் போன்ற மாவுச் சத்து அதிகமுள்ள பொருள்களைச் சேர்த்துப் பதப்படுத்தமுடியும்.

ஊறுகாய்ப் புல் தயாரிப்புக்குப் பூக்கும் பருவத்தில் உள்ள தீவனப் பயிர்களை அறுவடை செய்து ஊறுகாய்ப் புல் தயாரிக்க வேண்டும். ஊறுகாய்ப் புல் குழியின் ஆழம் மற்றும் அகலம் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக ஒரு கன மீட்டர் அளவில் 400 – 500 கிலோ பசுந்தீவனத்தைப் பதப்படுத்தலாம். தினமும் 20 முதல் 25 கிலோ வரை ஊறுக்காய்ப் புல்லை மாடுகள் உண்ணும்.

செய்முறை :

ஊறுகாய் புல் செய்வதற்கு ஊறுகாய்ப் புல் குழி தேவைப்படுகிறது. இக்குழியானது மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும். சுற்றில் விரிசல் இருக்க கூடாது. குழி அமைக்க முடியாத இடங்களில் சிமெண்ட் கோபுரம் அமைத்து அதில் ஊறுகாய்ப் புல் தயார் செய்யலாம். குழியின் சுவர் மேடு பள்ளம் இன்றியும் போதிய வலிமை உடையதாகவும் இருக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டி, பெரிய பிளாஸ்டிக் கேன், அதிகமான பாலித்தீன் பைகள் கொண்டும் ஊறுகாய்ப் புல் தயாரிக்கலாம்.

அறுவடை செய்தல் :

பசுந்தீவனப் பயிர்களைப் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 - 65 விழுக்காடு வரும் வரை வயலில் உலர்த்த வேண்டும். இதற்காக 3-4 மணி நேரம் வெயிலில் உலர்த்தினால் போதுமானது.

நிரப்புதல் :

முதலில் குழியில் சிறிதளவு வைக்கோல் அல்லது உலர்ந்த புல்லைப் பரப்ப வேண்டும். பின் தீவனப் பயிர்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஊறுகாய்ப் புல் குழியில் இட்டு நிரப்ப வேண்டும். குழி நிரப்புதலை ஓரிரு நாள்களில் முடித்து விட வேண்டும். குழியை நிரப்பும்போது மழை பெய்யக்கூடாது. நில மட்டத்துக்கு மேல் 5 அடி உயரம் வரை நிரப்பியபின், வைக்கோலைப் பரப்பி அதன் மீது மண் கொண்டு காற்று புகாவண்ணம் மொழுக வேண்டும். தேவைப்படின் ஒன்று இரண்டு லோடு மண் கொண்டு அமுக்கவும்.

ஊறுக்காய்ப் புல் குழியில் சேர்க்க வேண்டிய பொருள்கள் :

சர்க்கரைப் பாகு :

கரும்புச் சர்க்கரை பாகுவை 2 விழுக்காடு (பசும்புல் எடையில்) வரை ஊறுக்காய்ப்புல் குழியில் சேர்க்கலாம். குழியில் உள்ள நுண்ணுயிர்களுக்குத் தேவையான மாவுச்சத்து, சர்க்கரை பாகு எளிதில் கிடைப்பதால் அதிக அளவு லாக்டிக் அமிலம் உற்பத்தியாகிப் புல் நன்கு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

தானியங்கள் :

சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி, குருணை அரிசி போன்ற தானியங்களை 4-5 விழுக்காடு சேர்க்கலாம். இதனால் நுண்ணுயிர்களுக்குத் தேவையான மாவுச்சத்து கிடைக்கிறது.

கரிம அமிலங்கள் :

அசிடிக் அமிலம், சிட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், புரகியோனிக் அமிலம் போன்ற அமிலங்களை ஒரு (1.0) விழுக்காடு வரை சேர்க்கலாம்

தகுந்த தருணத்தில் அறுவடை செய்து சைலேஜ் தயாரித்தால் மேற்கண்ட பொருள்களைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை

நுண்ணுயிர்கள் சேர்க்கை :

தயிர், மோர் மற்றும் ஊறுகாய்ப் புல் தயாரிப்புக்கான தனிப்பட்ட சிறப்பு நுண்ணுயிர்க் கலவையை தேவைக்கு ஏற்பக் குழியில் சேர்க்கலாம்.

சுண்ணாம்புத் தூள் :

0.5 விழுக்காடு முதல் 1.0 விழுக்காடு வரை சுண்ணாம்புத்தூளைச் சேர்க்கலாம். இதனால் கால்சியம் சத்து கால்நடைகளுக்கு கிடைக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஊறுகாய்ப்புல் குழியில் ஏற்படும் மாற்றங்கள் :

குழியில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் காற்றில்லா நொதித்தல் மூலம் தீவனப் பயிரில் உள்ள மாவுச் சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. இதனால் கார அமில நிலை குறைந்து மற்ற நுண்ணுயிர்கள் வளராவண்ணம் தீவனப் பயிர் பாதுகாக்கப்படுகிறது. தீவனப் பயிரில் ஈரப்பதம் 65 விழுக்காட்டுக்கு அதிகமிருந்தால் சத்துகள் நீரில் கரைந்து வீணாக வாய்ப்புள்ளது. அதே போல் தீவனப்பயிரில் போதிய அளவு மாவுச்சத்து இல்லாத போது சர்க்கரை பாகு, ஸ்டார்ச், தானியங்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், லாக்டிக் அமிலம் உருவாகப் போதிய மாவுச் சத்து இல்லாமல், புல் கெட்டுப்போக வழியுண்டு.

ஒரு முறை குழியினைத் திறந்துவிட்டால் பதனப் பசுந்தீவனத்தை எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்த வேண்டும். குழிகளில் பதனப் பசுந்தீவனம் தயாரிக்கும்போது புல் கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம். மேலும் வேலைப்பளுவும் அதிகம். அதனால் தற்பொழுது பாலிதீவன பைகளில் தயாரிக்கும் முறை பிரபலம் ஆகிவருகிறது.

புதப்படுத்தும் முறை :

சுமார் 100 கிலோ பசுந்தீவனத்தைப் பதப்படுத்தக் கீழ்க்கண்ட பொருள்கள் தேவைப்படுகின்றன.

வெல்லம் (அ) கரும்பாலைக் கழிவுப்பாது - 20 கிலோ
சமையல் உப்பு - 10 கிலோ
தண்ணீர் - 30 கிலோ

செயல்முறை :

1. சுமார் 6*6*4 அடி அளவுள்ள பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம்.

2. ஒரு பாத்திரத்தில் 1000 கிலோ பசுந்தீவனத்திற்க்கு தேவையான 10 கிலோ உப்பு மற்றும் 20 கிலோ வெல்லத்தினை 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துப் பின்பு அடுக்கி வைத்த பசும் புல்லின் மேல் சற்று தெளிக்கவேண்டும். திரும்பவும் பசும்புல்லை அரை அடி உயரம் அடுக்கி முன்பே கூறியதுபடி வெல்ல உப்புக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

3. அல்லது மொத்தக் கரைசலையும் புல்லின் மீது தெளித்துப் புல்லைக் கிளறிவிட்டு மீண்டும் தெளித்து மொத்தப் புல்லிலும் வெல்ல உப்புக் கரைசல் சமமாகக் கலந்து இருக்கும்படி செய்து குழியில் அல்லது பைகளில் அடைக்கலாம். ஒவ்வொரு முறையும் புல்லினை அடுக்கும் சமயம் அதற்குக் கால்களால் நன்றாக அழுத்தம் கொடுத்து மிதித்து அடைப்பட்டு இருக்கும் காற்றை வெறியேற்ற வேண்டும்.

4. இதன் பின் பாலீதின் பையைக் காற்று புகாமல் இறுகக் கட்டி நிழலில் வைக்க வேண்டும்.

5. இந்தப் பசும்புல்லில் சுமார் 55 முதல் 60 நாட்களில் இரசாயன மாற்றங்கள் முழுமைபெற்று சாதாரணப் பதனப் பசும்புல்லாக மாறிப் பசும் மஞ்கள் நிறத்தில் பதப்படுத்தப்பட்டுவிடும். எனவே, 2 மாதங்களுக்கு பிறகு இந்த பசும் புல்லினைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்த முடியும்.

கரும்புத் தோதை ஊறுகாய்ப்புல் :

கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகள் கரும்புத் தோகையைத் தீவனமாகப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஓர் ஏக்கர் கரும்புச் சாகுபடியில் சுமார் 4 முதல் 5 டன் வரை கரும்புத் தோகை உபபொருளாகக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்க பெறும் உபபொருளை அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாகக் கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யும் கூலித்தொழிலாளிகளுக்கு இலவசமாகக் கொடுத்து விடுகின்றனர் அல்லது அத்தோகையை குறைந்த அளவில் அவரவர் தம் கால்நடைகளுக்குப் பசுந்தீவனமாகப் பயன்படுத்துவதுடன் மீதமுள்ள தோகையை விவசாயிகள் தத்தம் கரும்புச் சாகுபடி செய்த நிலத்தில் எரித்து வீண் செய்கின்றனர். பொதுவாகத் தமிழகத்தில் கரும்பு அறுவடை நவம்பர் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. மேலும், அறுவடைக்கு முன்பு பருவமழை பொழிந்து போதிய அளவிற்குப் பசுந்தீவன உற்பத்தி இருப்பதால், கட்டத்தில் அறுவடை செய்யும் கரும்பின் உபபொருளான கரும்புத் தோகையை மேற்கூறிய முறையில் 10 கிலோ யூரியாவினையும் சேர்த்து ஊறுகாய்ப் புல்லாக சேமித்து அல்லது பதப்படுத்தி வைத்தால் கோடைக் காலத்தில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையை அறவே அல்லது போதிய அளவு தவிர்க்க முடியும்.

நல்ல தரமான ஊறுகாயப் புல்லின் குணாதிசயங்கள் :

1. புல்லின் பசுமை அதிகம் மாறாமல் இனம் பழுப்பு வண்ணத்தில் இருக்கும்
2. கெட்ட வாசனை ஏதுமின்றி நல்ல ஈர்க்ககூடிய மணம் கமழும்.
3. கார – அமில நிலை சுமார் 4.0 ஆக அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்
4. அதிக அளவு லாக்டிக் அமிலமும் குறைந்த அளவு பியூட்ரிக் அமிலமும் இருக்கும்.

அரசு மானியம் :

குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் பசுந்தீவனம் அல்லது ஓர் ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு தலா 250 கிலோ கொள்ளளவு உள்ள 4 ஊறுகாய்ப்புல் பைகள் மற்றும் வெல்லம் உப்பு போன்ற இடுபொருள்கள் வாங்குவதற்கும் சேர்த்து ரூபாய் 2030 தமிழ்நாடு அரசு கால்நடைப் பராமரிப்பு துறை மூலம் ஊறுகாய்ப் புல் தயாரிக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஊறுகாய்ப் புல் தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள் :

1. உலர்புல் தயாரிக்க ஏதுவாக வானிலை அமையவில்லை என்றால், பசுந்தீவனத்தை ஊறுகாய்ப் புல் தயாரிப்பதன் மூலம் பதப்படுத்தலாம். மழைக் காலங்களில் இம்முறை பெரிதும் உதவும்.

2. ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால், பசுந்தீவனத்தின் தன்மை மாறுபடுவதில்லை. பசுந்தீவனத்தை போலவே ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகள் சேதாரமில்லாமல் விரும்பி உண்ணும். வறட்சி மற்றும் கோடைக் காலங்களில் போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்காதபோது ஊறுகாய்புல்லைப் பசுந்தீவனத்திற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.

3. தடிமனான தண்டு மற்றும் முற்றிய புற்களைக் கூட ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.

4. தீவனப் பயிருடன் உள்ள களை விதைகள், இதன் மூலம் அழிக்கப்படுகிறது.

5. ஊறுகாய்ப் புல்லைப் பல ஆண்டுகளுக்கு 10 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.

6. குடற்புழுக்களின் முட்டைகள் அழிக்கப்படுவதால் குடற்புழுத் தொல்லை குறைகிறது.

இடர்பாடுகள் :

1. தகுந்த முறையில் பதப்படுத்தாவிட்டால் புல் கெட்டுப்போகவும் சத்துகள் வீணாகவும் வழியுண்டு

2. ஊறுகாய்ப் புல் குழி அமைக்கச் செலவு அதிகம் மற்றும் தீவனப்பயிரை நறுக்கிக் குழியில் நிரப்ப ஆட்கள் தேவை

3. போதிய அளவு விழிப்புணர்வு மற்றும் செய்முறைப் பயிற்சி விவசாயிகளுக்கு இல்லாத காரணத்தால் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு பிரபலமடையவில்லை.

நமது நாட்டின் சில அரசு மற்றும் தனியார் கால்நடைப் பண்ணைகளில் மட்டுமே ஊறுகாய்ப் புல் மூலம் தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டுக் கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.

இம்முறையைப் பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால் கால்நடைகளுக்குத் தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்க முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete