Thursday 1 November 2018

காங்கேயம் மாடு வேணுமா... பழையகோட்டைக்கு வாங்க!

பசுமைப் புரட்சிக்குப் பிறகு, விவசாயத்தில் ரசாயன உரப்பயன்பாடு, இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும், பாரம்பர்ய வேளாண்மைக்குத் தூணாக இருந்து வந்த நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து, ‘அதிகப்பால்’ என்ற ஆசையில் விவசாயிகள் கலப்பினப் பசுக்களை வளர்க்க ஆரம்பித்தன் விளைவு, நாட்டு இன மாடுகள் வெகு வேகமாக அழியத்தொடங்கின.

கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘ஜீரோ பட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் போன்றோர் பாரம்பர்ய விவசாயம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் தொடங்கியதிலிருந்து... ஏராளமானோர் பாரம்பர்ய விவசாயத்துக்குத் திரும்பியுள்ளனர். அதனால், மீண்டும் நாட்டு மாடுகளுக்கு மவுசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில், ‘உம்பளச்சேரி’, ‘பர்கூர்’, ‘புலிக்குளம்’, ‘ஆலம்பாடி’, ‘தஞ்சாவூர் குட்டை’, ‘மணப்பாறை’, ‘காங்கேயம்’... எனப் பல வகைகள் உள்ளன. நாட்டு மாடுகள் பெரும்பாலும் ஊர் பெயர்களில்தான் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஊர்களில் நடந்து வரும் மாட்டுச்சந்தைகளில் பல ரக நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள், எருமைகள் என அனைத்துமே விற்பனைக்கு வரும். ஆனால், காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேகச் சந்தையாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது, பழையகோட்டை வாரச்சந்தை.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள பழையகோட்டை மன்றாடியார் குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மன்றாடியார், நவீன் மன்றாடியார், மகேன் மன்றாடியார் ஆகிய மூவரும் இணைந்து 3 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில் இச்சந்தையை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இவர்கள் மூவரும் இணைந்து ‘பழையகோட்டை பட்டக்காரர் கால்நடை ஆராய்ச்சி மையம்’ என ஒன்றை அமைத்துக் காங்கேயம் மாடுகளை அழியாமல் காப்பாற்றும் நோக்கில் பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடந்து வரும் இந்த நாட்டு மாட்டுச்சந்தையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட காங்கேய இன மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. கால்நடைச் சிறப்பிதழுக்காக, பழையகோட்டை நாட்டு மாட்டுச்சந்தைக்கு ஒரு நடை சென்றோம்.

வெள்வேல் மரங்களும் வேப்ப மரங்களும் நிழல் பரப்பிக்கொண்டிருந்த பகுதியில் கூடியிருந்த சந்தைக்கு ‘வேன்’கள் மூலம் நாட்டு மாடுகள் வந்திறங்கிக் கொண்டிருந்தன. மாடுகளை வாங்க வந்தவர்களும் விற்க வந்தவர்களும் சூழ்ந்து நிற்க, கோபூஜையுடன் மாட்டுச்சந்தையைத் துவக்கி வைத்துவிட்டு வந்து நம்முடன் பேச ஆரம்பித்தார், மாட்டுச்சந்தையின் நிர்வாகி சிவக்குமார்.

“நான் அமெரிக்காவில் வேலை பார்த்துட்டுருந்தேன். காங்கேயம் மாடுகள் மேல ஏற்பட்ட ஈர்ப்பால வேலையை உதறிட்டு வந்து, ஒரு கோசாலை ஆரம்பிச்சு நடத்திட்டுருக்கேன். என்னைப்பத்தி ‘வீட்டுக்கு ஒரு நாட்டுமாடு... வியாதிக்குப் பூட்டுப்போடு!’ங்கிற தலைப்புல ‘பசுமை விகடன்’ புத்தகத்துல எழுதியிருக்காங்க. அந்தப்பேட்டியில காங்கேயம் பசுக்களின் சாணி, சிறுநீர், பால் மூலமா மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரிக்கிறது பத்திச் சொல்லியிருந்தேன். அதுக்கப்புறம், ஆயிரக்கணக்கானோர் என்னை செல்போன்ல கூப்பிட்டு நாட்டு மாடு பத்தி பேசியிருக்காங்க. அதுல பலபேர், ‘தரமான காங்கேயம் மாட்டை எங்க வாங்குறது’னுதான் கேட்டாங்க. அந்த சமயத்துலதான், மன்றாடியார் குடும்பத்துல இருந்து ‘பழையகோட்டை பட்டக்காரர் கால்நடை ஆராய்ச்சி மையம் சார்பில், காங்கேயம் மாட்டுக்கான வாரச்சந்தை ஆரம்பிக்கப்போறோம். உன்ன மாதிரி ஆர்வமுள்ள ஆள்தான் சந்தையை நிர்வாகம் செய்ய முடியும். வந்திடு மாப்ளே’னு கூப்பிட்டாங்க. உடனே நான் அதுக்கு ஒத்துக்கிட்டேன். முறையான அனுமதி வாங்கி, மன்றாடியார் குடும்பத்துக்குச் சொந்தமான மேய்ச்சல் நெலத்துல, இந்த வாரச்சந்தையை ஆரம்பிச்சுருக்கோம். இந்த ரெண்டுவருஷத்துல கிட்டத்தட்ட 8,500 காங்கேயம் இனப் பசு மாடுகள் ஏவாரம் ஆகியிருக்கு. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்ல இருந்துதான் விவசாயிகள் அதிகமா வர்றாங்க. ஒரு வாரத்துக்கு 200 மாடுங்க அளவுல வரத்து இருக்கும். அதுல எப்படியும் 170 மாடுங்க அளவுக்கு ஏவாரம் ஆகிடும்” என்ற சிவக்குமார் சந்தை நடைபெறும் விதம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“சந்தைக்குள் மாட்டுத்தரகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அனுமதி இல்லை. விவசாயிகளுக்கு மட்டும்தான் அனுமதி. மாடுகளை விற்பனை செய்யக் கொண்டுவரும் விவசாயிகளோட செல்போன் நம்பர், முழு முகவரியையும் பதிவு செஞ்சுட்டுதான் சந்தைக்குள்ள அனுமதிப்போம். மாட்டை வாங்கிட்டுப் போன பிறகு, விற்பனை செஞ்சவர் மாட்டைப் பத்தி சொன்ன விஷயங்கள்ல திருப்தி இல்லாம இருந்தா... அடுத்த வாரம் மாட்டைச் சந்தைக்குக் கொண்டு வந்து, விற்பனை செஞ்சவர்கிட்டயே திரும்பக்கொடுத்துப் பணத்தை வாங்கிக்க ஏற்பாடு செய்றோம்.

இப்படித் திரும்ப ஒப்படைக்கணும்னா கண்டிப்பா தகுந்த காரணம் இருக்கணும். சந்தை கூடும்போது கால்நடை மருத்துவர்களும் இங்க இருப்பாங்க. இவங்க மாடுகளுக்கு வர்ற திடீர் உடல் உபாதைகளுக்கு மருத்துவம் செய்றதோடு, விற்பனைக்கு வர்ற பசு மாடுகள் சினை பிடித்திருக்கிறதையும் உறுதி செய்வாங்க.

சந்தைக்குள் மது குடிச்சுட்டு வர்றவங்க, புகைப்பிடிக்கிறவங்க, வாக்குவாதம் செய்றவங்கள உடனடியா வெளியேத்திடுவோம். விற்பனைக்கு மாடு கொண்டு வர்றவங்க, ஒரு மாட்டுக்கு 50 ரூபாய் நுழைவுக்கட்டணம் கொடுக்கணும். அதுக்கு ரசீது கொடுத்துடுவோம். சந்தை முடியுற சமயத்துல ரசீதுகளை மொத்தமாப் போட்டு குலுக்கி எடுத்துத் தேர்ந்தெடுக்கப்படுற நபருக்கு, சிறப்புப் பரிசுகளும் கொடுக்குறோம். இப்போதைக்கு முழுக்க முழுக்க காங்கேயம் பசுக்களும் கிடேரி கன்னுகளும்தான் விற்பனைக்கு வருது. அடுத்து காளைகளையும் விற்பனைக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுத்துட்டுருக்கோம்” என்றார் சிவக்குமார்.

பசுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த பிரவீன் ஆனந்த் என்பவரிடம் பேசினோம். “நான் பெருந்துறையில் இருந்து வர்றேன். நாலு காங்கேயம் பசு மாடுகளை ஏவாரம் பண்ண கொண்டு வந்திருக்கேன். அதுல ஒண்ணு சினை மாடு. சினைப்பசுவுக்கு 85 ஆயிரம் ரூபாய் விலை சொல்லியிருக்கேன். மத்த மாடுகள் ஒவ்வொண்ணுக்கும் 75 ஆயிரம் ரூபாய் விலை சொல்லியிருக்கேன். நாலஞ்சு பேரு வந்து பார்த்து விலை கேட்டாங்க. அவங்க கேட்ட விலை ஒத்து வரலை. அதனால காத்துட்டுருக்கேன். தகுந்த விலை அமைஞ்சா வித்துட்டு நாலு கிடேரி கன்னுகளை வாங்கிட்டுப்போகலாம்னு இருக்கேன்” என்றார்.

ஒரு கன்றுக்குட்டியைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தார் ஓர் இளம்பெண். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “என் பேரு கல்பனா. நான் முத்தூருக்குப் பக்கத்துல இருக்குற இச்சிக்காட்டு வலசுல இருந்து வந்திருக்கேன். 35,000 ரூபாய்னு பேசி இந்த கிடேரிக் கன்னுக்குட்டியை வாங்கியிருக்கேன். இயற்கை விவசாயம் செய்றதுக்காக நாட்டு மாடு வாங்க வந்தேன்” என்றார்.

கரூர் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த வடிவேல் மற்றும் நல்லதம்பி ஆகியோர் ஒரு பசுவும் கன்றும் 1,25,000 ரூபாய் என்று விலை பேசி இரண்டு பசுக்களையும் இரண்டு கன்றுகளையும் வாங்கிவிட்டுப் பெருமிதமாக நடந்து வந்து நமது புகைப்படக்காரருக்கு போஸ் கொடுத்தனர்.

சந்தையில் நாம் சுற்றி வரும்போது ஓர் இடத்தில், ‘மாடு வாங்குறது முக்கியமில்லீங்க. சுழி பார்த்து வாங்கோணும். அங்கலட்சணம் முக்கியமுங்க’ என்ற குரல் காதில் விழுந்தது. குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்த நபரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். “என்னோட பேரு குழந்தை வேல்ங்க. நமக்குப் பல்லடம் பக்கத்துல சித்தம்பலம் கிராமமுங்க. 15 நாட்டுப் பசுக்களை வளர்க்குறேன். 50 நாட்டுப்பசுக்களை வெச்சு பால் பண்ணை வெக்கோணுங்கிறது என்னோட ஆசை. அதுக்காக மாடு பிடிக்கத்தான் வந்துருக்கேன். நான் அங்க லட்சணம் பார்த்துதானுங்க மாடுகளை வெலை பேசுவேன். சுழி சுத்தமா இருந்தாதாங்க மாடுகள் நிலைக்கும்.

கோபுரச்சுழி, லட்சுமி சுழி, தாமணி சுழி, விரிசுழி, இரட்டைச்சுழி, ஜோடிச்சுழி, ஏறுபூரான் சுழி, விபூதிச்சுழி, கொம்பு நடுச்சுழி, நீர்ச்சுழி, ஏறுநாகசுழினு 11 சுழிகள் இருக்குற மாடுகள்தான் வளர்ப்புக்கு ஏத்ததுனு சொல்வாங்க.

அக்னிச்சுழி, குடைச்சுழி, விலங்குச்சுழி, பாடைச்சுழி, பெண்டிழந்தான் சுழி, நாகபடச்சுழி, தட்டுச்சுழி, துடைப்பச் சுழி, புட்டாணிச்சுழி, எச்சுப்புள்ளிச்சுழி, இறங்கு பூரான் சுழி, பூரான் கௌவல் சுழி, வால் முடங்கிச்சுழி, இறங்கு நாக சுழினு 14 சுழிகள் உள்ள மாடுகளை வாங்கினால் பட்டி பெருகாது, பால்பானை பொங்காதுனு சொல்வாங்க. ஆனா, இந்தச் சுழிகள் எல்லாம் பொதுவான மாடுகளுக்குத்தான். பிறப்பிலேயே அங்க லட்சணம் அமைஞ்சிருக்குற காங்கேயம் பசுக்களை வாங்க வர்றவங்க பெரும்பாலும் முக்கியமான சில சுழிகளை மட்டும்தான் பார்த்து வாங்குவாங்க” என்றார்.

காரி, செவலை, பில்லை, மயிலை என நான்கு நிறங்களில் சந்தைக்கு வரும் மாடுகளுக்குக் கொம்புகளைச் சீவிவிடும் பணியைச் செய்து வருகிறார், ‘கொம்பு’ மாணிக்கம். அதேபோல, மூக்கணாங்கயிறு, கொம்புக்கயிறு, திருகாணி, கழுத்து மணி, சாட்டைக்குச்சி, தீவனம் நறுக்கும் அரிவாள் போன்ற உபகரணங்கள் விற்கும் அங்காடியும், ஒரு தேநீர்க் கடையும் சந்தைக்குள் இயங்குகின்றன.

ஓரிடம் விடாமல் நமக்குச் சந்தையை சுற்றிக்காட்டிய சிவக்குமாருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.

தொடர்புக்கு :
சிவக்குமார்,
செல்போன்: 75022 07000

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment