Monday 5 November 2018

நெல், கரும்பு,தக்காளி,கத்திரி,ஆடு, மாடு,கோழி... மழைக்கால பராமரிப்பு!


மழை, விவசாயத்துக்கு அடிப்படையானது. அதேநேரத்தில் அது, ஆபத்தையும் உருவாக்கும். ‘மழை வரும் முன்னே நோய்கள் வரும் பின்னே’ என்றும் சொல்வார்கள். வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கத்துக்கு பருவ மழைக்காலம் ஏற்றதாக இருப்பதால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, அவசியமாகிறது. அவர்களுக்காகவே தட்பவெப்ப நிலை மாற்றத்தால், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், அதற்குரிய ‘வரும் முன் காக்கும் நடவடிக்கைகள்’ பற்றியும் துறை சார்ந்த வல்லுநர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

நாற்று உற்பத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நடவு செய்வதில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.

“மழைக்காலத்தில் நாற்றங்கால் தயாரிப்பு, காய்கறி மற்றும் பழக்கன்றுகள் நடவுப்பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். இக்காலத்தில் பயிர்களுக்கு வரக்கூடிய முக்கிய நோய், வேர் அழுகல். இதைச் சுலபமாகத் தடுக்கலாம். காய்கறிப் பயிர்களான கத்திரி, தக்காளி, வெண்டை நாற்றங்கால்களை அதிக தண்ணீர் தேங்காத அளவுக்குச் சற்று உயரமாக அமைக்க வேண்டும். அதிக தண்ணீர் நாற்றங்காலில் தேங்கினால், நாற்றுகளின் தண்டுப் பகுதிகளில் குறிப்பாக தரையை ஒட்டியுள்ள தண்டுப் பகுதிகளில் அழுகல் நோய் வரும். அதிக மழை பெய்யும்போது, தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியாது. அதனால், நாற்றங்கால் படுக்கை தயாரிக்கும்போதே தொழுவுரத்துடன் சூடோமோனஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 10 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள படுக்கைக்கு 200 கிராம் போதுமானது.

நாற்று நடவு!

நெல் வயலில் நாற்று நடவுக்கு முன்னதாக, ஒரு ஏக்கருக்கு 50 கிலோ என்ற அளவில் வேப்பம் பிண்ணாக்கு இட்டு பார் அமைக்க வேண்டும். நாற்றுகளை நடவு செய்த பிறகு, ஏக்கருக்கு 2 கிலோ சூடோமோனஸ், 6 கிலோ மணல் இரண்டையும் கலந்து ஒவ்வொரு நாற்றின் தூரிலும் சிறிதளவு வைக்க வேண்டும்.

பழக்கன்றுகள் நடவு!

பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்பவர்கள்... நடவுக் குழியில் 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 25 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை இட்டு, நடவு செய்ய வேண்டும். இவற்றைக் கடைபிடித்தாலே வேர் அழுகலிலிருந்து செடிகளைப் பாதுகாக்கலாம்” என்றார், செந்தூர்குமரன்.

பூச்சிகள், நோய்கள்... உஷார், உஷார்!

பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் அவற்றுக்கான தடுப்பு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் ராமராஜு விளக்கிச் சொன்னார். “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், தற்போது நிலவும் தொடர் மழை, பனி மூட்டமான சூழ்நிலை காரணமாக சில பயிர்களில் ஒரு சில பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன.

நெல்லில் இலைச்சுருட்டுப்புழு!

நெல்லில் இலைச்சுருட்டுப்புழு தாக்க வாய்ப்புள்ளது. இத்தாக்குதலுக்கு உள்ளான பயிர்களின் இலைகள் வெள்ளை நிறத்தில் சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்துவிடும். இப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், தழைச்சத்து உரங்கள் இடுவதைக் குறைக்க வேண்டும். மேலும், மாலை நேரங்களில் விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். தவிர, ‘அசாடிரக்டீன்’ என்ற தாவர (பயோ) பூச்சிவிரட்டியை, ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

நெல் வயலில் அதிகமாகத் தண்ணீர் தேங்கி வெளியேற்ற முடியாமல் உள்ள இடங்களில், புகையான் தாக்க வாய்ப்புண்டு. பயிர்கள் காய்ந்து, எரிந்த தோற்றத்தில் இருந்தால் இத்தாக்குதல் என்று உறுதிப்படுத்தலாம். இத்தாக்குதல் தென்பட்டால், தழைச்சத்து உரங்களை 3 முதல் 4 முறைகளாகப் பிரித்து இட வேண்டும். (ரசாயனம்) பைரித்திராய்டுகள், பூச்சிகளின் மறு உற்பத்தியைத் தூண்டும். அதனால், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 3 சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசலை, ஒட்டும்திரவத்துடன் கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய் தேவைப்படும்.

கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேகமூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை 3 முதல் 4 நாட்கள் வரை நீடித்தால், நெல்லில் குலை நோய், பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஆகியவை வர அதிக வாய்ப்பு உண்டு. இதனைக் கட்டுப்படுத்த, தழைச்சத்து உரங்களை மூன்று முறைகளாகப் பிரித்து இட வேண்டும். அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு... அவர்கள் பரிந்துரைக்கும் பயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பருத்தியில் காய்ப்புழு ஜாக்கிரதை!

மழை குறைவான பகுதிகளில், பருத்திச்செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு ஐந்து இடங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய்ப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். நிலக்கடலையில் சிகப்புக் கம்பளிப்புழுவின் தாக்குதல் காணப்படலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிப்பதுடன், 5 சதவிகித வேப்பங்கொட்டைச்சாறும் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

கரும்புக்கு முட்டை ஒட்டுண்ணி!

கரும்பில் இடைக்கணுப்புழுத் தாக்குதல் பரவலாகத் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த ‘டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை நான்காவது மாதத்தில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 1 சி.சி என்ற அளவில் 6 முறை கட்டிவிட வேண்டும்.

தக்காளிச் செடிகளில் இலைக்கருகல் நோய், காய்ப்புழுத் தாக்குதலும்; கத்திரியில் காய்ப்புழுத் தாக்குதலும் தென்பட வாய்ப்புள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். கத்திரியில், ‘டிரைக்கோகிரம்மா பிரோட்டியோசம்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை 15 நாட்கள் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு ஒரு சி.சி. என தொடர்ந்துத் கட்டிவிடுவதன் மூலம் காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

மாடுகளைத் தாக்கும் கோமாரி!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருவண்ணாமலைப் பயிற்சி மையத்தின் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், கால்நடைக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறைகள் குறித்தும் சொன்னார்.

“வெயில் காலத்தில் இருந்து, மழைக்காலத்துக்கு மாறும்போது தட்பவெட்ப நிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தால் கால்நடைகளைத் தாக்கும் நச்சுயிரிகளின் எண்ணிக்கையும், சுற்றுப்புறச்சூழலில் கொசு மாதிரியான நோய்களைப் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால், கால்நடைகளைப் பலவிதமான நோய்கள் தாக்கி பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன. மாடுகளைப் பொறுத்தவரை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலால் சப்பை நோய், கோமாரி, தொண்டை அடைப்பான், அடைப்பான், மடிவீக்கம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சப்பை நோய் தாக்கப்பட்ட மாட்டின் தொடைப்பகுதி வீங்கி காணப்படும். தொண்டை அடைப்பான் பாதிக்கப்பட்ட மாட்டின் கழுத்துப் பகுதி வீங்கி காணப்படும். மேலும், மாடுகள் சுவாசிக்கச் சிரமப்படும். அடைப்பான் நோயால் தாக்கப்பட்ட மாடுகள் திடீர் என இறந்து விடும்.

தீவனத்தில் கவனம்!

மழைக்காலங்களில் அடர்தீவனம் நனையும்போது, ‘அஃப்லாடாக்ஸின்’ என்ற நச்சுப்பொருள் உற்பத்தியாகும். அப்படி நச்சுப்பொருள் உற்பத்தியான தீவனத்தைச் சாப்பிடும் மாடுகளுக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும். தவிர, கல்லீரல் பாதிக்கப்பட்டும் இறக்க நேரிடும். மழையில் மட்கிப்போன வைக்கோலை மாடுகளுக்குக் கொடுக்கும் போதும் செரிமானப் பிரச்னையால் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இழப்பைத் தடுக்கும் தடுப்பூசிகள்!

மழைக்காலங்களில் மாடுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சப்பை நோய், தொண்டை அடைப்பான், அடைப்பான் போன்ற தொற்று நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும். சப்பை நோய்க்கு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஒரு முறையும், அடைப்பான் நோய்க்கு ஏப்ரல்-மே மாதங்களிலும் தடுப்பூசி போட வேண்டும்.

மடிநோய் மாதிரியான நோய்களைத் தடுக்க, கொட்டகை ஈரமாக இல்லாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். மட்கிப்போன வைக்கோலை மாடுகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பசுந்தீவனம் கொடுக்கும்போது தேவையற்ற செடிகள் கலந்து இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். கொட்டகையின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது, கொட்டகையின் சுற்றுப்புறத்தில் சுண்ணாம்புத் தூளை தூவி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

வெள்ளைக்கழிச்சலுக்கு தடுப்பு மருந்து!

ஆடுகளில்... அடைப்பான் நோயும், ஆட்டுக்கொள்ளை நோயும் அதிகளவில் தாக்க வாய்ப்புண்டு. கூட்டமாக வளர்க்கும் ஆடுகளில் அதிகமாகத் தாக்குதல் இருக்கும். தினம் ஒன்று, இரண்டு என இறந்து போகும். இதைத் தடுக்க மழைக்காலத்துக்கு முன்பு முறையாக ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். ஆட்டுக்கொள்ளை நோயால் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு 6 முதல் 8 நாட்களுக்கு கழிச்சல் இருக்கும். கால்புண், வாய்ப்புண், கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடியும். இந்நோய்க்கும் தடுப்பூசி உண்டு. மூலிகை மருந்துவ முறைகளையும் ஆடுகளுக்குக் கடைப்பிடிக்கலாம்.

மழைக்காலத்தில், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வர வாய்ப்புண்டு. அதனால், மழைக்காலத்துக்கு முன்பு கோழிகளை மருத்துவமனை கொண்டு சென்று தடுப்பூசிகள் போட வேண்டும். உருண்டை வடிவ தடுப்பு மருந்தையும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். தவிர, மூலிகை மருத்துவ முறைகளைக் கையாண்டும் நோய்களை விரட்டலாம்” என்றார்.

தொடர்புக்கு :
செந்தூர்குமரன், செல்போன்: 94438-69408,
ராமராஜு, தொலைபேசி: 0422-6611237.
ராஜ்குமார், தொலைபேசி: 04175-206577.

கால்நடை நோய்களை விரட்டும் மூலிகை மருந்துகள்!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மூலிகை ஆய்வு மையத்தில் கால்நடைகளுக்கு பரிந்துரைக்கும் மூலிகை மருந்துகள் சில இங்கே.. (ஒரு மாடு, ஒரு ஆடு, 10 கோழிகளுக்கான அளவுகள்)

மடிவீக்க நோய்!

சோற்றுக்கற்றாழை-200 கிராம், மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் (ஒரு புளியங்கொட்டை அளவு) ஆகியவற்றை கல் உரலில் இட்டுக் கெட்டியாக அரைத்து... ஒரு கை அளவுக்கு எடுத்து நீர் சேர்த்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதியில் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் நோய் குறையும் வரை இக்கலவையைப் பூச வேண்டும்.

கோமாரி வாய்ப்புண்!

தேங்காய் (முழுவதும் துருவிக் கொள்ளவும்) ஒன்று, சீரகம்-50 கிராம், வெந்தயம்-30 கிராம், மஞ்சள் பொடி-10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்)-20 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து தினம் இரண்டுவேளை வீதம் மூன்று நாட்களுக்குக் சாப்பிட கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுத்தால், மாடு முழுமையாகக் குணமடைந்து விடும்.

கோமாரி கால்புண்!

குப்பைமேனி-100 கிராம், பூண்டு-10 பல், மஞ்சள்-100 கிராம், இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-250 மில்லி. முதல் மூன்று பொருட்களை இடித்து, இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பதப்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து, கால்நடையின் காலில் புண் இருக்கும் பகுதியை உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் துடைத்துவிட்டு, புண் ஆறும் வரை காய்ச்சிய மருந்தைத் தடவ வேண்டும்.

ஆட்டுக்கொள்ளை நோய் (பி.பி.ஆர்)!

சீரகம்-15 கிராம், வெந்தயம்-15 கிராம், மஞ்சள்-5 கிராம், பிரண்டை-5 கொழுந்து, மிளகு- 5 எண்ணிக்கை, பூண்டு-5 பல், முருங்கை இலை-50 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்)-500 கிராம் ஆகிய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் சீரகம், வெந்தயம் ஆகிய இரண்டையும் இடித்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை உப்பில் (15 கிராம் உப்பு) தோய்த்து, ஆட்டினுடைய நாக்கின் மேல் பகுதியில் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உண்ணக் கொடுக்க வேண்டும்.

வெள்ளைக்கழிச்சல்!
கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அரிசிக்குருணை அல்லது நொய்யில் கலந்து... 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால், வெள்ளைக்கழிச்சல் பாதித்த கோழிகள் குணமாகி விடும்.

துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-ஒரு இலை, தூதுவளை-ஒரு இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால், கோழிகளுக்கு வரும் சுவாச நோய் சரியாகி விடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment