Saturday 3 November 2018

‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்!

சுற்றுச்சூழல் மீதுள்ள அக்கறை, இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வம் போன்ற காரணங்களால், விவசாயத்தின் பக்கம் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி. சிவகாசி அருகில் உள்ள விஸ்வநத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் முனியசாமி மானாவாரி விவசாயம் செய்து வருகிறார்.

“விவசாயத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. நான் காலேஜ் முடிச்சுட்டுச் சென்னையில ஒரு துணிக் கடையில மேனேஜரா வேலை பார்த்தேன். அங்க எனக்குப் பெருசா வேலையிருக்காது. அதனால, இன்டர்நெட்ல நிறையத் தகவல் தேடுவேன். இப்படி இன்டர்நெட் மூலமாத்தான் இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து இயற்கை விவசாயம் பத்தின தேடுதல்ல நம்மாழ்வார் ஐயா பத்தி தெரிஞ்சுக்கிட்டு அவரோட வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் எனக்கு இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசை வந்துச்சு. சந்தர்ப்பம் பார்த்து வேலையை விட்டுட்டு ‘வானகம்’ பண்ணைக்குப் போய்த் தங்கியிருந்து பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

அங்கே பயிற்சி எடுத்துக்கிட்டுருந்த சமயத்துலதான் சிவகாசியில இருக்கிற இயற்கை விவசாய அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டுச்சு. அந்த அமைப்புகளோட விவசாயிகள்கிட்ட பேசினேன். அவங்க ‘மாதிரி பண்ணை’க்குக் கூட்டிட்டுப் போய்க் காட்டினாங்க. அங்க, வட்டப்பாத்தி, மேட்டுப்பாத்திகள்ல காய்கறிகள் போட்டிருந்தாங்க.

நிறையப் பழமரக்கன்றுகள், கீரைகள்னு செழுமையா இருந்துச்சு. அந்தப் பண்ணையிலேயே பராமரிப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல அறிமுகமான நண்பர் ஒருத்தர், அவரோட இந்த ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அதுலதான் மானாவாரி விவசாயம் செஞ்சுட்டுருக்கேன்” என்று முன்கதை சொன்ன முனியசாமி தொடர்ந்தார்...

“இது மணல்சாரியான கரிசல் மண். போன போகத்துல இயற்கைமுறையில குதிரைவாலிச் சாகுபடி செய்தோம். இந்த வருஷம் ஒரு ஏக்கர் நிலத்துல துவரை, தட்டை, இருங்குச்சோளம், குதிரைவாலினு நாலு பயிர்களை ‘சைக்கிள் உழவுக் கருவி’யை வெச்சுச் சால்முறையில் விதைச்சேன். விதைப்போடு களையெடுத்தல், மண் அணைத்தல்னு மத்த வேலைகளையும் செஞ்சுக்கிட்டேன். இந்தக் கருவி மூலமா உழவு, களையெடுப்பு ரெண்டும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மிச்சமாச்சு. இதுமூலமா விதைச்ச குதிரைவாலி, தட்டை, இருங்குச் சோளம் மூணையும் அறுவடை செஞ்சாச்சு. துவரை இன்னும் கொஞ்ச நாள்ல அறுவடைக்கு வந்துடும். ஒரு ஏக்கர் நிலத்துல 64 கிலோ குதிரைவாலி, 47 கிலோ தட்டை, 402 கிலோ இருங்குச்சோளம் கிடைச்சது. குதிரைவாலி, தட்டை ரெண்டையும் விற்பனை செஞ்சுட்டேன். அதுமூலமா 12,260 ரூபாய் கிடைச்சது. 402 கிலோ இருங்குச்சோளத்தை 32,160 ரூபாய்க்கு விலை பேசிட்டேன்.

துவரையில 350 கிலோ வரை அறுவடையாகும்னு எதிர்பார்க்கிறேன். அதை கிலோ 150 ரூபாய்னு விற்பனை செஞ்சா 52,500 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுடும். மொத்தமாப் பார்த்தா 96,920 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல மொத்தச் செலவும் போக 80 ஆயிரம் ரூபாய்க்குமேல லாபமா நிக்கும்” என்ற முனியசாமி நிறைவாக,

“சிவகாசியில இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இருக்குறதுனால, விதை விற்பனையும், விளைபொருள் விற்பனையும் சுலபமா இருக்கு. தெரிஞ்ச விவசாயிகள்கிட்ட விதை வாங்குறதால விதை தரமா இருக்கும்னு நம்பி வாங்குறாங்க. ஏதாவது ஒரு பயிர் கைகொடுக்கும்னு நினைச்சுதான் நாலு பயிரைக் கலந்து போட்டேன். ஆனா, நாலுமே நல்லா விளைஞ்சு வந்துடுச்சு” என்றார் சந்தோஷமாக.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் குதிரைவாலி, இருங்குச்சோளம், துவரை, தட்டைப்பயறு ஆகியவற்றைச் சாகுபடி செய்யும் முறை குறித்து முனியசாமி சொன்ன விஷயங்கள் சாகுபடிப் பாடமாக இங்கே..

பொதுவாகச் சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் சித்திரை மாதம் கோடை உழவு செய்ய வேண்டும். பிறகு செம்மறி ஆடுகளைக் கிடை அடைத்து ஓர் உழவு செய்ய வேண்டும் (முனியசாமியின் நிலம் மேய்ச்சல் நிலம் என்பதால், இவர் கிடை அடைக்கவில்லை). ஆடி மாதம் மழை பெய்தவுடன் ஓர் உழவு செய்து, சைக்கிள் விதைப்புக் கருவி மூலமோ அல்லது வழக்கமான முறையிலோ விதைகளை விதைக்கலாம். சைக்கிள் உழவில் நேர் நேராகச் சால்போட்டு, சாலுக்குச் சால் 2 அடி இடைவெளி விடுவதால் பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். விதைப்புக்குமுன் விதைநேர்த்தி அவசியம். முதல் சாலில் துவரை, இரண்டாவது சாலில் குதிரைவாலி, மூன்றாவது சாலில் சோளம், நான்காவது சாலில் தட்டை என வரிசையாக விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 5 கிலோ துவரை விதை, இரண்டரை கிலோ குதிரைவாலி விதை, 7 கிலோ இருங்குச்சோள விதை, 5 கிலோ தட்டைப்பயறு விதை தேவைப்படும்.

விதைத்த ஒரு வாரத்துக்குள் விதைகள் முளைப்பு எடுக்கும். விதைத்த 15-ம் நாளுக்கு மேல் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

90 முதல் 100 நாள்களில் குதிரைவாலி அறுவடைக்கு வந்துவிடும். இந்த நேரத்தில், தட்டைப்பயறு பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

120-ம் நாளுக்கு மேல் தட்டைப்பயறு அறுவடைக்கு வந்துவிடும். துவரை 2 அடி உயரம் வளரும்போது துவரையின் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இதனால், பக்கக்கிளைகள் கூடுதலாக வரும். 130-ம் நாளில் துவரையில் பூவெடுக்கும். அந்த நேரத்தில், மீன் அமினோ அமிலத்தைத் தெளிக்க வேண்டும். 150-ம் நாளில் இருங்குச்சோளம் அறுவடைக்கு வந்து விடும். இந்த நேரத்தில் துவரையில் பிஞ்சு இறங்கும்.

அந்தச் சமயத்தில் காய்ப்புழுத் தாக்குதலைச் சமாளிக்க... இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் தெளிக்க வேண்டும். 160-ம் நாள் மீன் அமினோ அமிலம் தெளிக்க வேண்டும். 180-ம் நாளுக்கு மேல் துவரை அறுவடைக்கு வந்துவிடும்.

சைக்கிள் உழவு கருவி :

“பழைய சைக்கிளில் பின்பக்க வீல், பெடல், செயின் பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துவிட்டு பெடல் இருந்த இடத்தில் ஒரு இரும்புப்பட்டையை வெல்டிங் மூலம் இணைக்க வேண்டும். அதில் கொலுவை போல்ட், நட் கொண்டு இணைக்க வேண்டும். தேவைக்கேற்ப இரண்டு, மூன்று கொலுக்கள்கூடச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

களை எடுக்க 4 பல்கொண்ட கருவியையும் செய்துவைத்துக்கொள்ளலாம். உழவுக்கும் விதைப்புக்கும் ஒற்றைக் கொலுவைப் பயன்படுத்த வேண்டும். சீட் இருந்த இடத்தில் கைப்பிடியைப் பொருத்திச் சைக்கிளை முன்னோக்கித் தள்ளும்போது டயர் சுழலச் சுழலக் கொலு மண்ணைக் கிளறிவிடும்.

சாதாரணமாக அரை அடி ஆழமும், மண் பதமானதாக இருந்தால் முக்கால் அடி ஆழம் வரையும் கொலு இறங்கும். இக்கருவி மூலம் களை எடுக்கும்போது, களைகள் வேரோடு வந்து விடுகின்றன” என்கிறார் முனியசாமி.

பூச்சிகளை அழிக்கும் குருவிகள் :

“இருங்குச்சோளத்தை அறுவடை செய்யும்போது... 10 அடிக்கு ஒரு சோளக்கதிர் இருப்பதுபோல விட்டுவிட்டால், அதைச் சாப்பிட அதிகளவில் கரிச்சான் குருவிகள் வரும். இக்குருவிகள் துவரையைத் தாக்க வரும் பூச்சிகளையும் உண்டுவிடுவதால், இயற்கை முறையில் பூச்சிக்கட்டுப்பாடு நடைபெற்று விடும்” என்கிறார் முனியசாமி.

விதை நேர்த்தி :

ஒரு பாத்திரத்தில் 10 லிட்டர் தண்ணீர், 500 மில்லி பஞ்சகவ்யா ஆகியவற்றை ஊற்றிக் கலந்து, அதில் 5 கிலோ துவரை விதையைப்போட்டு 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்து விதைகளை 20 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

இதே விகிதத்தில் கலந்த பஞ்சகவ்யா கரைசலில்... இருங்குச்சோளம் மற்றும் குதிரைவாலி விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். தட்டைப்பயறு விதையை அரை மணி நேரம் மட்டும் ஊற வைக்க வேண்டும்.

தொடர்புக்கு :
முனியசாமி,
செல்போன்: 96550 51239

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment