Monday 5 November 2018

மொட்டை மாடியில் ஒரு வனம் :

“மாடித்தோட்டம் என்றாலே காய்கறிகளையும், கீரைகளையும் மட்டும்தான் வளர்க்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் மாடித்தோட்டத்தில் மரங்களையும் வளர்க்க முடியும்” என்று சொல்வதோடு அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி.

சென்னை, ஜாபர்கான்பேட்டை, வேதாச்சலம் தெருவில் கடந்த 18 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார் லட்சுமி. ஒரு காலைப்பொழுதில் அவரது வீட்டை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் செடி, கொடிகள்... எனப் பசுமையாகக் காட்சியளித்தது, அந்த வீடு. நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்ற லட்சுமி மாடித்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

“நான் சின்ன வயசுல இருக்குறப்பவே எங்க வீட்டுல தோட்டம் போட்டு அப்பாவும், அம்மாவும் காய்கறிச்செடிகளை வளர்த்தாங்க. அதைப் பார்த்தே வளர்ந்ததால, எனக்கு வீட்டுத்தோட்டம் மேல ஆசை அதிகமா இருந்துச்சு. நான், 2001-ம் வருஷம் 10 தொட்டிகளை மட்டும் வெச்சு மாடித்தோட்டம் அமைச்சேன். இப்போ 200 செடிகளுக்கு மேல இருக்கு. பெரும்பாலும் மர வகைகளும், மலர் வகைகளும்தான் வெச்சிருக்கேன். காய்கறி வகைகளைச் சீசனுக்கு ஏத்த மாதிரி விதைப்பேன். இப்போ கோடைக்காலம்கிறதால காய்கறிச் செடிகள் குறைவா இருக்கு. தற்சமயம் கத்திரி, மிளகாய் மட்டும்தான் இருக்கு. ஜூன் மாசத்துக்குப் பிறகுதான் காய்கறிப் பயிர்களைப் போடுவேன். அதேபோல அக்டோபர் மாசத்துக்கு மேல குளிர்காலத்தில பீன்ஸ், கேரட், பீட்ரூட், காலிஃபிளவர்னு பயிர் செய்வேன். இந்த ஏரியாவுல மாடித்தோட்டம் அமைச்ச முதல் ஆள் நான்தான். இப்போ எல்லோரும் என்கிட்ட வந்து ஆலோசனை கேட்டுட்டுப் போறாங்க” என்று முன்னுரை கொடுத்த லட்சுமி தொடர்ந்தார். “இங்க காய்கறிகளையும், கீரைகளையும்தான் ஆரம்பத்துல வளர்த்தேன். அப்புறமா புளியமரம், மாதுளை, கொய்யா, வாட்டர் ஆப்பிள்னு மரங்களையும் மாடியில் வளர்க்க ஆரம்பிச்சேன். இந்த மரங்கள், நான் நினைச்சதைவிட வேகமா வளர ஆரம்பிச்சது. வாரத்துக்கு ஒரு தடவை கொய்யா, மாதுளைனு பறிச்சிக்கிட்டிருக்கோம்.

இதுபோக செர்ரி, சப்போட்டா, மாமரம், வாழை மரம், எலுமிச்சைனு பல பழமரங்கள் இருக்கு. மூலிகைச் செடிகளும், கீரைகளும் இருக்கு. வீட்டைச் சுத்தி பசுமையான செடிகளையும், கொடி வகைகளையும் வெச்சிருக்கேன். வெளிநாட்டுச் செடிகளா இருந்தாலும் வீட்டைச்சுத்தி இருக்குறப்போ, சுத்தமான காத்து கிடைக்குது.

“தினமும் காலையில ஆறு மணிக்கு மாடித்தோட்டத்துக்குப் போயிடுவேன். கோடைக்காலத்துல தினமும் 2 தடவை செடிகளுக்குத் தண்ணீர் கொடுப்பேன். சில நேரங்கள்ல பூவாளியில தண்ணீர் தெளிப்பேன். செடிகளை ஒவ்வொண்ணா கவனிச்சுப் பூச்சித் தாக்குதல் ஏதும் இருக்கானு பார்ப்பேன். அதேபோலப் பழுத்த இலைகளைப் பறிச்சிடுவேன். வாரத்துக்கு ஒருமுறை இயற்கைப் பூச்சிவிரட்டி, தேமோர்க் கரைசல், பெருங்காயக் கரைசல்னு தெளிப்பேன்.

கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாலதான் ‘ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்’ பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் குழு மூலமாத்தான் எனக்கு இயற்கை இடுபொருள்களைப் பத்தி அதிகமாகத் தெரிஞ்சது. யூடியூப்ல நம்மாழ்வார் வீடியோக்களைப் பார்த்து இயற்கை முறையில இடுபொருள்களைப் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு, நல்ல பலன் கிடைச்சுருக்கு. வீட்டுல தயாரிக்க முடிஞ்ச இடுபொருள்கள் எல்லாத்தையும் நானேதான் தயாரிச்சுக்குறேன். தினமும் வீட்டுல மிச்சமாகுற காய்கறி, பழக்கழிவுகளையும் அப்படியே செடி வளர்க்குற தொட்டிகள்ல போட்டுடுவேன். அதெல்லாம் மட்கி உரமாகிடும். வேர்ப்பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க வேப்பம் பிண்ணாக்கு பயன்படுத்துறேன்” என்ற லட்சுமி நிறைவாக,

“ஆரம்பத்துல மாடித்தோட்டம் அமைக்கிறப்போ செலவு அதிகமா இருக்குற மாதிரித்தான் தெரியும். ஆனால், நாள்கள் போகப்போகத்தான் அதோட பலன் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். வீட்டுல இருக்குற உடைந்த வாளிகள், பாத்திரங்கள்லயே செடிகள் வளர்க்கலாம். மாடித்தோட்டம், உடலையும், மனசையும் ஆரோக்கியமா வைக்குது. சிறந்த மாடித்தோட்டத்துக்காக 2 விருதுகள் எனக்குக் கிடைச்சுருக்கு.

இந்தளவுக்கு நான் மாடித்தோட்டத்துல சாதிச்சதுக்குக் காரணம் என் கணவர்தான். அவர் என்னை உற்சாகப்படுத்தினதோடுமாடித்தோட்டத்துக்கான பல வேலைகளைச் செய்து கொடுத்தார். இப்போ நிறைய பேர் என்கிட்ட ஆலோசனை கேட்டுத் தோட்டம் அமைக்கிறதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

வளர்ச்சி ஊக்கியான வாழைப்பழத்தோல்!

வாழைப்பழத்தோலைப் பத்து நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து அக்கரைசலைப் பயிர்களுக்குத் தெளித்துவந்தால் பயிர்களின் வளர்ச்சி அதிகமாவதுடன், பூச்சித் தாக்குதலும் குறைகிறது. வாழைப்பழத்தோலை அரைத்துத் தண்ணீரில் கரைத்தும் தெளிக்கலாம். வாழைப்பழம் மிகச்சிறந்த வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. அதேபோலச் செடிகளில் நல்ல பச்சை நிறத்துடன் உள்ள இலைகளைப் பறித்து, அவற்றைப் பதினைந்து நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து, செடிகளின் வேர்பகுதியில் ஊற்றினால் வேர்கள் பலம்பெறுகின்றன.

தொடர்புக்கு :
செல்போன்: 98402 97383

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment