Wednesday 7 November 2018

கலக்கலான வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

நெல், காய்கறிகள், மா, தென்னை... ஆண்டுக்கு ரூ 6 லட்சம்

“நல்ல நிலத்தைத் திருத்தி, பண்படுத்தி அதில் ஒரு விதையை விதைத்தால், அந்த விதை முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பெருகிப் பலன் கொடுக்கும். அதேபோன்று நல்லதை இருதயத்தில் விதைத்தால், அது பலருக்கும் பலனளிப்பதோடு இறைவனுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது. நல்ல மனங்களை உருவாக்கும் இறைப்பணியோடு, நல்ல நிலத்தைச் செப்பனிட்டுப் பயிர் செய்யும் வேலையை ஆத்மார்த்தமாகச் செய்து வருகிறேன்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘பாஸ்டர்’ ஸ்டீபன் ஜெபக்குமார்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் அருகேயுள்ள டோல்கேட்டிலிருந்து வலதுபுறம் திரும்பும் சாலையில் சென்று, ப்யூலா கார்டன் என்று கேட்டால் அனைவரும் கைகாட்டுகிறார்கள். நாற்பது ஏக்கர் பரப்பளவில் உள்ள கார்டனுக்குள் சர்ச், பைபிள் கல்லூரி, தங்கும் விடுதி என்று கடந்து சென்றால், தென்னந்தோப்பும், காய்கறித் தோட்டமும், நெல் வயலும் நம்மை வரவேற்கிறது. விவசாயப் பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஸ்டீபன் ஜெபகுமாரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்த ஊரு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தம்பிக்கோட்டை. விவசாயக் குடும்பம்தான் எங்களுடையது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்னைகளால் அலைகழிக்கப்பட்டவன். இறுதியாக ஆறுதல் கொடுத்தது ஏசு கிறிஸ்து. ஆறுதல் கிடைத்த இடத்திலேயே அடைக்கலம் ஆகலாம் என்று ஏசுவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இறைப்பணிக்கு மாறினேன். ‘இலேமென்ஸ் இவான்ஜலிக்கல் பெல்லோஷிப் ’ என்ற கிறிஸ்துவ அமைப்பில் பாஸ்டரானேன். பாஸ்டர் (இறை மற்றும் சமூகப் பணியாளர்) என்றால் பாதிரியார் கிடையாது. எனக்கு மனைவி, குழந்தைகளும் உண்டு. வாழ்க்கையோடு இந்தப் பணிகளையும் மேற்கொள்கிறேன்.

இந்த அமைப்பின் நிறுவனர் யோசுவா டானியல். சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் எங்கள் அலுவலகம் இருந்தது. 1997-ம் ஆண்டு இங்கிருக்கும் 40 ஏக்கர் நிலத்தை வாங்கி, அந்த வருஷமே இங்கு வந்தோம். இங்கிருந்துகொண்டே அமைப்போட சமூகப் பணிகளைச் செஞ்சுகிட்டு, விவசாயத்தையும் கவனிக்கத் தொடங்கினேன். எனது டிப்ளமோ வேளாண்மை படிப்பும், சின்ன வயதில் கிடைத்த விவசாய அனுபவத்தையும் வைத்து தொடர்ந்து விவசாயம் செஞ்சிட்டு வந்தேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்...

“பசுமை விகடன் வெளிவந்த 2007-ம் வருஷத்திலிருந்து படிச்சிட்டு இருக்கேன். இதைப் படிக்கும்போதுதான் ரசாயனம், பூச்சிக்கொல்லிகளோட தீங்கு என்னான்னு புரிஞ்சது. என் மனைவியோட தங்கச்சிக்கு கேன்சர் வந்து 38 வயசிலேயே இறந்துபோயிட்டாங்க. அந்தப் பாதிப்புக்கு ரசாயனங்கள்தான் காரணம்னு புரிஞ்சது. இனிமேலும் தாமதிக்கக் கூடாதுனு 2013-ம் வருஷம் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினோம்.

முதல்ல 5 ஏக்கர் நிலத்துல நெல் பயிரிட்டோம். ஏக்கருக்கு 7 மூட்டைங்கிற கணக்குல 35 மூட்டைகள்தான் கிடைச்சது. என்னடா... தப்பா முடிவு எடுத்துட்டோமோன்னு தோணுச்சு. சரி... என்னான்னு பார்ப்போம்னு அடுத்தமுறை ஏக்கருக்கு 7 லோடு டிராக்டர் எரு என்ற கணக்குல 8 ஏக்கருக்கு 35 லோடு டிராக்டர் எரு அடிச்சு, திருவள்ளூர் மாவட்டத்துல பிரபலமா இருக்கிற டி.கே.எம்-13 ரக நெல்லைப் பயிரிட்டேன். அந்த முறை ஏக்கருக்கு 25 மூட்டைனு 8 ஏக்கருக்கு 200 மூட்டை நெல் கிடைச்சது. இந்த நெல்லோட தரத்தைப் பார்த்த வேளாண் துறை அதிகாரிகள், சான்று விதையா பாதியை வாங்கிக்கிட்டாங்க. அதன்பிறகுதான் இயற்கை விவசாயத்த தொடரலாம்னு முடிவு பண்ணினேன்” என்ற ஸ்டீபன் நிலத்திலிருக்கும் பயிர்கள் பற்றிப் பேசினார்.

“இப்போ 8 ஏக்கர்ல நெல், 6 ஏக்கர்ல தென்னை, 4 ஏக்கர்ல காய்கறிகள், கோடைக்காலப் பழங்கள், 4 ஏக்கர்ல மாமரங்கள், 2 ஏக்கர்ல கொய்யா, அரை ஏக்கர்ல எலுமிச்சை, சாத்துக்குடி, 2 மீன் குளங்கள், 10 மாடுகள், 80 செம்மறியாடுகள் இருக்கு. மீதி நிலத்துல அமைப்புக்கான கட்டடங்கள் இருக்கு. இது களி கலந்த சரளை மண் பூமி. அதனால, விளைச்சல் நல்லாவே கிடைச்சிட்டு வருது. எருதான் முக்கிய இடுபொருள். இதோடு பொன்னீம் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், பஞ்சகவ்யா, அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியானு கொடுத்துட்டு வர்றோம். நெல்லுல டி.கே.எம்-13 என்கிற ரகத்தைப் போடுறோம். காய்கறிகள்ல கத்திரி, வெண்டை, தக்காளி, புடலை, பீர்க்கன், பாகல், கோவைக்காய், தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம், பாம்பு வெள்ளரினு பயிர் செய்றோம்.

பண்ணை வேலைகளை மனோகரன், சேவியர்னு 2 பேர் பாத்துகிறாங்க. இரண்டு பேரும் குடி பழக்கத்தால பாதிக்கப்பட்டவங்க. திருந்தணும்னு வந்தவங்க மதுப்பழக்கத்தை மறந்து, ஆர்வத்தோடு விவசாயத்தைச் செய்துகிட்டு வர்றாங்க. மனோகரன் பாசனம், பராமரிப்பு வேலைகளைப் பார்த்துகிறாரு. சேவியர்ங்கிறவரு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். பந்தல் காய்கறிகளுக்குப் பந்தல் அமைக்கிறதுல கில்லாடி. அவரோட முயற்சியாலதான் பந்தல் காய்கறிகளையே போட்டோம். நிறைய பேருக்குப் பந்தல் அமைச்சும் கொடுத்துட்டு வர்றாரு” என்றவர் நிறைவாக, விற்பனை குறித்துப் பேசினார்.

“விளையுறதை எங்களுடைய பயன்பாட்டுக்குப் போக மீதியை ஜெப கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு விற்பனை செய்றோம். அவங்க இயற்கையில விளையுறதால, நாம சொல்ற நியாயமான விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. இதுதவிரக் காய்கறிகள், பழங்களைச் சுற்றுவட்டாரத்துல விதவைகள், வயசானவங்கனு காய்கறி விக்கிறங்களுக்கு, குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். அதேமாதிரி சான்று விதையாகவும் வேளாண்துறைக்குக் கொடுக்கிறோம். விளைபொருள்களுக்கு வருமான கணக்குப் போட்டால், வருஷத்துக்கு 8 ஏக்கர் நெல்லுல இருந்து 2,40,000 ரூபாய் கிடைக்குது. அதுல செலவுபோக 1,80,000 ரூபாய் நிக்கும். காய்கறிகள்ல 2,25,000 ரூபாய் வருமானம் வருது. இதுல செலவுபோக 1,50,000 ரூபாய் கிடைக்குது.

இதுதவிர மா, தென்னை, கோடைக்காலப் பழங்கள், மீன்குளங்கள்ல இருந்து செலவுபோக 3,10,000 ரூபாய் கிடைக்குது. கொய்யா மகசூலுக்கு வரலை. செம்மறியாடுகளை இங்கே உணவுக்குப் பயன்படுத்திக்கிறோம். மொத்தமாக நெல், காய்கறிகள், மா, தென்னை மூலமா வருஷத்துக்கு 6,40,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. இந்தப் தொகையை நிலத்தோட அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்திக்கிறோம். எங்களுக்குத் தங்க இடமும், சாப்பிட உணவும், குழந்தைகளைப் படிக்க வைக்கிற செலவுகளை அமைப்பு ஏத்துகுது. இதை ஒரு சேவை அடிப்படையிலேயே நடத்திட்டு வர்றதால, நிலத்தோட அளவை ஒப்பிடும்போது லாபம் குறைவுதான். இதையே அதிகக் கவனம் எடுத்து வணிக நோக்கில் நடத்தினால், லாபம் அதிகரிக்கும்.

இங்கே யார் வேண்டுமானாலும் வந்து பண்ணையைப் பார்வையிடலாம். இயற்கை விவசாயம் சம்பந்தமாகப் பயிற்சியும் எடுத்துக்கலாம். மண்ணுக்கும், சூழலுக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், மத்தவங்களுக்கு உதவும் வகையில் மனிதனால் இயற்கை விவசாயம் செய்ய முடியும் நிரூபிக்கிறதுக் காகத்தான் இயற்கை விவசாயம் செய்றேன்” என்று சொல்லி இன்முகத்தோடு விடைகொடுத்தார் ஸ்டீபன் ஜெபகுமார்.

“ஒரு லிட்டர் பொன்னீம், இரண்டரை ஏக்கருக்குப் போதும்!”

பொன்னீம் பூச்சிவிரட்டியைக் கண்டுபிடித்துப் பரவலாக்கியது சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள பூச்சியியல் ஆய்வு நிறுவனம். இதன் இயக்குநர் முனைவர் இன்னாசிமுத்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒரு லிட்டர் பொன்னீம் பூச்சிவிரட்டியை ஒரு பக்கெட்டில் ஊற்றி அதோடு 350-400 லிட்டர் தண்ணீரை (குறைவாகத் தேவைப்படுபவர்கள் 100 மில்லிக்கு 35 லிட்டர் தண்ணீரைச் சேர்த்துத் தயாரிக்கலாம்) சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு மோர் போன்ற ஒரு கரைசல் தயாராகும். இதை ஸ்பிரேயரில் ஊற்றி வழக்கமான முறையிலேயே தெளிக்கலாம். எந்த நெடியும் அடிக்காது. நெல், காய்கறிப் பயிர்களின்மீது தெளித்தால், திரவமானது பசை போன்று செடிகளில் ஒட்டிக்கொள்ளும். இதன் வாசனை பூச்சி மற்றும் புழுக்களுக்குப் பிடிக்காது. இதனால், இலை, பூ, காய்களைத் தாக்கும் பூச்சிகள், அதை விட்டுவிட்டு அப்படியே ஓடிவிடும். பயிர்களும் பாதுகாக்கப்படும். 1 லிட்டர் பொன்னீம் வாங்கினால் இரண்டரை ஏக்கருக்குத் தெளிக்கலாம். பூச்சிகளின் தாக்குதலைப் பொறுத்து அதிகபட்சமாக 3 முறை தெளிக்கலாம். ஒரு லிட்டர் 500-600 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு போகத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவில் விவசாயிகள் தங்களுடைய நிலத்தைப் பூச்சிகளின் பாதிப்பிலிருந்து எளிதாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.”

பொன்னீம் பூச்சிவிரட்டி தெளிப்பது எப்படி?

“பொன்னீம் பூச்சிவிரட்டி புங்கன் எண்ணெய், வேப்ப எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகள் கலந்த கலவை. இதை லிட்டருக்கு 2-4 மில்லி என்ற கணக்கில் கலந்து பூச்சிகளோட தாக்குதலுக்கு ஏற்ப தெளிக்கிறோம். 15 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கிறோம். ஒரு லிட்டர் பொன்னீம் பூச்சிவிரட்டி 500 ரூபாய் விலையில் லயோலா கல்லூரியில் வாங்கினேன்” என்றார் ஸ்டீபன்.

ஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் சொல்லிய தகவல்கள், இங்கே இடம் பிடிக்கின்றன.

இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில் 7 லோடு டிராக்டர் எருவை (ஒரு லோடுக்கு ஒன்றரை டன் எரு) கொட்டிக் கலைத்துவிட வேண்டும். சணப்பை விதைகளை விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி 2 சால் உழவு ஓட்டிவிட வேண்டும். மீண்டும் 2 சால் உழவு ஓட்டி, ஏற்கெனவே தயாராக இருக்கும் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். 3-வது நாள் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்துவந்தால் போதும்.

10-வது நாள் ஏக்கருக்கு 5 கிலோ அசோலாவைத் தூவ வேண்டும். 15-வது நாள் அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்த 5 கிலோ நுண்ணுயிர் உரத்தைத் தூவ வேண்டும். 15-ம் நாள் மற்றும் 30-ம் நாளில் பஞ்சகவ்யாவை ஒரு டேங்குக்கு 300 மில்லி என்ற கணக்கில் 5 டேங்க் தெளிக்க வேண்டும். இதைப் பாசனநீரிலும் கலந்துவிடலாம். 20 மற்றும் 40-ம் நாள்களில் களையெடுக்க வேண்டும். மீன் அமினோ அமிலத்தை ஒரு லிட்டருக்கு 2 மில்லி என்ற கணக்கில் மாலைவேளையில் 20 மற்றும் 45-ம் நாளில் தெளிக்க வேண்டும். பூச்சித்தாக்குதலுக்குப் பொன்னீம் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். 120-லிருந்து 135-வது நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். நெல்லானது பொன்னிறத்துக்கு மாறும்போது, நெல்லின் உமியை நீக்கி பார்த்தால், அரிசியானது கெட்டியாக மாறி இருந்தால், அறுவடை செய்யலாம். டி.கே.எம்-13 ரக அரிசி, பொன்னி அரிசி போன்றே சாப்பிட நன்றாக இருக்கும்.

காய்கறிகள் :

மேற்கண்ட முறையில் பயன்படுத்திய பசுந்தாள் விதைப்பு, எரு, இயற்கை இடுபொருள்களைத்தான் காய்கறிகளுக்கும் பயன்படுத்துகிறோம். காய்கறிகளுக்கு இங்கிருக்கும் நர்சரியிலேயே நாற்றுகளைத் தயார் செய்து கொள்கிறோம். மல்ச்சீங் ஷீட் போட்டு, சொட்டுநீர்க் குழாய் மூலம் பாசனம் செய்கிறோம். காய்கறிகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த சோலார் விளக்குப் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் அட்டை, டின் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.

தொடர்புக்கு :
ஸ்டீபன் ஜெபகுமார்,
செல்போன்: 94444 60445.

தொடர்புக்கு :
முனைவர் இன்னாசிமுத்து,
செல்போன்: 98403 37667.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment