Wednesday 7 November 2018

அரசுப் பணிக்கு மட்டுமல்ல... இயற்கை விவசாயத்துக்கும் பயிற்சி! - அசத்தும் பயிற்சி மையம்!

போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுக்கும் பெரும்பாலான மையங்கள், நகர்ப்பகுதிகளில்தான் அமைந்திருக்கின்றன.இதனால், கிராமப்புற இளைஞர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதில், பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் கிராமப்புறத்திலேயே பயிற்சி மையம் அமைத்துப் போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுப்பதோடு, இயற்கை விவசாயத்தையும் சொல்லித்தருகிறது, சபர்மதி குருகுலம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பஸ் டிப்போவுக்கு எதிரில் பெரிய வேளியநல்லூர் பகுதியில் இருக்கிறது, ‘சபர்மதி ஆஃப் சவுத்’ பயிற்சி மையம். இம்மையத்தில் தங்கும் இடம் மற்றும் உணவுக்காக ஒரு மாணவருக்கு 2,000 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிக் கட்டணம் செலுத்த விரும்பும் மாணவர்கள் தங்களால் செலுத்த முடிந்த தொகையை உண்டியலில் போட்டால் போதுமானது. உணவு மற்றும் தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்த இயலாதவர்கள், மடத்துக்குச் சொந்தமான நிலத்தில், இயற்கை விவசாயத்துக்கான வேலைகளைச் செய்தால் போதுமானது.

இம்மையத்தின் பொறுப்பாளர் ராஜவேந்தனைச் சந்தித்துப் பேசினோம். “இந்தக் குருகுல மையத்தை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. என் அண்ணன் குணசேகரன்தான் இதை ஆரம்பிச்சார். மொத்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. பின்தங்கின சூழல்ல இருந்து வர்ற மாணவர்கள் தங்கிப் படிக்கிறதுக்கான அடிப்படை வசதிகளைச் செய்திருக்கிறோம். யூ.பி.எஸ்.சி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு, வங்கித் தேர்வு, நீட் தேர்வுனு பல போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளைக் கொடுக்குறோம்.

மாணவர்கள் சாப்பாட்டுக்கும், தங்கும் இடத்துக்கும் பணம் கொடுத்தால் போதுமானது. எல்லாப் பயிற்சிகளையும் இலவசமாத்தான் கொடுக்குறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகமும் இங்கே இருக்கு. இங்கே தங்குற குடில்களைச் செம்மண்ல கட்டி, பனை ஓலைலதான் வேய்ஞ்சுருக்கோம். மொத்தம் 60 மாணவர்கள் தங்கியிருக்காங்க. சாப்பாட்டுக்கும், தங்குற இடத்துக்கும் கட்டணம் செலுத்த வசதி இல்லாதவங்களுக்கு மாற்று வழியும் வெச்சிருக்கோம். இங்கே இயற்கை விவசாயம் செய்து கட்டணத்தைக் கழிச்சுக்கலாம். இல்லையென்றால், சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் போய் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம்.

மாணவர்களுக்கு ரெண்டு மணி நேரம்தான் இங்கே பயிற்சி கொடுக்குறோம். மீதி நேரம் மாணவர்கள் விருப்பப்பட்டா நிலத்துல இறங்கி விவசாய வேலைகளைச் செய்யலாம். இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கத்துக்கலாம். விவசாய வேலைகளைச் செய்யச்சொல்லி நாங்க கட்டாயப்படுத்தமாட்டோம். ஆனா, எல்லோருமே விரும்பி விவசாயம் செய்றாங்க. இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிறாங்க. பண்ணைக்குத் தேவையான இடுபொருள்களை மாணவர்களே தயாரிக்கிறாங்க” என்ற ராஜவேந்தன் குடில்கள், விவசாய நிலம் போன்றவற்றைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

“இங்கே கஞ்சிதான் எல்லோருக்கும் காலை உணவு. மதியம், இரவு ரெண்டு வேளைகளும் அரிசி சாதம். மூணு வேளை மூலிகைத் தேநீர் கொடுப்போம். எல்லாமே இயற்கையில விளைஞ்ச பொருள்களை வெச்சுதான் தயார் செய்றோம். எண்ணெய்க்காக மரச்செக்கு அமைச்சுருக்கோம். தேவைப்படுற மாணவர்கள் மரச்செக்குல எண்ணெய் ஆட்டுறதுக்கும் பயிற்சி எடுத்துக்கலாம். இங்கே இருக்குற ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு மரத்தைப் பராமரிக்கிறாங்க. பண்ணையில் உம்பளச்சேரி உள்ளிட்ட நாட்டு வகைகள்ல 12 மாடுகள் இருக்கு. அதில்லாம வாத்துகள், கோழிகள் எல்லாமே இருக்கு. இது எல்லாத்தையுமே பயிற்சி மாணவர்கள் தான் பராமரிக்கிறாங்க. நான் வானகம் பண்ணையில எட்டு மாசம் தங்கி பயிற்சி எடுத்துட்டு, கிராமத்துல விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்க அண்ணன் இந்த மையம் ஆரம்பிச்சதும், இங்கே வந்து மாணவர்களுக்கு விவசாயப் பயிற்சி கொடுத்திட்டிருக்கேன். அரசு வேலைக்காகத் தயாரானாலும், பல மாணவர்களுக்கு விவசாயம் செய்யணுங்கிற ஆசையும் இருக்கு. படிப்போடு இயற்கை விவசாயத்தையும் கத்துக்கிறது, ஒரு கைத்தொழிலைக் கத்துக்குறது மாதிரிதான்” என்றார்.

நிறைவாகப் பேசிய மையத்தின் நிறுவனர் குணசேகரன், “காலையில ரெண்டு மணிநேரம் மட்டும்தான் மாணவர்கள் விவசாயம் செய்றாங்க.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்குறாங்க. அதிகமாகப் பணம் வசூலிக்கும் ‘கோச்சிங் சென்டர்’களை நம்பி பணத்தை வீணாக்காமல் தடுப்பதுதான் எங்கள் முக்கிய நோக்கம்.

இதோடு இயற்கை வாழ்வியலையும் சொல்லித் தர்றோம். இங்கே பயிற்சி எடுக்குற மாணவர்கள் கட்டாயம் சிறந்த அதிகாரிகளா செயல் படுவாங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு :
செல்போன்: 70108 36885

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment