Monday 5 November 2018

மண், மக்கள், மகசூல்! - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்!

முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்...
‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனிதக்குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

மேல்மட்டப் புழுக்கள், நடுமட்டப் புழுக்கள், அடிமட்டப் புழுக்கள் என மூன்று வகையான மண்புழுக்களும், எப்படி மண்ணைப் பராமரிக்கின்றன என்று சென்ற இதழில் பார்த்தோம். இவற்றில் மேல்மட்டப் புழுக்களைத் தனியாக எடுத்து வைத்துக்கூட எளிதாக வளர்க்கலாம். வளர்ப்பில் இறங்குவதற்கு முன், நாட்டு ரக மேல்மட்ட மண்புழுக்களை நம் பண்ணைக்கு எப்படி வரவழைப்பது என்று தெரிந்துகொள்வோம்.

இனிப்புத் தின்பண்டத்தைக் கொடுத்தால் குழந்தைகள் எப்படி நம்மிடம் ஓடி வருவார்களோ... அப்படித் தேவையான உணவைக் கொடுத்தால், மேல்மட்டப் புழுக்கள் நம் பண்ணைக்கு ஓடி வந்துவிடும். கார்பன் 20-30 பங்கும், நைட்ரஜன் 1 பங்கும் உள்ள உயிர்மக் கழிவுகளை (Organic Matter) மேல்மட்டப் புழுக்கள் விரும்பி உண்கின்றன. ஆனால், உயிர்மக் கழிவுகளில், இந்த விகிதத்தைக் எப்படிக் கொண்டு வருவது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு வாளியில் 20 லிட்டர் தண்ணீர் எடுத்து, அதில் அரைக்கிலோ வெல்லம், அரைக்கிலோ சாணம் ஆகியவற்றைக் கரைத்துக் கொள்ளுங்கள். இக்கரைசல்தான் மண்புழுக்களுக்கான இனிப்புத் தின்பண்டம். இந்தக்கரைசலை உங்கள் பண்ணையில் எங்கு மண்புழுக் கட்டிகளைப் பார்க்கிறீர்களோ... அந்தப் பகுதியில் நன்றாக ஈரமாகும் வரை ஊற்றி, சிறிது வைக்கோல் அல்லது இலை சருகுகளைப் பரப்பி, சாணம் அல்லது வறட்டியை வைத்துச் சணல் சாக்கு போட்டு மூடிவிடுங்கள். இதன்மீது வெறும் தண்ணீரைத் தினமும் தெளித்து வாருங்கள். 20-25 நாள்களுக்குப் பிறகு சாக்கைத் தூக்கிப் பார்த்தால், அங்கே நிறைய நாட்டு ரக மேல்மட்ட மண்புழுக்கள் இருப்பதைப் பார்க்கலாம். மாட்டை எப்படி ‘பா பா’ என்று கூப்பிட்டு அழைத்து வருவோமோ, அதுபோல இந்த முறையைப் பின்பற்றி, மேல்மட்டப் புழுக்களை ‘வா, வா’ என்று உங்கள் பண்ணைக்கு அழைத்து வந்துவிடலாம். அவற்றைக் கொண்டு மண் நலனைக் காப்பதற்கான பயணத்தில் முதலடியை எடுத்து வைக்கலாம்.

எந்த மண்ணில் மண்புழுக் கட்டிகள் இருக்கின்றனவோ, அங்குதான் மேலே சொன்ன முறை பலன்தரும். ஒருவேளை நம் நிலத்தில் மண்புழுக் கட்டிகளே இல்லையென்றால், அந்தப் பகுதியைச் சார்ந்த நாட்டுரக மேல்மட்ட மண்புழுக்களை வெளியிலிருந்து கொண்டு வந்து மண்ணில் விட்டுப் பராமரித்து வளர்க்க முடியும். உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள நிலங்களில், இதைப் பரிசோதனை முறையில் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளோம்.

மூன்று வகைப் புழுக்களில் அடிமட்டப் மண்புழுக்களை அடக்கி வளர்ப்பது முடியாத காரியம். ஏனெனில் அடிமட்டப் புழுக்கள் மண்ணுக்குள் நகர்ந்துகொண்டே இருக்கும். மேல்மட்டப் புழுக்களையும், நடுமட்டப் புழுக்களையும் தாராளமாக நாம் வளர்க்கலாம். அவற்றை வளர்ப்பதில் எந்தச் சிரமும் இல்லை. ‘என்ன இவர் மாடு வளர்ப்பதைப்போல, மண்புழுக்கள் வளர்ப்பு பற்றிப் பேசுகிறாரே’ என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால், மேல்மட்டப் புழுக்களையும், நடுமட்டப் புழுக்களையும் நாம் எளிதாக வளர்க்கலாம், அதன் மூலம் மண் நலத்தைக் காக்க முடியும் என்பதுதான் உண்மை.

‘ஐயா, எங்களுக்கு ஆம்பள மண்புழு எது, பொம்பளை மண்புழு எது?னு கூடத் தெரியாது. நீங்க என்னடான்னா அதை வளர்க்கறதப் பத்தி பேசறீங்களே’ என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. மண்புழுக்களை எப்படி வளர்ப்பது என்று மூளையைக் கசக்கும் முன், அவற்றைப் பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்வோம் வாருங்கள். மண்புழுக்களில் ஆண்புழு, பெண்புழு என்ற வேறுபாடு கிடையாது. ஒவ்வொரு மண்புழுவிலும் ஆண், பெண் உறுப்புகள் இரண்டுமே இருக்கும். அப்படியானால், அவை தானாகவே உறவு கொண்டு கருத்தரிக்குமா (Self Fertilisation) என்றால் இல்லை. மண்புழு கருத்தரிக்க அதற்கு இணை தேவை. அதனால், நம் வயலில் வெறும் நாலைந்து புழுக்கள் இருந்தால்கூட அவற்றுக்குப் பிடித்த உணவுகளைகொடுத்து... அவை வாழ்வதற்கான சூழலை உருவாக்கினால், அவை ஒன்றுடன் ஒன்று கலவி செய்து தாமாகவே இனப்பெருக்கம் செய்துகொள்ளும்.

ஏற்கெனவே நூற்புழுக்களுக்கும், மண்புழுக்களுக்கும் உள்ள வித்தியாசம் குறித்துச் சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். உடலில் மோதிரம் மோதிரமாக வளையங்கள்
(Segments) இருந்தால், அவை மண்புழுக்கள் என்று சொல்லியிருந்தேன் இல்லையா? மண்புழுவின் முன் பகுதியில் இருக்கும் சற்றே பெரிய மோதிரத்தை வைர மோதிரம் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த வைர மோதிரத்துக்குக் கிளைடெல்லம் (Clitellum) என்று பெயர். இப்பகுதியில்தான் கருமுட்டைகள் உருவாகின்றன.

இணை சேரும் மண்புழுக்கள் தலைப்பகுதி எதிரெதிராக இருக்குமாறு ஒட்டிப்படுத்துக் கொள்ளும். இந்தச் சமயத்தில் ஒரு புழுவிலிருந்து மற்றொரு புழுவுக்கு விந்தணுக்கள் பரிமாறிக்கொள்ளப்படும். அதாவது ‘அ’, ‘இ’ என்ற இரண்டு புழுக்கள் இணை சேர்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில், ‘அ’ புழுவிலிருந்து ‘இ’ புழுவுக்கும், ‘இ’ புழுவிலிருந்து ‘அ’ புழுவுக்கும் விந்தணுக்கள் பரிமாறப்படுகின்றன. விந்தணுக்களை வாங்கிக்கொண்ட பின், இரண்டு புழுக்களும் விலகிவிடும். கிளைடெல்லம் பகுதிக்குச் சற்றுத் தள்ளி முன்பகுதியில் உள்ள சிறிய துளைகளில் இணை சேரும்போது பெற்ற விந்தணுக்கள் சேமிக்கப்பட்டிருக்கும். கருமுட்டைகளும், விந்தணுக்களும் தயாரானவுடன், கிளைடெல்லம் பகுதியைச் சுற்றி உறையைப் போலக் கக்கூன் (Cacoon) எனப்படும் புழுக்கூடு உருவாகிறது. புழுக்கூடு உருவான பிறகு, மண்புழு தன்னுடலைப் பின்னோக்கி இழுக்கும். வைர மோதிரத்தை, விரலிலிருந்து மெதுவாகக் கழற்றுவதைப்போல இது நடக்கும். புழு தன்னுடைய உடலைப் பின்னோக்கி இழுக்கும்போது, கிளைடெல்லம் பகுதியிலுள்ள கருமுட்டைகளும், அதற்குச் சற்று முன்னுள்ள துளைகளிலிருந்து விந்தணுக்களும் கக்கூனில் கொட்டப்படும்.

கக்கூனிலிருந்து புழு தன்னை முழுமையாக வெளியே இழுத்துக்கொண்டவுடன், கக்கூன் நிலத்தில் விழுந்து அதன் வாய் மூடிக்கொள்ளும். கக்கூன் சிறியதாக மஞ்சள் நிறத்தில், எலுமிச்சை வடிவில் இருக்கும். இதில்தான் கருமுட்டைகளும், விந்தணுக்களும் ஒன்று சேர்ந்து மண்புழுக்கள் உருவாகின்றன. கக்கூன்கள், நிலத்தில் விழுந்த இரண்டு வாரங்களில், அவற்றிலிருந்து புழுக்கள் வெளியாகி எந்தத் துணையுமின்றிப் பெரிய புழுக்களைப்போலச் செயல்படத் தொடங்கிவிடும்.

ஒரு கக்கூனில் 1 புழு முதல் 5 புழுக்கள் உருவாகும். இந்தக் குட்டிப் புழுக்கள் வெளிவந்து 4-6 வாரங்களில் பருவத்துக்கு வந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிடும். அதாவது கிளைடெல்லம் உருவாகிவிடும். அதேபோல், இனச்சேர்க்கையின்போது, கிளைடெல்லத்தை இழந்த பெரிய புழுக்களில், மீண்டும் கிளைடெல்லம் உருவாகிவிடும். ஒரு பருவத்தில், ஒரு புழு 4 முதல் 10 கக்கூன்களை உருவாக்கலாம். மண்ணில் ஈரப்பதம் இருக்கும் சூழல்களில்தான் கக்கூனிலிருந்து குட்டிப் புழுக்கள் வெளிவரும். ஈரப்பதம் இல்லையெனில், அதுபோன்ற சூழல் உருவாகும் வரை, ஒரு சில கக்கூன் காத்திருக்கும். எப்போதுமே பாதுகாப்பற்ற உயிரினங்கள் அதிக குட்டிகளையும்; பாதுகாப்பாக உள்ள உயிரினங்கள் குறைவான குட்டிகளையும் உருவாக்குவது இயற்கையின் விதி. மேல்மட்டப் புழுக்கூடுகள் பூரான், எலி, பாம்பு, பறவைகள்... எனப் பல உயிரினங்களால் உடையும் அபாயமும், புழுக்கள் உண்ணப்படும் அபாயமும் உள்ளதால், மண்புழுக்கள் அதிக கருமுட்டைகளை உருவாக்குகின்றன.

ஒவ்வொரு கருமுட்டையிலும், 2-3 குட்டிப் புழுக்கள் வளரும். நடுமட்டப் புழுக்களும் மண்ணுக்கு வெளியே வரும்போது பிற உயிரினங்களால் உண்ணப்படும் அபாயம் இருப்பதால், மேல்மட்டப் புழுக்களைவிடக் குறைவாகவும், ஆனால் ஓரளவு அதிகமான கருமுட்டைகளையும் உருவாக்குகின்றன. அடிமட்டப் புழுக்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதைப்போல, ஒரேயொரு முறைதான் கருமுட்டையை உருவாக்கும். அம்முட்டையிலிருந்து நிச்சயம் ஒரு குட்டிப் புழு வெளி வந்துவிடும். பிற உயிரினங்களிடமிருந்து அதற்குப் பாதிப்பு எதுவும் இருக்காது.

சரி, இப்படி வெளிவந்து வளர்ந்துவிட்ட மூன்று வகைப் புழுக்களையும் எப்படி அடையாளம் காண்பது. அதிகச் சுறுசுறுப்பாகவும், கொஞ்சம் அடர் நிறத்திலும் இருப்பவை மேல்மட்டப் புழுக்கள். இவற்றைக் கையில் தொட்டாலே, ஸ்பிரிங் போலச் சுருளும். அந்த அளவுக்கு அவை அதிக உணர்ச்சி கொண்டவை. பறவை கொத்த வந்தாலோ, பிற உயிரினங்கள் தன்னை உண்ண வந்தாலோ, அவற்றிடமிருந்து தப்பிக்க வேண்டுமல்லவா... அதனால்தான் அவை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. ‘வெயில்ல போகாதே, கறுத்துடுவ’ என்று நாம் குழந்தைகளிடம் சொல்கிறோம். ஆனால், மேல்மட்டப் புழுக்களுக்கு வேறு வழியில்லை. அவை வெப்பமும், சூரிய ஒளியும் இருக்கும் சூழலில் இருப்பதால்தான் கறுத்து அடர் நிறத்தில் உள்ளன. நடுமட்டப் புழுக்கள் ஓரளவு நீளமாகவும், பழுப்பு நிறத்திலும் இருக்கும். அடிமட்டப் புழுக்கள் சூரியஒளி படாததால் வெளிர் நிறத்திலும், பார்ப்பதற்கு அளவில் கொஞ்சம் பெரியதாகவும் இருக்கும்.

‘அதெல்லாம் சரி ஐயா, எந்தப் புழு என்னுடைய வயலில் இருந்தால் நல்லது’ என்று கேட்டால்... மூன்று வகைப் புழுக்களில் எந்தப் புழு வந்தாலும், மண்ணின் வளமும், நலமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வயல் செழிப்பாகிவிடும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் வயலில் மண்புழுக்களுக்குத் தேவையான உயிர்மக் கழிவுகள், மட்குகள் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுதான். செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா..?

-முயற்சி தொடரும்.

இயற்கைப் பண்ணையத்தில் அசத்தும் அல்லிஸ்!

மயிலாடுதுறைக்கு அருகில் இலந்தங்குடியில் இருக்கும் அல்லிஸ் பகே (Allis Pake), ஆஸ்திரேலியாவில் விவசாயம் மற்றும் வணிகம் படித்துவிட்டு, இங்கு வந்து இயற்கை விவசாயம் செய்பவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருடன் நான்கைந்து வருடங்கள் ஒன்றாகப் பயணித்தவர். கடந்த 12 வருடங்களாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் இவரின் பண்ணைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்றிருக்கிறேன். நெல், காய்கறிப் பயிர்களுடன் ஆடு, மாடு, நாட்டுக்கோழி மற்றும் மீன் வளர்ப்பிலும் இவர் ஈடுபட்டிருந்தார். இப்போது நெல்லுக்குப் பதிலாகத் தீவனப் பயிர்களில் கவனம் செலுத்துகிறார்.

வாய்மடையில் குழிகளை வெட்டி, இலை தழைகள், மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கை, காய்கறி, பழக்கழிவுகள் ஆகியவற்றைக் குழியில்போட்டு, அவற்றின் வழியே நீரைப் பாய்ச்சுகிறார். மீன்குளத்தில் நீரை மாற்றும்போது ஏற்கனவேயுள்ள நீரை பம்ப் செய்தும் நிலங்களுக்குப் பயன்படுத்துகிறார். இந்த முறைகளால் அவர் பண்ணையின் மண் நலமாக உள்ளது. மண்வாசனையும், மண் நலனும் சிறப்பாக உள்ளன. பயிர்களும் செழித்து வளர்கின்றன. பத்து ஏக்கரில் விரிந்திருக்கும் இவர் பண்ணையில், ஒருபக்கம் கால்நடை வளர்ப்பு, இன்னொரு பக்கம் காடுவளர்ப்பு, காய்கறிகள் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இடுபொருள்கள் தயாரிப்பு என பல வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்துடன், IFORA (Integrated Farm and Organic Research Academy) என்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் இவர் நடத்துகிறார். இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிற்சிகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை வேளாண்மைக்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்கள் என ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.

“பருவநிலை மாற்றமுள்ள சூழலில், கரும்பு மற்றும் நெல் போன்ற பணப்பயிர்களை மட்டுமே நம்பியிருப்பதில் பலனில்லை. நாட்டு மாட்டுப் பாலிற்கும், நாட்டுக்கோழி முட்டைக்கும், நாட்டுரக ஆட்டிற்கும் நல்ல விலை கிடைக்கிறது. தீவனப்புல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் கால்நடைகளை எளிதில் வளர்த்துவிடலாம். தண்ணீர்ப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒருங்கிணைந்த பண்ணையம்தான் எதிர்காலத்தில் பலனளிக்கும்” என்று சொல்லும் இவர்,

இயற்கை விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் கடன் சுழலில் அவர் சிக்குவதில்லை. தற்சார்பு வாழ்க்கை நடத்தும் இயற்கை விவசாயிகளை, தன்னம்பிக்கை உடையவர்களாக இயற்கை வேளாண்மை மாற்றுகிறது. இயற்கை வேளாண்மைதான் நம் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

தொடர்புக்கு,
செல்போன்: 94439 20374

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment