Sunday 25 November 2018

``முதல்ல நான் விவசாயி; அதுக்கப்புறம்தான் அமைச்சர்லாம்!" - புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் வயலில் இறங்கி விவசாயம் செய்யும் படங்கள்தாம் தற்போது இணையத்தில் வைரல்.

புதுச்சேரியின் விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான இவர் அமைச்சராகப் பதவி வகித்தாலும் விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால் எந்தவித ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இவரிடம் இருக்காது. அதனால் எவரும் இவரை எளிதில் அணுகி தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். நானும் ஒரு விவசாயிதான் என்று அடிக்கடி சொல்லும் இவர் விவசாயிகளுக்கான பிரச்னைகளை உணர்வுபூர்வமாக அணுகுபவர். விவசாயிகளைப் பாதிப்பது போன்ற சிறு தவறுகள் நடந்தாலும் துறை அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கி விடுவார். பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த தூய்மை இந்தியா சேவையை ஏற்று அதிரடியாக கழிவு நீர் வாய்க்கால்களில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக அந்தப் பணியை விளம்பரம் இல்லாமல் செய்ததால் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பலமுறை இவரின் செயல்பாடுகளை வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார். தீவிர அரசியலில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குச் சொந்தமான வயலில் வேட்டியை மடித்துக்கொண்டு இறங்கிவிடுவார். அப்படித்தான் சமீபத்திலும் அம்பகரத்தூர் கிராமத்தில் இருக்கும் தனது நிலத்தில் மேலாடையின்றி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கினார். நாற்றுப் பறித்துக் கத்தை கட்டிப்போடுவது, தண்ணீர் பாய்ச்சி நிலத்தை சமன்படுத்துவது போன்ற இவரின் படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்தப் படங்களை தனது வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆளுநர் கிரண் பேடி ``பொருத்தமான பதவிக்கு ஏற்ற சரியான நபர் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன்” என்று பாராட்டியிருக்கிறார்.

அமைச்சர் கமலக்கண்ணனிடம் பேசினேன், ``விவசாயம்தான் எனது பிரதான தொழில். நடவு நடுவது முதல் அறுவடை வரைக்குமான பணிகளில் நிலத்தைச் சமன்படுத்துதல் என்பது மிக முக்கியமான ஒன்று. அதைச் சரியாகச் செய்யவில்லை என்றால் இரண்டு மூன்று விதங்களில் நமக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக நிலம் சமன்படுத்தப்படவில்லை என்றால் அதிகமாகத் தண்ணீர் வைப்பது போல ஆகிவிடும். பயிர்கள் ஒருபக்கத்தில் செழுமையாகவும் மறுபக்கத்தில் வளம் குன்றியும் காணப்படும். மேடான பகுதிகளில் களை உண்டாகும். அதேபோல ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் தண்ணீருடன் சேர்ந்து தாழ்வான பகுதியில் இறங்கி தேவைக்கு அதிகமாகச் சேர்ந்துவிடும். அந்தப் பகுதிகளில் அதிகமான வளம் ஏற்பட்டால் பூச்சிகளின் தாக்கமும் ஏற்படும். மொத்தப் பயிர்களையும் அது சேதமாக்கிவிடும். கடந்த முறை குறுவை பயிரிட்டபோது சரியாகச் சமன்படுத்தாததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பகல் முழுவதும் அரசுப் பணியே எனக்குச் சரியாக இருக்கும். அதனால் இரவு நேரங்களில்தான் எனது வயல்களைப் பார்வையிடுவேன். இரண்டு டார்ச் லைட்டுகளுடன் இரவு 10 மணி முதல் விடியற்காலை 3 மணி வரைக்கும் பயிர்களின் நிலை, அவற்றுக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனப் பார்வையிட்டுவிட்டு வந்துவிடுவேன். மறுநாள் காலையில் நிலத்தில் வேலை செய்பவர்களுக்கு போன் செய்து, களைகள் இருக்கும் இடம், தண்ணீர் எங்கே மடைமாற்ற வேண்டும், பூச்சிகள் இருக்கும் பகுதி என அனைத்தையும் அவர்களிடம் சொல்லி சரி செய்யச் சொல்வேன்.

அதற்கு அடுத்த வாரம் நான் செல்லும்போது நான் சொன்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கிறதா என இரவில் சென்று பார்வையிடுவேன். அமைச்சரான பிறகு பகல் நேரத்தில் வயலுக்குச் செல்ல முடிவதில்லை. அப்படியே இருசக்கர வாகனத்தில் சென்றாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வந்துவிடும்படி இருக்கும். சமீபத்தில் நான் வயல்களைப் பார்வையிட்டபோது நிலத்தைச் சமன்படுத்தும் பணி சரியாகச் செய்யப்படவில்லை என்பது போல எனக்குத் தோன்றியது. அதனால் மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் வயலுக்குச் சென்றேன். அப்போது அங்கு தொழிலாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். வரப்பில் நின்று வேலை வாங்கும் வழக்கமான முதலாளி இல்லைங்க நான். தொழிலாளர்களில் ஒருவனாக இறங்கி வேலை செய்யும் விவசாயி. வருடக் கணக்காக இதுதான் என் வழக்கம். இப்போதுதான் நான் அமைச்சர். எப்போதும் நான் விவசாயிதான். அப்படித்தான் அப்போதும் அவர்களுடன் பணியில் ஈடுபட்டேன். அதைத்தான் அங்கு வந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வைரலாகிவிட்டது” என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment