Saturday 3 February 2018

ஆண்டு முழுவதும் வருமானம்... அதிக பாடு இல்லாத அரளி...!

எந்த விசேஷமாக இருந்தாலும் மலர்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக விற்பனை வாய்ப்பு உள்ள பயிர்களில், மலர்களும் முக்கிய இடத்திலிருக்கின்றன. இதனால், மலர் விவசாயிகளுக்கும் குறிப்பிடத்தகுந்த வருமானம் கிடைத்து வருவதால், சமீபகாலமாக மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது!

பொதுவாக, மலர் சாகுபடிக்கு நல்ல தண்ணீர் வளம் இருக்க வேண்டும். என்றாலும், குறைவான தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கும் ஏற்ற மலர்கள் உள்ளன. அவற்றில், முதலிடத்தில் இருப்பது, அரளி. தண்ணீர், பராமரிப்பு... என அனைத்துமே அதிகளவில் தேவையில்லாததால், பலரும் அரளியை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, இயற்கை முறையில் அரளி சாகுபடி செய்து வருகிறார், தருமபுரி மாவட்டம், கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன்.

பொம்மிடி-அரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது, கதிரிபுரம். ஊருக்குப் போகும் சாலையில் பருத்தி, கரும்புத் தோட்டங்கள் அணிவகுக்கின்றன. அருகே உள்ள வயல்களில் கனகாம்பரம், ரோஜா என மலர்ந்து கிடந்த காட்சி, மாயவனின் அரளித் தோட்டத்துக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.

சொல்லிக்கொடுத்த சொந்தம்!

''குடும்பத்துல பாகம் பிரிச்சப்போ... எனக்கும், அண்ணனுக்கும் முக்கால் முக்கால் ஏக்கர் நிலம் கிடைச்சுது. ஒரே கிணத்துலதான் ரெண்டு பேருக்கும் பாசனம். எனக்குச் சொந்தமான முக்கால் ஏக்கர்ல, 10 சென்ட்ல சிவப்பு அரளி, 15 சென்ட்ல வெள்ளை அரளி போட்டுருக்கேன். மீதி நிலத்துல தென்னை மரங்களும், மாட்டுக்கு சோளமும், கொஞ்சம் மல்பெரியும் போட்டுருக்கேன். இது, பூ சாகுபடிக்குப் பேர் போன பகுதி. நிறைய பேர் பூ மூலமாவே பெரிய அளவுக்கு வளர்ந்திருக்காங்க. ஊரைச்சுத்தி கல்வராயன், ஏற்காடு மலைகள் இருக்கறதால எப்போதும் குளிர் காத்து வீசிட்டே இருக்கும். அப்பப்போ மழையும் பெஞ்சுடும்.

வழக்கமா சம்பங்கி, கனகாம்பரம், காக்னா (காட்டுமல்லி அல்லது காக்கரட்டான்), மல்லி, சாமந்தினு போடுவாங்க. நானும் காக்னா, கனகாம்பரம் போட்டிருந்தேன். ஆனா, அதையெல்லாம் பறிக்கறதுக்கு அதிக ஆளுங்க தேவைப்படுவாங்க. அவங்களை வெச்சு பறிச்சு முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். பராமரிப்பும் அதிகம். தண்ணி இல்லேனா செடிகள் தாங்காது. நாலு வருஷத்துக்கு முன்ன நத்தம்மேடுங்குற ஊர்ல இருக்கற சொந்தக்காரங்க, 'அரளிப் பூவை பயிர் செய்யற வேலையும் குறைவு, விலையும் நல்லா இருக்கு’னு சொன்னாங்க. அவங்ககிட்டயே நாத்துகள வாங்கிட்டு வந்து நட்டேன். அதையே ஒட்டுப்போட்டு (பதியம்) செடிகள வளர்த்துட்டுருக்கேன். நூறு சதவிகித அரசு மானியத்துல சொட்டுநீர் போட்டிருக்கேன்.

செலவைக் குறைத்த அமுதக்கரைசல்!

ஒட்டுப்போட்ட செடி மூணு மாசத்துல வளர்ந்துடும். அதுக்குப்பிறகு, செடியிலிருந்து பூ பறிக்க ஆரம்பிச்சுடுவேன். நிறைய பூ பறிச்சதும் தாய் செடியை வெட்டிவிடுவேன். செடி நல்லா வளந்துடுச்சுனா, ஒரு மாசம் வரைக்கும் தண்ணி இல்லேனாகூட தாங்கிடும். எந்த வேலைக்கும் ஆளுங்கள வெக்காம, எங்க குடும்பமே வேலை செஞ்சுடுவோம்'' என்ற மாயவன், அடுத்து சொன்ன விஷயம் அனைவரும் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பாடம். அது-

''ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணிட்டுருந்தேன். பொம்மிடி பக்கத்தில இருக்கிற அருண், இயற்கை விவசாயம், இடுபொருள் தயாரிக்குறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுத்தார். இப்போ, நானே அமுதக்கரைசல தயார் செஞ்சு உபயோகப்படுத்திட்டிருக்கேன். மகசூல் நல்லா இருக்குது. 'இத்தனை நாளா தேவையில்லாம உரத்துக்கு செலவு பண்ணிட்டோமே’னு வருத்தமா இருக்கு.''

இதைத் தொடர்ந்து, அரளி சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார் மாயவன். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

திண்டுப்பாத்தி!

'சாகுபடி நிலத்தில் செழுமையாக தொழுவுரத்தைக் கொட்டி உழுது... திண்டுப்பாத்தி முறையில் பார்களை அமைத்து, வாய்க்கால் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிக்குச் செடி 3 அடி, வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி இருக்குமாறு, லேசாக மண்ணைப் பறித்து செடிகளை நடவு செய்ய வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, வாரம் ஒரு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசலை (10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 கிலோ மாட்டுச் சாணம் (பச்சையானது), ஒரு கிலோ நிலத்து மண்,10 பனம்பழம் அல்லது அரை கிலோ வெல்லம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கலக்கிவிட வேண்டும். 15 நாட்கள் தினமும் கலக்கி வந்தால், அமுதக்கரைசல் தயார்) பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். களைகள் மண்டினால், அவற்றை அகற்ற வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் களைகள் வளராது.

மூன்று மாதங்களில் அறுவடை!

நடவு செய்த மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். செடியின் அடிப்பகுதியில் இருக்கிற வளர்ந்த கிளைகளை ஒடித்து, நிலத்தில் பதியம் போட்டு புதிய செடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாய் செடியில் பறிப்பு முடியும்போது, பதியம் போட்ட செடிகள் வளர்ந்து விடும். தாய் செடியை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக வளர்ந்த செடியிலிருந்து பூக்களை பறிக்கலாம். மற்ற பூக்களைப் போலவே மொட்டாக இருக்கும்போதே பறித்துவிட வேண்டும். செடி நம்மை விட உயரமாக இருப்பதால், நின்று கொண்டே பறிக்கலாம். பனிக் காலம் (டிசம்பர் மாதத்தில்) தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் பூ பறிக்கலாம்.'

மாதம் 6 ஆயிரம் ரூபாய்!

சாகுபடிப் பாடம் முடித்த மாயவன், ''அரளி போட்டு மூணு வருஷம் ஆச்சு. சொந்தக்காரங்ககிட்ட இருந்து சும்மாவே நாத்து வாங்கிட்டு வந்துட்டேன். அதனால, அதுக்கு செலவு ஏதும் இல்ல. இதுக்கு பெருசா பராமரிப்புச் செலவும் கிடையாது. மத்த வேலைகள வீட்டுல உள்ள நாங்களே பார்த்துக்கிறோம். அதனால, செலவுனு தனியா ஏதும் கிடையாது. 25 சென்ட்ல தினமும் 3 கிலோவுல இருந்து 4 கிலோ வரைக்கும் பூ கிடைக்குது. ஒரு மாசத்துக்கு சராசரியா 100 கிலோ பூ கிடைச்சுடும். தினமும், சேலம் பூ மார்க்கெட்டுக்கு இங்கயிருந்து வண்டி போகுது. அதுல போட்டு அனுப்பிடுவேன். சீஸனைப் பொருத்து, ஒரு கிலோ அரளி... 40 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விலை போகும். வெள்ளை அரளியவிட, சிவப்பு அரளிக்கு கிலோவுக்கு 10 ரூபா அதிகமா கிடைக்கும். சராசரியா கிலோ 60 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, 100 கிலோ பூவுக்கு மாசம் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. 25 சென்ட் நிலத்துல இது நல்ல வருமானம் தானே!'' என்றபடியே, அடுத்த வேலைகளில் மூழ்கினார்.

சீஸன் சமயத்தில் கிலோ 150 ரூபாய்!

அரளிக்கு இருக்கும் வரவேற்பு குறித்து பேசிய சேலம், வ.உ.சி மலர் சந்தையில் வியாபாரம் செய்துவரும் நாகராஜ், ''சந்தைல மல்லிக்கு அடுத்த இடம் அரளிக்குதான். இங்க 200 கடைகளுக்கு மேல இருக்கு. எந்த கடையில வேணும்னாலும் விவசாயிகள் கொண்டு வந்து போடலாம். அன்னிக்கு விலையில 10% கமிஷன் எடுத்துட்டு, ரொக்கமா கொடுத்திடுவோம். இப்போ ஒரு நாளைக்கு 10 டன் அரளி வருது. குறிப்பா, பனைமரத்துப்பட்டியிலிருந்து அதிகமாக வருது. அதுக்கடுத்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பக்கமிருந்து வரும். இங்கருந்து சென்னை, பெங்களூருக்கு அதிகமா போகுது. வருஷம் முழுக்க வரத்து இருக்கும். சீஸன்ல கிலோ 150 ரூபாய் வரைக்கும்கூட விலை போகும். விடியற்காலை 3 மணிக்குத் தொடங்கி, சாயங்காலம் 5 மணி வரைக்கும் சந்தை இருக்கும்'' என்றார்.

கூட்டணி அமைத்தால், கூடுதல் லாபம்!

சென்னை, கோயம்பேடு மொத்த பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கயச் செயலாளர் மூக்கையா என்கிற ரொண்டியன், ''திண்டுக்கல், சேலம் பகுதி யிலிருந்து கோயம்பேட்டுக்கு அரளி வருது. ரெகுலரா வாங்க றதுக்கு ஆட்கள் இருக்காங்க. ஆனா, விவசாயிங்க யாரும் நேரடியா கொண்டு வந்து விக்க மாட்டேங்கறாங்க. ஏஜென்ட் மூலமாத்தான் வருது. கோயம்பேடுல என்ன விலை இருந்தாலும், விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலையைத்தான் ஏஜென்டுங்க கொடுப்பாங்க. விவசாயிகள் பலரும் ஒண்ணா சேர்ந்து, பூக்கள சேகரிச்சு, ஒருத்தர் மூலமா கொண்டு வந்து வித்தா... கூடுதல் லாபம் பார்க்க முடியும்'' என்று கூட்டணி ஆலோசனை சொன்னார்.

தொடர்புக்கு :
மாயவன், செல்போன்: 94425-23361
ரொண்டியன்: 93810-14397


Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete