Wednesday 21 February 2018


மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!


வெளிநாடுகளில் ‘ஹார்ட்டிகல்ச்சர் தெரப்பி’ ( Horticultural therapy ) என்ற முறை பிரபலமாகி வருகிறது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தில் தினமும் சில மணி நேரங்கள் செல விட்டால் உடலும், உள்ளமும் உற்சாகம் அடையும் என்று கண்டுப்பிடித்துள்ளார்கள்.

நாகரிகம் என்ற பெயரில், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். இதனால், நமக்கும் செடி, கொடிகளுக்குமான தொடர்புகள் அறுந்துவிட்டன.

இதன் பலனாகத்தான் மன அழுத்தம் தொடங்கி பல்வேறு வகையான நோய் சிக்கலுக்கு உள்ளாகிறோம். மருந்துகள் கொடுத்து சில நோய்களை குணப்படுத்த முடியும். சிலவற்றுக்கு மருந்து தேவைப்படாது, சூழ்நிலை மாற்றம் மூலமே அவை குணமாகும். ஆக, என்ன பாதிப்பு இருந்தாலும், தினமும் சிறிது நேரம் செடி, கொடிகளுடன் செலவிட்டால் நோய், நொடி அண்டாது என்பதுதான் ‘ஹார்ட்டி தெரப்பி’யின் ஆதாரம்.

இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்த்தால், செடி, கொடிகளுடன் கிராமத்தில் உள்ள மனிதர்களை காட்டிலும், கான்கிரீட் காட்டில் வாழும் நகர வாசிகளுக்கு உடல் பாதிப்பு அதிகமாக இருப்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது, உங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தவிட்டால், அதில் என்ன வகையான செடி, கொடிகளை வளர்க்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அழகு செடிகளைக்காட்டிலும், காய்கறிகளும், கீரைச்செடிகளும் கூட உங்கள் உள்ளத்துக்கு உற்சாகம் அளிக்க கூடியவைதான். இப்படி காய்கறித்தோட்டம் அமைப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதாவது, உடலுக்கும் நன்மை, காய்கறி செலவும் குறையும்.

இதை மனதில் கொண்டுதான், தமிழக அரசு மாடித்தோட்டம் அமைக்க இப்போது மானியம் கூட கொடுத்து வருகிறது. நீங்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் கூட மாடித்தோட்டம் போடலாம். ஏன் தரையில் தோட்டம் போட சொல்லாமல், மாடியில் தோட்டம் போடச் சொல்கிறார்கள் என்று கேள்வி எழுகிறதுதானே? இதற்கு முக்கிய காரணம், ஒன்று இடநெருக்கடி. மற்றொன்று தரையில் உள்ள செடி களுடன், மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளை ஒப்பிட்டுப்பார்த்தால், பூச்சி-நோய் தாக்குதல் சுமார் 70 % குறைவு. இதனால், காய்கறி வளர்ப்பில் அனுபவம் இல்லாதவர்கள் கூட, எளிதாக செடிகளை வளர்க்க முடியும்.

இதுகுறித்து திருவான்மியூர் உதவித் தோட்டக்கலை அலுவலர் டி.செந்தில்குமரன், சொல்கையில், ‘‘தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நகர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்சமயம் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகர் பகுதியில் மட்டுமே செயல்படும் இத்திட்டம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வீட்டின் மாடி மற்றும் பால்கனி பகுதிகளில் எளிய முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துகிறோம். பத்து வகையான காய்கறிகளை உற்பத்தி செய்ய தேவையான 2,650 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் அடங்கிய தளை ஒன்றினை (KIT) 50 சதவிகித மானிய விலையில் 1,325 ரூபாய்க்கு வழங்குகிறோம். ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க, 150 சதுர அடி இடம் போதுமானது. அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 தளைகள் வரை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு தளையிலும் தென்னை நார்க்கழிவு கட்டி, பாலித்தீன் பை, காய்கறி விதைகள், பாலித்தீன் விரிப்பு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சணக்கொல்லி, இயற்கை வேம்பு பூச்சிக்கொல்லி என்று 13 விதமான பொருட்கள் இருக்கும். மண்ணைவிட எடைகுறைந்த, அதேசமயம் நீர்ப்பிடிப்பு அதிகம் கொண்டது என்பதால்தான், தென்னை நார்க்கழிவை செடிகள் வளர்ப்பதற்கான ஊடகமாகக் கொடுக்கிறோம்.

செடிகளை வளர்க்க நாங்கள் வழங்கும் பாலித்தீன் பைகள் எடை குறைந்த மற்றும் யு.வி.கதிர்களைத் தாங் கும் திறன்கொண்டதாக இருக்கும். காய்கறி விதைகளில் கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்த வரை, செடிஅவரை, முள்ளங்கி, சிறுகீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய விதைகள் மூன்று பருவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளையே, மாடித் தோட்டங்களில் பயன்படுத்த ஆலோசனை வழங்குகிறோம்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகர மக்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

இருப்பிடச் சான்று நகலுடன், எங்கள் தோட்டக் கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கப்படும்.

வாடகை வீட்டில் வசிப்பவர்களும்கூட மானியம் பெற்று மாடித்தோட்டம் அமைக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. இணையம் மூலமும் விண்ணப்பிக்கலாம் ’’ என்றார்.

இணையதள முகவரி: http://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit
தொலைபேசி: 04425554443. செல்போன்: 9841317618

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete