Thursday 1 February 2018

பள்ளத்தில் மீன் வளர்ப்பு… மேட்டில் காய்கறிச் சாகுபடி!

கோப்பையில் ஆறிப்போன தேநீரில் ஆங்காங்கே ஆடை படர்ந்து கிடப்பதுபோல, வங்காள விரிகுடா கடலில் பசுமைத் திட்டுகளாகப் படர்ந்து கிடக்கின்றன அந்தமான் தீவுப்பகுதிகள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகான அந்தத் தீவுக்கூட்டங்களுக்குள், பல ஆபத்துகளும் மறைந்திருக்கின்றன. கடலுக்கு நடுவே பசுமைக் கூடாரத்தை அமைத்துள்ள இயற்கை அன்னை, அந்தக் கூடாரத்துக்குள் கோடிக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்து வருகிறாள். சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில்… அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொன்மையை, அவற்றின் அமைதியை அழிக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனைக்கும் இடையில், அத்தீவுகளில் இயற்கை விவசாயம் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகிறது.

அந்தமானில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்கை வள மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் வேல்முருகனுடன், தீவில் வசித்துவரும் இயற்கை விவசாயிகளைச் சந்திக்கப் பயணமானோம்.

“தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகளுக்குச் சிக்கல். அந்தமானில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் சிக்கல். அந்தமான் விவசாயிகளில் பெரும்பான்மையோர், இன்னும் முழுமையான இயற்கை விவசாயத்துக்கு மாறவில்லை. சுனாமியின் பாதிப்பிலிருந்து தங்கள் நிலங்களை மீட்டு, தற்போதுதான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறார்கள். இப்போது இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்திவருகிறோம். அதன் விளைவாக, ரசாயனங்களைக் குறைத்துக்கொண்டு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் விவசாயிகள். விரைவில் அந்தமானில் முழுமையான இயற்கை விவசாயம் சாத்தியமாகும் சூழல் உருவாகிவிடும்” என்று வேல்முருகன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சுகிர்தத்தா என்பவரின் தோட்டத்தை அடைந்துவிட்டோம்.

சுனாமியின் பாதிப்பு இன்னும் முழுமையாக அகலாத நிலையில்… கீரை, காய்கறி என விளைவித்துவருகிறார் சுகிர்தத்தா. நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசியவர்…

“எனக்கு, இங்கு ஐந்து பிகா (ஒன்றரை ஏக்கர்) நிலம் இருக்கிறது. என் அப்பாவின் சொத்தான பத்து பிகா நிலத்தை, நானும் என் சகோதரனும் இரண்டாகப் பிரித்துக்கொண்டோம். முன்பு அகலமாக இருந்த நிலம், பாகப்பிரிவினைக்குப் பிறகு, நீளமாக மாறிவிட்டது. இதனால், ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முன்வைத்த தொழில்நுட்பங்களை உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை. நிலமானது கடலோரத்தில் இருப்பதால், கடல் நீர் அடிக்கடி நிலத்துக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலத்தில் வெண்டைக்காய்ச் சாகுபடி செய்வேன். ஏனென்றால், அந்த நேரத்தில் வெண்டையைத் தவிர வேறு காய்கறிகளை உற்பத்திசெய்ய முடியாது.

அதேசமயம், அந்த சீசனில் சந்தைக்கு வரும் காய்களுக்கு, நல்ல விலையும் கிடைக்கும். மற்ற காலங்களில் பீன்ஸ், லோபியா (தட்டைப்பயறு), கத்திரி, தக்காளி ஆகியவற்றைச் சாகுபடி செய்வேன். இதோடு ‘நாலி பாஜி’ எனப்படும் ஒரு வகையான கீரையையும் (இது சர்க்கரைவள்ளிக் கிழங்குக் கொடிபோல இருக்கிறது) சாகுபடி செய்கிறேன். இந்தக் கீரை அதிகத் தண்ணீரிலும் நன்கு வளரும். ஒரு கட்டுக் கீரை பத்து ரூபாய் வரை விற்பனையாகிறது.

வீட்டின் முன்பாகச் சிறிய கொட்டகை அமைத்து, பிராய்லர் கோழிகளை வளர்க்கிறேன். இந்தக் கோழிகளின் எச்சத்தைக் காய்கறிகளுக்கு உரமாகப் பயன்படுத்துகிறேன். சுனாமிக்குப் பிறகு நான் விவசாயத்தைத் தொடங்கியபோது, ஆண்டு வருமானம் இருபதாயிரம் ரூபாயாகத்தான் இருந்தது. நிலத்தைச் சீர் செய்யும் பணிக்கே நேரமும் பணமும் செலவாயின. நிலத்தில் நீர் தேங்கி நின்றதால் காய்கறிகளைச் சாகுபடி செய்யவே முடியவில்லை.

அந்த நேரத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வந்த வேல்முருகன் சார் மற்றும் அவரது சகாக்கள் கொடுத்த ஆலோசனைக்குப் பிறகுதான் முழுமையாகச் சாகுபடிசெய்ய முடிந்தது. என் நிலத்தில் பிரச்னையாக இருந்தது தேங்கிநின்ற தண்ணீர்தான். ஆனால், அதை வைத்தே ஒரு வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நிலத்தில் அகலமான பள்ளம் எடுத்து, அந்த மண்ணை அருகில் கொட்டினோம். இப்போது, என்னுடைய நிலம் மேடு, பள்ளம் எனக் காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பள்ளத்தில் இருக்கும். மேட்டில் தண்ணீர் நிற்காது. எனவே, மேட்டுப்பகுதியில் காய்கறி விவசாயத்தை, எந்த இடையூறும் இல்லாமல் செய்ய முடிகிறது. பள்ளத்தில் மீன்கள் வளர்க்க முடிகிறது.

கட்லா, ரோகு, மிர்கால் போன்ற மீன்களை வளர்க்கிறேன். பள்ளத்தின் கரைகளில் தென்னை, பாக்கு மரங்களைச் சாகுபடி செய்கிறேன். நான் இன்னமும் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறவில்லை. வேல்முருகன் சார், இயற்கைக்கு மாறும்படிச் சொல்லி, ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது அடியுரமாகக் கோழி எருவைப் பயன்படுத்துகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான முயற்சியில் இருக்கிறேன்” என்ற சுகிர்தத்தா, “வேலைக்கு ஆள்களை வைத்துக் கொள்வதில்லை. நானும் என் குடும்பத்தினருமே விவசாய வேலைகளைச் செய்துகொள்கிறோம். தற்போது இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்திலிருந்து, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கிறது. எங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைத் தோட்டத்திலிருந்தே எடுத்துக்கொள்வதால், குடும்பத்துக்கு இந்தத்தொகை போதுமானதாக இருக்கிறது. வாரந்தோறும் விவசாயத்திலிருந்து வருமானம் கிடைப்பதால், கையில் எப்போதும் பணம் இருக்கிறது” என்றார்.
சுகிர்தத்தாவின் வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் நிற்கின்றன. அவற்றில் காய்த்திருக்கும் தேங்காய்கள், பொள்ளாச்சிக் காய்களைவிட அளவில் பெரிதாக இருக்கின்றன. தென்னைக்கு இடையில் ஊடோடிக் கிடக்கின்றன பாக்கு மரங்கள். அந்தமான் விவசாயத்தின் அடிப்படையாக இருப்பவை தென்னையும் பாக்கும்தான். ‘ஒரு ஏக்கர் நிலத்தில் தென்னையும் பாக்கும் இருந்தால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருமானம் கிடைத்துவிடும்’ என்கிறார் வேல்முருகன்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete