Wednesday 14 February 2018

வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு பாகம் - 10

வெள்ளாட்டினங்களும், அவற்றை தேர்வு செய்யும் முறைகளும் :

1. வெள்ளாட்டு இனங்கள்
2. தமிழக வெள்ளாட்டு இனங்கள்
3. வெளிநாட்டு இனங்கள்
4. வெள்ளாடுகளைத் தேர்வு செய்தல்
5. வெள்ளாடுகளை ஆண்டுக்கு இருமுறை குட்டி போடச் செய்வதற்கான வழிமுறைகள்
6. ஆடுகளை சினைப் பருவத்திற்குக் கொண்டு வருதல்
7. சினைப்பருவத்தின் அறிகுறிகளை கண்டறிதல்
8. தீவன மேலாண்மை
9. வெள்ளாடுகளில் சினைப் பருவ ஒருங்கிணைப்பு செய்தல் (Oestrus Synchronization)
10. சினைப் பரிசோதனை செய்தல் (Pregnancy Diaghosis)

வெள்ளாடுகள், ஏழைகளின் நடமாடும் வங்கி என்று பெயரெடுத்து அவர்களுக்கு வறுமையைப் போக்கும் வாழ்வாதாரமாக விளங்கிவருகிறது. தற்பொழுது கிராமப்புற ஏழை விவசாயிகள் முதல் நடுத்தர விவசாயிகள் வரை வெள்ளாடு வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். இறைச்சிக்காக (உடல் எடைக்காக) வளர்க்கப்படும் வெள்ளாடு இனங்களான ஜமுனாபாரி, பீட்டல், சிரோகி போன்றவைகள் தற்பொழுது ஆங்காங்கே வளர்க்கப்பட்டு வந்தாலும், இனத்தின் பண்புகளைக் கொண்ட நாட்டு வெள்ளாடுகளே பெருமளவு இலாபகரமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

நாம் கிராமங்களில் உள்ள தோட்டங்களில் வெள்ளாடுகளை ஒன்றிரண்டு என்று வாங்கி வருகின்றோம். ஆனால், மொத்தமாக அதிக எண்ணிக்கையில் நாட்டு வெள்ளாடுகளை வாங்குவதற்கு சில நேரங்களில் அதிகப்படியான பகுதிகளுக்கு அலைய வேண்டி உள்ளது. இவற்றைத் தவிர்ப்பதற்காக வெள்ளாடுகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் கிராமப்புற விவசாய உற்பத்தியாளர்களும், வெள்ளாட்டு வியாபாரிகளும் ஒருங்கிணைந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வெள்ளாட்டுச் சந்தைகளை நடத்தி வருகின்றனர். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வெள்ளாட்டுச் சந்தை கூடுகிறது.

இவ்வெள்ளாட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் மட்டுமின்றி செம்மறியாடுகளும் அதிகளவில் விற்பனைக்காக வருகின்றன. சந்தையில் மேலும், பரமத்தி, கன்னிவாடி, மணல்மேடு (கரூர்), பாளையம் (கரூர்), பல்லடம் ஆகிய இடங்களில் வெள்ளாட்டுச் சந்தைகள் சிறியளவில் நடைபெற்று வருகின்றது. ஆட்டுச் சந்தைக்கு அதிகப்படியான ஆடுகள் வரும் பொழுது சில நேரங்களில் குட்டிகளுக்கு அதிக தண்ணிரினை ஊற்றியோ, குடிக்க வைத்தோ அல்லது வறண்ட கொள்ளு மற்றும் சோளப் பயிர்களை மேய வைத்து உடனடியாகத் தண்ணிர் ஊற்றி உடல் எடையை அதிகப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதும் உண்டு. எனவே, ஆடுகளை வாங்கும் பொழுது பின்வரும் சில பண்புகளை நினைவில் கொண்டு சிறந்த வெள்ளாடுகளை வாங்க வேண்டும்.

வெள்ளாட்டு இனங்கள் :

நம் நாட்டு இனங்கள் :

ஜமுனாபாரி :

இந்த இன ஆடுகள் உத்திரபிரதேச மாநிலம் எட்டாவி மாவட்டத்தைச் சேர்ந்தது. நமது நாட்டின் இனங்களிலேயே மிகவும் பெரியதும், கம்பீரமான தோற்றத்துடனும் காணப்படும். காதுகள் பெரியதாக, மடிந்து தொங்கிக் கொண்டிருக்கும். வெள்ளை நிறத்துடன் முகமும், கழுத்து இளம் கருஞ்சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. உடலில் சிவப்புநிற அல்லது கருப்பு நிறப்புள்ளிகளும் இருக்கலாம். இவைகளின் பின்னந்தாடைகளில் அடர்த்தியான உரோமம் காணப்படும். கிடாக்கள் 65 முதல் 75 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 45 முதல் 60 கிலோ எடையும் உடையன. தினமும் 1.50 - 2.0 கிலோ பால் கொடுக்கும் திறன் கொண்டது.

தலைச்சேரி :

இந்த இன ஆடுகள் கேரள மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்ததாகும். இவைகள் மலபார் ஆடுகள் எனவும் அழைக்கப்படும். பழுப்பு மற்றும் கருப்புநிறங்களில் காணப்படும், 2-3 குட்டிகள் போடவல்லது. கிடாக்கள் 40-50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டவை. நன்றாகப் பால் கொடுக்கக்கூடிய இனம்.

பீட்டல் :

இந்த இனம் பஞ்சாப் மாநிலத்தில் காணப்படுகிறது. இவைகளும் ஜமுனாபாரி போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால், உருவம் மட்டும் சிறியதாக உள்ளது. காதுகள் வெற்றிலை போன்று காணப்படும். வளர்ந்த கிடா 60-70 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 35-45 கிலோ எடையும் கொண்டதாகக் காணப்படும்.

சிரோகி :

இந்த இனம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்ததாகும். பொதுவாக பழுப்பு, வெள்ளை அல்லது இரண்டும் கலந்த நிறத்தில் காணப்படும். நடுத்தரமான உடல் அமைப்பைக் கொண்டதாகும். வளர்ந்த கிடா 45-50 கிலோவும், பெட்டை ஆடுகள் 20-25 கிலோ எடையும் கொண்டதாகும்.

மேற்கூறிய இனங்களைத் தவிர பார்பாரி, மார்வாரி, சந்தியவாரி போன்ற ஆடுகள் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தமிழக வெள்ளாட்டு இனங்கள் :

தமிழ்நாட்டில் கன்னி ஆடு, கொடி ஆடு, பள்ள ஆடுகள், சேலம் கருப்பு என பல இனங்கள் உள்ளன. அவற்றில் கன்னி ஆடு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஆடுகள் கருப்பு நிறத்தில் காணப்படும். முகத்தில் இரண்டு வெள்ள கோடுகளுடன் அடி வயிற்றுப் பகுதி வால் வரை வெள்ளி நிறத்தில் காணப்படும். இவ்வகை ஆடுகளை பால்கன்னி என்றும் கூறுவர். வெள்ளைக்குப் பதிலாக சிவப்பு நிறம் இருந்தால் செங்கன்னி. இந்த இன ஆடுகள் குட்டிகள் போடுபவை என்று கூறுவர். சராசரியாக 2-3 கிடாக்கள் 35-40 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 28-30 கிலோ எடையும் கொண்டது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

வெளிநாட்டு இனங்கள் :

நமது நாட்டு வெள்ளாடுகளின் பால் உற்பத்தியைப் பெருக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் சில வெளிநாட்டு இனங்கள் கலப்பினங்களை உருவாக்க நமது நாட்டில் உபயோகிக்கப்படுகின்றன.

ஆல்பைன் :

இந்த இனம் ஆலிப்ஸ் மலைத்தொடரைத் தனது பிறப்பிடமாகக் கொண்டது. வெப்பப் பிரதேசங்களில் இவைகள் தங்களை வாழப்பழக்கப்படுத்திக் கொள்கின்றன. கிடாக்கள் 65-80 கிலோ எடையும், பெட்டையாடுகள் 50-60 கிலோ எடையும் இருக்கும்.

நூபியன் :

இந்த இனம், பசுக்களில் ஜெர்ஸி இனத்துடன் ஒப்பிடப்படுகிறது. இவை இங்கிலாந்து நாட்டில், இந்திய இனமான ஜமுனா பாரியும், எகிப்திய இன வெள்ளாடுகளையும் கலந்து உண்டாக்கப்பட்ட இனமாகும். மூக்கு ரோமன் அமைப்புடன், காதுகள் நீளமாகவும், தொங்கிக் கொண்டும் இருக்கும். கிடாக்கள் 65-80 கிலோவும், பெட்டை ஆடுகள் 50-60 கிலோ எடையும் இருக்கும்.

சானன் :

இந்த இனம் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது. இவ்வின ஆடுகள் தாடியுடனும், தாடியில்லாமலும் காணப்படும். காதுகள் கூர்மையாகவும், முன்நோக்கியும் இருக்கும். முதுகின் பின் பகுதியில் நீள உரோமம் உற்பத்தியாகி தொடைகள் பக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும். அவைகள் அழுக்கு வெள்ளை நிறம் கொண்டவை.

போயர் :

இந்த இனம் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததாகும். இந்த இனம் தலை, கழுத்துப்பகுதிகளில் பழுப்பு நிறமாகவும், மற்ற பகுதிகள் வெள்ளை நிறமாகவும் காணப்படும். இதன் கால்கள் குட்டையாகக் காணப்படும். வளர்ந்த கிடாக்கள் 100-120 கிலோ எடையும், பெட்டையாடுகள் 70-80 கிலோ எடையும் கொண்டதாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

வெள்ளாடுகளைத் தேர்வு செய்தல் :

* வெள்ளாட்டுப் பண்ணையில் பெட்டை மற்றும் அவற்றின் பாரம்பரியக் குணங்களைப் பார்த்துத் கிடாக்களை தேர்வு செய்ய வேண்டும்.

* பெட்டை ஆடுகள் 2-3 குட்டிகளை ஈனும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

* கிடாக்கள் தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு Tabid அகன்றதாகவும், உடல்பாகம் நீண்டதாகவும் இருக்குமாறு பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

* நல்ல தரமான பெட்டைக் குட்டிகளை 30-35 சதவிகித எண்ணிக்கையை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்.

* பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடையும் தன்மை பெற்று இருக்க வேண்டும்.

* கிடாக்கள் (9-12 மாதங்களில் பருவமடையும் குட்டிகளை) 6 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்.

* இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யப்படும் கிடாக்களை 2-3 குட்டிகள் ஈனும் பெட்டை ஆட்டிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.

* மூன்று மாத குட்டிகள் அல்லது இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாக அமையும்.

* மிருதுவான, மினுமினுப்பான தோல் உரோமங்களைக் கொண்ட குட்டிகள் மற்றும் ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

* கண்கள் தெளிவான, அகன்ற, சுறுசுறுப்பான, ஒளியுடன் ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

* முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று, விரிந்து இருக்கும் ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

* ஆடுகளைத் தேர்வு செய்யும்போது அதன் நாசித்துவாரம் மற்றும் வாய்ப்பகுதியினை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். நாசித் துவாரத்தில் சளி மற்றும் புண்கள் இல்லாமலும், வாய்ப்பகுதியில் அதிகமான உமிழ்நீர்ச் சுரப்பு மற்றும் புண்கள் இல்லாமலும் உள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

* ஆடுகளின் ஆசன வாய்ப் பகுதியும் தூய்மையாகக் கழிச்சல் இல்லாமலும் இருக்க வேண்டும்.

* கால்கள் நேராக, உறுதியுடன், சுறுசுறுப்பானதாகவும் உள்ள வெள்ளாடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

வெள்ளாடுகளை ஆண்டுக்கு இருமுறை குட்டி போடச் செய்வதற்கான வழிமுறைகள் :

சாதாரணமாக இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை வெள்ளாடுகள் குட்டி ஈனும். இன்று நடைமுறையில் அதிக தீவனச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு ஆவதால் இலாபம் பெறுவது மிகக் கடினமாக உள்ளது. கொட்டகை முறையில் ஆடு வளர்ப்பது பெருகி வரும் நிலையில் அதற்குரிய முதலீட்டை அடையவும், அதிக லாபம் பெறவும் ஆண்டிற்கு இருமுறை குட்டி ஈனச் செய்ய வேண்டும்.

வெள்ளாடுகள் ஏழைகளின் வங்கி என்பதால், எப்போது பணம் வேண்டுமானாலும் விற்று பணம் பெறலாம். வெள்ளாடுகளின் சினைக் காலம் 15 நாட்கள். எனவே, குட்டி ஈன்ற ஒரு மாதத்திற்குள் சினைப்பிடித்தால் மட்டுமே ஆண்டுக்கு இருமுறை குட்டி ஈனச் செய்யலாம். ஆடுகளுக்கு அறிவியல் முறைப்படி தீவனம் மற்றும் இதரப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றை ஆண்டுக்கு இருமுறை குட்டி போடச் செய்ய முடியும்.

ஆடுகளை சினைப் பருவத்திற்குக் கொண்டு வருதல் :

* வெள்ளாடுகள் குட்டி போட்டு 19 நாட்களுக்குள் கருப்பை சுருங்கிவிடும். இதனால் விரைவில் ஆடுகள் சினைக்கு வந்துவிடும். குட்டிப் போட்டு ஒரு மாதத்திற்குள் எல்லா ஆடுகளும் சினைக்கு வர வேண்டும். சில சமயம் ஆடுகளில் நஞ்சுக்கொடி 8 மணி நேரத்திற்கு மேல் தங்கினால் கருப்பைச் சுருங்கிவிடும். இதனைத் தவிர்க்க 8 மணி நேரத்திற்கு மேல் தங்கினால் வெளியில் தெரியும் நஞ்சுக்கொடியைக் குச்சியில் சுற்றி வெளியே எடுத்து விட வேண்டும். இதன் மூலம் கருப்பை அயற்சியைத் தடுக்கலாம்.

* ஆடு குட்டி ஈன்று 120 நாட்கள் கழித்து 20 - 30 கிராம் கொண்டக் கடலையை ஒரு நாள் ஊற வைத்து, முளைப்பு கட்டிய பிறகு அதை நசுக்கிக் கொடுத்தால் விரைவில் சினைக்கு வரும். இல்லையெனில் வைட்டமின் 'ஏ' அதிகமுள்ள தாது உப்புக் கலவையை தினமும் 15 கிராம் அடர் தீவனத்துடன் கலந்து கொடுத்தால் விரைவில் பருவத்திற்கு வந்து விடும்.

* குட்டி போட்டு 10 நாள் கழித்தவுடன் கிடாவை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பெண் ஆட்டுடன் சேர்ந்துவிடும் போது, பெண் ஆடுகள் விரைவில் பருவத்திற்கு வரும் வாய்ப்பு அதிகமாக பெறுகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சினைப்பருவத்தின் அறிகுறிகளை கண்டறிதல் :

* பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் வெளிப்படும். இதுவே மிகச் சிறந்த சினைப் பருவ அறிகுறியாகும். சில சமயம் பெண் உறுப்பானது வீங்கியிருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும், கத்திக் கொண்டே இருக்கும், வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும், மற்ற ஆடுகளின் மீது தாவிக் கொண்டே இருக்கும் அல்லது மற்ற ஆடுகள் தம்மீது தாவ விடும்.

* சினைப் பருவம் 2 நாட்கள் வரை இருக்கும். இதனால் 2 நாளும் கிடாவுடன் காலை மற்றும் மாலை நேரங்களில் சேர்க்கைக்கு விட வேண்டும். சினை ஊசி போட்டால் 2 நாளும் ஊசி போட வேண்டும்.

தீவன மேலாண்மை :

* வெள்ளாடுகளுக்கு தினமும் 6-7 கிலோ கிராம் வெவ்வேறு வகையான பசுந்தீவனம் (வேலி மசால், கோ-4, கோ-எப்.எஸ்.29, சோளம், பட்டுப் புழு செடியின் இலை மற்றும் இதர தழை வகைகள்), 1-2 கிலோ கிராம் உலர் தீவனம் (நிலக்கடலை கொடி, காய்ந்த சோளத் தட்டு மற்றும் மக்காச் சோளத் தட்டு) மற்றும் 300-400 கிராம் அடர் தீவனம், 10-15 கிராம் வைட்டமின் 'ஏ' மிகுந்த தாது உப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும்.

* தண்ணிர் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடு சினையாக இருக்கும் போது கீட்டோசிஸ் எனப்படும் நோய் உண்டாகும்.

* இதனைத் தவரிக்க நல்ல ஊட்டச் சத்து உள்ள தீவனம் அளிக்க வேண்டும் மற்றும் ஒரு கைப்பிடி அளவு நாட்டுச் சர்க்கரையை தண்ணிரில் கலந்து வைக்க வேண்டும். ஆடுகளில் கால்சியம் பற்றாக்குறையால் வரும் பால் காய்ச்சலை தவிர்க்க கால்சியம் டானிக்கை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குட்டி ஈன்ற ஆடுகளுக்குத் தர வேண்டும். மேலும், நாட்டுக் கல் சுண்ணாம்பை வேகவைத்த பின் கிடைக்கும் நீரைக் குடி தண்ணிரில் கலந்து வைக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

வெள்ளாடுகளில் சினைப் பருவ ஒருங்கிணைப்பு செய்தல் (Oestrus Synchronization) :

* சினைப் பருவ ஒருங்கிணைப்பு என்பது குட்டிப் போட்ட எல்லா ஆடுகளையும் ஒரே நாளில் பருவத்திற்கு வர வைத்தல் ஆகும். இதன் மூலம் 70-80 சதவிகித ஆடுகள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். எனவே, சினைக்கு வந்தவுடன் கிடாக்களுடன் விட்டோ அல்லது அதிக ஆடுகள் ஒரே நேரத்தில் சினைப் பருவத்திற்கு வந்தால் கிடாக்கள் பற்றாத நிலையில் சினை ஊசி போட்டுக் கொள்ளலாம்.

* வெள்ளாடு குட்டிப் போட்டு 20 நாளில் சினைப் பருவ ஒருங்கிணைப்புச் செய்ய வேண்டும். குட்டிப் போட்டு 19 நாளில் கருப்பை முழுவதும் சுருங்கிய நிலைக்கு வந்துவிடும். புரஜெஸ்டிரான் கணநீரில் நனைந்த பஞ்சுவைப் பிறப்பு உறுப்பில் 10 நாட்கள் வைத்து, எடுத்துவிட்டால் எல்லா ஆடுகளும் 2-3 நாளில் பருவத்திற்கு வந்துவிடும். பருவம் வந்தவுடன் சினை ஊசி போட்டோ அல்லது கிடாக்களுக்கு விட்டு சினைப் பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் குட்டி போட்டு சினைப் பிடிக்கும் இடைவெளி குறைந்துவிடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சினைப் பரிசோதனை செய்தல் (Pregnancy Diaghosis) :

ஆட்டின் சினைக் காலம் 150 நாட்கள். எனவே, சினை ஊசி போட்டு அல்லது கிடாவுக்குவிட்டு ஒரு மாதம் கழித்து நுண்அலை நோக்கியை கொண்டு சினைப் பரிசோதனை செய்ய வேண்டும். மூன்று மாத சினையில் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து விட வேண்டும்.

* சினைப் பருவத்தைக் கண்டறியத் தவறினால் 18-21 நாட்கள் வீணாகும். * சில சமயம் கிடாவின் விந்தணு உற்பத்தி குறைவாக இருந்தால் ஆடுகள் சினைப் பிடிக்காது. இதனைத் தவரிக்க சினை ஊசி போட்டுக் கொள்ளவேண்டும்.

* பருவ ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் நுண் அலை நோக்கியைக் கொண்டு சினைப் பரிசோனை செய்வதன் மூலம் செலவு சற்று அதிகமாகும்.

* கனநீரினைக் ஒருங்கிணைப்பு செய்யும்போது 70-80 சதவிகிதம் மட்டுமே சினைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது.

* நஞ்சுக்கொடி தாங்குதல், கீட்டோசிஸ், குட்டி இறந்து பிறத்தல் மற்றும் கருப்பையில் புண் உண்டாவதன் மூலமும் கருப்பை சுருங்க நாட்கள் அதிகமாகும். இதனால் ஆடுகள் சினைப் பிடிக்க அதிக நாட்கள் ஆகும்.

வெள்ளாட்டில் பருவ ஒருங்கிணைப்பு செய்து, சரியான முறையில் சினைப்பருவ அறிகுறிகளைக் கண்டறிந்து முறையில் சினை ஊசி போட்டு, நுண் அலை நோக்கியைக் கொண்டு சினைப் பரிசோதனை செய்வதன் மூலமும், நல்ல முறையில் தீவனம் அளித்து, குடற்புழு நீக்கம் செய்வதன் மூலமும் ஆண்டிற்கு இரண்டு முறை வெள்ளாடுகளை குட்டி போடச் செய்யலாம்.

இவ்வாறு ஏழைகளின் நடமாடும் வங்கியாகவும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மூலப்பொருளாகவும் விளங்கும் வெள்ளாட்டினை வளர்த்துப் பயன் பெறலாம். மேலும், தரிசு நில மேம்பாட்டிற்கு அரசாங்கம் ஊக்கமளித்து வரும் இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள் வெள்ளாட்டிற்குத் தேவையான பசுந்தீவனப் பயிர்களான வேலிமசால், முயல்மசால், சுபாபுல், கினியாய்புல், கிளைரிசிடிய ஆகியவற்றைப் பயிர் செய்து தரமான வெள்ளாடுகளை வாங்கி வளர்த்து பொருளாதாரத்தையும், வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஆக்கம் : முனைவர் இரா. எசேக்கியல் நெப்போலியன், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete